கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2014
பார்வையிட்டோர்: 12,475 
 

நித்திய சோகத்தால் அழுது வடியும் நாற் சந்தி கூடுகிற தெருவின் நடு மையத்தில், தலை நிமிர்ந்து முகம் சிரித்தபடி கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறதே ஒரு மானுடச் சிலை!> முகம் வெளிறி உயிர் விட்டு மரணித்துப் போன இந்த மண்ணின் சாப விழுக்காடுகளையே அறியாதது போலப் பிரமாண்ட,மானதொரு தோற்ற வியாபகமாய் பார்வை மனிதர்களை ஆகர்ஷித்து நிற்கும் அதைக் கண் கொள்ளாக் காட்சியாகப் பார்த்தாலே போதும். விழுந்த மண்ணும் எழுந்து நின்று குதிரை ஓடத் தொடங்கி விடும் அப்படி வரக்கூடிய குதிரை கூட, வெறும் கற்பனை மனசளவில் மட்டும் தான்.

குதிரை ஓடாத , இயக்கமே நின்று போன இன்றைய நடைமுறை வாழ்க்கைச் சூழலில் மனமே மிஞ்சவில்லை அதில் கற்பனையில் கால் முளைத்துக் குதிரை ஓடத்தான் மனம் வருமா? அதனருகே சனசந்தடியற்ற வெறுமைச் சூழலில் புதர் மண்டி முகம் தெரியாத இருட்டில் உறைந்து போன முற்றவெளி மைதானம் வேறு.. முன்பென்றால் ஒரு யுகத்திற்கு முன்னால், அது என்னமாய்க் களைகட்டி நிற்கும். எந்நேரமும் ஓயாத சனவெள்ளம் தான். ஆதவன் சிறுவனாய் இருந்த காலங்களில் அது அவனுக்கொரு விளையாட்டு மேடை. பசும்புல் தரையில் கால் வைத்து நடக்கிறதே ஒரு தனிச் சுகம்

நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் போது உலகமே அடியோடு மறந்து போகும் சண்டை மூண்ட பிறகு எல்லாம் பாலைவனமாகி இப்போது அந்த அழகான முற்றவெளியும் காடு பத்திக் கண்ணை எரிக்கிறது. வெளியே முன்பு போலச் சுதந்திரமாக நடமாட முடியாமல் சண்டை பிரளயத்தில் உயிர் மனம் எல்லாமே வரட்சி காய்கிற நிலைமையில், ஒரு காட்சிப்பிழை போல் அந்தச் சிலையைக் காணும் போதெல்லாம் அந்தச் சிலையை உடைத்தெறிய வேண்டுமென்று அவன் தர்மாவேசம்
கொள்வான்..

இன்றைய சமூகம் நம்புவது போல அது உண்மையில் வணக்கத்துக்குரிய ஒரு மகானையே பிரதிபலித்துக் காட்டுகிற சத்திய ஒளி வீசுகின்ற காட்சி தரிசனமான ஒரு தெய்வீகச் சிலையல்ல. அந்த உண்மையை அவன் மட்டுமே அறிவான்.

அந்த முற்றவெளிக்குப் பக்கத்திலேதான் அவனது வீடும் இருந்தது அப்பாவோடு இன்னும் அவன் அங்கேதான் இருக்கிறான் கச்சேரியில் கிளார்க்காக அவன் இருக்கிறான் சண்டை காரணமாக அதுவும் ஒழுங்காக இயங்குவதில்லை தினசரி போய் கையெழுத்துப் போடுவதோடு அவன் வேலை முடிந்த மாதிரித்தான் அவனுக்கு உடன் பிறப்பென்று யாருமில்லை அப்பா சதாசிவம்.. பெயருக்கேற்ற மாதிரிச் சிவப்பழம் நேர்மையாக அரசியலில் அர்ப்பணிப்போடு உழைத்தவர்.. ஒரு காலத்தில் உண்மையாகவே மக்களை நேசிக்கத் தெரிந்த நல்ல தலைவர்களை இனம் கண்டு அவர் வாழ்ந்த போதிலும் அப்படி வாழத் தவறிய மக்கள் கூட்டம் மேய்ப்பனில்லாத மந்தைக்கூட்டம் போலானதில் அவருக்குப் பெரும் மன உளைச்சல் தான்… இதைப் பற்றி வெளியாட்களோடு மனம் திறந்து பேசுகிற சுமூகமான நிலை அப்போது இருக்கவில்லை

. ஒட்டுமொத்தச் சமூகமும் அச்சிலைக்குரிய தரங்கெட்ட மனிதனையே தங்களை வாழ்விக்க வந்த கடவுளென்று நம்பிப் பின்தொடரும் போது அவர் போன்ற நல்லதையே எண்ணும் ஒரு தனி மனிதனால் வழி தவறிப் போகின்ற இந்த மூடசமூகத்துக்காக அப்படி எதைப் பெரிதாகச் சாதிது விட முடியும்? இச் சமூகத்தின் நலன்களுக்காக உண்மையிலேயே மனப்பூர்வமாக உழைக்கத் தெரிந்த இலட்சிய வேட்கை கொண்ட நல்ல தலைவர்களை புறம் தள்ளி மறந்தது மட்டுமல்ல, அவர்கள் மீது கல்லெறிந்து முன்னுக்கு வந்தவர்களத் தலைவர்களெனக் கொண்டாடியதோடு நில்லாமல் அவர்கள் இறந்த பிறகு அவர்களுக்குச் சிலை வைத்துக் கொண்டாடிக் கொண்டிருப்பதைத் தான் அவனால் பொறுத்துப் போக முடியவில்லை. இத் தரங்கெட்ட மனிதர்களை எதிர்த்து எவர் போட்டியிட முன் வந்தாலும் அவர்களுக்குக் கிடைக்கிற பரிசு வெறும் கல்லெறிகள் மட்டும் தான் என்பதை அப்பாவே மனம் உடைந்து போய் பல தடவைகள் அவனிடம் சொல்லியிருக்கிறார்.. அரசியலென்பது நல்லவர்களையே குறி வைத்துத் தாக்கும் ஒரு சாக்கடை மாதிரி. இதை அனுபவத்தில் கண்டு சூடு பட்ட பின் அவர் அரசியல் பேசுவதையே அடியோடு மறந்து போனார்.. ஆனால் அவர் மூட்டிய இந்தத் தீ கொழுந்து விட்டெரிவது இப்போது ஆதவன் மனதில் தான்

எத்தனையோ பாவ விழுக்காடுகளோடு தன் சமூகத்தை வேரோடு பிடுங்கி அழித்து வரும் அதன் மீது விழுந்த இந்த சாபம் குறித்து அவன் அவரோடு மனம் திறந்து நிறையவே பேசித் தீர்த்த போதிலும் ரணகளமாய்க் கொதித்துப் பொங்குகிற மனோநிலை தான் எப்போதும் அவனைப் பாடாய்ப் படுத்திற்று. அந்தச் சிலையைக் காண்கிற போதெல்லாம் அது எல்லை தாண்டிப் போவதாகவே உணர்ச்சி கொண்டு அவன் மனம் குமுறி வெடிக்கும்.

ஒருநாள் இதே மனோ நிலையோடு அவன் வேலைக்குப் போகாமலே வீட்டிற்குத் திரும்பி வந்த சமயம் வாசலில் அவனை அவசரமாக வழிமறித்து அப்பா கேட்டார்

“என்ன? இண்டைக்கும் பிரச்சனையே? வெளியிலை சுடுறான்களோ? ஏன் வேலைக்குப் போகாமல் திரும்பி வந்திருக்கிறாய்?”

“பிரச்சனை எப்ப தானில்லை ஒரு யுகமாய் அது தானே பழகிப் போச்சு. நான் அதுக்குப் பயந்து வரேல”

“அப்ப என்ன உன் மனசிலே ஓடுது?”

“வழியிலை அந்தச்சிலை இருக்குதல்லே. அதிலை முழிக்கிற தோஷம் எப்ப என்னை விட்டுப் போகப் போகுது? சீ! அதைப் பார்க்கவே கண்ணெல்லாம் எரிஞ்சு போகுது. அது இருக்கிற வரைக்கும் இனி நான் வேலைக்கே போகப் போறதில்லை அதை உடைச்செறிய வேணும் போலை எனக்குக் கையிரண்டும் துடிக்குதேயப்பா . ஒரேயடியாய் அந்தச் சிலையை உடைச்சுப் போட்டால் தான் என்ரை தோஷம் மட்டுமல்ல எங்களைப் பிடிச்ச சாபத் தீட்டும் போகுமென்று நான் யோசிக்கிறன்”

“அதை உடைச்சு விடுவதால் மட்டும் பாவம் தீர்ந்திடுமா? எங்களைப் பீடித்து வருத்தும் சாபம் தான் போய் விடுமா> உனக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை நாடு இப்படிக் களயிழந்து உயிர் விட்டுக் கிடக்கையில் வாழ்க்கையைக் கொண்டாடுவதற்காக என்ன கல்யாணம் வேண்டிக் கிடக்கு” என்று தானே உன்ரை இந்தத் துறவுக் கோலம்/ இவ்வளவு தூரம் நீ மனசொடிஞ்சு போகக் கூடாது. எங்களையறியாமலே எங்கேயோ தவறுநேர்ந்திருக்கு நல்லதை நல்லவர்களை, உள்ளபடி இனம் காண முடியாமல் .போன தவறுக்காக, இந்தப் பாவத்தை நாங்கள் அனுபவிச்சுத்தான் தீர வேணும்.. இதுக்காக இந்தச் சிலையை உடைக்கிறதிலை என்ன நியாயமிருக்கு? அப்படியாவதால் மனிதனுக்குப் புத்தி தெளிஞ்சிடுமா? இதனாலே செய்த பிழைக்களுக்கெல்லாம் நிவர்த்தி கிடைச்சிடுமா?” சொல் ஆதவா

அவர் கூறியதையெல்லாம், அறிவு பூர்வமாகக் கிரகித்து ஏற்றுக் கொண்டு விட்ட பாவனையில் அவன் தலை ஆட்டினான்.. மேற் கொண்டு எதுவும் பேச வராமல் அவன் மெளனமாக அவர் கூறிய அந்த வாழ்க்கைச் சித்தாந்தத்திற்கு ஏற்றவாறு தான் மாற வேண்டுமென்பதையே இலக்காகக் கொண்டு ஆழமாகச் சிந்திக்கத் தலைப்பட்டிருந்தான் “புத்தி தெளிவென்பது எளிதில் வரக் கூடிய ஒன்றல்ல .அது தானாக வராத பட்சத்தில் நல்லன தீயன கூடப் புரிந்து கொள்வது கஷ்டம் .மனிதர்களை நல்ல பாதையில் கொண்டு செல்வதற்கும், வழி நடத்துவதற்கும் ஒரு மேய்ப்பனைத் தேடுவதும் முட்டாள்தனமாகவே அவனுக்கு உறைத்தது. அழிந்து போன தன் சமூகத்தின் பொருட்டு அச்சிலையை உடைத்துப் போட வேண்டுமென்று தான் ஆவேசம் கொண்டதற்காக இப்போது அவன் தன்னையே நொந்து கொண்டான். அச்சிலை இருக்கட்டும். வெறும் சடப் பொருள் தானே என்ற எண்ணக் கருக்கலில் முழுவதும் தீய்ந்து புதிதாய் விழிப்புற்றது போ;ல அவன் முகம் அசாதாரண களை கொண்டு சுடர் விட்டு மின்னிற்று. ஏகப்பிரம்மமுமாகிப் போன, அச்சம நிலை உயிர் வருடலான ஒளிப்பிரவாகத்தில் அழிந்து கிடக்கிற இவ்வுலகின் இருள் மண்டிய காட்சி வெறுமை கூட அவனின் பார்வைக்கு எட்டவில்லை. முழுவதும் துயர் ஒழிந்து போய், உணர்ச்சிகளால் பங்கமுற்றுப் போகாத திடசித்த சங்கல்பம் ஏற்றுத் தான் வாழும் வரை இன்று மட்டுமல்ல என்றும் அதுவே சுகமளிக்குமென்று, அவன் முழு மனதோடு நம்பினான்.

– எனது துருவ சஞ்சாரம் நூலிலிருந்து பெறப்பட்ட கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *