சொல்லக்கூடாத வில்லங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 8, 2022
பார்வையிட்டோர்: 5,138 
 

உங்களுக்கு எப்பேண்டாலும் அடக்கேலாமல் ‘அது’ வந்திருக்கோ? வராமல் இருந்திராது. ஆனாலும் வெளியில சொல்லியிருக்க மாட்டியள் – கிரிசை கேட்டை. ஆனால் நான் சொல்லப்போறன். ஏனெண்டால் என்னால அடக் கேலாமல் கிடக்கு – ஆத்திரத்தை!

வயசான ஆக்களாயிருந்தால் சில நேரம் ‘அது’ வாறதும் தெரியாது. போற தும் தெரியாது எண்டுவினம். இன்னும் அந்த Stage க்கு நான் வரேல்லை. ஆனாலும் எங்கிடடொக்டர் முருகானந்தம் போலவை புத்தகங்களில எழுதுற வைத்தியக் குறிப்புகளை மேஞ்சு போட்டு, அவயள் சொல்லுமாப் போல லேசான ஏதாவது ‘எக்சசைஸ்’ ஐச் செய்து ‘பிரஷர்’ ஐக் ‘கொன்றோல்’ லில வச்சிருக்க வேணுமெண்டு மினக்கெடுற ஆக்களின்ர வயசு தான் எனக்கும்.

‘இருக்கிறம்’ எண்டொரு பொல்லாத புத்தகத்தை இந்த வயசில ‘ஓசி’யில வாசிச்சதுதான் பிழையாப் போட்டுது. வேற ஒண்டுமில்லை அதிலை ஒருத்தர் காலமை எழும்பின கையோடை முப்பது நாளுக்கு மூண்டு நாலு கிளாஸ் தண்ணி குடிச்சு வந்தால் மூட்டுப் பிடிப்புக்குத் தண்ணி காட்டலாமாம் எண்டு எழுதித் தாளிச்சிருந்தேர். நானும் மோட்டுத் தனமா அதை நம்பியெல்லோ மாட்டுப் பட்டிட்டன்.

எழுதினவரில பிழையில்லை. இப்பிடி ஒரு வில்லங்கமும் வரக்கூடும் எண்டு கண்டு பிடிக்க அவரென்ன திரிகாலமும் உணர்ந்த ஞானியே? விஷயம் என்னெண்டால், இப்பிடித்தான் அவர் சொன்ன மாதிரி நாலுக்கு அஞ்சு கிளாஸா தண்ணியை மண்டிப் போட்டு [கள் எண்டால் இன்னும் கூடக் கொள்ளும் – அந்த வயசில] வயிறு ‘களாங் புளாங் ‘ எண்டு சங்கீதம் பாட, வழமை போல ஒரு சின்ன நடை போடலாமெண்டு வெளிக்கிட்டன். [Body யை Maintain பண்ண ‘பொடி நடை சொல்லப்பட்ட ‘எக்சசைஸ்’ சாம் எண்டும் சொல்றவை.

கொழும்பில காலியள் நடமாடுற, காலி வீதியில காலாற நடக்க வெளிக் கிட்டுக் கொஞ்சத் தூரம்தான் பொயிருப்பன். கொஞ்ச நேரம்தான் போயிருக் கும். வில்லங்கம் வந்து வாசல் கதவைத் தட்டத் துவங்கீற்றுது. வேற என்ன? ‘அது’ வந்து முடுக்கத் துவங்கீற்றுது ஐஸே!

ஊர்ல எண்டால் அங்கால இங்கால பாத்துப்போட்டு ஆக்கள் வாற சிலமன் இல்லாட்டில் ஆற்றயும் வேலிக் கதியாலுக்கு பிரீயா யூரியாப் பசளை சப்ளை பண்ணலாம். அதுகளும் வஞ்சகமில்லாமல் செழிப்பா வளர்ந்து போற வாற நேரங்களில வாலில்லாட்டிக்கும் தலையை எண்டாலும் நன்றி யோட ஆட்டும்.

‘கொங்கிறீத்துக் காடாப் போன கொழும்புப் பட்டணத்தில அது நடக்குமோ? [அல்லாட்டில் ஓடுமோ?] இஞ்ச நாயளுக்கு மட்டும் தான் கண்ட இடத்திலயும் காலைத் தூக்கப் ‘Permission’ இருக்குது. இஞ்ச நாயளுக்கிருக்கிற சுதந்திரம் மனுஷருக்கு இல்லை எண்டது தெரிஞ்ச விஷயம்தானே!

கதையோட கதை Pampers எண்டொரு பணியாரத்தை வெள்ளைக்காரன் கண்டு பிடிச்சு வச்சிருக்கிறான். சொல்லப் போனால் அது எங்கிட கோவ ணத்தின்ர Modification தான். நாங்கள்தான் கோவணத்தோடேயே நிக்கிறம்/ /நிண்டிட்டம். எங்கிடதான் எண்டு காப்புரிமை [Patent ] கொண்டாடவும் இனி வழி யில்லை. [ உரிமையோ? என்ன உதை கேக்குதோ?]

சின்னப் பிள்ளையளுக்கெண்டு கண்டு பிடிச்சதை இப்ப பெரியாக்களுக்கும் அவன் Expand பண்ணீற்றான். கொஞ்சம் சிலவு தான். ஆனாலும் அதை யெண்டாலும் வாங்கிக் கட்டிக் கொண்டு வந்திருக்கலாம். வரேல்ல. Miss பண்ணீற்றன். அடுத்தமுறை Try பண்ணுவம்.

ஆத்திரத்தை அடக்கினாலும் அதை மட்டும் அடக்கேலா எண்டுவினம். அனுபவிச் சவைக்குத்தான் அது விளங்கும். அல்லது அந்தக் காலத்தில [1968 இல] வந்த The Party எண்ட English படத்தில Peter Sellers எண்ட நடிகர் ஓடித் திரிஞ்சு படுற அந்தரத்தைப் பார்த்தவைக்கு விளங்கும்; மறந்திராயினம்.

காசைக் கீசைக் குடுத்தெண்டாலும் கறுமத்தை இறக்கி விடுவம் எண்டு பாத்தா லும் வெள்ளவத்தையில அப்பிடிக் கொத்த இடமேதும் இருக்குமாப் போலவும் தெரியேல்லை. ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ எண்டு கலைஞரின்ர [எங்கிட உலகத்தமிழ்க் காவலர்தான்] வசனத்தைக் கேட்டு மனோகரன் கெம்பி எழும்பின மாதிரி எப்ப வெளியில பாயலாமெண்டு ‘அது’ அவதிப் படுத்துது.

முக்கித் தக்கிக் கொண்டு மூளையைப் போட்டுப் பினைஞ்சதில மணியான இடமொண்டு ஞாபகத்துக்கு வந்துது.’சோக்கெல்லோ’! ஓமோம்.சோக்கெல்லோ வோட சேர்ந்து நாடகம் போட்ட நேரம் போய் வந்த இடம் தமிழ்ச்சங்கம். சில நேரங்களில இப்பிடித்தான் மூளைக்கு ஒழுங்கா சிக்னல்’ கிடைச்சிடுது. பிற கென்ன. பொடி நடையில போய்ச் சேர்ந்தன்.

உள்ள போய் அதை Pass பண்ணினாப் பிறகு – ஆகா! சொர்க்கத்துக்குப் போய் வந்த மாதிரி ஒரு நிம்மதி. சொர்க்கத்துக்குப் பக்கத்திலதான் நரகமும் இருக் கெண்டது பிறகுதான் விளங்கிச்சுது.

வில்லங்கம் வழீல காத்துக் கொண்டிருந்துது – கடுவன் பூனை மாதிரி ஒரா ளின்ர உருவில. சங்கத்து Office ஐத் தாண்டித் தான் நான் உள்ள உள்ளிட்ட னான். நான் உள்ளை போகேக்கை ரெண்டு மூண்டு பேர் அங்க கதைச்சுக் கொண்டிருந்தவை. அவையளை நான் கணக்கெடுக்கேல்லை.[வழக்கமாகவே நான் கொஞ்சம் அப்பிடித்தான், மற்றவையளை Mind பண்ணாத ஒரு ‘கிறக்’ எண்டு சொல்லுறவை .]

காரியம் முடிஞ்சு திரும்பி வந்த என்னை ஒருத்தர் நிப்பாட்டினேர். அப்புக் காத்துக்குப் படிச்சுப் பாஸ் பண்ண ஏலாமல் போனவரோ தெரியேல்லை. அவர் என்னைக் கேட்ட கேள்வியள் அப்பிடி. அதுக்கு நான் சொல்ல ‘நினைச்ச’ பதில்கள் இப்பிடி.

“ன்ன மிஸ்டர், கேட்டுக் கேள்வியில்லாமல் உள்ளை போய் என்ன செய் திட்டு வாறீர்?” [என்ன இது கேள்வியே பிழையாக் கிடக்கே..என்ன செய்தனான் எண்டதை இங்கயே செய்து காட்டச் சொல்லப் போறீரே?’]

“யூரின் பண்ணீற்று வாறீர் என்ன?” [யூரின் பண்றது என்ன சாவான பாவமே? அதுக்கேனிப்ப நீர் ஏறுப்படுறீர்?]

“நாங்கள் எல்லாம் இஞ்ச இருக்கிறது தெரியேல்லையே? [அடடா, நீங்கள் அதுக்கே பாத்துக் கொண்டிருக்கிறியள்? தெரியாமல் போட்டுது. அடுத்தமுறை மறக்காமல் பிடிச்சுக்க கொண்டு வந்து தாறன்.]

அது இங்கத்தைய Staff க்கெண்டிருக்கிறது. [ரத்தம் ஒரே நிறம் எண்ட மாதிரி அதுவும் எல்லாருக்கும் ஒரே மாதிரித்தானே?]

“மற்றவையளுக்கு முன்னால ஒண்டிருக்குது தெரியாதே?” [சத்தியமாத் தெரியாது. முசுடுகளுக்கு மட்டும் எண்டு உள்ளுக்கிருக்கிறதில ஒரு Board எழுதி போட்டியள் எண்டால் நல்லம்’]

“திறந்த வீட்டில ஏதோ பூருமாப் போல உம்மிட பாட்டிலை போய்ற்று வாறீர். நீர் ஆரெண்டே தெரியாதாம்..” [‘ரஜனி ஸ்டைலில்’-மனிசன்..!.கண்ணாடியப் போட்டு வடிவாப் பாரும் தெரியும்.]

“நீர்.. ஏதும் குண்டைக் கிண்டை வைக்கிற ஆளாயிருந்தால்? எங்களுக்கு எப்பிடித் தெரியும்?” [ஓகோ உமக்கு அதுதான் பயமே? நான் குண்டு கிண்டு வைக்கிற ஆளாயிருந்திருந்தால் இப்பிடிக் குந்திக் கொண்டிருப்பீரே? குண்டி பிடரியில அடிபட நீர் ஓடி ஒளிஞ்சிருப்பீரே?]

இது நடந்தது மா.மு, வில. அதாவது மாவிலாறுக்கு முந்தி எண்டதை Note பண்ணிக் கொள்ளுங்கோ. இப்பிடியே கரிபுரியெண்டு மனிசன் ஒரு கண்ட சீருக்குப் பொரிஞ்சு தள்ளிக் கொண்டு நிண்டுது. பாவம். மனிசன் நல்லாப் பயந்து போச்சுது போலக் கிடக்கு. காலம் அப்பிடி. அவரை வெண்ட சுடு தண் ணியா நானும் ஒரு காலத்தில இருந்தனான் தான். ஆனாலும் இப்ப வயசு போட்டுது. என்ர காலம் இப்பிடி. அதால அணிலேற விட்ட நாய் மாதிரி முகத்தைப் பரிதாபமா வச்சுக் கொண்டு வாய் திறக்காமல் நிண்டுட்டன்.

வயசப் பாக்கிற மாதிரியோ நியாயத்தைக் கேக்கிற மாதிரியோ ஆன ஆளா அவரைத் தெரியேல்லை. அவற்ற தாய் தேப்பன் எண்டு ஆரும் உசுரோட இருந்தால் அதுகள் பாவம். நாய் குலைக்குதெண்டு போட்டு நாங்களும் திருப்பிக் குலைக்கேலுமே? அதால நான் குலைக்கேல்ல. எப்பெண்டாலும் முறையான ஆக்களிட்ட வாங்கிக் கட்டேக்க விளங்கும் அவருக்கு.

எனக்கிப்ப நாரிப் பிடிப்புக் கொஞ்சம் சுகம். அதால மூண்டு கிளாஸைப் போத்தில்காரனிட்டைப் போட்டிட்டன்!!!

– ‘இருக்கிறம்’ இதழில் 01.05.2010 இல் பிரசுரமானது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *