கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 15, 2022
பார்வையிட்டோர்: 8,397 
 

நடுவீதி நாயகன்இன்றும் நான் தினந்தோறும் வேலைக்குப் போகும் போதும் பணி முடிந்து திரும்பி வரும்போதும், குறிப்பிட்ட அந்த இடத்திற்கு வரும்போது, என்னை அறியாமலேயே என் கவனம் அந்தப் பக்கம் திரும்பி கண்கள் குத்திட்டு நிற்கும். என் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்து நிரந்தரமாகிவிட்ட, ஒரு நினைவுச் சின்னமாகிவிட்ட அந்த இடம்.

சென்னை, ராயப்பேட்டை மருத்துவமனையை ஒட்டிக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்துக்கு அடியில் இருக்கிறது அந்த இடம். ஊர் பெயர் தெரியாத அநாதைகள், பகல் முழுதும் வீதியெல்லாம் அலைந்து திரிந்து பிச்சை எடுத்து, ‘‘நாளைய நாள் எப்படி மலரும்? எப்படி முடியும்?’’ என்று விடை தெரியாமல் புதிரான வாழ்க்கையை நடத்துபவர்கள், அவர்களுக்குத் துணையாக சில நாய்கள், கிழடு தட்டிப்போன மாடுகள் இப்படிப்பட்டவர்களின் குடியிருப்புதான் அது.

நடந்து செல்பவர்களின் கவனத்தைக் கவர கவர்ச்சிகரமாக சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் சினிமா சுவரொட்டிகளைக் கிழித்து எடுத்ததுதான் அவர்களது படுக்கை விரிப்பு.சமைக்க வேண்டும் என்ற அவசியமோ, வாடகை தர வேண்டுமே என்ற கவலையோ, இதர பிற பிரச்னைகளோ இங்குள்ளவர்களுக்குக் கிடையாது. எல்லாமும் இலவசமாகி விட்ட இவர்களுக்கு சொல்லிக் கொள்ள சொந்தங்கள் என்று யாரும் கிடையாது.
இந்தச் சூழ்நிலையில் அங்கிருந்த ஒருவன்தான் அவன். அந்த இடம்தான் நான் குறிப்பிட்ட இடம்.

இரவுப் பொழுதுகளில் இவனுடன் துணையாகப் படுத்திருப்பவர்கள் பொழுது விடிந்ததும், தங்களது வயிற்றுப்பாட்டைக் கவனிக்கக் கிளம்பிப் போய்விடுவார்கள். இரவின் இருள் படிய ஆரம்பிக்கும்போது, பழையபடி ஒவ்வொருவராக மீண்டும் இங்கு வந்து சேருவார்கள்.

இவர்களில் சிலர் சில நாட்கள் கூட வராமலிருந்து திடீரென மீண்டும் வந்து சேருவார்கள்.

ஆனால், இவன் மட்டுமே இங்கே நிரந்தர வாசம். அலைந்து திரிந்து வருமானத்தைத் தேடிக் கொள்ள அவனால் முடியாது. அந்த நிலையில்தான் அவன் இருந்தான். அவனால் மற்றவர்களைப் போல எழுந்து நிற்கவோ, ஓடி ஆடி நடமாடவோ முடியாது. நோய்வாய்ப்பட்டதில் அவனது கால்கள் முடமாகிவிட்டதுதான் காரணம்.

அவன் எங்கு குளிப்பான், காலைக் கடன்களை எங்கு முடிப்பான்? யாருக்கும் தெரியாது. ஆனால், ஒவ்வொரு நாளும் பளிச்சென்று குளித்துவிட்டு வந்தவன் போல அவன் முகம் காட்சி அளிக்கும்.அவன் யாரிடமும், எதையும் பேசமாட்டான். எதையும் கேட்க மாட்டான். உட்கார்ந்த நிலையில் தன் முன் விரித்துப் போட்டிருக்கும் துண்டில் இரண்டு காலி டப்பாக்களை வைத்திருப்பான்.

யாராவது அவனது நிலைக்குப் பரிதாபப்பட்டு அவன் வைத்திருக்கும் டப்பாக்களில் ஏதேனும் காசு போட்டால், அவர்களது இரக்கத்திற்கு நன்றிக் கடனாக இரு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி பெரிய கும்பிடு போடுவான். மெல்லியதாகச் சிரிப்பான். வாய் திறந்து பேசாமலேயே அவனது கண்கள், ‘உங்கள் பெரிய மனசுக்கு என் நன்றி’ என்று பரிவுடன் பதில் தரும்.

சில சமயம் அவனை அறியாமலேயே அவன் உறங்கி விடுவான். அப்போது யாராவது காசு போட்டால் டப்பாவில் அது விழும் சப்தம் அவனை விதிர்த்து எழுப்பிவிடும். நன்றிப் பெருக்குடன் கையெடுத்து அவர்களைக் கும்பிடுவான்.

காலையில் சைக்கிளில் வரும் டீக்கடைக்காரிடம் காசு கொடுத்து டீ வாங்கிக் குடிப்பான். அருகிலிருக்கும் வீதியோரத் தள்ளுவண்டிக் கடையிலிருந்து அவனுக்கு டிபனும், சாப்பாடும் கூடவே ஒரு பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரும் நேரத்தோடு வந்துவிடும். கடன் வைக்கமாட்டான். அவனது பகல் பொழுது இப்படி முடிந்துவிடும். இரவும் இப்படியே கழிந்துவிடும். மற்றபடி குறிப்பிடத்தக்க வகையில் எந்த ஒரு தனிச்சிறப்பும் அவனிடம் கிடையாது.
நான் தினமும் அவனைக் கடந்து செல்லும்போது என்னால் அன்றைய தினம் முடிந்ததை அவனது டப்பாவில் போட்டுவிட்டுப் போவேன்.

நாள் தவறாமல் இவர் காசு போடுகிறாரே என்று எனக்கு அவன் தனிமரியாதை ஏதும் காட்டுவதில்லை. எல்லோருக்கும் போடும் அதே கும்பிடு; புன்சிரிப்புதான்! ஒரு சமயம் நான் காசு போட்டுவிட்டு அவனைக் கடந்து செல்லும்போது, ‘‘சார், சார்!’’ என்று பணிவோடு என்னை அழைத்தான். நின்று அவனைப் பார்த்தேன்.

ரொம்பவும் தயக்கத்துடன் ‘‘தப்பா நினைச்சுக்க மாட்டீங்களே சார்! ஒரு சின்ன உதவி…’’ என்றான்.‘‘சொல்லுப்பா…’’ ‘‘எனக்கு வாடிக்கையா டீ கொடுக்கற டீக்காரர் வரும்போது நான் அசந்துபோய் தூங்கிட்டேன். எழுந்து பார்த்தப்ப அவர் எதிர்ப்பக்கம் போயிட்டார். அதோ அங்கே இருக்கார் பாருங்க..!’’நான் அவன் காட்டிய திசையில் பார்த்தேன்.‘‘அவர்கிட்டப் போய் எனக்கு டீ தந்திட்டுப் போகச் சொல்ல முடியுமா சார்!’’

உரிமையுடன் கலந்த ஒரு நட்புறவு அவன் குரலில் பிரதிபலித்தது.

‘‘இதென்னப்பா பெரிய உதவி! சொல்லிட்டுப் போறேன்…’’நகர்ந்து அந்த டீக்கடைக்காரரிடம் வந்து விவரம் சொன்னேன்.‘‘நான் இப்படியே என் வாடிக்கைக்காரர்களைப் பார்க்கப் போனாத்தான் எனக்கு வியாபாரம் நடக்கும். நான் டீ கொடுத்திடறேன். நீங்க அவர்கிட்ட கொடுத்துடறீங்களா..? காசு நாளைக்கு அவர்கிட்ட வாங்கிக்கறேன்…’’ ஒரு பேப்பர் குப்பியில் டீயை நிரப்பி நீட்டினான்.

‘‘இந்தாப்பா டீக்கான காசு! நானே தந்திடறேன்!’’ என்று காசைத் தர அதை வாங்கிக் கொண்டான்.டீயை சிந்தாமல் எடுத்து வந்து அவனிடம் கொடுத்தேன்.‘‘என்ன சார் இது… நீங்க போயி…’’ பதற்றத்துடன் நான் கொடுத்த டீ குப்பியை வாங்கிக் கொண்டான். ‘‘தொந்தரவு கொடுத்திருந்தா மன்னிச்சுடுங்க சார்! இந்தாங்க டீ காசு…’’என்னிடம் நீட்டினான்.

அவனது பெருந்தன்மையைக் கண்டு வியந்த நான், ‘‘காசை நானே கொடுத்திட்டேம்பா…’’ என்றேன்.‘‘என்ன சார் இப்படிச் செஞ்சிட்டீங்களே! நான் டீக்காரர்கிட்ட சொல்லிட்டுப் போகச் சொன்னதற்கான தண்டனையா இது!’’‘‘தப்பு செஞ்சிருந்தவங்களுக்குத்தான் தண்டனை! நீ ஏதும் செய்யலியேப்பா! அந்த மாதிரி பெரிய வார்த்தைகளை எல்லாம் சொல்லாதே… ஏதோ இன்னிக்கு முடிஞ்சுது செய்தேன்… அவ்வளவுதான்…’’ நான் நடந்தேன்.இரண்டு வாரங்கள் சென்றிருக்கும்.

திடீரென என் கண்களின் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. கண் மருத்துவரிடம் சென்றேன்.‘‘காட்டராக்ட் முத்திப் போச்சு! ஆபரேஷன் செய்து சரிப்படுத்திடலாம். உடனே செஞ்சிட்டா நல்லது….’’ என்றார்.ஆபரேஷன் நடந்தது. பார்வையும் வந்தது.‘‘வெய்யிலில் அலைந்து கண்டபடி திரியக்கூடாது. தூசு – புகை கண்ணில் படக்கூடாது. ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும்…’’ என்று டாக்டர் சொல்லிவிட்டார்.
வீட்டுக்குள் ஒரு மாதம் சிறைவாசம்.அவர் வைத்திருந்த காலக் கெடு முடிந்தது. வேலைக்குக் கிளம்பினேன்.

வழக்கம்போல நான் செல்லும் அதே பாதையில் வந்து கொண்டிருக்கும்போது என் பழைய நண்பனைப் பார்த்தேன்!நான் வருவதைப் பார்த்ததுமே அவன் முகத்தில் ஒரு தனி பிரகாசம்! முகமெல்லாம் சிரிப்பாக மலர்ந்தது. ஆச்சரியத்தினால் அகலக் கண்களை விரித்து ஆர்வத்தினால் எழுந்து நிற்கப் பார்த்தவன், தன் இயலாமையை உணர்ந்து சோர்ந்து போய் சரிந்துவிட்டான். இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திப் பிணைத்து ‘‘வணக்கம் சார்!’’ என்று பெரிய அழுத்தத்துடன் சொன்னான்.

‘‘என்ன சார் இப்படிப் பண்ணிட்டீங்க? ஒரு மாசமா உங்களைக் காணலியே!’’ என்று என்னைப் பதில் பேசவிடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டபடி என்னை விழுங்கிவிடுவது போல அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான்.நான் அவனது கண்களில் நீர் கசிவதைப் பார்த்தேன்.‘‘இது சத்தியம் சார்! சொல்லப்போனா என்னைப்பத்திக்கூட நான் கவலைப்படுவது கிடையாது! ஏன்… மத்தவங்களைப் பத்திக்கூட நான் அதிகம் நினைக்கறதில்லே சார்!’’ என்றவன் தன் கண்களில் வழியும் கண்ணீரை தனது மேல் துண்டினால் துடைத்துக் கொண்டான்.

மறுபடியும் என்னைப் பார்த்து, ‘‘என்னமோ சார் நீங்க மட்டும் எனக்கு தனி மாதிரிதான். ஒஸ்தி சார். ஆமா ஒஸ்தி… உங்க அன்பினாலே என்னை அப்படியே கட்டிப்போட்டிருக்கீங்க சார்! உங்களுக்கு என்ன சார் தலையெழுத்து… நின்னு தினமும் எனக்குக் காசு போடணும்னு?’’ என்றான்.

இப்போது என் கண்களிலும் நீர் கசிய ஆரம்பித்தது.

‘‘டீக்காரனிடம் போய், வாங்கி வந்து தந்து, அதுக்குக் காசு கூட வாங்காம… என்ன நல்ல மனசு சார் உங்களுக்கு… இந்த நொண்டிப் பிச்சைக்காரனை யார் சார் இப்படி மதிச்சிருக்காங்க…’’அவனால் மேலே பேச முடியவில்லை. ஏதோ ஒன்று அவன் நெஞ்சுக் குழியை அடைத்தது. பக்கத்திலிருந்த பிளாஸ்டிக் பாட்டிலிலிருந்து ஒரு முடக்கு தண்ணீர் குடித்தவன், என் கண்களில் கண்ணீர் கசிவதைப் பார்த்தான்.

‘‘சார்! கஷ்டப்படுத்திட்டேனா! தினமும் பார்த்துக்கிட்டிருந்த உங்களை திடீர்னு நாள் கணக்கில பார்க்க முடியாமப் போயிடுச்சேங்கற துக்கம்தான் சார்! மனசு ரொம்பவுமே தவிச்சுப் போச்சு… கலங்கிப் போயிட்டேன் சார்! என்ன ஆயிடுச்சோ… எங்கே போயிட்டீங்களோ… எப்படி இருக்காரோ… மறுபடியும் பார்க்க முடியுமோ முடியாதோ… இப்படி ஒரே கவலையாப் போயிடுச்சு சார்!’’

அவன் பேசப்பேச, என்மீது அவன் வைத்திருந்த பாசம், அக்கறை, மதிப்பெல்லாம் கரை கடந்து போவதை உணரமுடிந்தது.

என் மனதில் அவன் உயர்ந்து கொண்டே வந்தான்.மீண்டும் அவன் பேச ஆரம்பித்தான்.‘‘இங்கே பாருங்க சார்!’’ என்று தன் பக்கத்தில் வைத்திருந்த மூடியிருந்த ஒரு டப்பாவை எடுத்துத் திறந்து அதை தலைகீழாகக் கவிழ்த்தான். அஞ்சும், பத்துமாக சில்லறைக் காசுகளாகக் குவிந்தன.

‘‘இதெல்லாம் என்னப்பா?’’ ‘‘நீங்க நம்பினா நம்புங்க… நம்பாட்டிப் போங்க. ஒவ்வொரு நாளும் உங்களுக்காக, நீங்க எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்னு ஆண்டவனை வேண்டிக்கிட்டு அதுக்கு பிரார்த்தனை செஞ்சிக்கிட்டு, என்னாலே முடிஞ்ச காணிக்கையா, எங்கிட்ட மிச்சம் இருக்கும் சில்லறைகளை இதில் போட்டுச் சேர்த்துட்டு வந்தேன் சார்! உங்களுக்காக என் குலதெய்வத்துக்கிட்டே நான் செலுத்தறேன்னு வேண்டிக்கிட்டு சேர்த்தது சார் இது! என் குலதெய்வம் உங்களை நல்லபடியா வெச்சிருந்து எனக்குக் காட்டிட்டா… இப்ப என் மனசு சந்தோஷத்தாலே நிறைஞ்சிருக்கு சார்… நான் ஊருக்குப் போகும்போது, என் குலதெய்வத்தின் உண்டியிலே இதைப் போட்டுடுவேன் சார்!’’

என்னைப் பார்த்து பழையபடி தன் கைகளைத் தூக்கிக் கும்பிட்டான். ஒரு கணம் என்னை மறந்தேன். என் சூழ்நிலையை மறந்தேன். அவன் இருக்கும் இடத்தையும், உடைகளையும், எங்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தவர்களையும் மறந்தேன்.‘‘நீதான்யா… உண்மையில் உயர்ந்த மனிதன்..! என் ஒட்டு உறவு எல்லாரையும் மிஞ்சியவன்! என்னைவிடப் பெரியவன்!’’ அவனை அப்படியே என்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டேன்.‘‘சார்… சார்… நான் அசிங்கம்… என்னைத் தொடாதீங்க சார்!’’

‘‘நீ அழுக்கில்லே… நீ அழுக்கில்லே… உன் உள்ளம் வெள்ளைப்பா!’’ நான் சொல்லச் சொல்ல என் கைகளின் பிடிகளைத் தளர்த்தி உதறினான்.

‘‘அடுத்த தடவை இந்த மாதிரிப் போறதுன்னா சொல்லிட்டுப் போங்க சார்! தவிக்க விட்டுடாதீங்க…’’ மன்றாடினான்.

‘‘நிச்சயமா உன்னைத் தவிக்க விட மாட்டேன்!’’ என்று உறுதி தந்து, கசங்கிய என் உடைகளைச் சரிசெய்தபடி, என் மனதை அவனிடம் விட்டுவிட்டுக் கிளம்பினேன்.

திடீரென இன்று வழக்கமான இடத்தில் அவனைக் காணவில்லை. பக்கத்திலிருந்தவர்களிடம் கேட்டேன்.

‘‘இங்கிருந்த பிச்சைக்காரங்களையெல்லாம் போலீஸ் துரத்தி அடிச்சிட்டாங்க சார்! இந்த இடத்தைச் சுத்தப்படுத்தி கார் நிறுத்துற இடமாக்கப் போறாங்களாம்…’’எனக்கு இத்தகவல் அதிர்ச்சியைத் தந்தது. அழுக்கு நிறைந்ததாகவும் பட்டது.

‘‘சொல்லிட்டுப் போங்க சார்! தவிக்க விட்டுடாதீங்க சார்..!’’ என்று சொன்னவனை இன்று அங்கு காணவில்லை.

என் மனம் உள்ளுக்குள் அழுதது. இன்றும் அந்த இடம் சுத்தமாக்கப்படாமல் அழுக்காகவே இருக்கிறது. ஆனால், சுத்தமான உள்ளம் கொண்ட என் நண்பனைத்தான் காணோம்.

– ஏப்ரல் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *