கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 5,903 
 

நிலக்கடலைக் காட்டில் ஐந்தாறு பெண்கள் நிலக்கடலைச் செடியைக் கொத்துக் கொத்தாகப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். நல்ல முற்றின கொட்டைகள். “இந்தப் பூமிக்கு நிலக்கடலை நல்லா வெளையும்… இந்த வச எச்சாவே வெளைச்சல் கண்டிருக்கு” என்று வரப்பில் மீசையை முறுக்கியபடி நின்று சொன்னார் ராமசாமி மிராசு.

ஒர் பெண் திரும்பிப் பார்த்து அவர் அருகில் யாருமில்லாமைக்காகச் சிரித்தாள்.”

“சடையன் சம்சாரம் வள்ளிப் புள்ளையாலே அது? அதென்ன சிரிப்பாணி? மிரட்டினார் மிராசு.”

“எசமான் தன்னந் தனியாப் பேசறீங்களேன்னு சிரிச்சேனுங்கோ…”

“உம்.. உம்.. வெறசா வேலையைப் பாருங்கலே, பொளுதுக்கெல்லாம் மேக்காலக் காடு முடிஞ்சுறணும். ஊர் நாயம் பேசி நேரத்தை ஓட்டாதீங்க…”

வரப்பில் இருந்த வேப்ப மரத்து நிழலில் நின்று, வயலில் குனிந்து லாவகமாக நிலக்கடலைச் செடியைப் பிடுங்கிப் போடும் பெண்களை வேடிக்கை பார்த்தார்.

“ஏ புள்ளே வள்ளி, சித்தே பொறுத்து நம்ம வளவுலேர்ந்து மம்புட்டியை கொணாந்து சாளை வீட்டுலே வெச்சுட்டுப் போலே, என்ன?”

“சரிங்கோ…”

மூப்பன் மேற்பாரவை வேலையைப் பார்க்க வந்ததும், மிராசு கிணற்றுப் பக்கம் கிளம்பினார். மதியத்துடன் மின்சார சப்ளை நின்றிருந்தது. “இந்த மாதிரி கரண்டைக் கட் பண்ணிக்கிட்டே இருந்தா சம்சாரிங்க பொளைக்கறது எப்பிடி?”

காங்கயம் சந்தையில் வாங்கிய எருதுகள் இரண்டு, நிழலாக சீமை ஓடு வேய்ந்த சாளையில் (தோட்ட வீட்டில்) நின்றிருந்தது. சோளத் தட்டுகளைக் கொண்டுவந்து மாடுகளுக்க்குப் போட்டார் மிராசு.. அதை ஒட்டினாற்போல் அறை ஒன்று. கலப்பை, கடப்பாறை, மண்வெட்டி, களைக்கொத்து, கூடை, நுகம், தாம்புக் கயிறு போன்ற பலவகை விவசாயக் கருவிகள் அந்த அறையில் ஒரு மூலையில் கிடந்தன. அறையின் இன்னொரு மூலையில் பானையில் கள் நுரைக்க நுரைக்க இருக்கும். ராமசாமி மிராசின் தோட்டத்துப் பனை மரங்களில் ஏறும் நாச்சிமுத்து மூப்பன், பதனீர் இறக்குவது தவிர, சில மரங்களில் கள் இறக்கி, பூச்சி, பூரான்களை வடிகட்டி, எசமாங்களின் சொந்த உபயோகத்துக்க்கு என அந்தப் பானையை நிரப்பி விடுவான். அவ்வப்போது மிராசு ஒரு எவர்சில்வர் தம்ளரால் கள்ளை முகந்து, விளிம்பில் வாயை வைத்து ஒரே மூச்சில் குடித்துக் கொள்வார்.

கிணற்றைத் தாண்டி சாளை அறைக்குள் நுழைந்த மிராசு, கொஞ்சம் கள்ளை ஊற்றிக்கொண்டு கட்டிலில் சாய்ந்தார். ஜன்னல் வழியாக சிலுசிலுவென்று காற்று அவரைக் குளிப்பாட்டியது. வீட்டில் காரஞ் சாரத்துடன் சாப்பிட்டு வந்த முயல்கறிக் குழம்பும் சோறும் தாலாட்டுப் பாட, அரைக் கண் மூடினார்.

“இந்த மம்புட்டியை எங்கே வெக்கிறது, ஏனுங்கோ?” என்ற குரல் அவரைத் திடுக்கிடச் செய்ய, எழுந்து உட்கார்ந்தார். “ஆருலே அது, என்ன வேணும்?” அதட்டினார்.

அதற்குள் கண்களில் சிவப்புச் சேலை தெரியவே அவர் குரலின் கடுமை குறைந்தது.

“வள்ளிக் குட்டியாலே? அந்த மம்புட்டியைக் கொணாந்து வடக்கோட்டுச் செவுத்தோரம் வெச்சுடுலே…”

அவள் உள்ளே வரத் தயங்கி, வந்தாள். வடக்கு மூலையில் சுவரை ஒட்டி மண்வெட்டியை வைத்துவிட்டுத் திரும்பியபோது, ”என்ன வள்ளி, அவுசரம்? பொறுத்துப் போலாம், இரு! என்று
பல்லைக் காண்பித்து, அவளைச் சுவர் ஓரத்தில் சாய்த்து அணைத்தார் மிராசு.

“எசமான், இதென்ன..? என்னை உடுங்க, உடுங்க… ஐயோ!” என்று பதறித் திமிறினாள்.

“என்ன குட்டி அடம் புடிக்கிறே, இந்த மாதிரிக் கிளிஞ்ச ஜாக்கிட்டு போடற ஒடம்பா இது? நாளைலேந்து ஒனக்கு ரெட்டைக் கூலி தரச் சொல்றேன், நல்ல ஜாக்கிட்டா வாங்கித்
தரேன்..”

“என்னை உடுங்க, எனக்கு ஒண்ணும் வேணாம். ஐயோ உடுங்களேன்…” என்று கதறிய வள்ளியைத் திமிற விடாமல் இறுக்கி அணைத்துக்கொண்டு முகத்தில் வெறியோடு முத்தமிட்டார். ரவிக்கைக் கிழிசல் கண்ணில் பட்டு மேலும் வெறியூட்டியது போலும், “வள்ளி, நீ என்ன கேட்டாலும் தர்றேன், என் ராஜாத்தியில்லே – இன்னிக்கு மட்டுந்தான் கண்ணு. ஒரே ஒரு
தடவை – மறுப்புச் சொல்லாதலே…”

மிராசுவின் பெரிய உடம்புப் பாரத்தில் அவள் அடங்கிப் போனாள்.

சிறிது பொறுத்து, சேலையை ஒழுங்காகச் சுற்றிக்கொண்டு தலையைக் கைகளால் ஒதுக்கிக்கொண்டு, தள்ளாடித் தள்ளாடி நடந்து வெளியே போனபோது வியர்வையில் குளித்திருந்த
உடம்பில் காற்று சிலீரென்று அறைந்தது. “தூ!”வென்று திரும்பிப் பார்த்துக் காரித் துப்பிவிட்டு நிலக்கடலைக் காட்டுக்குப் போனாள்.

“என்ன வள்ளியம்மா, எங்கேலே இத்தினி நேரம் காணாப்பூட்டே?” என்று கோசலை – இவளின் எதிர்வீட்டுக்காரி, கேட்டாள்.

“எசமாங்க வளவுக்கு மம்புட்டி வைக்கப் போனேனா, அந்த ஆத்தா வளவளன்னு நாயம் பேசப் புடிச்சிகிச்சு!” என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, நிலக்கடலை பிடுங்கக் குனிந்தாள். தலை கிறுகிறுவென்று சுற்றுவது போன்ற உணர்வில், “கோசலை, எனக்கு மழக்கம் வருதுடீ…” என்றவள் நிதானித்து வரப்பில், வேப்ப மரத்தின் அருகே போய் சாய்ந்து உட்கார்ந்தாள்.
அதேநேரம் வரப்பில் ஓர் சிறுவன், “அக்கோய், அக்கோய்!” என்று கூவி ஓடி வந்தான். கிழிந்த அரைக்கால் சட்டையும், அழுக்கு மேலுடம்பும், பரட்டைத் தலையுமாகக் காணப்பட்டான் அவன்.

“யாரு திருப்பதியா, என்னிறே ஒங்க அக்காவுக்கு அத்தினி அவுசரம்?” என்று வெற்றிலைக் காவி பழ்்த பற்களைக் காட்டி சிரித்து, கோசலை கேட்டாள்.

மரத்தில் முதுகைச் சாய்த்து அரை மயக்கத்தில் இருந்த வள்ளி, தன் தம்பியின் குரலில் கண் விழித்தாள். “திருப்பதி, எங்கடா வெய்யில்ல வந்தே? கம்மம் புளி தண்ணி அடுக்குப் பானைலே வெச்சிருந்தேனே, குடிச்சுக்கலையாங்காட்டியும்…”

தான் வந்தது சாப்பாட்டுக்காக அல்லவென்று மறுப்பவனாய், தலையை வேகமாக ஆட்டி, “அதில்லீக்கோவ்.. நம்பட மச்சானை ஊருக்குள்ள அடிக்கிறாங்கோ, ஆளுக்காளு போட்டு
நொறுக்கறாங்க, அக்கோவ்… ஓடியா, ஓடியா!”

ஓரிரு வினாடிகள் அசையாது அமர்ந்திருந்தாள் வள்ளி. சிறுவனின் வார்த்தைகளுக்குப் பொருளை மனத்தில் வாங்கிக் கொள்ளவே சிறிது நேரம் பிடித்தது போலும்… திடுக்கென்று
எழுந்தாள். மயக்கமும் அசதியும் பறந்த இடம் தெரியாமலேதான் தம்பியின் பின்னால் ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.

“இது ஏண்டா ஊருக்குள்ளாறப் போச்சு? இன்னிக்குப் பட்டைத் தண்ணிக்குக் காசு கேட்டப்ப கூட இல்லைன்னு சொல்லிட்டனே, எதுக்குலே திருப்பதி இதை அவுங்க அடிக்கணும்? ஓசிச் சாராய்ம் எதுனா குடிச்சுப்புட்டு எக்குத் தப்பா நடந்துக்கிருச்சா?”

“பின்னே அடிக்க மாட்டாங்களாமா? எசமாங்க ஊருக் குள்ளேயே போயி, கெணத்துல வாளியை எறக்கிடுச்சே மச்சான்…

“என்னது, என்னது?”

அதிர்ந்து போய், அவன் சொன்னதை நம்ப முடியாமல் நின்றாள். தன் கணவன் செய்தது எவ்வளவு பெரிய குற்றம் என்பதைப் புரிந்து கொண்டவள் போலும், கலக்கத்துடனே மேலே போனாள்.

மாகாளியாத்தா கோயில் முன்னால் மரத்தில் சடையனைக் கயிறு கொண்டு கட்டிப் போட்டிருந்தார்கள். ஊர்ப் பெரிய மனிதர்கள்-எசமான்கள்-அத்தனை பேரும் அங்குக் கூடியிருந்ததையும், ஆளுக்கு ஆள் இரைந்து பேசிக் கொண்டு இருந்ததையும் வள்ளி பார்த்தாள். ஒரு ஓரமாக வாய் பொத்தி முதுகை வளைத்து மரியாதை காட்டிக் குனிந்து நின்றிருந்தது
வள்ளியின் உறவுக் கூட்டம்.

ஊரின் பெரிய பணக்காரரும் கிழக்கு வளவு எசமான் என்று மரியாதையுடன் குறிப்பிடப்படுபவருமான செல்லமுத்து..

“என்னடா பெரிய மனுசங்களா, சும்மா மௌனஞ் சாதிச்சு நின்னா என்ன அருத்தம்? சடையப் பய ஊருக்குள்ள வந்து எசமாங்க அத்தினி பேருக்கும், அவமரியாதை செஞ்சு போட்டானே, என்னலே சொல்றீங்க..?”

“நாங்க என்னுங்க சாமி சொல்றது? எசமாங்களுக்குத் தோணுற தெண்டனையைக் கொடுங்கோ..”

“எனக்கு அப்பமே தெரியும், சடையன் போன கிழமைக்குக் கால்லே செருப்பு தொட்டுக்கிட்டு மைனர் கணக்கா சந்தைல என் எதுக்கால வந்தான், கொஞ்சம் கூட மட்டு மருவாதி கெடையாது, இன்னிக்கு என்னடான்னா ஊருக்குள்ள வந்து எசமாங்க பொழங்குற நல்ல தண்ணிக் கெணத்துலியே வாளியை எறக்கிப் புட்டான்! என்னடாது அக்குருமம், இத்தினி தலைமுறையிலே இப்பேர்க்கொத்த தப்பு நடந்ததுண்டா? இங்க இருக்குற அத்தினி எசமாங்கமாரை ஒரு கூலிக்காரன் அலட்சியப் படுத்தறதுன்னா, அவனைக் கட்டி வெச்சு அடிச்சுக் கொன்னு போடறது தப்பு இல்லைங்கோ!..”

தாமதமாக ஆனால், விரைவாக வந்து கூட்டத்துக்குள் கலந்தார் ராமசாமி மிராசு. விஷயத்தைக் கொஞ்ச நேரத்துக்கு முன்பு யார் மூலமோ அறிந்து, வயற்காட்டிலிருந்து வேகமாக வந்த
இறைப்பினூடே, “என்னலேது அட்டூளியம்? கூலிக்காரப் பயகளுக்கு இத்தினி திமிரா? என்னுங்க அத்தான், பாத்துட்டு நிக்குறீங்க? அத்தினி பேத்தையும் சவுக்கால் விரியலாடுங்க,
அப்பத்தான் எல்லாப் பயகளும் ஒலுங்குக்கு வருவ்கானுங்க” என்று குரலை உயர்த்திக் கூச்சல் போட்டார்.

மரத்தில் கட்டிப் போடப்பட்டிருந்த சடையன் பலஹீனமான குரலில் சொன்னான்: “சாமி, எங்க கெணறு வத்திப் போயிருச்சுங்கோ, எசமாங்கமாருக்கு வேணுமின்னு குத்தம் பண்ண
வல்லீங்கோ. வரச்சி தாங்க ஏலலீங்களே எசமாங்களே! ராவு ஊறி நாளைக்கு கெணத்துலேர்ந்து தண்ணி மொகக்குற வரைக்கும் தண்ணி குடிக்காம இருக்க முடியுமுங்களா?”

“எலேய் சடையா, நீ எதுனாச்சியும் வாயைத் தொறந்தா பாரு… குரல்வளையைக் கிளிச்சுப்புருவேன் ஆமா!” என்று கத்தினார் ஒருவர்.

ராமசாமி மிராசு சீறினார்: “தாகத்துக்குத் தவிச்சா செத்தாலே போயிருவே? அப்பிடிச் செத்தாத்தான் என்னலே? இனிமே இந்தத் தண்ணியை எப்படிலே நாங்க குடிச்சுக்கிறது? திமிர் பிடிச்ச கம்மனா…”

அவர் வார்த்தையை முடிக்குமுன், “சாமி, நிறுத்துங்கோ!” என்று முன்னால் வந்து ஆங்காரமாகக் கத்தினாள் வள்ளி.

அவள் உடம்பு சந்நதம் வந்தது போல் நடுங்கிற்று; கண்கள் சிவந்து நெருப்பு கக்கியது.

தன் புடவையின் மேல் தலைப்பைச் சரேலென்று கீழ் இறக்கினாள். சற்றுமுன் நிலக்கடலைக் காட்டின் சாளை அறைக்குள் சொர்க்கம் எனக் கண்டதை, “சீச்சீ, கருமம்!” என்று சொல்லிக் கண்களைப் பொத்திக் கொண்டார் ராமசாமி மிராசு. கூடி நின்றவர்களும், “கருமம், கருமம்” என்று சொல்லி ஆவலுடன் வெறித்தது ஒரு முரண்பாடாகத்தான் காண இருந்தது.

வள்ளி எல்லோரையும் பார்த்தாள். ராமசாமி மிராசை நேருக்கு நேர் கண்களால் முறைத்து, “தாகத்துக்கு ஒரு ஏழை கெணத்துல வாளியை எறக்கினது தோசம், தீட்டு! ஆனா, அவன் ஊட்டுப் பொம்பளையோட திரேக சம்பந்தம் வெச்சுக்கிட்டா அது தோசமில்லியா..?” என்று கேட்டாள்.

ராமசாமி மிராசு பாய்ந்து அவள் கன்னத்தில் அறைந்தார்.

“சிறுக்கி! சபையில இத்தினி எசமாங்க இருகாங்கன்ற மட்டுமரியாதி இல்லே, பயம் பக்குவம் இல்லே, என்னலே நெனச்சுகிட்டிருக்கே?” ஆவேசமாகத் திரும்பியவர், யாருடைய கையிலோ இருந்த குதிரைச் சவுக்கைப் பிடுங்கி வள்ளியைக் கண்டபடி அடிக்கத் தொடங்கினார்.

கை சளைத்து சவுக்கைக் கீழே போட்டதும் பஞ்சாயத்து நடந்தது. அரை மணி நேரம் கலந்து பேசினார்கள். இறுதியில் தீர்ப்பு சொல்லப்பட்டது.

தண்ணி தீட்டாயிடுச்சு. ருத்ராவதிலேர்ந்து உடுக்கைப் பூசாரியைக் கொணாந்து மாகாளியாத்தாவுக்குக் கோழியும் ஆடும் பலி கொடுத்துத் தீட்டைத் தொலைச்சுப்புடலாம்.

அதுபோல ஊர்க் கெணத்துலே வாளியை எறக்கின குத்தத்துக்கு சடையனுக்குப் பத்து ரூபா அபராதம். அவன் சம்சாரம் வள்ளி எசமாங்கக் கூடியிருக்கிற சபையில மரியாதியில்லாம பேசினது, நடந்தது எல்லாத்துக்கும் அவளுக்கும் பத்து ரூபா அபராதம். ஒரு வாரத்துல பணத்தைக் கெட்டணும். கட்டினப் பெறவுதான் இந்த ஊர் எசமாங்க காடுகள்ல வேலைக்குப் போக முடியும்!

சடையனைக் கட்டு அவிழ்த்து விட்டார்கள். எசமான்கள் முன்பு தரையில் சாஷ்டாங்கமாகத் தண்டனிட்டுப் பின் எழுந்தான் அவன். கணவனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டும், தானே தள்ளாடியவாறும் தன் இன ஜனங்களோடு மெல்ல நடந்தாள் வள்ளி.

அவள் கன்னத்தில் அறைந்த தன் கையைப் பார்த்தார் ராமசாமி மிராசு. “கீழ்ஜாதிப் பொம்பளையைக் கை தொட்டு அடிச்சிட்டேன், தீட்டு ஆயிப்போச்சு. சனியன், வூட்டுக்குப் போய்
மொதல்ல தலை முளுகியாகணும்…” என்று உரத்த குரலில், மற்றவர்கள் காதுகளுக்குச் சொல்லிக்கொண்டே ஒதுங்கி நடந்தார்.

(தேன்மழை மாத இதழ்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *