நாரீ திலகம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 21, 2022
பார்வையிட்டோர்: 3,984 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாரத வருஷம் என்றுமே அன்னியர்களுக்கு ஆசை காட்டி அழைக்கும் நாடாக இருந்திருக்கிறது. சுமார் ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன் அராபிய சாம்ராஜ்யமொன்று தலையெடுத்து ஹிந்துஸ்தானத்தைப் பாக்தாதுக்கு அடிமையாக்கிவிடும்போல் இருந்தது. அப்படி நேர்ந்துவிடாமல், ஹிந்துஸ்தானத்தில் அரபிப் பூண்டே இல்லாமல் செய்தவள் நாரீ திலகம்.

பாக்தாதில் காலிப் உலாத் அரசு செலுத்திக் கொண்டிருந்தான். அதைச் செங்கோல் என்று சொல்ல முடியாது. ஆனால் அவன் சாம்ராஜ்யக் கனவுகள் கண்டு கொண்டிருந்தது அவனுடைய வீரத்துக்கும் நாட்டில் சுபிக்ஷத்துக்கும் போதிய அறிகுறி. அவன் தளகர்த்தனாகிய காஸிம் வெற்றி முரசுடன் ஆயிரக்கணக்கில் வீரர்களுடன் சிந்துநதிப் பிரதேசம் வரையில் வந்துவிட்டான்.

சிந்து நதிப் பிரதேசத்து அரசனாகிய ராஜபுத்திர வீரன் ராஜாதி ராஜன் காஸிமினுடைய வெற்றி வேகத்தைத் தடுக்க முடியுமென்று எண்ணிப் போதிய பலமில்லாவிட்டாலும் வெகு தீரத்துடன் எதிர்த்து நின்றான். அவன் தலைநகராகிய பிரம்மபுரத்துக்கு அருகிலேயே சிந்து நதிக்கரையில் கோர யுத்தம் மூண்டது. நதி இரவு வருமுன் ராஜபுத்திர வீரர்களின் ரத்தப் பிரவாகமாக ஓடியது. காஸிமின் வீரர்களிற் பலர் மடிந்தனர். ஆனால் ராஜபுத்திர சைன்யத்தில் ஒரு வீரன்கூட உயிருடனில்லை . பிரம்மபுரம் எதிரிகளின் வசமாகிவிட்டது. அன்று இரவு முழுதும் அந்த நகரில் அராபியர்களின் ஆர்ப்பாட்டங்களும் அட்டூழியங்களும் சொல்லி முடியா. வெளிச்சத்துக்குத் தீவட்டிகளுக்குப் பதிலாக நகரின் மாளிகைகள் பல தீக்கிரையாய்ச் செவ்வொளி பரப்பின. ஆண்களும், கிழங்கட்டைகளும் அராபியரின் வாளுக்கு இரையாயினர். ஸ்திரீகள் எல்லாம் அவர்களுடைய காமத்துக்கு இலக்காகினர்.

காஸிம் தன் காலிப் உலாத்திற்கு அனுப்பவேணுமென்று பிரம்மபுரத்தின் உயர்குலத்துதித்த யுவதிகள் பலரைச் சிறை பிடித்தான். அப்படிச் சிறைப்பட்ட யுவதிகளில் ராஜாதி ராஜனின் பெண்கள் இருவரும் இருந்தனர். மூத்தவள்தான் நாரீ திலகம்; அழகிலும் அறிவிலும் அவள் உண்மையிலேயே நாரீ திலகந்தான். ஆனால் அவளுடைய உண்மைப் பெயர் சூரியாபாய். அவள் தங்கை பத்மாபாயும் அழகிலும் அறிவிலும் அவளுக்குச் சற்றும் பின்னிட்டவள் அல்ல.

காலிபுக்கு என்று சிறைசெய்யப்பட்ட பெண்கள் எல்லாம் காஸிமின் உத்தரவுப் பிரகாரம் மற்றவர்கள் கைப்படாமல் கண்படாமல் தக்க வீரர்கள் புடை சூழ , பொன் வெள்ளி முதலிய ஐசுவரியங்களுடன் பாக்தாதை நோக்கி அனுப்பப்பட்டனர். பாதி வழி அவர்கள் கடலிற் படகுகளிலும், பாக்கிப் பாதியைத் தரையிற் பல்லக்கிலும் பிரயாணம் செய்து கழித்தனர். பாக்தாதில் காலிப் உலாத் சிந்துப் பிரதேசத்திலிருந்து வந்த பொன்னையும், வெள்ளியையும், நவரத்தினங்களையும், தந்தத்தையும், அடிமைப் பெண் அழகிகளையும் பெருமிதத்துடன் கண்டு உவந்து ஏற்றுக் கொண்டான்.

சபையில் உடல் கூனிக் குறுகி நின்ற ராஜபுத்திர அழகிகளிலே மிகச் சிறந்தவளாக இருந்தவள், காலிபின் கண்ணில் பட்டவள் நாரீ திலகந்தான் என்பதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை . அவன் ஜனானாவில் எத்தனையோ தேசத்து அழகிகள் இருந்தனர். காலிப் உலாத் ரஸிகன். ஆனால் அவன் தன் ஜன்மத்திலே அவளைப் போன்ற அழகியைக் கண்டதில்லை. அவளுடன் திறையாக வந்த எவ்வளவோ விலையுயர்ந்த தனத்துக்கெல்லாம் மேலான தனமாக அவன் அவளை அங்கீகரித்தான். அந்தச் சபையிலேயே ஒரு தீர்மானத்துக்கு வந்து காலிப் எல்லோரும் அறிய அவளை அடிமை என்று நடத்தாமல், தன் பட்டமஹிஷியாகவே வைத்துக் கொள்வதாகவும், அதற்கு அவள் சம்மதிக்க வேண்டுமென்றும் அவள் காலில் விழாத குறையாகக் கெஞ்சினான். ஆனால் நாரீ திலகம் வாய்திறக்கவே இல்லை.

காலிப் தன்னை மறந்தான்; தன் ராஜ்ய காரியங்களை எல்லாம் மறந்தான். நாரீ திலகம் ஒருத்தியே ஞாபகமாக, மதுக் கிண்ண மும் கையுமாக நாட்களைக் கழித்தான். நாரீ திலகம் அவனுடைய ஜனானாவில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டாள். தினமும் நாழிகைக் கொருமுறை அவளைப் போய் அவன் பார்த்துப் பேசிவிட்டு வருவான். பேசியதெல்லாம் அவன்தான். அவள் முதல் நாள் சபையில் சாதித்தபடியே சிலநாள் மௌனம் பூண்டிருந்தாள்.

இப்படிப் பத்து நாட்கள் சென்றன. பதினோராம் நாள் அவள் காலிபின் பரிதாபகரமான வேண்டுகோளுக்கு இரங்கி வாய் திறந்து பின்வருமாறு பதிலளித்தாள் :

“சுல்தான்! தங்கள் அடிமை நான். இள வயசிலேயே சிந்துப் பிரதேசம் வரையில் எட்டியிருந்த தங்கள் புகழையும் பெருமையையும் கேட்டு நான் என்மனசால் தங்களைக் காணு முன்னரே தங்களுக்கு அடிமையாகிவிட்டேன். தங்கள் வீரர்களிடம் நான் சிறைப்பட்டபோது அவர்கள் என்னைத் தங்களிடம் அனுப்பிவைக்க வேணுமென்று நானே அவர்களைக் கேட்டுக் கொண்டேன். ஆனால் சுல்தான்….”

நாரீதிலகம் சற்றுத் தயங்கினாள். மதுமயக்கத்திலிருந்த சுல்தானுக்கு அவள் சொன்னதில் பாதி சரியாகப் புரியவில்லை . ஆனால் அவள் முகமும் பாவமும் அவனுக்குக்கூட ஏதோ பிரமாதமான விஷயமென்பதை அறிவுறுத்தின. “என்ன?” என்று பதற்றமாகக் கேட்டான்.

நாரீ திலகம் கண்ணீர் தாரை தாரையாக வழியத் தயங்கித் தயங்கிச் சொன்னாள்: “சுல்தான்! இந்த அடிமையின் உடல் தங்கள் சேனைத் தலைவனின் எச்சில்; தங்களுக்குத் தகாதது.”

காலிப் உலாதின் முகம் சிவந்தது. கோபத்தால் மீசையும், மனமும் துடித்தன; “அற்பப்பயல்! அந்தக் காஸிம், குதிரை தேய்க்கும் கழுதை, அவனை நான் ஒரு படைத்தலைவனாக நியமித்தது என் தவறுதான். தான் எச்சில் படுத்தியதைத் தன் காலிபுக்கு அனுப்பி வைக்க அவனுக்கு என்ன துணிச்சல்?” என்று பொருமினான்.

நாரீ திலகம் மறுபடியும் வாயை மூடிக்கொண்டு விட்டாள். அவள் ஒன்றும் பேசவில்லை.

ஹிந்துஸ்தானத்தில் சிந்துநதிப் பிரதேசத்திலிருந்து கங்காந்திப் பிரதேசம் நோக்கி வெற்றி விஜயம் செய்து கொண்டிருந்த காஸிமுக்குத் தன் காலிபின் உத்தரவு ஆச்சரியத்தை விளைவித்தது. திடீரென்று தன் உப தலைவனிடம் சேனையை ஒப்பித்து விட்டுக் காஸிம் உடனே பாக்தாத் திரும்ப வேணுமென்று காலிப் உத்தரவிட்டிருந்தான். அதன் காரணம் இன்னதென்று அவனுக்குப் புரியவில்லை. ஹிந்துஸ்தானத்தை வெற்றிகொள்ள வேறு சமயம் கிடைப்பதரிது. ஆனால் காஸிம் காலிபின் உத்தரவை மீற மாட்டாமல் பாக்தாத் நோக்கிக் கிளம்பினான். பஸ்ஸோராவில் காஸிம் கப்பலிலிருந்து இறங்கியவுடன் காலிபின் கொலையாளி வீரர்களில் இருபது பேர் அவனை வந்து சந்தித்தனர். என்ன குற்றம் செய்ததற்காக சிக்ஷிக்கப்படுகிறோம் என்றே அறியாமல் வீரன் காஸிம் உயிரை இழந்தான். அவன் தலையை மட்டும் எடுத்துக் கழுதைத் தோலாலான ஒரு பையில் கொண்டு வந்து கொலையாளிகள் காலிபிடம் சமர்ப்பித்தனர்.

ஜனானாவுக்கும் இதற்குள் காஸிம் கொலையுண்டு இறந்து விட்ட செய்தி எட்டிவிட்டது. காலிப் தன்னை மறுபடியும் ஒருதரம் சபைக்கு அழைப்பான் என்று எதிர்பார்த்து நாரீதிலகம் சர்வாபரண பூஷிதையாகக் காத்திருந்தாள். அவள் இடையில் ஒரு கூறிய கூரான கத்தி செருகி இருந்தது யாருக்கும் தெரியாது.

“காஸிம் உனக்கிழைத்த தீங்குக்கு வஞ்சம் தீர்த்து விட்டேன்…இதோ அவன் தலை” என்று தன் காலடியில் கிடந்த தலையை அவளுக்குக் காண்பித்தான் காலிப் உலாத்.

சபையோரெல்லாரும் காலிப் செய்தது சரியென்று ஆமோதிப்பவர்களைப் போல ஆரவாரித்தனர். நாரீ திலகத்தின் முகத்தில் கம்பீரமான புன்னகை தவழ்ந்தது.

காலிப் மேலும் சொன்னான்: “உனக்குத் தீங்கிழைத்தவனைத் தீர்த்துவிட்டேன் நான். இனி உனக்கும் எனக்கும் குறுக்கே நிற்பவர்கள் யாரும் இல்லை.”

கலகலவென்று நகைத்தாள் நாரீ திலகம். அவள் வலது கை, ரகசியத்தில் அவள் உடைவாளின் கைப்பிடிமேல் இருந்தது. அவள் நிமிர்ந்து நின்று, “ராஜபுத்திர ஸ்திரீ என்றால் காலிபுக்குத் தெரியாது போலிருக்கிறது; நான் ராஜபுத்திர ஸ்திரீ” என்றாள்.

அவள் சொன்னதன் அர்த்தம் என்ன என்று காலி புக்கு நிச்சயமாகத் தெரியவில்லை . ஆனால் அவள் குரலில் ஏதோ விசேஷமான எக்களிப்பு த்வனித்தது என்று கண்டுகொண்டான். “என்ன?” என்றான்.

நாரீ திலகம் சொன்னாள்; கம்பீரமாக அங்கிருந்தவர்கள் காதிலெல்லாம் விழும்படியாகச் சொன்னாள். “சுல்தான்! நீங்கள் காமத்துக்கும் மதுவுக்கும் அடிமை. அவை இரண்டும் தங்கள் மதியை மயக்கிவிட்டன. காஸிம் எங்களில் யாரையும் கண்ணெடுத்தும் பார்த்ததில்லை. என் தகப்பனையும் சகோதரர்களையும் அவன் கொன்றதற்கு நான் இப்பொழுது பழி வாங்கிவிட்டேன். ராஜபுத்திர ஸ்திரிகள் அன்னியன் ஒருவனுக்கு அடிமைப்பட்டு வாழமாட்டார்கள். நானும் ஒரு ராஜபுத்திர ஸ்திரீதான்.”

இவ்வளவு நாழிகை கம்பீரமாகப் பேசிக்கொண்டிருந்தவள் திடீரென்று ஏன் இப்படிக் கீழே சாய்ந்து பேச்சு மூச்சில்லாமல் செத்தவள் போலக் கிடந்தாளென்று சபையோருக்கு முதலில் விளங்கவில்லை . அவள் மார்பில் கத்தியையும், பிரவகித்த ரத்தத்தையும் கண்டபின்தான் அவள் தன்னையே குத்திக்கொண்டு விட்டாள் என்று காலிபும் மற்றவர்களும் அறிந்து கொண்டனர்.

பாக்தாதில் நாரீ திலகம் ஆரம்பித்து வைத்த அராபியர்கள் மேல் வஞ்சம் தீர்க்கும் காரியம் ஹிந்துஸ்தானத்திலும் சரிவர நடந்தது. காங்கேய இளவரசன் உதயராஜன் தக்க தலைவன் இல்லாமல் ஹிந்துஸ்தானத்தில் வந்து மாட்டிக்கொண்ட அராபிச் சேனையைப் பல இடங்களில் முறியடித்து நாட்டைவிட்டே துரத்தி விட்டான். அதோடு நில்லாமல் அவன், ஓடிய அராபியரைத் துரத்திப் பாக்தாத் வரையிலுமே போய்த் தன் வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டான்.

– 1944, க.நா.சு. சிறுகதைகள்

Print Friendly, PDF & Email

1 thought on “நாரீ திலகம்

  1. சிறப்பான கதை. இன்றும் நாரி திலகங்கள் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *