சோமப்பனின் மரம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 11,304 
 

“”சோமப்பா இந்த வண்டியச் சித்த தள்ளிட்டுபோய், செட்டியார் வீட்டு முக்குல விட்டுட்டு வந்துருடா” தயங்கியபடியே சொன்னாள் தில்லைக்காளி.

இரண்டாம் வகுப்பில் படிக்கிற சோமப்பனை விடவும், தள்ளு வண்டியின் உயரம் அதிகம். எனினும் சிரமப்பட்டுக் கொண்டே போய் செட்டியார் வீட்டுக் காம்பவுண்ட் சுவர் ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வந்துவிடுவான்.

அவசியம், நிர்பந்தம் என்று வந்துவிட்டால், வயதுக்கும், வலுவுக்கும் மீறிய செயல்களைக் கூடச் செய்துவிட முடியும்.

அவனோ, தூணோடு தூணாய் அசையாமல் இருந்தான்.

“”ஏன்டா இப்படிச் சம்பிக் கிடக்கிறே? நேத்திக்கு ஸ்கூல் விட்டு வந்தப்ப பிடிச்சே, நீ சுரத்தா இல்லே. என்னத்தையோ பறி குடுத்தவன் கணக்கா இருக்கே. ஸ்கூல்ல என்னடா நடந்திச்சு? யாராச்சும், ஏதாச்சும் சொன்னாங்களா?”

கவலை மிகுந்த குரலில் வினவினாள் தில்லைக்காளி. அவனோ, பதிலே பேசாமல் மௌனமாக இருந்தான்.

“”சரி, ஒனக்குச் சொல்லணும்னு தோணுறப்ப சொல்லு, இப்ப மல்லுக்கட்ட ஏலாது எனக்கு. மொதல்ல எந்திரி. வண்டியக் கொண்டுட்டு போய் விட்டுட்டு வா. பொழைப்பு நடக்கணுமே. அப்பாவால ஏலலைன்னுதானே ஒன்னியப் போட்டுத் தாங்குதன். நல்லாருப்ப சோமப்பா, போய்ட்டு வாடா”.

மீண்டும் கெஞ்சினாள் தில்லைக்காளி.

மௌனத்தைக் கலைத்த சோமப்பன், “”ஆமா, வண்டியைக் கொண்டுபோய் விட்டதும், பொறவு வீடு வீடாப் போச் சொல்லுவே” என்று கூறினான் எரிச்சலுடன்.

அந்த உண்மை அவளைச் சுட்டது.

இந்த ஏரியாவிலுள்ள எல்லா வீடுகளுக்கும் போய், தேய்ப்பதற்குத் துணிகளை வாங்கிக் கொண்டு வந்து அடையாளப்படுத்திப் போட வேண்டும். அவற்றையெல்லாம் மாடசாமி தேய்த்து முடித்ததும், திரும்பக் கொண்டு போய் ஒப்படைத்துத் தேய்ப்புக் கூலியை வாங்கி வர வேண்டும்.

பூனையின் தலையில் பூசணிக்காய்!

ஏழு வயதுப் பையனுக்குச் சுமக்க இயலாத வேலைப்பளு. எனினும், முக்கி முனகியாவது செய்து கொடுக்கிறான்.

ஒரே பிள்ளை என்பதால் செல்லம்தான். ஆனால், குடி கெடுக்கும் குடியினால் மாடசாமியின் உடல் இற்றுப் போனபிறகு, அவனுக்குச் செல்லச் சலுகைகளும் இல்லை, சுமைகள் வேறு ஏற்றி வைக்கப்பட்டுவிட்டன.

ஊர்த் துணிகளை வெளுத்து இஸ்திரி பண்ணிக் கொடுக்கிறபோது வருமானமும் தாராளம், வாழ்க்கையிலும் செழிப்பு.

இப்போது வெளுக்க இயலவில்லை. கம்மல்களை விற்றுத் தள்ளுவண்டி வாங்கி, இஸ்திரி மட்டும் பண்ணிக் கொடுக்கிறார்கள்.

அந்தத் தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு போக மாடசாமியால் முடியாமல் போய்விட்டது. அதனால்தான் சின்னஞ் சிறுவனான சோமப்பனைப் போட்டுத் தொல்லை பண்ணுகிறார்கள்.

“”ஏங் கண்ணுல்லா, வண்டியக் கொண்டுபோய் விட்டுட்டு வந்துருய்யா. வீட்ல ஒத்தப் பைசாக் கெடையாது. எட்டு மட்டும் கடன் வாங்கியாச்சு. இனிம ஆர்ட்டப் போய்க் கேட்டாலும் தர மாட்டாக. துணிகளைத் தேச்சுக் கூலி பாத்தாத்தான், அடுப்புல உலை போட முடியும்” என்று உருக்கமாய்க் கூறி மகனின் மனதை நெகிழ வைக்க முயன்றாள்.

இனியும் மறுக்க முடியாது என்று எண்ணிய சோமப்பன் திண்ணையிலிருந்து எழுந்து நின்றான். கால்சட்டையின் பின்புறமிருந்து சாணித் துகள்கள் உதிர்ந்தன.

தரைக்கு சிமென்ட் போட ஆசைதான். ஆனால் அதற்கு வழி? சாணத்தால் தரையை மெழுகும்போது பெருமூச்சு விடுவாள். அதோடு சரி.

சோமப்பன் மட்டும் இன்னும் கொஞ்சம் பெரிய பையனாக இருந்திருந்தான் என்றால் அவனைப் பள்ளிக்கே அனுப்ப மாட்டாள். துணி வெளுக்க, தேய்க்க என்று அவனது முதுகை முறிக்கத் துவங்கியிருப்பாள்.

அவனும் கூடப் பள்ளியில் இருக்கும்போதுதான் சந்தோசமாகவும், திருப்தியாகவும் காணப்படுகிறான். வீட்டிலிருப்பதை வெறுக்கிறான்.

பாவம், அவளுக்குக் குடிகாரக் கணவனால் தொல்லை. இவனுக்குக் குடிகார அப்பனால் தொல்லை.

விடுமுறையை வெறுக்கிற ஒரே மாணவன் இவனாக மட்டும்தான் இருக்கிறான்.

இப்போது, சந்தோசம் தரும் பள்ளியில்கூட மனதைக் காயப்படுத்தும் வேதனை. அந்த நினைவில் சம்பியிருக்கும்போதுதான், தில்லைக்காளி கூப்பிட்டு வேலை ஏவினாள்.

மனதுள் சங்கடத்துடன்தான் தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு போனான். செட்டியார் வீட்டுக் காம்பவுண்ட் சுவர் ஓரமாகக் கொண்டு போய் நிறுத்தினான். அங்கு விழுகின்ற மாமரத்தின் நிழல், வெயில் வேளையில் மிகவும் இதமாக இருக்கும்.

வண்டியை விட்டு விட்டுத் திரும்பும்போது, முன் தினம் மாலையில் நடந்த சம்பவம் மறுபடியும் நினைவில் இடறியது.

பள்ளிவேளை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.

“”வீட்டுக்கு ஒரு மரமாச்சும் வளர்க்கணும்ன்னு டீச்சர் சொன்னாங்கல்ல. ஆனா, எங்க வீட்ல ஏகப்பட்ட மரங்கள் இருக்கு. அதுலயும் அந்த ஒட்டுச் சப்போட்டா, செம ருசிடா.”

“”எங்க வீட்டு மாமரம் செங்கை வருக்கை டே!”

“”நாங்க கொய்யா மரம் வச்சிருக்கோம்டா”.

இப்படி ஒவ்வொருவனும் தங்களது வீடுகளில் நிற்கிற மரங்களின் பெயரைக்கூறிக் கூறிப் பீற்றிக்கொண்டபோது, சோமப்பன் மட்டும் வாயையே திறக்கவில்லை.

“”வளர்த்த பிள்ளை சோறு போடாட்டாலும், வைத்த பிள்ளை சோறு போடும்னு விவேக சிந்தாமணி சொல்லுது. நம்ப அரசாங்கமும் காடுகளைப் பேணவும், மரங்களை நட்டு வளர்க்கவும் ஆலோசனைகள் கூறிச் செயல்பட்டு வருது. நாமும் நம்ம நாட்டுக்காக ஏதாவது செய்யணும்னு நினைத்தால் வீடுகள்தோறும் மரங்களை நட்டுப் பேணணும். நிறைய இல்லாட்டியும், வீட்டுக்கு ஒரு மரமாவது வச்சு வளர்க்கணும். சரி, இப்ப யாரோட வீடுகள்ல மரங்கள் இருக்கு? சொல்லுங்க பார்ப்போம்” என்று கேட்டார் நாச்சியார் டீச்சர்.

அப்போது அவனது வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து தங்களது வீடுகளில் இன்னின்ன மரங்கள் உள்ளன என்று பட்டியல் போட்டுச் சொன்னார்கள்.

சோமப்பன் மட்டும் எழவே இல்லை. குன்றிக் குறுகி வாய் மூடி இருந்தான்.

வீடே ஒழுங்காக இல்லாதபோது மரம் வைத்து வளர்க்க எங்கே போவான்?

மரம் வளர்ப்பதாகச் சொன்ன குழந்தைகளையெல்லாம் டீச்சர் பாராட்டினார்கள். தன்னால் பாராட்டைப் பெற இயலாத வேதனையுடன், சோர்ந்து போய்விட்டான் சோமப்பன். அந்தச் சோர்வுதான் இன்னமும் அவனைப் படுத்துகிறது.

“”விருட்ச ரட்சா நம்ம லக்சியா!’-ன்னு குழந்தைகள் கிட்டேச் சொல்லிச் சொல்லி, ஷிமோகாவில் மரங்களைப் பேணுவது நம்ம லட்சியம்ன்னு மனசுல பதிய வச்சுறாங்க. அதுக்குப் பயிற்சியும் தர்றாங்க. “அப்பிக்கோ இயக்கம்’ மூலம் வளர்ந்த மரங்களை வெட்டவிடாமல், அவற்றைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு நின்னு காப்பாத்துறாங்க. நீங்களும் இதைப் புரிஞ்சுக்கிட்டு, மரங்களை நேசிக்கணும். செய்வீங்களா?”

“”நேசிப்போம் டீச்சர்! மரங்களை வளர்ப்போம் டீச்சர்”

“”வெரி குட்! வெரி குட்!”

இத்தனை அமளிக்கும் ஊமையாய் இருந்தவன் சோமப்பன்தான். பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது குழந்தைகள் இதையே பேசிக்கொண்டு வந்தனர்.

மரமே இல்லாத வீட்டுக்காரன் என்று அவனைக் கிண்டல் செய்தனர்.

தனது வீட்டில் ஒரே ஒரு மரம்கூட இல்லாமல் போய்விட்டதே. இருந்திருந்தால் டீச்சர் கேட்டதும் முதல் ஆளாய் எழுந்து நின்று கூறியிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டான்.

வெயிலையும், மழையையும், காற்றையும் தாராளமாக உட்புக அனுமதிக்கிற ஓட்டைக் குடிசை அது. காலை நீட்டிப் படுப்பதற்குக்கூட இடம் இல்லாத குடிசை அது. இதில் மரம் வைப்பதற்கு ஏது இடம்?

அவனது குடிசை கழிவுநீர் ஓடைக் கரையில் இருக்கிறது. பெருமழை பெய்துவிட்டால், ஓடை நிரம்பி குடிசைக்குள்ளும் வெள்ளம் புகுந்துவிடும்.

அப்போதெல்லாம் தில்லைக்காளி பதறிப்போய் நிற்பாள். பகலிலேயே பல்வகைப் பூச்சிகளும், எலிகளும் உலா வரும். இரவிலோ மூட்டைப்பூச்சிகளும், கொசுக்களும் சாம்ராஜ்யம் நடத்தும்.

வெயில் நாளில் பரவாயில்லை. மழைக்காலத்தில் பெருந் துன்பம்.

இந்த லெட்சணத்தில் எங்கே போய் மரம் வளர்ப்பது? சிந்தனை கனக்க குடிசையை நோக்கி நடந்து கொண்டிருந்தபோதுதான், “அது’ கண்ணில்பட்டது.

தினமும் கண்களில் தென்படுகிற, “அது’ இத்தனை நாளும் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.

இன்று, பிரதானமாய் இடம் பிடிக்கிறது.

பார்க்கப் பார்க்கப் பரவசமாகவும் இருக்கிறது.

இவனது குடிசையின் நேர் பின்புறத்தில், கழிவு நீரோடையின் மேடிட்டிருந்த மத்திப் பகுதியில், கம்பீரமாய் நிற்கின்ற பப்பாளி மரம் அவனைத் துள்ளும்படி தூண்டுகிறது.

காட்டுச் செடிகள் புதராக மண்டியிருக்க, ஒரு விருட்ச ராஜாவைப்போல் நிமிர்ந்து நிற்கிறது.

இதுவே முதல் காய்ப்பு என்பதால் தளதளவென்று கரும்பச்சை வண்ணக்காய்களும், அதற்கும் மேலாக இளம் பச்சை வண்ணப் பிஞ்சுகளுமாக நிறைந்து, நிறைமாத சூலிபோல் நிற்கிறது. அடுத்த மாதவாக்கில் காய்கள் பழமாகத் துவங்கிவிடும்.

இதுவரையிலும் எவரும் அதைச் சட்டை பண்ணியதாகத் தெரியவில்லை. ஒருவேளை பழுக்கத் துவங்கிவிட்டால் வரக்கூடும். பொது ஓடையில் நிற்கிற மரம்தானே என்று எவர் வேண்டுமானாலும் பறிக்க முயலலாமே!

அதற்குள் அதை உரிமைப்படுத்திவிட்டால், நாச்சியார் டீச்சரிடம் போய்த் தனது வீட்டிலும் ஒரு மரம் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளலாமே. மற்ற மாணவர்களிடமும் பெருமை பீற்றிக் கொள்ளலாமே என்று எண்ணமிட்டான்.

இதனால் அவனுள் உற்சாகம் பீறிட்டது. கூடவே ஓர் ஐயமும்! அப்படி உரிமை கொண்டாட முடியுமா? என்று யோசித்தான்.

அது ஓடைக்குள்ளே நின்றிருந்தாலும்கூட, மிகவும் சரியாகத் தனது குடிசையின் பின்னே நிற்பதால், முடியும் என்று நம்பினான். கொஞ்சம் சீமைக்கருவேல முள்பத்தைகளை வெட்டிக்கொண்டு வந்து, பப்பாளி மரத்தைச் சுற்றிலும் நட்டு வைத்துவிட்டால், மற்றவர்கள் வரத் தயங்குவார்கள் என்று எண்ணினான்.

தன்னால் வேலி அமைக்க இயலாது, அப்பாவினால்தான் முடியும் என்று எண்ணியவன், இதற்கு அம்மாவைச் சிபாரிசு பண்ணச் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.

“ஹையா, எங்க வீட்லயும் ஒரு பப்பாளி மரம் இருக்கே!’ பீற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறபோதே, ஆயிரம் பப்பாளி மரங்களின் உரிமையாளன் என்பதைப் போன்ற பெருமிதம் உருவாயிற்று.

புதையல் கிடைத்தாற் போன்ற மகிழ்ச்சி.

இன்னிக்கு மட்டும் பயலுவ பீத்தட்டும், நானும் பீத்திக் காட்டிர்றேன். எங்க வீட்லயும் பப்பாளி மரம் இருக்குடோய். நெறையக் காய்ச்சிருக்குடோய்! அடுத்த மாசம் பழுத்துரும். அப்ப ஒங்களுக்கெல்லாம் திங்கப்பழம் கொண்டு வருவேன்டோய்… என்று சக மாணவர்களிடம் பீற்றிக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டான்.

தன்னுடைய பங்களாவில் பழமரச் சோலையே இருப்பதான கற்பனையில் மிதந்தான்.

சிரட்டைக் கங்கு தயார் செய்து கொண்டிருந்த மாடசாமியின் முன்னால் போய் நின்றான் சோமப்பன்.

“”அப்போவ், இப்ப நான் வீடு வீடாய்ப் போய்த் துணிகளை வாங்கிட்டு வந்து வச்சிர்றேன். நீரு தேச்சு வச்சிரும். பள்ளிக் கொடத்துல ஒண்ணுக்குத் தண்ணிக்கு விடுறப்ப ஓடியாந்து, தேச்சு வச்ச துணிகளை அவுகவுக வீடுகள்ல்ல கொண்டுபோய்க் குடுத்துட்டுக் காசை வாங்கிட்டு வந்துர்றேன்..” என்றான்.

முன்பு தள்ளுவண்டியைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வரச் சொன்னதற்கே முனகியவன், இப்போது எல்லா வேலைகளையுமே உற்சாகமுடன் செய்வதாகச் சொல்கின்றானே என்கிற வியப்புடன் மகனைப் பார்த்தாள் தில்லைக்காளி.

அவன் திட்டம் போட்டல்லவா செயற்படுகின்றான். வேலி போட்டுத் தரச்சொல்ல வேண்டுமே!

திண்ணையில் அமர்ந்து ஆப்பம் சாப்பிடும் சோமப்பனின் மனம், பின்னாடி நிற்கின்ற பப்பாளி மரத்தின் மீதே இருந்தது.

இப்போது அது அவனது கற்பகவிருட்சமாகிவிட்டதே.

அட ஒரு பயலாவது மரம் குறித்த பேச்சையே எடுக்கவில்லையே! எப்போது துவக்குவான்கள், தானும் ஒரு பப்பாளி மரத்தின் உரிமையாளன் என்கிற பெருமையை இவன்களிடம் எப்போது நிலைநாட்டலாம் என்கிற தவிப்புடன் சோமப்பன் இருந்தான்.

பையன்கள் எவற்றைப் பற்றியெல்லாமோ பேசினார்களே தவிர, மரத்தைப் பற்றிய பேச்சை மட்டும் எடுக்கவே இல்லை.

சோமப்பனின் பொறுமை பறந்தே போய்விட்டது. எதையாவது சாக்கு வைத்து, தானே அந்தப் பேச்சை எடுக்கலாம் என்று எண்ணினாலும் கூச்சமாக இருந்தது.

இராமநாதனின் டவுசர் பை புடைத்திருந்தது. அருகில் போய் அதை அழுத்தியவன்,

“”பைக்குள்ள என்னடே வச்சிருக்கே? முறுக்கு மாதிரி தெரியுது” என்று கேட்டான்.

“விசுக்’கென்று விலகிக்கொண்ட இராமநாதன்,

“”முறுக்கும் இல்லே, கிறுக்கும் இல்லே. அது கொடுக்காப்புளிப் பழமாக்கும். எங்க வீட்ல ரெண்டு கொடுக்காப்புளி மரங்க நிக்கிதுல்ல” என்றான் பெருமைக் குரலில்.

பிடி கிடைத்துவிட்ட சந்தோசம் சோமப்பனுக்கு.

“”ஆங், எங்க வீட்லயும்தான் ஒரு பப்பாளி மரம் நிக்கிதுல்ல. அடுத்த மாசம் பழம் திம்பேன். ஒங்களுக்கும் கொண்டுட்டு வாறேன்” என்றான் பெருமையான குரலில்.

“”புளுகாதடா புளுகுணி. ஒங்க வீட்ல மரம் வைக்க எடம் இருக்காக்கும். வா.. வா.., டீச்சர் கிட்டச் சொல்லிக் குடுக்கிறேன். பொய்யா சொல்ற? அன்னிக்கு டீச்சர் கேட்டப்ப வாயை மூடிட்டு இருந்தே. மரம் இருந்திருந்தா அப்பவேல்ல சொல்லியிருப்ப. இன்னிக்கு என்கிட்டேப் பீத்தப் பாக்கியோ? புளுகுணி, புளுகுணி” என்றான் இராமநாதன்.

“”வீடே இக்கிணி போலச் சிறிசு. கரண்டு லைட்டு கூட ஓசி. இதுல இவன் தோட்டம் போட்டு மரம் வளர்த்திருக்கானாம். பொய்யங்காணிப் பய” என்று நக்கலடித்தான் நாகராஜன்.

எல்லோரும் “ஓ’வென்று சிரித்துவிட்டார்கள்.

நசுங்கிப் போய்விட்டது சோமப்பனின் முகம். ஆனாலும் அவன் விடுவதாக இல்லை.

“”நெசமாவே எங்க வீட்டுக்குப் பொறத்தாலே ஒரு பப்பாளி மரம் நிக்கிதுடா. நெறையக் காச்சிருக்கு. டீச்சர் கேட்டப்ப நினைப்புக்கு வரல. அதான் சொல்லல. எல்லாரும் இப்ப எங்கூட வாங்க. எங்க வீட்டு மரத்தைக் காமிக்கேன்…” என்று உறுதியான குரலில் கூறினான்.

குழந்தைகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். சோமப்பன் சொன்னதை நம்பாதவர்களாய்த் தெரிந்தார்கள். அவனது ஓட்டைக் குடிசையைப் பற்றித்தான் எல்லோருக்கும் தெரியுமே. ரோட்டில் போகிற, வருகிற போதெல்லாம் பார்க்கத்தானே செய்கிறார்கள். அதனால்தான் அவன் கூறியதை நம்பாதவர்களாய்ப் பார்த்தார்கள்.

ஆயினும், சோமப்பனின் வற்புறுத்தலுக்காகக் கிளம்பி வந்தார்கள்.

ஒரு கதாநாயகனின் கம்பீரத்தோடு அவன் முன்னே நடந்தான்.

மெயின் ரோட்டில் ஏறியதுமே அவனது குடிசையும், அந்தப் பப்பாளி மரமும் கண்களில் பட்டுவிடும். முன்பெல்லாம் பப்பாளி மரம் குறித்த எண்ணமெதுவும் இல்லாததால், வீட்டை மட்டும் பார்த்தபடி அங்கே ஓடிப் போவான். இப்போதோ, பப்பாளி மரத்தையே பார்வை தேடுகிறது.

ஐயோ!

ஐயையோ!

மரம் அங்கு இல்லையே!

பதறிப்போய் ஓடி வந்தவனோடு, மற்ற பையன்களும் ஓடோடி வந்தார்கள்.

வெட்டுப்பட்ட நிறை சூலியாய், கழிவு நீரோடை நெடுகச் சிதறிக் கிடந்தது பப்பாளி மரத்தின் பாகங்கள்.

தனது கனவு மரம் சேதாரப்பட்டுக் கிடப்பதை அவனால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. அடிவயிற்றில் அமிலங்கள் சுரந்து தீய்க்கலாயின.

“”ஐயோ, என்னோட பப்பாளி மரத்தை யாரோ வெட்டிப் போட்டுட்டாங்களே!” என்று அலறியவன், பேரிழப்பின் நிமித்தமாகக் கதறுவதைப் போலக் குமுறிக் குமுறி அழலானான்.

அவன் அழுவதைப் பொறுக்க இயலாத மற்ற பையன்கள் வருத்த முகங்களுடன் அவனுக்கு ஆறுதல் கூறலானார்கள்.

சிதறிக் கிடக்கும் காய்கள், பிஞ்சுகள், இலைகள் என்று ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டிச் சுட்டிக்காட்டி அழலானான்.

அவனது குடிசையை ஒட்டியிருந்த ஓடைச் சுவரின் உட்புறம் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது. ரோட்டில் போவோர், வருவோரின் கண்களில் படுகின்ற இடமாக அந்தச் சுவர் அமைந்திருந்ததால், விளம்பர வாசகங்களை எழுதியிருந்தனர்.

அந்த விளம்பரத்தை ஓடையின் நடுவே நின்றிருந்த பப்பாளி மரம் மறைக்கிறது என்பதால், விளம்பரம் எழுதியவர்கள் தயவு தாட்சண்யமின்றி அம்மரத்தை வெட்டி எறிந்திருந்தார்கள்.

அவன் அழுவதை மனக்கசிவுடன் பார்த்துக் கொண்டிருந்த வடிவேலன், அருகில் சென்று ஆதரவாகத் தோளைத் தொட்டபடி,

“”அழாதே சோமப்பா. உன்னோட இந்த ஒரு மரம் போனால் என்ன, போகட்டும்டா. உங்கப்பாட்டச் சொல்லி வேறே மரத்தை வளர்த்துறலாம்” என்றான் பெரிய மனிதத் தோரணையில்.

“”ஆமாம்டா சோமப்பா. அழாதே சோமப்பா” என்று மற்ற பையன்களும் ஆறுதல் சொன்னார்கள்.

சற்று முன்பாக அவனைப் புளுகுணி என்று கேலி பண்ணிய அதே பையன்கள்தான், இப்போது அவனை ஒரு மரத்தை இழந்துவிட்டுத் துடிக்கும், மர உரிமையாளனாக எண்ணிக் கொண்டு ஆறுதல் கூறுகிறார்கள்.

இதனால் நெகிழ்ந்து போன சோமப்பன், அவர்களில் பலரை முடிந்த மட்டும் தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

“”வீட்டுக் கொரு மரம் வளர்ப்போம்!

மழை வளம் செழிக்கச் செய்வோம்!

பழமரங்கள் வளர்த்துப் பலன்கள் பல பெறுவோம்!”

விளம்பர வாசகங்கள் மின்னுகின்றன.

மடியை அறுத்துப் பால் குடிக்க முனைவதுபோல், மரத்தை வெட்டி வீசிவிட்டு மரம் வளர்க்கச் சொல்கிறார்கள்!

இங்கே, நிறையக் காரியங்கள் இப்படித்தான் ஏறுக்குமாறாகவே நடக்கின்றன.

– ஆகஸ்ட் 2014

தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி-2014 சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250/- பெறும் கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *