திருக்குறள் கதை (118) – தராசு முள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 21, 2012
பார்வையிட்டோர்: 14,076 
 

சந்திரன் அந்த லண்டன் அசைன்மென்டில் மிகவும் ஆர்வமாக இருந்தான். அது மிகவும் சவால் நிறைந்த வேலை. ஆனால் அந்த அசைன்மென்ட் மட்டும் கிடைத்து விட்டால் அந்த போட்டி கம்பெனியின் மார்க்கட்டை வீழ்த்தி தன் கம்பெனியை லண்டன் மார்க்கட்டில் நிலை நாட்டிவிட முடியும் என்று நம்பினான். சாதிக்க வேண்டும் என்ற வெறி அவனுக்கு எப்போதுமே உண்டு.

ஹெட் ஆபீஸ் பல பெயர்களை பரிசீலனை செய்த பின் இறுதிப் பட்டியலில் சந்திரன் அல்லது வெங்கடேஸ்வரன் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம் என்று பரிந்துரைத்தபோது கூட சந்திரன் நம்பிக்கையாக இருந்தான். ஏனென்றால் திறமை அடிப்படையில் பார்த்தால் சந்திரன் வெங்கடேஸ்வரனை விட இரண்டு படி மேல்தான். ஆனால் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை மேலிடம் நாகலிங்கத்திடம் கொடுத்தபோது சந்திரன் அந்த நம்பிக்கையை முழுதாக இழந்து விட்டான். அதற்குக் காரணம் இருந்தது.

பத்து வருடம் முன்பு சந்திரன், வெங்கடேஸ்வரன் இரண்டு பேருமே நாகலிங்கத்தின் கீழ் வேலை பார்த்தார்கள். நாகலிங்கம் எல்லோராலும் விரும்பப்பட்ட திறமையான அதிகாரி. ஆனாலும் சிறு சிறு விஷயங்களில் அவருக்கும் சந்திரனுக்கும் ஒத்துப்போகவில்லை. எதையுமே நேரடியாக மறுத்துப் பேசும் வழக்கம் கொண்ட சந்திரனோடு அவ்வப்போது சச்சரவுகளும் ஏற்பட்டதுண்டு. அவருடன் இருந்த வரை, இருவருக்கும் இடையே ஒரு ஒட்டுதல் இல்லாத உறவுதான் இருந்தது.

நாகலிங்கம் பரிந்துரைக்கப்பட்ட அந்த பைலைத் திறந்தார். அவருக்கு வெங்கடேஸ்வரனை நன்றாகவே தெரியும். எந்த வேலை சொன்னாலும் மறுத்து பேசாத ஒரு தன்மை, எல்லா ஊழியர்களையும் அரவணைத்துப் போகும் பண்பு, அத்தோடு எப்போது சென்னை வந்தாலும் ஒரு ஹலோவாவது சொல்லிவிட்டுப் போகுமளவிற்கு நாகலிங்கத்திடம் ஒரு தனிப்பட்ட மரியாதை.

இன்றைக்குள் முடிவு செய்துவிட வேண்டும். அந்த பைலில் இருந்த இருவரின் விவரங்களையும் முழுவதுமாகப் படித்தார். தீர்க்கமாக யோசித்து தன் முடிவை எழுதினார்.

லன்டண் அசைன்மெண்ட் கம்பெனியின் மார்க்கட்டை நிலை நாட்டுவதற்கு மிகவும் அவசியமான ஒன்று. அது கம்பெனியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாக இருக்கும். அதற்கு நியமிக்கப்படும் நபர் தக்க அறிவு, நேர்மை, தீர்மானமாக முடிவெடுக்கும் திறமை இவை எல்லாவற்றையும் கொண்டவராக இருக்க வேண்டும். இருவருக்குமே இந்த திறமைகள் இருந்தாலும், மிகவும் பொருத்தமானவராக சந்திரனை நான் சிபாரிசு செய்கிறேன்.

இதைத்தான் திருவள்ளுவர் 118 வது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி ( 118 )

பொருள் : ஒரு பக்கம் சாய்ந்துவிடாமல் நாணயமான தராசு முள் போல் இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவு நிலைமைக்கு அழகாகும்.

Print Friendly, PDF & Email

1 thought on “திருக்குறள் கதை (118) – தராசு முள்

  1. மிகச் சிறப்பாக எழுதப்பட்ட நாவல் போன்ற கதை. ஆசிரியரின் இரண்டாவது கதை .
    முதல் கதை இறகால் இதயத்தை வருடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *