நாட்டுப் பற்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 31, 2013
பார்வையிட்டோர்: 13,774 
 

வானத்தில் எங்கும் ஒரே கரிய இருள் சூழ்ந்திருந்தது.  வையத்தைக் குளிர வைக்க வானம் தன் வண்ணத்தை மாற்றிக் கரிய போர்வையில் ஒளிந்து காட்சி தந்தது.

மருத்துவமனையின் ஒரு மூலையில் உள்ள கட்டிலில் அசைவற்று படுத்திருந்தான், சுந்தர்.  நீல வானிலே தோன்றும் நித்திலக் குவியலாம் விண்மீன் போல, சுந்தரின் மாந்தளிர் மேனியில் காயத்தின் கட்டுகள் காட்சியளித்தன அக்கட்டுகளைக் கண்டு சில சமயம் அவன் முகம் சுளித்தான், சில முறை முறுவலித்தான்.

வானம் வையத்தை மகிழ்விக்க நீல நிற வண்ணத்தை மாற்றிக் கருநிற வண்ணத்தைக் காட்டியது காயத்தின் கட்டுகளைக் கண்ணுற்ற சுந்தர் தன் கடந்த கால வாழ்வையெண்ணிப் பார்த்தான்.  அதை நினைக்க நினைக்க அவனுக்குப் புத்தின்பம் பிறந்தது!  புதுப் பொலிவு மலர்ந்தது!
“பெற்ற தாய்க்கும் பிறந்த நாட்டிற்கும் உற்ற பணி செய்து உரமேறிய என்னுடல் பெற்ற வடுக்கள் மற்ற புகழினும் உயர்ந்ததுதான்,’- புத்தின்பம் பிறந்தவுடன் சுந்தரின் மனம் இவ்வாறு எண்ணியது.
மருத்துவச்சி (சூரசளந) வந்து சன்னலைத் திறந்துவைத்தாள்.  திறந்த சன்னலின் வழியே மென்காற்று வந்து அவன் உடலை மெல்ல வருடியது.  கருநிற மேகத்திறளிலிருந்து, கவின் மிகும் மலரைச் சொறிந்தாற் போல துhறல் துhறியது.  அத்துhறலின் சாறல் சன்னலின் வழியே உள் நுழைந்தது.

சாரலின் மென் துhறலிலே தன்னை மறந்த சுந்தர் மெல்ல கண்ணை மூடி கடந்த கால வாழ்க்கைக் காட்டாற்றில் தன் எண்ணத்தை ஓட விட்டான்.

ஃ                                 ஃ                                 ஃ

“வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம் – அடி
மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித்தல மனைத்தும் கோயில் செய்வோம் – எங்கள்
பாரததேசமென்று தோள் கொட்டுவோம்.”

எங்கிருந்தோ “நாட்டுப்பற்றை” நன்குணர்த்தக் கூடிய இப்பாடல் காற்றில் மிதந்து வந்தது.  இப்பாடலைக் கேட்ட சுந்தர் அசைவற்று அவ்விடத்திலேயே நின்றான்.  அவன் உள்ளம் எத்தனையோ இன்பக் கனவுகளில் மிதந்தது.

‘இமயமலையில் ஏறி உலவி வருவது போலவும் உலகிலுள்ள மற்ற நாடுகளுடன் நம் நாடு போட்டியிட்டு பல துறைகளிலும் பார்புகழ வெற்றி பெற்று, “பன் மீன் ‘நடுவட் பான்மதி போல’த் தோன்றுவதாகவும்” கனவு கண்டான்.

“கனவை நினைவாக்க வேண்டுமானால், . . .  கடமையைச் சரிவர ஆற்ற வேண்டும், கடமையை எவனொருவன் தன் உடைமையாகக் கொண்டு பணியாற்றுகின்றானோ, அவன் மக்கள் மத்தியிலே நிலவும் மடமையை ஒழித்து மக்கள் தலைவனாகிறான் -‘ பாடலின் உணர்விலே தன்னை மறந்த சுந்தர் “பாட்டுக்கொரு புலவன்” பாரதியின் பன்னாள் கனவை நினைவாக்க எண்ணினான்.

கல்லுhரியில் படித்து வந்த சுந்தர் தன்கடமையின் முதல் படியை ஆற்றக் கல்லுhரி தேசிய மாணவர் படையில்  சேர்ந்து, கல்லுhரி மாணவர் படைப் பயிற்சியைக் கவனமுடன் கற்று, பின் அம்மாணவர் படைக்குத் தலைவனானான்.  “மாணவர் படையின் தலைவர் ஆற்றிய சொற்பொழிவைக் கவனமுடன் கேட்டுக் கொண்டு காவல்காக்கும் வீரன் போல நிமிர்ந்த நேரான நோக்கோடு கம்பீரமாக நின்றான் சுந்தர்.
“உங்களுக்கு உண்மையிலேயே ‘நாட்டுப்பற்று’ உண்டாக வேண்டுமானால் அல்லது வளர வேண்டுமானால், நீங்கள் முதலில் உங்கள் வீட்டின் மேல் பற்று வையுங்கள்!  பெற்ற தாயின் மீதும் பிறந்த வீட்டின் மீதும், வளர்ந்த ஊரின் மீதும் நீங்கள் ஆழ்ந்த பற்று வைப்பீர்களானால் . . .  வாழ்கின்ற நாட்டின் மீதும் அழிக்க முடியாத பற்று உங்களுக்கு ஏற்படும், நாளைய உலகை ஆளப் போகின்ற நீங்கள் “நாட்டுப்பற்று”ள்ளவர்களாக வேண்டுமானால் இந்த மாணவர் படைப் பயிற்சியை மகிழ்வோடு ஏற்று பயிற்சி பெற வேண்டும்.” –  தலைவரின் இந்தச் சொற்பொழிவு மாணவர் படைத் ‘தலைவன்’ சுந்தரின் மனதில் ஆழமாகப் பதிந்தது.

எப்பொழுதும் அதையே எண்ணினான்.  அவன் பார்க்குமிடமெல்லாம் ஒரு பற்று வைத்தான்! நோக்குமிடந்தோறும் ‘நாட்டை நல்ல முறையில் உருவாக்க வேண்டுமென்ற’ ஆவல் கொண்டான்!!

“எரிகின்ற நெருப்பில் எண்ணெய் பெய்தது போல,’ அன்னை இந்தியாவை வன்முறைச் செயல்களால் கவர நினைப்பவர்கள், இங்கிருந்து கடுகளவு நிலத்தைக் கூட கைப்பற்ற முடியாது!  பாரதநாட்டு மக்களின் ஒற்றுமை உணர்வு அந்த வஞ்சகர்களின் நினைவைப் பகல் கனவாக்கி விடும்!! நண்பன் போல உறவாடி நஞ்சைக் கக்கும் நய வஞ்சகர்களை அழிக்க,  “நாட்டுப் பற்றுள்ள” நல்லவர்கள் அனைவரும் தங்கள் வல்லமையைக் காட்ட, பெற்ற தாய் திருநாட்டிற்குப் பெருமை பணியாற்ற இவ்வரிய நேரத்தில் கடமையாற்றும் வீரர்க்கு தோள் கொடுக்க இன்றே இராணுவத்தில் சேருவீர்!

“பாரத பூமி, பழம் பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்!”  என்ற தலைவர் நேருவின் குரல் அவனது வேட்கைத் தீயில் எண்ணெய் போல விழுந்து இதயத்தில் பற்றிக் கொண்டது.

பெற்ற தாய்த் திருநாட்டிற்குப் பெரும் பணியாற்ற முடிவு செய்தான் சுந்தர்.  தன் எண்ணத்தைப் பெற்றோர்களிடம் தெரிவித்த போது, அவனது அன்னை, “சுந்தர்! நாட்டைக் காக்க எத்தனையோ பேர் இருக்காங்க.  நீ போய்த்தான் அதைக் காக்கப்போறியா?  மற்றவர்களைப் போல நம் உற்றார் உறவினருடன் கூடி, மனைவி மக்களுடன் வாழ்வதை விட்டுட்டு, சண்டை போட்டு மடியப் போறேன்னு சொல்றியே” என்று கண்ணில் நீர் மல்கக் கேட்டாள்.

“அம்மா, உன்னைப் போலவே எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தால் இந்த நாடு எப்படியம்மா சுதந்திரமாக வாழ முடியும்? 250 ஆண்டுகள் அடிமையாய் வாழ்ந்த நாம் அண்ணல் காந்தியால் விடுதலைபெற்று, நம்முடைய குறை நிறைகளை நமக்குள்ளேயே நிறை செய்து உரிமையாய் வாழ்கின்ற இந்த நேரத்தில் அந்நியன் நம்மை மீண்டும் ஆட்சி செய்யும் காட்சியைக் கண்டு கல்லாய் ஊமை போல் நிற்பதா மாட்சியுடையது.”

‘எனக்கு அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது சுந்தர்.  பட்டாளத்தில் சேர்ந்த எவரும் பத்திரமாய் உயிர் திரும்பி வரலை . . . அத்தகைய கொடிய பட்டாளத்தில் உன்னைக் கொண்டு போய் பலி கொடுக்கவா, நான் உன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்றேன் . . . ?”-  கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தோடக் கலங்கிக் கேட்டது, தாயுள்ளம்.
“அம்மா பத்துமாதம் சுமந்து பெற்ற உனக்கு ஒரு துன்பம் நேரும்போது, அந்தத் துன்பத்தை நான் நீக்கவில்லையென்றால் நீ என்னைப் பற்றி என்னம்மா நினைப்பாய்?  அதைப்போல, பிறந்து, வளர்ந்து, ஆடி, ஒடி பாடி மகிழ்ந்த அன்னை பூமியை அந்நியன் ஒருவன் கவர்ந்து செல்ல வரும் போது நாம் நம் கடமையைச் செய்ய வேண்டாமா?  கலங்காதே அம்மா, கடமை முடிந்தவுடன் கடிதில் திரும்பி விடுகிறேன்” – உறுதி நிறைந்த குரலில் இன்றுள்ள நிலையை அன்னைக்கு விளக்கினான் சுந்தர்.

எப்படிக் கூறினாலும் தாயுள்ளம் மகனைப் பிரிந்திருக்க ஒருப்படவில்லை “இணை பிரிந்தால் உயிர் துறக்கும் அன்றில் போல” ‘மகனைப் பிரிந்தால் . . . ஒரு வேளை தன் உயிர் பிரிந்து விடுமோ’ என்று கூட எண்ணியது.  அந்தத் தாயுள்ளம்.  சுந்தரின் தந்தை தன் மனைவியைத் தேற்றி, “நாட்டுப்பற்று” மிகுந்த நல்லதொரு கடமை வீரரென உன்னைப் பற்றி பிறர் சொல்வதை என் காதால் கேட்க வேண்டும்.  மலையே அசைந்தாலும் மனம் கலங்காமல், கடமையே உன் உடமையென பணியாற்று எனக்கூறி சுந்தரை மகிழ்வோடு அனுப்பி வைத்தார்.

ஃ                                 ஃ                                 ஃ

நேபாள பகுதியில் இந்திய வீரர்களுக்கும் சீன வெறியர்களுக்கும் போர் நடந்து கொண்டிருந்தது.  இந்திய வீரர்கள் சுந்தரின் தலைமையில் தங்கள் திறமையைக் காட்டி சீன வெறியர்களை விரட்டி அடித்துக் கொண்டிருந்தனர்.  முதல் நாள் போரில் இந்திய வீரர்கள் முழு வெற்றியடைந்ததால், மறுநாளும் மகிழ்வோடு, மன நிறைவோடு, வஞ்சகர்களை அழிக்க அஞ்சாமல் போரிட்டனர்.

சுந்தரின் திறமையைக் கண்ட அதிகாரிகள் அவனைத் தலைமைப் பகுதிக்கு உயர்த்தினர்.  சுந்தர் இப்போது ஒரு பகுதி படைக்குத் தலைவன்.

தலைவன் சுந்தர், இந்திய – சீன எல்லையைக் குறிக்கும் வரைபடத்தை வைத்து, “சீன எல்லையிலுள்ள விமான நிலையங்கள், சீனர்களுக்குப் போர்க்கருவிகள் அளிக்குமிடங்கள், இன்னும் பலவற்றை எவ்விதம் அழிப்பதென்றும், இந்தியக் காவல் நிலையங்களை எவ்விதம் ஆக்கமுடனும் ஊக்கமுடனும் காப்பதென்றும்” என்று அதிகாரிகளுடன் கூடி உரையாடிய போது, ஓர் பெண் மறைவில் இருந்து அவர்கள் கூறுவதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள்.  அவர்கள் உரையாடல் முடிந்தவுடன் அவள் எழுந்தோட முயன்றபோது. . .  சுந்தர் அவளைக் கண்டுவிட்டான்!

அந்தப் பெண்ணைத் தொடர்ந்து ஓடி அவளைப் பிடித்து வந்து, “நீ யார்?”  என்று வினவினான் சுந்தர்.

வஞ்சகக் கலையில் பல வண்ணங்களைக் கற்ற அந்தச் சீனக் ‘கைக் கூலி’ தன் எண்ணத்தை மாற்றி, சுந்தரைத் தன் வலையில் வீழ வைக்க, “நான் ஒரு தமிழச்சி!” என்றாள் மிகவும் தைரியமாக!!
“தமிழச்சி!” . . . “நீ இங்கு வரக் காரணம்?”

“வறுமை என்னை வாட்டியது, வளம் நிறைந்த தமிழகம் வறண்டு தன் உள்ளத்தை மூடி என்னை மெல்ல மெல்ல சாவை நோக்கி விரட்டியதால் வாழ்வை முடித்துக்கொள்ள இங்கு வந்தேன்” – அவள் மிகவும் அலட்சியமாகப்  பதில் கூறினாள்.

“வாழ்வை முடித்துக்கொள்ள அங்கிடமில்லையா? பல நுhறு மைல்கள் கடந்து வந்து, இந்திய-சீன எல்லையிலே ஒற்றன் போல உளவறிந்து உன் உயிரைப் போக்கிக் கொள்ளவா இங்கு வந்தாய்?  உண்மைணைச் சொல் யார் நீ?”  சுந்தரின் குரல் அவளை அச்சுறுத்தியது.

அவள் அச்சமுடன் நடந்தவற்றையெல்லாம் சொன்னாள்.  அவளின் மூலம் சீனர்களின் உண்மை நிலையை அறிந்த சுந்தர் தன் திட்டத்தை மாற்றியமைத்து, அவளைக் காவலில் வைக்க ஆணையிட்டான்.
மீண்டும் போர் மூண்டது.  இந்திய வீரர்கள் திடீர் திடீரென சீனப் பகுதிகளுக்குச் சென்று சீனர்களைச் சின்னா பின்னப் படுத்தினர்.  இந்தியர்களின் திடீர் தாக்குதலைக் கண்ட சீன அதிகாரி ஒருவன் “இந்த திடீர் தாக்குதலுக்குக் காரணம் உளவறியச் சென்ற அவள்தான்” என்பதை உணர்ந்து அவளை அழித்துவிடப் புறப்பட்டான்.

காவலில் கைதியாயிருந்த “அந்தப் பெண்” மிகவும் மனம் கலங்கி “என்னால் என் ‘தாய்த் திருநாடு’ அழியப் போகிறது.  ‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பதை போல;  பெண்ணால் அழிந்த எண்ணற்ற நாடுகள் போல;  என்னாலே என் ‘தாய்த் திருநாடு’ தரை மட்டமாகப் போகிறது.  என், ‘நாட்டுப் பற்று’ நாசமாகி விட்டது!  நானே என் நாட்டின் அழிவுக்கு வழி தேடிக் கொடுத்துவிட்டேன்.  இனி நான் வாழக் கூடாது . . .  வாழக் கூடாது . . . “ என்ற எண்ணியவாறே அதிலிருந்து தப்பி, தலைதெறிக்கும் வேகத்தில் சீன எல்லை நோக்கி ஓடினாள்.

சுந்தர் முன்நின்று சிதறி ஓடும் இந்திய வீரர்களைத் தடுத்து நிறுத்திப் போரிட்டான்.  காவலில் இருந்த பெண் தப்பி ஓடுவதை சுந்தரும், அவளைக் கொன்றுவிட முடிவு செய்த சீன அதிகாரியும் கண்டு விட்டனர்.  இருவரும் ஒருவரை ஒருவர் அறியாவண்ணம் அவளை நோக்கி முன்னேறினர்.

சுந்தர் அவளை நோக்கி சுட்டான்.  அந்தக் குண்டு தப்பிவிட்டது.  துப்பாக்கியின் சப்தம் கேட்டு சீன அதிகாரி குண்டு வந்த திக்கை நோக்கிச் சுட்டான்.  அக்குண்டு சுந்தரின் மார்பில் பாய்ந்து விட்டது.  இதற்குள் அந்தப் பெண் அந்த சீன அதிகாரியை நெருங்கிவிட்டாள்.  அவளைக் கண்டவுடன் அவன் மீண்டும் சுட்டான், அக்குண்டு அவள் உயிரைக் குடித்தது.  அவன் வெற்றியுடன் புன்முறுவல் பூத்தபோது சுந்தர் மீண்டும் சுட்டான்.  சீன அதிகாரியும் சாகசக்காரியோடு கீழேசாய்ந்தான்.  அதற்கு மேல் சுந்தரால் நிற்க முடியவில்லை.  கீழே விழுந்து விட்டான்.

தலைவனைத் தேடிக் கண்டுபிடித்து மருத்துவ நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.  சுந்தர் மருத்துவ நிலையத்தில் மருத்துவ உதவி பெற்று வந்தான்.

ஃ                                 ஃ                                 ஃ

சாரலாய் வந்த துhறல் பெருமழையாய் மாறி, மழையின் துளிகள் சுந்தரின் முகத்தில் விழுந்தன. மருத்துவச்சி ஓடிவந்து சன்னல்களைச் சாத்தினாள்.  சுந்தர் விழித்தெழுந்து பார்த்தான்.  மழை பெய்வதையும், மருத்துவச்சி சன்னலை மூடுவதையும் கண்டான்.

இரண்டுநான் கழித்து, சுந்தருக்கு வலி அதிகமாகிவிட்டது.  சுந்தரின் மார்பில் பாய்ந்த குண்டு அவன் இதயத்தையே துளைத்து சென்று விட்டதால் மருத்துவர்கள் எவ்வளவுதான் முயன்றும் அவனைக் குணப்படுத்த முடியவில்லை.

சுந்தர் சோர்வுடன் செய்தித்தாளை நோக்கினான்.  அதில் . . . “இந்திய . . சீன எல்லைப் போரில் இந்தியாவுக்கு இணையற்ற வெற்றி கிடைத்துள்ளது.  வஞ்சகச் சீனரின் வாலாட்டம் “நாட்டுப்பற்று” மிகுந்த நல்ல தலைவன் சுந்தரால் ஒட்ட அறுக்கப்பட்டது!”

செய்தியைப் படித்த சுந்தர், “என் அன்னை வெற்றி அடைந்துவிட்டாள்.  என் நாட்டுப் பற்று செத்துவிடவில்லை.  நல்ல முறையில் . . அது . . வாழ். . . கி. . . ற. . .து” – என்று சொல்லி முடிப்பதற்குள் காலன் தன் கடமையைச் செய்துவிட்டான்.

கடமை வீரன் சுந்தருக்கு இறுதி வணக்கம் செலுத்துவது போல பயன் கருதா மழை தன் வணக்கத்தை ‘நாட்டுப் பற்று’ மிகுந்த நல்ல தலைவன் சுந்தருக்கு செலுத்திக் கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *