தணியாத தாகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 4,094 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேலே மலையிலிருந்து ‘சோ’வெனத் தண்ணீர் அருவியாகக் கீழே கொட்டியது. அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த அந்த இடத்தில் வீசிய குளிர்க் காற்று உடலைச் சிலிர்க்க வைத்தது. கையில் கவ்வாத்துக் கத்தியும், தலையில் தொப்பியுமாக அந்தப் பெரிய மரத்தில் சாய்ந்தவாறு தணிகாசலம் நிற்க, தலை குனிந்தவாறு கற்பகம் பேசாதிருந்தாள்.

“இங்க பாருங்க கற்பகம்… இங்கே தனியே நாங்க இரண்டு பேரும் நிற்கிறது சரியில்ல. என்னை எதற்காக இங்கே தேடி வந்தீங்க. நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யனுமா…? சீக்கிரம்! சொல்லுங்க, எனக்குத் தலைக்கு மேலே வேலை கிடக்குது…”

கற்பகம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். தணிகாசலத்திற்கு எரிச்சல் வந்தது. மாலை

“கற்பகம் நான் சொல்லுறது உங்களுக்கு விளங்கவில்லையா? கல்யாணமாகாத கன்னிப் பொண்ணு தனியா இங்கே என்னோட நிற்கிறதை யாராவது பார்த்தா விபரீதமாயிடும்… தயவு செஞ்சி வந்த விஷயத்தைச் சொல்லுங்க…”

கற்பகம் முகம் சிவக்க மெதுவாக வாயைத் திறந்தாள்.

“அன்னைக்கி ஆத்துல விழுந்த என்னை ஆபத்துன்னு தெரிஞ்சும் துணிச்சலோட தண்ணியில இறங்கிக் காப்பாத்தினீங்க. நானொரு பொண்ணுன்னு தெரிஞ்சும் ரொம்பக் கண்ணியமா நடந்துக்கிட்டீங்க…. அந்த சம்பவத்துக்குப் பின்னால் உங்களைச் சந்திக்கப் பலமுறை முயற்சி செய்தேன். ஆனா முடியலை…”

தணிகாசலம் புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.

“ஓகோ, செஞ்ச உதவிக்கு நன்றி சொல்லுறதுக்காகத் தேடினீங்களா…?”

“நன்றி சொல்லுறதுக்காக மட்டுமில்ல…”

“வேற எதுக்காக…?”

“என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும்தானே…”

“ஓ தெரியாமலா…? இந்த தோட்டத் தலைமை குமாஸ்த்தாவா வேலை செஞ்ச செல்லையாவோட பேத்தி. டவுன்ல பெரிய வியாபாரம் செய்யுற செல்வந்தர் புண்ணியகோடியின் ஒரே செல்வ மகள். எந்த நேரமும் தன்னோட சாதியை மட்டுமே பெருசா நினைச்சுட்டு மற்றவங்களை நாயை விடக் கேவலமாக நினைக்கிறவரின் ஒரே மகள்…”

கற்பகம் கோபத்துடன் அவனைப் பார்த்தான்.

“எங்கப்பா அப்புடி இருக்கலாம். ஆனா, நான் அப்படிப்பட்டவள் இல்லை…”

“சரி… சரி… நீங்க அப்படிப்பட்டவரா இல்லாமல் இருக்கலாம்… அதுக்காக என்னைத் தேடி வரக் காரணம் என்ன…?”

“வந்து… தண்ணியில விழுந்த என்னைத் தொட்டுத் தூக்கினீங்க. முதன் முதலாக ஓர் ஆடவனோட கை என்மேலே பட்டதும் நான் சிலிர்த்துப் போயிட்டேன்…”

“ஐயையோ… நான் எந்தத் தீய நோக்கத்துடனும் உங்களைத் தொடல… ஆபத்தான நேரத்தில என்னால வேற என்னதான் செய்ய முடியும்…”

“உங்களை நான் தவறாச் சொல்லல. உங்க கை என் உடம்பில பட்டதில் இருந்து நான் என் நினைவை இழந்துட்டேன். என் மனம் உங்களையே நினைக்க ஆரம்பிச்சிடுச்சி…”

தணிகாசலம் அச்சத்துடன் அவளை நோக்கினான்.

“நீங்க சொல்லுறதைப் பார்த்தா என்னை நேசிக்கிறதாத் தெரியுது…”

“அமா… உண்மைதான்…”

“தயவு செஞ்சி உங்க மனதில இப்படி ஒரு எண்ணமிருந்தால், உடனடியாக உங்களை நீங்க மாத்திக்கிறது தான் நல்லது. நான் தோட்டத்துல வேலை செய்யுற சாதாரணத் தொழிலாளி. சாதியில் குறைந்தவன். பத்துக்கு மேலே படிக்க வசதியில்ல. கோட்டையில் பிறந்த நீங்க, குடிசையில் வாழுற என் மேலே ஆசைப்படுறதுல, எந்தப் பிரயோசனமும் இல்ல. அதோட என்னோட பாதை வேறு. இழிவு நிலையில இருக்கிற தோட்டத் தொழிலாளர்கள் உயர, அவங்க வாழ்வு மலர என்னைப் போன்ற இளைஞர்கள் பாடுபட்டுக்கிட்டிருக்கிறோம். இந்தப் பெரிய இடத்துக் காதலுக்கெல்லாம் எனக்கு நேரமில்ல. ஏற்கனவே எங்களோட பிரச்சினைகளுக்காக நாங்கப் போராடிக்கிட்டிருக்க இந்த நிலையில் உங்களின் காதலுக்காகவும் போராடி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை … நீங்க போகலாம்…”

கற்பகம் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க தீர்க்கமாக அவனைப் பார்த்தாள்.

“நான் அந்தஸ்திலையும் சாதியிலையும் உயர்ந்தவளாய் இருக்கலாம். ஆனா என் காதல் உண்மையானது. முதல் முதலா என் உள்ளத்தில் உருவாகி உறுதியாக இருக்கிற இந்தக் காதலை யாராலும் அழிக்க முடியாது. அதை மட்டும் மறந்திடாதீங்க…!”

கற்பகம் சட்டென அந்த இடத்தை விட்டு வேகமாக நடக்க, தணிகாசலம் உணர்ச்சியற்ற முகத்துடன் இடையில் விட்ட தன் வேலையைத் தொடர்ந்தான்.

தணிகாசலம் அதே தோட்டத்தில் பிறந்து பத்தாவது வரை படித்து, அங்கேயே வேலை செய்யும் தொழிலாளி. அவனுக்குத் தாய் தந்தை இல்லை. உடன் பிறப்புகளும் கிடையாது. எதிர்பாராத விதத்தில் தீயினால் எரிந்து நாசமான பக்கத்து லயத்தில் அநாதையாக நின்ற வள்ளியைத் தன் சகோதரியாகத் தத்தெடுத்துக் கொண்டான்.

பதின்மூன்று வயதாகிவிட்ட வள்ளி நன்றாகப் படித்தாள். அவளை எப்படியும் பல்கலைக்கழகம் அனுப்பி விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தணிகாசலம் செயல்பட்டான். அதுமட்டுமல்ல, அந்தத் தோட்டத்திலுள்ள இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டினான். அவர்களுடன் சேர்ந்து – தங்களின் சமூகம் மேம்பாடடைவதற்கான திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயற்படுத்தினான். சாதி மதப்பாகுப்பாடற்ற சமூகத்தைக் கட்டி எழுப்புவதொன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டான். அவர்களிடம் வாக்குக் கேட்டுவரும் அரசியல்வாதிகள் அவர்கள் சொன்னபடி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மறுபடியும் அந்தத் தோட்டத்திற்குள் நுழைய முடியாது. நன்றாகப் படிக்கக் கூடிய தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குத் தேவையான அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் பண உதவிகளை, தணிகாசலம் தவறாமல் செய்துவிடுவான். மொத்தத்தில் தணிகாசலம் அந்த தோட்டத்தில் தொழிலாளர்களின் தோழனாக, அவர்களின் காவலனாக விளங்கினான்.

தணிகாசலம் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டுப் புறப்படத் தயாரானான். அவன் மண்பாதையில் வேகமாக நடந்தான். அப்போது எதிரே அண்ணாமலை எதிர்ப்பட்டார்.

“என்ன தணிகாசலம் வேலை முடிஞ்சி புறப்பட்டுட்டியாக்கும்…?”

“ஆமாண்ணே …. கொழும்பு பி போய் வந்திட்டிருக்கீங்க போல…”

“நான் மூன்று மணிக்கே வந்துட்டேன். மகன் மணிமாறன் லண்டனில் இருந்து பார்சல் அனுப்பி இருந்தான். அதை எடுக்கப் போனேன்…”

“உங்களை நினைச்சால் பெருமையா இருக்கு. ரொம்பக் கஷ்டப்பட்டு உங்க இரண்டு மகன்மாரையும் படிக்க வச்சீங்க. இன்றைக்கு ஒருத்தன் டொக்டராகவும், இன்னொருத்தன் வெளிநாட்டில் நல்ல உத்தியோகத்திலயும் இருக்கான்…”

“உண்மைதான் தணிகாசலம். நான் தோட்டத்துல சலவைத் தொழிலாளியாக இருந்தேன். எல்லோரும் என் சாதியைச் சொல்லி அசிங்கமாப் பேசினாங்க. ஆனால் நான் சிங்கமா நிமிர்ந்து நின்றேன். வைராக்கியத்தோட என் மகன்மாரைப் படிக்க வைச்சேன். இன்றைக்குத் தலை நிமிர்ந்து நிற்கிறேன். இப்பவும் வசதியில்லாத பிள்ளைகளுக்குப் படிக்க உதவி செய்கிறேன்… அது போகட்டும்… உன்னிடம் முக்கியமான விஷயம் ஒன்று பேசணும்…”

“என்ன சொல்லுங்கண்ணே …!”

“வேறொன்றுமில்லை … அந்த புண்ணியகோடியின் மகள் கற்பகத்தைப் பார்த்தேன். அது இங்கே உன்கிட்ட வந்திச்சா …”

“ஆமா… ஏன் யாரு சொன்னா …?”

“அவன் செங்கோடன் மகள் புஷ்பா டீச்சரிடம் கற்பகம் உன்னைப் பற்றிச் சொல்லி இருக்கு. கல்யாணம் என்று நடந்தால் அது உன்னோடதானாம். நான் இப்ப புஷ்பாவைக் கண்டுட்டுத்தான் வந்தேன். ஆமா நீ என்ன செய்யப்போறே?”

“புண்ணியகோடி ஒரு சாதி வெறிபிடிச்சவர். எங்களைப் போலத் தோட்டத் தொழிலாளிகளிடம் லட்சம் லட்சமாக ஏமாற்றிச் சம்பாதித்தவர். ஆனால் அவருக்கு எங்களோட பணம் மட்டும் தான் வேண்டும். நிழல் மட்டும் படக்கூடாது. அவரின் அந்தஸ்து என்கிற பட்டம் மேலே பறக்க எங்களோட பணம் என்கிற நூல் தேவை. நாங்கள் இப்போ சிந்திக்கத் தொடங்கி விட்டதால், அவரின் கொட்டம் கொஞ்சம் கொஞ்சமா அடங்கத் தொடங்கியிருக்கு. எங்களைப் புழுவா நினைக்கிற அந்தப் புள்ளப்பூச்சியோட, பொண்ணோட காதலை விட காலமெல்லாம் சேவை சேவையென்று தன்னுடைய தேவையை கூட கவனிக்காமல் நம்ம பிள்ளைகளுக்குப் படிப்பு சொல்லிக் கொடுத்த சங்கீத டீச்சர் புஷ்பாவுக்கு வாழ்வு கொடுக்கலாம்…”

அண்ணாமலை ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார்.

“என்ன செங்கோடன் மகள் புஷ்பாவையா சொல்லுறே…”

“ஆமண்ணே இது ஏற்கனவே நான் எடுத்த முடிவு. கற்பகம் பணக்காரப் பொண்ணு. அதுக்கு நான் இல்லாட்டியும் வசதியோட எவனாவது வருவான். ஆனா இன்பம் காண வேண்டிய இள வயதில் தாலி கட்டியவனை இழந்துவிட்டு துன்பத்தோடு வேலி இல்லா மரம் மாதிரி பாதுகாப்பில்லாமல் இருக்கு… என்னோட இலட்சியமே இப்படியானதொரு பொண்ணுக்கு வாழ்வு குடுக்கனும் என்கிறது தான்… இந்த விஷயத்தில் நீங்கதான் எனக்கு உதவி செய்யனும்…”

“அடடா தணிகாசலம் இதென்ன இப்படிக் கேட்டுப்புட்டே… நீ புஷ்பாவுக்கு வாழ்வு கொடுக்கிறதென்று உன் வாயால சொன்ன போதே நான் முடிவு செஞ்சிட்டேன். உனக்குக் கட்டாயமாக உதவி செய்யனும் என்று. புஷ்பா உன் மேல் மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கு. நீங்க ரெண்டு பேருமே இந்தச் சமூக உயர்வுக்காக உங்க உயிரையே குடுக்கத் தயாராக இருக்கிறவங்க. நீங்க மண வாழ்வில் இணைஞ்சா நிச்சயமா எல்லோருமே சந்தோஷப்படுவாங்க…”

“அண்ணே நம்ம பணியக்கணக்குல ரெண்டு பேருக்கு யூனிவர்சிட்டியில் இடம் கிடைச்சிருக்கு. அவங்களுக்குத் தேவையான உதவி செய்யிறது சம்பந்தமா தோட்ட ‘லைப்ரரி’யில கூட்டம் ஒண்ணு இருக்கு. இந்நேரம் எல்லாரும் வந்திருப்பாங்க. மற்ற விஷயத்தை அப்புறம் பேசிக்கலாம். நான் வாரேண்ணே …”

அண்ணாமலை, பணிவுடன் அவரிடம் விடைபெற்றுச் செல்லும் தணிகாசலத்தைப் பெருமையுடன் பார்த்தார்.

தணிகாசலம் போல ஒவ்வொரு தோட்டத்திலும் ஒருவர் இருந்தால் நிச்சயமாக மலையகத்திற்கு விடிவு வெகு தூரத்திலில்லை. ஓட்டுக்கு வேஷம் போட்டு வெற்றி பெற்று உதவி கிடைத்த பின் வாக்களித்தவர்களையே மறந்து நாற்காலிக்காக நான்காக வளைந்து ஆட்டம் போடுபவர்களுக்காக தணிகாசலம் போன்ற பொது நலமுள்ள இளைஞர்கள் தோன்ற வேண்டும். இப்போது மலையக இளைஞர்களிடையே இத்தகைய விழிப்புணர்வு வேகமாக ஏற்பட்டு வருவதை அண்ணாமலை அவதானித்துக் கொண்டு தான் இருந்தார்.

இரண்டு வாரம் சென்றது. கற்பகத்தின் காதல் அவள் தந்தை புண்ணியகோடிக்குத் தெரிய வந்தது. அவர் மகள் என்றும் பாராமல் அவளைத் தாறு மாறாக அடித்து அறையில் போட்டுப் பூட்டினார். அவர் தனது சாதியிலேயே சற்று வயது கூடிய ஆனால், பணக்கார இடத்தில் மாப்பிள்ளை பார்த்தார். அவருக்குத் தனது மகள் கழுத்தில் எவன் தாலி கட்டுகிறான் என்பது முக்கியமல்ல. ஆனால் அவர் சாதிக்காரன் தான் அவளுக்கு மாப்பிள்ளையாக வர வேண்டும். ஆனால் கற்பகத்தின் காதல் விவகாரம் தெரிந்து விட்டதால் வந்த மாப்பிள்ளைகள் வந்த வாசல் வழியே செல்லத் தொடங்கினார்கள். தன் சொத்து முழுவதையும் கொடுக்க புண்ணிய கோடி தயாராக இருந்தார். ஆனால் தான் சொத்தையாக இருந்தாலும் தனக்கு மனைவியாக வருபவள் சொக்கத் தங்கமாக இருக்க வேண்டும் என்பது தான் வருபவர்களின் எண்ணமாக இருந்தது.

கடைசியாக, புண்ணியகோடி ஒரு புளியங்கொம்மாகப் பிடித்து விட்டார். . மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை. கைநிறையச் சம்பளம், தாய் தந்தை இல்லை. பேங்கில் லட்சக்கணக்கில் பணம். சொந்தமாக ஒரு தேயிலைத் தோட்டம். விசாரித்துப் பார்த்ததில் அவர் இனத்தைச் சேர்ந்த பையன் தான் எனத் தெரிந்தது. உடனேயே முடிவு செய்துவிட்டார். கற்பகம் முதலில் முரண்டு பிடித்தாலும் மாப்பிள்ளை மிகக் கம்பீரமாக, அழகாக, ஆண்மை நிறைந்தவனாக இருக்கவே ஓரளவு மனதைத் தேற்றிக் கொண்டாள். கிட்டியது கிடைக்கவில்லை என்றாலும் எட்டியதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதென தீர்மானித்து விட்டாள்.

கற்பகத்தின் கல்யாணம் மிக விமரிசையாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு அண்ணாமலையும் வந்திருந்தார். புண்ணியகோடி முதலில் அண்ணாமலையைக் காணவில்லை. ஆனால் தாலி கட்டிக் கெட்டிமேளம் முழங்கி முடிந்தவுடன் அண்ணாமலை மாப்பிள்ளையுடன் மிக நெருக்கமாகப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட புண்ணியகோடி கடுமையான கோபத்துடன் அவரிடம் ஓடினார்…

“அண்ணாமலை… நீ எதுக்கு இங்கே வந்தே? உனக்கு யாரும் அழைப்பு அனுப்பவில்லையே…என் மாப்பிள்ளையோட சரி சமனாப் பேச உனக்கு என்ன அருகதையிருக்கு…?”

அண்ணாமலை புன்னகையுடன் அவரைப் பார்த்தார்…

“புண்ணியகோடி உனக்கு ஞாபகம் இருக்கா…? உன் தங்கை சலவைக்காரனான என்னை நேசிச்ச ஒரே காரணத்திற்காக சாதி வெறி தலைக்கேறிய உன் அப்பன் காம்பறாவோட சேர்த்து எங்க குடும்பத்தையே தீ வைத்துக் கொளுத்திவிட்டு குப்பி விளக்கு சாய்ஞ்சி தீப்பிடிச்சிட்டது என்று தோட்டத்தை நம்பவச்சாரு. ஆனா எனக்குத் தெரியும் என்ன நடந்தது என்று. ஏழை சொல் அம்பலம் ஏறாது என்று எனக்குத் தெரியும். உன் சாதி வெறிக்குப் பாடம் கற்பிக்க வேணும் என்று தருணம் பார்த்திருந்தேன். உன் மனைவியைப் பிரசவத்திற்காகச் சேர்த்திருந்த அதே ஆஸ்பத்திரியில் தான் செங்கோடன் மனைவியையும் சேர்த்திருந்தாங்க. இரண்டு பேருக்குமே பெண் குழந்தைதான் பிறந்தது. உனக்கு நல்லபாடம் புகட்ட வேணும் என்றுதான் செங்கோடன் மகள் கற்பகத்தை உனக்கும் உன் மகளை செங்கோடனுக்கும் மாத்தி வச்சேன். இந்த விஷயம் யாருக்குமே தெரியாது.”

சலவத் தொழிலாளியோட மகள் கற்பகம் தான் இவ்வளவு நாளும் உன் மகளா வளர்ந்தா. உன் மகள் புஷ்பாதான் செங்கோடன் மகளா இருக்கா. அதுமட்டுமில்ல, கற்பகத்தின் கழுத்தில் தாலிகட்டி இருக்கானே இவன் வேறு யாருமில்ல, என் மகன் மணிமாறன். இதையும் நான் தான் செஞ்சேன்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடினான். ஆனா நீங்க எல்லோரும் இன்னமும் இந்தச் சாதியைக் கட்டிப்பிடிச்சிக்கிட்டு எங்களை மாதிரி ஆட்களை எல்லாம் எட்டி உதைக்கிறீங்க. வடக்குக் கிழக்கில் கூட யுத்தத்திற்குப் பின்பு சாதி வெறி அடங்கி ஒடுங்கிடுச்சி. நாங்களும் இப்போ இந்தப் பாழாய்ப்போன சாதிக்காக யுத்தம் செஞ்சிக்கிட்டிருக்கோம். இப்பெல்லாம் கலப்புத் திருமணம் அதிகமாகத் தோட்டங்களில் நடந்துக்கிட்டு வருது. இதன் மூலமாக சாதிக்குச் சமாதி கட்டப்படுது. உங்க சொந்த மகளை தணிகாசலம் மணம் செய்யப் போறான். உங்க மகளா நினைச்சி வளர்த்த கற்பகத்தையும் என் மகன் மணம் முடிச்சிட்டான். இனி என்ன செய்யப் போறீங்க. எங்கே போச்சி உங்க சாதி. இன்னமும் அதைத் தூக்கி புடிச்சிக்கிட்டிருந்தா நாதியற்றுப் போய்விடுவிங்க.

இவ்வளவு நாளும் எங்க மனசுல ஒரு தாகம் இருந்துச்சி. தணியாத தாகம். அது இப்போது ஓரளவு தணிஞ்சிருக்கு. என் மனசு ரொம்ப ஆறுதலடைஞ்சிருக்கு. தணிகாசலம் மாதிரியான இளைஞர்கள் இப்போ வேகமாக அதிகரிச்சி வராங்க. நாளைய மலையகம் விறுகொண்டெழுந்து இந்தச் சாதி, இனம், பாகுபாடு எல்லாத்தையும் அழிச்சி, புதிய யுகத்தை உண்டாக்கிறதுக்காக இளைஞர் கூட்டம் தயாராகிக் கிட்டிருக்கு. அவங்களோட தணியாத தாகமும், நிச்சயமாத் தணியும் காலம் வெகுதூரத்தில் இல்லை.”

அண்ணாமலை படபடவென பேசி முடிக்க புண்ணியகோடி எதுவும் பேசமுடியாமல் தரையில் உட்கார்ந்து விட்டார். அவர் தன்னை சுதாகரித்துக் கொண்டு எழ வெகு நேரமாகும். அது வரைக்கும் அவருக்காக யாரும் காத்திராமல் மாப்பிள்ளையையும், பெண்ணையும் வாழ்த்துவதற்காக வரிசையில் நின்றார்கள்.

– ஓர் உன்னதத் தமிழனின் கதை (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 2006, மணிமேகலைப் பிரசுரம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *