நானே வருவேன்…இங்கும் அங்கும்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2022
பார்வையிட்டோர்: 2,133 
 

வார்தா புயலைப்போல படுவேகமாக அறைக்குள் நுழைந்தாள் அந்தப் பெண்..

“டாக்டர்…மே ஐ டேக் எ சீட்…?”

பதிலுக்குக் காத்திராமல் நாற்காலியை வேகமாகப் பின்னுக்குத் தள்ளி உட்கார்ந்து விட்டாள்….

கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு நோயாளிகளை வரிசைப்படி அனுப்பும் சவிதாவின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு , வெளியே காத்திருக்கும் அத்தனை நோயாளிகளையும் (டாக்டர் கிரிதரிடம் அப்பாயின்ட்மென்ட் கிடைக்க மாதக்கணக்கு ஆகும்… யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்…) முந்திக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டாளே…! சரியான கேடிதான்!

“டாக்டர்..நேத்து என் தங்கை உங்க கிட்ட வந்தாளா..? ஐ மீன் மை ட்வின் சிஸ்டர் தாரா…”

டாக்டர் கிரிதர் அவளை நேருக்கு நேர் பார்த்து…

“டூ யூ ஹாவ் அன் அப்பாயின்டமென்ட்..? நீலாவப் பாத்தியா…?உன்னுடைய ஃபைல் என் மேசைக்கு வரவேயில்லையே…..? ஐ வில் ஃபைண்ட் அவுட்….”

அழைப்பு மணியில் கைவைக்கப்போன அவரது கையை லேசாகத் தட்டிவிட்டு…”சாரி டாக்டர்…நோ அப்பாயின்டமென்ட்.. ஹு தி ஹெல் இஸ் நீலா….? சவிதாவைக் கூப்பிட வேண்டாம்..!

எமர்ஜென்சி..!என்னோட சிஸ்டர் இன்னைக்கு காலைல தற்கொல செஞ்சுக்க பாத்தா…நல்லவேளை..எப்படியோ பொழச்சிட்டா..நேத்து உங்க கிட்ட பேசினதா சொன்னா….!”

சென்னையிலேயே மனநல மருத்துவத்தில் நம்பர் ஒன்னாக இருக்கும் டாக்டர் கிரிக்கு அவளது இந்த நடத்தை அதிர்ச்சியை அளிக்காவிட்டாலும் ஒரு வித எரிச்சலை உண்டாக்கியது…

சாதாரணமாய் மேலைநாடுகளில் பதினெட்டு வயது நிரம்பியவர்கள் அவர்களாகவே முன்வந்து மனநல மருத்துவரை அணுகுவதை ஒரு சட்டமாகவே வைத்திருக்கிறார்கள்..

அவர்களின் சம்மதத்தின் பேரிலேயே உறவினருக்கு தெரியப்படுத்துவதுதான் வழக்கம்.

ஆனால் இங்கு இதற்கு நேர் மாறாய் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அவனுடைய குடும்பத்தார் அழைத்து வருவதுதான் வழக்கம்..

இவளுக்கு பதினெட்டு வயது இருக்கும்.. தலைமுடி விரிந்து பல நிறங்களில் காட்சி அளித்தது.. பழுப்பு , மஞ்சள் , இளம் சிவப்பு , கருப்பு..!!

நடுத்தர உயரம்… அந்தக் கண்கள்..! இரண்டு வினாடிக்கு மேல் நேருக்கு நேர் பார்க்கக் கூசும் படி ஒரு ஸ்பார்க்… கொஞ்சம் பயமுறுத்தியது.

வெளியே தெறித்து விழுந்து விடுவது போன்று ….

ஹைப்பர் தைராய்டிசம்….?

தனியாகத்தான் வந்திருக்கிறாள்.தைரியமான பெண்தான்….

கருநீல நிற சட்டையின் இரண்டு பொத்தான்கள் அவிழ்ந்த நிலையில் இளமை எட்டிப் பார்த்தது… ஒரு கிழிந்த நைந்த ஜீன்ஸ்.. ஒழுங்காய் தீற்றப்படாத கருநீல உதட்டுச்சாயம்..கருநீல நகப்பூச்சு…!

கிரிதர் அவளை அலட்சியப்படுத்துவதுபோல் மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினார்…

“சவிதா..! வாட்ஸ் ஹாப்பனிங் ? இவள் எப்படி வந்தாள்…?”

“டாக்டர்.. இவள்..இவள நான் பாக்கவேயில்ல… எப்படி வந்தாள்….?”

“திஸ் இஸ் மை ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்.!! அடுத்தமுறை இது ரிப்பீட் ஆனால் நீ இங்க இருக்க மாட்ட…யூ கேன் கோ நௌ….”

“டாக்டர்… நீங்க ரொம்ப ஸ்வீட்…!ஆமா.. உங்களுக்கு தாராவ எவ்வளவு நாளா தெரியும்…?”

இந்தப் பெண் டாக்டர் நினைத்ததைவிட கில்லாடியாய் இருப்பாள் என்று தோன்றியது..

ம்ம்ம்..இவளை எப்படி வழிக்குக் கொண்டுவரவேண்டுமென்று கிரிதருக்கு சொல்லித்தர வேண்டுமா….?

“சுமார் ஒரு மாசமா….!”

“என்ன? ஒன் மன்த்…? தாரா. நீ ஒரு சீட்…!ஃப்ராட் !!

“டாக்டர்.. என் சிஸ்டர் ஒரு சைக்கோ…மென்ட்டல்….என்ன ரொம்ப டார்ச்சர் பண்ணுவா…என்னபத்தி என்ன சொன்னா…? நான் பயித்தியம்னு சொன்னாளா…?”

ஓங்கி மேசையின் மேல் குத்தினாள்…

இவளுக்கு நிச்சயம் உதவி தேவை….

“யுவர் ஸ்வீட் நேம் ப்ளீஸ்….”

“மீரா…. ஐயம் மீரா…! தி மேட் கர்ல் மீரா….மென்ட்டல் மீரா…..“

குலுங்கிக் குலுங்கி அழுதது இயல்பானதாய் இருக்கவில்லை…!!

****

“கமான் மீரா…. என்ன உனக்கு வேணும்? உன் கூட யாரும் வரலியா..?”

“ஒய்…? ஒய் ஷுட் ஐ நீட் எனி ஒன்…?

நான் மேஜர்…என்னோட பிரச்சனைய நானே தீர்த்துக்க முடியும்..

அஃப்கோர்ஸ்…உங்க உதவி கட்டாயம் தேவை….!!”

“நான் சொல்றத கேப்பியா…?”

“நிச்சயமா டாக்டர்…”

“முதல்ல போய் ரிசப்ஷன்ல உன்னோட பேரு , ஃபோன் நம்பர் , அட்ரஸ் , என்ன பாக்க வந்த காரணம் ‘ இதெல்லாம் எழுதி வச்சிட்டு வா….”

“ஓக்கே..!! “

கன்றுக்குட்டியைப் போல எழுந்து போய் ஐந்தே நிமிடங்களில் திரும்பி வந்தாள்…

“டாக்டர்…எங்க வீடே ஒரு மென்டல் அசைலம்…. எல்லோரும் சேர்ந்து என்ன பயித்தமாக்கிட்டாங்க… அதுவும் தாராவும் எங்கப்பாவும்..!!

என்னால எதிலையும் கவனம் செலுத்த முடியல…தூங்கி ஒரு வாரம் ஆச்சு…தீடீர்னு மயக்கம் போட்டு விழுந்திடுவேனோன்னு பயமா இருக்கு… கண்ணெல்லாம் இருட்டிட்டு வருது….”

“நீ காலேஜ் போறியா…?”

“ஆமா.பி.ஏ… லிட்டரேட்சர்….

டிராமல எல்லாம் நடிப்பேன்… கல்சுரல் செக்ரட்டரி…ஆனா இப்போ காலேஜ் போயே ஒரு மாசமாச்சு….பயமா இருக்கு…! மருந்து வேணும் டாக்டர்…. தூக்க மாத்திரை…..

இல்லைன்னா நானும் தாராமாதிரி தற்கொலை பண்ணிப்பேன்…”

“மீரா….நீ படபடப்பா இருக்க…பயப்பட ஒண்ணுமேயில்ல…பானிக் அட்டாக்னு சொல்வோம்…இப்போதைக்கு தூக்க மாத்திரை எல்லாம் வேண்டாம்…படபடப்பு குறஞ்சு மனசு லேசாக ஆன்ட்டி ஆங்சைட்டி மாத்திரை எழுதித் தரேன். ஆனா கவனமா இருக்கணும். ராத்திரி படுக்கப் போறதுக்கு ஒரு மணி நேரம் முன்னால ஒரு மாத்திரதான் சாப்பிடணும். சரியா சாப்பிடுவியா..‌.?”

ஆரம்பத்துல தலை லேசான மாதிரி இருக்கும்.. இரண்டு நாள்ல சரியாய்டும்..

“என்ன ? ப்ராமிஸ் பண்ணுவியா…?”

“ட்ரை பண்றேன் டாக்டர்…”

“அடுத்த வாரம் வந்து பாரு.. போகும் போது அப்பாயின்ட்மென்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டு போ…”

“தாங்யூ டாக்டர்..ஆனா இனிமே தாராவ உள்ள விடாதீங்க…”

எதிர்பார்க்காமல் சட்டென்று ஒரு ஃப்ளையிங் கிஸ் கொடுத்துவிட்டு வெளியேறினாள்….

அடுத்த வாரம் அவள் வருகைக்காக காத்திருக்க வைத்து விட்டாளே….!

வெரி இன்ட்ரஸ்ட்டிங் கேஸ்….

***

டாக்டர் கிரிதர் ஒரு வினாடி கூட நேரத்தை வீணாக்க விரும்புவதில்லை… முடிவதில்லை..அவரிடம் வருபவர்கள் முதலில் நீலாவைப் பார்க்க வேண்டும்…அவள் மனநல ஆலோசகர்.. டாக்டரின் அஸிஸ்டன்ட்…நோயாளிகளிடம் முக்கிய தகவல்களை கறந்து டாக்டரிடம் சமர்ப்பித்து விடுவாள். பாதி வேலை முடிந்தமாதிரிதான்…

அன்றைக்கு ஒரு புதன் கிழமை..

கிரிதர் அடுத்து வரவேண்டிய நோயாளியின் ஃபைலை ஒரு நோட்டம் விட்டார்..

‘ஜெய்…. வயது இருபது….தர்ட் பார்ட்டி…’

வேறு ஒருவருக்காக பேச வந்திருக்கிறான்..

அழைப்பு மணியை அழுத்தியவுடன் உள்ளே நுழைந்தது ‘ ஜெய் ‘ அல்ல…மீரா..!!

ஒட்ட வெட்டிய முடி , நோ மேக்கப் , காலர் வைத்த இளநீல சட்டை , முக்கால் பேன்ட் ( கேப்ரி )…… கண்ணாடி…

“ஹலோ… ஐயம் ஜெய்….”

மரியாதையாக நின்று டாக்டரின் கையைக்குலுக்கினான் ( ள்)..

“யெஸ் மிஸ் ஜெய்…. அப்புறம்?”

“கால் மீ மிஸ்டர்.ஜெய்….!

“உங்களுக்கு மீராவத் தெரியும் இல்லையா….?”

“ஆமா….”

“நான் அவளோட பாய் ஃப்ரண்ட்..அவ என்னப்பத்தி ஒண்ணுமே சொல்லலியா…?”

“இல்ல…உன் பெயரக்கூட கேட்டதில்ல…”

“அவ எப்பவுமே இப்படித்தான்.. நான் அவள் இன்னமும் ஏன் காதலிக்கறேன்னு தெரியல…அவளுக்கு பொறாமை அதிகம்.. அதுவும் அவளோட சிஸ்டர் தாரா மேல..!

தாராவோட நான் பேசினாலே பிடிக்காது… எனக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்குன்னு நெனைக்கிறா!

அவ கெட்ட வார்த்தையால திட்டுவா..யூ நோ…இவ டார்ச்சர் தாங்காம போனவாரம் தாரா தற்கொலை முயற்சி செய்யப்பாத்தா…! நல்லவேள…. அவங்க அப்பா காப்பாத்திட்டாரு…

“ஜெய்…வாட் டூ யூ ரியலி வான்ட்..? நான் உனக்கு எப்படி உதவி செய்யணும்னு நினைக்கிற…?”

“மீரா ஒரு சைக்கோ… ஆனா மத்த எல்லாரையும் சைக்கோன்னு சொல்லுவா…ஆனாலும் ரொம்ப நல்ல பொண்ணு….எல்லாத்துக்கும் காரணம் அவுங்க அப்பா….!!அவளுக்கு நீங்க ட்ரீட்மெண்ட் குடுக்கணும்..உடனே…”

“ஜெய்.. உனக்கு அவ மேல உண்மையான காதல் இருந்தா லேட் பண்ணமா கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணுவியா….?”

“ஒய் நாட்? நிச்சயமா…! தாங்யூ சோமச்….”

பவ்யமாய் எழுந்து நின்று மறுபடியும் டாக்டரின் கையைக் குலுக்கி விடை பெற்றாள் மீரா..!இல்லை… ஜெய்..!

எப்படி ஜெய் மீராவைக் கூட்டிக்கொண்டு வரப்போகிறான்…?

சட்டென்று மனதில் எழுந்த சந்தேகத்தை துடைத்துப் போட்டுவிட்டு, க்ளீன் ஸ்லேட்டாய் அடுத்த நோயாளியை சந்திக்க அவரது மூளை தன்னைத் தயார் செய்த வண்ணம் அழைப்பு மணியை அழுத்தச் சொல்லிக் கைக்கு கட்டளையிட்டது.

***

சனி , ஞாயிறுகளில் தவறாமல் காஸ்மோ கிளப்பில் டென்னிஸ் ஆடிவிட்டு கல்யாணுடன் இரண்டு மணிநேரம் அரட்டை அடித்துவிட்டு , ( கூடவே இரண்டு கிங் ஃபிஷர் அல்லது ஹெனிக்கன் ) கொஞ்சம் கொறித்துவிட்டு சாப்பிட வீட்டுக்கு வந்து விடுவது டாக்டர் பத்து வருடங்களாக கடைபிடித்து வரும் வழக்கம்…

கல்யாண் ஒருவன்தான் அவருக்கு நண்பன் என்று சொல்லிக் கொள்ள…ஆனால் இன்றைக்கு புதன் கிழமை..டாக்டருக்கு ஒரு கூடுதல் ட்ரிங்க் தேவைப்பட்டது.. அதுவும் வோட்கா…….!!

“என்ன கிரி…? அதிசயமா புதன்கிழமையில கூப்பிட மாட்டியே.?ஏதாவது ஸ்பெஷலா ?இல்ல ஜஸ்ட் லைக் தேட் கூப்பிட்டியா….?”

“ஆமா..இன்னைக்கு உன்னோட பேசணும்னு தோணிச்சு…”

மருத்துவர்கள் , அதிலும் மனநல மருத்துவர்கள் பெரும்பாலும் தமது நோயாளிகளைப்பற்றி பொது இடங்களில் பேசுவதை தவிர்த்து விடுவார்கள்.. அதுவும் இது போன்ற கிளப்பில் இன்னும் கவனமாக இருப்பார்கள்.

மிகப்பிரபலமான புள்ளிகள் பலர் தமது வீட்டிற்கே டாக்டரை வரவழைத்து சிகிச்சை எடுத்துக் கொள்வதும் உண்டு…எல்லாமே பப்ளிசிட்டியை தவிர்ப்பதற்காக..!

கிரிதரைப்பொறுத்தவரை கல்யாண் அவருக்கு மிகவும் நம்பத்தகுந்த நண்பன்.பத்து பெக் உள்ளே போனாலும் அவன் எந்த ரகசியத்தையும் கக்க மாட்டான்..

சில சுவாரசியமான கேஸ் பற்றி எப்போதாவது அவனுடன் பகிர்ந்து கொள்வதுண்டு…

மீராவைப்பற்றி ஏதோ அவனிடம் உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றிவிட்டது….

“நீ என்ன சொல்ல வர? மூணு பேரும் ஒருத்தரேதானா ?”

“கல்யாண்.. இதைக் கண்டுபிடிக்க மனநல மருத்துவரோட அவசியமே இல்ல.நீயே பாத்ததும் உடனே கண்டுபிடிச்சிடலாம்.என் பிரச்சனை அது இல்ல….!!

“அவளுக்கு என்ன மனோவியாதின்னு கண்டு பிடிக்கிறதில குழப்பமா…? நீதான் இந்தியாவிலேயே லீடிங் சைக்கியாட்ரிஸ்ட் ஆச்சே….!! “

“அதுவும் இல்ல…”

“என்னன்னு கணாடுபிடிச்சிட்டியா…?
எனக்கு மெடிக்கல் அறிவு ஜீரோ… இதயம் இடது பக்கமாக , வலது பக்கமாய் …அதுவே தெரியாது…
இதில மனோவியாதி பத்தி சுத்தமா நாலெட்ஜேகிடையாது…”

“நீ மட்டுமில்ல கல்யாண்.நிறைய பேருக்கு இதைப்பத்தி தெரிஞ்சுக்கணும்ங்கிற ஆர்வம் இல்லை..
பொதுவாக கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்கிட்டாலே ‘ மென்ட்டல் ‘ ன்னு முத்திரை குத்திடுவாங்க…

நீதான் நிறையவே புத்தகம் படிப்பியே..

“‘சிபில்..‘ கேள்விப்பட்டிருக்கியா…? அவளைப் பத்தி சினிமா கூட வந்திருக்கு…”

“யெஸ்..அமெரிக்காவுல ரொம்ப பாப்புலரா ஓடின சினிமா.. புத்தகமும் படிச்சிருக்கேன்…ஒரு பொண்ணுக்குள்ள பத்தோ, பதினஞ்சோ பேர் உக்காந்துகிட்டு, அப்பப்போ எட்டிப்பாப்பாங்க…அப்படித்தானே…?”

“யெஸ்.. ஒரு விதத்தில யூ ஆர் ரைட்..”

“அதுக்கு மல்ட்டிபிள் பெரசனாலிட்டி டிஸ்ஆர்டர் (Multiple Personality Disorder) ன்னு சொல்வோம்…”

“அதான் அவளோட வியாதிய டையக்னோஸ் பண்ணிட்டியே…ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க வேண்டியதுதானே…!”

“அங்கதான் ஒரு பிரச்சனை. …”

அதற்குள் கல்யாணுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு..ரோட்டரி க்ளப்பிலிருந்து..!!

“யெஸ்… கல்யாண் ஹியர்..இதோ இப்பவே கிளம்பிட்டேன்..”

“சாரி கிரி..அவசரமா ஒரு மீட்டிங்.. சனிக்கிழமை பாப்போம்..ஆல் தி பெஸ்ட் “

கல்யாண் எப்போதுமே பரபரப்பான ஆசாமி.ரோட்டரி செக்ரட்டரி.. ஒரு இடத்தில் நிற்க மாட்டான்….

எனிவே…கிரிக்கு மனசு கொஞ்சம் லேசானது….

பார்க்கலாம்… இன்னும் எத்தனைபேர் மீராவுக்குள் ஒளிந்திருக்கிறார்களோ ?

***

அடுத்த இரண்டு வாரங்களுக்கு டாக்டர் கிரிதர் மிகவும் பிஸியாக இருந்தார்.. இரண்டு மூன்று சீரியஸ் கேஸ்..ஆனாலும் ஒரு மூலையில் மீரா எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தாள்..கடைசி பேஷன்ட்..

ஃபைல் ‘ தாரா ‘ என்றது…கேஸ் ஸ்டடி ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாய் இருந்தது..

“பரதநாட்டிய கலைஞர்… குழப்பமான மனநிலை… தூக்கமின்மை…பயம்…….etc..etc…’

மணியை அழுத்தினார்…

“மே ஐ கமின் டாக்டர் ?”

“யெஸ்.. அஃப்கோர்ஸ்….!! உள்ள வாங்க தாரா….”

“வணக்கம் டாக்டர்..!! “

இரண்டு கையையும் கூப்பி வணக்கம் சொன்னவிதமே அவள் தேர்ந்த பரதநாட்டிய கலைஞர் என்பதை பறைசாற்றியது….!

நின்று கொண்டேருந்தாள்..

இளமஞ்சள் நிறத்தில் நீல பூக்கள் போட்ட க்ரேப் புடவை.. மஞ்சள் நிற கையில்லாத ரவிக்கை… நெற்றியில் சிவப்பு பொட்டு…தலைமுடியை அழுந்த வாரி பின்னால் முடிந்திருந்தாள். உதடுகளில் நேர்ததியாக தீட்டப்பட்ட இளஞ்சிவப்பு நிற சாயம்….!

இங்கேயே ஒரு நடனம் ஆடத் தயாரானவள் போல …

“டாக்டர் என் பேரு தாரா…அப்பா அசோக்..அம்மா ரதி..எனக்கு மீரான்னு ஒரு ட்வின் சிஸ்டர்…அவளைப் பத்தி கொஞ்சம் பேசணும்.. நீலா மேடத்தையும் பாத்து எல்லாமே சொல்லிட்டேன். கொஞ்சமல்ல…நிறையவே பேசினாள்.. டாக்டருக்கு தெரிந்த தகவல்கள் தான்.. ஆனால் கோர்வையாய், நேர்த்தியாய்… புரியும்படி..!

“தாரா..உன்னோட சிஸ்டர் மேல உனக்கு இருக்கும் அக்கற புரியுது..அவளுக்கு நிச்சயம் ட்ரீட்மென்ட் தேவை…ஆனா. அதுக்கு முன்னால இங்க அட்மிட் பண்ணி சில பிரிலிமினரி டெஸ்ட் எல்லாம் எடுக்கணும்…ஒய் டோன்ட் யூ அண்ட் ஜெய் ப்ரிங் ஹர் ஹியர்…அது அத்தன சுலபமில்லன்னு தெரியும்…ஆனா டெஸ்ட் பண்ணாம நான் சிகிக்சை அளிக்க முடியாது…!“

“எனக்கும் புரியுது டாக்டர்…அவள எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்…! ரொம்பவே இளகின மனசு..!

எல்லாத்துக்கும் பயப்படுவா…. எல்லார் மேலயும் சந்தேகம்…

அடுத்த புதன் கிழமை கட்டாயம் கூட்டிட்டு வரப்பாக்கிறேன் டாக்டர்..

மறுபடியும் எழுந்து நின்று கைகூப்பி விடை பெற்றாள் மீரா..!

முடிச்சு லேசாக அவிழத் தொடங்கியது போல ஒரு உணர்வு…

இன்றைக்கு கல்யாணிடம் பேச நிறைய இருக்கிறது…!

***

கல்யாண் அன்றைக்கு மிகவும் உற்சாகமாய் இருந்தான்.கிரியும்தான்..!!

“உன் மீரா எப்படி இருக்கா…?”

“அது பத்திதான் முக்கியமான பேசணும்..முடிச்சோட முனைய கண்டுபிடிச்சிட்டேன்னு நினைக்கிறேன்…”

“இரு அதுக்கு முன்னாடி உனக்கொரு ஸர்ப்ரைஸ்…இந்தா..பிடி…படிச்சு பாரு..!”

ஒரு அழைப்பிதழ்..

‘சென்னை கலைக்கல்லூரியிலிருந்து..இருபதாம் ஆண்டு கலைவிழா..தலைமை விருந்தினர் ரோட்டரி கிளப் செக்ரட்டரி திரு.கல்யாண் அவர்கள்….சிறப்பு விருந்தினர் டாக்டர் கிரிதர்….’

“ஏய்.. கல்யாண் .? என்ன இது? என் பேர என்னக் கேக்காம எப்படி போடலாம்..?”

“பொறு..பொறு..!இது டிராஃப்ட் தான்..கோபப்படாத… கல்சுரல் பிரசிடெண்ட் உன்ன முறையா வந்து கூப்பிடுவாங்க…”

“கல்யாண்..உனக்கு தெரியும்..எனக்கு இந்த மாதிரி விழாவெல்லாம் அவ்வளவா பிடிக்காது.. அதுவும் சிறப்பு விருந்தினரா நோ வே……”

“பளீஸ்..நீ இந்த ஒருதடவை மட்டும் என் விருப்பத்துக்கு சரின்னு சொல்லு..உனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கு…! சரி நீ ஏதோ சொல்ல வந்தியே…”

“நோ…நத்திங்.. நீதான் என் மூட அவுட்டாக்கிட்டியே…!”

“சைக்கியாட்ரிஸ்ட் மூடவுட் ஆகலாமா…?”

“ஒரு ‘ஷீவாஸ் ரீகல்‘ ஆர்டர் பண்றேன்..மூடுக்கு வந்துடலாம்…”

ஆனால் கிரி கடைசிவரை மனதில் உள்ளதை சொல்ல மறுத்து விட்டான்…வேறுவழியில்லாமல் கல்யாணுக்காக விழாவுக்கு போக சம்மதித்தான்.

***

“இப்போது நாம் அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கும் நமது கல்லூரியின் நவரச நடிகை ‘ நடிகையர் திலகம் , மிஸ் மீராவின் மோனோ ஆக்டிங்..

‘சிபில்…தி வுமன் வித் மெனி வாய்சஸ்..’

கிரிதர் கண்களை இமைக்கக் கூட மறந்தவனாய், நிமிடத்துக்கு நிமிடம் குரலையும் , முகபாவங்களையும் மாற்றி மாற்றி , பத்துக்கும் மேற்பட்ட ஆளுமையை அநாயசமாய் கண்முன் கொண்டு வந்த நிறுத்திய மீராவின் நடிப்பில் தன்னையே மறந்தான்…

***

“இந்தவருட கலைவிழா இதுவரையில் இல்லாத அளவில் மிகவும் வெற்றிகரமாய் நடந்து முடிந்தததற்கு காரணமாயிருந்த அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எமது கல்லூரியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

இந்த வருட ரோலிங் ஷீல்டை தனது மிகச் சிறந்த நடிப்பினால் நமது கல்லூரிக்குப் பெற்றுதந்த நமது கல்லூரி மாணவி மீராவுக்கு உளமார்ந்த நன்றி…!!

இந்தப்பரிசை சிறப்பு விருந்தினர் டாக்டர் கிரிதர் அவர்கள் கையினால் பெற்றுக் கொள்ள மீராவை அழைக்கிறேன்…

கரவொலி அடங்க பத்து நிமிடத்துக்கு மேல் ஆனது.
ஸ்ட்டாண்டிங் ஒவேஷன்..!

***

“மீரா..கங்ராஜுலேஷன்ஸ்…நீ நல்லா நடிப்பன்னு தெரியும். ..ஆனா இவ்வளவு நல்லா நடிப்பன்னு நெனச்சு கூட பாத்ததில்ல. “

“டாக்டர்..இது எல்லாமே உங்க உதவியாலத்தான் .உங்களோட பொன்னான நேரத்த வீணாக்கிட்டேன். அதுக்கு ஐயம் ரியலி சாரி….”

“கிரிதர்..ஆரம்ப முதலே நீ மீராவ முழுசா நம்பலன்னு எனக்கு புரிஞ்சு போச்சு…ஏன் அவ நடிப்பில் ஏதாவது கோட்ட விட்டாளா.?”

“மீரா வாஸ் ட்ரூலி எ பார்ன் ஆக்டர் கல்யாண்…ஆனா ஹோம்வொர்க் கொஞ்சம் சரியா பண்ணல..

பன்முக ஆளுமை அல்லது துண்டிக்கப்பட்ட (Disassociated) ஆளுமை குணம் இருக்கிற நோயாளிகள் பொதுவாக அன்றைக்கு நடந்த சம்பவங்கள மட்டும்தான் நினைவில வச்சிருப்பாங்க..மூணுநாலு நாள் முன்னால் நடந்தத , ஒண்ணுக்கொண்ணு தொடர்பு படுத்தி பேச அவங்களால முடியாது..

மீரா, தாரா , ஜெய் மூணுபேருமே சமீபத்தில பேசிக்கிட்டமாதிரி கோர்வையாக பேசினது எனக்கு சரியாபடல..எதோ சம்திங் ஃபிஷ்ஷின்னு தோணிச்சு…

மீரா! பட் ஐ அப்ரிஷியேட் யுவர் கட்ஸ்.

ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டயே ரிகல்சல் பண்ண எவ்வளவு தைரியம்….?”

நாம எல்லோரும் அங்கிள் கல்யாணுக்குத்தான் தாங்ஸ் சொல்லணும்..அவர்தான் இந்த ஐடியா குடுத்ததே…!

டாக்டர் எனக்கு உங்க கிட்ட ஒரு கேள்வி…சிபிலுக்கு உண்மையிலேயே பதினாறு ஆளுமை இருந்ததா…?”

“சிபிலோட நிஜப் பேரு ஷெர்லி மேசன்.அவள் ஒரு ஓவியக் கலைஞர்..

அவள் சொன்னதெல்லாம் பொய்யான தகவல்கள்ன்னு சமீபத்தில ‘ டெபி நாதன் ‘ ‘ சிபில் எக்ஸ்போஸ்ட் ‘ னு ஒரு நாவல் எழுதியிருக்காங்க.

பணத்துக்கும் , புகழுக்கும் ஆசப்பட்டு அவளும் அவளோட மனநல மருத்துவர் வில்பரும் சேர்ந்து செய்த போட்ட நாடகம்னு நிரூபிச்சிருக்காங்க..!

ஆனா இரண்டு மூன்று ஆளுமை குணங்கள் கொண்டவங்க இருக்காங்க..பதினாறு கொஞ்சம் ஓவர்…

சரி அது போகட்டும்…..

“ஏன் கல்யாண்…! என்னையே ஏமாத்திட்டியே…எல்லாருமா சேந்து என்ன முட்டாளாக்கிட்டீங்க…!”

“மீரா..நீ ஒருநாள் வீட்டுக்கு அவசியம் வரணும்..தனியா..! தாரா, ஜெய்ய கூட்டிட்டு வந்திடாத..அஸ் ஒன்லி மீரா..!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *