நான் நடிகையாகப் போறேன்..!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 8,723 
 

நான் நடிகையாகப் போறேன்சுவர்ணாவுக்கு பளிச்சென ஒரு விழிப்பு வந்தது. அது வழக்கமாக எப்போதும் வருகிற விழிப்பல்ல… உடலுக்குள் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வந்த விழிப்பு என்பதை மனசு சொல்லியது.

பெண்களுக்கே உரிய முன்ஜாக்ரதை உணர்வுடன் படுக்கையில் இருந்து எழுந்தாள். மணி பார்த்தாள். அதிகாலை ஐந்து.தொடர்ச்சியான படப்பிடிப்பு. சில நாட்களில் விடியவிடிய நடக்கிறது. அதன் காரணமாக ஏற்பட்ட அலுப்பில் இருபதாம் தேதி வரவேண்டிய மென்சஸ் முன்கூட்டியே வந்து விட்டதோ… சுவர்ணா யோசித்தபடியே ஹாலுக்கு வந்தாள்..“செண்பகம்…’’ டச்சப் பெண்ணை அழைத்தாள். குரல் கேட்டு ஹாலில் சுருண்டு படுத்திருந்த அவள் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள்.

“மேடம்…’’

“நாப்கின் கொடு…’’

“மேடம்…’’

“நாப்கின் எடுன்னு சொன்னேன்…’’

“தீர்ந்துபோயிட்டு. உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு. இன்னைக்கு வாங்கிட்டு வரச்சொல்றேன்…’’

சுவர்ணா எரிச்சலானாள். “வாங்கி வைக்க மாட்டியா..? இப்ப எனக்கு உடனே வேணும். மானேஜர கூப்பிட்டு ரெடி பண்ணு. அப்பதான் ஷூட்டிங் வர முடியும்…’’

செண்பகா பரபரப்பானாள். செல்போன் எடுத்தாள்.சுவர்ணா அறைக்குள் வந்தாள்.சரியாக அரைமணி நேரம் கழித்து செண்பகா தயங்கியபடி உள்ளே வந்தாள். “மேடம்…’’ என்ன என்பது போல பார்த்தாள்.“மானேஜர்கிட்ட பேசினேன். ஒரு கார்தான் இருக்காம். ஷூட்டிங்குக்கு டிரிப் அடிக்க வேணுமாம்… அதோட நாப்கின் வாங்கணும்னா காஞ்சிபுரம்தான் போகணுமாம். இங்க மெடிக்கல் ஷாப் எதுவும் கிடையாதாம்… ஒன்பது மணிக்கு கார் அனுப்பறேன்னு சொல்றாரு…’’

“அப்ப பத்து மணிக்குதான் நான் ஷூட்டிங் வரமுடியும் செண்பகா… புத்திசாலித்தனமா யோசிக்க மாட்டியா? கடை திறக்கறப்ப தொறக்கட்டும். இந்த ஊர்ல பொம்பளைங்களே இல்லையா… யார்கிட்டயாச்சும் வாங்க வேண்டியதுதானே…’’

“சரி மேடம்…’’

சுவர்ணா ஜன்னல் கதவுகளைத் திறந்துவிட்டாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேலென வயல்வெளிகள் கண்களில் அடித்தன. தென்னந்தோப்புகள் வரிசை கட்டி நின்றிருந்தன. ஆற்றுப்படுகையில் தண்ணீர் தளும்பி நின்றது. வேதநல்லூர் கிராமம் அவள் மனதோடு ஒன்றிப் போயிருந்தது. வெள்ளந்தியான மனிதர்கள். படப்பிடிப்புக்கு சிறிதுகூட இடையூறு செய்யாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். .

சரியாக அரைமணி நேரம் கழித்து செண்பகா வந்தாள்.

“மேடம்… எங்கேயும் கிடைக்கல. பக்கத்து ஊருக்கு அக்ரி படிக்கற ஸ்டூடண்ட்ஸ் கேம்புக்கு வந்திருக்காங்களாம். அவங்ககிட்டகேட்டு ஒண்ணே ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்காங்க…’’சுவர்ணா படப்பிடிப்புக்குப் புறப்படத் தயாரானாள்.அரசினர் உயர்நிலைப்பள்ளி அருகே இருந்த மைதானத்தில் படப்பிடிப்பு. சுவர்ணா கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள்.

செல்ஃபி எடுத்து முழு கெட்டப்பையும் பார்த்துக்கொண்டாள். வித்தியாசமாக இருந்தது.

கலெக்டர் கேரக்டர். வெள்ளை நிற கைத்தறிப் புடவையில் வெளிர் நீல பார்டர் போடப்பட்டிருந்தது. கலெக்டருக்கு யூனிஃபார்ம் உண்டா என்று தெரியவில்லை. ஆனால், படம் முழுக்க இதுதான் அவளது காஸ்ட்யூம் என்று டைரக்டர் சொல்லி விட்டார். அவளுக்கும் பிடித்திருந்தது

“மேடம்… ஷாட் ரெடி!’’ அருகில் வந்தார் டைரக்டர் பிரசாந்த்“இன்னைக்கு மனுநீதிநாள். கலெக்டர் ஆபீஸ்ல பொதுமக்கள்கிட்ட மனு வாங்கறீங்க… அதுதான் ஸீன்…’’

“ம்…’’ சிரித்தபடி ஷாட் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்தாள். சிம்பிளாக ஆனால் சிறப்பாக இருந்தது அந்த மனுநீதிநாள் செட்டப். பெரிய மேஜை. பக்கத்தில் டவாலி. அவளைச் சுற்றி அதிகாரிகள். மனசுக்குள் நிஜமாகவே கலெக்டராகி விட்ட மாதிரி ஓர் உணர்வு. ஸ்டில் போட்டோகிராபரிடம் தனது செல்போனைக் கொடுத்தாள். “ஒரு ஸ்டில் எடுங்க… இந்த செட்டப்போட என் கெட்டப் அப்படியே வரணும்!’’

அதேமாதிரியே எடுத்துக் கொடுக்க… பார்த்து திருப்தியாகத் தலையாட்டினாள். புகைப்படத்தை அம்மாவுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினாள். அடுத்த நிமிடம் செல்போன் ஒலித்தது. அம்மா அழைத்தாள்.

“என்னம்மா..’’

“போட்டோ அனுப்பிருக்கே… என்ன போட்டோம்மா?”

“ஒரு படத்துல கலெக்டரா நடிக்கிறேன்…’’

“அப்படியா..!’’

அம்மா சந்தோஷமாக சிரிப்பதை இங்கே உணர்ந்தாள்.

“அருமையா இருக்கும்மா. பார்க்கறதுக்கு அப்படியே கலெக்டர் மாதிரியே இருக்கே… எனக்கு ஏதேதோ ஞாபகம் வந்துட்டு…’’

“தெரியும்! அதுக்குதான் உனக்கு அனுப்பிச்சேன்…’’“நான் ஆசைப்பட்ட மாதிரி நீ கலெக்டர் ஆகைலயேம்மா…’’ குரல் ஆதங்கமாக ஒலித்தது.

“என்னம்மா பண்றது… நீ என்னை கலெக்டராக்கணும்னு ஆசைப்பட்ட. ஆனா, அப்பா அவரோட ஆசைய நிறைவேத்திக்கிட்டாரு. பரவால்லம்மா உனக்காகத்தான் இந்தப் படத்தையே ஒப்புக்கிட்டேன். கம்மியான சம்பளம். ஆனா, படத்துல நடிக்க நடிக்க ரொம்ப திருப்தியா இருக்கு. இந்த காஸ்ட்யூம், என் கேரக்டர், நான் பேசற டயலாக் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்மா.

வழக்கமா ஷூட்டிங் முடிச்சிட்டு வந்து டயர்டுல தூங்கிடுவேன். ஆனா, இந்தப் படத்தோட ஷூட்டிங் முடிச்சிட்டு வந்தா தூங்க முடியாம ஒரு மாதிரி டிஸ்டர்ப்டா இருக்கு. என் கேரக்டர் மட்டுமில்ல… கூட நடிக்கறவங்க கேரக்டர், டைரக்டர் ஷூட் பண்ற விதம்… ஸீன்ல இருக்கற ஸீக்வென்ஸ் எல்லாம் மனச ஏதோ பண்ணிக்கிட்டே இருக்கும்மா… என் லைஃப் டைத்துல த பெஸ்ட் ஃபிலிமா இது இருக்கும்!’’

“அதெல்லாம் இருக்கட்டும்… லைஃப்ன்னா எதையாச்சும் சாதிக்கணும் சுவர்ணா… பேபிம்மான்னா தெலுங்கானா பெத்தபெட்டுல இருக்கற அவ்வளவு பொம்பளைகளுக்கும் தெரியும். இருபது வருஷ சர்வீஸ். நாலாயிரம் பிரசவம் பார்த்திருக்கேன்… உன் நடிப்புத் தொழில்ல அது வராதே…’’

“மேடம் ரெடி…’’ டைரக்டர் குரல் கேட்டது.

“அப்புறமா பேசறேம்மா…’’ லைனை கட் செய்தாள்.படப்பிடிப்பை வேடிக்கை பார்ப்பதற்கு ஏராளமான பள்ளி மாணவிகள் அங்கே நின்றிருந்தார்கள். தயங்கித் தயங்கி அவள் அருகில் வந்தார்கள். “மேடம்… உங்களோட போட்டோ எடுத்துக்கலாமா..?’’

தலையாட்டினாள்.செல்போனில் படம் எடுத்துக் கொண்டார்கள். பள்ளி மணி அடிக்க… அனைவரும் ஓடினார்கள்.

சில மாணவிகள் மட்டும் போகாமல் நின்றிருக்க… சுவர்ணா அவர்களைப் பார்த்தாள். “ஏம்மா… நீங்கல்லாம் ஸ்கூலுக்குப் போகலியா..?’’

அவர்கள் பதில் சொல்லாமல் தங்களுக்குள் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். ‘போகல’ என்பதாய் தலையாட்டினார்கள்.

“மேடம் ஷாட் ரெடி…’’ குரல் வர சுவர்ணா எழுந்து நடந்தாள்.ஷாட் முடித்து திரும்ப வந்து சேரில் அமர்ந்தாள். அதே மாணவிகளை கவனித்தாள். சத்தமாக அழைத்தாள். “பாப்பா… இங்க வாங்க!’’அவர்கள் தயங்கித் தயங்கி அருகில் வந்தார்கள்.

“ஏன் ஸ்கூலுக்குப் போகாம இங்க நிக்கறீங்க… ஷூட்டிங் சாயங்காலம் வரைக்கும் இங்கதான் நடக்கும். நீங்க ஸ்கூல் முடிஞ்சு திரும்ப வந்து வேடிக்கை பார்க்கலாம்…’’பதின்மவயதில் ஒரு பெண் அருகில் வந்தாள், தயங்கித் தயங்கிப் பேசினாள். “மேடம்… அதில்ல… இன்னைக்கு நாங்க ஸ்கூலுக்கு போகக்கூடாது…’’ “ஏன்..?’’“எங்களுக்கு மென்சஸ்…’’“அதனாலே..?’’அந்தச் சிறுமி தயங்கினாள்.

சுவர்ணாவுக்கு அவள் தயக்கத்தில் ஏதோ செய்தி இருப்பது போலப்பட்டது. “சும்மா தயங்காம சொல்லும்மா…’’

அந்தப் பெண் தயங்கியபடி சுற்றும்முற்றும் பார்த்தபடி முகத்தில் கலக்கத்தோடு பேசியது. “எங்ககிட்ட நாப்கின் வாங்க எல்லாம் பணம் கிடையாது. அதனால துணிதான் யூஸ் பண்ணுவோம். சமயத்துல மென்சஸ் அதிகமாயி பெஞ்சுல பட்டுட்டா சார், டீச்சர் எல்லாம் திட்டுவாங்க. அடிப்பாங்க. அதனால பீரியட் நேரத்துல ஸ்கூலுக்கு வரக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க…’’

சுரீரென ஆன்மாவில் அறைந்தது போல இருந்தது சுவர்ணாவுக்கு. இதென்ன அக்ரமம்… பளிச்சென மனசுக்குள் ஒரு ஆவேசம் எழுந்தது. “ஸ்கூல்ல… பொதுவா எல்லாருக்கும் இப்படித்தானா..?’’ அந்தப் பெண் மற்றவர்களைப் பார்த்தாள். பிறகு தயங்கியபடி சொன்னாள். “இல்ல மேடம்… எங்களுக்கு மட்டும்தான்…’’அவள் கூறியதன் பொருள் சுவர்ணாவுக்குப் புரிந்தது. கண்களை மூடிக் கொண்டாள். மனசு முழுதும் ஒரு வேதனை வந்து அப்பிக் கொண்டது. அந்தத் தகவலை கிரகித்துக்கொள்ள அவளுக்கு அவகாசம் தேவைப்பட்டது.

சுவர்ணா முகத்தில் காட்டிய உணர்ச்சியைக் கவனித்த அந்தச் சிறுமி பேசினாள். “இது பல வருஷ பிரச்னை மேடம். எங்க அப்பால்லாம் சேர்ந்து போராடி பார்த்துட்டாங்க. எல்லாருக்கும் மனு அனுப்பிட்டாங்க. அப்பப்ப கவர்மெண்ட் ஆபீஸர்ஸ் வந்து விசாரிப்பாங்க. சமயத்துல ஸ்கூலுக்கு போலீஸ் கூட வரும். ஏதாவது நடக்கற மாதிரி இருக்கும்… ஆனா, ஒண்ணும் நடக்காது…’’

அந்தச் சிறுமிகள் அனைவரும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்தான விழிப்புணர்வு சிறிதுமின்றி வெள்ளந்தியாய் சிரித்தார்கள்.

சுவர்ணா யோசித்தாள். ஒரு நடிகையாக இதை ஒரு சாதாரண விஷயமாகக் கருதி கடந்து போக அவள் விரும்பவில்லை. செல்போன் எடுத்தாள். வேண்டப்பட்ட ஓர் ஆங்கில செய்தித்தாள் நிருபருக்கு கால் செய்தாள். “சுரேஷ்… இப்ப நான் காஞ்சிபுரம் பக்கத்துல வேதநல்லூர் கிராமத்துல ஷூட்ல இருக்கேன். இங்க ஒரு பள்ளிக்கூடம் பக்கத்துல ஷூட்டிங்…’’ சரசரவென விஷயத்தைச் சொன்னாள்.

சுரேஷ் பேசினான். “மேடம்… கிராமத்து பள்ளிக்கூட பிள்ளைங்களுக்கு இலவசமா நாப்கின் தரணும். ஸ்கூல்லயே அத ஸ்டாக் வச்சுக்கணும். அதோட நாப்கின் தேவைப்படற பிள்ளைகள கணக்கெடுத்து அந்த டீடெயில்ஸ் டீச்சர் அல்லது இதுக்குன்னே ஹெட்மாஸ்டர் நியமிச்சிருக்கற ஒரு கோ-ஆர்டினேட்டர்கிட்ட இருக்கணும். அவங்க குறிப்பிட்ட அந்த பிள்ளைங்களோட தொடர்புல இருக்கணும்… அதோட சில ஸ்கூல்ல ஆட்டோமேட்டிக் வெண்டிங் மெஷின், டிஸ்போஸல் மெஷினும் கூட இருக்கு.

இதுக்குன்னு சென்ட்ரல் கவர்ண்மெண்ட் ஸ்கீம் இருக்குன்னு நெனக்கிறேன்… டைரக்டா கலெக்டர் கன்ட்ரோல்ல வரும். நீங்க சொல்ற இன்னொரு விஷயம் மிகப்பெரிய அட்ராசிட்டி மேடம்… நான் ஏரியா ரிப்போர்ட்டர்கிட்ட சொல்லி விசாரிக்கச் சொல்றேன்…’’

சுவர்ணா லைனை கட்செய்தாள். அழகான இந்த கிராமத்து பள்ளியில் இப்படி ஓர் ஏற்றத்தாழ்வா… உடற்கூறு தொடர்புடைய ஒரு விஷயத்தை முன்னிறுத்தி சிறுமிகள் மீது சித்ரவதை… இலவச நாப்கின் எங்கே..? அது ஏன் குறிப்பிட்ட சில குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை? அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த திட்டத்தையே கிடப்பில் போட்டு விட்டார்களா… ஏன் மென்சஸ் நாட்களில் பள்ளிக்கு சிறுமிகளை வரக்கூடாது என்று சொல்கிறார்கள்…

அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் உடம்பு என்ன பாடுபடுத்தும். முப்பது வயது தொட்ட எனக்கே படப்பிடிப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. சோர்வு வந்து அப்புகிறது. உள்ளுக்குள் ஒரு தடுமாற்றத்தை உணர்கிறேன். சென்னையில் இருந்தால் கட்டாய ஓய்வுதான். இவர்கள் சிறுமிகள்… உடல் உபாதை ஒருபுறமென்றால் இந்த புறக்கணிப்பு அவர்களை உளவியல் ரீதியாக பாதிக்குமே…

திரும்ப ஷாட் முடித்து விட்டு நாற்காலிக்கு வந்தவள், செல்போனை எடுத்து டுவிட்டர் பக்கத்துக்கு வந்தாள். வார்த்தைகளைக் கோர்த்து அழகான ஆங்கிலத்தில் பதிந்தாள். `ஒரு கிராமத்தில் மாதவிடாய் சமயத்தில் குறிப்பிட்ட சில சிறுமிகள் பள்ளிக்குப் போவதில்லை. வகுப்பறைக்குள் அவர்களுக்கு அனுமதி இல்லை என்று கூடச் சொல்லலாம். சென்னையிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் வேதநல்லூர் என்கிற கிராமத்தில் இப்படி ஒரு சமூக அவலம்…’“மேடம்.. ஷாட் ரெடி…’’

டுவிட் செய்துவிட்டு செல்போனை செண்பகாவிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தாள்.ஷாட் முடித்து திரும்பி வந்தபோது, செல்போன் ஒலித்தது. பேனல் பார்த்தாள். டுவிட்டரில் அவளை ஃபாலோ செய்யும் தமிழக எம்பி.“சுவர்ணா… என்ன டுவிட் இது..?’’

சொன்னாள். அமைதியாக கேட்டுக் கொண்டார். `அப்படியா… அப்படியா…’ என்றார் வியப்பாய்.

“மேடம்… ஷாட் ரெடி!’’

நடித்தாள். திரும்ப வந்து சேரில் அமர்ந்தபோது, மறுபடி கால். புது நம்பர். “மிஸ் சுவர்ணா..?’’

“யெஸ்…’’

“நான் டிஸ்டிரிக்ட் கலெக்டர் ராம்நாத் சாரங்கன்…’’

சுவர்ணாவுக்கு ஆச்சரியம். “சொல்லுங்க சார்…’’

“உங்களைப் பார்ப்பதற்கு ஆர்டிஓ வருகிறார். அவரைச் சந்திக்க முடியுமா..?’’

“எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா..?’’

“நீங்க போட்டிருந்த டுவிட் தொடர்பா எம்பி என்கிட்ட பேசினார். ஆர்டிஓ உங்ககிட்ட சில விஷயங்கள் கிளாரிஃபை செய்வார்…’’

“சந்திக்கிறேன்…’’

“மேடம்… ஷாட் ரெடி!’’சுவர்ணா பொஸிஷன் நோக்கி நகர்ந்தாள்.

“அம்மா தாயே… மூணு மாசமாச்சிம்மா என் பொண்ணு காணாமப் போயி… யாரோ ஒரு பையன்கூட பழகினாளாம்… ரெண்டு பேரையுமே காணோம்மா… போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா புகார் வாங்க மாட்டேங்கிறாங்க… நீதாம்மா கண்டுபிடிச்சித் தரணும்…’’

“எஸ்.பி சார்… இது என்னான்னு பாருங்க… நீங்களே டைரக்டா விசாரிங்க. எனக்கு நாளைக்கு ஃபீட்பேக் கொடுங்க…’’

“ஷாட் ஓகே!’’

சுவர்ணா திரும்ப நாற்காலிக்கு வந்து செல்போன் பார்த்தாள். அந்த டுவிட்டுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். நிறைய பேர் ரீ டுவிட் செய்திருந்தார்கள். லைக்ஸ் ஏறிக்கொண்டே இருந்தது. வைரலாகிக் கொண்டிருக்கிறது என்பது புரிந்தது.படப்பிடிப்புத் தளத்திற்குள் அந்த ஜீப் வேகமாக வந்து நின்றது. பேண்ட், முழுக்கை சட்டை அணிந்து ஜீப்பிலிருந்து இறங்கிய அதிகாரி அநேகமாக ஆர்டிஓவாக இருக்க வேண்டும்.

அருகே வந்தார்.

“மேடம் நான் கோவிந்தசாமி… ஆர்டிஓ…’’

“சொல்லுங்க…’’

“கலெக்டர் உங்களைப் பார்க்கச்சொன்னார்…’’

“என்ன விஷயம்?’’

“அந்த டுவிட்டை ரிமூவ் செய்ய முடியுமா?’’

“ஏன்..?’’

“மேடம்… இந்த சானிடரி நாப்கின் யுனிசெஃப் விவகாரம். அவர்கள் ஃபண்ட் புரொவைட் பண்றாங்க. அதுலதான் கொடுக்கறோம். சமயத்துல ஃபண்ட் வர லேட்டாகும். அதனால கொடுக்க முடியறதில்லை… இப்ப உங்க டுவிட்டால கலெக்டர தில்லிலேந்து கூப்பிட்டு வறுக்கறாங்க மேடம்…’’

‘‘பொய் சொல்றீங்க. நீங்க சொல்றத என்னால ஏத்துக்க முடியாது. அந்த திட்டமே இங்க அமுல்ல இல்ல. அதுதான் உண்மை. என்னால் டுவிட்டை ரிமூவ் செய்ய முடியாது. நாப்கின் விவகாரத்தை விடுங்கள். மென்சஸ் நேரத்துல குறிப்பிட்ட சில பிள்ளைங்கள பள்ளிக்கு வரக்கூடாதுன்னு சொல்றாங்களாமே..?’’

“அது… அது… தாசில்தார் என்கொயரில இருக்கு மேடம். நானும் விசாரிக்கிறேன்… பிறகு, மேடம்… இந்த இடம் ஒருமாதிரியான இடம். நீங்க ஷூட்டிங்குக்கு வந்திருக்கீங்க. ரொம்ப சென்சிடிவ் இஷ்யூ… அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்… ப்ளீஸ் புரிஞ்சுக்குங்க!’’

“மேடம்… ஷாட் ரெடி!’’சுவர்ணா அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மேடம்… அந்த டுவிட்..?’’

“ரிமூவ் செய்யமாட்டேன்!’’ உறுதியாகப் பேசினாள்.

ஷாட் முடிந்து வந்ததும் கிராமத்து எக்ஸ்டீரியரை செல்போனில் போட்டோ எடுத்தாள். தூரத்தில் தெரிந்த பள்ளியை ஜூம் செய்து படம் பிடித்தாள்.

பேக்கப் ஆகி தங்கியிருக்கும் அறைக்கு வந்தபோது மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. பல வருடங்களாகத் தொடரும் சமூக சாதிய அவலம். மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு வாரம் இங்கே இருக்கப் போகிறேன். அதற்குள் என்னால் என்ன செய்து விடமுடியும்… இந்தப் பிரச்சினைக்கு என்னதான்தீர்வு…?வாட்ஸ் அப்பில் இமேஜ் வந்ததற்கான ஐகான் தெரிந்தது.

அம்மாவிடமிருந்து வந்திருந்தது… விரலை அழுத்தினாள். அவள் போட்டோ உயிர்ப்பானது. சிறுவயதில் என்சிசியில் இருந்தபோது எடுத்த ஃபோட்டோ… யூனிஃபார்மில் இருந்த தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.செல்போனில் மிஸ்ட் கால் வர… எடுத்துப் பார்த்தாள். அறிமுகமில்லாத எண்.அடுத்த விநாடி அந்த எண்ணிலிருந்து வாட்ஸ்அப் தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஐகான் காட்டியது. ஒரு ஆடியோ ஃபைல் வந்து விழுந்தது. யோசிப்புடன் ஃபைலை ஓப்பன் செய்தாள்.

“ஏய்…’’ ஆண் குரலில் ஆபாச வார்த்தை. ஆணவ வார்த்தை. “இந்த ஊர்ல யார் பள்ளிக்கூடம் போகணும்… யார் படிக்கணும்… எல்லாத்தையும் நாங்கதான் முடிவு பண்ணுவோம். இங்க நாங்க வச்சதுதான் சட்டம். அரசாங்கம்… போலீஸ்… நீ நடிக்கிறியே கலெக்டர் வேஷம்… அவரால எல்லாம் ஒரு … புடுங்க முடியாது.

பல ஒரிஜினல் கலெக்டரையே பார்த்துட்டோம். நீ டூப்ளிகேட். உன்னால என்ன பண்ண முடியும்? நாங்க எல்லாம் கட்சி ஆளுங்க. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்கள ஒண்ணும் பண்ண முடியாது. நீ ஒரு நடிகை. உன்னால என்ன புடுங்க முடியும்? நீ எங்க போனாலும் கடைசில எங்ககிட்டதான் பிரச்னை வரும்… எங்களத் தாண்டி ஒருத்தன் ஒண்ணு பண்ண முடியாது. ஷூட்டிங் வந்தோமா… படத்துல நடிச்சோமான்னு இருக்கணும்… இல்ல…’’

திமிரும் ஆணவமும் கலந்து வந்து விழுந்தன. வார்த்தைகளில் இருந்த வெறுப்பும் கோபமும் அவளைக் கடுமையாகத் தாக்கின.

சுவர்ணா கட்டிலில் அமர்ந்தாள். அந்தப் பேச்சில் இருந்த வெறியும் திமிரும் அவளை நிலைகுலைய வைத்தன. கண்கள் கோபத்தில் சிவந்தன. பிபி ஏறியது. உடல் நடுங்கியது. அந்த மூன்று நாட்களில் உண்டாகும் உடல் உபாதையை விட மனதில் அதிகம் வலித்தது.

நாங்கள் சாதி வெறி பிடித்த அரசியல்வாதிகள்… ஒரு சினிமா நடிகையால் என்ன செய்து விட முடியும்? இதுதானே உங்கள் எண்ணம்… திமிர்… ஆணவம்…தண்ணீர் எடுத்துக் குடித்தாள். நிதானப்படுத்திக் கொண்டாள். லேப்டாப் எடுத்தாள். ஆன் செய்து முகநூல் பக்கத்திற்கு வந்தாள். கண்மூடி யோசித்தாள். விரல்கள் கீ போர்டில் நடனமாடத் தொடங்கின.

மேன்மை தங்கிய குடியரசுத் தலைவர் அவர்களுக்கு…வார்த்தைகளைக் கோர்த்து கோர்த்து கவனமாக கம்போஸ் செய்யத் தொடங்கினாள். ஆடியோ ஃபைலில் இடம் பெற்றிருந்த வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தாள். சுருக்கமாகச் செய்தி பதிந்து அதோடு அந்த ஆடியோ ஃபைலை இணைத்தாள். ஷேர் செய்தாள்.உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம், மனித உரிமைக் கமிஷன், ஐநா சபையின் யூனிசெஃப் பிரிவின் டுவிட்டர் பக்கம் அனைத்திற்கும் டேக் செய்தாள்.

பிறகு நீண்ட நேரம் யோசித்தபடி அறைக்குள் நடந்தாள். மனதிற்குள் எண்ணங்கள் ஓடின. என்னுடைய இந்த முயற்சிக்கு எந்த அளவில் நடவடிக்கை இருக்கும்… ஆடியோவில் பேசியது போலவே நடவடிக்கை இவர்களிடம் வந்து ஒன்றுமில்லாமல் முடிந்து விடுமோ… ஒரு கிராமத்தில் சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் இந்த உடற்கூறு யுத்தத்தில் சிறுமிகளை அநாதரவாக விடுவதா… பிறகு கலெக்டராக நடித்து என்ன பயன்…?

செல்போன் எடுத்தாள். மெஸேஜில் பதிந்தாள்.

யுனிசெஃப் அடுத்த சில நிமிடங்களில் தனது முகநூல் பக்கத்தில் நான்கு வரிகளில் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்க… சிறிது நேரத்தில் அரசாங்க இயந்திரம் பற்றிக் கொண்டது.தில்லியிலிருந்து தலைமைச் செயலாளருக்கு அவசர அழைப்பு வந்தது. அவர் காவல் துறைத் தலைவரை அழைத்தார். வடமண்டல ஐஜிக்கு தகவல் போனது. அவர் நேரடியாக எஸ்பியைத் தொடர்பு கொண்டார். நுண்ணறிவு போலீஸார் களத்தில் இறக்கப்பட்டார்கள்.

நள்ளிரவு நேரத்தில் வேதநல்லூர் கிராமத்திற்குள் பெரும் போலீஸ் படை புகுந்தது. மின்சாரத்தை நிறுத்தினார்கள். லைஃப் டார்ச் உபயத்தோடு ஆர்ஏஎஃப் எனப்படும் அதிரடிப் படையினர் கிராமத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். வீடு வீடாகப் புகுந்தார்கள். நுண்ணறிவுப் பிரிவு சுட்டிக்காட்டியிருந்த சிலருக்கு பிரம்பால் பின்புறத்தில் பொளேரென அடி விழுந்தது. சிலரைக் கைது செய்தார்கள். பலரை மிரட்டினார்கள்.
காலையில் கண்விழித்து ஜன்னல் வழியே சுவர்ணா வெளியில் பார்த்தபோது ஆச்சரியமானாள்..

கெஸ்ட் ஹவுஸைச் சுற்றி போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. ஆயுதமேந்திய போலீஸார் தெரு முழுதும் நின்றிருந்தார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை போலீஸ் ஜீப்புகளும் வேன்களும் நின்றிருந்தன.அறையை விட்டு வெளியே வந்தவளைப் பார்த்து இன்ஸ்பெக்டர் முன்னால் வந்தார். “மேடம்… உங்களுக்கு பந்தோபஸ்து கொடுக்கச்சொல்லி உத்தரவு!’’“ஏன்..’’ “ராத்திரி ஊர்ல ஒரு பிரச்னை. நீங்க டுவீட் போட்டிருந்தீங்களா… நாங்க விசாரணை பண்ணி சிலரை அரெஸ்ட் பண்ணினோம். அதனால உங்கமேல கிராமத்தைச் சேர்ந்த சில பேரு கோவமா இருக்காங்க…’’

சுவர்ணாவுக்குப் புரிந்தது. அறைக்கு வந்த ஆங்கிலப் பேப்பரைப் பிரித்தாள். இரண்டாம் பக்கத்தில் நான்கு பத்தியில் அவளது புகைப்படத்துடன் செய்தி.பிரபல நடிகை ஸ்வர்ணா டுவீட்டால் வேதநல்லூர் கிராமத்தில் சாதிய அவலம் களையப்பட்டது…

படத்தின் டைரக்டர் வந்தார். “மேடம்… இன்னும் பத்து நாள் இங்க ஷூட்டிங் நடத்தணும். நீங்க பாட்டுக்கு கொளுத்திப் போட்டுட்டீங்க. பத்திக்கிட்டு எரியுது… மீடியா கவனம் முழுக்க வேதநல்லூர் கிராமத்துலதான்…’’அமைதியாக காரில் ஏறினாள். கார் போகும்போது கவனித்தாள். சமூக நலத்துறையைச் சேர்ந்த இரண்டு வேன்கள் ஊருக்குள் வந்து கொண்டிருந்தன. தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த கார் ஒன்று போய்க் கொண்டிருந்ததுபடப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தார்கள்.

முதல் ஷாட் முடிந்ததும், பள்ளிக்கூடச் சிறுமிகள், ஊர் ஆட்கள் சில பேர் ஓடி வந்தார்கள். போலீஸாரின் தடுப்பை மீறி உள்ளே வந்தார்கள்.
“மேடம் தேங்க்ஸ் மேடம்… எங்களுக்கு நாப்கின் கொடுத்திருக்காங்க. ஸ்கூல்லேயும் ஸ்டாக் வச்சிருக்காங்க. இனிமேல மென்சஸ் நேரத்துல ஸ்கூலுக்கு வரலாம்னு சொல்லிட்டாங்க. ராத்திரி முழுக்க போலீஸ் ஊர்ல விசாரிச்சிச்சு மேடம்… பி.டி வாத்தியார டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க…’’
கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பெரிய மனிதர்கள் அருகில் வந்தார்கள். மரியாதையாகக் கும்பிட்டார்கள். “மேடம்… நாளைக்கு சுதந்திர தினம். ஸ்கூல்ல நீங்கதான் கொடியேத்தணும்..!’’

மாலை முன்னேரத்திலேயே படப்பிடிப்பு பேக்அப் ஆனது.“மேடம்… போலீஸ்ல முடிக்கச் சொல்லிட்டாங்க. நாளையோட ஷெட்யூல் பேக்கப் மேடம்…’’
சுவர்ணா அதிர்ச்சியானாள். ‘‘நம்ம பிளான்படி இன்னும் ஆறு நாள் இருக்கே…’’“ஊர்ப்பஞ்சாயத்துலேந்து இனிமே ஷூட்டிங் நடத்தக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க… ஊரை விட்டு நீங்க உடனே கெளம்பி ஆகணுமாம்… அதனால புரொட்யூஸர் முடிக்கச் சொல்லிட்டாரு. மேடம் பிரஸ்கிட்ட எதுவும் பேச வேணாம். புரொட்யூஸர் கவுன்சில்லேயும் நடிகர் சங்கத்துலேயும் உங்ககிட்ட சொல்லச் சொன்னாங்களாம். கவர்ண்மெண்டுலேந்து செம பிரஷராம்…’’சுவர்ணா யோசித்தாள்.

“கலெக்டரா நடிக்கறதுக்கு வாய்ப்புக் குடுத்தேன். நீங்க கலெக்டராவே மாறிட்டிங்க. ஆல் த பெஸ்ட். நீங்க இன்னைக்கே கூட சென்னைக்கு புறப்படலாம் மேடம்…’’“இல்ல, நாளைக்கு ஸ்கூல்ல கொடியேத்த வர்றேன்னு சொல்லியிருக்கேன்…’’டைரக்டர் தயங்கினார், பிறகு “ஓகே மேடம். உங்க இஷ்டம்…’’படப்பிடிப்புத் தளத்திலிருந்து கெஸ்ட்ஹவுஸ் வரை சுவர்ணாவை போலீஸ் அரண் அமைத்து அழைத்துச்சென்றது.

இரவு சாப்பாடு முடித்து, டிவி பார்த்தாள். “காஞ்சிபுரம் மாவட்டத்துல வேதநல்லூர்ங்கற கிராமத்துல மாதவிலக்கு நேரத்துல ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளை பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாதுன்னு தடுத்திருக்காங்க. எழுபது வருட சுதந்திர இந்தியாவுல கிராமங்களுக்கு உண்மையாவே சுதந்திரம் கிடைச்சிருக்கா..? கிராமங்கள்ல தீண்டாமைக் கொடுமை ஒழிஞ்சிடுச்சா? இதப்பத்திதான் நாம இன்னைக்கு விவாதிக்கப்போறோம். சமூக நல ஆர்வலர் தாமோதரன்… வழக்கறிஞர் அருள்மொழி… ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாஞ்சில் அன்பழகன்…. எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஆலந்தூர் சோமு நம்மோட இணைஞ்சிருக்காங்க….’’

இந்திய அளவில் தனது டுவிட்டருக்கும் ஃபேஸ்புக் பதிவுக்கும் ரெஸ்பான்ஸ் இருந்ததை சுவர்ணா மனதில் குறித்துக் கொண்டாள்.

தலையணையை மடியில் வைத்துக்கொண்டு டிவியில் ஆர்வமானபோது, ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு பெரும் சத்தத்துடன் அந்தக் கல் உள்ளே வந்து விழுந்தது. சுவர்ணாஅதிர்ந்தாள். லைட்டை ஆஃப் செய்தாள். படுக்கைக்குக் கீழே சரிந்தாள். சத்தம் கேட்டு போலீஸ் உள்ளே வந்தது. வெளியே தடதடவென சத்தம் கேட்டது.

சுவர்ணா செல்போன் எடுத்தாள். இன்ஸ்பெக்டர் நம்பர் போட்டாள். அவர் பேசுமுன்னே கடுமையான, குரலில் பேசினாள். “எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு உங்கள் பாதுகாப்புக் குறைபாடே காரணம்… இதை உங்கள் மேலதிகாரிகளுக்குச் சொல்வேன்!’’

மறுமுனையில் இன்ஸ்பெக்டர் அதிர்வதை உணர்ந்தாள்.

பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்போனில் படபடத்தார். “சாரி மேடம்… நீங்க உடனே சென்னைக்கு கெளம்பிடுங்க…’’

“இல்ல… போக மாட்டேன்…’’ உறுதியான குரலில் மறுத்தாள்.இரவு முழுதும் தூங்காமல் விழித்திருந்தாள். அவளுக்குள் பல எண்ணங்கள் அணிவகுத்தபடி இருந்தன. அச்சுறுத்தலையும் தாண்டி மனசுக்குள் ஒரு நிம்மதி படர்ந்தது. எதிர்வினை பலமாக இருக்கிறது. ஜெயித்து விட்டேன்.

விடிந்ததும் பரபரப்பானாள். கலெக்டர் புடவை கட்டிக் கொண்டாள். மேக்கப் தவிர்த்தாள். நெஞ்சில் தேசியக் கொடி குத்திக் கொண்டாள். டுவீட் போட்டது… எம்.பி பேசியது… கலெக்டர் பேசியது… ஆர்டிஓ வந்தது, போலீஸ் பந்தோபஸ்து கொடுக்கப்பட்டது, அறைக்குள் கல் வந்து விழுந்தது… ஆசிட் வீசப்பட்டது எல்லாம் மனதுக்குள் ஓடின.

நடிகை என்கிற வட்டத்தைத் தாண்டி இது எளிய மக்களின் உரிமைக்கான போராட்டமாக அவளுக்குள் தோன்றியது. தன்னை இப்படி மாற்றிய அந்த சக்தியைப் பற்றி யோசித்தாள். புரியவில்லை. இந்த கலெக்டர் வேஷமோ… இருபது நாட்களாக அந்த கேரக்டராகவே வாழ்ந்தது தனக்குள் ஒரு தனித்துவத்தை, தைரியத்தை ஏற்படுத்தி விட்டதோ… ஒரு சாதாரண நடிகை என்கிற உணர்வைத் தாண்டி சமூக அக்கறை, சக மனிதருக்கு இழைக்கப்படும் அவலத்திற்கு எதிராக கொதித்தெழவேண்டும் என்கிற உணர்வை ஏற்படுத்தி விட்டதோ…

பெரும் பாதுகாப்புடன் ஸ்கூல் நோக்கி வந்தாள். தன்னைச் சுற்றி வந்த போலீஸ் படையை பெருமிதத்தோடு கவனித்தாள். அம்மாவின் கனவு நனவாகி விட்டது. பள்ளிக் குழந்தைகளோடு கிராமம் மொத்தமும் மைதானத்தில் திரண்டிருந்தது. அவளைப் பார்த்ததும் ஆரவாரித்தது. கையசைத்தது.

வானம் தொட்டிருந்த கொடிக் கம்பத்தை பெருமிதமாகப் பார்த்தாள். தலைமையாசிரியர் தேசியக்கொடியின் கயிற்றை எடுத்துக்கொடுக்க சுவர்ணா கொடியேற்றினாள்தேசியக் கொடி அங்குலம் அங்குலமாக மேலேறியது.

“ஜனங்களும் மனங்களும் இரண்டற…’’ தேசீய கீதத்தை மாணவ மாணவிகள் கோரஸாக தமிழில் பாடினார்கள்.தேசியக் கொடி காற்றில் படபடக்க… “மேடம் நீங்க கெளம்பலாம்…’’ எஸ்பி அருகில் வந்து படபடத்தார்.கம்பெனி காரில் சுவர்ணா ஏறப்போக… “மேடம்… ப்ளீஸ்… இந்த ஜீப்புல வாங்க. காஞ்சிபுரம் வரைக்கும் இதுல உங்கள அழைச்சிட்டுப் போகச் சொல்லி இன்ஸ்ட்ரக்சன். உங்க வீடு வரைக்கும் உங்களுக்கு பந்தோபஸ்து குடுக்கச் சொல்லி இருக்காங்க. உங்க சென்னை வீட்டுலேயும் உங்களுக்கு போலீஸ் எஸ்கார்ட் போடச்சொல்லி உத்தரவு மேடம்…’’

சுவர்ணா சைரன் பொருத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பில் ஏறி அமர்ந்தாள். வேதநல்லூர் கிராமத்தைப் பார்த்தாள். ஜீப் மெல்ல நகர்ந்தது.

“மேடம்…’’
குரல் கேட்டுத் திரும்பினாள். அந்த நான்கு சிறுமிகளும் நெஞ்சில் குத்திய கொடியோடு அவளைப் பார்த்து நெற்றியில் கை வைத்து சிரித்தபடி விஷ் செய்தார்கள்.சுவர்ணா அவர்களைப் பார்த்துச் சிரித்தாள். “ஒரு நிமிஷம்…’’ஜீப் நின்றது. சிறுமிகள் அருகே வந்தார்கள். போலீஸார் ஜீப்பைச் சூழ்ந்து நின்று கொள்ள, உள்ளிருந்தபடியே சுவர்ணா அவர்களைப் பார்த்தாள்.

மற்ற பெண்கள் வெட்கப்பட்டு தயங்கி நிற்க… நால்வரில் சற்று உயரமாகவும் வாளிப்பாகவும் இருந்த பெண் நெருங்கி வந்து கை கொடுத்தாள். “கலக்கிட்டிங்க மேடம்…’’சுவர்ணா சிரித்தாள். “தேங்க்ஸ்… உன் பேரென்ன..? என்ன படிக்கிறே..?’’

“நிறைமதி… டென்த் படிக்கறேன். மேடம்… நேத்து நைட்டு உங்க ரூம்ல கல் எறிஞ்சது நாங்கதான்…’’

சுவர்ணா முறைத்தாள்.

“சாரி மேடம்…. உங்க மேல ஆசிட் அடிக்க பிளான் போட்டிருந்தாங்க. உங்கள அலர்ட் பண்ணத்தான் அதமாதிரி பண்ணினோம்…’’

“அப்படியா..?’’“உங்கள ஸ்கூல்ல கொடியேத்த விடக்கூடாதுன்னு ஊர்ல சில பேரு முடிவு பண்ணியிருந்தாங்க. ஆனா, நீங்க துணிச்சலா இங்கேயிருந்து சாதிச்சிட்டிங்க மேடம்…’’சுவர்ணா சிரித்தாள். “ஓகே… நல்லா படிக்கணும்… பெரிய கலெக்டராகணும்…’’

நிறைமதி சிரித்தாள். அழுத்தம் திருத்தமாகப் பேசினாள். “பல கலெக்டர் வந்து போயிட்டாங்க மேடம். அவங்களாலயெல்லாம் ஒண்ணும் பண்ண முடியல. நீங்கதான் சாதிச்சிருக்கீங்க… அதனால நான் உங்கள மாதிரி நடிகையாகப் போறேன்..!’’ என்றாள்.

சுவர்ணா சிரித்தாள்.
– மே 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *