தெருவிளக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 21, 2022
பார்வையிட்டோர்: 3,389 
 

(1994 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடைத் தெருவுக்கு வந்த செல்வராசன் சந்தியில் அப்படியே நிலை குத்தி நின்றுவிட்டான். அவன் விழிகள் இரண்டும் வியப்பால் விரிய, தாங்கமுடியாத அதிசயத்தால் அவன் வாயும் சற்று அகலத் திறந்துகொண்டது.

“சந்தியில் நிண்டு கொண்டு என்ன விடுப்பே பாக்கிறாய்? பாரத்தோட சயிக்கிலில வாறன், விலகாமல் மாடுமாதிரி நடுச் சந்தியில. அங்கால போடா” என்று சத்தமிட்டு ஏசியவாறு ஒரு சயிக்கில்காரன் விறகுச் சுமையோடு வேனைக் கடந்து சென்றான். பின் கரியரில் ஆளுயரக் கம்புகளுக்கிடையில் அடுக்கிக் கட்டியிருந்த விறகுத்தடிகள் அவனை உராய்ந்தபடி சென்றன. ஏசியவன் விறகுச்சுமைக்குள் மறைந்து போனான்.

அவன் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு சந்தியிலிருந்து விலகி நடந்தான். என்றாலும் அடிக்கடி திரும்பிப் பார்த்தபடி சென்றான். அவன் தனது பத்துவயதுக் கழிவில் இப்படியான ஒன்றை எங்கும் கண்டவனல்லன்.

மின்சாரக் கம்பத்தில் வளைந்த குழாய் நுனியில் மின்குமிழ்கள் தாம் தொங்கி ஒளிகொடுக்கும். பாதுகாப்பு வலயத்தின் நான்கு மூலைகளிலும் ஐசி ஆர்சிகாரர் சிலுவை வடிவில் வானத்தை நோக்கி இரவில் ஒளிரவிடும் ரியூப் லையிற்றுகளும் மின்கம்பங்களில் தாம் எரியும். இதென்னவென்றால் கண்ணாடிக் கூடுக்குள் மேசைலாம்பு எரிகிறது.

நான்கு ஆண்டுகளாக இருண்டு கிடக்கிற யாழ்ப்பாணத் தெருக்களுக்கு ஒளியூட்ட முன் வந்தவர்கள் யார்? இருட்டுக்குப் பழக்கப்பட்டுவிட்ட மக்கள். மாலை கவியத் தொடங்கும் போது கூடுகளுக்குத் திரும்பிவிடும் பறவைகள் போல வாழக் கற்றுக் கொண்டார்கள். ஏழு மணிக்குள் வெறிச்சோடிப் போகின்ற வீதிகள். கடைத்தெருக்கள். இரவில் விளக்கு ஏற்றாமலேயே படுக்கைக்குப் போகின்ற மக்களின் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்றது.

அவன் வீட்டு முடக்கில் இப்படியொரு தெருவிளக்கு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? முன்னிருட்டில் விற்குச் சுமையோடு சயிக்கிலில் வந்த சண்முகம் கம்பத்தோடு மோதி மண்டையை உடைத்திருக்க நேர்ந்திருக்காது. மாரிமுத்தர் காணுக்குள் விழுந்து காயப்பட்டிருக்க வேண்டி வந்திருக்காது.

செல்வராசன் வீட்டில் ஒரு சிக்கன விளக்கு இருக்கின்றது. ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் நூறு ரூபாவிற்கு மேல் விற்கின்ற வேளையில் அரிக்கன் லாம்பும் மேசை விளக்கும் எரிக்கவா முடியும்? ஒரு கரண்டியில் பக்குவமாக மண்ணெண்ணெயை வார்த்து சிக்கன விளக்கின் பஞ்சுப் பொதியில் விட்டு நனைத்து, அதனுள் திரியைப் புதைத்து எரிக்கின்ற தொழில் நுட்பம் பல ஏழைமக்களின் குடிசைகளில் இரவில் சிறிது நேரமாவது மினுங்கல் வெளிச்சத்தைத் தர உதவியிருக்கின்றது. அந்த வெளிச்சத்தில் தான் செல்வராசன் இரவில் சிறுபொழுது பாடசாலைப் பாடங்களைப் படித்தும் வருகின்றான்.

அந்தக் கரையோரக் குடிசைகளின் கூரைகளைக் கிடுகுகளால் தான் வேய்ந்திருந்தார்கள். ஆனால் பகலில் வெயிலும், மழையில் வெள்ளமும், இரவில் வானத்து நட்சத்திரங்களும் எதுவிதச் சிரமமுமின்றி உள் நுழையக் கூடியவிதமாகக் கூரையில் ஈக்கில்கள் மட்டுந்தாம் இன்று இருக்கின்றன. அவ்வளவு செல்வந்தர்கள் அவர்கள்.

வீட்டுக் கஷ்டத்தைப் பொறுக்க முடியாமல் கடலிற்குப் போன செல்வராசனின் தந்தையின் உடல் கூடக் கிடைக்கவில்லை. மண்டைதீவிலிருந்து ஏவப்பட்ட ஷெல்லிற்குச் சிதறிக் கடலோடு கரைந்து காணாமற் போய்விட்டார்.

தாயும் அவனும் எஞ்சினர். இருவரும் பசிக்கு உண்டு சீவிப்பதே பெரும்பாடாகி விட்ட வேளையில், மண்ணெண்ணெய்யைக் குளிர வார்த்து மேசை விளக்கா எரிக்க முடியும்? ஒரு சிக்கன விளக்கைத் தேடுவதற்கே அவன் சிரமப்பட்டுவிட்டான்.

அவனது குடிசைக்கு நான்கு வீடுகள் தள்ளி தகரவேலை செய்யும் அப்பு ஒருவர் இருக்கிறார். அவர் வேலைவெட்டி இல்லாதவர். ஊர்ப் பையன்களுக்கு அவர் ஒரு தோழர். பட்டங்கட்டிக் கொடுப்பது, குரும்பட்டியில் தேர் செய்து கொடுப்பது உரபாக்கில் பள்ளிக்கூடப் பை தைத்துக் கொடுப்பது என்று எல்லா வேலையும் செய்து உதவுவார். தனிக்கட்டை. அவரிடம் செல்வராசன் ஒருநாள் போய்த் தயங்கி நின்றான்.

“என்னடா பேரா?”

“அப்பு, எனக்கொரு சிக்கன விளக்கு வேணும்…”

“செய்தால் போகிறது… போய் ஒரு ஜாம் போத்தல் எடுத்துவா” என்றார் அப்பு. செல்வராசன் மூளையைக் கசக்கியபடி நின்றான்.

“என்னடா?” “ஜாம் போத்தல் என்றால் என்ன?

“நீ ஜாம் சாப்பிட்டிருக்கிறியா?”

அப்பு தலையைச் சொறிந்தார். தன் தவறு அவருக்குப் புலப்பட்டது. கடற்கரையோரக் குடிசைகளில் வாழ்கின்ற ஏழைப் பையனிடம் ஜாம் பற்றிக் கதைத்திருக்கக் கூடாது. இன்றைய யாழ்ப்பாண இளம் பிள்ளைகளுக்குப் பல சங்கதிகள் தெரியாது.

“சிக்கன விளக்குப் பார்த்திருக்கிறாயா?” “ஓம் …..”

“அது மாதிரிப் போத்தல் ஒன்று கொண்டுவா.”

அப்படியொரு போத்தல் தேடி எடுப்பதிலுள்ள கஷ்டம் நான்கு நாட்களாக அலைந்து வீடுவீடாக விசாரித்தபோதுதான் தெரிந்தது. சிலர் இல்லை’ என்றார்கள். எங்காவது அகப்பட்டால் தங்களுக்கும் ஒன்று எடுத்துவா’ என்றனர் சிலர். ஒரு வீட்டார் ‘இப்ப ஜாம் போத்தல் சரியான விலை. ரேஸ்ரியே பத்து ரூபா கொடுக்கிறது’ என்றார்கள். கடைசியில் அவனோடு படிக்கிற அன்ரனி ஒரு போத்தலைத் தன் வீட்டிலிருந்து எடுத்து வந்து கொடுத்து உதவினான்.

அப்புவிடம் எடுத்துச் சென்றபோது, “சரி… இப்ப ஒரு சயிக்கில் ரியூப் அடிக்கட்டை ஒன்று கொண்டு ஓடிவா” என்றார். அவன் சந்திக்கடை இராசதுரையிடம் ஓடிச் சென்றான். அவர் சயிக்கிள் கடை வைத்திருந்தார்.

“அண்ணை … ஒரு ரியூப் வால்ப் அடிக்கட்டை .”

“அது எங்கயடா இப்ப கிடைக்கிறது? சிக்கன விளக்கு வந்ததும் ஒண்டும் கடையில் இருக்க விடுகிறான்களில்லை”

“அண்ணை…நான் இராவில் படிக்க…..”

இராசதுரை அவனை ஏறிட்டுப் பார்த்தார். செல்வராசனின் விழிகள் அவரிடம் இரக்கத்தோடு யாசித்தன. படிக்கக் கேட்கின்றான்,

“பொறு…” என்றபடி எழுந்து சென்று பழைய சயிக்கில் சாமான்கள் போட்டிருந்த பெட்டியைக் கிளறி ஒரு ரியூப் அடிக்கட்டையை எடுத்துவந்து அவனிடம் கொடுத்தபோது செல்வராசனின் விழிகள் நன்றியுடன் பெற்றுக்கொண்டன.

அப்பு அதன்பின்னர் வேகமாகச் சிக்கன விளக்கைச் செய்வதில் ஈடுபட்டார். அவன் அவர் அருகில் அமர்ந்து அவதானமாகப் பார்த்தான். கம்பியொன்றினைப் ‘ப’ வடிவில் வளைத்து ஜாம் போத்தலினுள் வைத்து ஆழம் பார்த்தார். ஒன்றரை அங்குலம் போத்தலின் அடித்தளத்திலிருந்து இருக்கவிட்டு கம்பியை போத்தல் விளிம்பில் செவியாக மடித்துவிட்டார். வால்ப் கட்டையில் பஞ்சுத் திரியை நுழைத்து அதனைக் கம்பியின் ப நடுவில் பிணைத்தார். பஞ்சைப் போத்தலின் அடித்தளத்தில் இட்டார். ‘ப’ வடிவக் கம்பியைப் போத்தலினுள் வைத்தார்.

“பொடி, ஓடிப்போய் அடுப்படிக்கை மண்ணெண்ணெய் போத்தல் இருக்குது, கவனமாக எடுத்து வா.”

அவன் எடுத்துவந்த போத்தலிலிருந்த மண்ணெண்ணெயில் ஒரு கரண்டியளவு கவனமாகப் பஞ்சில் விட்டார்.

“இது காணுமே, அப்பு?”

“ஒரு மணித்தியாலம் வடிவா எரிக்க இது காணும். கனக்க விட்டிடாதை. திரியும் பஞ்சும் எரிஞ்சிடும். இந்தா எடுத்துக் கொண்டு ஓடு. இராவில படி…”

அவன் சிக்கன விளக்கைக் குதூகலத்துடன் வீட்டுக்கு எடுத்து வந்தான் . அதன் மங்கிய வெளிச்சத்தில் அவன் இரவில் ஒழுங்காகப் படித்தான்.

அதில் படிப்பது கடினமாக இருந்தது.

“கொஞ்சம் பெரிய விளக்கு இருந்தால்-”

மின்கம்பத்தில் எரிந்தபடி தொங்கிய தெருவிளக்கு அவன் ஆசைக்குத் தூபமிட்டது. அப்படியொரு மேசைவிளக்கிருந்தால் நன்றாகவிருக்கும். இராவிராவாய்ப் படிக்கலாம். கல்வீட்டுக் கணேசைக் கூட படிப்பில் வெல்லாலம்.

கடைத்தெருவில் வாங்கிய பாணைத் தாயிடம் கொடுத்து விட்டு அவன் அப்புவிடம் ஓடிச் சென்றான். அவன் ஓடிவருகிற வேகத்தைக் கவனித்த அப்பு, “என்னடா பொடி? என்ன என்ன? எங்கையாவது குண்டு போட்டிட்டான்களே?” என்று படபடத்தார். –

“இல்லை அப்பு. கடைத் தெருச் சந்தியில் மின்கம்பத்தில…”

“ஆரையும் சுட்டுக் கட்டியிருக்குதோ?”

“விசர்… அதில்லையணை அப்பு. இப்ப அப்படி நடக்கிறதே?” என்றவன் தான் கண்ட தெருவிளக்கைப் பற்றி விபரித்தான்.

“நல்ல வெளிச்சம் அப்பு.”

“ஓ…” என்று அப்பு பெரிதாகச் சிரித்தது அவனுக்கு எரிச்சலைத் தந்தது.

“அந்தக் காலத்தில் எங்கட ஊருகளில ஊருகளில் இப்படித்தான் சந்திக்குச் சந்தி, கோயிலுக்குக் கோயில் தெருவிளக்கு இருக்கும். எங்கட வீட்டிற்கு முன்னிருந்த வயிரவர் கோயில் தெருவிளக்கை நான் தான் கொழுத்துகிறது.”

அவர் சொல்வதை அவனால் நம்ப முடியவில்லை. “உங்கட காலத்தில் இப்படியோ?” “ஓமென்னிறன். நம்பாமல் கேக்கிறாய்?” “எப்படியிருக்கும்?…” “ஆளுயரத் தூணின் உச்சியிலே கண்ணாடிக் கூடு. அதுக்குள்ள விளக்கு…” “மேசைலாம்போ?”

“இல்லையடா பொடி. சிக்கன விளக்கு மாதிரி தேங்காயெண்ணெயில் எரியிற விளக்கு. தேத்தண்ணி குடிக்கிற கிளாசில செய்தது….. உந்த லையிற்று வந்தவுடன் அப்படியான தெருவிளக்குகள் எல்லாம் இல்லாமற் போச்சுது. இப்ப திரும்பவும் தெருவிளக்கு வந்திட்டுது. அப்ப நாங்க ஒரு ஐம்பது அறுபது வரியம் பின்னால் போயிட்டம்.”

“போ, அப்பு, உங்கட காலத்தில் இப்படிக் குண்டு போட்டவன்களே? ஷெல் அடிச்சவங்களே? ஏகே 47 இருந்ததே? வீதியில், வீடுகளில், கோயில்களில் ஆக்கள் உடல் சிதறிக் கிடந்தவையே?”

அப்பு பேரனை ஆழமாகப் பார்த்தார்.

“அப்ப பொடி, நாங்க இன்னமும் ஒரு ஆயிரம் வரியம் முன்னால போயிட்டம் என்கிறாய்?”

அவர் சொன்னவை அவனுக்கு விளப்பமாகவில்லை. மௌனமாகக் கடற்கரைப் பக்கம் பார்த்தான். கடற்கரை வெறிச்சிட்டுக் கிடக்கின்றது. எப்படியிருந்த கடற்கரை? சோகம் கப்பிக் கிடக்கிறது.

வாழ்க்கையே சுமையாகிவிட்டது. உணவு முத்திரைகள் இல்லாவிட்டால் பல நூறு குடும்பங்கள் வாழ்ந்தவிடத்தில் புல் முளைத்திருக்கும். அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, அவை இருந்தாலும் அவற்றை வாங்க ஏழை பாழைகளிடம் பணமில்லாத அவலம்.

‘அம்மா, இம்முறை பங்கீட்டுக்கு மூன்று லிற்றர் மண்ணெண்ணெய் கொடுக்கினமாம். சங்கக்கடை மனேச்சர் போட் எழுதிப் போட்டிருக்கிறார், சீனியும் கொடுக்கினமாம்” என்று முந்தாநாள் செல்வராசன் தாயிடம் செய்தி கூறினான்.

அவள் மனதிற்குள் அழுதுகொண்டாள்.

“மலிவெல்லோ அம்மா… வெளியில் மண்ணெண்ணெய் லீற்றர் நூற்றிப்பத்து. இது இருபைத்தைந்து”.

“அதுக்கும் வாங்கக் காசு வேணுமே ராசா? சயிக்கில்கடை இராசதுரை காசு தாறன் எண்டவர். வாங்கி அவருக்குக் கொடுத்தால் ஒரு அரை முக்கால் லிற்றர் சும்மா தருவார்.”

அவன் திக்கித்துப்போய் நின்றிருந்தான். அப்பு அவனை உசுப்பினார்: “என்னடா… யோசித்துக் கொண்டு நிக்கிறாய்?…. “ஒண்டுமில்லை, அப்பு.” என்ற அவன் அவரை ஏறிட்டுப் பார்த்தான். “விசயத்தைச் சொல்லு பொடி…”

அவன் அவரை வியப்புடன் பார்த்துவிட்டுக் கேட்டான்: “அப்படியொரு விளக்குச் செய்யவேணும், அப்பு அதுக்கு என்னென்ன வேணும்?”

“அப்படி எனக்குச் செய்யத் தெரியாது. அதுக்குப் பால சிங்கத்தைத்தான் கேக்கவேணும்.”

“அது ஆர் பாலசிங்கம்?”

“அவர் தான் எங்கட மாநகரசபை ஆணையாளர். அவர் தான் தெருத்தெருவா இப்படி விளக்கு வைக்கிறார்” என்று அப்பு பெரிதாகச் சிரித்தார்.

“அப்படி எல்லாத் தெருவிலும் வைத்தால் என்ன? “ஆர் வைக்கிறது?….

“எங்கட வீட்டிற்கு முன்னால் இருக்கிற மின்கம்பத்தில் ஒரு விளக்கு இருந்தால்…. முந்தாநாள் மாரிமுத்தர் கச இருட்டில றோட்டுக் காணுக்குள்ள விழுந்திட்டார், அதுக்கு முதல் நாள் விறகுச் சுமையோட வந்த சண்முகமண்ணை பிரண்டு விழுந்து பாவம் அப்பு சரியான காயம், எல்லாவிடத்திலும் தெருவிளக்கிருந்தால் சனத்துக்கு நல்லது. என்ன அப்பு?” என்றான் சிறுவன். அப்பு

அவனைக் கவலையோடு பார்த்தார்.

அவன் தொடர்ந்தான். “அந்தக்காலத்தில் வயிரவர் கோயில் முகப்பில் விளக்குக் கொழுத்தின மாதிரி நீங்களும் இப்ப தெருவில கொழுத்துங்களன் அப்பு.”

அவர் சிந்தனையில் ஆழ்ந்தார். செல்வராசன் தன் வீட்டிற்கு ஓடிப்போவதைப் பார்த்தபடி அவர் நின்றிருந்தார்.

அவன் சென்றதன் பின்னரும் அவன் வீசிய சொற்களின் வாசனை அவ்விடத்தில் நிரம்பியிருப்பதாகப் பட்டது.

அவர் படுக்கைக்குப் போகும்வரை அவன் கூறிவிட்டுச் சென்றவற்றையே எண்ணமிட்டார்.

‘நல்ல பொடியன், கெட்டிக்காரனா வருவான்.’

வாங்கில் கிடந்தவாறு இருளை ஊடுருவிப் பார்த்தார்.

அப்புவுக்கு நித்திரை வரவில்லை. தன் வாங்கிலிருந்து எழுந்து வெளியில் வந்தவர் செல்வராசனின் குடிசைப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தார். அவர் அப்படியே விறைத்துப்போய் சிலையாகிவிட்டார். உண்மைதானா?

செல்வராசனின் குடிசைக்கு எதிரிலிருந்த தெரு மின்கம்பத்தில் சிக்கன விளக்கொன்று மினுங்கிக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது. அணைந்துவிடும்போல ஒளி அடங்கி மினுமினுத்தது, அவர் அடுக்களைக்குள் போய் மண்ணெண்ணெய்ப் போத்தலைக் கையிலெடுத்துக் கொண்டார்.

செல்வராசன் ஏற்றிவைத்த தெருவிளக்கை நோக்கித் திருப்தியுடன் நடக்கத் தொடங்கினார்.

– மல்லிகை, செப்டம்பர், 1994.சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *