துளிரவிடுங்கள். ப்ளீஸ்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 4,503 
 

இருநூறு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் A பிளாக்கில், நாலாம் நம்பர் வீட்டில்,

பிரபல பண்பலை வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த, பாடல் ஒன்றை தலையை ஆட்டி ரசித்த வண்ணம், மதிய உணவை ருசித்துக் கொண்டிருந்த ரத்தினம், அழைப்பு மணி அழைக்க,

யாருப்பா என்றவாறு கதவைப் பாதி மட்டும் திறந்து, மூக்குக் கண்ணாடியை சரி செய்து கொண்டே,

தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்க்க,கண்ணன் ஒரு பார்சலோடு நின்று கொண்டிருந்தான்..

சார், பாட்டெல்லாம் பலமா இருக்கு, வயசானாலும் லைஃபை நல்லா என்ஜாய் பண்றீங்க,என்று குறும்பாக கண்ணடித்தான் கண்ணன்..

ஒழுங்கா வந்த விஷயத்த சொல்லு, அதிகப்பிரசிங்கித்தனமா பேசிட்டு…

சார், சிலிண்டர் லாரி வந்திருக்கு, காலி சிலிண்டர் எடுக்க வந்தேன், அப்புறம் ராதா மேடத்துக்கு ஒரு பார்சல் வந்திருக்கு, பிரிச்சு பார்த்துடாதீங்க,அப்புறம் மேடம் கிட்ட நான் திட்டு வாங்கணும்….

அந்த இங்கிதமெல்லாம் நீ எனக்கு சொல்லித்தர வேண்டியதில்லை, சிலிண்டரை எடுத்துட்டு இடத்தைக் காலி பண்ணு மொதல்ல..வர வர உனக்கு வாய்க்கொழுப்பு அதிகமாயிட்டே போகுது.. எல்லாம் ராதா குடுக்குற இடம் என்று முணுமுணுத்துக்கொண்டே உள்ளே சென்ற ரத்தினத்தைப் பார்த்து, கண்ணன் நமட்டுச் சிரிப்புடன் சிலிண்டரை எடுத்துச்சென்றதும் கதவை படாரென்று சாத்தி விட்டு மீதமிருந்த சாதத்தை ருசிக்க ஆரம்பிக்க சாதம் ஆறிப்போய் விட்டிருந்தது..

அன்று மாலை,

அலுவலகத்திலிருந்து திரும்பிய ராதா, அப்பா, எனக்கு ஏதாவது பார்சல் வந்திருக்கா?

ஆமாம்மா, பார்சலை பிரிக்காம உன்கிட்ட குடுக்கணும்ன்னு அட்வைஸ் பண்ணிட்டு போயிருக்கான் கண்ணன்…. டீபாய் மேல இருக்கு எடுத்துக்க.. அவனுக்கு பெரியவங்ககிட்ட எப்படி மரியாதையா பேசணுங்கிற இங்கிதம் கொஞ்சம் கூட இல்லம்மா.. 65 வயசு ஆச்சு எனக்கு, என்கிட்ட என்னம்மா நையாண்டி வேண்டி கிடக்கு.. ..

சரிங்கப்பா, நான் கண்ணனுக்கு அட்வைஸ் பண்றேன்… ரெண்டு பேரும் இப்போ காபி சாப்பிடலாமா என்றவாறு சமயலறைக்குள் சென்ற ராதா,

அப்பா, இன்னைக்கு வள்ளி வேலைக்கு வரலையா? கிச்சன்ல பாத்திரம் எதுவும் துலக்கி வைக்கல,எல்லாம் போட்டது போட்ட படியே இருக்கு?

இல்லம்மா அவ குழந்தைக்கு காய்ச்சல்ன்னு ஹாஸ்பிடல் போகணுன்னு காலையில வந்து ஒருநாள் லீவு கேட்டா,மருந்து செலவுக்கு ஐநூறு ரூபாயை கையில குடுத்து டாக்டர் கிட்ட அழைச்சுக்கிட்டு போக சொன்னேன்…

அடடா அப்படியா, பாவம் வள்ளி வாய்பேச முடியாத, மனநிலை சரியில்லாத அந்தக் குழந்தையோட ஆறு வருஷமா தன்னந்தனியா போராடிட்டிருக்கா.. வள்ளி லீவுன்னு கண்ணன் கிட்ட சொல்லியிருந்தா, பக்கத்து ப்ளாக்ல வேலைக்கு வர்ற வேற யாரையாவது வள்ளிக்கு பதிலா ஏற்பாடு பண்ணிருப்பானே?

அவன் ஒரு இங்கிதம் தெரியாத பையன்ம்மா… நீ மட்டுமில்ல பிளாட்ல எல்லோருமே அவனை தான் தலையில தூக்கி வெச்சு கொண்டாடறீங்க… அவனும் அதை சாதகமா எடுத்துக்கிட்டு அதிகப்பிரசிங்கித்தனமா எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைச்சுக்கிறான்..

அப்பா, உங்களுக்கே தெரியும், இந்த ஒரு வருஷமா, அபார்ட்மெண்ட்ல எல்லோருக்கும் கண்ணன் இல்லேன்னா கை ஒடிஞ்ச மாதிரி இருக்கும்..,கூரியர் டெலிவரி பண்றவங்க, காய்கறி கொண்டு வர்றவங்க, food டெலிவரி பண்றவங்கன்னு யாரும் கண்ணனைத் தாண்டி அபார்ட்மெண்ட்க்குள்ள அவ்வளவு சுலபமா நுழைய முடியாது..சில நாட்கள்ல செக்யூரிட்டி வேலையையும் சேர்த்து பார்ப்பான். உங்களுக்கு மட்டும் ஏன்ப்பா கண்ணனைப் பிடிக்கல.. உங்ககிட்ட ஒரு மகன் மாதிரி பாசமா தான் இருக்கான்..அப்பப்போ உங்களை சிரிக்க வைக்கணும்ன்னு முயற்சி பண்ணி வாங்கிக் கட்டிக்கிறான் அவ்வளவுதான்..

நீ என்ன வேணாலும் சொல்லு, எனக்கு அவனோட நடவடிக்கை சுத்தமா பிடிக்கல…..

மறுநாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ராதா, துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்த வள்ளியிடம், குழந்தைக்கு என்ன அடிக்கடி காய்ச்சல் வருது, இப்போ பரவாயில்லையா? டாக்டர் கிட்ட அழைச்சுக்கிட்டு போனியா? இல்லம்மா டாக்டர் இல்லேன்னு திரும்பி வந்து மருந்துக்கடையில் மாத்திரை வாங்கிக்குடுத்தேன். அய்யா தான் ஐநூறு ரூபா குடுத்தாரும்மா …இப்போ காய்ச்சல் இல்லம்மா, இன்னைக்கு ஸ்கூலுக்கு கூட அனுப்பல..

டாக்டர் கிட்ட கேட்காம இப்படி உன் இஷ்டத்துக்கு மருந்து வாங்கி குடுக்கற பழக்கத்தை மொதல்ல நிறுத்து… இது வரைக்கும் மூணு நாலு தடவை உடம்பு சரியில்லேன்னு சொல்லிருக்க ஆனா ஒரு தடவை கூட டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போகல.. ஆமா சுஜி எங்கே? என்று ராதா கண்களால் தேட, மேடம் நானும்,சுஜியும் இங்க இருக்கோம் என்று சுஜியை தன் முதுகில் உப்பு மூட்டை தூக்கியபடி மாடிப் படிக்கட்டிலிருந்து இறங்கி ராதாவின் வீட்டின் கதவருகில் நின்றான் கண்ணன்.. சுஜியோ கண்ணனின் முதுகில் தன் கைகளால் மாறி மாறிக் குத்திக்கொண்டு, மாடிக்குப் போலாம் என்று சைகையில் சொல்ல,

கண்ணன், சுஜிக்கு உடம்பு சரியில்லன்னு தெரியுமில்ல? எதுக்கு மாடிக்கு கூட்டிட்டு போனே?

சுஜி தான் மொட்டை மாடி போகணும்ன்னு, கையை மேல மேல காட்டி ஒரே அடம் பிடிச்சா,சரின்னு கூட்டிட்டு போனேன் மேடம்….

சரி சரி லதா மாமி வீட்ல UPS வேலை செய்யலையாம், உங்களை தேடிட்டிருந்தாங்க, போய் என்னன்னு பாருங்க..

இதோ இப்பவே போறேன் மேடம்,சுஜிக்குட்டி இந்தாங்க சாக்லேட்டை பிடிங்க என்று சுஜியின் கையில் திணித்து விட்டு படிக்கட்டுகளில் துள்ளிக்கொண்டு ஓடினான் கண்ணன்..

அதென்னவோ தெரியலம்மா, சுஜிக்கு கண்ணன் மேல ரொம்பப் பிரியம்..வாரத்துல சனி ஞாயிறு ரெண்டு நாள் தான் சுஜியை என்கூட கூட்டிட்டு வரேன்.. அப்போ என்னை வீட்டு வேலை செய்ய விடாம, அங்கேயும் இங்கேயும் ஓடிட்டு ரகளை பண்ணுவா, கண்ணன்கிட்ட சொல்லிட்டா போதும்,அன்னைக்கு நாள் பூராவும் அவளை கூடவே கூட்டிக்கிட்டு, அவர் வேலையையும் பார்த்துட்டு இருப்பார்..

இவர்களின் உரையாடலைக் கேட்ட ரத்தினம், கடுமையாக, அவனுக்கு அதிகப் பிரசிங்கித்தனமா ஏதாவது செஞ்சுட்டே இருக்கணும்..இப்போ கூட பாரு உன் புள்ளைய உப்பு மூட்டை தூக்கிட்டு வர்றான்..கண்ட கண்ட சாக்லேட் வாங்கிக் குடுத்து புள்ளையைக் கெடுக்கறான் …

சில நாட்களுக்குப் பிறகு,…

இன்னைக்கு சுஜிக்கு பிறந்தநாளு, ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா..

நேத்தே சொல்லியிருந்தா சுஜிக்கு டிரஸ் வாங்கி குடுத்திருப்பேனே வள்ளி…..

நேத்தே அய்யாகிட்ட சொன்னேன், உங்ககிட்ட சொல்லலையாம்மா? காலையில ஆசிர்வாதம் பண்ணி இந்த புது கவுனை அவரே போட்டு விட்டாரும்மா …என் புள்ள அதிர்ஷ்டக்காரிம்மா..

எங்க ஊட்டுக்காரர் மட்டும் உயிரோட இருந்திருந்தா, எம்புள்ள இப்படி அழகா கவுன் போட்டுட்டு நிக்கறதை பார்த்தாபூரிச்சுப் போயிருப்பார் என கண் கலங்க,சுஜி கண்ணன் பரிசளித்த கரடி பொம்மையைக் மடியில் வைத்து தன் மொழியில் கொஞ்சிக் கொண்டிருந்தாள்…

நல்லநாள் அதுவுமா கண்ணைக் கசக்கிட்டு நிக்காம, வீட்டுக்குப் போனதும் புள்ளைக்கு திருஷ்டி சுத்தி போடு ..

சுஜி இங்க வாங்க இந்த பச்சை கலர் வளையலைப் போட்டுக்குங்க, உங்க கவுனுக்கு மேட்ச்சா இருக்கும்..என்று ராதா வளையலைப் போட்டு விட, சுஜி கையை மேலும் கீழும் ஆட்டி வளையலின் சப்தத்தை ரசித்தாள்…

மறுநாள் …

வள்ளிக்கா எங்க இப்போதான் வேலைக்கு வந்தீங்க அதுக்குள்ளே எங்கே பையை எடுத்துட்டு கிளம்பிட்டீங்க?

கண்ணன் தம்பிக்குத் தெரியாம கேட்டை தாண்ட முடியுமா? ரேஷன் கடைக்குப் போயிட்டு வரேன்.. அரை மணி நேரத்துல வந்திடுவேன்..

அதான பார்த்தேன், சுஜி எங்கே அக்கா?

ராதா மேடம் வீட்ல விளையாடிட்டு இருக்கா…

சரிக்கா, சீக்கிரம் வந்துடுங்க, சுஜி ஏதாவது குறும்பு பண்ணி,ரத்தினம் அய்யா கன்னாபின்னான்னு திட்ட ஆரம்பிச்சுடுவார்..

ஆமாம் தம்பி போயிட்டு வரேன் நேரமாச்சு…..

தலைவலி அதிகமாக இருந்ததால்,மதியம் விடுப்பு எடுத்துக்கொண்டு,சீக்கிரமாகவே அலுவலகத்திலிருந்து திரும்பினாள் ராதா.., கண்ணனின் அறையைக் கடக்க, சுஜியின் கையில் இருந்த காயங்களுக்கு மருந்து தடவிக்கொண்டிருந்தான் கண்ணன். சுஜி பிய்ந்து போன கரடி பொம்மையை இறுகக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஒன்றும் புரியாத ராதா,

சுஜிக்கு என்ன ஆச்சு கண்ணன்?

வள்ளிக்கா ரேஷன் கடைக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டுப் போனாங்க மேடம்..B ப்ளாக்ல பிளம்பிங் ஒர்க் நடக்கறதை கண்காணிக்க போயிட்டு இப்போதான் ரூமுக்கு வந்தேன்..சுஜி அழுதுட்டு உக்காந்திட்டிருந்தா… நான் சுஜிக்கு நேத்து பிறந்த நாளுக்கு வாங்கிக்கொடுத்த கரடி பொம்மையை பிடுங்க முயற்சி பண்ணிருப்பாங்க போல, பொம்மையைப் பாருங்க மேடம் துண்டா துண்டா பிய்ச்சு குடுத்திருக்காங்க…. நீங்க வாங்கிக்குடுத்த வளையலை கூட ஒடைச்சிருக்காங்க மேடம்..பாவம் சுஜிக்கு அவளுக்கு என்ன நடந்ததுன்னு கூட சொல்லத் தெரியல..

என்ன கண்ணன் இது, வாய் பேச முடியாத குழந்தைன்னு தெரிஞ்சும் இப்படியா மிருகத்தனமா நடந்துக்குவாங்க? சுஜியோட பாஷை உங்களுக்கு தான் நல்லா புரியும்.. யார் என்னன்னு விசாரிச்சு சொல்லுங்க….. எனக்கு ரொம்ப தலை வலிக்குது, நான் வரேன்..

சரிங்க மேடம் என்றான் சுஜியின் தலையை வருடியவாறே…

***

என்னம்மா இவ்ளோ சீக்கிரமா வந்துட்ட, உடம்புக்கு ஏதாவது சரி இல்லையா?

ரொம்ப தலைவலியா இருந்துச்சு,permission போட்டுட்டு வந்துட்டேன்..வரும் போதுதான் பார்த்தேன், சுஜியோட பொம்மையைக் கேட்டு யாரோ அவளை தொந்தரவு பண்ணினதுமில்லாம,நகத்துல கீறி இருப்பாங்க போல, சுஜி கையெல்லாம் ரத்தக்காயம்.. கண்ணன் தான் மருந்து போட்டுட்டிருந்தான்.. ஈவினிங் அஸோசியேஷன் மீட்டிங் இருக்கு…யாருன்னு விசாரிக்கணும் ..

ராதா, குழந்தைங்க ஒண்ணா விளையாடும்போது ஒண்ணுக்கொண்ணு அடிச்சிக்கிறது சகஜம்.. இதெல்லாம் பெரிசு பண்ணிட்டு இருக்காம போய் ரெஸ்ட் எடும்மா…

அப்பா, இன்னைக்கு சனிக்கிழமை, அபார்ட்மெண்ட்ல இருக்கற மத்த குழந்தைங்க எல்லோரும் டான்ஸ் கிளாஸ், யோகா கிளாஸ்ன்னு போயிருப்பாங்க..வேற யாரா இருக்கும்?

அந்த கண்ணன் கூட கிறுக்குத்தனமா எதாவது செஞ்சிருப்பான்.. நீ இப்போ தேவையில்லாம டென்ஸன் ஆகாம போய் ரெஸ்ட் எடு…..

உங்களுக்கு கண்ணனை குறை சொல்லலேன்னா தூக்கமே வராதே என்று அறைக்குள் சென்றாள் ராதா..

***

சில வாரங்களுக்குப் பிறகு, ராதா வெளியே சென்று விட்டு வீடு திரும்புகையில், அபார்ட்மெண்ட் முன்பு பெரும் கூட்டமே கூடியிருந்தது.. அய்யோ என்னை அடிக்காதீங்க, நான் எந்தத் தப்பும் செய்யல என்று ஒரு குரல் கதற, அது கண்ணன் குரல்தான் என்று மனதிற்குள் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டாள் ராதா.. வேகமாக கூட்டத்தை நோக்கி சென்றவள், கண்ணனின் நிலையைப் பார்த்து அதிர்ந்தாள்.. சட்டை கிழிந்து, உதட்டிலும் கன்னத்திலும் குருதி வழிய, குடியிருப்பு வாசிகளிடம் அடி வாங்கிக்கொண்டிருந்தான்…

ஆளாளுக்கு அவனை வசைபாடிக்கொண்டும் இருந்தனர்..

“இவன் அந்தப் புள்ளையை கூடவே கூட்டிக்கிட்டு சுத்தும்போதே நெனச்சேன்..”

“அதென்னவோ வேலைக்காரி குழந்தையை இப்படி தாங்கறானேன்னு நானும் யோசிச்சேன்”.

“இவனை இனிமேல் இங்க வெச்சிருக்கவே கூடாது”.

“மொதல்ல போலீசுக்கு போன் பண்ணுங்க”.

கூட்டத்தை விலக்கிக்கொண்டே உள்ளே நுழைந்த ரத்தினம் போலீஸுக்கெல்லாம் சொல்ல வேண்டாம், விசாரணை அப்படி இப்படின்னு நம்மளை அலைக்கழிப்பாங்க.. அப்பா இல்லாத பெண்குழந்தை. தேவையில்லாம நாமே பேரைக் கெடுத்த மாதிரி ஆயிடும்… சத்தமில்லாம அவனை இங்கிருந்து விரட்டற வழிய பார்க்கலாம் என்று கூற, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் என்பதால் அவரது கருத்தை அங்கிருந்த அனைவரும் ஏற்றனர்..

வள்ளி, சுஜியை மடியில் வைத்துக் கதறிக்கொண்டு ஒரு ஓரமாய் அமர்ந்திருக்க, அருகில் சென்று குழந்தையைப் பார்த்ததும் குலை நடுங்கிப்போனாள் ராதா… பிஞ்சுக்கன்னங்களிலும், கைகளிலும் நகக்கீறல்களுடன், ரத்தம் சொறிய தன் மிரண்ட பார்வையால், உடல் நடுங்கிக்கொண்டே. தனது கைகளால் கண்ணனை சுட்டிக்காட்டி ராதாவிடம் சைகையில் ஏதோ சொல்ல முற்பட, நடந்தவற்றைப் புரிந்து கொண்டாள் ராதா..

கண்ணன் வெளியே விரட்டப்பட்டதும், அழுதுகொண்டே வள்ளி, ராதாம்மா அந்த படுபாவிப்பய, என் குழந்தை மேல உண்மையா பாசமா இருக்கான்னு நெனச்சு ஏமாந்துட்டேன்.. குழந்தைன்னு கூடப் பார்க்காம இப்படி மிருகத்தனமா நடந்துக்குவான்னு தெரியாம போயிடுச்சும்மா.. நம்ம வீட்ல அய்யா கிட்ட விட்டுட்டு தான் மொட்டை மாடியில காயப்போட்டிருந்த துணியெல்லாம் எடுத்துட்டு திரும்பி கீழ இறங்கி வரும்போது, நம்ம வீட்டுக்கு வெளியே, அந்த படுபாவி கண்ணன் பாப்பாவை கையில் ஏந்திட்டு, என்னைப்பார்த்ததும் ஓடிவந்து என்கிட்ட ஏதோ சொல்ல வந்தான்.. பாப்பா முகத்துல, கன்னத்துல, கையில நிறைய காயம்..

அதுக்குள்ளே ரத்தினம் அய்யா வீட்டிலிருந்து வெளிய வந்து, கண்ணனை ஓங்கி ஒரு அறை விட, பக்கத்து வீட்ல மேல் வீட்ல கீழ் வீட்ல எல்லோரும் கூட்டம் கூடிட்டாங்க.. அவனை அடிச்சு வெளியே விரட்டும் போது தான் நீங்க வந்தீங்க..

கதறிக்கொண்டிருந்த வள்ளியை ஆறுதல்படுத்தி, தனது காரிலேயே அவள் வீட்டில் இறக்கி விட்டு, வள்ளி, ரெண்டு நாள் நீ வேலைக்கு வர வேண்டாம்..சுஜியை பத்திரமா பார்த்துக்க கவலைப்படாம நிம்மதியா தூங்கு.. பின்னர் மீள முடியாத அதிர்ச்சியுடன், வீடு திரும்பிய ராதா பலவித மனக்குழப்பங்களுடன் உறங்கிப்போனாள்..

மறுநாள் காலை…

அப்பா, டைனிங் டேபிள் மேல டிஃபன் எடுத்து வெச்சிருக்கேன்.. மறக்காம சாப்பிடுங்க.. நான் புறப்படறேன்..

சரிம்மா நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன்…

சாப்பிடும்போது ஹாட் பாக்சின் அடியில் பேப்பர் ஒன்று வைத்து மடிக்கப்பட்டிருக்க, பிரித்து படிக்க ஆரம்பித்தார் ரத்தினம்

அப்பா,

எந்தவொரு பெண்ணும் சந்திக்கக் கூடாத சூழ்நிலையில் நான் இருக்கிறேன்…. வள்ளிக்கு பலவகைகளில் உதவி செய்யும்பொழுது உங்களின் மனிதாபிமானத்தை மதித்தேன்… பிய்ந்து போன பொம்மையையும், உடைந்த வளையல்களையும் உங்கள் அறையின் குப்பைக்கூடையில் கண்டதும் சந்தேகம் கொண்டேன்…..நேற்றிரவு உங்கள் கையில் ரத்தக்காயங்களைப் பார்த்ததும் உறுதிப் படுத்திக்கொண்டேன், அப்பா என்ற சொல்லிற்கு நீங்கள் அருகதை இல்லாதவர் என்று… ..

அதற்கு மேல் படிக்க முடியாமல், உடம்பெல்லாம் வியர்த்து செய்வதறியாது நிலைகுலைந்து நின்றார்..

அன்று மாலை ஊடகங்களில் ,

“ஆறு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தமைக்காக ரத்தினம் என்ற 65 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்”….

டீவியை ஆஃப் செய்து விட்டு, ராதா அலைபேசியை எடுத்து கண்ணனின் எண்ணிற்கு டயல் செய்தாள்….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *