துணை நடிகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 10, 2013
பார்வையிட்டோர்: 20,311 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தச் சிற்றூரில் ஒரு அம்மையாருக்குப் பொன்னாடை போர்த்தப் போவது பற்றிய செய்தி மாவட்டச் செய்தித்தாளில் வந்திருந்தது. இவ்விழாவுக்குச் சோபியாவில் இருந்தும் விருந்தினர்கள் வரப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

குறித்த நாளில் நூல் நிலையக் கிளப்பில் விழா ஆரம்பிக்கப்பட்டது. மண்டபம் முழுவதும் மக்கள் நிறைந்து இருந்தனர்.

சோபியாவிலிருந்து வந்தவர்கள் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர்.

“இதென்ன, சம்பிரதாயமான பாராட்டு விழாதானே!” என்று பலரும் பாராட்டும்படி அசமந்தமாக இருந்தனர். கூட்டத்தினர் முகத்தில், அலுப்பின் அறிகுறிகள் அப்பட்டமாகத் தெரிந்தன. அங்கு இருந்த பள்ளிச் சிறுமிகளின் முகத்தில் மட்டுமே உற்சாகம் மிளிர்ந்தது.

கூட்டத்தினரின் மனோ நிலையை ஊகித்துக் கொண்டு விழாக் கமிட்டித் தலைவர், சுருக்கமாக விழாவை முடித்துக் கொள்ள நினைத்தார். ஆனால் அவர் முன்னிருந்த நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்த பேச்சாளர்களின் பட்டியல் மிகவும் நீளமாக இருந்தது. பலரது பெயர்களை நீக்கிவிட நினைத்தார். ஆனால் ஒவ்வொருவரும் ஒரு ஸ்தாபனத்தின் பிரதிநிதியாக இருந்ததால், அவ்வாறு செய்ய முடியவில்லை! கடைசியில் ஒருவரது பெயருக்கு நேராக ‘தனிப்பட்ட முறையில் பேசுவார்’ என்றிருந்தது.

ஆம்; இந்த ஆசாமியின் பெயரையாவது நீக்கி விடலாம் என்று நினைத்த தலைவர் பென்சிலைக் கையில் எடுத்தார். ஆனால் ஏதோ ஓர் உணர்வு அவரது கைகளைக் கட்டிப் போட்டது.

விழாக் கூட்டம் தொடங்கியது. சம்பிரதாயப் பேச்சுக்கள்

ஒன்றன்பின் ஒன்றாகத் தொடங்கின. கூட்டத்தினர் விளக் கெண்ணெய் குடிப்பதுபோல் முகத்தைச் சுளித்துக் கொண்டு அலுப்புடன் அமர்ந்து இருந்தனர். கடைசியில் தலைவர், “தோர்ஸ்தோயன் தோப் ரோவ்…பேசுவார்.அவர்” என்று தட்டுத் தடுமாறிக் கூறினார். “என்னடா இது! தலைவர் தடுமாறுகிறார்?” என்று பலரும் மேடையை உற்று நோக்கினர்.

இராணுவ உடையிலிருந்த ஒரு கர்னல், “நான் வெகுநேரம் பேச வேண்டி இருக்கும் என்று அஞ்சுகிறேன். ஆனால் அதற்குள்ளே நான் இங்கு வந்திருக்கிறேன்! எனவே தோழர்களே, அருள்கூர்ந்து எனது சொற்பொழிவை இறுதிவரை கேளுங்க…”

பதட்டமில்லாத நிதானமான குரலில் அவர் பேசினார். “நான் நாஜிகளின் ஆக்ரமிப்பின்போது தலைமறைவாக இருந்த காலத்தில் என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று. அதைப் பற்றிக் கூறவே இங்கு வந்துள்ளேன். 1943 வசந்த பருவத்தில் நான் ஒரிடத்திற்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண் டிருக்கும்போது இரகசிய போலீஸ் ஏஜண்ட் ஒருவன் என்னைப் பின் தொடர்வதை உணர்ந்தேன். எனவே திசைமாறி, வளைந்து வளைந்து செல்லத் தொடங்கினேன். ஆனால் என்னைப் பின் தொடர்ந்த ஆசாமி விடாக்கொண்டனாக இருந்தான். அவனுடன் மற்றொரு ஆளும் “மப்டி”யில் இருந்தான். ஊரின் எல்லையை அடைந்ததும் நான் காட்டை நோக்கி ஓடத் தொடங்கினேன். அப்படியாவது அவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.

ஆனால் என்னைத் துரத்திக் கொண்டு ஒடி வந்தவர்கள், “நில் ஓடதே” என்று கூவியது என் காதில் வந்து விழுந்தது. என் தலைக்குமேல் அவர்கள் சுட்டனர். என்னை உயிருடன் பிடிக்க வேண்டும் என்பது அவர்கள் திட்டம் என்று தெரிந்து விட்டது.

ஆயினும் நான் ஒடிக்கொண்டே இருந்தேன். ஆனால் இதற்குள் என்னைத் துரத்தி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அப்போது அங்கு ஓர் ஒதுக்குப் புறத்தில் தன்னந்தனியாக ஒரு சிறிய வீடு இருந்ததைக் கண்டேன். உடனே அவ்வீட்டின் தோட்டத்துப் பக்கம் சென்று வீட்டினுள் புகுந்து, கதவை அடைத்துக் கொண்டேன். அப்போது நான் அங்கே கண்ட காட்சி என் இரத்தத்தை உறையச் செய்தது.

அங்கே ஒர் இளம் பெண் வெண்ணிறச் சால்வையைப் போர்த்திக் கொண்டு கையில் ஒர் புத்தகத்துடன் நின்று கொண்டிருந்தாள்! அவள் என்னைக் கண்டதும் அதிர்ச்சியால் கூச்சலிட்டாள். அதற்குள் என்னைத் துரத்தி வந்தவர்கள் அந்த இடத்தை அடைந்து விட்டனர். உடனே அந்தப் பெண் தனது வாயில் கையை வைத்துப் பொத்திக் கொண்டாள். இதை நான் கண்ணால் கண்டேன்.

நான் உடனே என் ரிவால்வரை எடுத்துத் தயாராக கையில் வைத்துக் கொண்டேன். எனது உடலில் கடைசி இரத்தம் உள்ளவரை போராடுவது என்று நான் முடிவு செய்து கொண்டேன்.

அப்போது அந்த ரகசிய போலீஸ் ஏஜெண்டுகள் வீட்டின் பின்பக்க, ”கேட்டைத்” திறந்து கொண்டு, அங்கிருந்த பூச்செடிகளை மிதித்துக்கொண்டு வந்தனர்.

உடனே நான் மறைந்திருந்த வீட்டைச் சேர்ந்த இளம்பெண் வெளியே ஓடிவந்து, பெருங்கூச்சல் போட்டாள்.

“ஏ! முரடர்களே, உங்களுக்கு அறிவில்லையா? மலர்ச் செடிகளை இப்படியா பாழாக்குவது? எனதருமை மலர்களே. உங்களை அழித்த பாவிகள் ஆயிரம் முறை மடிந்து சாகட்டும்! போலீஸ்காரர்கள் அப்பெண்ணின் புலம்பலைக் கேட்டுத் தயங்கி நின்றனர்.

“அம்மா, பயப்படாதீர்கள்! ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிடுங்கள்; போதும். இங்கு சற்று முன்பு ஒரு ஆள் ஓடிவந்தானா?” போலீஸ் ஏஜெண்டுகளில் ஒருவன் கேட்டான்.

“ஐயோ! என் அன்பே! உண்மையாகவே நீ இறந்து விட்டாயா! கேளுங்களைய்யா, என் சோகக்கதையை. அவர் ஒரு மாணவர், பிரெஞ்சுக்காரர். காஸ்டன் என அவரை அழைப்பார்கள்… இளம் தாடி வளர்த்து வந்தார்.அவர்… எப்பொழுதும் நீண்ட தோல் காலணி அணிவார். ஏன், என்னுடைய உயிர் இன்னும் போகவில்லையே!! அவர் என்னை உயிரினும் பெரிதாக நேசித்தார். என் அன்பு ராஜா! ஐயோ! மறைந்தனையோ!!”

“இந்தா பாரம்மா! என்ன உளறல் இது! நீ யாராவது ஆளைப் பார்த்தாயா?”

“என்னய்யா, காட்டுக்கூச்சல் போடுறே! என் காதலன் மட்டும் இப்பொழுதிருந்தால். அன்பே! என் கண்ணாளா! ஐயா, என்னை இப்படியா விட்டுச் செல்ல வேண்டும்.”

இவ்வாறு கூறிக்கொண்டே அப்பெண்மணி அந்தப் போலீசுக்காரர்கள் இருவரையும் கட்டிக்கொண்டு அழத் தொடங்கி விட்டாள்.

“பைத்தியம்! நல்ல பைத்தியம்!” என்று கூறிக் கொண்டே போலீஸ்காரர்கள் அவ்விடம் விட்டு அகன்றனர்.

பிறகு அவள் வீட்டுக்கு வந்தாள். இளம் மங்கை தன்னந் தனியாக இருக்கும் வீட்டில் இருப்பது தகாது என்று எண்ணி வெளியேற நினைத்தேன் நான். எனவே தோட்டத்துக் கதவைத் திறந்தேன். அப்போது, “சற்றுப் பொறுங்கள்” என்று அன்பு ததும்பும் குரலில் அவள் என்னைப் பார்த்துக் கூறினாள்.

அவள் என்னைப் பார்த்த பார்வையில் எவ்வளவோ வாஞ்சையும் அன்பும் நிறைந்து இருந்தன. போலீஸ்காரரிடம் பைத்தியம் போல் நடந்து கொண்ட அதே பெண்தானா இவள் என்று ஐயமுற்றேன் நான்.

ஆம்; அவளேதான் அதே எழில் முகம் வெண்ணிற சால்வை.

“ஏன் அங்கேயே நிற்கிறீர்கள்? வாருங்கள் வீட்டிற்குள்” என்று அழைத்தாள்.

மறுக்க மனமின்றி அவளைப் பின் தொடர்ந்தேன்.

அந்த அறையில் பல நாடகக் காட்சிகளின் புகைப் படங்கள் தொங்கவிடப்பட்டு இருந்தன.

“தாங்கள் ஒரு நடிகையா?” என்று கேட்டேன்.

“நடிகை என்று சொல்லிக் கொள்ள முடியாது. துணை நடிகை என்று வேண்டுமானால் கூறலாம்” என்றாள் அப்பெண். “உண்மையிலேயே, நீங்கள் ஒரு பைத்தியம் என்றே நான் நினைத்தேன், நீங்கள் போட்ட கூச்சலைக் கேட்டு! உண்மையிலேயே நீங்கள் உங்கள் பாகத்தை நன்கு நடித்தீர்கள்!”

“இல்லை; அப்படி ஒன்றுமில்லை. எனக்கு எப்பொழுதுமே எனது நடிப்புத் திறமை பற்றி திருப்தி ஏற்பட்டதில்லை. நான் ஒரு குட்டி நடிகை. சிறிய பாகங்களையே ஏற்று நடித்து வருபவள். இன்று நான் அவர்கள் முன் நடித்ததுபோல் மோசமாக நடித்து இருந்தால், நாடகக் கொட்டகை காலியாகி விட்டு இருக்கும்” என்றாள்.

கர்னல் சிறிது நேரம் பேசுவதை நிறுத்தினார். பிறகு கூறினார்: “அப்போது நான் அப்பெண்மணியின் கரத்தை முத்தமிட மறுத்து விட்டேன். எனவே, இன்றாவது அதை நான் செய்ய விரும்புகிறேன்”

மண்டபத்தில் கரகோஷம் வானைப் பிளந்தது. எந்த அம்மையாருக்குப் பொன்னாடை போர்த்துவதற்காக விழா நடத்தப்பட்டதோ அந்த அம்மையாரின் கரங்களை பேச்சாளர் முத்தமிட்டார். அவள் எப்பொழுதுமே சிறிய பாகங்களை வகித்து வந்தவள், எப்பொழுதுமே ஒரு துணை நடிகையாக ஒதுங்கி நின்றவள் என்பதை தலைவருக்குப் பின்னால் அவளது உருவம் மறைந்திருந்தது!..

– 14-3-1965

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *