நான் பாஸாயிட்டேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 18, 2014
பார்வையிட்டோர்: 9,197 
 

அந்த வீட்டில் இருந்து புகை வந்த வண்ணமிருந்தது வீட்டின் நாலு மூளையிலும் குங்குமத்தை தேய்த்த எலுமிச்சம் பழங்கள் வெட்டி வீசப்பட்டிருந்தது. சவுக்காள் அடிக்கும் சப்தம் தொடர்ந்து அந்த வீட்டில் இருந்து வந்துகொண்டேயிருந்தது.

வேப்பமரங்கள் நிறைந்த அந்த தெருவில் வேம்புவின் வாசம் நிறைந்திருந்தது. வேப்பம் பழங்கள் வீதியெங்கும் சிதறிக்கிடந்திருந்தன. அந்த கரிசல் பூமியில் வேப்பம் பழங்களின் விதைகளை சேகரித்து விலைக்கு போடுவதை தெருவாசிகளில் பலர் வழக்கமான தொழிலாய் கொண்டு வாழ்ந்து வந்தனர்.

அப்படி வேப்பம் பழத்(தை) சே(ர்)க்கப் போன இடத்திலதான் “முனியாண்டி மக(ள்) ரத்தினத்துக்கு பேய் புடிச்சுருச்சுபுள்ள” பாவம் இளம் வயசு இந்த நாதியத்த பேயி போயும் போயும் வயசுபுள்ளய போயி புடிச்சிருக்கே – என குண்டு சுந்தரி தண்ணீர் பிடிக்கும் பொதுக்குழாயில் உள்ள பெரிய கல்லின் மேல் அமர்ந்துகொண்டு புலம்பிக் கொண்டிருந்தாள்.

நேரம் செல்ல செல்ல முனியாண்டியின் வீட்டில் இருந்து சவுக்கடி சப்தம் பெருகி கொண்டேயிருந்தது. ஓம் காளி, நீலி, சூலி ஏய், உர்ர் போயிரு, இந்த புள்ளைய விட்டுட்டு போயிரு உர்ர்ர்.. உர்ர்ர் ஏய் கிர்ர்ர்.. சுர்ர்ர்.. என சப்தம் எழுப்பிக் கொண்டே.. என்னாவேனும் கேளு ஏய், வாங்கிட்டு ஓடிப்போயிரு இல்லே(லை) ஒன்னைய இந்த ஜாடியில அடச்சு வச்சுருவேன் என பூசாரி சொடலை பேய் பிடித்த ரத்தினத்தை சவுக்காள் அடித்துக் கொண்டே உறுமிக் கொண்டிருந்தான்.

அந்த தெருவில் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் பேய் பிடித்த ரத்தினத்தின் ஓட்டு வீட்டையே தேன் கூட்டைப்போல் மொய்த்துக் கொண்டிருந்தனர். பேயை பார்ப்பவர்களை விட பேயோட்டும் சொடலையின் செயல்களைப் பார்க்கவே கூட்டம் நிரம்பியிருந்தது.

புகைகளினூடே தலைவிரிகோலமாய் பூசாரி கொடுத்த அடிகளை வாங்கி கொண்டு அமர்ந்திருந்தால் ரத்தினம். வலிகளினூடேயும் அவள் மனதின் நினைவுகள் சுழல ஆரம்பித்தது. பட்டாம் பூச்சியாய் சுற்றித்திறிந்த அவளின் நினைவுகள் அவளுள் நதியைப் போல் மீண்டு வந்தது.

தினமும் பனை மரத்தில் ஏறி இறங்கினால்தான் குடும்பத்தில் உள்ள அனைவரின் வயிற்றுப்பசியும் அடங்கும் என்ற நிலையிலும், தனது அப்பா முனியாண்டி தன்னை பத்தாம் வகுப்பு வரை படிக்க வைத்த பாச நினைவுகள் அவள் மனதில் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டேயிருந்தது.

அம்மா கனகு.. நாங்கதான் நாதியத்து படிக்காம இப்படி கெடக்குறோம் நீயாவது நல்லா படிச்சு பாஸ் பண்ணுமா என அடிக்கடி தன்னை அனைத்துக் கொண்டு புலம்புவதும் ரத்தினத்தின் மனதில் காட்சியாய் எழுந்து நின்று, கண்கள் கலங்கி கண்ணீராய் அவளின் உள்ளத்து வலிகள் வழிந்து கொண்டிருந்தது.

அழுதா விட்டுறுவனா ஏய் ஓம் காளி, நீளி, சூளி ஏய் உர்ர்ர்ர்.. என சொடலை உறுமிக்கொண்டிருந்தான். புகையும், உடுக்கு சப்தமும் அந்த வீட்டையே நிறைத்திருந்தது.

பக்கம் ..2

நம்ம அப்பா அம்மா எத்தனையோ ஆசையை மனசுல வச்சுகிட்டு இருக்கிறாக அவங்க ஆசைய புரிஞ்சு நல்லா படிக்காம போயிட்டேனே. இத்தனை நாள் பத்தாவது வரை யாரையும் பெயிலாக்க கூடாதுன்ற கவர்மெண்ட்டு சட்டத்தினால ஒருஒரு வகுப்பா பாசாயி வந்து இப்ப பத்தாவது முழுப்பரிச்சையும் எழுதியாச்சு என அவளுள் உள்ளூரும் எண்ணங்களை மனதில் ஏந்திக் கொண்டும், பூசாரியின் அடியை தாங்கி கொண்டும் களைத்து போனவளாய் ஒரு கற்சிலையைப் போல் அமர்ந்திருந்தாள்.

அவள் மனதில் நன்றாய் படிக்க வில்லையே என்ற குற்ற உணர்வு எழுந்து நின்றது. நேரம் செல்ல செல்ல கூட்டம் சிறிது சிறிதாய் கலைந்து சென்று கொண்டிருந்தது.

வெயில் ஏறியிருந்தது. ஊரே மதிய வேளையில் ஒடுங்கி நிசப்தமாய் இருந்தது. காக்கைகள் மட்டும் தொடர்ந்து கரைந்து கொண்டிருந்தது. பூசாரி சொடலை இன்று இந்த பேயை ஓட்டாமல் போக மாட்டேன் என்பதில் உறுதியாய் இருப்பது அவன் பேச்சிலேயே தெரிந்தது.

உம்ம்.. நா(ன்) எத்தன(னை) பேய பாத்துருக்கேன், அடிச்சு சக்கையா புலுஞ்சு அதுகல மஞ்சனத்தி மரத்துல ஆனியால அடிச்சு எத்தனைய வச்சுருக்கேன். இத மட்டும் விட்டுருவனா இந்த பேயி.. என் சர்வீஸ்க்கு மசுத்துக்கு சமானம்யா என பூசாரி சொடலை கூறியதை பொடி பரமசிவம் அந்த மதிய வேளையிலும் ஒவ்வொரு வீட்டின் படியேறி சிறு பிள்ளையைப்போல ஒப்புவித்துக் கொண்டிருந்தான். அந்த கிராமத்தின் செய்தி தொடர்பாளர் இவன்தான். எந்த ஒருவிசயமானாலும் ஊர்மக்கள் இவனிடம்தான் அனைவரும் கேட்டு தெரிந்து கொள்வார்கள். ஊர் மக்கள் அப்படி கேட்பதை ஒருவித கௌரவமாக எண்ணிவந்தான் பொடி பரமசிவம்.

ரத்தினத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டேயிருந்தது. ஒலுங்காக படிச்சிருந்தா இந்த நாடகம் தேவையா, இந்த பூசாரிக்கிட்ட இப்படி அடி வாங்கி சாகனுமா? பூசாரி கொடுக்குற அடிய கூட தாங்கிறலாம் , நம்ம அப்பா, நாம பெயிலா போயிட்டா அடிச்சே கொன்றுவாறே என்ற பய உணர்வில் ரத்தினம் நடுங்கி கொண்டிருந்தாள், இந்த பய உணர்வினால்தான் ரத்தினம் இந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தது அவளுக்கும், அவள் சக தோழி மாரியம்மாளுக்கு மட்டும்தான் தெரியும்.

“மாரி நாளைக்கு ரிசல்ட்டு தானே…”

ஆமாம் புள்ள, நீயேன் பயந்து இப்படி சாவுற…

இல்ல, எங்க அப்பன், ஆத்தா ரொம்ப கஸ்ட்டப்பட்டு படிக்கவச்சாக, இப்ப நான் பெயிலாகிபோயிருவேன்னு பயமாயிருக்கு புள்ள..

சும்மா இரு கழுத(தை)..

இந்த வெவரமெல்லாம் மொதலையே யோசிச்சு ஒலுங்கா படிச்சிருக்கனும் இப்பயென்ன யோசன வேண்டியிருக்கு..

இல்ல மாரி.. எனக்கு பயமாயிருக்கு எங்க அப்பன் நான் பெயிலா போயிட்டென்னா என்னைய அடிச்சே கொன்றுவாரு..

அதுக்கு என்னத்த செய்றது ரத்தினம். நடக்குறது நடக்கட்டும்.

நான் பேயாடுறது மாதிரி நடிச்சா, என்னைய யாரும் அடிக்கமாட்டாகல்ல,

பக்கம் ..3

போடி லூசு, இங்கிலாந்து நாட்டுல “பிரைட்லைட்” – ன்னு ஒருத்தரு பேயே இல்லையின்னு நிருபுச்சுருக்காரு இந்த காலத்துல போயி பேயின்னுட்டு, ஒனக்கொன்னு தெரியுமா பேய் புடிச்சாதான் நம்ம ஊர்ல அடி நல்லா விழுகும். அதுக்கு பேசாம ஒங்கப்பன் கிட்டையே அடிவாங்கிறலாம்.

இல்ல மாரி நான் இப்படிதான் செய்யப்போறேன், வலுச்சா அது எனக்கு கிடைக்கிற தண்டனையா நெனச்சுக்கிறேன். எங்கப்பன் கிட்ட அடிவாங்க முடியாது புள்ள.

நான் சொல்லுறத சொல்லிப்பூட்டேன், இனி ஓம் பாடு..

என தன் தோழி மாரியுடன் பேசிய நினைவுகள் ரத்தினத்தின் மனதில் வட்டமடித்துக் கொண்டேயிருந்தது. சூரியன் மெல்ல மெல்ல தனது பணியை முடித்த கடமைக்கு பின், ஓய்வு எடுக்க மறைந்து கொண்டிருந்தான்.

தான் பெயிலாகிவிடுவோம் என்ற அவ நம்பிக்கையில் பயந்து நடுங்கி கொண்டிருந்தாள் ரத்தினம். பூசாரியடித்த வலியின் உச்சத்தில் அவள் கண்களில் வெளிச்சம் சிறிது சிறிதாய் மங்கத் தொடங்கியது. அருகில் கவலையுடன் அப்பா முனியாண்டியும், அம்மா கனகுவும் அழுது கொண்டிருந்தனர்.

ஒரு சிலரைத் தவிர்த்து ஊர் மக்கள் அவரவர் வேலைகளுக்கு சென்றுவிட்டனர். மாரி வீட்டை சுற்றியிருந்த சிறு கூட்டத்தை கடந்து கையில் பேப்பருடன் ஆவலாய் தன்னை நோக்கி வருவதை வலியுடன் கண்டுகொண்டிருந்தாள் ரத்தினம்.

அருகில் வந்ததும் மாரி சைகையில் நீ பாஸாயிட்ட புள்ள எனக் கூற. அதுவரை ரத்தினத்தின் அடி மனதில் குடியிருந்த வலிகளுக்கு தீர்வு கிடைத்த பெருமிதத்தில் அவள் ஆவாலய் எழுந்து “நான் பாஸாயிட்டேன்”, “நான் பாஸாயிட்டேன்” என துள்ளி துள்ளி மான் போல குதித்து ஆடினாள்.

திடீரென்ற ரத்தினத்தின் ஆட்டத்தைக் கண்ட பூசாரி, பயந்து அடங்காத பேயி இது.., அடங்காத பேயி இது.. – எனக் கூறிக்கொண்டே தலைதெறிக்க ஓட்டமெடுத்தான்.

கண்களில் பெருகிய ஆனந்த கண்ணீருடன் தோழி மாரியை அனைத்துக் கொண்டாள் ரத்தினம். புகைகளுக்கு நடுவே அவர்களிருவரின் நட்பு முகங்கள் மட்டும் அழகாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

– பயணம் இலக்கிய சிற்றிதழில் வெளிவந்த சிறுகதை (ஜனவரி 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *