நாடு அதை நாடு

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 18, 2013
பார்வையிட்டோர்: 7,760 
 

அந்த அமொரிக்க இளைஞர்களை பார்த்தால் பயமாகத்தான் இருந்தது. ஏதாவது ஸ்கூலில் எட்டாவது அல்லது ஒன்பதாவது படிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும். இப்பொழுதே சித்ராவை விட உயரமாக, சூயிங்கம் மென்று கொண்டு, ரோலர் ப்ளேடில் அலட்டலாக வந்தார்கள். இங்கே பொதுவாகவே எல்லோரும் உருவத்தில் பொ¢யவர்களாக இருக்கிறார்கள்.

விளக்கில் பச்சை மனிதன் நடக்க சொன்னதும் சற்று அவர்களை விட்டு விலகியே நடந்தாள்.

கோடைக்காலமாதலால் இந்த சாயங்கால வேளையிலும் பிரகாசமான கலிஃபார்னியா சூரியன்.

செல்போனில் பேசியவாறே வண்டிகளில் விரைபவர்கள். ரோடோரத்தில் சிரிக்கும் ஊதாப்பூக்கள். பலூன் கட்டிக் கொண்டு விற்பனைக்கு நிற்கும் ஏராளாமான கார்கள். வாரிசையாக மெக்சிகன், இட்டாலியன் என்று வெவ்வேறு நாட்டு உணவகங்கள்.

சித்ரா மெல்ல வேடிக்கை பார்த்தவாறே நடந்தாள். எதிரே நாயுடன் வந்த தம்பதிகள் அவளைப் பார்த்து சிநேகமாக சிரித்து “குட் ஈவினிங்” என்றார்கள். பதிலுக்கு புன்னகைக்கையில், இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என்று நினைத்துக்கொண்டாள்.

அரவிந்த் உடனே “ஆமாம், உனக்கு உங்க ஊர் மாதிரி கண்ணோட கண் பாத்தாலும் ஓண்ணு முகத்தை அவசர அவசரமா திருப்பிக்கணும், இல்லேன்னா முறைக்கணும்” என்பான்.

இங்கே மட்டும் என்னவாம், சர்க்கரையாக சிரிப்பார்கள் அதோடு சா¢. யாரும் அதற்கு மேல் நிற்பதோ, பேசுவதோ கிடையாது. அவரவர் வேலையை பார்பதோடு சாரி.

இன்று காலை கூட இன்டெர்நெட் ரேடியோவில், சொர்க்கமே என்றாலும் பாட்டில், ‘ஒரு யந்திரத்த போல இங்க உள்ள வாழ்க்கை’, வா¢யை அவள் சிலாகிக்கையில் அவனுக்கு கோபம் வந்து விட்டது.

‘ஆமாம், இப்படியே நீங்களே பாராட்டிக்கிட்டு, பாட்டுல வரா மாதிரி, ஊர் பூரா வெத்தலைய துப்பி நாசமாப் போங்க’, என்று கத்தினான்.

திருமணத்திற்கு முன் பெண் பார்க்க வந்த போது அவன் பேச்சும், சிரிப்பும் எல்லோருக்கும் பிடித்த போதிலும், அவள் மறுபடி மறுபடி அவனிடம் கேட்டாள் “திரும்பி வந்துடுவீங்கள்ள”. அவனும் அப்போது ‘ஆமாமாம். என்னதான் இருந்தாலும் இதுதான் நம்ம நாடு’ என்று தான் சொன்னான்.

பிறகு ஒரு வருடத்தில் க்¡£ன் கார்டு, இன்னும் சிறந்த வேலை, சிறந்த சம்பளம், எல்லாம் வந்தபின், இப்பொழுது போனவாரம் மெதுவாக இங்கே ஒரு வீடு வாங்கலாமா, இன்கம்டாக்ஸ் பெனி·பிட் என்கிறான்.

அவனைப்போல அவளுக்கு திரும்பிப் போகும் ஆசை சிறுகச் சிறுக அழியவில்லை. அதிகம்தான் ஆகியிருக்கிறது.

இப்பொழுது கூட, உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கியால் 2 மாணவர்கள் சுட்டு, 15 மாணவர்கள் இறந்திருக்கிறார்கள்.

பள்ளிக்கூட பையன்கள் கொடூரமாக 15 பேரை துரத்திக் கொன்றிருக்கிறார்கள். என்ன நாடு! எதற்கெடுத்தாலும் துப்பாக்கி. ஒரே வன்முறை. சே! குழந்தைகள் வெளியே விளையாடுவதேயில்லை.

வீடுகளில் மனிதர்கள் இருக்கிறார்களா என்றே தொ¢யவில்லை. இப்படி இருக்கையில் தூசி இல்லாத ரோடுதான் பிரதானமாகத் தொரிகிறது.

எப்படித்தான் அரவிந்தால் ஒத்துக்கொள்ள முடிகிறதோ. இப்போழுதெல்லாம் அடிக்கடி இதைப்பற்றி சண்டை வருகிறது. அவள் ஏதாவது சொன்னால் இங்கே இருக்க அடி போடுகிறானோ என்று அவளும், அவள் எதாவது சொன்னால் எப்பப்பாரு இந்தியாவா என்று அவனும் மோதிக் கொள்கிறார்கள்.

போனவாரம், கொஞ்சம் கலி§·பார்னிய கோடைக் காலத்து வெப்பம் அதிகம் ஆனதும், அமொ¢க்கர்கள் போல, சேர், குடை சகிதம் கடற்கரைக்கு சென்று, அரை டிராயரும் கண்ணாடியுமாக கையில் எதோ ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு “ஹ! சொர்க்கம்” என்றான்.

உடனே அவள், “என்ன பீச், ஒரு வயசான மாமா சுண்டல் வித்துட்டு வராம” என்று சொல்லப் போக இருவரும் அடுத்த 2 மணிநேரம் பேசிக் கொள்ளவே இல்லை.

இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடுவான். அடுத்த திருப்பம் வரை நடந்து விட்டு திரும்பலாம். ரோடை கடக்க பட்ட்னை அழுத்துகையில் தான் அந்த வட இந்திய பெண்மணியை பார்த்தாள்.

தலையை சுற்றி போட்டிருந்த புடவை முக்காடும், நிறமும், பஞ்சாபியாக இருக்கலாம். 60 வயதிருக்கும். சேஃப்வேயில் சாமான் வாங்கிக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார் போலும். அவள் புன்னகைக்க, கொஞ்சம் உற்சாகமூட்டும் வகையில் அந்த அம்மாள் நின்று பேச ஆரம்பித்தார்.

” நீ மதராசா? உன்னை சில நாள் பாத்திருக்கேன். இன்னிக்கு தான் பேச முடிஞ்சது” என்று ஆரம்பித்து, அவளுக்கு ஹிந்தி புரியும் என்றதும், ஒரு சில நிமிடத்தில், வீடு எங்கே, எவ்வளவு வருஷமாச்சு வந்து, வீட்டில் எத்தனை பேர், திருமணமாகி விட்டதா, கணவன் எங்கே வேலை பார்க்கிறான் என்று ஏகப்பட்டது பேசி விட்டார்.

நாகா£கம் என்று அடுத்தவர்களைப் பற்றி ஒன்றுமே கேட்காதவர்கள் மத்தியில், இது புத்துணர்வூட்டியது.
Click Here Enlargeசித்ராவிற்கு கொஞ்சம் பைகளை தூக்கிக் கொண்டு வீடு வரை கூட போனால் என்ன என்று தோன்றியது. “வீடு வரைக்கும் வரேன்” என்று ஒரு துள்ளலுடன் கிளம்பினாள்.

“எனக்கு 2 பையன்கள். ஒருத்தன் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கான், ஒருத்தன் இங்கே, மருமகள்கள் நல்ல மாதிரி, அங்கிள் டெல்லியில் வேலை பார்த்தார், அங்கிளோட சகோதரர்கள்லாம் இங்கேதான் இருக்காங்க,

எங்க அபார்ட்மெண்டில் ஏசி இல்ல இந்த வெய்யிலுக்கு, சன்ஹோசே குருத்வாராக்கு போயிருக்கியா, உங்க கோயில் எங்கே இருக்கு’ என்றெல்லாம் பேசிக்கொண்டே வந்தார் அந்த ஆண்ட்டி. சித்ராவுக்கு சந்தோஷமாக இருந்தது.

எனக்கு தேவை மனிதர்கள். இந்தியாவில் இருக்கும் அடுத்தவர்களைப் பற்றிய அக்கறை உள்ள மனிதர்கள். அரவிந்திடம் சொல்ல வேண்டும். அவர்கள் வீட்டிற்கு உள்ளே சென்று டேபிளில் எல்லாவற்றையும் வைத்தாள்.

டீ குடிக்குமாறு, ஜிலேபி சாப்பிடுமாறு ஆண்ட்டி வற்புறுத்தினார். அந்த அங்கிள், ஜோராக தலைப்பாகை கட்டிக்கொண்டு, மீசையை நீவிக்கொண்டு, பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அவ்வளவாகப் பேசவில்லை.

கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

“நீங்கள் இந்தியாவுக்கு போய் விடுவீர்களா இல்லை இங்கேயே இருந்து விடுவீர்களா”, என்று கேட்டதற்கு அந்த ஆண்ட்டி,

“எங்க ரெண்டு பையனும் இங்கதான் இருக்காங்க. ரொம்ப நெருக்கமான உறவினர்களும் இங்கேதான் இருக்காங்க. எல்லாம் வசதியாத்தான் இருக்கு. எங்களுக்கு போகணும்னு ஆசை இல்லை”, என்று கூறவும்

சித்ராவுக்கு ஏமாற்றமாயிருந்தது.சற்றே தோன்றிவிட்ட ஏளனத்துடன்,

” நீங்க எப்படித்தான் இப்படி சொல்றீங்களோ. எனக்கு எப்படா நம்ம மனுஷங்க, அந்த சினேகம், அந்த அக்கறை, அந்த மண் எல்லாத்தையும் பாக்கப்போறோம்னு இருக்கு. நீங்க என்னடான்னா, பணக்கார வசதியான நாடுன்னதும்” என்று இழுக்கவும்,

அங்கிள் பட்டென பேப்பரை மூடிவிட்டு அவளைப் பார்த்தார்.

ஒரு வித அடி வயிற்றிலிருந்து வரும் ஆக்ரோஷத்துடன், கோபமாக ” என்ன கேட்ட? ஏன் போகமாட்டோம்னா? நான் டெல்லில ஒரு பேக்கா¢ வச்சிருந்தேன். மூணு பசங்க. ஆண்ட்டி ஒரு ஸ்கூல்ல டீச்சர்.

1984. நவெம்பர் ஒண்ணாம் தேதி என்ன ஆச்சு தொ¢யுமா உனக்கு. நீ வீட்டுல டி.வி பாத்துட்டு, இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதுக்காக வருத்தப்பட்டுட்டு இருந்திருப்ப. ஆனா நாங்க? அந்த கொலைக்கு சம்பந்தமே இல்லாத எங்க வீட்டுக்கு உள்ள பத்து பேர் புகுந்து எங்கள அடிச்சுட்டு சர்வ சாதாரணமா சாமானெல்லாம் எடுத்துட்டு போனாங்க, ஆண்ட்டி போட்டிருந்த நகையெல்லாம் பறிச்சாங்க, என்ன மண்டி போட வச்சு என் தலைய, தாடிய மழிச்சாங்க, எங்க பேக்கா¢ய சூறையாடினாங்க, ஆண்ட்டி வேலை பாத்தாங்கன்னு சொன்னேனே அந்த சரோஜினி நகர் ஸ்கூல எரிச்சாங்க, போலீஸ் திரும்பிக்கூட பாக்கல.. எல்லாத்துக்கும் மேல, எல்லாத்துக்கும் மேல..

எங்க முதல் மகன், இருபத்தி அஞ்சு வயசுப் பையன், ஊர்லேந்து திரும்பி வந்திட்டு இருந்தவன, ஒரு பாவமும் அரியாதவன, உயிரோட கொளுத்தினாங்க, அந்த இடத்துக்கா, அங்கையா..” என்று தொண்டை அடைக்க, நெஞ்சை பிடித்தவாறே, கலங்கிய கண்களுடன் உள்ளே சென்றார்.

ஆண்ட்டியும் “பேட்டி, பேட்டி ..”

என்பது தவிர ஒன்றும் சொல்ல முடியாமல் பொங்கி வந்த கண்ணீருடன் விசும்பலானார்.

சித்ரா, தடுமாற்றத்துடன் ஏதோ கூறி விட்டு, அங்கிருந்து கிளம்பி, ஒன்றுமே மனதில் பதியாமல், காதில் ஒலிக்காமல், எப்படியோ வீடு வந்து சேர்ந்து,

“என்னடா, ரொம்ப லாங் வாக் போல”

என்றவாறே வந்த அரவிந்த்தை அணைத்துக்கொண்டு, விம்மி விம்மி அழலானாள்.

– ராதிகா (மார்ச் 2001)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *