நிலாச்சோறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 27, 2021
பார்வையிட்டோர்: 4,264 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் பஸ் வரும் வரை பஸ்தரிப்பில் காத்து நிற்கிறேன். காலைவேளை ஆகையால், டவாகனங்களெல்லாம் நிரம்பி வழிகின்றன. இதுவரை சென்ற இரண்டு வண்டிகளை சனநெரிசல் காரணமாகத் தவறவிட்டுவிட்டேன். இன்னும் இருப்பது ஒரே ஒரு வண்டி. இப்போது வரும்நேரம்தான். இளம் விதவையான நான், ஆசிரியையாக கடமையாற்றி வருகிறேன். உறவுகள் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லை. தனிமையைப் போக்க, கௌரவமாகச் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ, என் தொழில் எனக்கு உறுதுணையாக இருக்கின்றது.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த நான், தவறுதலாக எனது கைப்பை கீழே விழவே. அதனை எடுக்கக் குனிந்தேன். ஒரே நிமிடம், அதனை யாரோ எடுத்துக்கொண்டு ஓடுவதைக் கண்ட நான் திடுக்கிட்டு, “திருடன், திருடன்” என்று கத்த, அங்கிருந்த ஒரு சிலர் ஓடிச்சென்று என் கைப்பையைத் திருடியவனைப் பிடித்து வந்து, நையப்புடைத்தனர். தீனமான அந்த அழுகுரல் கேட்டுப் பொறுக்க இயலாத நான், “ஐயோ அடிக்க வேண்டாம்! அவனை விடுங்கள்” என் குரலைக் கேட்டவர்களுள் ஒருவன் அடிப்பதை நிறுத்திவிட்டுக் கைப்பையை நீட்ட, மற்றவர்கள் விலகி நின்றனர். நன்றி கூறிக் கைப்பையைப் பெற்ற நான், ‘திருடனை’ உற்று நோக்கினேன்.

தலைகுனிந்த நிலையில் அந்தச் சிறுவன் நின்றிருந்தான். சுமார் பதினொரு வயதிருக்கும், அவனுக்கு. பலர் நையப் புடைத்ததால் அவன் அணிந்திருந்த அழுக்கான மேல்சட்டை கிழிந்து தொங்கியது. ஒருகணம் என்னை அவன் நிமிர்ந்து பார்த்தபோது, அவனது முகத்தினை நேருக்கு நேராய்க் கண்ட எனக்குள் ஓர் அதிர்ச்சி மின்னல். என்னையறியாமலேயே,

“ராமூ…!” என்று கூவி விட்டேன். அப்போது தான் அவனும் என்னை அடையாளம் கண்டு கொண்டான் போலும்! அவனது முகம் அளவிட முடியாத வேதனையால் துவண்டது. உதடுகள் எதையோ சொல்லத் துடிப்பது போல எனக்குத் தோன்றியது. அவனருகில் சென்ற நான், கனிவான குரலில், “ராமு! ஏம்பா இப்படிச் செய்தே? திருடுவது பெரும் பாவம் என்று நான் உனக்குப் படிச்சுச் தந்ததை மறந்திட்டாயா?” என்றவுடன் “இல்லை” என்பது போலத் தலையை ஆட்டியவன் முகத்தைத் தன் பிஞ்சுக்கரங்களால் மூடியபடி விக்கி, விக்கி அழலானான்.

இந்தக் களேபரத்தில் என் பஸ் வண்டியும் தவறிவிட்டது. ஒரு தீர்மானத்திற்கு வந்த நான், அழுதுகொண்டிருந்த அவனை ஒருவாறு சமாதானப்படுத்திப்பக்கத்திலிருந்த ஹோட்டலுக்குக் கூட்டிச்சென்றேன். ஓர் ஒதுக்குப்புறமான இடத்தைத் தேர்ந்தெடுத்தேன். மதியத்துக்காக நான் எடுத்து வந்திருந்த டிபன் பொக்ஸைத்திறந்து அவன் கையில் கொடுத்து உண்ணச் செய்து, டீயும் வாங்கிக் கொடுத்தேன். பல நாட்கள் உணவைக் காணாதவன்போல அவன் அரக்கப்பரக்க உண்பதை காணப் பரிதாபமாக இருந்தது. சாப்பிட்டவாறே அவன் கூறிய கதையைக் கேட்ட எனக்கு “திக்” கென்றது.

அவன் படித்துக்கொண்டிருக்கையில்தான் எனக்கு அறிமுகமானான். படிப்பில் கெட்டிக்காரனான அவன், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் எனக்கு அவன்மீது எப்போதுமே ஓர் அனுதாபம் இருந்தது. திடீரென ராமு பள்ளிக் கூடத்தை விட்டு நின்றுவிட்டது எனக்குத் திகைப்பாக இருந்தது. விசாரித்ததில் தகவல்கள் ஏதும் கிடைக்காததால், அத்தோடு நானும் விட்டுவிட்டேன். ஆனால், இப்போது அவன் சொன்ன விடயங்கள்… ஓ! என்னால் என் காதுகளையே நம்பமுடியவில்லை.

திடீரென ஏற்பட்ட விபத்தினால் ராமுவின் தந்தை இறந்துவிட, அவனது படிப்பும் பாதியில் நின்றுவிட்டது. கஷ்டஜீவனம் நடத்தி வந்த ராமுவின் தாய், தனதும் தன் ஒரே மகனினதும் பாதுகாப்பினையும், எதிர்கால நல்வாழ்வையும் கருதித் தனக்குப் பலவாறு உதவிசெய்த சேதுவை மறுமணம் செய்தாள். ராமுவின் சித்தப்பாவான சேது மகாமுரடன். குடி, சூது என்பவற்றின் இருப்பிடம். மறுமணம் புரிந்த ஓரிரு வாரங்களிலேயே சேதுவின் சுயரூபத்தைத் தெரிந்துகொண்ட ராமுவின் தாய், அதிக நாள் உயிரோடு இருக்கவில்லை . ஆம். சேதுவின் வெறித்தனமான தாக்குதலால் சித்த சுவாதீனமிழந்து, தெருத்தெருவாய் அலைந்து, ஈற்றில் ஒரு லொறியில் மோதி இறந்துவிட்டாள். சித்தப்பாவின் பொறுப்பிலிருந்தராமுவுக்கோ பேரிடி, தனது உல்லாச வாழ்வுக்காக ராமுவைப் பிச்சையெடுக்கவும், திருடவும் வைத்தான். எவ்வாறாயினும் மாலையில் பணம் கொடுக்காவிட்டால், ராமுவை சித்திரவதை செய்வானாம். ஒரு முறை சேதுவிடமிருந்து தப்பியோட முயன்று அகப்பட்டுக்கொண்டதால் அந்தக் கொடியவன் தன் முதுகில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கோலால் வைத்த சூட்டுத் தளும்புகள் அவனைத் தப்பியோட நினைப்பதைவிட்டும் தடுத்து நிறுத்துகின்றதாம்.

கண்ணீர் வழியத் திக்கித்திணறிக் கூறிமுடித்தவன், தனது மேல்சட்டையைத் தூக்கிக் காட்டினான். அவன் முதுகிலிருந்த சூட்டுத்தளும்புகளைத் தடவிப்பார்த்த எனது விழிகள் பனித்தன. மனமோ வேதனையால் துவண்டது.

ராமுவை அழைத்துக்கொண்டு அவன் வாழும் சேரிப் பகுதியை அடைந்த நான், அரைபோதையிலிருந்த ராமுவின் சித்தப்பாவுக்குப் புத்திமதி கூறி, ராமுவை என்னிடம் ஒப்படைக்கச் சொன்னதும் கோபம் கொண்ட அவன், என்னை வாய்க்கு வந்தவாறு ஏசினான்.

என்னிடம் வந்து சொன்னதற்காய் என் கண் முன்னாலேயே ராமுவை நையப்புடைத்தான். அந்தச் சிறுவன் படும் துன்பங் கண்டு பொறுக்க இயலாத் நான், தடுக்க முற்பட அந்தக் கொடியவன் என்னையும் அடிக்க வந்துவிட்டான். அதற்கு மேலும் அங்கு நிற்பது உசிதமாகப் படாததால் நான் * சோர்வோடும், துயரத்தோடும் வந்த வழியே திரும்பினேன்.

இரண்டு நாட்கள் கழித்து, மாலைநேரத்தில் என் வீட்டுக்கதவை யாரோ படபடவென்று தட்டும் ஒலிகேட்டுக் கதவைத் திறந்த நான் அதிர்ந்தேன். வெளியே பொலிஸ் இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார். அவரருகே, பிஞ்சுக்கரங்களில் விலங்கினைச் சுமக்க முடியாமல் சுமந்தபடி ராமுநின்றிருந்தான். அவனது கண்கள் அச்சத்தால் கலங்கியிருந்தன. கேள்விக் குறியோடு நிமிர்ந்து என்னைப் பார்த்த இன்ஸ்பெக்டர் “நான் இவ்வூர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் இவன் ஒருவரது பணத்தை பொக்கட் அடிச்சது மட்டுமல்லாம, இவன கையும் களவுமா பிடிச்ச அந்த ஆள, கல்லால வேறு அடிச்சிருக்கான். இவன அரஸ்ட் செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல முற்படும் போது, உங்களைப் பார்க்க வேண்டுமென்று ஒரே பிடிவாதமாய் அழுதான். ரோதனை பொறுக்கமாட்டாமல் கூட்டிவந்துள்ளோம். உங்களை டிஸ்டர்ப் செய்ததற்கு வருந்துகிறோம். ஏய் பையா உங்க டீச்சரைப்பார்த்தாச்சில்ல?ம்! வா வந்து ஜீப்பில் ஏறு!”

அவர் அவனை இழுத்துச்செல்ல, என்னைப் பார்த்துக் கதறினான் ராமு. “டீச்சர் நான் வேணுமுண்ணு அடிக்கல்ல டீச்சர். பொலிஸ்மாமாகிட்ட சொல்லுங்க டீச்சர்” அதற்கு மேலும் பொறுக்கமுடியாத நான், “எக்ஸ்கியுஸ்மீ இன்ஸ்பெக்டர் சேர். உங்ககூட நானும் ஸ்டேஷனுக்கு வரமுடியுமா?” என்று கேட்க, அவரது அனுமதியைப் பெற்ற பின், வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினேன்.

இன்ஸ்பெக்டர் ஜீப்பின் முன்புறம், டிரைவருக்குப் பக்கத்தில் அமர்ந்துகொள்ள பின்னால் அமர்ந்திருந்த என் மடியில் தலைவைத்து விசித்துக்கொண்டே வந்தான் ராமு. அவனது தலையைத் தடவிக்கொடுத்தபடி, ஆங்கிலத்தில் அவனைப் பற்றிய விபரங்களை இன்ஸ்பெக்டரிடம் கூறினேன். ஓ ஐ ஸீ! என்ன செய்வது? இவனது துரதிருஷ்டம், இவன் அடித்த கல் அந்த மனிதரின் நெற்றிப் பொட்டைத் தாக்கி யிருப்பதால் அவரது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. அவர் குணமடைவதில் தான் இவனது விடுதலை அடங்கியிருக்கிறது”

அவரும் வருந்தியபடி கூறினார்.

“அப்படியா? சேர். இந்த விடயம் இவனது சித்தப்பாவுக்குத் தெரியுமா”?

“இவனை நாங்க அரஸ்ட் பண்ணப் போனபோது, இவனது சித்தப்பா இருக்கவில்லை. நஞ்சுச் சாராயம் குடித்ததால் மிகவும் சீரியஸான நிலையில் அவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றதாகக் கூறினார்கள். அவன் பிழைப்பது துர்லபம்!”

இன்ஸ்பெக்டரிடம் மன்றாடி, ராமுவை ஜாமீனில் விடுவித்து என் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். என் கையாலேயே அவனைக் குளிப்பாட்டிப் புது உடைகளை அணியச்செய்தேன். அன்றிரவு பௌர்ணமியாதலால் நானும் ராமுவும் மொட்டைமாடியில் சென்று அமர்ந்து, நிலாச்சோறு உண்ணத் தொடங்கினோம். திடீரென ராமுவின் கண்கள் கலங்குவதைக் கண்ணுற்ற நான் காரணங் கேட்டேன்.

“டீச்சர் எங்க அம்மா-கூட ஒரு நாள் எங்க குடிசை வாசல்ல நான் இப்படித்தான் நிலாச்சோறு சாப்பிட்டேன். அ…. அ அப்போ எ… எங்கம்மாதான் எனக்கு சோறு ஊட்டிவிட்டாங்க. நிறைய்ய கதைகள்லாம் கூட சொன்னாங்க!” அவன் விம்மலுடன் கூற என் கண்களும் பனித்து விட்டன.

“இனி என்னடா ராமு, நானும் உன் அம்மா மாதிரி தான்டா. எங்கே, எங்கிட்ட வந்து உட்கார். நான் ஊட்டி விடுகிறேன்.” தளதளத்த குரலில் கூறி, கதைகள் சொல்லியவாறு அவனுக்கு சோறு ஊட்டி விட்டேன். என் நெஞ்சம், தாய்மை உணர்வால் விம்மித் தணிந்தது.

துரதிருஷ்டவசமாக ராமு அடித்த கல் அந்தப் பெரியவரின் உயிரைக் குடித்துவிட்டது. விபரமறியாத வயதிலேயே கொலைகாரப்பட்டம். வேதனை தாளவில்லை எனக்கு. நான் வைத்த வக்கீல் சிறப்பாக வாதாடியும், அவரது வாதம் எடுபடவில்லை. ஈற்றில், ராமுவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கனுப்புமாறு நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

கையில் விலங்குமாட்டி, ராமுவை வேனில் ஏற்றக்கூட்டி வந்தார்கள். என்னருகே வந்து நிற்க, குனிந்து அவன் தோளைப் பற்றினேன். “டீச்சர் கவலைப்படாதீங்க, பொலிஸ் மாமா சொன்னாரு, என்னைச் சீக்கிரமா அனுப்பிடுவாங்களாம். நான் வந்ததுக்கப்புறமா அன்னிக்குப்போல நாங்க ரெண்டுபேரும் நிலாச்சோறு சாப்பிடுவோம் டீச்சர்! எனக்குக் கதைகள்லாம் சொல்லி சோறு ஊட்டிவிடுவீங்கதானே?”

அவனது மழலைக் கேள்வியைக் கேட்ட நான், அவனைக் கட்டிக்கொண்டு கதறியழுதேன். அங்கு நின்றிருந்த பலரும் என்னை ஆச்சரியமாய்ப் பார்ப்பது புரிந்தும் என்னை என்னாலேயே கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அழுதேன், அழுதேன், அழுது கொண்டே இருந்தேன், நெடுநேரமாக.

– ஜனனி, ஜூலை 16-22 1995, எருமை மாடும் துளசிச் செடியும் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2003, தமிழ் மன்றம், கண்டி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *