தொடரும் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 11,725 
 

சோர்ந்து போய் உட்கார்ந்து இருந்தேன், அலுவலகம் பரபரப்பாக இருந்தது. அலுவலகத்தில் வருவோர் போவோர் என சலசலத்துக்கொண்டு இருந்தது. காலை வெயில் கொடுமை வேறு அதிகமாக இருந்ததால் நடந்து வந்த களைப்பு அதிகமாக சோர்வு அடைய வைத்தது. நான் பார்க்க வேண்டிய கிளார்க் மட்டும் இன்னும் வரவில்லை, அவர் உட்கார்ந்து இருக்கும் டேபிளையே பார்த்து பார்த்து எனக்கு போரடித்து விட்டது, இதோடு நான்கைந்து முறை வந்துவிட்டேன்.ஒரு விண்ணப்பம் பெறுவதற்கு இழுத்தடிக்கிறார்கள்.

சின்ன வேலைதான் என்னுடைய பென்சன் புத்தகத்தை சேலத்திலிருந்து கோவைக்கு மாற்ற வேண்டும், சேலத்தில் கொடுத்து ஆறுமாதமாகிறது, இன்னும் கோவைக்கு வந்து சேரவில்லை, பென்சன் புத்தகம் கொடுக்கும்பொழுது ஒரு மாதத்தில் ஆகி விடும் என்றார்கள், ஆறு மாதமாகிறது. இது வரை தகவலே இல்லை அதற்குத்தான் ஒரு விண்ணப்பம் கொடுக்கலாம் என்றால் அதை இப்படி எழுதிக்கொடு,அப்படி எழுதிக்கொடு
என்று இழுத்தடிக்கிறார்கள், இன்று என்ன ஆனாலும் சரி வேலையை முடிக்காமல் போவதில்லை என்று அந்த சோர்விலும் மனதில் உறுதி எடுத்து கொண்டேன்.

ஒரு வழியாக அந்த கிளார்க் யாருடனோ சிரித்துக்கொண்டு வந்தவர் டேபிள் அருகில் வலது கையால் மெல்ல நாற்காலியை துடைத்துவிட்டு உட்கார்ந்தார்.தள்ளி உட்கார்ந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்த நான் மிக வேகமாக அவர் அருகில் சென்று வணக்கம் சொன்னேன், என்னுடைய வணக்கத்தை கண்டுகொண்டதாக காட்டிக்கொள்ள்வேயில்லை, ம்…. என்ன வேணும் உங்களுக்கு? சார் நேத்து கூட வந்தேனே என்னுடைய பென்சன் புத்தகம் விசயமா..இழுத்தேன். ஓ. அதான் அப்ளிகேசன் கொடுத்திட்டீங்கள்ள ஒரு வாரத்துல வந்துடும் என்றார்.காலையில் சாப்பிடாமல் வந்ததில் பசி வேறு என் கோபத்தை தூண்டியது, சார் நேத்து நான் அப்ளிகேசனே கொடுக்கல. நீங்கதான் அதைய மாத்திட்டு வா இதய மாத்திட்டு வா அப்படீன்னு திருப்பி அனுப்பிட்டீங்க, என்று சொல்லி என் விண்ணப்பத்தை நீட்டினேன். கொண்டாங்க என்று வாங்கியவர் அதைப் படித்து பார்க்காமலேயே டேபிள் ட்ராயரில் போட்டுக்கொண்டு இன்னும் ஒரு வாரத்துல வந்திடும் என்று அதே பதிலை இயந்திரமாக சொன்னார்.

எனக்கு அதற்குமேல் என்ன செய்வதன்றே தொ¢யவில்லை சார் கொஞ்சம் சீக்கிரமா செய்துகொடுத்தால் நல்லா இருக்கும்’ என்று மென்று விழுங்கினேன்.

பார்க்கலாம் என்றவாறு ஏதோ பைல் பார்ப்பதுபோல் தலையை குனிந்துகொண்டார்.

ஒரு ஆயாசப்பெருமூச்சுடன் என் தலைவிதியை நொந்தவாறு வெளியே வந்தேன், இந்த ஆறு மாத பென்சன் நின்று போனதில் கையிருப்பு கரைந்து போயிற்று வீட்டில் நானும் மனைவியும்தான் என்றாலும், பெண்கள்
இருவரையும் உள்ளுரிலேயே கட்டிக்கொடுத்துள்ளதால் ஒவ்வொரு ஞாயிறும் குழந்தைகளுடன் வருவார்கள், அவர்களை கவனிப்பதில் செலவுகள் அதிகமாகிவிடும்.

அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது எதிரில் என் நண்பர் வேணுகோபால் வந்து கொண்டிருந்தார். என்னுடன் சேலத்தில் ஒன்றாக பணியாற்றியவர், என்னை விட 12 வயது இளையவர், நான் ஓய்வு பெற்று ஏழு வருடங்கள் ஆகிவிட்டன, அப்படியானால் வேணுகோபாலுக்கு இன்னும் 5 வருடம் சர்வீஸ் உண்டு.ஆனால் அவர் எப்படி இங்கு?

யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவர் சார் என்று என் கையை பிடித்துக்கொண்டு எப்படி இருக்கிங்க உங்கள பார்த்து எத்தனை வருசம் ஆச்சு என்றார் வாஞ்சயுடன்’ பின் நான் கோயமுத்தூருக்கு வந்து மூணு வருசமாச்சு நீங்க எங்க சார் இந்த பக்கம்? என்று மூச்சு விடாமல் பேசினார்.

நான் ரிட்டையர்டு ஆன பின்னால பொண்ணுங்களை கோயமுத்தூருல கட்டிக் கொடுத்துட்டேன், பின் நான் மட்டும் அங்க என்ன பண்றேன்?அதான் இங்க வந்துட்டேன், என்றவன் என் பென்சன் பிரச்சினை பற்றி வேணுகோபாலிடம் மெதுவாக சொன்னேன்.அந்த விசயமெல்லாம் ரங்கசாமிதான் பார்ப்பார் அவரை பார்த்திங்களா? என்று கேட்டார். பார்த்தேன்! ஆனா ரொம்ப இழுக்கறாரு எனக்கு அவரை அறிமுகமுமில்லை என்றேன். நீங்க என் கூட வாங்க! என்று என்னை விரு விரு வென அலுவலகத்துக்குள் அழைத்து சென்று நான் விண்ணப்பம் கொடுத்த அதே கிளார்க்கிடம் சென்று ரங்கசாமி இவர் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர், அதுவுமில்லாம நம்ம டிபார்ட்மெண்ட் வொர்க்கர், பாவம் அவரை ஏன் இழுத்தடிக்கிறாய்! அவருக்கு சீக்கிரம் முடிச்சு கொடு என்றார், ரங்கசாமி சீட்டை விட்டு எழுந்து சார் உங்களுக்கு தெரிஞ்சவரா என்று முதன் முறையாக சிநேகமாக சிரித்து நீங்க ஒண்ணும் கவலைப்படாதிங்க இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு ஏற்பாடு பண்ணிடலாம் கவலைப்படாமல் போங்க சார் என்றார்.

நான் மகிழ்ச்சியுடன் தலை அசைத்து வேணுகோபாலுடன் வெளியே வந்து வேணுகோபாலை வா “காப்பி சாப்பிடலாம் என அழைத்தேன்,வேணுகோபால் வேண்டாம் என்று சொல்லி பிறகு பார்ப்பதாக சொல்லி என் தோளை தட்டி விடைபெற்றார். நானும் நிம்மதியுடன் கிளம்பும்போது அருகில் இருந்து பேச்சுக்குரல் என் காதில் விழுந்தது.

“இதோ போறானே இந்த ஆளுகிட்ட சேலத்துல இருக்கும்போது ஒரு சாதாரண சர்ட்டிபிகேட் வேணும்னா கூட நாயா அலைய விட்டு கடைசியில காசு வாங்கிட்டுத்தான் செய்வான்” இப்ப இவன் அனுபவிக்கிறான்.

இவ் வார்த்தைகள் எனக்குத்தான்! ஆனால் உறைக்கவில்லை, எல்லாம் பழக்கம்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *