தரிசனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 12, 2023
பார்வையிட்டோர்: 1,274 
 

(1963 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஈஸி சேரில் சாய்ந்து ஒரு சுருட்டைப் புகைத்தவாறு யோசனையில் ஆழ்ந்திருந்தார் கன்னையா கணக்கப்பிள்ளை. சுருட்டின் நுனியிலே, அரை அங்குல நீளத்திற்கு, வயிற்றுக் குள் கனலை அடக்கிய சாம்பல். வலதுகை, புருவ மயிரை நெருடியும் தடவிக்கொண்டுமிருந்தது.

பங்களாவுக்கு வெளியே லேசாக மனிதஆரவாரம் கேட் டது. கணக்கப்பிள்ளை தலையைத் திருப்பிப் பார்த்தார். பின் னர் ஈஸி சேர் சரசரக்க எழுந்து வெளியே வந்தார். வாச லுக்கு அருகில் ஏழெட்டு மனிதர்கள் நின்றுகொண்டிருந்தார் கள். எல்லோரும் அந்தத் தோட்டத்துக் கோவில் நிர்வாகத் தைச் சேர்ந்தவர்கள்.

“வாங்க” என்று அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார். அவர்கள் வருவது ஏற்கெனவே அறிவிக்கப்பட் டிருந்தது. எனவே தரையில் தயாராக பாய்விரிக்கப்பட்டுக் கிடந்தது. எல்லோரும் அமர்ந்தார்கள். ஈஸிசேரில் அமர்ந்த வாறு “என்ன விஷயம்?” என்றார்.

அந்த வருடம் கோவில் விஷயத்தில் ஒரு சிக்கல். ஆடி மாதந்தோறும் கோலாகலமாக நடக்கும் பூஜை முடிந்து கடைசி நாளன்று அக்கினிச் சட்டி ஏந்தி தோட்டத்தை வலம்வருவாள் காளி அம்மன். ஒவ்வொரு வருடமும் வடிவே லுப் பண்டாரம்தான் அக்கினிச்சட்டி ஏந்துவான். அவனுக்கு காளியின் ‘ஆவேசம்’ வரும். நெற்றி மட்டத்துக்கு தீ உயர, சட்டியை கையில் வைத்துக் கொண்டு அ வன் சொல்லும் சொற்கள் ஒவ்வொன்றும் கனல் துண்டுகள்தான். சொன்ன சொல் அப்படியே பலிக்கும்.

தோற்றமும் பயங்கரம் மஞ்சள் நீரில் தோய்ந்த வேட்டி கட்டி இடுப்பில் ரத்தச் சிவப்புப் பட்டுத் துணியைச் சுற்றி யிருப்பான். கரும் பாறைக்கல் போன்ற உடம்பில் அகன்ற தோள்கள், முகம்பூராவும் குங்குமத்தை அப்பிக்கொள்வான். அகன்ற நெற்றிக்கு மேலிருந்து கழுத்து வரைக்கும் அருவிக் கொட்டுவதுபோல தலைமயிர். சிவந்து பிதுங்கும் கண்க ளோடு ஓங்கார சப்தமிட்டு அவன் வரும்போது சின்னப் பெண்கள், குழந்தைகள் எல்லோரும் எங்காவது பதுங்கி விடுவார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்பு வடிவேலுப் பண்டாரம் காய்ச்சல் வந்து செத்துப்போனான். இந்த வருடம் அக்கினிச் சட்டி எடுப்பது யார் என்பதுதான் பிரச்சனை. தோட்டத்தில் இன்னும் ஐந்தாறு ‘ஆவேசக்’ காரர்கள் இருந்தனர். அவர் களுக்குள் நான் நீயென்று குடுமிப் பிடி!

கோவில் நிர்வாகிகளும் யாருக்கு சந்தர்ப்பம் கொடுப்பது என்று புரியாமல் தயங்கி கொண்டிருந்தார்கள். விஷயம் கோவியோடு போகாமல், கோஷ்டிப் பூசலாகி தோட்டம் இரண்டுபடும் அளவுக்கு உருவாகியிருந்தது. அதற்குத்தான் கணக்கப்பிள்ளையின் உதவியை நாடி வந்திருந்தார்கள்.

தலைகுனிந்து, புருவ மயிரை நீவியவாறு இருந்த கணக் கப்பிள்ளை, நிமிர்ந்து சுருட்டு சாம்பலைத் தட்டிவிட்டு கனைத்துக்கொண்டார். எதிரே இருந்தவர்களைப் பார்த்து “ஆமா! இதுக்கு நான் என்ன பண்ணமுடியும்?” என்றார் வந்தவர் களில் மூத்த ஒருவன், அடக்கமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு அப்பிடி சொல்லப்படாதுங்க, ஐயாதான் இதுக்கு நல்ல முடிவு சொல்லணும்” என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருந்தவர்களைப் பார்த்து ‘என்ன’ என்றான்.

சொல்லப்போனால் கணக்குப்பிள்ளைக்கு இம்மாதிரி விஷ யங்களில் நம்பிக்கையோ, ஈடுபாடோ கொஞ்சங்கூட இல்லை. வெள்ளைக்காரரின் வேலையை யந்திரம்போல் செய்து, எதிலும் பிடிப்பு இல்லாமல் சலித்துப்போயிருந்தார். பொழுதுவிடிந்து பொழுது போனால் மனிதன், நாயாக படும் பாட்டில் சட்டி யாவது, பானையாவது!

மறுநாள் யோசித்துச் சொல்வதாகச் சொல்லி அவர்களை அனுப்பினார்.

அடுத்தநாள், அந்தத் தோட்டத்தில் ‘ஆவேசம்’ வரும் அத்தனை பேரையும் கூப்பிட்டு ‘இந்தா பாருங்க ஏதோ இரு பது முப்பது ரூபா காசு, சாராயப் போத்தல், வேட்டிலேஞ் செல்லாம் கெடைக்குதேன்னு பொறுப்பில்லாமே பேசப்ப டாது. இது கோவில் விவகாரம், ஏதாவது ஒரு சமாதானத் துக்கு வாங்க” என்று சொல்லிப்பார்த்தார். யாரும் மசிவ தாக இல்லை. அதன்பேரில் தன்னுடைய தீர்ப்பைச் சொன்னார்.

“நான் ஒரு சாமான் மறைச்சுவச்சு ‘குறி’ கேட்பேன். அது என்னங்கிறதை யாரு சொல்றாங்களோ, அவங்க அக் னிச் சட்டி எடுக்கலாம். என்ன சரிதானா?” என்றார். உள்ளூர அவருக்கு இந்த சாமியாட்ட விவகாரம் எல்லாம் உண்மை தானா என்பதை பரீட்சிக்க வேண்டும் என்பதும் ஒரு ஆவல் அவர்களும் சம்மதித்தார்கள். அந்த வாரத்து ஞாயிற்றுக் கிழமை மாலையில் பரீட்சை ஆரம்பமாயிற்று.

உண்மையில் அபூர்வக் காட்சிதான். கோவிலுக்கு முன் பரந்த வெளியில் ஆறுபேர், குளித்து மஞ்சள் ஆடை அணிந்து, வரிசையாக நின்றார்கள். கோவில் பூஜை நடந் தது. அம்மன் சிலைமீது போடப்பட்டிருந்த மாலைகளில் ஆறு மாலைகளைக் கொண்டுவந்து ‘ஆவேசக்’காரர்கள் கழுத்தில் போட்டு, விபூதி பூசினார் பண்டாரம். கோவிலுக்கு நேர் எதிரே மேஜை ஒன்று போடப்பட்டு அதன்மீது கணக்கப் பிள்ளை கொண்டுவந்த ரகசியப் பொருள் வைக்கப்பட்டது. பேப்பரால் நன்றாக மறைக்கப்பட்டது சிறு பொட்டலம். பரந்த வெளியைச் சுற்றி வேலி அடைத்தாற்போல, தேட் டத்து ஜனங்கள் பூராவுமே நின்றார்கள்.

பாதி விவகாரம் பார்க்க, பாதி வேடிக்கை பார்க்க. ஒரு மூலையில் நான்கு பறையடிப்பவர்கள், ஒதுங்கிநின்று ‘டணக் டணக்’கென்று பறையடிக்கத் துவங்கினார்கள். ஆவேசக்கா ரர்களின் பக்கத்தில் நின்று ஒருவன் பாடத்துவங்கினான்.

‘தாயே வாருமம்மா!
தயவுடனே வாருமம்மா!
காளியே வாருமம்மா!
கடைக்கண்ணால்
பாருமம்மா!’

என்று தொடங்கி லேசகதியில் செல்லும் ஆவேசமான பாடல். ஒவ்வொரு வரியின் முடிவிலும், கூட்டம் பூராவும் ‘அரோ ஹரா எனக் கூவியது, உடலை புல்லரிக்கச் செய்தது. பாட லில் லயித்திருந்த ஆவேசக்காரர்கள் சிலையென நின்றனர். பல நிமிடங்களுக்குப் பிறகு ஒருவனுக்கு உடல் லேசாக நடுங் கத் தொடங்கியது. ஆவேசநிலை படிப்படியாக கூடி நடுக்கம் ஆட்டமாகியது. கண்கள் கனலாகி, மூச்சு அதித வேகத்தில் ‘புஸ் புஸ்’ என்று பாம்பின் சீறலாகியது. ‘சாமி வந்துருச்சி!’ கிசுகிசுத்தது கூட்டம். ஆவேசம் வந்தவன் ஓடத்தயாராவது போல் ஒரு காலை முன்வைத்து கைகள் இரண்டையும் சேர்த்து முடுக்கியவாறு பேய்த்திமிறலுடன் கூட்டத்தை திரும்பிப் பார்த்தான், எதிலும் லயிக்காத பார்வைதான். எனினும் சிறு பிள்ளைகள் மருண்டன, சில அழவே துவங்கி விட்டன.

ஆவேசம் வந்தவன், கைகளைக் கோர்த்தபடியே தலைக்கு மேல் தூக்கி ‘ஆ’ வென்று அலறினான். மனித அலறலுக்கு அவ்வளவு வலிமை இருக்கமுடியாது.

சந்தர்ப்பம் தெரிந்து அவனுடைய கையாள் ஒருவன் நீண்ட பிரம்பு ஒன்றை அவன் கையில் திணித்தான். அந்தப் பிரம்பால் தன் முதுகிலேயே பளீர் பளீர் என்று விளாசிக் கொண்டான்.

மற்ற ஐவருக்கும் சற்று நேரத்தில் ‘ஆவேசம்’ வந்து அறு வரும் ஏககாலத்தில் அந்த இடத்தை ருத்ர பூமியாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவனுக்கு ஆணியின் முன்பகுதி நிரம் பிய பாதக்குறடு அணிவிக்கப்பட்டது. அதை அணிந்து, பறை யின் தாள லயத்துக்கேற்ப ஆடிவந்தான். இன்னுமொருவ னுக்கு நாக்கை வெளியே இழுத்து, நீண்ட வேல் ஒன்றை நடுநாக்கில் வைத்து அழுத்தினார்கள். வேல் நாக்கைத் துளைத்து தாடையிலிருந்து மூக்குவரை நீண்டு நின்றது.

சுமார் அரைமணி நேரத்துக்குப் பிறகு, ‘ஆவேசம்’ ஓரளவு வேகம் குறைந்த நிலையிலிருக்கும்போது, நான்கைந்து பேர் சேர்ந்து ஒருவனைப் பிடித்து இழுத்து வந்தார்கள். அவன் அப்போதுங்கூட அவர்களையும் சேர்த்துக்கொண்டு ஆடியது, பார்க்க வேடிக்கையாக இருந்தது.

கூட்டத்தில் ஒருவன் “சாமி நம்மளை சோதிச்சது போக நாமளும் சாமியை சோதிக்கிறோம்’ என்றான். சிலர் சிரித் தனர். மேஜைக்கருகில் கொண்டுவந்ததும் ஒருவன் ரகசியப் பொருளைக் காட்டி “தாயே! சொல்லும்மா, இதுக்குள்ளே என்னா இருக்கு சொல்லு பாப்பம்” என்றான். ஆவேசக்காரன் ஒருமுறை பொட்டலத்தைப் பார்த்தான். மூச்சு வேகமாக சஞ்சாரம் செய்தது. வாயிலிருந்து இனம் புரியாத சப்தங்கள் கிளம்பின. தன்னைப் பிடித்து நின்ற அத்தனை பேரையும் இழுப்பதுபோல், கால்களை உந்தி ஒரு பாய்ச்சல், மறுகணம் கால்கள் தொய்ந்து மண்ணில் உடம்பு சாயத் துவங்கியது. சுற்றி நின்றவர்கள் அவனைத் தூக்கி மூலைக்குக் கொண்டுவந் தார்கள். ‘என்ன ஆச்சு?” என்று கூட்டத்தில் சிலர் கேட் டனர். ‘சாமி மலை ஏறிட்டுது’ என்றான் ஒருவன்.

இன்னுமொருவனை பிடித்துக்கொண்டு வந்தார்கள். அவ னும் நான்கு குதி குதித்துவிட்டு, கழுத்தில் கிடந்த மாலையி லிருந்த ஒரு பூவைப் பிடிங்கி காட்டிவிட்டு மண்ணில் சாய்ந் தான். கணக்கப்பிள்ளை உதட்டைப் பிதுக்கினார். என்ன அதி சயமோ, ஐவரில் ஒருவனுக்குக்கூட அது என்னவென்றே சொல்ல முடியவில்லை. இது ஒரு போலி நாடகமா, அல்லது ஆவேசக்காரர்களின் அருள் வன்மையற்றதா எனத் தயங்கிக் கொண்டு இருந்தார் கணக்கப்பிள்ளை. அவருக்கு மனதில் அவ நம்பிக்கைதான் மேலோங்கிற்று.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. கூட்டத்தில் பெண்கள் பகுதியில் திடீரென ஒரு சலசலப்பு. சிறு குழந்தை களும் சில பெண்களும் கூட்டத்தை விட்டு விலகி ஓடினர். கூட்டத்துக்குள்ளிருந்து அம்பெனப் பாய்ந்து வந்தாள் கிழவி ஒருத்தி.சாதாரண நாட்களில் நடக்கவே ஜீவனில்லாத அவள், இப்போது ஒரு குமரிப் பெண்ணின் மிடுக்கோடு விரைந்து நின்று ஆடினாள். ஆயினும் தளர்ந்த உடல், எனவே சிலர் ஓடிச் சென்று தாங்கிக் கொண்டனர். அவர்களையும் இழுத்துக்கொண்டு, வெட்ட வெளியின் நடுப் பகுதிக்கு வந் தாள். கோவிலின் உட்புறம் இருந்த எண்ணெய்க் குவியலில் கருப்பாகிப் போயிருந்த அம்மன் சிலையைப் பார்த்தாள். ஆவேசம் கூடியது. புயலில் சிக்கிய சவுக்கு மரம்போல உடல் ஆடியது. அவளைத் தாங்கி நின்றவர்கள் அவளை மெல்ல மேஜைக்கருகில் கொண்டு வந்தார்கள். கிழவியின் கண்கள் பொட்டலத்தை வெறிக்கப் பார்த்தது. மறுகணம் ‘பட் பட் டென்று வயிற்றில் அடித்துக்கொண்டாள். பக்கத்தில் நின்ற வர்கள் “என்னது?” என்றார்கள். கிழவி மீண்டும் வயிற்றில் அடித்துக்கொண்டு பொட்டலத்தைச் சுட்டிக் காட்டினாள். ‘இப்பிடிச் சொன்னாப் பத்தாது. வாயைத் தொறந்து வெவரமா சொல்லு’ என்றார்கள். ‘டேய்’ என்று சத்தமிட்டாள் கிழவி. ‘அது … அது …’ என்றாள் தொடர்ந்து. சொல்லை முந்திக்கொண்டு மூச்சு வேகமாக முந்தியது கைகள் மீண்டும் வயிற்றில் அடித்துக்கொண்டன. “அன்னம்’டா, அது அன்னம் … அன்னம்…” என்று கத்தினாள்.

கணக்கப்பிள்ளை புன்முறுவல் பூத்தார், உள்ளூர வியப்பும் கூட. கிழவி மேஜைமேலிருந்த விபூதிச் சம்புடத்திலிருந்து விபூதியை அள்ளும்போது, பயபக்தியோடு கைநீட்டி வாங் கிக்கொண்டார். பக்கத்திலிருந்தவர்களிடம் ‘கெழவி சரியா சொல்லிருச்சு’ என்று சொல்லிவிட்டு பொட்டலத்தைப் பிரித்தார்.

உள்ளே ஒருகை நெல்மணி இருந்தது. யாரோ ஒருவன் “சொல்லுங்க … அரோஹரா!” என்று கூவினான். கூட்டம் பூராவும் ‘அரோஹரா’ என்று எதிரொலித்தது.

அந்த வருடம், காளிதரிசனம் தடைபடவில்லை.

– செய்தி 10-11-63

ஒரு கூடைக் கொழுந்து, முதற் பதிப்பு: ஏப்ரல் 1980, வைகறை பப்பிளிகேஷன்ஸ், இலங்கை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *