நாளை நம்முடையதே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 1,516 
 

வழக்கம்போல் வேலை தேடித்தரும் நிலையத்திற்குச் சென்று, வழக்கம் போல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்த வைகுந்தன், வழக்கம்போல்துண்டை விரித்துப் போட்டுச்சத்திரத்தில் படுத்தான்.

அப்போது கையில் காலிக் கப்பரையுடன் வந்து அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்த கைலாசம், “நண்பா, சாப்பிட்டு நான்கு நாட்களாகி விட்டன; இன்றும் ஒரு பருக்கை கூடக் கிடைக்க வில்லை!” என்றான் பெரு மூச்சுடன்.

“கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!”

“கட்டத்துணியில்லை; வாங்கக் காசில்லை…”

“கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!”

“படுக்கப்பாயில்லை; இருக்க நமக்கென்று ஓர் இடமில்லை…”

“கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!”

இந்த நம்பிக்கையையே அவர்கள் வழக்கம் போல் உணவாகவும், உடையாகவும், வீடாகவும், வாசலாகவும் கொண்டு வழக்கம் போல் தூங்கி விட்டார்கள்.

வழக்கம் போல் மறுநாள் பொழுது விடிந்தது. ஆனால் சத்திரத்துக்கு எதிர்த்தாற்போலிருந்த காண்ட்ராக்டர் கந்தையாவின் வீடு மட்டும் அன்று வழக்கம் போல் காணப்படவில்லை; வழக்கத்துக்கு விரோதமாக அந்த வீட்டு மாடியில் தாயின் மணிக்கொடி தகதகாய்த்துப் பறந்தது.

“என்ன இன்றைக்கு?” என்றான் கைலாசம் ஒன்றும் புரியாமல்.

“சுதந்திர தினம் நண்பா, சுதந்திர தினம்!”

“ஓஹோ! இப்பொழுதுதான் ஞாபகம் வருகிறது. நேற்றே நான் இதைக் கேள்விப்பட்டேன்!”

“கேள்விப்பட்டாயா? ஏன், இது உனக்கே தெரியாதா?”

“எங்கே தெரிகிறது! எனக்குத்தான் பட்டினி சுதந்திரத்தைத் தவிர வேறெந்தச் சுதந்திரமும் தெரியவில்லையே?” “அதோ பார், அதற்கும் ஆபத்து!”

கைலாசம் பார்த்தான்; காண்ட்ராக்டர் கந்தையா சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்குக் கஞ்சி வார்த்துக் கொண்டிந்தார்.

“எதற்கு ஆபத்து?”

“பட்டினிச் சுதந்திரத்துக்குத் தான்; அங்கே பறி போய்க் கொண்டிருக்கிறதல்லவா, அது?”

“ஏதோ இன்றாவது போகிறதே, அதைச் சொல்லு வா, நாமும் போய் அந்தச் சுதந்திரத்தைப் பறிகொடுப்போம்!”

***

இருவரும் சென்று ‘க்யூ’வில் நின்றார்கள்.

“இந்த வருஷம் இவருடைய வீட்டில் பறப்பது பட்டுக் கொடி போலிருக்கிறதே?” என்றான் கைலாசம்.

“ஆமாம், ஆமாம். உனக்குத் தெரியுமா. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இவர் மணல் சப்ளை செய்த போது இவருடைய வீட்டில் பறந்தது பருத்திக் கொடி!” என்றான் வைகுந்தன்.

“ஓஹோ இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது செங்கலும் சுண்ணாம்பும் சப்ளை செய்தபோது இவர் அடைந்த அபிவிருத்தியை இது காட்டுகிறது போலிருக்கிறது!”

“ஆமாம், ஆமாம், இது மட்டுமல்ல; இரண்டடுக்கு மாடி நாலடுக்காக மாறி வருவது கூட இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அபிவிருத்தி தான்!”

இவருடைய மனைவி ‘நடமாடும் பாங்க்’காக மாறி வருவது கூட இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அபிவிருத்திதானோ?”

“ஆமாம், ஆமாம், சைக்கிள், மோட்டார் சைக்கிளாக மாறி, மோட்டார்சைக்கிள் காராகவே மாறி விட்டதற்குக் கூட இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் அபிவிருத்தி தான் காரணம்!”

“ம்! இந்த அபிவிருத்தி என்னுடைய கப்பரையிலும் உன்னுடைய வேலை தேடித் தரும் ஸ்தாபனத்திலும் என்று தான் காணப் போகிறதோ, எனக்குத் தெரியவில்லை!” என்றான் கைலாசம், நீண்ட பெருமூச்சுடன், “கவலைப்படாதே, நண்பா, நாளை நம்முடையது!”என்றான் வைகுந்தன்.

***

இந்தச் சமயத்தில் யாரையோ யாரோ ‘பளார்’ என்று அறையும் சத்தம் அவர்களின் காதில் விழுந்தது; இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்; அடித்தவர் கந்தையா; அழுதவள் ஒரு சிறுமி.

“ஒரு தரம் வாங்கிக் கொண்டு போன கஞ்சியை எங்கேயோ வைத்துவிட்டு, இன்னொரு தரமாக வந்து இங்கே நிற்கிறாய்? போ, அப்படி!”என்று அவளைப் பிடித்து அப்பால் தள்ளினார் அவர்.

கீழே விழுந்த அவள் தட்டுத்தடுமாறி எழுந்து “அது எனக்கு ஐயா! இது என் அம்மாவுக்கு” என்றாள் தேம்பிக் கொண்டே.

“ஏன் அவளுக்கென்ன கேடு?”

“காய்ச்சல் ஐயா! எழுந்து வரமுடியவில்லை, ஐயா!”

“சீ, நாயே! நான் ஏதோ ஒர் இதுக்குக் கஞ்சி வார்த்தால் அம்மாவுக்கு வேண்டுமாம், ஆட்டுக்குட்டிக்கு வேண்டுமாம்! போ, போ!போகிறாயா, இல்லையா?”

“அம்மாவை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி ஐயா கஞ்சி குடிப்பேன்?”

“குடிக்காவிட்டால் நீயும் சாவு; உன் அம்மாவும் சாகட்டும்! எனக்கென்ன வந்தது!”

அவ்வளவுதான்; “சரி, ஐயா! நாங்கள் சாகிறோம்; நீங்கள் வாழுங்கள்!” என்று அதுவரை மறைத்து வைத்திருந்த கஞ்சியை எடுத்து அவருக்கு முன்னாலிருந்த ஏனத்தில் கொட்டிவிட்டு அவள் திரும்பினாள்.

“அவ்வளவு திமிரா உனக்கு?”என்று அவளை இழுத்து நிறுத்தி இன்னொரு முறை அறைந்தார் அவர்.

“ஐயோ, அம்மா!” எனறு அலறித்துடித்தபடி அவள் ஓடினாள்.
தனக்குத் தெரிந்த அந்தச் சிறுமியை அநுதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வைகுந்தனை நோக்கி, “ஆமாம், ஏதோ ஓர் இதுக்குக் கஞ்சி வார்ப்பதாகச் சொல்கிறாரே, அந்த இது என்ன இது?” என்று விளக்கம் கோரினான் கைலாசம்.

“அது தானே எனக்கும் தெரியவில்லை!”என்று கையை விரித்தான் வைகுந்தன்.

அதற்குள் தங்களுடைய முறை வந்துவிடவே, அவர்கள் இருவரும் கப்பரையை ஏந்திக் கஞ்சியை வாங்கிக் கொண்டு திரும்பினார்கள்.

“என்ன இருந்தாலும் ஏழைக்குக் கோபம் வரவே கூடாது; நீ என்ன சொல்கிறாய்?” என்றான் கைலாசம்.

“ஆமாம், ஆமாம். வரக்கூடாது. வரவே கூடாது. அப்படி வந்தால் அது கூடப் பணக்காரனுக்குத் தான் வர வேண்டும்!”என்று ஒத்து ஊதினான் வைகுந்தன்.

“இதற்குத் தான் ஏழைக்குக் கோபம் வந்தால் அது அவன் வாழ்வைக் கெடுக்கும்! என்று ஏற்கனவே நம் பெரியோர் நமக்குச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். இப்போது அந்தப் பெண்ணின் விஷயத்தில் அது சரியாகி விட்டதல்லவா?”

“அது எப்படிச் சரியாகும்? ஒரு வேளை அவர்களும் கந்தையாவின் கட்சியோ, என்னமோ?”

“இருக்கலாம் நண்பா, இருக்கலாம். நீ வா, நாமாவது அந்தப் பெண்ணின்கட்சியில் சேரலாம்” என்று கைலாசம் சிறுமியைத் தேடிக் கொண்டு போய்த்தன்னிடமிருந்த கஞ்சியை அவளிடம் கொடுத்தான். வைகுந்தன் அவள் தாயாருக்குக் கொடுத்தான்.

***

அங்கிருந்து திரும்பியதும் “இன்று ஐந்தாவது நாள்!” என்றான் கைலாசம்.

“எதற்கு?”என்று கேட்டான் வைகுந்தன்.

“பட்டினிச் சுதந்திரத்துக்குத்தான்!”

“கவலைப்படாதே நண்பா, நாளை நம்முடையது!”

இதைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போன கைலாசத்துக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ, “அது சரி நண்பா, நாளை நம்முடையதானால் இன்று யாருடையது?”என்று கேட்டான்.

தூக்கிவாரிப் போட்டது போலிருந்தது வைகுந்தனுக்கு? மறுகணம் “இன்று கந்தையாவுடையதாகல்லவா இருக்கிறது!” என்றான் வியப்புடன்.

அவ்வளவுதான்; அவன் சொன்ன இது என்ன இது என்று புரிந்து விட்டது அவர்களுக்கு!

கைலாசம் கேட்டான்?

“இன்று அவர்களுடையதாயிருக்கும்போது நமக்கு மட்டும் ஏன் நாளை நம்முடையதாயிருக்க வேண்டும்?”

“கூடாது நண்பா, கூடாது நாளை அவர்களுடையதாயிருக்கட்டும்; இன்றை நாம் நம்முடையதாக்கிக் கொள்வோம்!”

இந்த உறுதி மொழியைக் கேட்டதுதான் தாமதம்; இருளடைந்து கிடந்த அந்தச் சிறுமியின் கண்களில்கூட ஒளி வீசியது.

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *