நிதி சாலசுகமா….?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 5,654 
 

சுன்னாகம் பேருந்துத்தரிப்புநிலையத்திலிருந்து கிழக்கு நோக்கிச் சாவகச்சேரிக்குப்புறப்படும்வீதி, புத்தூர்க்கிராமத்துள் நுழைந்து நீண்ட வயல்வெளிகளைத்தாண்டி ‘நாவாங்களி’ ‘தனது‘ எனப்படும் இரண்டு கடலேரிகளை இணைக்கும் ஊரணிகண்மாய்மேல் சென்று ஏழெட்டுக்குடியிருப்புக்கள் அடர்த்தியான தென்னைமரங்களும்கொண்டு தனித்த ஒரு தீவைப்போலிருக்கும் அந்திரானைத்திடலையுந் தாண்டித்தொடர்கிறது.

ஊரணிக்கண்மாயிலிருந்து வடக்கே பார்க்கும்பொழுது வயல்வெளிகளுக்குப் பின்னால் தனது கடலேரி ஆரம்பிக்கும் இடத்தில் தெரியும் ஓடுவேய்ந்த சுடலைமடத்தையும், ஆசாரித்திடலிலுள்ள சில ஓட்டுவீடுகளையுந்தவிர சாவகச்சேரி நோக்கிப்போகும் ஒருவர் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன்கோவில்வரையும் வேறொரு குடியிருப்புக்களையும் காணமுடியாது.

ஆசாரித்திடலில் இரண்டு பரப்புக்காணியில் சிறியதொரு தென்னந்தோட்டத்தின் முகப்பில் சாவகச்சேரிவீதியில் வடக்குப்பக்கமாக எமது மண்வீடும் கம்மாலையும் இருந்தன. எமது வளவுக்கு முன்னாலும் பெரிய தென்னந்தோப்பு 200 மரங்களுக்கு அதிகமாயிருக்கும், ஆனால் அவையெல்லாம் காய்த்துக்கொட்டிக்கொண்டிருந்தன என்றில்லை. முன்பெல்லாம் ஒரு மலையகக்குடும்பம் தோப்புக்குள்ளேயே குடிசைபோட்டிருந்து தோப்பை அச்சறுக்கையாகப் பேணிப்பராமரித்தது. பின் அது ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி நாட்டைவிட்டு வெளியேறியபின்னால் புதிய தென்னம்பிள்ளைகளை நடுதல், அடிக்கொத்துதல் எல்லாம் நின்றுபோயின. எல்லாத்திக்கிலும் வேலியில் கண்டாயங்கள் தோப்புவளவிலொரு மூலையில் வண்டியாக ஊமல், சிரட்டை பறிப்பித்து ஐயா கரிசுடுவார். தோப்பின் சொந்தக்காரர் மாட்டுவடம் மாதிரித்தங்கச்சங்கிலி அணிந்து பழைய மொடெல் ஓஸ்ரின் கேம்பிரிட்ஜ் காரில் தாட்ஸ்பூட்ஸ் என்று இங்கிலிஷில் கதைத்தும் பேரப்பிள்ளைகளுடன் பிக்னிக் வருவதைப்போல்வந்து இடுப்புக்குக்கைகொடுத்துக்கொண்டு நின்று மரங்களை அண்ணாந்து பார்ப்பார். தோப்புப்பார்க்கவே முழங்கால்வரை நீண்ட வெள்ளைக்கால்மேஸில் கலர்கலராய் வளையங்கள் இருக்கும் சப்பாத்து அணிந்துவரும் அவரது பெயரக்குழந்தைகளை நானும் தம்பிமாரும் வேடிக்கை பார்ப்போம். வீட்டுக்குத்திரும்புமுன் கள்ளிறக்குவோரைக்கூப்பிட்டு நல்ல பதமான இளநீர்க்குலைகளை இறக்குவிப்பார். எங்களுக்கும் ஒன்றிரண்டு இளநீர் கிடைக்கும்.

எங்கள் குடும்பம் மிகவும் பெரியது 14 வயதில் நான் 9வது வாசிக்கும்போது, கடைசித்தங்கைக்கு ஒருவயது முடிந்தது நடைபயின்றுகொண்டிருந்தாள், அவளுக்கும் எனக்குமிடையில் அம்மா சந்தான லக்ஷ்மியாக இன்னும் 3 தம்பிகளையும் பெற்றிருந்தாள்.

மாரிகாலங்களில் கடுமையான ஆஸ்துமாவினால் கஷ்டப்பட்டதாலும் டாக்டர்களின் கடுமையான எச்சரிக்கையாலும் அம்மா பிறகு பெற்றுக்கொள்ளவில்லை.

ஐயாவின் முதல் உலகம் கம்மாலை, சளையாத உழைப்பாளி, நாளில் 12 மணித்தியாலங்கள் அதனுள்ளேயே முடங்கிக்கிடப்பார். இரண்டாவதாக அவர் தெரிந்துகொண்டதொரு உலகம் ஒன்றென்றால் அது கர்நாடகசங்கீதம். சங்கீதம் பெரிதாகச் சோறுபோடாது என்பதைத்தெரிந்துகொண்டு அவர்காலத்திலேயே கம்மாலைக்குள் புகுந்துகொண்டார். தனக்குத்தானே பாடி மகிழும் இரகம். உலையில் வைத்த இரும்பு பழுக்கஎடுக்கும் நேரத்துக்குத்தகுந்தவாறு அவர் உருப்படிகளின் தேர்வு சிறிய துக்கடாக்களாகவோ; முழு ஆலாபனையுடன்கூடிய பல்லவி, அனுபல்லவி, சரணமாகவோ அமையும்.

மோசமான குடிப்பழக்கமோ அல்லது வேறெந்த வீண்செலவுகளை உண்டுபண்ணும் பழக்கவழக்கங்களுமே இல்லாதிருந்தும் எதிர்காலம்பற்றிய திட்டமிடுதல், சேமிக்கும் பழக்கமில்லாத வாழ்க்கைமுறையால் எங்களைப் பட்டினிபோடாது வளர்க்கவும் ஓரளவு படிக்கவைக்கவுந்தான் முடிந்ததேதவிர தன் இறுதிவரை சாமானிய கம்மாளராகத்தான் அவரால் வாழமுடிந்தது.

மாரிகாலத்தில் புல்லும் பசுந்தழைகளும் விளைந்த வேளாண்மையுமாக ஆசாரித்திடல் பச்சைப்பசேலென்றிருக்கும். கடலேரிகள் மட்டமுயர்ந்து நாவாங்களியும் தனதும் தொடுக்கவும் ஊரணிக்கண்மாயின் நீரோட்டமுள்ள இடத்தில் அலம்பலினால் செய்த ‘கெம்மின்கூடுகளை’யும் நட்டுத் தண்ணீரோடு தெறித்துச்செல்லும் முரல்மீன்களையும், இறாலையும் பாட்டுவாளிக்கிழவனும் சோமனும் போட்டிபோட்டுக்கொண்டு பிடிப்பதைப் பள்ளிக்கூடம்விட்டுவரும்போது பார்த்துக்குதூகலிப்போம். மழை அதிகமானால் நாவாங்களி செம்மணிக்கடலுடனும்; தனது தொண்டமானாறுக்கடலுடன் தொடுத்துவி யாழ்ப்பாணத்தீவகற்பத்தின் தொண்டைபோலமைந்த இக்கடலேரியுள் பெருங்கடல் மீன்களான விளை, கொய், வாளை, முரல் என்பனவும் வந்துவிடும். வடக்கில் பருவப்பெயர்ச்சிக்காற்றுக் கடலின் அலைகள் வீதியோரம் கட்டுப்பட்டுள்ள கலிங்குச்சுவர்களில் மோதும்போது வெண்ணுரைகள் எழும்பிப்பந்துகள்போல் வீதியில் உருளும். அவை எம்மையும் நனைப்பதுண்டு.

சித்திரைவருடம் பிறந்தபின்னால் கடலேரிகளில் பெரும்பகுதி வற்றி அங்கே பசும்புல் முளைக்க மேய்ச்சல்தரவையாக மாறிவிடும். கைதடி, நாவற்குழிப்பகுதியிலிருந்து கிராமவாசிகள் புத்தூர் அச்சுவேலிக்குக் கால்நடையாகவோ வண்டியை ஓட்டிக்கொண்டோ இத்தரவையாலேயே பயணம் செய்வர். மட்டுவில் சாவகச்சேரியிலிருந்து தொண்டமானாறு செவச்சந்நிதிக்குச்செல்லும் பக்தர்கள், பண்டாரிகள், தவசிகள், பரதேசிகளுக்கும் தனது தரவையே குறுக்குவழி.

நாவாங்களிக்கடலில் நடுப்பகுதியில் ஆவணிமாத்தில்கூட வற்றாத நிலத்தடியில் ஆழத்துக்கு நீரைகொண்டிருக்கும் சிறுகேணியையொத்த பறவெட்டிகள் எனப்படும் பெருந்துரவுகளுண்டு, அதைச்சுற்றிவர குடியானவர்கள் அலம்பலால் வேலியடைத்திருப்பார்கள், அதனுள் இறங்கிக் கரப்புக்கூட்டினால் குத்திக்குத்தி சிறு திரளிகள், முரல், கெழுத்தி, சூடை, சூவாரை மீன்களைப்பொறுக்கிப் பொறுக்கிப் பறிகளை நிரப்புவர், அத்தாங்கு எனப்படும் வலைவடியாலும் வாரிவாரிச் சிறு மீன்களைப்பிடிப்பார்கள்.

இவர்களுடன் போட்டியாகக் கொக்குகளும், உள்ளூர்நாரைகளும், உண்ணிக்கொக்குகளும் பங்களாதேசத்திலிருந்து விஸாப்பிரச்சனைகள் எதுவுமில்லாமல் வந்திறங்கும். கூழைக்கடாவும், நீர்க்காகங்களும் மீன்குளிக்கும்.

பரவெட்டிகளின் மேல் கலைந்ததேனீக்கூட்டம்போல் இலட்சக்கணக்கில் பறக்கும் அத்தனை மீன்கொத்திப்பறவைகள் மேல் இலக்குவைக்காமலே சும்மா ஒரு பண்டாரவெடிவைத்தாலே ஐம்பது அறுபது பறவைகள் பொலுபொலுவென விழச்சாத்தியம்.

நாவாங்களிக்கடலேரிக்கும் அப்பால் தெரியும் பனங்கூடலைத்தாண்டி தெற்காகப்போனால் நாவற்குளி. விடியற்புறங்களில் யாழ்மெயில்வண்டி நாவற்குளி தொடரிநிலையத்தில் நின்று கூவுவது கடலேரியைத்தாண்டி ஆசாரித்திடலுக்குச் சத்தமாய்க்கேட்கும்.

சாகவச்சேரிச்சந்தைகூடும் செவ்வாய் வியாழன் சனிக்கிழமைகளில் மணிக்கொரு பேருந்தும், மறுநாட்களில் இரண்டுமணிக்கொரு பேருந்துவீதமும் சுன்னாகம் சாவகச்சேரி பேருந்துச்சேவையுண்டு. இரவு கடைசிப்பேருந்தில் ஏறநேர்ந்தால் நடத்துனர் பயணச்சீட்டோ மீதிச்சில்லறையோ தரமாட்டார். நைஸாகத் தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டுவிடுவார்.

“பாழ்பட்டமழைவந்து இரண்டுநூபாய்க்கு ஏற்றினதை முறிச்சுப்போடுட்டுது, சாய்க்…… அண்ணே மட்டுவிலுக்கு ஒரு டிக்கெட் தாங்க…… ”

‘ஏத்தினது’ மாத்திரம் நின்றுபிடித்திருந்தால் காலிலேயே போயிருக்கக்கூடிய கிராமவாசி மழைத்தூறலையும் முன்னிருட்டையுமிட்டு இன்னும் 50 சதம் செலவுசெய்யத்துணிந்து பேருந்தில் ஏறுவார்.

“டேய் பார்றா பறப்பயல் அண்ணை தம்பி முறைகொண்டாடிக்கொண்டு டிக்கெட் கேட்கிறத………. எட்டி உதைஞ்சனேன்டா கையைப் பரத்திக்கொண்டுபோய் விழுவாய் பன்னாடை……. அண்ணையாம் அண்ணை.”

பேருந்தில் பயணம் செய்யும் அத்தனைபேரினதும் ஜாதி கோத்திரங்களை அறிந்துவைத்துக்கொண்டு பணிபுரியும் நடத்துனருக்குக் கெட்டகோபம்வரும். இந்த அறிவுஜீவியின் மூளைநஷ்டம்போகாது இலங்கைப்போக்குவரத்துச்சபை அவரைத் தன் சேர்மனாகவே நியமிக்கலாம்.

இப்பேருந்து சேவைகள் தவிர, வலிகாமம் கிழக்குப் பகுதியிலிருந்து இருண்டபின்னால் கொழும்புக்குப்புறப்படும் வெங்காயம், மிளகாய், கிழங்கு ஏற்றிய பாரவுந்துகளின் இரைச்சல்; கிழக்கூர்களிலிருந்து கிடுகு, தென்னமட்டை, மூரிமட்டை, கோம்பை என்பவற்றை ஏற்றிவந்து மேற்கூர்களில் விற்றபின்னால் இலாம்பு பூட்டிக்கொண்டு இரவில் திரும்பும் வடக்கன்மாடுகள் பூட்டிய வண்டிகள் எழுப்பக்கூடிய ‘ஜல்’ ‘ஜல்’ ஓசைகளுடன் அங்குள்ள பட்டறைகளில் எழக்கூடிய ஓசைகள்தவிர ஏதோ தபஸில் இருப்பதுபோல் ஆசாரித்திடல் எப்போதும் நிசப்தமாகவே இருக்கும். ஆசாரித்திடல் வடக்கில் சூழ்ந்திருந்த தில்லைக்காடுகளும், கலட்டியும் கிழக்கில் சூழ்ந்திருந்த விடத்தல் மண்டிப்புதர்களும், காரை, ஈச்சம்பற்றைகளும், வெட்டுக்குளமும் இயற்கையான பொதுக்கழிப்பறைத் தேவையை அங்கு வாழ்பவர்களுக்கு நிவர்த்தித்தன.

என் இரண்டாவது தம்பி 10 வயது சைக்கிள் பாரிலிருந்து ஓட்டக்கூடக்கால் நீளம் போதாது, ஆனாலும் ஐயாவின் சைக்கிளை நைஸாகஎடுத்து தரவைக்காடு மேடெல்லாம் சதா உருட்டித்திரிவான். ஒரு முறை நீர்வேலியில் ஒரு புதுமனைப்புவிழாவுக்கு தங்கையைமட்டும் எடுத்துக்கொண்டு ஐயாவும் அம்மாவும் சென்றிருந்தனர். ‘தம்பிமாரைக் கவனமாகப் பார்த்துக்கொள்……… தம்பியைச் சைக்கிளைத்தொடவே விடப்படாது’ என்றுசொல்லிவிட்டுச் செல்லும் ஐயாவின் தலைமறைய முன்னரே தம்பி “ அண்ணே சைக்கிள்….. அண்ணே சைக்கிள்” என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டான்.

அவனது அனத்தல் தாழாமல் “சைக்கிளை வீதிக்குமட்டும் எடுத்துச்செல்லப்படாது” என்று எச்சரித்துவிட்டுக் கொடுத்தேன். கொடுத்தானதும் எமது வளவு முழுவதும் அதை உருட்டிக்கொண்டேயிருந்தான். ஐயா அம்மா திரும்பும் நேரம் பார்த்தால் வளவு முழுவதும் சைக்கிள் டயர்ப்பூவின் அடையாளங்கள், ஐயா கண்டால்த்தோலை உரித்துவிடப்போகிறார், திடீரென்று எனக்கு ஐடியாவொன்று உதித்தது. (உலைக்கான கரி வரும்) ‘கயிற்றுச் சாக்கைப்போட்டு வளவு முழுவதும் இழுடா’ என்றேன், இழுத்தான். இப்போ டயர் தடயங்கள் மறைந்து தரை முழுவதும் கயிற்றுச்சாக்கின் கீற்றல்கள். ஐயாவுக்குப் பார்த்தவுடன் எல்லாம் விளங்கிவிட்டது. தம்பியைத் தனியாக அழைத்துக்கேட்டார்: “கயிற்றுச்சாக்கைப்போட்டுத் தரையில் இழுத்தால் வடிவாக இருக்குமென்று உனக்கு யார் சொன்னது?” “அண்ணாதான்…….” என்றானே பார்க்கலாம்.

தரவைக்கு மாடுமேய்க்கவரும் பையன்களைச் சேர்த்துக்கொண்டு சிலநாட்களில் கிரிகெட் விளையாடுவோம். டென்னிஷ் பந்தும், தென்னமட்டைத் துடுப்புந்தான் விளையாட்டுச்சாதனங்கள்.

விளையாடும்போது ‘ஹவ்ஸ் தட்’ ‘ஓவர்’ போன்ற இங்கிலிஷ் வார்த்தைகள் நிறையப்பாவிப்போம். என்னைவிட இரண்டுவயதுகள் மூத்த சிவராஜா மாமாவும் சில வேளைகளில் எங்களுடன் விளையாடவருவார். அவருக்கு மேலும் சில இங்கிலிஷ் வார்த்தைகள் தெரியும். அடிக்கடி ‘ஐ….வே……….’ என்பார். ஆனால் எம்மைப்போலவே அவருக்கும் அவையெதற்கும் அர்த்தம் என்னவென்று தெரியாது!

மாரிகாலத்தில் சோடைத்தேங்காயில் ‘வலந்தைகள்’ கட்டிக்கொண்டு திருட்டுத்தனமாகப்போய் கடலேரியில் நீந்துவோம். பின் தலை களிசான் ஈரம் உலருமட்டும் தோப்பினுள் வந்து ‘வார்’ ஓட்டம் ஓடுவோம். கடலில் குளித்த விஷயம் அறிந்துவிட்டாலோ அம்மா வேலிப்பூவரசில் கம்பு பிடுங்கி ஓடவோட அடிப்பார். நேர் இளைய தம்பியும் சரியான வால். வெயிலில் கஷ்டப்பட்டுச் சைக்கிள் மிதித்துக்கொண்டு போகும் ஐஸ்கிறீம்காரரை 100 மீட்டர் கடந்துபோகவிட்டுப்பின்னால் கைதட்டிக்கூப்பிட்டு “ஐஸ்கிறீம் விற்பதற்கா”வென்று கேட்பான்.

வெளியில் தமக்குள் பேசிக்கொள்ளும்போது இளக்காரமாக முருகேசன் என்றும் நேரிலே காரியமாக ‘ஆசாரியார்’ என்று பௌவியமாக அழைத்துக்கொண்டும் வரும் ஐயாவின் வாடிக்கைக்காரர்களில் அண்ணாமலை வாத்தியார் வித்தியாசமானவர். தொழிலில் எப்போதோ இளைப்பாறியவர். சட்டைபோட்டுக்கொள்ளவே மாட்டார், சால்வைதான் மட்டுந்தான் போர்த்தி முன்பக்கமாக அந்தலைகளை முடிந்திருப்பார். சாயலில் ஆர்.கே. லக்ஷுமணனின் கேலிச்சித்திரத்தில்வரும் திருவாளர். பொதுசனம் போலிருப்பார். தலையில் வழுக்கைப்போக மீதிப்பரப்பிலிருக்கும் 14 மயிரில் புளியங்கொட்டை அளவில் ஒரு குருவிக்குடுமி வைத்திருப்பார். சரசாலை சொந்தவூர், மேற்கே மனைவியின் ஊரில் (சீதனாமாக வாங்கியது) பெரிய காய்கறித்தோட்டச் செய்கைக்காரர். குறைந்தது வாரம் ஒரு தடவையாவது எங்கள் வீட்டைக்கடந்துபோவார். போகும் ஒவ்வொரு தடவையும் ஏதாவது கூராம்பையோ, சத்தகமோ திருத்தத்துக்குக் கொண்டுவருவார். கடைசி “ பாரும் இந்த (சைக்கிள்) கரியரை இந்த ஆட்டம் ஆடுது………. ஒருக்கால் பார்த்துத்தறைஞ்சு தந்தீரென்றால் இருட்டுக்கட்டமுதல் புறப்படச் சௌகரியமாயிருக்கும்….” என்பார். சிறு பிள்ளைகளாகிய எம்மிடம் பேசினாற்கூட ‘நீர்’ ‘நாம்’ என்றே மரியாதையாக விளித்துப்பேசுவார். செய்விக்கும் வேலைகளுக்கு பணம்கொடுப்பதில்லை என்பதைமட்டும் தன் ஜீவிததத்துவமாகவே வைத்திருந்தார். பெம்மான் தப்பித்தவறி ஒரு நாளாவது மடியை அவிழ்த்து ஒரு ரூபாய் எடுத்து நீட்டி ஐயா அறியமாட்டார். தோட்டத்திலிருந்து விளைந்த மரவள்ளிக்கிழங்கு, பயிற்றங்காய், கீரைகள் எல்லாம் எப்போதும் சைக்கிள் காரியரில் கட்டுப்பட்டிருக்கும். சந்தையில் விலைபோகாது திரும்பிய கீரைப்பிடியைக்கூட எங்களுக்குத்தர மனம்பிடிக்காது. “ ஆசாரியருக்குக்கொஞ்சம் மரவள்ளிக்கிழங்கும், இரண்டு கீரைப்பிடியும் தரலாந்தான், கொஞ்சம் சிக்காராய்க் கட்டிப்போட்டனாக்கும் ஆய்ங்……..” “அதைவிடச் சிக்காராய் திருப்பவும் நான் கட்டித்தருவேனே….” என்று சொல்ல ஐயாவுக்குத்தெரியாது. வாத்தியார் வரும்போதே ஒரு இதிகாசச்சிக்கலைக் கொண்டுவருவார், தனது வேலை முடியுமட்டும் அதை ஐயாவுடன் நன்கு அலசுவார். வேலை முடிந்தாலும் ஐயா பிரச்சனையுடன் தலையைக் குடைந்துகொண்டிருக்கையிலோ அல்லது அந்தத் திருப்புகழைப்பாடும், இந்தப்பாசுரத்தைப்பாடும் என்று கேட்டு ஐயாவும் பாடிவிட்டு இசையின் பாவம் விடுபடாது மயங்கியிருக்கையிலோ ‘இருட்டுக்கட்டத்தொடங்குது’ என்று மெல்ல எழுந்து வாத்தியார் ஓசைப்படாமல் மாறிவிடுவார்.

அம்மாதான் கறுவுவார்.

“ இவ்வளவு வேலை செய்வித்தும் ஒரு சதங்கூடத்தராமல் போறானே கஞ்சப்பயல் கஞ்சப்பயல்”

ஐயா தடுப்பார். “ அப்படியெல்லாம் ஏசாதடி……. ஒரு படிச்ச மனுசனை.”

“ங்.….ங்…..ங் எப்படிக்காசை இறுக்கிறதென்றதிலதான் அவருக்குப் பண்டிதர் பட்டம் கொடுத்தாங்களாக்கும்?”

“சரி………விடு”

மறுமுறை வாத்தியார் செருமிக்கொண்டே படலையைத்திறந்து உள்ளே பார்த்துவிட்டு பௌவியமாய் “ ஆசாரியார் என்று அன்பொழுக அழைத்துக்கொண்டு வரும்போது ஐயா மீண்டும் முகம் மலர்ந்து வரவேற்பார். என்ன வசியமோ!

வெளுத்ததெல்லாம் ‘ கள்’ என்றிருக்கும் சுந்தரன் என்ற குடியானவனும் மறக்க முடியாதவன். கள்ளுக்கு வழி எதுவுமில்லாமல் போனால் நேரே கம்மாலைக்கு வந்துவிடுவான், வந்துசற்று நேரம் துருத்தியை ஊதிவிட்டோ, இல்லைப் பரவியிருக்கும் பொருட்களை ஆயுதங்களை ஒழுங்குபடுத்தி வைத்துச் சுத்தம்பண்ணிவிட்டோ மேற்கண்ணால் பார்த்துக்கொண்டும் தலையைச்சொறிந்துகொண்டும் நின்றால் ஐயா 2 ரூபாய் கொடுப்பார், பணம் கொடுத்தபின்னால் சுந்தரன் சொல்லாமல்கொள்ளாமல் மாயமாகிவிடுவான்.

ஒருமுறை கிழக்கூர்வண்டியொன்றுக்குத் தோடு (கோஸுதான்) போட்டு அவசரம் அனுப்ப வேண்டியிருந்தது. அந்தநேரம்பார்த்து அதற்குத் தேவையான இரும்புத்தகடு கையிருப்பிருக்கவில்லை. அவ்வேளை சுந்தரனும்வரவே ஐயா 30 ரூபாய் காசும், கடைக்காரருக்குத் தேவையான குறிப்பும் எழுதிக்கொடுத்து அவனை யாழ்ப்பாணம் அனுப்பினார். அன்று போனவந்தான், ஆளைப்பின்னால் ஒருமாதமாகக் காணவில்லை. ஒருநாள் மாலை அந்திசாய்கையில் வெகு இயல்பாக………..

“என்னவும் பிளாவுக்குள் (கள்ளு மொந்தை) கிடக்கிற ஈக்குள்ள கொடுப்பனவுகூட எனக்கில்லையே?” என்றபடி வந்தான்.

“அந்தக்கொடுப்பனவு கிடக்கட்டும்………. யாழ்ப்பாணத்துக்கு தோட்டுத்தட்டுக்கு அனுப்பினேனே எங்கு தொலைந்தாய்?” என்றார் கோபப்படத்தெரியாத ஐயா.

நெற்றியைச்சுருக்கி வீறமைவாக (சீரியஸ்) பூர்வஜென்ம நிகழ்வொன்றை ஞாபகம் செய்பவனைப்போலப் பாவனை பண்ணிவிட்டுச்சொன்னான். “ ஓ……. அந்தத்தகடா…………… அந்தத் தகடும் யாழ்ப்பாணத்திலயும் இல்லையும்.”

ஐயா கேலியாகச்சிரித்தார்.

“கண்ணாணை இல்லையும். இருந்தா வாங்கியந்திருக்க மாட்டனே………….?”

பின் இதுக்காகவே வந்தவன்போலக் குற்றவுணர்வு எதுவுமின்றிக் கம்மாலையைக் கூட்டிச்சுத்தம்பண்ணித் தண்ணீர் தெளித்தான், கரிச்சாக்குகளை உதறி மடித்துவைத்தான், நீர் கொட்டுள் தண்ணீர் ஊற்றி நிரப்பிவிட்டு தலையைச்சொறிந்துகொண்டு நிற்கையில் ஐயா கேட்டார்:

“அந்த ஈ அப்பிடி என்னதான் பாக்கியம் செய்தது?”

“சாகமுதலாவது மூக்குமுட்டக்குடிக்குதேயும்…..!”

நான் பிறந்தது குடும்பத்துக்கு நிரம்பவும் அதிஷ்டமாம், கிழக்கூரில் எழும்பிக்கொண்டிருந்த அம்மன்கோவில் ஒன்றின் கிராதிகள், கேற்றுக்கள் அமைக்கும் வேலைக்கான ஒப்பந்தம் ஒன்று கிடைத்து நல்ல பணப்புழக்கம். அபோதே கல்வீடு கட்டுவதற்கு ஐயா தளம்போட்டுவிட்டார். மேற்கொண்டு வீட்டு வேலைகளைச்செய்ய இரண்டாயிரம் மூவாயிரம் ரூபாய் தொகைகளில் சீட்டுக்கள் கட்டுவார், ஒவ்வொருமுறை சீட்டு எடுக்கும்போதும் கல் பறிப்போம், மண்பறிப்போம், சீமெந்து வாங்குவோம் என்பார்கள், பின்னால் அடைவிலிருக்கும் அம்மாவின் தாலிக்கொடி மீளும். ஒன்றோ இரண்டோ சேலைகளும் எமக்கான சில உடுப்புகளும் ஆட்டிறைச்சியும், சிறிய மில்க்வைட் சாக்குத்துணிப்பையில் அடியில் மறைத்துவைத்து ஒரு கருப்பஞ்சாராயப்போத்தலும் வரும், அவ்வளவுதான். சுவர் அரையடிகூட எழும்பாது, மறுநாள் சிம்ஹேந்திரமத்திமத்தை சலிக்காமல் பிருகாக்களோடு நளினமாக ஆலோபனை பண்ணிக்கொண்டு புத்துணர்ச்சியுடன் கம்மாலைக்குள் நுழைவார் ஐயா. இரவில் சாப்பாடானதும் நண்டுங்குஞ்சுமாய் நாம் ஐவரையும் பத்துக்கு பதினைந்து அடியிலான சிறியவீட்டினுள்ளே தூங்கவிட்டுவிட்டு, வெளித்திண்ணையில் சாக்குக்கேட்டினை இறக்கிவிட்டு ஐயாவும் அம்மாவும் ஓலைப்பாயில் படுத்துக்கொள்வார்கள்.

சரியான மாரிகாலத்தில் அடைமழைகளின்போது வீட்டின்தரை கசியும், தரையில் மர அரிவுதூளை நிறையக்கொட்டி அதற்கும்மேல் கரிவரும் கயிற்றுச்சாக்குகளை பல அடுக்கில் பரவி அதன்மேல் பலகைகளைப்போட்டு ஓலைப்பாய்களை விரித்துப்படுப்போம். நுளம்பு (கொசு)வந்து கொஞ்சிக்குதூகலிக்கும் இரவுகளில் மண்சட்டியில் உமிகொண்டு புகைமூட்டிவிட்டு சணல் சாக்குகளினுள் கால்களை நுழைத்துக்கொள்வோம், உலகில் எல்லாரும் இப்படித்தான் தூங்குகிறார்கள் என்றே நினைத்ததால் எவர்மீதும் எமக்கு எந்தப்புகார்களோ வருத்தமோ இருந்ததில்லை.

குளிர் என்றால் அம்மாவுக்கு ஆஸ்த்மா வந்துவிடும், மூச்சுவிட நிரம்பவும் அவதிப்படுவார். டாக்டர், ஊசி, மருந்துகள், கார் என்று ஏகச்செலவுகளுண்டாகும். அம்மா எழுந்திருக்கவே கஷ்டப்படும் நாட்களில் ஐயாவே சமைப்பார். குடியானவர்கள் வாழும் பகுதியில் தெய்விக்கிழவிவீட்டில்போய் நான் 50 சதத்துக்கோ ஒரு ரூபாய்க்கோ கருவாடு வாங்கிவருவேன், அநேகம் நாட்களில் இருட்டியபின்னால் குப்பிவிளக்கில் ஐயா குழம்புவைப்பார். காரல்கருவாடு என்றாலும் தலைக்கு மூன்றே தேறும், சற்றே பசியேறியபின்னால் கிடைக்கும் சாப்பாடு தேவாமிர்தமாகும்.

காலையில் அநேகமாக பாண்தான் ஆகாரம், பழைய குழம்பில் தொட்டுக்கொண்டே தேங்காய்ச்சம்பலுடனோ, தேநீருடனோ சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடம் ஓடுவோம். கடைக்குட்டிப்பெண் ஆர்த்தியும், கடைசித்தம்பியும் வீட்டிலிருக்க நாம் மூவரும் அமர்க்களமாகப்போவோம். புத்தூரில் பள்ளிக்கூடம் இரண்டு மைல் தொலைவுக்கு வெறுங்காலுடன் பொடிநடைதான். பேருந்தையெல்லாம் பயன்படுத்தும் பொருளாதாரம் கிடையாது.

மதியம் கழிந்து மூன்றரை மணிக்கு பள்ளிக்கூடம் விட்டுவிடும். சூரியன் பிடரியில் காய, தார் ரோடு காலை வறுவல்பண்ண வியாபாரம் முடிந்த கிழக்கூர் திரும்பும் மாட்டுவண்டிகள் ஏதாவது வரும்வரை புத்தூர்ச்சந்தியில் ஆசாரித்திடல் தோழர்களுடனும், தம்பிமார்களுடனும் காத்திருப்பேன். வண்டியின் நிழல் ஒதுக்கில் நடந்துபோகலாம், வண்டிக்காரர் ஐயாவின் வாடிக்கையாளராக இருந்தாலோ கொஞ்சம் இரக்க சுபாவம்கொண்டவராக இருந்தாலோ ‘ஏ………பையா…….மித’ (தொற்றிக்கொள்) என்பார்கள். தொற்றிக்கொள்வோம்.

ஒருமுறை இப்படியொரு வண்டியில் தொற்றிக்கொண்டதும் பெரிய ஒளிவட்டத்துடன் சுருட்டுப்புகைத்தபடி நெடுக்காக வைக்கோல்ச்சாக்கில் சொகுஸாகப் படுத்திருந்த ஒருவர் எனது புத்தகங்களில் ஒன்றை உருமையுடன் உருவி கண்ணுக்கு அணுக்கமாகவும் தூரமாகவும் பிடித்து பெரிய எழுத்தில் இருந்ததை வெகுசிரமப்பட்டு வாசித்தார்.

அது உறவினர் ஒருவர் முதலாண்டு படித்துவிட்டுக்கொடுத்த 9ம் படிவ சைவநெறி, முன்னட்டையும் ஐந்தாறு தாள்களும் இல்லாதிருந்தது. அதன் முதன் அத்தியாயங்களில் திருக்குறள் பு….த…ல்…வ….ரை….ப்….பெ….று….த….ல்…..

“ஓஹோ…… உங்களுக்கு உதுகளும் சொல்லித்தருகினமோ….…?”

“ஓம்….சொல்லித்தருகினம் “

“கலிகாலமப்பா……… பொம்பிளை ரீச்சரவையும்?”

இப்ப்போது என்னுள் கோபம் பிரவகித்தது, அவரை மறித்து, நீங்கள் நினைக்கிற விஷயமல்ல அது……. இது திருக்குறள் சான்றோரைப்பெறுதல் என்று ஆரம்பித்து சாட்டையடை கொடுத்தாற்போல் குட்டிப்பிரசங்கம் ஒன்றையடித்தேன். கேட்ட பின்னர்

“பெடியன் கடுகுமாதிரி இருந்தாலும் படிப்புக்குத்தக்க துடிப்பிருக்கு…..” என்றார்.

மாலை 4மணிக்குமேல் வீடு திரும்பியதும் அம்மாதரும் எதையாவது வாயில்போட்டுக்கொண்டு பசியாறிவிடுவேன். பின்னால் தென்னந்தோப்பினுள் தோழர்கள் எல்லாம்கூடி விடுவோம். ஏதாவது அவசரவேலை இருந்தால் சிலவேளைகளில் ஐயா என்னை மாத்திரம் கம்மாலைக்குக்கூப்பிடுவார் எரிச்சல் எரிச்சலாய் வரும். வண்டிச்சக்கரத்துக்கு வளையம்போட பொச்சு (தேங்காய்மட்டை எரித்து சூடுபண்ண) அடுக்குவேன், துறப்பணம் இழுப்பேன், துருத்து ஊதுவேன், வேலை எதுவும் இல்லாத பூரணசுதந்திர நாட்கள் அனுபவிப்பதற்குரியன. பறவெட்டியில் மீன்பிடிப்பார்களயின் அம்மா சிலநாட்களில் காசுதந்து மீன்வாங்கிவரும்படி அனுப்புவார், இல்லாவிட்டாலும் சும்மாபோய் வேடிக்கை பார்ப்போம். ஒரு ரூபாய்க்கு மீன் வாங்கிய நாட்களில் குழம்புக்கும் பொரியலுக்கும் ஒதுக்கியதுபோக மீதியுள்ளதை ஒடியல்மாவுடன் சேர்த்து ஒரு கூழும் காய்ச்சுவார். ஆசாரித்திடல் முழுவதும் மணக்கும், இன்றும் முழுவதும் ஞாபகம் செய்யவல்ல அக்கூழின் சுவை சொல்லி மாளாது.

மாரிகாலத்தில் கிராமத்துப்பட்டறைகளுக்கு வருமானம் குறைவு. ஐயா கதவு பூட்டுக்கள் செய்துகொண்டுபோய் யாழ்ப்பாணம் இரும்புக்கடைகளில் கொடுத்துவிட்டு பணம்வாங்கிவருவார். மழைநாட்களில் பூட்டுகளுக்குப்பூசும் மையும் இலேசில் காயாது. கடும்குளிரில் மை பாலாடைபோலச்சுருங்கும், பூட்டுகளும் சிலவேளைகளில் விற்கமுடையாமற்போய்விடும். அந்த மாரியில் அடுத்து ஆறு ஏழு நாட்களாக அடைமழை பெய்துகொண்டிருந்தது. பட்டறை உலையில் இரும்பபைப் பற்றவைக்கும்போதும், நீரில் ஆயுதங்களைத் தோயும்போதும் உண்டாகும் உலோகமணம் இல்லாதிருந்தது, ஒரு பன்னச்சத்தகம் வேண்டுமென்றோ, அல்லச்சும்மா உலைச்சூட்டில் குளிர்காயத்தானும் எவரும் வரவில்லை.

மழைநாளுக்காகச் சேமிக்கும் பழக்கம் இல்லாத ஐயா மேற்கில் பரிச்சயமான நண்பர் ஒருவரிடம் கொஞ்சம் பணம்புரட்டலாமென்று சைக்கிளில் புறப்பட்டவர் மாலையில் ஒரு உரப்பையில் பாதியளவு நிரப்பிக்கட்டப்பட்ட குரக்கனுடன் (கேழ்வரகு) வந்து இறங்கினார். ஐயாவின் மணிப்பேர்ஸிலிருந்த சில்லறையுடன் ’ட்றங்’கினுள் அம்மா நகைகள் எதுவும் அடைவில் இல்லாத காலங்களில் வைக்கும் பூச்சியுருண்டை (நப்தலீன்) மணக்கும் ( இங்கிலிஷ் சொக்கலேற்) வந்த தகரப்பெட்டி, திருநீற்றுச்செப்பெல்லாம் கிளறிப்பொறுக்கியதில் ஒரு ரூபாய் சில்லறையுடன் குரக்கனை அரைப்பிக்க சைக்கிளில் அரவை மில்லுக்குக் கிளம்பினேன்.

தம்பியர் அனைவரும் தென்னந்தோப்புக்கு விளையாடக்கிளம்பினர், நேர் இளையதம்பி கம்மாலையிலிருந்து ஒரு குல்லானையும் (வெங்காயம் கிளப்பப் பயன்படுவது) எடுத்துச் சென்றதைக்கண்டேன். ஆசாரித்திடல் முழுவதுமே சற்று மணற்பாங்கான மண். தோப்பு முழுவதும் மிதமான ஈரமாயிருக்க தம்பி ஐயா கரிச்சுடும் கிடங்கினுள் இறங்கிக்குல்லானால் ஆழமாகக்கிண்டி விளையாடியிருக்கிறான்.

அரவை மில்லால் திரும்பிவரும்போதிருந்த மீதிப்பணத்துக்கு அம்மா சொல்லிவிட்டபடியே தெய்விக்கிழவியிடம் மங்குசூடைக்கருவாடு வாங்கிக்கொண்டு அந்திக்கருக்கலில் நானும்வந்து இறங்கையில் கிணற்றுப்பள்ளத்திலிருந்த செப்புக்கொப்பரையில் ஐயா தண்ணீர் இறைத்துக்கொண்டிருக்க, அம்மா விளையாடிவிட்டு வந்திருந்த தம்பிமாரை வரிசையில் விட்டுக்குளிக்க வார்த்துக்கொண்டிருந்தார். எல்லோரும் ஈரம் துவட்டி, மாற்றுடை அணிந்து, விபூதிபூசிச் சாமி கும்பிட்டுவிட்டுக் குப்பிவிளக்கைத் திண்ணையில் வைத்து சத்தமாகப் படித்துக்கொண்டிருக்க அம்மா அடுப்பங்கரையில் பிட்டு அவிக்கப்போனார்.

தம்பிகளில் ஒருவன் கோலிக்குண்டு, மணிக்கூட்டு ஸ்பிறிங், லாச்சிக்குமிழி (பீங்கான்) இவற்றுடன் பழைய தடிப்பான 50 சத நாணயம் ஒன்றைவைத்து விளையாடினான். பொதுவாக எமது பகுதியில் VOC என்ற எழுத்துக்கள் பதித்த பழைய டச்சுநாணயங்களின் புழக்கம் அதிகம். வீட்டுக்கான அத்திவாரங்கள் தோண்டும்போதே மண்ணிலிருந்து வெளிப்படும். அவன் வைத்திருந்தது டச்சு நாணயத்தைப்போல VOC முத்திரை இல்லாமலும், சோழர்காலத்து நாணயங்களைப்போல சித்திரங்களும் குறியீடுகளும் இல்லாது வித்தியாசமாயிருக்க அவனிடம் அதைப்பிடுங்கிப்பார்க்கவும் அவன் வாலை மிதித்ததுமாதிரி வைகுந்தம்கேட்க அலறினான். “ பார்த்திட்டு உன்னிடமே தாறேன்……….அலறாதே குரங்கே……”

“தோ………….. இதுபோலக்காசு என்னிட்டயிருக்கே….. ” என்றபடி இன்னொரு தம்பி தன் களிசான் பக்கெற்றில் கைவிட்டுக்குடைந்து குடைந்து தேடிவிட்டு எடுத்துக்காட்டினான். அதையும் வாங்கிப்பார்த்தேன். அதே மாதிரியான தடிப்பாகக் கனதியாயிருந்த நாணயத்தில் பித்தளைச் செழும்புமாதிரி மெல்லிய பச்சைப்படையொன்றும் படர்ந்திருக்கக் சந்தேமாயிருந்தது. அதை ஐயாவிடம் காண்பித்தேன். அவருக்கும் அதே சந்தேகம் வரவே “ போய்த்தீட்டுக்கலை எடுத்துவா “ என்றார். எடுத்துவந்து தீற்றிப்பார்த்தால் சொக்கத்தங்கத்தின் வெளிர் மஞ்சள் பளீரிட்டது.

“ஏதடா…. உனக்கு?” என்றோம் இருகுரலில்.

“இப்பிடி நிறைய்ய்ய காசு இருந்ததே…….” என்றான் மற்றவன்.

“எங்கேடா இருந்தது………….?”

“அந்தச் செம்புக்குள்ளதான்…..”

“எந்தச்சொம்புக்குள்ளடா……………விபரமாய்ச்சொல்லித்தொலையுங்கோவன்?”

“கரிச்சுடுற கிடங்குள்ள குல்லானால் கிண்ட வந்ததே…….அந்தச்செம்புக்க”

சந்தோஷத்தால் எனக்குக்குரலே நடுங்கியது.

“இப்ப எங்கடா……அந்தச்செம்பு……..?”

ஒரு தாமிரக்குவளையினுள் அவை இருந்திருக்கலாம்.

“அதுதான் தண்டல்ச்சாமி………… அந்தப்பண்டாரியள் சால்வையில் சுற்றிக்கொண்டுபோட்டாரே……….”

“எந்தப்பண்டாரியள்டா……?”

“அவர்தான் வாயைச்சுற்றி மீசையுந்தாடியும் வைத்திருந்தாரே…..?

“அடே…… அத்தனையும் தங்கக்காசடா…….. ஏன்டா கொடுத்தியள் முட்டாள் வானரங்களா……?”

“நாம என்ன சும்மாவா கொடுத்தம்………. நம்ம எல்லாருக்கும் கொழுக்கட்டை தந்திட்டுத்தானே வாங்கிக்கொண்டுபோனார் அவர்………”

நான் தாங்கமுடியாத ஆதங்கத்திலும் ஆயாசத்திலும் தவித்துக்கொண்டிருக்க இதை எதையும் அறியாத அம்மா அடுப்பங்கரையில் தகரப்பேணியால் பிட்டைக் கொத்திக்கொண்டிருக்க…… மிக இறுக்கமாகக் கழிந்துகொண்டிருந்த மௌனத்தை உடைத்து ஒரு ஞானிக்கேகூடிய அலட்சியத்துடனும் அனுபூதியுடனும் ஐயா சுத்தமாகக் கல்யாணியை ஆலாபனை பண்ணிவிட்டுப் பாடினார்:

“நிதி சால சுகமா……?”

(சத்தகம் = தோட்டத்தில் கிளைகளைக் கத்தரிக்க, புல்லைச்செதுக்கப் பயன்படும் சிறிய கத்திபோன்ற ஒரு ஆயுதம்.)

– மௌனம் 1994-95 சிறப்பிதழ். பாரீஸ்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *