நீச்சல் குளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 4,045 
 

அந்தச் சிறிய அறையில் இருபது பேர் போட்ட இரைச்சலில் எனக்கு லேசாகத் தலையை வலித்தது. கமிட்டி மீட்டிங். நடப்பது எங்கள் ‘பெனின்சுலா அபார்ட்மெண்ட்ஸ்’ குடியிருப்பில். ஒவ்வொரு மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை, வீட்டு உரிமையாளர்களின் பிரச்சனைகளை விவாதித்துத் தீர்வு காணும் மாதாந்திர சந்திப்பு. இந்த கமிட்டி மீட்டிங் ஒன்றும் தலைபோகிற மாநகராட்சி மீட்டிங் இல்லை என்றாலும் அந்த ஆக்ரோஷமும், அடிதடியும் எங்கள் ‘பெனின்சுலா அபார்ட்மெண்ட்ஸ்’ கமிட்டி மீட்டிங்கில் தெரியும்.

பிரச்சனைகளைச் சரிக்கட்ட சரியான தீர்வு மட்டுமல்ல சரியான நபரும் தேவை என்று கமிட்டிக்குத் தலைமை தாங்கும் வைத்தியநாதன் என்னை அழைத்துப் போயே தீருவார். அந்தக் காட்டுத் தர்பாரில் நான் சொல்லும் கருத்துகளுக்கு நிறையப் பேர் உடன்படுகிறார்கள் என்று அவர் என்னை அந்த மீள முடியாத அவஸ்தைக்கு ஒவ்வொரு மாதமும் உட்படுத்துவார். சச்சரவுகளுக்குப் பழக்கப்பட்ட என் உத்தியோகம் அதற்கு ஒரு காரணம். ஒரு தொழிற்சாலையில் ‘பர்சனல் மேனேஜராய்’ சதா கோபமான தொழிலாளர்கள் வாயால் ‘ஒழிக’ ‘ஒழிக’ என்று ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ளும் ஒரு உயர் அழுத்த வேலையில் இருப்பதால் நான் எல்லாப் பிரச்சனையையும் எளிதாய்ச் சரிக்கட்டி விடுவேன் என்று எனக்கு ஒரு விசேஷ அந்தஸ்து அவர் கொடுத்திருக்கிறார். மீட்டிங்கில் சிக்கல் தீராமல் ரொம்ப இழுபறி ஆனால் ‘என்ன ஜானி (ஜனார்தனன்), நீங்க கொஞ்சம் சொல்லுங்க’ என்பார்.

ஒரு பிரச்சனையின் தீவிரத்தை என் தொழிற்சாலையில் என்னால் ஊகிக்கக்கூடிய அளவுக்குக் கூட இந்தக் கமிட்டி மீட்டிங்கில் யூகிக்க முடியாது என்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை. எங்கள் தொழிற்சாலையில் இருக்கும் தொழிற்சங்கங்களில் ஏராளமாய்ப் பிரிவுகள் இருக்கும். யார் எதை ஆதரிப்பார்கள் எதை எதிர்ப்பார்கள் என்று கணித்து அவர்களோடு மன்றாடுவது என் தொழில். குடியிருப்பில் தொழிற்சங்கங்கள் கிடையாதே தவிர பிரிவுகள் உண்டு. இன்னும் கடினமான, கணிக்க முடியாத குழுக்கள். பிரச்சனைக்கு ஏற்றாற்போல் சடார் சடாரென்று கட்சி மாறி அடித்துக் கொள்வார்கள். குடியிருப்புக்கு வெள்ளை அடிக்கும் சமாசாரத்தில் சேகரோடு ஒத்துப் போகும் வாசன், தீபாவளிக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யும் திட்டத்தில் கட்சி மாறி அவருடன் முறைத்துக் கொள்வார். லிஃப்டில் பளுவான சமாசாரம் ஏற்றி மேலே எடுத்துப்போகக் கூடாது என்பதில் கை கோர்த்துக்கொள்ளும் ராவும், சுந்தரமும் மொட்டை மாடியில் பார்ட்டி வைத்துக்கொள்வதில் குடுமிப்பிடிச் சண்டை போடுவார்கள்.

ஒரு கும்பல் கூட்டிய இடத்தில் எந்த நல்ல முடிவும் கிடைக்காது என்று என் உத்யோக அனுபவத்தில் எனக்கு ஓர் அபிப்ராயம் உண்டு. ஆனால் பல பேர் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையில் எல்லோரும் கருத்துச் சொல்ல வேண்டும் என்ற ஜனநாயகக் கட்டாயம் இருப்பதால் கும்பல் கூட்டாமல் இருக்க முடியாது. ஆகையால் இந்தச் சந்திப்புகளில் நல்ல தீர்வு காண நான் ஓர் உத்தி வைத்திருந்தேன். எந்தப் பிரச்சனையானாலும் அதை விவாதத்துக்கு எடுத்துக் கொண்டவுடன் நாம் சரியான தீர்வைச் சொல்லிவிடுவது புத்திசாலித்தனமே இல்லை. எல்லாப் பிரச்சனைகளுக்கும் அது பயணிக்க வேண்டிய ஒரு வரையறுக்கப்பட்ட பாதை இருக்கிறது. அதை மீறினால் பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு காரியத்தைச் சாதித்த மனத்திருப்தி இருக்காது. அதன்படி எல்லோரையும் கொஞ்ச நேரமாவது அதைப் பற்றிக் குரலெழுப்ப அனுமதிக்கவேண்டும். ஏனென்றால் பாதிப் பேர் பேசுவது நல்ல முடிவு வரவேண்டும் என்பதற்காக இல்லை. அவர்களும் பேச வேண்டும் என்ற காரணத்துக்காகதான். மேலும், தீர்வை உடனே சொன்னால் தங்கள் குரலைக் கேட்காத ஆத்திரத்தில் சிலர் அதை வீம்புக்காக ஒத்துக்கொள்ளாமல் போகிற ஆபத்து இருப்பதால் விவாதம் அவரவர் விருப்பத்துக்குத் திசை திருப்பப்படுவதை அனுமதித்தே ஆக வேண்டும். ஜனநாயக முறையின் விதி அது. நையாண்டி, ஊசி குத்தல், கைகலப்பு என்று கொஞ்சம் திசை மாறும்போது மட்டும் குறுக்கே புகுந்து வெள்ளைக் கொடி காட்ட வேண்டுமே தவிர அவசரப்பட்டுத் தீர்வு சொல்லக் கூடாது.

நீண்ட நேர விவாதத்தின் இறுதியில் எல்லோரும் பேசி ஓய்ந்து, எல்லாக் கருத்துக்களும் பரிசீலிக்கப்பட்டு, பாதிப் பேர் பக்கத்து சீட்டுக்காரர்களுடன் பேசிக்கொண்டு, பாதிப் பேர் சேரில் சரிந்து கொண்டு… அறை பூரா தெளிவே இல்லாத ஒரு சலசலப்பு வந்தால் அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண எல்லாரும் தயாராகி விட்டார்கள் என்று அர்த்தம். அப்போது அவர்கள் வார்த்தைகளில் ஒளிந்திருந்த முடிவையே வேறு வடிவத்தில் சொன்னால் ‘சரியா சொன்னீங்க சார்’ என்று பாதிப் பேரும் ‘அதைத்தான் நான் அப்பவே சொன்னேன்’ என்று மீதிப் பேரும் ஒப்புக்கொள்வார்கள். இந்த அலுவலக அனுபவத்தில், நான் அதையே குடியிருப்பு மீட்டிங்கிலும் செய்வேன்.

இந்த வாரப் பிரச்சனை வழக்கத்துக்கு மாறாய் சூடாக இருந்தது. ஆக்ரோஷத்தைத் தணிக்க முடியாமல் நீண்டுகொண்டே போனது. விஷயம் இதுதான்.

எங்கள் குடியிருப்பில் நீச்சல் குளம் ஒன்று இருந்தது. குடியிருப்புக் கட்டடங்களின் நடுவே நாலு படி வைத்த மேடான இடத்தில் குட்டைச் செடிகள் சுற்றிலும் காவல் காக்க, இரண்டு அலங்காரக் குடைகள் நட்டு அழகாய்தான் இருந்தது. எங்கள் வீட்டு மாடியிலிருந்து பார்த்தால் சலவைக் கல் அடித்தளத்தில் நீலப் படுதாவாய் விரிந்திருக்கும். ஆபத்தில்லாத ஐந்தடியில் ஆரம்பித்து அபாய இருபது தொடும் தண்ணீர்ப் பளிங்கு. அந்த நீச்சல் குளத்தைக் காண்பித்தே ‘பில்டர்’ பாதி வீடுகள் விற்றான். பில்டர் விநியோகித்த படத்தில் குளத்தின் ஓரம் கால் நீட்டி சிரித்த ஈரமான வெள்ளைக்காரியின் வர்ணப்படத்தைப் பார்த்துவிட்டு அவள் என்னமோ அங்கே வந்து தினமும் ஸ்நானம் செய்ய வரப்போகிறாள் மாதிரி அதில் மயங்கி அதன் அநியாய விலை வீட்டோடு சேர்ந்து இருப்பதைப் பொருட்படுத்தாது எங்க அபார்ட்மெண்ட்ல பூல் இருக்கு தெரியுமா ‘ என்று சொல்லும் ஆசையில் நிறையப் பேர் வீடு வாங்கினார்கள்.

நீச்சல் குளத்துக்கும் நம்ம ஊருக்கும் ஸ்நானப்ராப்தி உண்டா? பெண்கள் அதன் கிட்டயே வரமாட்டார்கள். ஆண்கள் பலருக்குப் பெண்களை ஒத்த சரீர பாக்யம் இருப்பதால் பனியன் களைய பயந்து வேடிக்கை மட்டும் பார்ப்பார்கள். சிலர் தங்கள் நீச்சல் பழகிய பிள்ளைகள் உள்ளே மீன் குஞ்சாய் நீந்திக்கொண்டிருக்க ஐந்தடி மூலையில் இடுப்பளவு நின்றுகொண்டு ‘பாத்துடா… அங்க ஆழம்’ என்று ஹாரன் அடிப்பதோடு சரி. இன்னும் சிலர் அதன் நாலு பக்கமும் செடிகள் வைத்து நாற்காலிகள் போட்டிருந்த சொற்ப ரம்யத்தில் வந்து உட்கார்ந்து அற்ப அரசியல் பேசுவார்கள். நாயர் குடும்பம் மட்டும் அடிக்கடி ‘நீந்துகாணும். இல்லையானால் சில பிரம்மச்சாரிகள் அதில் தொபுக்கடீர் தொபுக்கடீர் என்று விழுந்து தண்ணீர் வெளியே இறைப்பார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் குளம் கொஞ்சம் சலசலக்கும். யாராவது குளித்தால் அது சிறுவர்கள்தான். அதில் தான் கொஞ்ச நாள் கழித்துப் பிரச்சனை வந்தது.

குடியிருப்புகளில் இருந்த வானர வாண்டுகள் அதன் அருகிலேயே விளையாட ஆரம்பித்து அவர்தம் அம்மாக்கள் எல்லோரும் பீதியடைய ஆரம்பித்தார்கள். பால்கனியிலிருந்து பார்க்கும்போதெல்லாம் எதாவது ஒரு பயந்த அம்மா ‘டேய்…. ஸ்விம்மிங் பூல் கிட்ட ஓடாதடா’ என்று உத்திரவாதமாய்க் கத்திக்கொண்டிருப்பார். பயந்த மாதிரியே ஒரு நாள் அந்த அசம்பாவிதம் நடந்தது. தள்ளிவிடப்பட்ட ஒரு பயல் குளத்திலே விழுந்து யாரோ அவனை உள்ளே குதித்து மீட்டு….. ஏக ரகளை ஆகிவிட்டது. பக்கத்தில் எவரோ இருந்ததால் ஒன்றும் ஆகவில்லை. ஆனால் ஆளாளுக்கு ‘நான் நாலு மாசமா தல தலையா அடிச்சிக்கறேன்’ என்று ஆரம்பித்துவிட்டார்கள். கமிட்டி மீட்டிங் வைக்கச் சொல்லி வைத்தியநாதனிடம் ஒரு பேரணியே சென்றது.

அந்த மாத கமிட்டி மீட்டிங்கில் அது மட்டுமே பிரதானப் பிரச்சனையானது. கவலைப்பட்ட பெற்றோர்கள் தரப்பிலிருந்து ஒரு கோரிக்கை எழுந்தது. அந்தக் குளம், அதை ஒட்டிய தோட்டம் சார்ந்த இடத்தைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பி, கதவு போட்டு ஓர் ஆளை நியமிப்பது என்று சிபாரிசு செய்யப்பட்டு அதைச் சிலர் வழி மொழிந்தார்கள். முதலில் பிரச்சனையின் விபரீதம் பிடிபடாமல் கூட்டம் மெல்ல நகர்ந்தது. அப்புறம் செலவு பற்றிக் கேட்கப்பட்டு வைத்தியநாதன் கிட்டத்தட்ட இத்தனை ரூபாய் செலவாகும் என்று கணக்கிட்டுச் சொன்னார்.

அங்கிருந்து மெல்ல விவாதம் சூடு பிடித்தது. குடியிருப்பைப் பழுது பார்க்க எல்லோரும் தந்து கொண்டிருந்த மாதாந்திரத் தொகை இந்தச் சுவர் கட்டும் கட்டுமான வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அதற்குக் குடியிருப்பின் வீட்டு உரிமையாளர்கள் எல்லோரும்தான் பணம் போட்டுச் செய்யவேண்டும் என்ற சட்ட நுணுக்கம் கமிட்டி சார்பில் விளக்கப்பட்டது. முதலில் இந்தச் சுவர் எழுப்பும் சமாசாரத்தை ‘ரொம்ப நல்ல உத்தி’ என்று மத்தியமாய்த் தலையாட்டிக்கொண்டிருந்தவர்கள், பண விவரம், பங்கு விவரம் கேட்டதும் மெல்ல வேற ஏதும் வழியில்லையா என்று கேட்டு, கட்சி தாவத் தயாராக இருந்தார்கள்.

நான் எதிர்பார்த்த தற்காலிகப் பிரிவுகள் இந்தப் பண விஷயம் ஆரம்பித்த ஐந்தாம் நிமிஷமே உருவானது. குடியிருப்போரில் குழந்தைகள் இருக்கும் வீடுகள், இல்லாதோர் வீடுகள் என்று இரு பெரிய கட்சிப் பிளவு ஏற்பட்டு பிரச்சனையை கால்பந்து ஆடியது. இன்னொருவர் வீட்டுக் குழந்தை குளத்தில் விழும் சாத்தியக் கூறு இருந்தாலும் பணம் செலவாகிறதே என்ற காரணத்துக்காகச் சிலர் இதை ஆதரிக்காதது குழந்தைகளின் பெற்றோர்களை உஷ்ணமடையச் செய்தது. காரசாரமாய் விவாதித்தார்கள். இரண்டு தரப்பிலும் சில நல்ல காரணங்கள் சொன்னார்கள். எப்படியும் குழப்பம் உச்சகட்டம் அடையும் வரை குறுக்கிடக்கூடாது என்ற என் கொள்கைப் பிடிப்பில் நான் விவாதத்தில் ஒன்றிப் போய் ஸ்வாரஸ்ய பார்வையாளன் ஆகிவிட்டேன்.

“இந்தப் பசங்க யாரும் அந்தப் பக்கம் போகக் கூடாதுன்னு மிரட்டி வைக்கணும்.”

‘பசங்க நம்மை மிரட்டறா சுவாமி… ஒவ்வொண்ணும் எமனா இருக்கு.’

‘யாராவது பெரியவங்க இருந்தாதான் பூல் பக்கம் போகணும்னு பேரன்ட்ஸ் எல்லாரும் அவங்க பசங்ககிட்ட சொல்லி கட்டுப்படுத்தணும்.’

‘கரெக்ட்… அவங்க அவங்க பசங்களை அவங்கவங்க சரியாப் பாத்துக்கணும். பசங்களைக் கீழே விளையாட அனுப்பிட்டு வீட்ல உக்காந்து சீரியல் பாத்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம்?’

‘ரொம்ப நல்லாருக்கே…. அதுக்காக அவங்க பின்னாலயே சுத்திகிட்டு இருந்தா விட்டுக்காரியம் யாரு பாக்கறது?’

‘வைத்தி. இந்த காம்பௌண்டு போட்டா மட்டும் இந்தப் பிரச்சனை தீந்துடுமா…. இந்தப் பசங்க ஒவ்வொண்ணும் ஒரு குரங்கு. மதில் மேல ஏறி உள்ள குதிக்காதுன்னு என்ன நிச்சயம்?’

‘நீங்க கூட சின்ன வயசுல இப்படிதான் சுவரேறி குதிச்சிருப்பீங்க. அதுக்காக பசங்களை குரங்குன்னு சொல்லவேண்டிய அவசியம் இல்லை’ என்று ஓர் அம்மா குரங்கு சீறியது.

‘ஏம்பா… ஒரு ஆளை காவலுக்குப் போடறதா இருந்தா இந்த காம்பௌண்ட் சுவரே வேணாமே….. யாராவது உள்ள விழுந்தா அந்த ஆள் காப்பாத்திட்டுப் போறான்.’

‘நாலு பசங்க சேந்தாபோல விழுந்தா…. என்ன பண்ணுவான்?’

‘ஷாட் பூட் த்ரீ போட்டு முடிவு பண்ணுவான்’ என்றார் பின்னாலிருந்து நக்கலாக கிருஷ்ணன்.

இந்தக் கமிட்டி மீட்டிங் நாடகத்தில் எந்தச் சமாசாரம் பேசப்பட்டாலும் யாரையாவது சீண்டிவிட்டுக் குழப்பம் உண்டு பண்ணவே ஒருசில புண்ணியவான்கள் வருவார்கள். அவர்களுக்குப் பிரச்சனை எதுவானாலும் அதில் சுமுகமான முடிவு காண்பதை விட வேடிக்கை செய்து அதில் உற்சாகம் அடைவதே குறிக்கோள். கிருஷ்ணன் இதில் கைதேர்ந்தவர். எந்தச் சண்டைக்கும் சளைத்தவர் இல்லை.

‘கிருஷ்ணன், இந்தக் கிண்டல் எல்லாம் வேணாம். சீரியஸா பேசிண்டிருக்கோம்…’

‘அப்பிடியே ஆளைப் போட்டாலும் அவன் இருபத்தி நாலு மணி நேரமுமா இருக்க முடியும்? ராத்திரி பத்து மணிக்கு யாராவது பையன் போனா…? வேலைக்கு ஒருத்தனை வச்சா அவனை மேய்க்கறத்துக்கு ஆளு வேணும். அவன் டீ சாப்பிடறேன், பீடி அடிக்கறேன்னு எங்கியாவது போவான். நம்ம போதாத காலம் அப்பதான் எதாவது நடக்கும்.’

‘வைத்தி, சம் பீப்பிள் டோண்ட் நோ ஹௌ டு யூஸ் த பூல். பிபோர் தே ஸ்விம் தெ ஷுட் டேக் அ ஷவர் ஃபர்ஸ்ட். அது கூட தெரியலை. யு ஹாவ் டு டெல் தம்’ என்று சிவராமன் யாருமே எதிர்பார்க்காமல் ஓர் அறிவிஜீவி கருத்துச் சொல்ல….

‘சிவராமன், ஸ்விம் பண்ணப்பறம் நீங்க ஷவர் பண்ணறீங்களா?’

‘ஸ்விம் பண்ணப்பறம் ஷவர் பண்ணலன்னா பரவால்ல. பட் பிஃபோர் யு ஸ்விம் யு மஸ்ட்….’

‘ஏன் சொல்றன்னா… வெள்ளிக்கிழமை சாயந்தரம் நீங்க குளிச்சீங்கல்ல? அன்னைக்கு மத்தியானம் ரெண்டு பசங்க பூல்ல நல்லா எய்ம் பண்ணி மூச்சா போய்க்கிட்டு இருந்தாங்க. பாத்தேன்….’

‘ஏகாதசியும் அதுவுமா மூத்தர தண்ணியிலே குளிச்சிட்டு வந்தீங்களா… கர்மம்.’

‘நீ சும்மாயிரு… அந்த ஆளு சொல்றதை சீரியஸா எடுத்துண்டு.’

‘நீச்சல் அடிக்கற நேரத்தை ஃபிக்ஸ் பண்ணிடுங்க வைத்தி சார்.”

‘எல்லாரும் ஒரு குறிப்பிட்ட டைம்லதான் நீச்சல் போணும்னா… இங்க இருக்கற ஆளுங்களுக்கு இடமே போறாது. எல்லாரும் வரிசையா நின்னு முங்கி எழலாம்…. கும்பமேளா மாதிரி.’

‘ஒரு வசதி வச்சிகிட்டு அதுக்கு டைம் குறிக்கறதெல்லாம் அர்த்தமே இல்லப்பா. நான் ஷிஃப்ட் போயிட்டு சில சமயம் ராத்திரி பத்து மணிக்கு வரேன். அப்ப தண்ணில் விழணும் போல இருக்கும்.’

‘அதான் தினமும் வீட்டுக்குள்ளயே ரெட் லேபிள்ல சுகமா மொதக்கறியே போதாதா…’

‘கிருஷ்ணன் ப்ளீஸ்….’

‘ஆக்சுவலா இதுக்கு இவ்வள ரூவா ஆவாது வைத்திஜி. எனுக்குத் தெர்ஞ்ச கான்டிராக்டர் ஒத்தன் இதைப் பாதி வெலைக்குச் செஞ்சி தரும்’ என்று தடம் புரண்டார் ஜெயின்.

‘ஜெயின் சார்… கட்டறதுன்னு இன்னும் முடிவே ஆவலியே அதுக்குள்ள ஏன் செங்கல் அடுக்கறீங்க…. (கான்டிராக்டுலேயே கண்ணுயா)’

‘நீச்சல் குளத்துல தண்ணி இருந்தாதான இந்த வாண்டுகள் அங்க போய் மொய்க்கறதுக்கள். தண்ணி எல்லாத்தையும் இறைச்சிக் காலியாக்கிடுங்கோ…’ என்றார் கிரிஜா மாமி.

‘சபாஷ்… தண்ணி இருந்தாலாவது எவனாவது உள்ள விழுந்தா ரெண்டு நிமிஷம் தத்தளிக்கும்போது காப்பாத்தலாம். தண்ணி இல்லன்னா அந்தப் பள்ளத்துல விழுந்து உடனே பிராணன் போயிடும். ரொம்பச் சமத்து.’

‘மாமா புரிஞ்சிக்கங்கோ… நீச்சல் குளமே வேண்டாம்னு சொல்ல வந்தேன்…’

‘வைத்தியநாதன் சார், மாமி சொல்றது கரெக்ட். நீச்சல்குளம் வேணாம். யாரு போய் தினமும் அதுல குளிக்கறாங்க? அந்த இடத்துல மண்ணு ரொப்பி தோட்டம் மாதிரி வச்சிக்கலாம்…’

‘அந்தத் தோட்டத்துல தென்னை மரம் வைக்கணுமா… கொய்யா மரம் வைக்கணுமான்னு இன்னொரு கமிட்டி மீட்டிங் போட்டு நாலு மணி நேரம் பேசலாம்.’

‘கிருஷ்ணன், உங்களுக்கு இந்த மீட்டிங் அட்டெண்ட் பண்றதுல இஷ்டம் இல்லன்னா வெளிய போயிடுங்க… காமெடி பண்றதா நினைச்சிகிட்டு வெறுப்பேத்தாதீங்க.’

‘நீங்க காமெடியான ஒரு விஷயத்தை சீரியஸா பேசலாம். நான் சீரியஸான விஷயத்தை காமெடியா பேசக்கூடாதா?’

‘இதப்பாருங்க. இருக்கற ஸ்விம்மிங் பூலை மூடறது ஆப்ஷனே இல்ல. நாம பேசறது அதைச் சுத்தி சுவரோ கம்பியோ எழுப்பி ஒரு பாதுகாப்பு செய்யணும் அப்படிங்கறதுதான். அதுக்கு ஆற செலவை எல்லாருமா சேந்து குடுக்கணும்கறதுதான்…’ என்று வைத்தியநாதன் மறுபடி அந்த விவாதத்தைச் சீர் படுத்தினார்.

‘இருங்கோ … அதுக்கு எல்லாரும் பணம் போடணும்கறது நியாயமே இல்லையாக்கம். நான் ஸ்விம்மிங் பூள்ல குளிக்கறதே இல்லா’ என்றார் ரமணி ஐயர்.

‘அவரு சாதாரணமா குளிக்கறதே இல்லங்க….. நியாயமா பாத்தா நார்மல் வாட்டர் சார்ஜ் கூட அவருகிட்ட வசூல் பண்ணக்கூடாது.’

‘உனக்கு எப்பிடி தெரியும்?’

‘அவர் பக்கத்துல உக்காந்து பாரு தெரியும்.’

‘வைத்தியநாதன் திஸ் ஈஸ் டூ மச். மரியாதை இல்லாதைக்கு இப்பிடில்லாம் வாய்க்கு வந்தபடி பேசினா ஹீ வில் கெட் அவுட். கமெண்ட் அடிக்கறத்துக்கு அளவில்லையா?’

‘கிருஷ்ணன்… சும்மா இரேம்ப்பா…’ என்று வைத்தி கெஞ்ச, ரமணி ஐயர் இன்னும் கோபத்தில் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்க, பாதிப் பேர் ரசித்துக்கொண்டும் பாதிப் பேர் ஐயரை சமாதானப்படுத்திக்கொண்டும் மீட்டிங் வேறு பாதையில் போய்க்கொண்டிருந்தது. ‘அவர் சொல்றா மாதிரி ஸ்விம்மிங் பூலை யாரு யூஸ் பண்றாங்களோ அவங்க மட்டும் காசு போட்டு இதைச் செய்யட்டுமே…’ என்றார் சுந்தரம், ஐயர் மேல் பரிதாபப்பட்டு.

‘அப்ப அவங்களைத் தவிர ‘ஆஹா காத்தோட்டமா இருக்கு ன்னு வேற யாரும் பூல் பக்கம் வரக்கூடாது. சரியா…’

‘இந்தச் சுவரெல்லாம் எழுப்பினா காத்து வராது. கிரில்லு வச்ச கம்பி மாதிரி போடணும்.’

‘அட இருங்க சார்… நீங்க வேற….’

‘அப்ப எல்லாரும் சேந்து பணம் போட்டு நாலு எக்ஸ்சைஸ் மெஷின் வாங்கிப் போடலாம்னா சரிம்பீங்களா? இந்த அபார்ட்மெண்ட்ல ஜிம்மே இல்லை’ என்று புது முடிச்சுப் போட்டார் சங்கர்.

‘அது வேற விஷயம் சங்கர். அதையும் இதையும் கனெக்ட் பண்ணாதீங்க’ வைத்தி தலையில் கை வைத்துக்கொண்டு என்னைப் பரிதாபமாய்ப் பார்த்தார். நான் இன்னும் என் வேளை வரவில்லை என்று காத்திருந்தேன்.

‘அது எப்படி வேற விஷயம் ஆகும்? எல்லாரும் சேந்து சுவரு கட்டணும்னு சொல்றீங்கல்ல? அது மாதிரி எல்லாரும் சேந்து ஜிம் கூட கட்டலாமேங்கறேன்.’

‘எவ்வள பேர் எக்ஸர்சைஸ் பண்ணப்போறாங்க?’

‘எவ்ள பேர் ஸ்விம்மிங் பண்றாங்க…. அதுக்கு மட்டும் ஒரு நியாயமா.’

‘இதப்பாருங்க. டீவியேட் பண்ணாதீங்க… நீச்சல் குளத்துல பசங்க யாராவது விழுந்துடுவாங்கன்ற பயத்துலதான் இந்தப் பிரச்சனையே வந்தது. ஜிம், பார்னு பேசாதீங்க.’

‘பார் வைக்கறதானா பாதிக்காசு நான் தரும்.’ நாயர் சொன்னதும் அவர் அருகிலிருந்த இன்னொரு சேட்டன் அவர் ஹாஸ்யத்துக்கு ரசித்து அவர் கூட கை குலுக்கித் தனியாக பார் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.

‘போன மாசம் பாங்காக்குக்கு என் டாட்டர் வீட்டுக்குப் போயிருந்தேன். அங்கே இருக்கற அப்பார்ட்மெண்ட்ஸ் எல்லாத்திலேயும் கடல் மாதிரி பெரிசு பெரிசா ஸ்விம்மிங் பூல் வச்சி பளிங்கு மாதிரி ஆள் எப்பவும் துடைச்சி விட்டுண்டே இருக்கான். இங்க கோவணம் மாதிரி ஒண்ணு வச்சுண்டு அதுக்கு இந்த கலாட்டா….’ என்று தனிக்கதை ஆரம்பித்து பாங்காக் வாழ்க்கையைப் பற்றி ராவ் சிலாகிக்க ஆரம்பித்தார்.

சுந்தர்ராஜனுக்கு செல்ஃபோனில் அழைப்பு வந்து அவர் எழுந்து போக…. கிருஷ்ணன் தொடைமேல் தட்டி அவர்பாட்டுக்கு லேசாய்ப் பாடிக்கொண்டிருக்க… சிலர் எழுந்து அறை மூலையில் மரியாதைக்கு வைத்திருந்த மிக்ஸர் கார வகைகளைச் சாப்பிட ஆரம்பித்தார்கள். குழப்பமான ஒலிகள் கேட்க ஆரம்பித்தன. நான் இதற்குதான் காத்திருந்தேன். நான் விருட்டென்று எழுந்தேன்.

‘என்ன ஜானி எழுந்துட்டீங்க?’

‘இதுக்கு ஒரு முடிவு தெரியறமாதிரி இல்லை . நான் போறேன். எனக்கு ஜோலி இருக்கு’ என்று நெருக்கினேன்.

‘இருங்க… உக்காருங்க. சைலன்ஸ் ப்ளீஸ்….. ஹலோ ஃபிரண்ட்ஸ் , அஞ்சி நிமிஷம்… ஒரு தீர்மானம் பண்ணிட்டுப் போலாம். நீங்க சொல்லுங்க ஜானி’ என்று வைத்தி மேஜையெல்லாம் தட்டி ஆயத்தம் செய்து கவனம் ஈர்த்தார்.

‘குழந்தைங்க குளத்துல விழுந்துடுவாங்கன்னு சில குடும்பங்கள் பயப்படறாங்க. அதுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செஞ்சா தேவைக்கதிகமா செலவு ஆகுதுன்னு வேற சிலர் பயப்படறாங்க. இதுதான பிரச்சனை? சரி, பணம் செலவும் ஆகாம, குழந்தைங்களும் பாதுகாப்பா இருக்கற மாதிரி… இரண்டு பிரச்சனைக்குமே பொதுவா ஒரு வழி சொல்றேன். ஒத்துகிட்டா சரி. இல்லன்னா என்ன விடுங்க நான் போறேன்…’ என்று களம் அமைத்தேன்.

‘சொல்லுங்க…’ என்று நிமிர்ந்தார்கள்.

‘ஒவ்வொரு சனிக்கிழமையும் ஞாயித்துக்கிழமையும் காலைல எட்டுலர்ந்து பத்து வரைக்கும் நீச்சல் தெரிஞ்ச ஒருத்தர் இந்தக் குடியிருப்புல இருக்கற பசங்களுக்கு நீச்சல் சொல்லித் தரோம். நானு, நாயர், கிருஷ்ணன், தியாகராஜன் எல்லாரும் நீச்சல் தெரிஞ்ச ஆளுங்க. இன்னும் நீச்சல் தெரிஞ்ச யாராவது சேருங்க. ஆளுக்கு ரெண்டு பசங்க எடுத்துப்போம். எல்லாம் துடியான பசங்க. ஒரு வாரத்துல பழகிருவாங்க. பசங்க பேரன்ட்ஸ் ஆளுக்கு ஒரு ட்யூபோ ப்ளோட்டோ வாங்குங்க. அம்பது ரூபா ஆகும். அவ்வளவுதான். வெளியேருந்து யாராவது வச்சிச் சொல்லித்தந்தா கூட ஒரு மணி நேரத்துக்கு ஐம்பதோ நூறோ வாங்குவான். வாராவாரம் நாங்க வழக்கமா நீச்சலடிக்கறவங்க. நாங்க சொல்லித்தரோம். பசங்களும் தண்ணில் விளையாடற சந்தோஷத்துல வருவாங்க. பசங்க நீச்சல் கத்துகிட்ட மாதிரியும் ஆச்சு, யாராவது தவறி விழுந்து அசம்பாவிதம் ஆயிடுமோன்ற பயமும் இல்லை. காசும் செலவில்லை. என்ன சொல்றீங்க….’

கமிட்டி மீட்டிங் முடிந்து போனது.

– கலைமகள், டிசம்பர் 2003

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *