தேர்த்தச்சர்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 14,268 
 

கீழ்வானில் வெள்ளிமீன் முளைத்து மேலெழுந்திருந்தது. பின்பனிக்காலத்துக் குளிரில் உடல் நடுங்கியது. நான் பச்சை நிறப் போர்வையை இழுத்துப் போத்தியபடி வெள்ளியம்பாளைத்து வீதியில் நுழைந்தேன். தலைச்சும்மாட்டுக்கு மேல் ஈர்க்குமார்கட்டு கனத்தது. கைத்தடியை நிலத்தில் ஊன்றும்போது எழும் ஓசையைத் தவிர, ஊர் நிசப்தமாகக் கிடந்தது. சத்தமிடத் தொடங்கினேன்.

”ஈய்க்கிமாரு ஆத்தோவ்… ஈய்க்கிமாரு…” – சத்தமாகக் குரலிட்டபடி எல்லா வீதிகளிலும் நுழைந்து வெளியேறினேன். ஈர்க்குமார் கட்டு தலைச்சும்மாட்டில் இருந்து இறக்காமலே கனத்தது. யாரும் ஓர் ஈர்க்குமார்கூட வாங்கவில்லை. களைத்துப்போனேன்.

”பித்தாசாரிக்குக் கலியாணம்… பித்தாசாரிக்குக் கலியாணம்…” என்ற குரல் கேட்டு, திரும்பிப் பார்த்தேன். பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், புத்தகப்பைக் கட்டுடன் நின்று என்னை வெறித்தார்கள். கோபம் தலைக்கேறியது. ஈர்க்குமார் கட்டை வீதியில் வீசி எறிந்தேன். கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டு, ஊன்றுகோலை ஆட்டியபடி அவர்களைத் துரத்த ஆரம்பித்தேன். ஒருநிலையில், என் கால்கள் சட்டென பின்னின; தலை கிறுகிறுத்தது; கண்கள் செருகின; தடுமாறி கீழே விழுந்தேன்.

நான் கண்விழித்தபோது இருட்டியிருந்தது. கோவில்பாளையம் தூக்கி வரப்பட்டு, பஜனைமடத் திண்ணையில் படுக்க வைக்கப்பட்டிருந்தேன். என்னைச் சுற்றிலும் ஊர்சனங்கள் திரண்டு பார்த்துக்கொண்டிருந்தனர்.

”விழுந்த வெரசல்ல இடுப்பு எலும்பே முறிஞ்சுப்போச்சு. குடுவ கீழே எறங்கிருச்சு. இனி பொழைக்க வாய்ப்பே இல்லை.”

”ஆளு ஆரு… என்ன வெவரம்னு நாற்பது வருஷமா பித்தாசாரி வாயே தெறக்கலை. இப்ப திடீர்னு செத்துப்போனா என்ன பண்றது? பொண்டாட்டி, புள்ளையின்னு ஏதாச்சும் இருக்குதோ என்னமோ தெரியலையே”

– ஊர்சனங்கள் ஆளாளுக்கு என்னைப் பற்றி ஏதேதோ பேசினார்கள். என் நினைவுகள் பின்னோக்கி ஓடின.

மேற்கே அந்தி சிவப்பு வானம் சிறுகச் சிறுக கருக்கத் தொடங்கியது. முதல் நட்சத்திரம் தெரிந்தது. சென்னிமலை அடிவார கயிலாசநாதர் கோயிலின் முழுமை பெற்ற தேரை, குருதச்சர் கடைசியாக ஒருமுறை பார்வையிட்டார். சிஷ்யதச்சர்கள் நகர்ந்து மரக்குவியல்கள் இடையே கல் அடுப்பில் சமைக்கப்போனார்கள். ஊர் முக்கியஸ்தர்களும் கோயில் தர்மகர்த்தாவும் வந்துவிட்டனர்.

அதுவரை எட்டத்தில் நின்று தேர் வேலைப்பாடுகளைக் கவனித்துக்கொண்டிருந்த நான் புறப்பட்டேன். வீதியில் நடக்க நடக்க, நானும் இதுபோல ஒரு தேரைப் பூட்டும் கனவு மனசு முழுக்க விரிந்தது.

வண்டிப்பேட்டையில் உள்ள மாமாவின் தச்சுக்கூடத்துக்குப் போனபோது மாமா சவ்வாரிவண்டிக்குச் சக்கரம் பூட்டும் வேலையில் மும்முரமாக இருந்தார். மங்கிய வெளிச்சத்தில் ஆரக்காலை இளைப்புக்கூட்டால் சீவியபடியே கேட்டார், ”தமுறு புடிக்கிறதுக்கு வெடியால இருந்து தேடுறே… ஆளைக் காணோம். எங்கடா போய் தொலைஞ்சே?”

”தேர் பூட்டற பக்கம்…”

மாமா வேகமாக எழுந்து என் கன்னத்தில் அறைந்தார். நான் சுதாரிப்பதற்குள் முழங்கையை மடக்கி முதுகில் நான்கைந்து குத்துவிட்டார். மாமா பெண் சுந்தரி, குறுக்கே புகுந்து விலக்கிவிட முற்பட்டாள். 18 வயது திடகாத்திரத்துடன் இருந்த நான், காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த மாமாவை அடிக்க அதிக நேரம் பிடிக்காது. வளர்த்து ஆளாக்கிய விசுவாசத்துக்காகத் திரும்பிப் பார்க்காமல் தேரடிக்குப் போய்விட்டேன்.

அன்றிரவு அகாலத்தில் ஊரைவிட்டுக் கிளம்பிய குருதச்சருடன் நானும் சேர்ந்துகொண்டேன். ‘ஒரு பெரிய தேர்த்தச்சராகத்தான் இனி இந்த ஊருக்கே திரும்பி வரவேண்டும்’ என்ற சபதத்துடன் நடந்தேன். மறுதினம் பகல் முழுவதும் நடந்து, பொழுது சாய தளவாய்ப்பட்டினத்தை அடைந்தோம். குறிஞ்சிமண்டபத்தில் பெரியதனக்காரரும் ஊர் பிரமுகர்கள் சிலரும் காத்திருந்தனர். எங்களுக்கு நீர்மோரும் பானகமும் வழங்கப்பட்டன. பெரியதனக்காரர், பசு கொட்டங்களைக் கடந்து மேலும் கிழக்கே கூட்டிப்போனார்.

பல்லாயிரம் காலத்து பழைமையில் திருநீலகண்டேஸ்வரர் சந்நிதி. இச்சி விருட்சம் முளைத்த கோபுரம். மஞ்சள் வர்ண வெயிலில் மாடப்புறாக்கள் எழுந்து சிறகடித்தன. சந்நிதியின் பின்புறம் சென்றோம். செங்கறையான்கள் ஊர்ந்துகொண்டிருந்த சிதலமான பழைய தேரைக் காட்டினார்கள். குருதச்சர் மேற்கு பார்த்து அஸ்தமனப் பொழுதை வணங்கிவிட்டுப் பேசினார்,

”நாளைக்கு திருவாதிரை. ஈசன் பாவாளக்களியுண்ட பௌர்ணமி நாள். நாங்க வேலையை ஆரம்பிச்சுடுறோம்.”

ஊர் பிரமுகர்கள் இடையே இருந்து ஒரு குரல் எழுந்தது.

”கூலி என்னன்னு பேசிருங்க. தெய்வ காரியம். பின்னால பொல்லாப்பு வந்துரக் கூடாது.”

”தட்சணைக்கு வேலைபாக்கிறது தாசி, தேர்த்தச்சன் கெடையாது.”

குருதச்சர், குறிஞ்சிமண்டபத்தை நோக்கி நடந்தார். அங்கே இரவு படுக்கை. பெரியதனக்காரர் வீட்டில் இருந்து இரண்டு வேளை சாப்பாடு. மதியம் ஆகாரம் கிடையாது.

தேரின் முழு வரைபடமும் குருதச்சரின் மனசுக்குள்ளேயே இருந்தது. சிஷ்யதச்சர்கள் அன்றன்று செதுக்கவேண்டிய மரப்பகுதிகளில் குருதச்சர் உளிக்கோடிட்டு வைத்தார். நான் குருதச்சரையும் சிஷ்யதச்சர்களையும் நுட்பமாகக் கவனித்து வந்தேன். தேரின் ரூபம் பிடிபட்டது. ஏழு மாதங்கள் கழிந்தன. தேர் முழு வடிவம் பெற்றது. குடை, கலசம் மட்டுமே உச்சியில் பொருத்தவேண்டியிருந்தது.

கர்ணகூடத்தில் மர அச்சுகள் மூலம் சிற்பங்களை இணைத்த நாளின் சாமத்தில் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை, குருதச்சர் எழுப்பினார். ஊரின் கிழக்கே ராஜவாய்க்கால் தாண்டி கூட்டிப்போனார். அங்கு லாந்தருடன் பெரியதனக்காரரும் இரு ஆட்களும் நின்றிருந்தனர். ஐவரும் வயல் வரப்பில் இறங்கி நடந்தோம். மின்மினிகள் ஒளிர்ந்தன; தவளைகள் கத்தின.

நெடிய தென்னைகளும் மாமரங்களும் சூழ்ந்த தோப்புக்குள் நுழைந்தோம். கட்டுத்தரையில் ஒன்பது எருமைக்கிடாக்கள் வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன. குருதச்சர் பெரியதனக்காரரின் ஆட்களிடம் கேட்டார், ”ஒன்பதும் பலிகெடாக்கள்தானா… பூச்சிக்குப் போகாததுதானா?”

”ஆமாங்க சாமீ.”

மேலும் சில அடி தூரம் நடந்தோம். தவளைச் சத்தம் கூடிற்று. கிணறு வந்தது. தொளைவாரிமேட்டில் ஏறி குருதச்சர் நின்றார். மேலே அண்ணாந்து விண்மீன்களைப் பார்த்தார்.

”அமாவாசை அன்னிக்கு, இதே சப்தரிஷி மண்டலம் உச்சியில இருக்கிறப்போ நாம பொதையல எடுக்கிறோம்.”

யாரும் ஒன்றும் பேசவில்லை.

”அஞ்சு தலைமுறையா வெண்கலப்பானையில தங்கக்காசு தவங்கெடக்கு. யட்சி, வாதை, நீலி…னு ஒண்ணுசேந்து நாகப்பாம்பு ரூபம் எடுத்து ராப்பகலா காவல் இருக்கு. அதுகளா… நானான்னு ஒரு கை பார்த்துர்றேன்.”

நான் திடுக்கிட்டேன். குருதச்சர் ஏதோ விபரீதமான செயல்களில் இறங்குவதுபோல தோன்றியது. குறிஞ்சிமண்டபம் வந்தபோது சிஷ்யதச்சர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

”பொதையல் எடுக்கிறதைப் பத்தி இவனுங்ககிட்ட சொல்லாத. இவனுங்க, வெறும் சோத்துமுட்டித் தச்சனுங்க. நல்லாத் திம்பானுங்க; சொன்னதைச் செய்வானுங்க; சுயபுத்தி கெடையாது. மரத்தைப் பலகையா பாக்கிறவனுங்க. அது சிற்பம், தேர்னு புரியாது. நீ அப்படி இல்லை… அதனாலதான் உன்னை எல்லா பக்கத்துக்கும் கூடவே கூட்டிப்போறேன். நீ இன்னும் சில விஷயங்கள் கத்துக்கிட்டா கைதேர்ந்த தேர்த்தச்சனாகிடுவ. கூடிய சீக்கிரம் அதையும் கத்துத்தர்றேன்.”

ஒரு வாரம் போயிருந்தது. சிஷ்யதச்சர்கள் அன்று உள்தேர்ச்சக்கரம் பூட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். காலை ஆகாரத்துக்குப் பின் குருதச்சர் என்னை மட்டும் கூட்டிக்கொண்டு பெரியதனக்காரர் வீட்டுக்குப் போனார். வெளிப்புறக் கல்மதில் எங்கும் மயில்கொன்றை முளைத்து பூத்து நின்றன. கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட மரத்தூண்களைக்கொண்ட வெளி ஆசாரத்தைத் தாண்டி உள்ளே போனோம். வீடு எங்கும் சலனமற்ற அமைதி. இருவரும் உள்ளே பார்த்தபடியே இருந்தோம். பெரியதனக்காரர் வந்தபாடில்லை. குருதச்சர், என்னைப் பார்த்து ஜாடை செய்தார். நான் குரல் கொடுத்தேன்.

”அரண்மனையில ஆரும் இல்லீங்களா..?”

உள் ஆசாரத்தில் கொலுசு சத்தம் எழுந்தது. பட்டுப்புடவையில் பெரியதனக்காரரின் பெண் வந்து தூணைப் பற்றி நின்றாள். மருதாணிப் பூவின் வாசனை. அகன்ற கரிய விழிகளை உருட்டியபடி நோக்கினாள். குருதச்சர் அந்தப் பெண்ணையே உற்றுப் பார்ப்பதை நான் கண்டேன். இனிமையான குரலில் பேசினாள்.

”அப்பாவும் அம்மாவும் பாப்பையன்புதூர்ல ஒரு தெறட்டிச் சீர்க்குப் போயிருக்காங்க. வந்திருவாங்க. உட்காருங்க…”

அந்தப் பெண் ஊஞ்சலை இறக்கிவிட்டாள்.

”நாங்க அப்புறமா வந்து பார்க்கிறோம்.”

வீதிக்கு வந்ததும் குருதச்சர் சொன்னார்.

”இவள் ராஜகுமாரி. திரௌபதி மாதிரி. செண்பகப் பூபோல கைவிரல்கள். ஆண்டவனோட அவதரிப்பு. இவள் திரேகத்தில் இருந்து ஒரு வாசனை வீசுச்சு. நீ நுகர்ந்தியா?”

நான், ஒன்றும் புரியாமல் குருதச்சரையே பார்த்தேன்.

”சகல லட்சணங்களும் பொருந்திய பெண். இவளைச் சுகிப்பவனுக்கு நெடுநாள் வாழற யோகம் கிடைக்கும்.”

அன்று எனக்கு தேரின் உள்சக்கர அலங்காரத் தட்டில் வேலை. மிக நுட்பமாக உளியைக் கையாள வேண்டும். என்னால் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. ராஜகுமாரியின் அகன்ற கரிய விழிகளும் நீண்ட கைவிரல்களும் கண்கள் முன்னே தோன்றியபடியே இருந்தன. குருதச்சர் சொன்ன வாக்கியமும் காதில் ஒலித்தபடியே இருந்தது.

இளமதியத்தில் பெரியதனக்காரர் ஆட்களுடன் வந்தார். தெற்கே அமராவதி ஆற்றங்கரையை அடைந்தோம். இருமருங்கு நீர் கரையெங்கும் வெள்வேலாமரச் செறிவு கொண்ட வனம். நாவல் மரப் பூவில் கருந்தும்பிகளின் ரீங்கரிப்பு. நிழல் படர்ந்த தடம். சருகுகளை மிதித்தபடி குருதச்சர் எட்டப் போய்க்கொண்டே இருந்தார். கீரிகள் வெறித்தபடி இடம் மாறின. சேவேறிய ஒரு மரத்தைக் கண்டதும் குருதச்சர் நின்றார். அந்த மரத்தின் இலைகள் அடர்பச்சையில் ஈயக்காசுபோல உராய்ந்து சலசலத்தன.

”ஆகா… நான் தேடிட்டு இருந்த ஆத்திமரம் கெடைச்சிருச்சு. அர்ஜுனன் கம்கட்டுல இடிய தாங்கிக்கிற மாதிரி… இந்த ஆத்தியும் நீர் இடி, நெருப்பு இடி ரெண்டையுமே தாங்கிக்கும். இதுல பேழை செஞ்சு புதையலை வெச்சுட்டா, அப்புறம் எந்தத் துர்சக்தியும் அதை நெருங்க முடியாது.”

குருதச்சர், சின்னக் குழந்தைபோல குதூகலமாகச் சிரித்தபடி என் பக்கம் திரும்பினார்.

”நீதான் ஆத்திமரத்தை இளைச்சு பேழை செய்யப்போறே. வர்ற அமாவாசைக்குள்ள முடிக்கணும்.”

நாங்கள் திரும்பி ஆற்றங்கரைக்கு வந்தவுடன் பெரியதனக்காரரும் ஆட்களும் போய்விட்டனர். குருதச்சர் கீழே குனிந்து, ஈரமணலில் விரலால் கோடு கிழித்து பேழையின் வரைபடத்தை வரைந்து காட்டினார். நான் உற்றுப்பார்த்து மனதில் இருத்திக்கொண்டேன். நீர்க் காக்கை கூட்டம் கரைந்தபடி பறந்துபோயிற்று. குருதச்சர் அதே இடத்தில் சப்பணமிட்டு அமர்ந்து திடீரெனப் பேசினார்.

”இந்த இடம் நல்ல இடம். நான் உனக்கு வர்ற அமாவாசைக்குள்ள வசிய மந்திரத்தைக் கத்துத்தரப்போறேன். நீ வசிய மந்திரத்தை முறையாக் கத்துக்கிட்டா யாரை வேணும்னாலும் வசியப்படுத்தலாம்.”

நானும் குருதச்சர் எதிரில் அமர்ந்தேன். முதல் பாடம் தொடங்கிற்று. முதலில் என்னால் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை. மந்திரங்களை உச்சரிக்க மிகவும் சிரமப்பட்டேன். ஒவ்வொரு சந்தியாவேளையிலும் இதே இடத்துக்குக் கூட்டிவந்து சொல்லிக்கொடுத்தார். நாட்கள் செல்லச் செல்ல மந்திரமும் மன ஒருமைப்பாடும் கைவரப்பெற்றன.

அதே சமயம் பகலில் பெரியதனக்காரர் வீட்டின் பின்கட்டு ஆசாரத்தில் அமர்ந்து ரகசியமாக ஆத்திமரப் பேழை செதுக்குவதில் ஈடுபட்டேன். பச்சை ஆத்திமரம், வெட்டிப்போட்டு பல வருஷங்கள் ஆனதுபோல சேவேறி இறுகிக்கிடந்தது. உளி தெறித்து எகிறியது.

இந்தக் கடினமான வேலையின் ஊடேயும் என் மனம் ராஜகுமாரியின் மருதாணிப் பூவின் வாசனைக்காக ஏங்கித் தவித்தது. உள் ஆசாரத்துக்குள் கொலுசு சத்தமோ, சிரிப்பு ஒலியோ கேட்கும்போதெல்லாம் மனம் படபடத்தது. வாழைஇலையில் ராஜகுமாரி மதிய உணவு பரிமாறும்போது நான் அவளின் அகன்ற கரிய விழிகளை நோக்கியபடி, வசிய மந்திரத்தைப் பூரணமாகக் கற்றுத் தேர்ந்தவுடன் என் முதல் வசியம் இந்த ராஜகுமாரிதான் எனத் தீர்மானித்துக்கொண்டேன். என்னை எல்லா நேரமும் ராஜகுமாரியின் நினைவு அலைக்கழித்தது.

ஒருவழியாக 12 நாட்களில் நான் ஆத்திமரப் பேழையை, குருதச்சர் சொன்னதுபோல செய்துமுடித்தேன். நோட்டமிட்ட குருதச்சர், முழுத் திருப்தி ஏற்பட்டதுபோல சிரித்தபடி நகர்ந்தார். அதே நேரம் அன்று தேரடிக்குப் போன குருதச்சர், கோபத்தில் சிஷ்யதச்சர்களைத் திட்டித்தீர்த்தார். தேரின் மையப் பகுதியான சிம்மாசனம், தேவாசனம், விஸ்தாரத்தட்டு ஆகிய மூன்று பகுதிகளையும் கழற்றி வீசி எறிந்தார். எல்லோரும் பயந்துபோனோம். அவற்றை வேறு மரத்தில் இழைத்துத் திரும்பப் பூட்டும்படி உத்தரவிட்டார். என்னை மட்டும் பின்தொடரச் சொல்லிவிட்டு, கிழக்கே அறுவடை முடிந்த வயலில் இறங்கினார். தாளின் அடிக்கற்றைகளை மிதித்தபடி குறுக்கு வழியாக நடந்து தோப்பை அடைந்தார். கட்டுத்தரையில் அசைவாங்கி நின்ற ஒன்பது எருமைக்கிடாக்களையும் ஆட்களுடன் பார்வையிட்டுக்கொண்டிருந்த பெரியதனக்காரர் எங்களைப் புரியாமல் பார்த்தார்.

”தேர் வேலை தாமதப்படுதுங்க. நாம பொதையல் எடுக்கிறதை அடுத்த அமாவாசைக்கு வெச்சுக்கலாங்க.”

பெரியதனக்காரர், மறுப்பு ஏதும் பேசாமல் ஆமோதிப்பதுபோல் தலை அசைத்தார். தோப்பில் இருந்து தெற்கே நடந்து அமராவதி ஆற்றுக்கு என்னைக் கூட்டிப்போனார் குருதச்சர். பொழுது இறங்கி லேசான வெளிச்சம் மட்டுமே இருந்தது. ஈரமணல் திட்டாங்கரையில் குருதச்சர் வடக்கு முகமாக பத்மாசனம் போட்டு அமர்ந்தார். எதிரில் என்னை அமரச்செய்தார். என் புருவ மத்தியை விரலால் நீவியபடியே வசிய மந்திரத்தின் இறுதிப் பகுதியை ஓதினார். எனக்குள் ஒருவித அதிர்வு; நடுக்கம். எழுந்து ஊர் பாதையில் நடக்கும்போது காற்றில் நடப்பதுபோல இலகுவாக இருந்தது. வழியில் படம் விரித்துச் சீறிய நாகப்பாம்பின் மீது என்னை வசிய மந்திரத்தைப் பிரயோகிக்கச் சொன்னார் குருதச்சர். நான் மந்திரத்தை உச்சரித்தேன். நாகம் செத்ததுபோல மடிந்து விழுந்தது.

”காலங்காத்தால வந்து இதை எழுப்பு. இப்ப கெடக்கட்டும். வா போகலாம்.”

மறுநாள் இருள் விலகுவதற்கு முன்பே எழுந்து வந்து பாம்பைப் பார்த்தேன். பாம்பு அதே இடத்தில் அப்படியே செத்ததுபோலவே கிடந்தது. நான் வசிய மந்திரத்தின் கட்டுவளையத்தை உடைக்கும் பகுதியை ஓதினேன். பாம்பு எழுந்து ஊர்ந்து நகர்ந்தது. அடுத்தடுத்த நாட்களில்

நான் வசிய மந்திரத்தை இதர பிராணிகளிடம் பிரயோகித்து சோதித்துக்கொண்டேன். அவை மயங்கிச் சரிந்து, பின் எழுந்து இயல்பாகும்போது அண்டமே எனக்குள் கட்டுண்டதுபோல திமிர்கொண்டேன். விரைவில் ராஜகுமாரியும் என் வசிய மந்திரத்துக்குக் கட்டுப்பட்டு என் காலடியில் வீழ்ந்துகிடப்பாள் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன்.

அந்த நாளும் வந்தது.

அன்று மாசி அமாவாசை. அந்திசாயும் வேளை. குருதச்சர் தடுக்கை அகற்றி பூர்த்தியடைந்த தேரை பெரியதனக்காரருக்கும் ஊர் முக்கியஸ்தர்களுக்கும் காட்டினார். யாளி, ரதி-மன்மதன், தட்சிணாமூர்த்தி, துவாரபாலகர்கள்… என நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளுடன் 60 அடி உயரத்தில் ராஜபொலிவுடன் நின்றது தேர். இருள் கவிழ்ந்ததும் சிஷ்யதச்சர்கள் உறங்கப்போனார்கள். குருதச்சர் ஆற்றுக்குக் குளிக்கப்போனார். மடுவில் குதித்து நீந்தியபடியே என்னிடம் சொன்னார்…

”வாதையா… யட்சியா… நீலியா… மாறி மாறி நின்னு புதையலைக் காவல்காக்குது பூதசக்தி. அந்தப் பூதசக்தியைச் சாந்தப்படுத்துறது அவ்வளவு சுலபம் இல்லை. புதையலை எடுக்கிறப்ப எப்படியும் பூதசக்தி மீறிரும்; ஒரு உயிரைக் காவு வாங்கிரும்.”

நான் குருதச்சரைக் குழப்பத்துடன் பார்த்தேன்.

”அந்த ஒரு உயிர் யாருங்கிற புதிர், அந்தப் பூதசக்திக்கு மட்டும்தான் தெரியும்.”

குருதச்சர், நீர் சொட்டச் சொட்ட கரையேறி வந்து உடைமாற்றினார். தோப்பை அடையும் வரை எதுவும் பேசவில்லை. தீப்பந்த வெளிச்சத்தில் பெரியதனக்காரரும் ஆட்களும் காத்திருந்தனர். பூஜை பொருட்கள் பரப்பப்பட்டதும், குருதச்சர் கிழக்கு பார்த்து சித்தாசனத்தில் அமர்ந்து மந்திரத்தில் மூழ்கினார். ஒன்பது எருமைக்கிடாக்களும் பலியிட தயார்படுத்தப்பட்டன. திடீரென, அந்தப் பகுதியே அமானுஷ்யத் தொனி பூண்டது.

முதல் சாமம் ஆனதும் நான் நகர்ந்து வயல் வரப்பில் இறங்கினேன். கோடைச்சம்பா நடவுக்கான நாற்றங்கால் ஓரம் நீர்ப்பாம்புகள் தாவின. ஊரின் கல்தீபத்தூண் வெளிச்சத்தை இலக்குவைத்து நடந்தேன். உள்ளுக்குள் பதற்றமாக இருந்தது. பெரியதனக்காரர் வீட்டின் மதிற்கதவைத் திறந்து உள்நுழைந்தேன். வீடெங்கும் நிசப்தம். வெளித்திண்ணை ஏறி உள்ளே எட்டிப் பார்த்தேன். அகல்விளக்கு ஒளியில் ஆசாரத்து ஊஞ்சலில் ராஜகுமாரி உட்கார்ந்திருந்தாள். ராமபாணப் பூ சூடியிருந்தாள். ராஜகுமாரி என்னைக் கவனிக்கவில்லை. நான் ஒரு கணம் மனதை ஒருமுகப்படுத்தி வசிய மந்திரத்தை மனதுக்குள்ளேயே உச்சரிக்கத் தொடங்கினேன். ராஜகுமாரி சிறிதும் சலனம் அடையவில்லை. நான் மந்திரத்தை மீண்டும் அழுத்தமாக உச்சரித்தேன். நாகங்கள் சீறின; சிம்மங்கள் கர்ஜித்தன; நந்திகள் தத்தம் கொம்பை மண்ணில் குத்தி வாரின. நான் திடுக்கிட்டேன். உடல் முழுவதும் வியர்த்து ஒழுகியது. கட்டுடைக்கும் மந்திரத்தை ஓதி அவற்றை விரட்டினேன்.

அதே கணத்தில் ராஜகுமாரி சட்டென எழுந்து, கொலுசு அதிர நடந்து பின்கட்டு நடையைத் திறந்தாள். வீதியில் இறங்கி மேற்கு நோக்கி நடந்தாள். ராஜகுமாரி, யாரையோ பின்தொடர்ந்து செல்வதுபோலவே இருந்தது. நடையில் ஓர் அசுர வேகம். நான் பின்தொடர ஓடினேன். ஊர், ஜீவராசிகளே இல்லாததுபோல கிடந்தது. ஊரைக் கடந்து தரிசில் ஓடினாள். வாடைக் குளிர்க்காற்றில் மருதாணிப் பூவின் நறுமணம், உச்சி வானில் பளிரென மின்னல், கனத்த இடி, கருத்த முகில்கள் சூழ்ந்திருந்தன. கார் மழைத்துளி சடசடவென இறங்கிற்று. ராஜகுமாரி, பாறைக்குன்றின் மீது

ஏறி நின்றாள்.

”வா… வந்துட்டியா… உட்கார்” – இருளில் அசரீரிபோல் ஒரு கம்பீரக் குரல்.

ராஜகுமாரி, பெரும் பாறை நடுவில் சப்பணமிட்டு உட்கார்ந்தாள். எனக்கு திகிலில் மனசு படபடத்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். ராஜகுமாரி எதிரில் குருதச்சர் வந்து நின்றார். மழை, மேலும் அடர்ந்தது. எனக்குக் கோபம் தலைக்கேறியது.

”நீ ஓர் ஏமாத்துக்காரன்… வசிய மந்திரத்தை தப்பா சொல்லிக்கொடுத்திருக்கே.”

குருதச்சர் கடகடவெனச் சிரித்தார்.

”தேர்ச்சிற்பம் செதுக்கும்போது தேர்த்தச்சனுக்கு சந்தேகம் எழும். அப்போது வசிய மந்திரத்தை உபயோகித்து, நாம செதுக்கும் சிற்பத்தோட உருவத்தை கண் முன்னால கொண்டுவரலாம். யாளியை நெனைச்சா யாளி வரும், சிம்மத்தை நெனைச்சா சிம்மம் வரும், நந்தியை நெனைச்சா நந்தி வரும், கன்னியை நெனைச்சா கன்னி வரும், தெய்வத்தை நெனைச்சா தெய்வம் வரும். அதுக்கு தெய்வபக்தியும் மன ஒன்றிப்பும் வேணும்.”

”நான் ராஜகுமாரியை நெனைச்சேன். ஏன் வரலை?”

”நீ காமாந்தரமாக நெனைச்சிருப்பே.”

”உங்களுக்கு வந்திருக்கிறாளே?”

குருதச்சர் மீண்டும் பலமாகச் சிரித்தார்.

”நான் ராஜகுமாரியை சுகிக்க இங்க வரவழைக்கலை. பொதையலை எடுத்து ஆத்திமரப் பேழைக்குக் கொண்டுவரும்போது, நான் கட்டிப்போட்டிருக்கிற பூதசக்தி என்னையும் மீறி தப்பிக்கும். அப்போ வீட்டுக்குள்ள இருக்கிற கன்னிப்பெண் மீது ஏறக்கூடிய சாத்தியம் இருக்கு. அந்த நேரத்துல ராஜகுமாரி அங்க இருக்கக் கூடாது. அதனாலத்தான் இங்கே கூட்டிவந்தேன். என்னோட பாதுகாப்பு வளையத்துக்குள்ள கட்டிவெச்சுட்டுப் போய் பொதையலை எடுப்பேன்.”

”சுத்தப் பொய்.”

”சித்த நேரம் கழிச்சு நீயே நிஜத்தைத்

தெரிஞ்சுக்குவ.”

நான் குருதச்சர் சொன்னதை நம்பத் தயாராக இல்லை. சற்றுத் தள்ளி ராஜகுமாரி இன்னும் மயங்கிய நிலையிலேயே அமர்ந்திருந்தாள். திடீரென மழையும் நின்றுவிட்டது. ராஜகுமாரி எனக்கு வேண்டும். குருதச்சரை நான் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளினேன். ஓங்கி ஆம்பாட்டில் மிதித்தேன். குருதச்சருக்கு, கழுத்து தொங்கிற்று. சுவாசம் இல்லை. பாறை விளிம்புக்குத் தூக்கிப்போனேன். கீழே சங்க முட்புதருக்குள் வீசி எறிந்தேன்.

மெதுவாக ராஜகுமாரி இருக்கும் இடத்துக்கு வந்தேன். ராஜகுமாரியைக் காணவில்லை. நாற்புறமும் தேடினேன். கிழக்கே கொலுசு சத்தம் கேட்டது. நானும் கிழக்கே ஓடினேன். மின்னல் வெளிச்சத்தில் ராஜகுமாரி ஊரை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. எதிரில் பல நூறு தீப்பந்தங்களின் அசைவுகள் முன்னேறி வந்தன. நான் தப்பித்தாக வேண்டும். பாறைக்குன்றின் மறுபுறத்தை நோக்கி ஓட எத்தனித்தேன். காலடியில் ஏதோ இடறியது. குனிந்து எடுத்தேன். பழங்கால ஏட்டுச்சுவடி. மீண்டும் மழை கனத்து இறங்கியது. ஆள்காட்டி, மருகி மருகி கத்தி என்னைப் பின்தொடர்ந்தது.

அடுத்த இரு தினங்களும் பகலில் பாழடைந்த கோயிலில் படுத்துறங்கிவிட்டு, இரவில் ஒளிந்து ஒளிந்து நடந்தேன். சென்னிமலை வண்டிப்பேட்டை போய்ச் சேர்ந்தபோது மாமா எதுவும் பேசவில்லை. சுந்தரியும் எதுவும் பேசாமல் சாப்பாடு பரிமாறினாள். வைகாசி பிறந்ததும் மாமா எனக்கும் சுந்தரிக்கும் கல்யாண ஏற்பாடு செய்தார். விடிந்தால் மலைக்கோயிலில் கல்யாணம். கோழி கூப்பிட சுந்தரி எதிர்பட்டறைப் பையனோடு ஓடிப்போய்விட்டாள். அன்று இளமதியம் பட்டறையிலேயே மாமா நாண்டுகொண்டார். அவரின் 16-ம் நாள் காரியம் முடிந்த பின், பிராட்டியம்மன் கோயில் கல்தீபத்தூண் திண்ணையிலேயே நான் சதா படுத்துக்கிடந்தேன். பைத்தியக்காரன்போல என் தோற்றம் உருமாறிவிட்டது. ஒருநாள் பள்ளிக்கூடத்துப் பையன்கள் எதிரில் வந்து நின்று கத்தினார்கள்…

”பித்தாசாரிக்குக் கலியாணம்… பித்தாசாரிக்குக் கலியாணம்…”

நான் ஆத்திரத்துடன் எழுந்து அவர்களைத் துரத்த ஆரம்பித்தேன். வீதியில் ஓடி மறையும் அவர்கள், ஒரு மழை நாளில் திரும்பத் திரும்பக் கத்தினார்கள். நான் கல்லை எடுத்து எறிந்தேன். கல் ஒரு சிறுவனின் பின் மண்டையைத் தாக்கிற்று. ரத்தம் சொட்டச் சொட்ட அவன் கீழே விழுந்து துடிதுடித்தான். நான் ஊரைவிட்டு வடக்கே ஓட ஆரம்பித்தேன்.

குருதச்சரின் ‘தேர்ச்சுவடி’ மட்டுமே எனக்கு துணை. நிறையக் கோயில்களுக்குச் சென்று தேர்களைப் பார்வையிட்டேன். என் கண்களுக்கு தேரைத் தவிர வேறு எதுவும் தெரியாது. தேரடிதான் என் வாழ்க்கை. தேர் பைத்தியம் ஆனேன். 40 வருடங்கள் சுற்றி அலைந்துவிட்டு, ஒரு சாயங்காலத்தில் தளவாய்ப்பட்டினம் வந்து சேர்ந்தேன். ‘ஊர் பிரச்னையால் நாங்கள் பூட்டிய திருநீலகண்டேஸ்வரர் தேர் ஓடுவது இல்லை’ என்றார்கள். பெரியதனக்காரர் வீட்டுக்குச் சென்றேன். ஆசாரம் எங்கும் புத்தக அலமாரிகள். கண்ணாடிபோட்ட ஒரு பெண்மணி என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.

”பெரியதனக்காரர்… ராஜகுமாரி.”

”இது லைப்ரரி… ஊருக்குள்ள கேளுங்க.”

நான் மீண்டும் வடக்கு நோக்கிய ஒரு யாத்திரையைத் தொடங்கினேன். வெயிலில் நிற்காத நடை. இந்தக் கோவில்பாளையம் வந்தபோதுதான் என் கால்கள் ஓய்ந்தன. பசி மயக்கம் கண்களைச் செருக, கீழே விழுந்தேன். கண் விழித்தபோது நூல் புடவையில் நின்ற ஒரு பெண்மணி, பித்தளைக்குடத்தில் இருந்து தண்ணீரை என் மீது ஊற்றிக்கொண்டிருந்தாள். செண்பகப் பூவின் கைவிரல்கள் அகன்ற கரியவிழிகள்.

”ராஜகுமாரி… ராஜகுமாரி…” – என்னை அறியாமல் நான் முணுமுணுத்தேன்.

ஊர்சனங்கள் பஜனை மடத்துத் திண்ணையில் ஆங்காங்கே தூக்கச் சடவுடன் அமர்ந்திருந்தனர். என் சுவாசம் கடினமாகி பெருமூச்சாக மாறிற்று. மணியக்காரர், என் அருணாக்கயிற்றில் முடிந்திருந்த தேர்ச்சுவடியைக் கழற்றினார்.

”மாட வீட்டு அய்யனையும் ஆத்தாவையும் போய்க் கூட்டிட்டு வாங்க. ஊரிலேயே

அவுங்கதான் வயசானவங்க. ஏதாச்சும் தெரியுதான்னு கேப்போம்.”

கொஞ்ச நேரத்தில் ராஜகுமாரியும் அவளின் வீட்டுக்காரரும் வந்து என்னைப் பார்த்தனர். மணியக்காரர் தேர்ச்சுவடியை நீட்டினார். ராஜகுமாரி செண்பகப் பூ போன்ற கைவிரல்களால் தேர்ச்சுவடியைப் பிரித்தாள். அதிர்ச்சியுடன் ஊர்சனங்களைப் பார்த்துக் கேட்டாள்.

”இது எப்படி இவருகிட்ட வந்திச்சு?”

நான் திடுக்கிட்டேன். ராஜகுமாரி, என்னைக் கண்டுகொண்டாள். என்னை நெருங்கிவந்து உற்றுப் பார்த்தாள்.

”இந்த மாதிரி சுவடி, தேர் செய்றவங்ககிட்ட மட்டும்தான் இருக்கும். இவரும் ஒரு தேர்த்தச்சராத்தான் இருப்பார். ரொம்ப நாளைக்கு முன்னால எங்க ஊருக்கு வந்த ஒரு தேர்த்தச்சர் இதுமாதிரி ஒரு சுவடி வெச்சிருந்ததை நான் பார்த்திருக்கேன். அந்தத் தேர்த்தச்சர், எங்க தோப்பு வயல்ல புதையல் எடுக்கிறேன்னு எடுத்து, பூதசக்தியால கொல்லப்பட்டுட்டார். அந்தப் பூதசக்தி, என்னைக்கூட அன்னிக்கு ஊருக்கு மேற்கே பாறைக்குன்று வரைக்கும் இழுத்துட்டுப் போயிருச்சு. நல்லவேளை நான் தப்பிச்சுட்டேன்.”

ஊர்சனங்கள், ராஜகுமாரியையே பார்த்துக்கொண்டிருந்தனர்.

”இவங்க எல்லாம் ஒரு மகான் மாதிரி. வெளியில காட்டிக்க மாட்டாங்க. நாமதான் உணர்ந்துக்கணும். இவரை நாமதான் நல்லடக்கம் செய்யணும்.”

நான் ராஜகுமாரியைக் கையெடுத்துக் கும்பிட முயன்றேன். என் கண்களில் இருந்து நீர் பெருகி வழிந்தது!

– பெப்ரவரி 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *