தாவூத்தின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 29, 2012
பார்வையிட்டோர்: 10,082 
 

கண்ணை இறுக்கமாக மூடி தலையுள் இங்காலும் அங்காலுமாக ஓடித் திரியும் நினைவுகளை சுற்றித் திரிய விடாமல் வைத்திருக்கும் படி மனசால் மூளைக்குச் சொன்னபடி மெதுமெதுவாக நினைவுகள் அமைதி அடைய அரைத்தூக்கத்துக்குள் போய்க் கொண்டிருந்தான் சமரன். வழமை போலவே இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது அடிக்கிற சத்தம் கூட அவன் காதுக்குக் கேட்கத் தொடங்க மரணபயம் சமரனைத் தொற்றிக் கொண்டது படுக்கையில் இருந்து எழுந்து கட்டிலில் உட்கார்ந்தபடி ஏன் இப்படி அடித்துத் தொலைக்கிறதென இடது நெஞ்சில் கையை வைத்துப் பார்த்தான் அடிக்கும் அதிர்வை அவனால் உணரமுடிகிறது, நடுங்கும் குளிருக்குள்ளும் தலையால் வியர்த்துக் கொட்டுகிறது, கட்டிலில் தொடர்ந்தும் இருக்காமல் எழுந்து நிற்கிறான் குதிக்கால் வரை நெஞ்சடிக்கின்ற சத்தம் கடகடவெனக் கேட்கிறது. மூக்கில் ஏதோ ஈரலிப்பாய் உணர்ந்த அவன் விரல்களால் அதைத் தொட்டுப் பார்க்க ஏதோ பிசுபிசுக்கிறது, கையடகத் தொலை பேசியின் வெளிச்சத்தில் அது என்ன என்று பார்த்தால் ரெத்தம், பயம் இன்னும் அதிகமாயிற்று குளியல் அறைக்குள் போய் மின் விளக்கைப் போட்டு கண்ணாடியில் மூக்கைப் பார்த்தால் ரெத்தம் மெதுமெதுவாகக் கசிந்து கொண்டிருந்தது, சமரனுக்கு கொஞ்ச நாளாகவே நெஞ்சு இப்படிப் பலமாக அடிக்கும் போது நாசியில் குருதி வாடை அடிக்கும் தான், ஆனால் அது இன்று தான் வெளியே கசியத் தொடங்கி இருந்தது.

அகதி முகாமில் தன்னோடு இருக்கும் தோழர்களை எல்லாம் இதற்காகப் போய் எழுப்ப முடியாது என்று நினைத்த அவன் பனியையும் பார்க்காமல் கட்டி இருந்த சாறத்தோடு(கைலி) மேலே சட்டை கூட மாட்டாமல் முகாமின் முன் கதவைத் திறந்து ஆசுவாசமாகக் காற்று வாங்குவதற்காக வெளியே போனான்.முகாமின் இரவு வேலைக்குப் பொறுப்பாக நின்றவன் உள்ளிருந்து ஆர் யூ கிறேசி என்று என்று கத்தினான். ஆமாடா இங்க எல்லாரும் கிறேசிதான் பர்சன்டேஜ் தான் வித்தியாம் என்று பதில் சொல்லி விட்டு உள்ளிருந்து அவன் பதிலுக்குச் சொல்வது எதனையும் காதில் வாங்காமல் அவன் பாட்டில் வானத்தை அண்ணாந்து பார்த்தபடி மெதுமெதுவாக மூச்சை உள்ளே இழுத்து விட்டுக் கொண்டிருந்தான். உடம்பிருந்த சூட்டுக்கும், வியர்க்கும் வியர்வைக்கும் மைனஸ் குளிர் எதுவும் செய்யவில்லை, வேகமாக அடித்துக் கொண்டிருந்த இதயம் மெதுமெதுவாக சாதாரண நிலைமைக்கு வரத் தொடங்கியது. சமரனைப் போலவே தூக்கமில்லாமல் இரவிரவாக நடந்து திரியும் பழக்கமுள்ள அவனது ரஷ்ய நண்பன் வெஸ்கியும் அந்த நேரத்தில் புகைப்பதற்காக வெளியில் வந்தான். இந்தப் பனிக்குள் சமரன் மேலாடை அணியாமல் நிற்பதைப் பார்த்து அவனுக்கு ஆச்சரியம், வெஸ்கி ரஷ்ய ராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றியவன், ராணுவத்துள் ஏற்பட்ட மனக்கசப்புகளால் அங்கிருந்து வெளியேறி சென்றவருடம் இங்கு வந்து அரசியல் தஞ்சம் கோரி இருந்தான். தான் கே.ஜீ.பி படைப்பிரிவில் இருந்தபோது சில பயிற்சிகளுகாக இப்படித்தான் மேலாடை அணியாமல் நடுங்கும் பனிக்குள்ளால் ஓட விடுவார்கள், நான் பனிக்குள்ளேயே பிறந்து வளர்ந்தவன் அதனால் அத்தகைய பயிற்சிகளை என்னால் சமாளிக்க முடிந்தது, நீயோ ஆசிய நாடொன்றின் வெய்யிற் கொதிக்குள் வாழ்ந்து பழக்கப்பட்டவன் எப்படி உன்னால் தாங்க முடிகிறது?, ஒருவேளை இந்த நேரம் மனைவியின் நினைவு வந்து விட்டதா என்ன என்று சமரனை அவன் கிண்டலடித்தான். சொண்டை சுழித்து சிரித்து விட்டு BRO! மனசு சரி இல்லை, ’முத்தங்கள் இல்லாவிட்டால் புகைத்தலைத் தவிர்க்க முடியாது’ எனக்கும் ஒரு சிகெரெட் கொடு என்று சமரனும் வாங்கிப் பத்தினான். நெஞ்சடிப்புக் குறைந்து உடல் குளிரை உணரத் தொடங்கியது சரி வருகிறேன் என்று சொல்லி விட்டு சமரன் தன்னுடையஅறைக்கு திரும்பி வந்தான்

அவன் படுக்கைக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியையும், கட்டிலையும் பார்க்க சமரனுக்கு உள்ளங்கையில் இருந்தும் அடிவயிற்றில் இருந்தும் ஏதோ ஒரு வகையான திரவ மின்சாரம் விறுவிறென தலைக்கு ஏறிக் கொண்டிருந்தது. நினைவுகள் அவன் மனசின் மூளையை நார் நாராய் உரித்துத் தின்னத் தொடங்கியது.

சொந்த நாட்டில் இருந்து தப்பி நாடு நாடாக நான்காண்டுகளாக ஓடி கடைசியில் ஐரோப்பிய நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரிய பின்பும் இந்த நாட்டின் ஒவ்வொரு அகதி முகாமாக சமரனை அவர்கள் மாற்ற மாற்ற ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்கு அவன் ஓடிக் கொண்டிருந்தான். நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு ஓடுவதற்கு அவனுடைய அரசியல் நிலைப்பாடு காரணமாக இருந்தாலும் இந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோரிய பின்பும் ஒரு முகாமிலையே அவனை வைத்திருக்க முடியாமல் அடிக்கடி வேறு வேறு முகாம்களுக்கு மாற்றுவதற்குக் காரணம் வேறெதுவும் அல்ல, உலகைப் பிரட்டும் அவனுடைய குறட்டை தான், ஒவ்வொரு முகாமும் 200 தொடக்கம் 300 பேரைக் கொண்டதாகவும் அதில் உள்ள ஒவ்வொரு அறையிலும் நான்கு நான்கு பேராகவும் விட்டிருந்தாகள். அவன் தூங்கிய அறைகளில் இருந்த ஒவ்வொரு நண்பர்களும் காலையில் எழுந்து நித்திரை இன்றிக் கண் சிவந்தபடி அவனைத் திட்டித் தீர்த்திருக்கிறார்கள். சிலர் உலுப்பியும், தாங்க முடியாத சிலர் தூங்கிக் கொண்டிருக்கும் அவன் முகத்தில் குளிர் நீரை ஊற்றியும் அவன் தூக்கத்தைக் கலைத்திருக்கிறார்கள். இதனால் ஒரு கட்டத்தில் இரவெல்லாம் விழித்திருந்து விட்டு பகலில் அவர்கள் வெளியில் போகும் சமயத்தில் மட்டுமே அவனால் தூங்கக் கூடியதாக இருந்தது. இதனைப் பார்த்துத் தான் முகாமின் முகாமைத்துவங்கள் அவனை ஒவ்வொரு முகாமாக மாற்றிக் கொண்டிருந்தார்கள்,கடைசியாக ஒருவாறு இந்த முகாமுக்கு வந்து சேர்ந்தான்

இங்கேயும் குறட்டை விடுவோர் எந்த அறையில் இருக்கிறார்கள் எனப் பார்த்தே அதில் அவனித் தங்க விட்டார்கள் அந்த அறையில் அவனைத் தவிர குர்திஷ், லெபனான், சோமாலியன் என மூன்று நாட்டைச் சேர்ந்த தோழர்கள் இருந்தார்கள், இவர்கள் மூவருமே குறட்டை விடுபவர்களாக இருந்தாலும் சமரன் விட்ட குறட்டையை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. நாங்களும் குறட்டை விடுறம் தான் ஆனா நீ விடும் குறட்டை MRI scan சத்தம் போல் மாறி மாறி வருவதால் தூங்குவது சிரமமாக இருக்கிறதென்று கோபித்துக் கொண்டார்கள், ஆயினும் நாளடையில் அவர்கள் நண்பர்களாகி விட்ட பிறகு அவர்களுக்கும் சமரனின் குறட்டை தாலாட்டாகி விட்டது. உன்னுடைய மனைவி உன் குறட்டையில் இருந்து தப்பி கொஞ்சக் காலமாவது நிம்மதியாகத் தூங்குவதற்காகத் தான் அல்லா உங்களைப் பிரித்து வைத்திருக்கிறார் என்று சமரனை அவர்கள் கிண்டலடிப்பார்கள், அவனோடு அறையில் இருக்கின்ற மூவருமே தம்முடைய நாடுகளில் இருக்கும் போது அந்தந்த நாடுகளின் விடுதலைப் போராட்ட அமைப்புகளில் போராளிகளாக இருந்தவர்கள் என்பதனால் தினமும் அரசியல் பேசுவதற்கு அங்கு பஞ்சமிருக்காது. குர்திஷ் இன மக்களுக்கு நிகழ்ந்தது தான் ஈழத் தமிழர்களுக்கும் நிகழ்ந்தது என்பதிலும், ஈழத்தின் ஆரம்பகாலப் போராளிகள் சிலர் லெபனானில் பயிற்சி எடுத்தார்கள் என்பதிலும் சோமாலியர்களின் உருவத் தோற்றம் ஆபிரிக்க இனத்தவர் போலல்லாது பார்ப்பதற்கு ஆசியர்கள் போலவே இருப்பதாலும் என்னவோ நால்வரிடையேயும் பேசுவதற்காக ஆரோக்கியமான மனவெளியும், ஏதோ ஒருவகையான ஒற்றுமையும் இருந்தது. அண்மையில் குர்திஷ் இனமக்களின் விடுதலைக்காக ஐரோப்பிய நாடொன்றில் நடை பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பெருமளவில் ஈழத் தமிழர்களும் கலந்து கொண்டது சமரனுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவை இன்னும் வலுப்படுத்துவதாய் இருந்தது. சில வேளைகளில் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் முக்கியமான போராளித் தோழர்களுக்கும் சமரனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். இப்படியாக அவர்களுக்குள்ளான உறவு மிகவும் ஆரோக்கியமானதாக வளர்ந்து கொண்டே இருந்தது.

இதற்குள் சமரனும் அவனது சோமாலிய நண்பன் தாவூத்தும் தான் திருமணமானவர்கள். தனிப்பட்ட வாழ்வைப் பொறுத்தவரை அவர்களுடைய துன்பம் ஒரே மாதிரியானதாகவே இருந்தது. தாவூத்தும் சமரனைப் போலத்தான் திருமணமாகி ஓராண்டிலேயே மனைவியையும் குழந்தையையும் பிரிந்து நாட்டை விட்டு வெளியேறியவன், இருவருமே ஸ்கைப் என்ற ஊடகக் கடவுளின் துணையால் தான் குடும்பம் நடாத்திக் கொண்டிருந்தார்கள், சமரனின் மகன் ஆக்காட்டு அப்பா என்று சொல்லி ஸ்கைப்புக்குள்ளால் நாட்டில் இருந்து சோறூட்டும் போது தாவூத் மாமாவுக்கும் ஊட்டப் போறன் கூப்பிடுங்கோ என்று சொல்லித் தீத்துவான், பருப்பும் சோறும் கறியும் குளைச்சு web cam ல் அமத்தி தீத்தித் தீத்தியே web cam பழுதாகி விட்டது என சமரன் மனைவி புலம்பும் அளவுக்கு ஊட்டல் நடக்கும், தாவூத் நாட்டை விட்டு தவிர்க்க முடியாமல் வெளியேறும் போது அவன் மகன் இரெண்டு மாதக் குழந்தையாக இருந்தான், இப்போது அவனுக்குக் ஐந்து வயதாகி விட்டது. எப்போது நீங்கள் வருவீர்கள் உங்களை எப்போது பார்ப்பது எத்தனை நாளைக்குத் தான் குழந்தைக்குப் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது என்று தாவூத்தின் மனைவி அழும் போதெல்லாம் சமரனின் கதையைச் சொல்லித் தான் அவளை தாவூத் ஆறுதல் படுத்துவான்.

இங்கே வருகின்ற ஆபிரிக்க நண்பர்கள் எல்லாம் விரைவிலேயே ஒரு வெள்ளைக் காரியைப் பிடித்து விடுவார்கள், அல்லது வெள்ளைக் காரிகள் எப்படியாவது இவர்களைப் பிடித்து விடுவார்கள். விசயம் தெரிந்த வெள்ளைக் காரிகளுக்கு கறுப்பர்கள் மீது கொள்ளைப் பிரியம். எனக்குத் தெரிய பெண் நண்பிகள் இல்லாத எந்த ஒரு ஆபிரிக்கனும் இந்த முகாமில் கிடையாது. ஆனால் தாவூத் இங்கே வந்து நான்கு வருடங்களுக்கு மேலாகியும் எந்த ஒரு பெண் நண்பியையும் பிடிக்கவில்லை. சிலர் தாமாகவே வந்து கேட்ட போதும் தாவூத் அதற்குச் சம்மதிக்க வில்லை. அந்தளவுக்கு அவன் குடும்பத்தோடு ஒட்டுறவாக இருந்தான். நாற்பதுக்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கானோர் இருக்கும் முகாமில் பலர் நண்பர்கள் ஆவார்கள் சிலர் தான் மனசுக்குப் பிடித்துப் போவார்கள். அப்படி மனசுக்குப் பிடித்த ஒரு ஆளாக தாவூத் சமரனுக்கு வாய்த்தான்.

ஓர் அழகான இளம் பெண்ணின் செல்லப் பேச்சில் இருந்து அலுங்கிக் குலுங்கி வழுக்கி விழும் சொற்களைப் போல நெழிந்தும் வளைந்தும் ஆடி ஆடிச் செல்கிற அவர்கள் இருக்கும் முகாமுக்கு அண்மையில் இருக்கும் ஆற்றின் கரையில் மாலைவேளைகளில் அவனும் தாவூத்துமாய்ப் போயிருந்து அவர்களுடைய பால்ய காலக் காதல்க் கதைகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள், விடைகள் இல்லாமல் நிண்டு செல்கின்ற அகதி வாழ்க்கையில் இப்படியான நினைவு மீட்டல்களே அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இங்கே வந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது இனியும் என்னால் குடும்பத்தை பிரிந்து இருக்க முடியாது சுட்டாலும் பரவாயில்லை நான் நாட்டுக்குப் போகப் போகிறேன் என்று கொஞ்ச நாளாகவே அதீத வெறுப்பில் தாவூத் அடிக்கடி புலம்பிக் கொண்டிருந்தான்.

மூன்று வாரங்களின் முன்பு காலையில் வழமை போலவே அவர்கள் நால்வருமாக அவரவர் கணனிகளில் ஊர்ச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிந்த போது தாவூத்துக்கு கடிதம் வந்திருப்பதாக வெஸ்கி வந்து சொல்லி விட்டுப் போனான் மதியம் சாப்பிட வரும் போது எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு தாவூத் ஏதோ மும்முரமாக செய்தி பார்த்துக் கொண்டிருந்தான். ஏதோ முக்கிய செய்தியைப் பார்த்திருப்பான் போல மிகவும் பதட்டமாகி அவன் கைத் தொலை பேசியில் இருந்து யாருக்கோ அழைப்பெடுத்தான், சர்வதேச அழைப்புக்குக் காசு போதாதாம் இந்த நேரத்தில் பார்த்து போனில் காசில்லை BRO தொலை பேசியை ஒருக்காத் தரமுடியுமா என்று சமரனிடம் இருந்து தொலைபேசியை வாங்கி, அடிக்கிறான், அடிக்கிறான் அழைப்புக் கிடைக்கவில்லை. கண் கொஞ்சம் கலங்கி இருந்தது, கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது, ஏன் தாவூத் என்ன ஆச்சு ஏன் இவ்வளவு பதட்டம் என்று சமரன் கேட்டபோது, இல்லை BRO மனைவின் எண்ணுக்கு எடுக்கிறேன் கிடைக்குதில்லை, அதுக்கேன் பதட்டப்படுகிறாய் தாவூத் அவள் மகனை பள்ளிக்குக் கூட்டிக்கொண்டு போயிருப்பாள் அது தான் யோசிக்காதே கொஞ்ச நேரம் கழித்து திரும்பவும் அழைக்கலாம் என்று சமரன் சமாதானப் படுத்தினான். இல்லை BRO நேற்று சோமாலியாவில் என்னுடைய வீட்டுக்கு அருகில் உள்ள சந்தையில் குண்டு வெடித்திருக்கிறது, நேர்று Sunday Market என்ற படியால் மனைவியும் குழந்தையும் மலிவுப் பொருட்கள் வாங்கப் போயிருப்பார்கள், நேற்று நானும் பேசவில்லை, இன்று அடிக்க தொலை பேசி வேலை செய்யுதில்லை அது தான் பயமாக இருக்கிறது என்றான், அதன் பின் பல தடவை முயற்சி செய்தும் அவளின் தொடர்பு தாவூத்துக்குக் கிடைக்கவில்லை. மாலை ஊரில் இருந்து தாவூத்தின் எண்ணுக்கு அழைப்பு வந்தது அவன் என்ன நினைத்தானோ தெரியவில்ல என்னெண்டு கேள் என சமரனிடமே தொலை பேசியைக் கொடுத்தான், அதில் தாவூத்தோடு முன்னர் இயக்கத்தில் இருந்த போராளித் தோழன் தான் பேசினான்.

தாவூத் பதட்டத்தில் பிறப்புறுப்பை கையால் கசக்கியபடி சமரன் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான், ஒரு நிமிடம் தான் விசயத்தைச் சொல்லி விட்டு, சொன்னவன் வைத்து விட்டான். சமரனுக்கு என்ன சொல்லதென்று தெரியவில்லை தாவூத்தை கட்டி அணைத்து தோள்களை இறுகப்பற்றினான்.அந்தக் குண்டு வெடிப்பில் தாவூத்தின் மனைவியும், குழந்தையும் உடல் சிதறி இறந்து போனதை நினைக்க சமரனுக்கும் ஊர் நினைவு வந்து தலை கிறுகிறுக்கத் தொடங்கியது

அறையில் இருந்த நண்பர்கள் இருவரும் தாவூத்தை கட்டி அணைக்கப் போனார்கள் அவர்கள் இருவரையும் உதறி விட்டு நிலத்தில் குந்தி இருந்து இரெண்டு கைகளாலும் தரையில் குத்தி அழுதான், கட்டில் இரும்புச் சட்டத்தில் தலையை அடித்தான், கடைசி வரை என்னைத் தெரியாமலேயே என் மகன் போய் விட்டானே அல்லா.. எனக்காவே இவ்வளவு காலமாய்க் காத்திருந்த மனைவியையும் மகனையும் என் வாழ் நாளில் இனி எப்போதுமே பார்க்க முடியாத படிக்குச் செய்து விட்டாயே என்று கத்திக் கொண்டு கத்தியை எடுத்து கழுத்தை அறுக்கப் போனான். எல்லோருமாக அவன் கைகளைப் பிடித்து மடக்கி கத்தியை பிடுங்க, திமிறிக் கொண்டு மாடியில் இருந்து குதிப்பதற்கு ஓடினான். அவனை அறியாமலேயே காலால் சிறு நீர் வழிந்து கொண்டிருந்தது. மூவருமாகச் சேர்ந்து ஒருவாறு அவனைப் பிடித்து அமத்திக் கட்டிலில் கிடத்தினார்கள் அன்று முழுக்க அவன் அப்படியே சித்தப் பிரமை பிடித்தவன் போல இடைக்கிடை கத்தி அழுவதும் பின்னர் அமைதியாகி விடுவதுமாகப் படுத்திருந்தான். இரவு இரெண்டு மணிவரை அவர்கள்அவனுக்குப் பக்கத்திலேயே இருந்தார்கள் திடீரென்று எழுந்த தாவூத் கணனியைத் திறந்து ஸ்கைப்பில் உள்ள Snap Shot பகுதியில் மனைவியுடனும், மகனுடனும் பேசும் போது எடுத்த படங்களை திரும்பத் திரும்பப் பார்த்தான், BRO! இனியொரு போதும் என் மனைவியும், மகனும் ஸ்கைப்புக்கு வரமாட்டார்கள் இல்லையா? என்று ஈனஸ்வரம் நிறைந்த குரலில் சமரனைப் பார்த்துக் கேட்டான். எச்சிலை வில்லங்கமாக விழுங்குவதைத் தவிர வேறெதுவும் சமரனால் அப்போது சொல்ல முடியவில்லை. அழுதழுது களைத்து தாவூத் அப்படியே தூங்கி விட்டான்.

சமரனுக்குத் தூக்கமே வரவில்லை தேனீர் குடிப்பதற்காக கீழே இறங்கிப் போனான். இது தாவூத்துக்கு குடிவரவு திணைக்களத்திடம் இருந்து வந்த கடிதமென அலுவலகத்தில் இருந்த வெள்ளையன் கொடுத்தான், இப்போது இதைக் கொண்டு போய் அவனிடம் கொடுக்கும் நிலைமை இல்லை என்பதாலும் அமைச்சில் இருந்து வந்த படியால் ஏதும் முக்க்கியமாக இருக்கும் என்பதாலும் சமரனே அதை உடைத்துப் பார்த்தான், அதில் அவனுடைய அகதி அந்தஸ்த்து மறுக்கப் பட்டிருப்பதாகவும் அவன் நாட்டில் இப்போது பிரச்சனை தணிந்து விட்டதால் அங்கே போவதால் அவனுக்கு எந்த வித உயிராபத்தும் இல்லையென்றும் விரும்பினால் 15 நாட்களுக்குள் மேன் முறையீடு செய்யலாம் என்றும் குறிப்பிட்ட நாட்களுக்குள் மேன் முறையீடு செய்யாவிட்டால் நாடுகடத்தப் படுவார் என்றும் சொல்லப் பட்டிருந்தது.

இந்த நாட்டைப் பொறுத்தவரை அதிகாரிகளின் முடிவையே அதிகமாக நீதி மன்றம் கவனத்தில் எடுத்திருக்கிறதென்பதால் இந்தக் கடிதம் Deportation Order க்கான ஒரு
முன் ஆயத்தம் தான் என்பதை அவர்கள் அகதி அந்தஸ்த்து கொடுப்பதற்கு மறுத்துச் சொல்லி இருக்கும் காரணங்களை வைத்து சமரன் புரிந்து கொண்டான். தாவூத் இருக்கும் மன நிலையில் இதையும் எப்படிக் கொடுப்பது? கொடுக்காமலும் இருக்கமுடியாது ஏனென்றால் இரெண்டு கிழமைக்குள் வழக்கறிஞரைச் சந்தித்து மீண்டும் இந்த முடிவை மறுக்கும் வகையில் இவன் இனி நாட்டுக்குப் போக முடியாதென்பதற்கு சரியான காரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும், நாட்டில் இவன் பற்றி வந்த பத்திரிகைச் செய்திகளை எல்லாம் எங்கெங்கோ எல்லாம் தேடி எடுத்து முறையான இடத்தில் மொழி பெயர்த்து தாவூத்தின் மனைவி தான் இது நாள் வரை அனுப்பிக் கொண்டிருந்தாள், இப்போது தாவூத்துக்கு அவளதும் மகனதும் இறப்பைத் தான் காரணமாகக் காட்ட வேண்டி இருக்கப் போகிறது. சோமாலியாவில் ஒரு சான்றிதழ் எடுப்பதென்றால் மிகவும் சிரமம் நிறைய லஞ்சம் கொடுக்க வேண்டும், என்று தாவூத் சொல்லி இருக்கிறான். தவிரவும் அவர் தன் இயக்கத் தொடர்புகளை இதற்கெல்லாம் பயன்படுத்தவும் விரும்பமாட்டான். இப்படியாக தனக்குள்ளேயே பேசிக்கொண்டு சமரன் அறைக்கு வந்தான், அழுது களைத்துப் போய் தாவூத் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.

விடிந்து விட்டது மாலையில் எழுந்து பேசுவோம் கண்ணைச் சுழட்டுகிறது நான் தூங்கப் போகிறேன் தாவூத்தை ஒரு இடமும் தனியே விட வேண்டாம், பார்த்துக் கொள்ளுங்கள் என்று மற்றைய இரு நண்பர்களிடமும் சொல்லி விட்டு சமரன் தூங்கி எழுந்து பார்த்த போது வழமைக்கு மாறாக நண்பர்களுடன் போய் அளவுக்கு அதிகமாகக் குடித்திருக்கிறான் போல நாற்காலியில் அங்காலும் இங்காலுமாக சரிந்தபடி பெரு மழைக்குப் பின்னர் குளைகளில் இருந்து வழிகின்ற நீரைப் போல துளித்துளியாக கண்களில் இருந்து நீர் உருண்டு விழ ஸ்கைப்பில் இருந்த தன்னுடைய மனைவி மகனது படங்களை பெரிதாக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான், இப்போது கடிதம் பற்றி எதுவும் சொல்ல வேண்டாமென மற்றைய இரு நண்பர்களும் சமரனுக்கு கண்ணால் ஜாடை காட்டினார்கள், மறு நாள் காலை சமரன் மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுத்த போது, எல்லாவற்றுக்கும் ம்.. ம் எனத்தான் தாவூத் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்

பேச்சினிடையே உனக்கு குடிவரவுத் திணைக்களத்திடம் இருந்து கடிதம் வந்திருக்கிறது, பிரச்சனை இல்லை மேன் முறையீடு செய்ய வேண்டும், வெளிக்கிடன் இருவருமா சட்டத்தரணியிடம் போவோம், சமரன் மெதுவாகச் சொன்னான். எதுவும் பேசாமல் கடிதத்தைத் தரச் சொல்லிக் தாவூத் கையை நீட்டினான். வேகமாக ஒவ்வொரு பக்கமாகத் தட்டி வாசித்தான், சமரனைப் பார்த்து கண்ணைச் சுருக்கி உதடுகளைத் திறக்காமல் வெறுப்புக் கலந்த ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு அப்படியே கடிதத்தைத் தூக்கி சுவரில் வீசி அடித்தான், கடிதம் பற்றி எதுவும் இனித் தன்னிடம் பேச வேண்டாம் என்று சொல்லி விட்டு முகாமில் நின்ற ஆடையுடனேயே புறப்பட்டு வெளியில் போய் விட்டான், அதன் பின் ஒவ்வொரு நாளும் வரும் போது நிறை வெறியில் தான் வருவான், அவ்வளவாகச் சாப்பிடுவதும் இல்லை, அரசியல் பேச்சுக்களிலும், நக்கல்களிலும் கலகலவென இருந்த அந்த அறை எதையோ பிடித்து் இழுத்து நிறுத்தி விட்டதைப் போல அமைதியாகவே இருந்தது, அவனில்லாத நேரத்தில் தான் நண்பர்கள் ஏதும் பேசுவர்கள், ஆனாலும் முந்தின கலகலப்பு இப்போது இல்லை, அவனுக்கு வந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 15 வேலை நாட்கள் நெருங்கிக் கொண்டே இருந்தது, தாவூத்துக்கு அதில் எந்த அக்கறையும் இல்லை, வியாழக்கிழமை அவன் மகனின் 7 வது பிறந்த நாள் அவனுக்கு அனுப்புவதற்கென பொலிசிடம் பிடிபடாமல் களவாக போனமாசம் முழுக்க மிகக் குறைந்த ஊதியத்தில் இரவிரவாக கடினமாக வேலை செய்து கொஞ்சப்பணம் சேர்த்து வைத்திருந்தான். அந்தப் பணத்தில் தான் இப்போது தினமும் குடி, குறிப்பிட்ட நேரத்தில் வந்து சாப்பிடா விட்டால் முகாமில் சாப்பாடு கிடைக்காதென்பதால் எப்போதும் வெளியில் தாராளமாக வைக்கப் பட்டிருக்கும் சீஸும் முட்டையும் தான் அவனது குடிக்கு உணவாக இருந்தது, ஏற்கனவே உனக்கு பருத்த உடல் கொலொஸ்ரோல் வேறு கண்டபாட்டுக்கு கொழுப்பு சாப்பிடாதே என சமரன் பல முறை சொல்லியும் தாவூத் காதில் வாங்கவில்லை, மகனின் பிறந்த நாளன்று மிக அதிகமாகக் குடித்திருக்கிறான் போல கதவில் பொருத்தப் பட்டிருக்கும் மெஷினில் அதைத் திறப்பதற்காக பயன்படுத்தும் Card ஐ சரியாக அதற்குள்ளே போட முடியாமல் தள்ளாடி விழுந்து விட்டான். அடுத்து வந்த நாட்களிலும் இதே குடி தான் ஆனால் அழுவதோ கத்துவதோ இல்லை பேசாமல் வந்து படுத்து விடுவான்,

இன்றைக்கும் குடித்து விட்டுத் தான் வந்தான், மகன் பிறந்த நாளுக்கு அனுப்ப என வாங்கி இருந்த பார்சலை உடைத்து அதற்குள் இருந்த விளையாட்டுக் காரை வெளியில் எடுத்து கட்டிலில் உருட்டி உருட்டிப் பார்த்த படி கட்டிலில் குறுக்குப் பக்கமாக கால் நீட்டி இருந்து கொண்டு அப்படியே பின்னால் உள்ள சுவரில் சாய்ந்த படி கண்களை மூடிக் கொண்டு விசும்பிக் கொண்டிருந்தான், நேரம் ஆகிக் கொண்டிருந்தது இப்பதான் வந்த படியால் சாப்பிட்டிருக்க மாட்டான், கீழே ஏதும் இருந்தால் வாங்கி வருகிறேன் என்று நண்பர்களிடம் சொல்லி விட்டு சாப்பாட்டைச் சூடு காட்டி மேலே எடுத்து வந்து சாப்பிட்டுப் படு தாவூத் என்று சமரன் சாப்பாட்டை நீட்டினான். அவன் பதில் எதுவுமே பேசவில்லை விசும்பல் கூட நின்றிருந்தது, போகும் போது இருந்ததைப் போலவே அப்படியே கண்களை மூடி கால் நீட்டி சுவரில் சாய்ந்திருந்தான், இரெண்டு மூன்று தடவை சாப்பிட்டுப் படு என்று சமரனும் நண்பர்களும் சொல்லியும் அவன் பதிலேதும் சொல்லாமல் அப்படியே சாய்ந்திருந்தான், சாப்பாட்டுக் கோப்பையை அவன் கட்டிலுக்கு முன்னுள்ள மேசையில் வைத்து விட்டு சரி உனக்கு விரும்பின நேரம் எழும்பிச் சாப்பிட்டுப் படு என்று சொல்லி விட்டு கைத்தொலைபேசியில் மெளனத்தில் விளையாடும் மனச் சாட்சியே பாடலை சமரன் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தான். தூக்கம் வருகிறது விளக்கை அணைக்கட்டுமா காலையில் நேரத்துக்கு எழுந்து போக வேண்டும் என் லெபனான் நண்பன் கேட்டான், சரி அவன் பசித்தால் சாப்பிடுவான் தானே என விளக்கை அணைத்து விட்டு எல்லாரும் படுத்து விட்டார்கள்

சமரனுக்கு தூக்கம் வரவில்லை, அங்காலும் இங்காலுமாக திரும்பிப் படுத்துக் கொண்டிருந்தான், நேரம் காலை 3 மணி ஆகி விட்டது, தண்ணீர் குடிக்க எழுந்த சமரன் எதேச்சையாகப் பார்த்த போது இன்னமும் படுக்காமல் தாவூத் அப்படியே சுவரில் சாய்ந்தபடியே இருந்தான், மனசு கேட்காமல் படுக்கையால் எழுந்து கம்பளிப் போர்வையைப் போர்த்திய படியே அவன் பக்கத்தில் சென்று சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை, சரிந்து கட்டிலில் ஒழுங்காப் படு என்று சமரன் அவன் தோளைப் பிடித்தான். தலை இடது பக்கம் சரிந்தது, குடித்து விட்டு வந்தாலும் தாவூத் இப்படித்தான் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருப்பான் என்றாலும் இன்றைக்கு ஏனோ சமரனுக்கு உடல் நடுங்கத் தொடங்கியது

மின் விளக்கைப் போட்டு எழும்புங்கள் என்று மற்ற நண்பர்களைப் பார்த்துச் சத்தமிட்டான் தன்னுடைய இனத்தில் யாரும் இறந்து விட்டால் குரங்குகள் எப்படி அங்காலும் இங்காலும் ஓடி மூக்கில் கைவைத்தும் நெஞ்சில் காதை வைத்தும் பார்க்குமோ அது போலவே அவர்கள் மூவரும் மூக்கருகில் கைவைத்தும், நெஞ்சருகில் காதுவைத்தும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 999 எண்ணுக்கு நண்பன் ஒருவன் அழைக்க சிறிது நேரத்தில் மருத்துவரும் பொலிசும் வந்தார்கள்

நெஞ்சில் அமுக்கியும் வாயில் ஊதியும் என்னென்னவோ எல்லாம் செய்து பார்த்த மருத்துவர் பொலிசாரத் திரும்பிப் பார்த்து கீழுதட்டை வெளியே பிதுக்கி இமைகளை மூடித் திறந்தார், வந்திருந்த நான்கு பொலிசாரும் தொப்பியைக் கழற்றினார்கள். குடிவரவுப் பொலிசாரும் வந்து விட்டார்கள், செய்தி அறிந்த முகாமில் உள்ள அத்தனை பேரும் கூடி வந்து வாசலில் நின்றார்கள், தமக்கும் கூட இங்கேயே இப்படி நடந்து விடலாம் என்கிற மரணபயம் அவர்கள் முகத்தில் நிழலாடிக் கொண்டிருந்தது, அவர்களிடம் நடந்தவை பற்றி விசாரணை எடுத்து விட்டு தாவூத்தின் உடலை ஸ்ரெச்சரில் வைத்து அறைக்கு வெளியே கொண்டு போவதற்காக பொலிசார் தூக்கிய போது கோபம் மிகுந்த தொனியில் ‘உங்கள் குடிவரவுப் புலனாய்வு அதிகாரிகள் மிகவும் சிறப்பாகப் பணி புரிகிறார்கள், இனி இவனை உங்கள் விருப்பப் படியே எந்தப் பிரச்சனையும் இன்றி நாடு கடத்தலாம், என சமரன் கத்தினான். அது மட்டுமே அப்போது அவனால் முடிந்தது, உடலை அவர்கள் தூக்கிக் கொண்டு போய் அம்புலன்ஸ் வண்டியில் ஏற்ற அதைப் பார்த்து அழுதபடி முகாமே வாசலில் கூடி நின்றது, அவன் உடலோடு வண்டி புறப்பட்டு விட்டது

பூமியின் ஏதோ ஒரு கண்டத் தகட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து வந்த தாவூத்தும், இன்னொரு கண்டத் தகட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்து வந்த சமரனும் அவர்கள் எதிர்பார்த்திராத வேறொரு கண்டத் தகட்டின் எங்கோ மூலை ஒன்றில் சந்தித்து பழகிய நட்புறவின் கதை இன்றோடு முடிந்து விட்டது

யாரும் எதுவுமே பேசாமல் அவரவரின் அறைகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள், சமரன் தன்னுடைய அறைக்கு வந்த போது முகாம் நிர்வாகம் தாவூத்தின் படுக்கை உறை, தலையணை உறை என்பவற்றைக் கழற்றிக் கொண்டிருந்தார்கள், அவனுடைய பொருட்கள் எதுவும் வேண்டுமானால் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள், தாவூத் தன் மகனுக்கு அனுப்புவதற்கென வாங்கி கடைசியாகக் கட்டிலில் உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காரை சமரன் எடுத்து வைத்துக் கொண்டான் . ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டார்கள், எடுத்தது போக மீதிப் பொருட்களையும், அவனது ஆடைகளையும் குப்பைகள் போடுகின்ற கறுப்புப் பையுள் போட்டு முகாம் நிர்வாகம் எடுத்துச் சென்றது, தாவூத்தின் ஸ்கைப்பில் அவனது மகன், மனைவியின் படங்கள் இனிக் காலாகாலத்துக்கும் அப்படியே திறக்கப் படாமல் கிடக்கும்

சமரனுக்கு தூக்கம் வரவில்லை,மற்றைய இரு நண்பர்களும் ஏதும் பேசாமல் முகத்தை போர்வையால் இழுத்து மூடிக்கொண்டு படுத்திருந்தார்கள், அவன் படுத்திருந்த கட்டிலைப் பார்க்க முடியாமல் சமரன் மறுபக்கம் திரும்பிப் படுத்தான். ஏதோ யோசனையில் சற்று அசந்து விட்டு திடுக்குற்று முழித்த அவன் மனசு கேட்காமல் தாவூத் கட்டிலைத் திரும்பிப் பார்த்தான். அதில் புதிதாக வந்த இன்னொரு அகதி படுத்திருந்தான், அவன் மிக இயல்பாகத் தூங்கிக் கொண்டிருந்தான், தாவூத் படுத்திருந்த சூடு ஆறுவதற்குள்ளாகவே முகாம் நிர்வாகம் இன்னொரு அகதியை அதில் போட்டிருக்கிறது, ’காலம் எப்போதுமே இப்படித்தான் எதுவுமே நடவாதது போல இடைவெளிகளை மிக வேகமாக இட்டு நிரப்பிக் கொண்டே இருக்கும்’

உள்ளங்கையால் நெற்றியில் இறுக்கி அடித்து விட்டு சமரன் மீண்டும் திரும்பிப் படுத்தான். என்றோ ஒரு நாள் எனக்கும் இப்படி ஏதும் இங்கேயே நடந்து விடலாம் என்ற எண்ணம் அவனுக்குள் ஓடத்தொடங்க இதயம் மீண்டும் வேகமாக அடிக்கத் தொடங்கியது. ஆனால் முன்னரைப் போல அவன் பயந்து எழுந்திருக்கவில்லை, மூக்கிலிருந்து கசியும் ரெத்தம் துளித் துளியாக படுக்கை உறையிலும், தலையணையிலும் விழுந்து கொண்டிருந்தது, அதை எழுந்து துடைக்கவோ கண்ணாடியின் முன்னால் போய்ப் பார்க்கவோ சமரன் விரும்பவில்லை. மூளையும் மனமும் தனித் தனியாகக் கழன்று விட்டது போல அப்படியே அசையாமல் சுருண்டு படுத்திருந்தான்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *