”சுலைமானி” ஆபரேட்டர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 8,898 
 

உங்களுக்கென்னங்க?

வட்டி கட்டுறவனுக்குத் தான் தெரியும். வலியும், வேதனையும்.

பதினைந்து நாளுன்னு சொன்னீங்க. ஆனால் மூனு மாசமாச்சு. இப்ப இன்னும் பத்து நாளாகும்னு சொன்னா என்ன அர்த்தம்? தெண்டமா வட்டிக்காசு போகுது. அதைக்கூட கட்ட வழி இல்லாம சொந்தக்காரனுககிட்ட கை மாத்தா வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கேன். தெரியுமா?

முடியும்னா செய்யுங்க. சொல்லுங்க. இல்லைன்னா பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க. நான் வேற எடம் பார்த்துக்கிறேன். எனக்குப் பின்னாடி பணம் கட்டினவனெல்லாம் போய் சம்பளம் வாங்கி அனுப்பிட்டான். ஊருல பார்க்குற பய எல்லாம் எப்பப் போற? எப்பப் போற? ன்னு கேட்டே பாதி உசுர எடுக்குறானுக என மனனம் செய்து வந்ததைப் பள்ளியில் ஒப்பிக்கும் குழந்தையைப் போல பட படவென பொரிந்து தள்ளினான் முருகேசன். அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தவரோ எதுவும் பேசவில்லை. ஆனால், முருகேசனோடு வந்திருந்த அவன் மச்சான் பாண்டி, ”மாப்ள…….கொஞ்சம் பொறுமையா இரு. படபடன்னு பேசி என்ன ஆவப் போகுது? அதுவும் இவங்க வேலைக்கு இருக்குறவங்க. இவங்க கிட்ட சத்தம் போடுறதால என்ன பிரையோசனம்? சாத்தையா அண்ணன் வரவும் பேசிக்கிடலாம். அதுவரைக்கும் பேசாம அமைதியா உட்காரு” எனச் சொல்லிக் கொண்டு அருகில் இருந்த சோபாவில் அவனை உட்கார வைத்தான்.

சாத்தையா அந்த வட்டாரத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜண்டாக இருப்பவர். ஆரம்பத்தில் சென்னையில் இருந்த சில பெரிய ஏஜண்டுகளுக்கு ஆள் அனுப்பி தலைக்குத் தன் பங்காக பத்தாயிரம், இருபதாயிரம் என வாங்கிக் கொண்டிருந்தார். அதன் பின் வெளிநாடுகளில் இருந்த சில கம்பெனிகளின் பழக்கம் கிடைத்ததும் தானே நேரடி ஏஜண்டாக மாறியதோடு இனி கிராமத்தில் இருக்கும் வீட்டில் உட்கார்ந்து கொண்டு தொழில் செய்வது சரியாக இருக்காது என நினைத்து பக்கத்தில் இருக்கும் நகர் பகுதியான இராமநாதபுரத்துக்கு குடிபெயர்ந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகிலேயே ”சாத்தையா டிராவல்ஸ்” என்ற பெயரில் பத்துக்குப் பத்து கடையில் தன்னுடைய நிறுவனத்தை ஆரம்பித்தார். ஆட்கள் அனுப்புவதோடு மட்டுமில்லாமல் அது சார்ந்த விசயம் தெரிந்தவர்களை வேலைக்கு அமர்த்தி கடவுச்சீட்டு எடுத்துத் தருவது, புதுப்பித்துத் தருவது, பயணச்சீட்டு எடுத்துத் தருவது ஆகிய வேலைகளையும் சேர்த்துச் செய்து கொடுத்து வந்தார்.

இராமநாதபுரத்தைச் சுற்றிலும் இருக்கக்கூடிய பெரும்பாலான கிராமங்களில் பலருக்கும் கடவுச்சீட்டுக் கடவுள் சாத்தையா தான்! எந்த ஒரு வியாபாரத்தையும் தூக்கி நிறுத்துவதற்குப் பெரிய அளவில் உதவக்கூடிய வாய் விளம்பரம் தான் அவரின் வளர்ச்சிக்குப் பெரிய பலமாக இருந்தது. அவசரத் தேவைக்குப் பணம் கொடுத்து உதவுவது, கிராமத்தில் இருக்கும் கோயில்களுக்கு நிதி தருவது என சின்னச் சின்ன உதவிகள் மூலம் சுற்றுப்பகுதி கிராமங்களில் தனக்கென நிறைய நல்ல பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தார்.

நகரத்தானைப் போல காரியம் முடிந்ததும் மறந்து விடும் மனசு கிராமத்தானுக்கு எப்பொழுதும் இருப்பதில்லை. தக்க நேரத்தில் தனக்கு ஒருவன் செய்த உதவியை தன் தலைமுறைக்கும் அவன் கடத்திக் கொண்டே இருப்பான். அப்படிப்பட்ட மனநிலை கொண்ட மக்கள் வாழும் கிராமங்களில் படித்தும், படிக்காமலும் அடிமாட்டு கூலிக்கு வேலை செய்து கொண்டிருந்த பலரும் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் சென்றதற்கும், பல குடும்பங்கள் பொருளாதாரத்தில் முன்னேறியதற்கும் சாத்தையா தான் காரணம்.

ஒரே வருடத்தில் பத்துக்குப் பத்து கடையை விட்டு விட்டு நகரத்தின் மையப் பகுதியில் ஒரு பெரிய தளத்திற்கு தன் டிராவல்ஸை மாற்றினார். உள்ளூர் பிரபலங்கள் சிலரின் பழக்கத்தால் சாத்தையா பெரிய புள்ளியாக மாறியிருந்தாலும் அன்று போலவே எளிமையாய் இருந்தது தான் ஆச்சர்யம். வசதி வாய்ப்புகள் வந்த பின் ஒரு மனிதன் மாறமலிருப்பது அத்தனை சாதாரண விசயமில்லை!

சொன்ன தேதி மாறினாலும் சொன்ன சொல் மாறாதவர் என்பதால் அவரிடம் பல இலட்சங்களை விசாவுக்காக கட்டிவிட்டு பயமின்றி பலரும் காத்திருந்தனர். ஒரு தனிநபரின் நம்பிக்கை மேல் எழும்பி நின்ற அந்த டிராவல்சின் வரவேற்பறை முகப்பில் மாட்டப்படிருந்த பிள்ளையார்பட்டி விநாயகர் படத்தைப் பார்த்த படியே அருகில் இருந்த வேலைப்பாடுகளுடன் கூடிய மண்பானையில் இருந்த தண்ணீரைப் பிடித்து குடித்த முருகேசன் மீண்டும் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டான்.

இப்பவே மணி இரண்டாச்சு. மூனு மணிக்கு தாசில்தார் ஆபிஸ் வேற போகனும். அவர் எப்ப வந்து நாம எப்ப போறது? எனக் கேட்ட முருகேசனை அமைதிப்படுத்திய பாண்டி, ”இப்பத்தான் உள்ளே கேட்டேன்”. ”வந்துக்கிட்டே இருக்காராம்“ என்றான்.

சிறிதுநேரத்தில் அகன்ற வாசலின் முகப்பில் வெள்ளை நிற ஹோண்டா கார் வந்து நின்றது. வெள்ளை வேஷ்டி சட்டையில் கக்கத்தில் தோலினாலான கருப்பு கைப்பை ஒன்றை இடுக்கியபடி இறங்கிய சாத்தையா வாசலில் இருந்த விநாயகருக்கு சூடம் கொழுத்தி உக்கி போட்டு வணங்கி விட்டு உள்ளே வந்தார்.

இருவரையும் பார்த்ததும், ”வாங்க…….வாங்க….எப்ப வந்தீங்க? காபித் தண்ணி கொடுத்தாங்களா? ஊருல எல்லாரும் எப்படி இருக்காங்க?” எனக் கேட்டவர் அவர்கள் பதில் சொல்வதற்குள், ”வாங்க உட்கார்ந்து பேசுவோம்” எனச் சொல்லிய படி அருகில் இருந்த சிறிய அறையைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். முழுவதும் குளிரூட்டப்பட்ட அந்த அறையில் இருந்து வெளியேறிய வாசனைத் திரவியத்தின் வாடை அவரைப் பின் தொடர்ந்து சென்ற இருவர் முகத்திலும் வருடியது.

தனக்கான இருக்கையில் சென்று அமர்ந்தவர் தனக்கு எதிரில் இருந்த இருக்கையைக் காட்டி இருவரையும் அமரச் சொன்னார்.

”முருகேசா…..உன் விசயமாத்தான் நேத்து இராத்திரி சிங்கப்பூர் கம்பெனியில பேசினேன். எல்லாம் ரெடியாயிடுச்சாம். நமக்குப் புது வருசம் மாதிரி அங்கே இருக்கிற சீனக்காரவங்களுக்கு இப்ப புது வருசமாம். அதுக்கு நான்கைந்து நாள் தொடர்ந்து விடுமுறைங்கிறதால லேட்டாயிடுச்சாம். அடுத்த வாரம் கட்டாயம் பேப்பர் அனுப்பிடுறோம்னு சொல்லிட்டாங்க” என்றார்.

இந்த பதிலால் திருப்தியடையாத முருகேசன், ”அடுத்த வாரம் வரலைன்னா பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க” என்றான் கோபமாக.

”ஏன் இந்த அவசரம்? ஆக்கப் பொறுத்தவங்க ஆறப்பொறுக்கலைன்னா எப்படி? அடுத்தவாரம் கட்டாயம் வந்துடும். விசா பேப்பர் வரவும் நானே கூப்பிட்டு சொல்லுறேன். சஞ்சலமில்லாமல் போயிட்டு வாங்க. நானாச்சு”. எனச் சொல்லி அனுப்பிவைத்தார்.

வெளியில் வந்ததும், ”எனக்கென்னமோ இவரு அனுப்புவாரான்னு சந்தேகமா இருக்கு மச்சான்? ஏதோ கதையளக்குறாருன்னு நினைக்கிறேன்” என்று முருகேசன் சொன்னதைக் கேட்ட பாண்டி, ”அப்படியெல்லாம் இருக்காது. முடியலைன்னா இவ்வளவு நாள் இழுக்க மாட்டாரு மாப்ள. நாம கட்டி இருக்கிற இரண்டு இலட்சம் இன்னைக்கு நிலைமைக்கு அவருக்குச் சாதாரணம். பொறுத்தது பொறுத்துட்டோம். இன்னும் பத்து நாள் பொறுத்துப் பார்ப்போமே” என்றான்.

இல்ல மச்சான். புது வருசத்துக்கெல்லாமா நான்கைந்து நாள் லீவு விடுவானுக? எனக்கென்னமோ பொய் சொல்றாரோன்னு தோனுது. எதுக்கும் செவண்ட்டி எம்.எம்.க்கு ஒரு போன் போட்டு கேட்டா தேவல.

டே மாப்ள. அவன் சும்மாவே படம். அவங்கிட்டப் போய் கேட்கனுமா? என்றான் பாண்டி.

செவண்டி எம்.எம். என்பது முருகேகசனுடைய பால்ய சிநேகிதன் சங்கரின் பட்டப் பெயர். எதையுமே கொஞ்சம் பெரிதாக, பூடகமாகச் சொல்வது அவனது வழக்கம். சின்ன விசயத்தைக் கூட ஒரு திரைப்படக் கதை அளவுக்குச் சொல்வதால் நண்பர்கள் அந்த பட்டப் பெயரில் அவனை அழைத்து வந்தார்கள். முருகேசன் ஊரில் இருந்த போது அவன் வெளிநாட்டிலும், இவன் வெளிநாட்டில் இருந்த போது அவன் ஊரிலும் இருந்ததால் இருவரும் சந்தித்துப் பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது. ஒப்பந்தகாலம் முடிந்து சவுதியில் இருந்து வந்தவன் பின்னர் சிங்கப்பூருக்குச் சென்று விட்டான். எப்போதாவது அலைபேசியில் முருகேசனை அழைத்துப் பேசுவான். அதுவும் ஓரிரண்டு வார்த்தையோடு முடித்து விடுவான். பணவிசயத்தில் பயங்கர கெட்டி.

இல்ல மச்சான். நாழு வருசமா அங்கே இருக்கான். அவங்கிட்ட கேட்டாத் தெரிஞ்சிடும். நமக்கும் திருப்தியா போயிடும் என்ற படி தன்னுடைய அலைபேசியிலிருந்து மிஸ்டு கால் கொடுத்தான். கால்மணி நேரமாகியும் பதில் இல்லாததால் தொடர்ந்து இரண்டொரு மிஸ்டு கால்களை கொடுத்த படியே இருந்தான். அதன்பின்னரே சங்கர் அழைத்தான்.

முருகேசன் தகவல் சொன்னதும், ”ஆமாம். இங்கே அது பெரிய விசேச நாள். சாத்தையா அண்ணன் சொன்னது நிசம் தான். உனக்கு விசா வரவும் எனக்குப் போன் செய்” என வேகமாகச் சொல்லிவிட்டு வேறு தகவல் எதுவும் கேட்காமலே அலைபேசியை அணைத்து விட்டான்.

ஏமாற்றமடைந்த முருகேசன், ”என்ன மச்சான் நாழு வார்த்தை பேசலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள வச்சுட்டான்” என்றான்.

”டே……..அவன் அப்பன் எச்சிக் கையில காக்கா ஓட்டமாட்டான். அப்படியே ஓட்டினாலும் கையை ஒன்றிற்கு இரண்டு தடவை நல்லா சூப்பிட்டு தான் விரட்டுவான். அவன் மவன் எப்படி இருப்பான். அதை விட்டுத் தள்ளு. இப்ப உனக்கு திருப்தியாயிடுச்சுல” எனச் சொல்லிவிட்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்த பாண்டி பின்னிருக்கையில் முருகேசனை ஏற்றிக் கொண்டான்.

விடியும் பொழுதெல்லாம் விசேசச் செய்தி வந்துவிடும் என முருகேசனைப் போலவே அவன் வீட்டில் உள்ளவர்களும் காத்திருந்து காத்திருந்து ஏமாந்தாலும் இன்னைக்காவது நல்ல செய்தி வந்துவிடும் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். அது தானே மனித சுபாவம்! ச்சீ, ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்பதைப் போல அது பற்றிய நினைப்பே இல்லாமல் இருந்த ஒரு நாளில் சாத்தையாவிடமிருந்து முருகேசனின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது.

”முருகேசா…….பேப்பர் எல்லாம் வந்துடுச்சு. வெரசா கிளம்பனுங்கிறானுக. இரண்டு நாளைக்குள்ள உள்ளூர் சோலியெல்லாம் முடிச்சிட்டு கிளம்புறதுக்குப் பாரு. வெள்ளிக்கிழமை அன்னைக்கு டிக்கெட் போட்டுறேன்” என்றார்.

எப்ப கூண்டு திறக்கும். பறந்து போயிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த முருகேசன், “வெள்ளிக்கிழமை எத்தனை மணிக்கு போடப் போறீங்க?” என்றான்.

”இராத்திரி பத்து மணிக்கு ஒரு பிளைட் இருக்கு. அதுல போட்டுடலாம். நீ ஒரு எட்டு மணிக்கெல்லாம் விமான நிலையத்திற்கு வந்துடு. நானும் அங்கே வந்துறேன். பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் நான் கொண்டு வந்துடுவேன். பத்து கிலோவுக்கு மேல சுமை இல்லாம பாத்துக்க. கூடுனா காசு கட்டனும்” எனச் சொன்னார்.

சங்கரை அலைபேசியில் அழைத்துத் தகவல் சொன்ன கையோடு அருகில் இருந்த சொந்த பந்தங்களுக்கு மட்டும் நேரில் போய் சொன்னான். வெள்ளிக்கிழமை மதியம் கிளம்பி திருச்சி விமானநிலையத்திற்கு வந்து சேர்ந்தான். இதற்கு முன் துபாயில் ஏழாண்டுகள் இருந்திருந்ததால் பதட்டமில்லாமல் இருந்தான். விமான நிலையத்திற்கு சாத்தையா வரவில்லை. திருச்சி டிராவல்சிலிருந்து ஒருத்தர் வந்து பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் கொடுத்தார். வழக்கமான சுங்கச் சோதனைகளைக் கடந்து விமானத்தின் நுழைவாயிலில் இருக்கும் காத்திருப்புப் பகுதியில் வந்து அமர்ந்தான். நுழைவாயில் திறக்க இன்னும் சில மணிநேரம் இருந்ததால் கிளம்பும் அவசரத்தில் சொல்லாமல் வந்த தன் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் சொல்லியவன் சங்கரை அழைத்து மறுநாள் காலையில் தான் அங்கு வந்து விடும் தகவலை நினைவூட்டினான். அவனும் விமான நிலையத்திற்கு வந்து விடுவதாய் சொன்னான்.

இவன் வேலைக்காக துபாய்க்கு முதன் முதலில் சென்ற சமயத்தில் சங்கர் சவுதியில் வேலை செய்து கொண்டிருந்தான். இவனின் நண்பர்களில் பள்ளிப்படிப்பைத் தாண்டியவனும் முதலில் வெளிநாட்டு வேலைக்குப் போனவனும் அவன் தான். அவனின் சித்தப்பா அங்கு இருந்ததால் ஏஜண்ட் இல்லாமல் அவனால் போக முடிந்தது. சவுதிக்குப் போனவன் தன்னை மறந்து போய் விட்டானோ? என நினைத்திருந்த ஒருநாளில் உனக்கு வெளிநாட்டுல இருந்து போன் வந்துருக்கு. சங்கர் பேசுறான்னு எதிர்வீட்டு சுசிலா அக்கா சொன்னதும் சந்தோசத்தில் துள்ளி ஓடினான். அலைபேசி அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத அந்தச் சமயத்தில் சுசிலா அக்கா வீட்டில் மட்டும் தான் போன் இருந்தது. துபாய்க்குப் போக அப்போது தான் இவனும் பணம் கட்டி இருந்தான். துபாயும், சவுதியும் ஒரே மாதிரி நாடு தான் என ஏஜண்ட் சொல்லி இருந்ததால் சங்கரிடம் அது பற்றிக் கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்த சமயத்தில் தான் அவனிடமிருந்து போன் வந்திருந்தது.

ஓடி வந்ததால் மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கியவாறே, “டே சங்கரு……எப்படி இருக்க? எங்கே மறந்துட்டியோன்னு நினைச்சேன்? என்ற வழக்க விசாரிப்புகளோடு தான் துபாய் போக பணம் கட்டி இருக்கும் விசயத்தையும் அவனிடம் சொன்னான். இரண்டு நாடும் ஒரே மாதிரின்னு ஏஜண்ட் சொல்லுறான். வெயிலு ரொம்ப இருக்குமாமே என்றவன், ”நீ அங்கே என்ன வேலை செய்யிற?” என்று கேட்டான்

”சுலைமானி ஆபரேட்டர்” வேலை பார்க்கிறேன் என்று அவன் சொன்னதும், ”ஏலே……..பரவாயில்ல. ஒரு நல்ல வேலை தான் கிடைச்சிருக்கு போல. பார்த்து சூதனமா இரு. கை, கால் பத்தரம்” எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஒன்றிரண்டு முறை ஹலோ…….ஹலோ என அழைத்து விட்டு கட் ஆயிடுச்சு என தனக்குத் தானே சொல்லிய படி ரிசீவரை வைத்தவனிடம், என்னவாம்? எப்படி இருக்கானாம்? என்றாள் சுசிலா அக்கா.

நல்லா இருக்கானாம் அக்கா. ”ஆபரேட்டர் வேலை செய்றானாம்” என்றான்.

அப்படின்னா? என்றாள் வெள்ளந்தியாய் சுசிலா அக்கா.

”நம்ம ஊருக்கு இடத்தைச் சுத்தம் பண்ண வரும் ஜேசிபி வண்டியை ஓட்டுறாங்கள்ள அது மாதிரி வண்டி ஓட்டுற வேலை” என்றதும், ”மகராசனா இருக்கட்டும்” என்றாள்.

தனக்கும் துபாயில் அப்படி ஒரு வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக் கொண்டான். அடுத்த சில வாரங்களில் அவன் துபாய் செல்வதற்கான விசா வந்தது. கிளினிங் கம்பெனியில் வேலை என்று ஏஜண்ட் சொன்னான்.

முதல் வெளிநாட்டுப் பயணம். மொழி, பழக்க வழக்கம் எல்லாமே புதிதாய் இருக்கும் என்பதால் அங்கு தரும் வேலையைத் தன்னால் செய்ய முடியுமா? என்ற குழப்பத்தோடு ஒருவழியாக துபாயில் வந்து இறங்கினான். வானுயர் கட்டிடங்கள், வித்தியாசமான வடிவமைப்பில் இருந்த பொதுப் பேருந்துகள் என அத்தனையும் அவனுக்கு அந்நியமாகவே இருந்தது. அவர்கள் பேசும் மொழியோ இன்னும் அந்நியமாகப் பட்டது. வாசலில் இவன் பெயரோடு இன்னும் சிலரின் பெயரையும் தாங்கிய பதாகையைக் கையில் ஏந்திய படி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அதை இவன் பார்த்த விதத்தை வைத்தே, ”ஏய்…….நீ ஏஜண்ட் சுந்தரேசன் ஆளா?” என அந்த நபர் தமிழில் கேட்க ”ஆமாம்” என்றான்.

”இப்படி வா” என பக்கத்தில் அழைத்து நிறுத்திக் கொண்டார். தமிழில் அவர் பேசியதைக் கேட்டதும் அவனின் மன படபடப்பு கொஞ்சம் குறைந்தது.

மருத்துவ பரிசோதணைக்குச் சென்று வந்த பின் இரண்டு நாட்கள் மட்டுமே அறையில் இருந்தான். மூன்றாவது நாள் முன்பு வேலைக்குப் போய் கொண்டிருக்கும் நால்வரோடு இவனையும் சேர்த்து ஐந்து பேராக ஒரு பள்ளிக் கூடத்தில் வேலைக்கு அழைத்துச் சென்றார்கள்.

ஆறாம் வகுப்பு வரைக்குமான அந்த அரபி மொழிப் பள்ளிக்கூடம் அரண்மனை மாதிரி இருந்தது. ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் சென்று வரவே ஐந்து நிமிடமானது. ”இங்குள்ள பசங்க சரியான சேட்டை செய்வானுக. நம்மூரு மாதிரி இல்ல. கோபம் வந்தாலும் அடிச்சிடக் கூடாது. எதுனா பிரச்சனையினா எங்களிடம் வந்து சொல்லு” எனச் சொல்லிவிட்டு அவரவருக்குரிய வேலைகளைப் பார்ப்பதற்காக பள்ளிக்கூடத்தின் நாலாபுறமும் மற்ற நால்வரும் பிரிந்து போய்விட்டார்கள்.

வேலைகளை முடித்து விட்டு மதிய உணவருந்த ஓய்வறைக்கு இவன் வந்த சமயத்தில் எதிர்த்தவாறு வந்த அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமையாசிரியர் இவனிடம் ஏதோ ஒன்றைச் சொல்ல அது என்ன மொழி என விளங்காத போதும் ”சுலைமானி” என்பது மட்டும் தெளிவாகக் கேட்டது. புரிந்தது. ஊரில் இவன் இருந்த போது சவுதியில் இருந்து பேசிய சங்கர் ”சுலைமானி ஆபரேட்டர்” எனச் சொல்லி இருந்ததால் அந்த வார்த்தை மட்டும் பட்டென விளங்கியது. ஆனால் சுலைமானினா என்னவென்று தெரியாததால் பேக்க, பேக்க என விழித்த படி ”ஒன்செகண்ட்” என ஆங்கிலத்தில் சொல்லி விட்டு ஓய்வறையை நோக்கி ஓடினான். இவனுக்கு முன் அங்கு வந்து உணவருந்திக் கொண்டிருந்த மேற்பார்வையாளரிடம் ஹெட்மாஸ்டர் எதையோ ஓட்டச் சொல்றார்? எனக்கு விளங்கவில்லை என பதற்றத்தோடு சொல்லி முடிக்கவும் அவன் பின்னாலயே அவர் வருவதற்கும் சரியாக இருந்தது.

தன்னிடம் சொன்னதைப் போலவே மேற்பார்வையாளரிடமும் அவர் சொல்ல நக்கலாக இவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தலைமையாசிரியரின் பின்னால் கிளம்பிச் சென்றார். சிறிதுநேரம் கழித்து திரும்பி வந்த மேற்பார்வையாளர், “சீக்கிரமா சுலைமானி ஓட்டக் கத்துக்க” எனச் சொல்லி விட்டு நமட்டுச் சிரிப்பொன்றை சிரித்தார். சுலைமானின்னா என்னன்னு தெரியாத போது எப்படி கத்துக்கிறது? என யோசித்த படியே தன்னோடு வேலைக்கு வந்த இன்னொரு நண்பரிடம் சென்று ”சுலைமானி ஓட்டிப் பழகணும்? அது எங்கே இருக்கு? உங்களுக்கு ஓட்டத் தெரியுமா? நானும் கத்துக்க முடியுமா? என்று கேட்டது தான் தாமதம் அவரும் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு சுலைமானி ஓட்டனுமா? சுலைமானின்னா என்னன்னு தெரியுமா? என்று கேட்டார்.

தெரியாது. ஆனால் என் ஃபிரண்டு ஒருத்தன் சவுதியில சுலைமானி ஆபரேட்டரா இருக்கேன்னு சொன்னான் என்றதும், தன் வாய் காதுக்கு விரியச் சிரித்தவர், ”சரி……..நீ போய் இப்ப வேலையைப் பாரு. சாயங்காலம் வேலை முடிஞ்சதும் சொல்லித் தருகிறேன்” என்றார்.

அதன் பிறகும் அவனால் சும்மா இருக்க முடியவில்லை. தான் கற்றுக் கொள்ளப் போகும் சுலைமானி எப்படி இருக்கும்? எனப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் அவனை இருப்புக் கொள்ள விடாமல் செய்து கொண்டிருந்தது.

மேல் தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த இன்னொரு நண்பரிடம் போய் சுலைமானி எப்படி இருக்கும்? அது இங்கு எங்கே இருக்கு? எனக் கேட்டதும் அவர் இவனை மேலும், கீழும் ஒரு பார்வை பார்த்து விட்டு, ”நான்கு மணிக்கு கம்பெனி வண்டி வந்துடும். அதுக்குள்ள போய் உன் வேலையை முடி. சாயங்காலம் நீயே தெரிஞ்சுக்குவ” என்றார்.

அவனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை. என்ன பெரிதாகக் கேட்டு விட்டோம்? சுலைமானினா என்னன்னு சொல்றதுக்கும், அதைக் காட்டுவதற்கும் கூடவா இவர்களுக்கு நேரமில்லை? நான் கேட்டதும் ஏன் சிரித்தார்கள்? அப்படி ஒரு பார்வை பார்த்தார்கள்? தப்பா எதுவும் கேட்டுட்டேனா? என தனக்கு தானே கேள்விக் கணைகளைத் தொடுத்துக்கொண்டே தனக்குரிய வேலைகளை முடித்து விட்டு வண்டிக்குக் கிளம்பத் தயாரான சமயத்தில் மேற்பார்வையாளர் அவனை அழைத்தார். பள்ளிக்கூடத்திலேயே தேயிலைத் தூள், சர்க்கரை, ஏலக்காய் எல்லாம் வாங்கி வைத்திருப்பார்கள் என்பதால் பணி முடிந்து கிளம்பும் சமயத்தில் அங்கேயே டீ போட்டு குடித்து விட்டுச் செல்வது வழக்கம் என்பதால் இவனைத் தவிர மற்ற நால்வரும் முன்னரே வந்து அங்கு அமர்ந்திருந்தனர்.

இவனைப் பார்த்ததுமே நால்வரும் சிரித்து விட்டனர். வார்த்தையற்ற அந்தக் கேலியால் தலையை லேசாகக் குனிந்து கொண்டவனிடம் மேற்பார்வையாளர் அந்தச் சட்டியில் தண்ணீரைப் பிடித்து அடுப்பில் வைத்து சூடாக்கு என்றார். சிறிது நேரத்தில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஐந்து டீ குவளைகளை வரிசயாக வைத்து அதில் இரண்டு கரண்டி சர்க்கரை, ஒரு கரண்டி தேயிலைத் தூளைப் போடச் சொன்னவர் சுடு தண்ணீரை அதில் ஊற்றி கரண்டியால் நன்கு கலந்தபின் வடிகட்டியால் தேயிலைத் தூளை வடிகட்டச் சொன்னார். தேயிலைத் தூள் வடிகட்டப்பட்ட டீயை எல்லோருக்கும் கொடுக்கச் சொன்னவர் அவனையும் குடிக்கச் சொன்னார்.

ஒரு மிடறு இறக்கியதும், ”எப்படி இருக்கு?” என்றார்.

”நல்லாயிருக்கு”.

அப்ப சரி. நீ சுலைமானி ஆபரேட்டராயிட்டேன்னு சொல்ல அனைவரும் கொள் எனச் சிரித்து விட்டனர்.

என்ன அண்ணே சொல்றீங்க? என இவன் அப்பாவியாய் கேட்க, ”பால் ஊத்தாத டீயைத் தான் அரபி மொழியில சுலைமானின்னு சொல்லுவானுக. டீ போடுற வேலையை ரெம்ப நேக்கா உன் ஃபிரண்டு சொன்னதைக் கேட்டு கப்பல் ஓட்டுற வேலை மாதிரின்னு நம்பியிருக்கியலடா. நீயும் ஊருக்கு போன் பண்ணி ஆத்தா நான் சுலைமானி ஆபரேட்டர் ஆயிட்டேன்னு சொல்லிடு” என மேற்பார்வையாளர் சொல்ல மற்றவர்கள் மீண்டும் சிரித்தனர்.

அப்பொழுது மட்டும் சங்கர் இவன் கையில் சிக்கி இருந்தால் அவனை இரண்டாக்கி இருப்பான். அவ்வளவு கோபம் வந்தது. அந்த நாய் சொன்னதைக் கேட்டதுக்கு இவனுக இப்படி அசிங்கப்படுத்திட்டானுகளே என நினைத்த படி விடுதிக்கு வந்து சேர்ந்தான். மொத்த ஊழியர்களுக்கும் முருகேசன் என்ற பெயர் ஒரே நாளில் மறந்து போய் விட்டதைப் போல அன்றிரவில் இருந்தே அனைவரும் அவனை ”சுலைமானி ஆபரேட்டர்” என்றே அழைக்கத் தொடங்கினர். வதந்தியை விட வேகமாகப் பரவி இருந்தது இவனுடைய சுலைமானி சங்கதி! எறும்பு ஊறக் கல்லும் தேயும் என்ற கதையாய் ஆரம்பத்தில் அப்படி அழைக்கும் போது கோபம் வந்தாலும் பின்னர் அப்படி அழைக்கும் போது திரும்பிப் பார்க்கும் நிலைக்கு அவனே பழகி இருந்தான். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஏழு வருடத்தில் வெகு அபூர்வமாகவே முருகேசன் என்ற பெயரால் அவன் அழைக்கப்படிருந்தான். இன்றும் கூட அங்கிருக்கும் நண்பர்கள் போனில் பேசும் போது சுலைமானி ஆபரேட்டர் என்றே கூப்பிடுவது வழக்கமாகிப் போயிருந்தது.

விமானத்திற்குள் நுழையும் வாசல் திறக்கப்படுவதற்கான அழைப்பு ஓசை பழைய நினைவுகளைக் கழைக்க கடைசிக் கட்ட சோதனையை முடித்துக் கொண்டு விமானத்திற்குள் சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டான். சொன்ன நேரத்திற்குக் கிளம்பிய விமானம் அதிகாலை ஏழு மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தது. தடுக்கி விழுந்தால் ஒரு தமிழன் மேல் தான் விழ வேண்டும் என்பதைப் போல எங்கும் தமிழர்களாக இருந்தனர். அந்நிய மண்ணில் இருக்கிறோம் என்ற உணர்வே அவனுக்கு ஏற்படவில்லை.

விமான நிலையச் சுங்கச் சோதனைகளை முடித்து விட்டு முதல் வாயிலைக் கடந்து வந்தவனை அடையாளம் கண்டு கொண்டு சங்கர் கை காட்டி அழைத்தான். கொஞ்சம் சதைப் பிடிப்பாக இருந்தாலும் பத்தாண்டுக்கு முன் பார்த்தது போலவே இருந்தான். அதனால் அடையாளம் கண்டு கொள்வதில் சிரமமிருக்கவில்லை. வெளியில் வந்ததும் கட்டிப்பிடித்துக் கொண்டவன் ஊர் நிலவரங்களைக் கேட்டுக் கொண்டான். மதியம் தன் அறையில் தங்கி ஓய்வெடுத்து விட்டுப் பின்னர் கம்பெனிக்கு போன் செய்து இடத்தைக் கேட்டறிந்து நானே கொண்டு போய் விடுகிறேன் எனச் சொன்னான். ஒரு வாடகை டாக்சியை கை நீட்டி அழைத்த சங்கர் இவனோடு சேர்ந்து பின் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

சிங்கப்பூருக்கு வந்த பின் இங்கேயே படித்து சாதாரண தொழிலாளியாய் தான் வேலைக்கு வந்த நிறுவனத்தில் மாதச்சம்பளம் வாங்கும் சூப்பர்வைசராக இப்போது இருப்பதை முருகேசனிடம் பெருமையாகச் சொல்ல வேண்டும் என விரும்பிய சங்கர், ”நீ என்ன வேலை செய்யிற?” என அவன் கேட்க மாட்டானா என நினைத்துக் கொண்டும், ஒரு முறை இப்படிக் கேட்டு தன் பெயர் தனக்கே மறந்து போகும் அளவுக்குப் பட்டப் பெயர் வந்தது போல் இம்முறையும் அப்படி எதுவும் வந்திடக்கூடாது. இந்த நாட்டிலாவது நான் முருகேசனாகவே இருக்க வேண்டும் என்றால் மறந்தும் ”நீ என்ன வேலை செய்யிற?”ங்கிற கேள்வியை மட்டும் இவனிடம் கேட்டு விடக் கூடாது என்று முருகேசனும் எதிரெதிர் மன ஓட்டத்தோடு உதட்டளவில் மட்டும் பல விசயங்களைப் பேசிக் கொண்டிருக்க இருவரின் மன ஓட்டம் போலவே அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த டாக்சிக்கு எதிர்புறமாக சாலையின் இருபக்க கட்டிடங்களும் ஓட ஆரம்பித்திருந்தது.

– வெளியான இதழ் : மலைகள்.காம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *