நீதியின் நிழலில்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 14,724 
 

“என்னப்பா…வந்துடுவாங்களா..?..நான் வேற பள்ளிவாசலுக்கு தொழுக போகனுமே…”பரூக் மரைக்காயரின் கேள்விக்கு பதிலளிக்க அவகாசமின்றி வீதியில் இறங்கி ஓடினார் பண்ணையாள்சவுரிமுத்து.

இன்னும் சிலநாட்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.அதன் பொருட்டு வாக்குகேட்டு வரும் வேட்பாளரை வரவேற்க நாட்டாமையின் பண்ணை வீட்டில் குழுமியிருந்தார்கள் அனைவரும்.

“ஐயா..வேற்பாளர் வந்துகிட்டிருக்காருங்க..தெரு முனையில் ஏழெட்டு காருங்க வந்துகிட்டிருக்குங்கய்யா..!”நாட்டாமையிடம் பவ்யமாக கிசுகிசுத்தார் பண்ணையாள்.

“சரி..சரி..வர்றவங்களுக்கு இனிப்பு,இளநீர் எல்லாம் ரெடி பண்ணி எடுத்து வை..”என்றபடியே சவுரிமுத்துவின் இளையமகனை அழைத்து அவன்காதில் ஏதோ கிசுகிசுத்து அனுப்பினார் நாட்டாமை.

புள்ளிமான் போல துள்ளி ஓடிய சிறுவன்..புன்முறுவலோடு திரும்பிவந்து மரைக்காயரிடம் ஒருரூபாய் இனாமாக பெற்றுக்கொண்டு பெட்டிக்கடையை நோக்கி ஓடினான்.

“நாளைய பாரதத்தின் நம்பிக்கை ஒ ளி .!..’பச்சை’பாரி வள்ளல்..!..இளைஞர்களின் இடிமுழக்கம் அண்ணன் ‘அருவா’அய்யனார் அவர்கள் இதோ உங்களிடையே வாக்கு கேட்டு வந்து கொண்டிருக்கிறார்…இதோ வந்துகொண்டிருக்கிறார்…”ஒலிப்பெருக்கி வேற்பாளரின் சுயபுராணம் வாசிக்க அனைவரும் வரவேற்க தயாரானார்கள்.

வேட்பாளரின் செலவில் ஊத்திக்கொண்ட ஊக்கபானத்திற்காகவும் …உள்ளே தள்ளிய சிக்கன் பிரியாணிக்காகவும் ‘வாழ்க வாழ்க’வென வானதிர கோஷமிட்டபடியே வந்து இறங்கின கைத்தடி பட்டாளங்கள்.!

நாட்டாமையின் கூர்மையான பார்வை பண்ணை வீட்டு வாயிலிலேயே நிலைத்திருந்தது.

‘அருவா’வும் அவரது கைத்தடிகளும் புட்டத்தில் சிலந்தி வந்து பேரவதிப்படுபவர்கள் போல வேட்டியை தூக்கிப்பிடித்தபடி துள்ளித்துள்ளி வந்து கொண்டிருந்தார்கள்.

நாட்டாமையும் ..சிறுவனும் பார்வையையும்…பல்தெரியாத புன்னகையையும் பரிமாறிக் கொண்டார்கள்.

சம்பிரதாய சால்வை போர்த்துதல்,சொந்த விசாரிப்புகளுக்கு பிறகு …இனிப்பு கார பலகாரங்களை அரைத்து…இளநீர் குடித்து இளைப்பாரி..பேச தொடங்கினார் வேட்பாளர்.

“உங்க…வடகரை அரங்கக்குடி முஸ்லீம் சமுதாயத்தின் மொத்த ஓட்டு மூவாயிரத்து ஐந்நூற்று பதினேழு.!.அதில் வெளிநாட்டுக்கு போயிருக்கறவங்க தொள்ளாயிரத்து முப்பத்து ரெண்டு பேர் ,மீதமிருக்குற..இரண்டாயிரத்து ஐந்நூற்று எண்பத்தைந்து ஓட்டுக இருக்குறதா எங்ககட்சி மேலிட ரிப்போர்ட் சொல்லுது…அத்தனை ஓட்டுகளும் குந்தாம குலையாம எனக்கே கிடைச்சா நான் சுலபமா ஜெயிச்சுடுவேன்.!..”

“ஒங்க..ஒத்துழைப்புல எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க..நம்ம வடகரையை சின்ன சிங்கப்பூராக மாத்திக்காட்டறேன்.!அரங்கக்குடியை அபுதாபி கணக்கா அழகாக்கி காட்டறேன்..அப்புறம் யாரும் வெளிநாடு போயி கஷ்டப்படவேணாம்…இங்கேயே சாமார்த்தியம் பண்ணி…குடும்பத்தோட குதூகலமா வாழலாம்..!”எச்சில் ஒழுக இனிக்க இனிக்க அள்ளிவிட்டார் வேட்பாளர்.

தொண்டையை செருமியபடி எழுந்தார் நாட்டாமை பரூக் மரைக்காயர்.”வேட்பாளர் தம்பி…இந்த வடகரை அரங்கக்குடி ஒட்டுமொத்த மக்களோட மனசாட்சியா நான் சொல்றேன்…எங்களோட ஓட்டு ஒன்னை கூட உங்களுக்கு நாங்க போட தயாரா இல்ல…காரணம் நீங்களும் சரி…உங்க கூட வந்தவங்களும் சரி..அத்தனை பேருமே சுயநலவாதிங்க…பொதுநலன்ல அக்கறை இல்லாத புல்லுருவிங்க…இன்னொரு முறையும் தகுதியில்லாத நபரை தேர்ந்தெடுக்க நாங்க தயாரில்லை நீங்க …போகலாம்”என்றார்.

கண்களில் தீப்பொறி பறக்க துண்டை உதறி தோளில் போட்டபடி கிளம்பினார்கள் அனைவரும்.

“சரி ஐயா…பெரியோர்களே..நல்லா தீர விசாரிச்சிட்டு ஒரு முடிவை சொல்லுங்க…நான் இப்பதான் முதன்முதலா அரசியலுக்கே வரேன்..என்னைப்போயி சுயநலவாதி..புல்லுறுவிங்கறீங்களே…எப்படிங்க நியாயம்.?”என்றார் வேட்பாளர்.

“இருங்க…தம்பி.!..வாசல் வழியா வர்றப்போ கவுட்டியில புண் வந்த மாதிரி வேட்டியை தூக்கிப்புடிச்சிகிட்டு தவ்வி தவ்வி வந்தீங்களே..ஏன்?..தலைவரே தவ்வும்போது சிஷ்யங்க தவழ்ந்தா வருவாங்க…அவங்க பாய்ஞ்சு பாய்ஞ்சு வர்றாங்க…ஏன்.?..நான் தான் இந்ந பொடியனை விட்டு முள்குச்சிகளை வர்ற பாதையில போடச்சொன்னேன்.!..பொறுப்பில்லாம தாண்டிதாண்டி வர்றீங்க…முன்கையே போகும்போது நமக்கென்னன்னு கைத்தடிகளும் கண்டுக்காமலே வருதுங்க..”

“பலர் நடக்குற பாதையாச்சேன்னு ஒரு முள்ளைக்கூட எடுத்து ஓரமா போட துணியாத நீங்களா…எங்கள் பிரதிநிதியா டெல்லிக்கு போய் எங்கள் நலனுக்காக குரல் கொடுக்கப்போறீங்க..?.!..அதை நாங்க நம்ப தயாரில்லைப்பா..போயிட்டு வாங்க..”கைகூப்பினார் நாட்டாமை.

சீற்றத்தோடு வாகனங்கள் சீறிப்பாய்ந்தன.மீண்டும் கோஷகானமும்..புழுதி மண்டலமும் எழுந்து அடங்கியபின் சற்றுமுன்பு வரை அந்த அரசியல்வாதியின் கைத்தடிகளில் ஒருவனாக இருந்த இளைஞன் ஒருவன் எதிர்திசையில் நடந்து கொண்டிருந்தான்.எதையோ சாதித்துவிட்ட பெருமிதம் நாட்டாமைக்குள் பூக்க தொடங்கியது.

– பிரசுரம்: அக்டோபர்17_23 ,2008 – பாக்யா வார இதழ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *