திடீர் மருமகள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2012
பார்வையிட்டோர்: 9,712 
 

திங்கட்கிழமை காலைச் சூரியன் கிளம்பி உஷ்ணத்தைக் கூட்டியது.

துடியலூர் சந்தை நாள். ஆடு, மாடு வியாபாரம் செமத்தியாய் நடக்கிற நாள். இன்று பஸ்ஸில் பிரயாணம் செய்வது நரக வேதனை.

சீதா தன் வயிற்றுப் பிழைப்புக்காக தினசரி பெரியநாய்க்கன் பாளையம் வரை சென்று பேக்டரி ஒன்றில் வேலை பார்த்து மாலையில் திரும்புகிறவள்.

சாயிபாபா கோவிலருகே பஸ் நின்ற போது சீதா ஏறிக் கொண்டாள். கூட்டத்தில் நீந்தி நெரிசலில் சிக்கி நுழைத்துக் கொண்டாள். பெரிய கில்லாடியான பெண் அவள்!

தெரிந்த முகம் ஏதாவது இருக்கிறதா என்று நோட்டம் விட்டாள்.

அப்போதுதான் அது நடந்தது.

ஒரு வயதானவர்.கட்டுக்குடுமி. தொளதொள சட்டை முழங்கால் வரை தொங்கியது. முகம் முழுக்க பயம் பதுங்கியிருந்தது. அடிக்கடி அடிமடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.பெரியவர் மாடு வாங்க வந்திருக்க வேண்டும். குறைந்தது ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாயாவது மடியில் கனக்கிறது என்று புரிந்து கொண்டாள் சீதா. சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள். மறுகணம் ஒருதிட்டம் உருவானது.

“அடடே மாமா.என்ன இப்படி? அதிசயமா இருக்கே! இப்படி வாங்க என்று பெரியவரின் கையைப் பிடித்து பெண்கள் நின்றிருந்த பக்கமாய் இழுத்தாள்.

பெரியவர் சுத்தமாய் பயந்து விட்டார்.

“யாருடி மாமா? வுட்றீ என்னை!”

பெரியவர் திமிறினார் சீதாவோ விடவில்லை.

என்னதான் உங்க மகன் உங்களை திட்டினாலும் இப்படியா கோவிச்சுகிட்டு போவாங்க? அதுக்காக மருமகங்கறதை ஏன் மறைக்கணும்? நான் உங்களை ஒண்ணும் சொல்லையே!

பஸ் கவுண்டம்பாளயத்தில் நிற்கவும் இரண்டு சீட்கள் காலியானது பெரியவரை உள்ளே தள்ளி, ”நீங்க உக்காருங்க அப்புறம் பேசலாம். எதுக்காக இந்த வயசான காலத்தில சந்தை சந்தையா அலைஞ்சு மாடு வாங்கி பண்ணயம் பாக்கறீங்க.! மகன் இன்ஸ்பெக்டர்! கை நிறைய சம்பாத்தியம் அக்கடான்னு உக்காந்து சாப்பிட வேண்டியதுதானே?”

சீதா சத்தம் போட்டுச் சொன்னாள்.

இநத வார்த்தையை சிந்திய மறுவினாடி பெரியவரைச் சுற்றி நின்ற நாலுபேர் புறப்பட இருந்த பஸ்ஸை விட்டு மளமளவென்று இறங்கினர்.

பெரியவர் ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தார்.

“நீ என்னம்மா சொல்றே? எனக்கு பையனே கிடையாதே”. என்றார் பயத்தில்.

“இல்லாட்டி பரவாயில்லை.உங்க பணம் பத்திரமாயிருக்கா பாருங்க?”

பெரியவருக்கு பக்கென்று நினைவு வந்தவராய் மடியைத் தொட்டுப் பார்த்தார்.

மடியிலிருந்த பணமூட்டை கீழே பாதி கிழிக்கப்பட்டு பிதுங்கப் பார்த்தது. இன்னும் கொஞசம் கிழிந்திருந்தாலும் பையிலிருந்த பணம் எட்டாயிரமும் கை மாறியிருக்கும் என்பதை சட்டென்று உணர்ந்தார்.

“பெரியவரே நான் பஸ்சுலே ஏறினப்போ உங்க நிலைமை என் கண்ணில பட்டுச்சு உங்க மடியில இருக்கிற பணத்தை அடிச்சுட்டுப் போறதுக்கு நாலு திருட்டுப் பசங்க உங்கள நெருக்கறத பாத்தேன் அவுங்க கிட்டயிருந்து காப்பாத்ததான் மாமான்னும் இன்ஸ்பெக்டர்ன்னும் கதை வுட்டேன் அவுங்க பயந்து இறங்கி போயிட்டாங்க.” என்றாள் சீதா.

பெரியவர் கண்ணில் நீர்வடிய, “நீ என் மருமகளா இல்லாட்டாலும் மக மாதிரி என்னை காப்பாத்தினியே நீ நல்லாயிருக்கணும் தாயி.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *