சூரியன், காற்று, மழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 31, 2019
பார்வையிட்டோர்: 6,196 
 

இந்த உலகத்தில் நடைபெறும் காலச்சூழ்நிலைக்கு நானேதான் சூத்திரதாரி ! பெருமையுடன் நினைத்துக்கொண்டான் சூரியன்.

இவன் இப்படி நினைத்துக்கொண்டிருக்க, நானில்லாவிட்டால் இந்த உயிரனங்கள் வாழ்வே முடியாது என்ற நினைப்பில் மழை.

இவர்கள் இருவரின் பெருமைகளை பார்த்து முகம் சுழித்து நான் மட்டும் இல்லையென்றால், இவர்கள் இருவர் ஏது? பெருமையுடன் தன்னை பார்த்துக்கொண்டது காற்று.

சூரியன் அன்று மழையை யதேச்சையாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை,

எங்கு வேகமாக சென்று கொண்டிருக்கிறாய்?

மழை அசுவாரசியமாய் சூரியனை பார்த்து, போகும்போது அபசகுனமாய் எங்கே போகிறாய் என்று கேட்கிறாய்?

காரியமாகத்தான் கேட்கிறேன் முகம் சுழிக்காமல் சொல்.

தமிழ்நாட்டில் என்னை வேண்டி நிறைய யாகம் எல்லாம் செய்கிறார்கள், என்னை எதிர்பார்த்து அங்குள்ள நிலங்கள் எல்லாம் காத்துக்கொண்டிருக்கிறது, அங்கு செல்லவேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை, இன்றுதான் அதற்கு நேரம் கிடைத்தது போய்க்கொண்டிருக்கிறேன்.

முதலில் அதற்கு என்னிடம் ஒரு வார்த்தை கேட்டாயா?

இது என்ன அக்கிரமம்? நான் நினைத்தால் எங்கு வேண்டு மானாலும் செல்லலாம், உன்னிடம் அதற்கு அனுமதி கேட்க அவசியமில்லை.

பொறு உணர்ச்சி வசப்படாதே, அங்கு ஆறு மாதங்களாக நான் இருந்து கொண்டிருக்கிறேன்,நீ திடீரென்று உள்ளே வருகிறேன் என்றால் நான் அங்கிருந்து விலக வேண்டி வரும், அதனால் மரியாதைக்காவது, நீ என்னிடம் அனுமதி கேட்பதுதான் முறை.

நீ அப்படி எத்தனை முறை என்னிடம் அனுமதி கேட்டு வந்திருக்கிறாய்? நான் ஒரு இடத்தில் நான்கு நாட்கள் இருக்கும் போது நீ உள்ளே வந்து என்னை அனுப்பி வைத்தாயே அது உனக்கு நினைவில இருக்கிறதா?

பொறு, எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு அழுவதே உன் வேலையாகி விட்டது.அன்று காற்று தான் உன்னை வெளியே தள்ளிக்கொண்டு போனது. நான் நீங்கள் இருவரும் சென்று விட்டீர்களே என்றுதான் உள்ளே வந்தேன். நீ காற்றிடம்தான் சண்டைக்கு சென்றிருக்க வேண்டும்.

அதைப்பற்றி இப்பொழுது எனக்கு கவலை இல்லை, நீ கேட்டதால் இந்த பதிலை சொன்னேன். இப்பொழுது நான் தமிழ்நாட்டுக்குள் செல்கிறேன்.

சரி நான் போய் விடுகிறேன், உன்னை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருப்பதாக சொன்னாயே,

உன்னை வரவேற்பார்களா இப்பொழுது?.

இதிலென்ன சந்தேகம்? என்னை வருந்தி வருந்தி கூப்பிடும்போது செல்வதுதான் மரியாதை.

அதே ஊரில் ஒரு பழமொழி உண்டு உனக்கு தெரியுமா?

என்ன பழமொழி?

“விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான்”

அது மனிதர்களுக்காக பேசிக்கொள்வது.

நீ அந்த மக்களை அப்படி எடை போடாதே, அவர்கள் இந்த உலகத்தையே எடை போடக்கூடியவர்கள், ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளில் உலகத்தையே எடை போட்டு எழுதி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் இரண்டே அடிதான், ஏழு வார்த்தைக்குள்தான் வரும்.

உடனே மழை சிரித்தது, அவர்கள் எழுதி வைத்தபடி நடப்பார்களா என்று கேட்டு பார். சரி எனக்கு நேரமாகிறது நான் வருகிறேன்.

நில் நான் அந்த இடத்தை விட்டு போவதென்றால், “காற்றை” கூப்பிடு, அவன் மட்டுமே உன்னை அங்கு கூட்டி செல்வான்.

அவன் எதற்கு எனக்கு வழித்துணைக்கு?

முட்டாள்தனமாக பேசாதே, உன்னை அங்கு விரைவில் கொண்டு செல்ல அங்கு உதவுவான்.

சரி கூப்பிட்டு தொலைக்கிறேன். அவனால்தான் நான் இருப்பதாக நினைத்துக்கொள்வான்.

அந்த நினைப்பை மட்டும் மாற்றிக்கச் சொல்.

தமிழ் நாட்டின் ஏதோ ஒரு இடத்தில்..

அப்பபா, இந்த வெயில் இப்படி கொளுத்துது. என்ன கொடுமை, எப்பத்தான் மழை வருமோ?

ஆஹா இதென்ன திடீருன்னு காத்து இப்படி வீசுது ! மழை வருமா? ஆமா வானத்துல மேகம் கருக்கற மாதிரி இருக்குது, அப்ப கண்டிப்பா மழை வரும்.

மழை “கொட்டு கொட்டு” என்று கொட்டுகிறது.

வானிலை அறிக்கை !

இன்னும் இரண்டு மூன்று நாட்கள் மழை தொடரும்.

இன்னும் மூணு நாளைக்கி இருக்காம், தண்ணி பஞ்சம் தீர்ந்தா போதும், விவசாயத்துக்கும் இந்த மழை வேணும்.

மழை சூரியனை தேடுகிறது, எங்கிருக்கிறாய்? நான் உள்ளே வந்ததும் ஓடி விட்டாயா?

உண்மைதான், நீயும், காற்றும் விருந்தாளியாய் வரும்போது எனக்கென்ன வேலை இங்கே?

பார்த்தாயா மக்கள் ஆர்ப்பரித்து என்னை வரவேற்பதை.

உண்மைதான், இருந்தாலும் இந்த மக்களின் பழமொழியை ஞாபகப்படுத்திக்கொள்.

என்ன சொல்கிறான் சூரியன்? கேட்டுக்கொண்டே காற்று அங்கு வந்தது.

அவனுக்கென்ன நாம் இருவரும் உள்ளே வந்ததும் அவன் ஒடி விட்டான்.

சரி இன்னும் எத்தனை நாள் இங்கிருப்பாய்? காற்று கேட்டது,

ஏன் வந்து ஒரு நாளிலே இந்த கேள்வியை கேட்கிறாய்?

இல்லை நான் அடுத்த இடம் போக வேண்டும்.

தாராளமாக போ, உன்னை யார் எதிர் பார்த்தார்கள்.

இதுதான் உன் புத்தி, நான் இல்லாமல் எப்படி இருக்கிறாய் என்று பார்க்கிறேன். காற்று கோபித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தது.

மழை சிரித்தது.

தமிழ் நாட்டில் எங்கோ ஒரு இடத்தில்.

காத்து கூட இல்லை, மழை நல்லா பெய்யுது, காத்து இல்லாம பேஞ்சா நல்லா பெய்யும்.

மக்களின் பேச்சை கேட்டு மழை வாய் விட்டு சிரித்தது.மக்கள் என்னை விரும்பும் வரை எனக்கென்ன கவலை.

வானிலை அறிக்கை… “இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்”.

இன்னும் மூணு நாளா? மழை விடாம கொட்டிகிட்டு இருக்கு. மக்கள் மெளனமாய் முணு முணுத்துக்கொண்டனர்.அதனால் மழைக்கு கேட்கவில்லை.

அடுத்த இரண்டு நாட்களில். அங்கங்கு மக்கள் பேசிக்கொண்டது அதன் காதுகளில் நன்றாக விழுந்தது.

சனியன் பிடிச்ச மழை ! எப்பத்தான் விடுமோ?

இதென்ன இந்த மக்கள், இப்படி பேசுகிறார்களே, வேதனையில் சுருங்கியது மழை, நான் உடனே போகிறேன் கோபத்துடன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தது.

மக்கள் அங்கங்கு பேசிக்கொண்டனர்.. அப்பா இன்னைக்குத்தான் வானம் வெறிச்சிருக்கு, சூரியன் வந்தா நல்லா இருக்கும்.

வழியில் அழுது கொண்டே செல்லும் மழையை பார்த்த சூரியன் எதற்கு அழுகிறாய்.

அந்த மக்கள் இப்பொழுது உன்னை கூப்பிடுகிறார்கள், உனக்கு சந்தோசம்தானே, அழுகையுடனே சொன்னது.சூரியன் சிரித்துக்கொண்டே என்னை மட்டும் நிரந்தரமாக கூப்பிடுகிறார்கள் என்று நினைக்காதே. நாளையே மறுபடியும் உன்னை கூப்பிடுவார்கள்.

ஆமாம் இப்படியே எத்தனை காலமாக இதை செய்து கொண்டிருக்கிறோம்

“இந்த உலகம் தோன்றிய காலம் முதல் நம் வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறோம்”

எப்பொழுதும் மனிதர்கள் இப்படித்தான் நினைப்பார்களா?

“மனிதன் தோன்றிய காலம்” முதல் தனக்கு தேவை எதுவோ அதை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்து பழகி இருக்கிறான்.

இயற்கையாகவே இருந்து வரும் நாம் நம்முடைய கடமையாக இதை செய்து கொண்டிருப்போம். நீர், நெருப்பு,ஆகாயம், இவைகளும் கூட இப்படித்தான் இருக்கின்றன.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *