நாயக பாவம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 6,030 
 

இயல்பாகவே இந்தக்கதைக்கு வாசகராகிய உங்களைத்தான் கதாநாயக னாக்க நினைத்திருந்தேன். ஆனால் உங்கள் மனது இதனை ஒப்புக்கொள்ளுமா என எனக்குள் ஒரு ஐயப்பாடு. ஆகவே இப்போதைக்கு கதையின் நாயகனுக்கு கோபால் என பெயர் சூட்டிக்கொள்வோம். தேவையின் பொருட்டு பின்னால் சரி செய்து கொள்ளலாம்.

கோபாலை சராசரி மனிதன் எனச் சொன்னால் வருத்தப்படுவான். பொதுவாகவே நாயகனென்றால் ஒரு தனித்துவம் வேண்டும்ல்லவா.. கோபால் இளைஞன். கலியாணம் ஆகாதவன் என்பதுதானே பொருத்தமாக இருக்கும். தொழில்..? சீருடை அணிந்திருப்பின் நலமென நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. சரி, ஆட்டோ ஓட்டுநர். துடிப்புமிக்கவன், வீரன் சூரன் இந்த விபரங் களையெல்லாம் கதைப் படுத்துதலில் சொல்லிக்கொள்ளலாம். சரிதானே..!

வழக்கம்போலவே அன்றைக்கும் காலையில் பள்ளிக் குழந்தைகளை வீட்டிலிருந்து பள்ளிக்கு கடத்திக்’கொண்டு விட்டுவிட்டு காலைப் பசியாறி, பசியாறும்போது கொசுறாக-தொடுகறியாக- தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக்கொண்டு – இது முக்கியம். நாயகனின் சிந்தனைக்கு செய்தி pர்ப்பதும் வாசிப்பதும் அதிமுக்கியமல்லவா..? – ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்தால், காலை செய்தித்தாள் கண்ணில்படுகிறது. அதையும் பொறுப்பாய் படிக்கிறான் எந்த தியேட்டரில் என்னபடம். என்பதிலிருந்து, கரண்ட் எந்தநேரம் பிடுங்கி எந்தநேரம் விடுவாங்க, மாச கரண்ட் என்னிக்கி, இதுக்கெல்லாம் எப்பத்தான் விடிவு….? வரைக்கும் ஆண்களும், குழாயில் தண்ணீர் ஒழுங்காக வராததற்கும், குப்பை சரியாக அள்ளப்படாத காரணத்தை பெண்களும் கோபாலிடம்தான் வந்து கோபப்படுவார்கள். எல்லோருக்கும் பொறுமையாய் நின்றுகேட்டு பொறுப்பாய் பதில் சொல்லுவான்.

“முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு முக்கியஸ்தனாய் நின்று கொடிபிடித்த அரசாங்கத்துக்கு, இலங்கை தமிழர் விசயத்தில் அம்புட்டு வேகமில்லியே..யேன்..? அவிங்க வந்து ஒட்டு போடமாட்டாங்கெங்கற மெதப்பா..?‘ இப்படி ஏட்டிக்குப் போட்டியாய் கேள்விக்ள் ஸ்டாண்டில் வந்து குவியும். சிலசமயம் இதுகுறித்து ஓட்டுநர்களுக்குள் வெட்டுகுத்து அளவுக்கு விவாதங்கள் நடப்பதுண்டு. அப்போதும் பச்சத்தண்ணிகூடக் குடியாமல் கத்திக்கத்திப் பேசி பதில் சொல்வான். அந்தகாட்சியினைக் காணுகிற கோபாலின் வீட்டார்கள் ரெம்பவும் விசனப்பட்டு அவனிடம் இப்படி உரைப்பார்கள். ‘ தொண்டகிழிய கத்தாதப்பா இந்தவயசுல இம்ப்புட்டு சவுண்டு ஆகாது. வெட்டியா பீ பீ வந்து சேரப்போகுது.’ – வீதியில் அத்தனை ஆக்ரோஷம் பேசுகிற் நமது நாயகன் வீட்டில் ஏனோ மௌனச்சாமிதான். அவனது அம்மாச்சி அடிக்கடி அங்கலாய்க்கும். ’பாவம் எம்பேரெ வாய்செத்த பிள்ள.’

“என்னா கோவாலூ.. இன்னிக்கிப் பேப்பர்ல என்னா நீ..சு.. “ – சக ஓட்டுனர் ந்டேசன், தன் வண்டியை நிறுத்திவிட்டு உஸ் சென கோபாலின் அருகில்வந்து அமர்கிறான்.

புது சர்க்கார் வந்த்திலருந்து தெனந்தெனம் நீஸ் தானப்பா..வீட்ல டி.வி. யெல்லாம் பாக்கறதில்லியா..? “

“யேன்.. அதேன் எழுவது ரூவா கேபிளுக்கு நூத்தம்பது ரூவாயக் குடுத்துப் பாத்துக்கிட்டுத்தான இருக்கம். பூராம் பாட்டும் நாடகமுமாத்தான ஓட்றாங்கெ.. ’’

நடேசனது விட்டேத்தியான அந்தப் பேச்சு நமது நாயகனுக்கு ஒட்டவில்லை ஆனாலும் கோபப்படமுடியாது துணைப்பாத்திரம் தானே சகித்துக் கொள்கிறான். தொடர்ந்து, “ நல்லமுன்னேற்றம்..” என்றவன், “வெளீல பேப்பரும் படிக்கறது கெடையாது ”முனகிக்கொண்டு செய்தியினைச் சொல்கிறான். “ மறுபடியும் பெட்ரோல் வெலயெ கூட்டப் போறாகளாம். “

”பாலு வெல, பஸ் டிக்கட்டு, இப்ப கரண்டு வெல..ன்னு ஒரு சுத்து சுத்திவந்திட்டாக இனி மறுசுத்து வாராகளாக்கும். சூ..ப்பரு !“

அந்தசமயம் பிரதான சாலையில் ஒரு ஆட்டோவின் உச்சியில், ஸ்பீக்கர் கட்டி மைக்கில் இழவுச்செய்தி அறிவித்த்படி வந்தார்கள். “அல்லிநகரம் 1-வது வாரடில் வசிக்கும் இன்னாரது மனைவியும், இன்னார் இன்னார் மகளும் பாட்டியுமான ………. அம்மாள். சிவலோகபதவி எய்திவிட்டார்.” என்பதை மிக்க வருத்த்தோடு அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது நல்லடக்கம், நாள், இடம், நேரத்தையும் சொல்லி பொதுமக்க்ள் அனைவரையும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமெனச் சொல்லப்பட்டது.’

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்தக்காட்சியின் மூலம் கதையில் ஒரு உருவகம் உத்தியாகக் காட்டப்படுகிறது என்று நினைக்கவேண்டாம்.[?] கதையில் காட்சிப்படுத்தலே –விஷூவலைசேசன்- இல்லையே என்று யாரும் கைநீட்டிச் சொல்லிவிடக் கூடாதல்லவா…!

“இப்பிடித்….தேவயில்லாத வேல யெல்லாஞ்செஞ்சா, பெட்ரோல்வெலய கூட்டாம என்னா செய்வாக..“ நடேசன் பெட்ரோல் விலை உயர்வுக்கான காரணத்தை தன் நுண்ணறிவின் மூலம் கண்டறிந்து சொன்னபோது நமக்குக் கோபம் வ்ருகிறதல்லவா. ஆனால் நமது நாயகன் கோபப்படவில்லை பாருங்கள் . மாறாக அது தவறு என சுட்டும் முகமாக, அவனை முறைத்துப் பார்க்கிறான். அந்த பார்வையின் பொருளை சரியாய் உணர்ந்துகொண்ட நடேசன், ‘’சரி விடு, பெட்ரோல் வெலயத்தான கூட்றாங்க.. நமக்கு டீசல்தான..” என தன்அற்புதமான கண்டுபிடிப்பில் சிரிக்கிறான்.

“அப்ப…, ஒன்னோட பக்கத்துவீட்ல தீப்பிடிச்சா நீ கண்டுக்க்கமாட்ட, கையக் கட்டிக்கிட்டு சும்மாதே இருப்ப இல்லியா…?“ – சடாரென கோபாலின் வாயிலிருந்து உதாரண உவமேயத்தோடு வார்த்தைகள் வந்து விழுந்ததில் அவன் தன்மீதே கொஞ்சம் கர்வம் கொண்டான். எப்படித்தான் இதுபோன்ற சங்கதிகள் தன் உள்ளிருந்து திரண்டு புறப்பட்டு வருகின்றனவோ..’ கோபாலு உண்மையிலியே நீ ஜித்தன் தாண்டா’ தனக்குத்தானே சபாஷ் சொல்லிக் கொண்டான். கவனிக்க நமது கட்டுப்பட்டை மீறி அவன் சபாஷ் போட்டுக்கொள்கிறான். உங்களைப்போலவே நானும் இதனைப் பொறுத்துக் கொள்கிறேன்.

“அதெப்பிடி சும்மாருக்க முடியும்..? பயம் இருக்கும்ல “

“அதான்.. இன்னிக்கி இதுவெல ஏறுச்சுன்னா நாளைக்கி அதும ஏறாதா..”

“அதுக்குத்தக்கன நாமளும் வாடகைய ஏத்திக்கிறம்ல..”

“இத்தன நாளா அதத்தான செஞ்சுகிட்டு இருக்க.. தேறுதா..? “

“எங்க..? அதான் ஸ்டாண்டுக்கு புதுசுபுதுசா ஆள்வ்ந்து வண்டிய எறக்கி பொழப்புல மண்ணடிச்சிடுறானுகளே..!”

”ஒம் பொழப்ப கெடுக்கறது அவன்ங்கதான்னு இன்னமுமா நம்புற…..? பாவம் ” – தலையைக் குலுக்கி அவனது பேச்சை மறுத்து உண்மை நிலவரம் குறித்துப் பேச ஆரம்பிக்கிறான் கோபால். அந்த நேரத்தில் இரண்டுபேரது ட்ரிப்பும் கெடுகிறது. பேச்சை பாதியில் நிறுத்திப் போகவும் ரெண்டுபேருக்கும் முடியவில்லை. ஆட்டோவில் ஆரம்பிக்கிற பேச்சு, ஆண்டவனைத் தொட்டு, ஆள்பவரையும், ஆட்டிவைப்பவரையும் அலசித் திரும்புகிறது. பேச்சின் முடிவில் ஆகிற டீச்செலவு கோபலுக்குத்தான். பொறுமையாய் காது கொடுத்தவனுக்கு காப்பித்தண்ணியாவது வாங்கித்தர வேண்டாமா.. இது எல்லோருக்கும் பொதுவான விதியாக இருந்தாலும், கோபாலுக்கு பிரத்தியேக மான குணம். இதனை தவறாக உபயோகப் படுத்துவோரும் உண்டு. சிங்கிள் டீ..க்காக அவனை பேசச்சொல்லி கேட்போரும் உண்டு.

டீ சாப்பிடுகிற சமயத்தில் கோபால் இன்னொரு பிரச்சனையினைக் கொண்டுவந்தான். “ இன்னிக்கி கரண்ட் வெலய கூட்னதக்கண்டிச்சு ஒரு கூட்டத்த நடத்தலாம்னு இருக்க்ம். அதுக்கு நம்ம ஸ்டாண்ட் ஆளுக யூனிபாரத்தோட வந்து கலந்துக்கிட்டா நல்லது…”

“நாள்ல பாதிநேரம் கரண்ட விடுறதே கெடையாது. ஆனா இப்பிடி இல்லாத கரண்டுக்கு வெலயமட்டும் தவறாம ஏத்தீறாங்க. இது எந்த வகைல நாயம்னே தெரீல கோவாலு..” டீ கடைக்காரர் அவனுக்குச் சாதகமாகப் பெசினார்.

அதுபோதாதா நமது நாயகனுக்கு, அவரது பேச்சைவைத்தே அவருக்கு வலைபோட்டான். “கரெக்ட் ணே.. வீதீல எறங்கிப் போராடாட்டியும் தப்புன்னு பேசறீங்..கள்ல.., இதையே சனங்க பூராம் ஒரேமாதிரி பேசணும். கரண்ட உற்பத்தி பண்ணக்கூடிய மின்நிலையங்களெல்லாம் ஒரொரு காரணத்துனால சும்மா கெடக்குதுக.அத ஓட வக்கேணும் தனியார்கிட்ட அதிகவிலை குடுத்து கரண்ட் வாங்குறத கொறச்சு, மத்திய தொகுப்புலருந்து கேட்டு வாங்கணும். அப்பத்தே வெலகொறையும். “ ஒரு வேகத்தில் கதை ஓடி கொண்டிருந்தது.

“யேங் கோவாலு, வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு கரண்டுகட்டு இல்லியாமே.. அப்பிடியா..! “

“உம்மதாண்ணே.. அதுஒரு ஒப்பந்தம். அதோட ரெம்பவும் கொறச்ச வெலைக்கு வேற குடுக்குறாக.”.

“கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாம மாதிரிதான நடக்குது.”

“சாயங்காலம் நேரமிருந்தா கொஞ்சம் அப்பிடியே வாங்க. கூட்டத்தக் கூட்டுவம்.” – கோபால் தன் வலையை அகலமாக்கினான்.

கடைக்காரர் சிரித்தார். ” நெசமாவெ வரணுந்தே கோவாலூ.. எங்க..? ரோட்டுக் கடையாகிப்போச்சா . நாலுபேர நம்புன பொழப்பு…! நடத்துங்க..!. நம்மால ஏண்டத செய்றேன்..”

சட்டென பேச்சை வெட்டிக்கொண்டு விடைகொடுத்தார். சாப்பிட்ட டீக்கு காசைக் கொடுத்துவிட்டு நடேசனைத் தேடினான். அசந்த நேரத்தில் அவன் எஸ்.’

என்ன சார் வருத்தமாக இருக்கிறதா. ஆனா நம்ம நாயகன் கோபாலப் பாருங்க எந்த கலக்கமும் இல்லாம ஸ்டாண்டுக்கு நடக்கிறான். அவனுக்குத் தெரியும் இத்தன நேரம் ஒருத்தன் காது கொடுத்தஇருந்ததே பெரிய விசயம். எங்க போயிருவான்…? மதியம்வரை கோபலனும் வண்டியை ஓட்டலானான். இடை இடையே கண்ணில்படுகிற நபர்களை மாலை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தான்.

எல்லோருமே அதை நல்லவிஷ்யம் என பாராட்டினார்கள். தினசரி ஜீவிப்பதே கேள்விக்குறியாக இருக்கிற உலகத்தில் இதுபோன்ற கூட்டமும் இயக்கமும் அவசியம் என்றார்கள். எப்படியும் ஒரு நூறு பேராவது வந்து சேர்ந்தால் நல்லது.

மதியம் மூன்று மணிவாக்கில், தான் சந்தித்தவர்களை ஆட்டோவில் உட்கார்ந்து எழுதி பட்டியல் தயார் செய்து கொண்டிருந்தான்.. வெயில், நிலா காச்சலாய்க் காய்ந்து கொண்டிருந்தது. “இம்புட்டு வெய்யிலுக்கு எவனாச்சும் ஆட்டோவுக்கு வாரானா பாரு..“ என சக ஆட்டோக்காரர்கள் புலப்பம் விட்டுக் கொண்டிருந்தார்கள். தார்ச்சாலையில் கண்ணெட்டும் மட்டும் கானல்நீர் மினுத்துக் திரிந்தது. சாலை மருங்கில் நின்றிருந்த மரம் மட்டைகளில் மருந்துக்குக்கூட இலையசைவு இல்லாது கிடந்தது.

அந்த நேரம், கிழக்குப்புறமிருந்து ஒரு பத்துப் பதினைந்து பெண்கள் ஆட்டோ ஸ்டாண்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வெய்யில் வெம்மை தணிக்க தலையில் முந்தானையை முக்காடிட்டிருந்தனர். சிறுபிள்ளைகள், பிராயத்துப் பெண்கள், பிள்ளைத்தாச்சி, மூதாட்டி என பெண்மையின் எழுவகையினரும் அதில் கலந்திருந்தனர்.

ஸ்டாண்ட்டில் ஆட்டோ ஓட்டுனர் அனைவரும் அந்தகூட்டம் கண்டு ஆனந்தம் கொண்டனர். தத்தம் இருக்கையில் ஏறி ஸ்டேரிங்கை இறுகப் பிடித்து சவாரி எடுக்க தயாராகினர். எப்படியும் நாலைந்து வண்டி தேறும்.

“கோவாலு இல்லியா..?“ – கூட்டத்திலிருந்து வந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி ஸ்டாண்டில் முன்புற்ம் நின்று துழாவினாள். அடுத்தடுத்து வந்த் பெண்களனைவரும் அவளைச் சுற்றி கும்பலாக நின்று கொண்டனர்.

வரிசையில் மூன்றாவதாய் வண்டியினை நிறுத்தி இருந்த் கோபால், தன்பட்டியலை முடித்து சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு வேகமாய் ஓடிவந்தான். “ யாரூ.? “ அவனுக்குள் திகைப்பு. கூட்டத்தைக் கண்டதும் சட்டென ஒரு சந்தோசம்.. தேடிப்போன திரவியம் தெருவில் வந்து நிற்கிறதே… “ வாங்கக்கா..” என ஆவலாய்க் கூப்பிட்டவன், வேறு சிலரைக் கண்டதும் இவர்கள் புதிதாக் எழும்பி இருக்கும் காலனியைச் சேர்ந்தவர்கள் என்று புரிந்தது. போனவாரம்தான் தங்கள் பகுதிக்கு தெருக்கூட்டவோ, தண்ணீர் கொடுக்கவோ யாருமே வரவில்லை என அழைத்துப் போனார்கள். அவர்களோடு நகராட்சிக்கு போய் முறையீடு செய்துவிட்டு வந்திருந்தான். அலுவல்கத்திலும் ஓரிருநாளில் ஆவண செய்வதாய் வாக்களித்திருந்தனர். அது தீரவில்லையா.. அதற்காகவே தன்னை அழைத்துப் போக வந்திருக்கிறார் களோ.. “ பல மாதிரி சிந்திக்கலானான். சட்டென இன்னொரு யோசனையும் புறப்பட்டது. பிரச்சனை தீராதிருந்தால்.. அதயும் சேர்த்து வைத்து இன்றைய கூட்டத்தில் இவர்களை கொண்டு இரண்டு பிரச்சனையினையும் முடித்துவிட வேண்டியதுதான். அடுத்த நொடியில் கோபாலுக்கு முகம் பிரகாசமாய் ஆனது உங்களுக்கும் தானே எப்படியோ கதை நிறைவுப் பகுதியை நோக்கி நகர்ந்தால் சரி. இல்லையா..

“சொல்லுங்கக்கா…“ – அடக்கமாய் அவர்கள் கொண்டுவரும் பிரச்சனையினை காது கொடுத்துக் கேட்கத் தயாரானான்.

“என்னா தோழரே.. பங்குனிப் பொங்கலுக்கு ஆளுங்க வரிக்கேட்டு வந்திகிட்டிருக்காக.. !”

கோபலுக்கு மட்டுமல்ல உங்களுக்கும் கொஞ்சம் எரிச்சல் வந்திருக்கும் அதிர்ச்சி என எழுதினால் பொருத்தமாக இருக்கும்.

வருசாவருசம் கொண்டாடும் பண்டிகை அது என நீங்களும் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஊர் பெருத்ததில் இந்த கும்பு மக்களில் ஒரு சாரார் ரோட்டுக்கு கிழக்கே காலனி அமைத்துக் குடியிருக்கிறார்கள்.

“வருசா வருசம் தலக்கட்டுவரி தர்ர வழக்க்ம்தானக்கா” கோபாலுக்கும் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்களென விளங்கவில்லை.

“தர்றமப்பா.. இல்லீங்கல.. ஆனா. சாமிய எங்க எட்த்துக்கும் கொண்டுக்கு வரணும்..” வயதான காதுவளர்த்த கிழவி விளக்கமாய் விபரஞ் சொன்னது.

“சாதிக் காரவுக கிட்டல்ல கேக்கணும்..!“ – கோபாலின் குரலில் சுரத்து குறைந்திருப்பதை அவனே உணர்ந்தான்.

“அவக கிட்டதா கேக்கப் போறம்.. நீயும் வந்தா நல்லாருக்கும்ல..”

“என்னா நிய்யி., வந்தா நல்லது போனா நல்லதுன்னு இழுத்துக்கிட்டுப் பேசுறவ..! வா.. ப்பனுன்னு கூப்ப்பிடுவியா.. நாமலா போனா சாதியாளுக மழுப்பீடுவாங்கெ.. கோவாலுன்னா சட்டமாப் பேசும்ல..” -அம்சமாய் சேலை உடுத்தி வாய் கொள்ளாமல் வெற்றிலை குதப்பிக் கொண்டிருந்த் இளம்பெண் ஒருத்தி உரத்த குரலில் சொன்னாள்.

இதோ நமது நாயகன்கோபால் யோசனை செய்கிறான். இவர்களை எவ்வாறு கரண்டு பிரச்சனைக்கு அழைத்துச் செல்வது.. என்னவழி.. வியூகம் வ்குக்கிறான்.

நல்லவேளை உங்களைப்போல கோபலனுக்கு அந்த சனங்கள்மேல் கோபம் வரவில்லை.., அதுதான் நாயக பாவம் என்கிறீர்களா………!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *