சிநேகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 5,095 
 

இன்னும் சூரியோதயம் ஆகவில்லை. மார்கழி மாசத்து வாடைக்காற்று சில்லென்றடித்தது. ராமியின் தலைமயிர் கண்ணிலும் கன்னத்திலும் மறைத்தது.

அவள் பரண்மேல் நின்றுகொண்டிருந்தாள். கையிலிருந்த கவண் தொங்கிக்கொண்டிருந்தது. எலுமிச்சம்பழ அளவுள்ள ஒரு கல்லை அந்தக் கவண் ‘மெதுப்பிக் கொண்டிருந்தது.

ராமி கவணை தலைக்குமேல் லாவகமாகச் சுற்றி எறிந்தாள். கூட்டிலிருந்து புறப்பட்ட சிட்டைப்போல் கல் இறைந்து சென்று தொலைவில் போய் விழுந்தது. நாலு திசைகளையும் பார்த்து இப்படி சத்தம் போட்டுக் கத்தினாள்.

“வடக்கே யாரு கழுதெ
தெற்கே யாரு கழுதெ
மேற்கே யாரு கழுதெ
கெழக்கே யாரு கழுதெ”

கதிரை ஒடிக்கும் களவாளிகள் உண்மையிலேயே யாரும் இல்லை அங்கே! அப்புறம் ‘ஒரு வசனகவிதை’ – வழக்கமாக காவல் காக்கும் சிறுவர் சிறுமியர் சொல்லுவதை இறைந்து சொன்னாள்.

“கதிரைப் பிடுங்காதே
கக் கத்தி விடுக்காதே
ஊதி ஊதித் திங்காதே
உள்ளங்கையை நக்காதே
மானத்தைப் பார்க்காதே
வயிறூதிச் சாகாதே
கழுதையோ கழுதை”

பனி பலமாக விழ ஆரம்பித்தது. காடு எங்கும் புகை சூழ்ந்தது போல், சில அடி தூரத்துக்கப்பால் என்ன இருக்கிறது என்று தெரியாமல் பெய்தது. இந்தப் பனிக்கு விவசாயிகள் வைத்திருக்கும் பெயர் “மூணாம் பனி!”

ராமிக்கு கொஞ்சம் பயம் வந்தது. கையில் கழியை எடுத்துக் கொண்டு, பறவைகளை விரட்ட அடிக்கும் தகரத்தில் ஓங்கி ஓங்கி அறைந்து, காடே அதிரும்படியான சத்தத்தை எழுப்பினாள். இந்த அடிக்கெல்லாம் பனி போய்விடுமா? வாடை அவளை நடுக்கியது. துணிகள் நனைந்துபோயின; அவள் வீடு திரும்பமுடியாது போனால் என்ன ஆகும்; பயங்கரமான அடி உதைகள், நீசத்தனமான வசவுகள் எல்லாம் கிடைக்கும். இவைகளையெல்லாம் ஏற்று இந்தச் சிறுமி பழக்கப்பட்டுப் போயிருந்தாள். –

‘அடேயப்பா…வாடை என்ன இப்படிக் கொளுத்துகிறது!’

கீழ்த்தாடைப் பற்கள் மேல் பற்களோடு கணக்கில்லாத வேகத்தில் அடித்துக்கொண்டன. கைகள் மார்பில் குறிபோட்டு, புஜங்களைப் பற்றிக்கொண்டன. வாயின் நடுக்கத்திற்கேற்ப தொண்டைக்குழியிலி ருந்து ஒரு குரலைக் கொடுத்து அந்தக் குரல் தாடையின் வேகமான அடிகளால் ஒரு வினோத சத்தமாக மாறிவந்தது. ராமி இப்படி மீண்டும் மீண்டும் செய்து அந்தக் குளிர் நடுக்கத்திலும் அதை மறக்க விளையாடினாள்.

‘பூனைக் கிழவி விளையாட்டு’ வைத்து விளையாடும்போது இப்படிக் குரல் நடுங்கினால் ரொம்ப நன்றாக இருக்குமே என்று நினைத்தாள். அந்த மாதிரி கொஞ்சம் பேசிப் பார்த்துக்கொண்டாள்!

பனி இப்பொழுது இன்னும் பலமாகக் கொட்ட ஆரம்பித்தது. ராமி பரணைவிட்டு இறங்கினாள். பரணுக்குக் கீழே தந்தரையில், அப்படியே ஒரு சின்ன அணில் குஞ்சுமாதிரி கொடுங்கிப்போய் உட்கார்ந்து, பாவாடையை அவிழ்த்து வெறும் மேல் உடம்பையும் தலையையும் சேர்த்து போர்த்திக்கொண்டாள். குளிரினால் வயிற்றைப் பிசைந்து வலித்தது.

குளிருக்கு அடக்கமாக முடக்க ஒரு மடியோ, அடக்கமுடியாத துக்கத்தினால் முகத்தைப் புதைத்து அழ ஒரு மார்போ இல்லை அவளுக்கு. அவள் ஒரு அனாதை. தாயும் தந்தையும் அற்றவள். உடன்பிறந்த சகோதரப் பாசமே இன்னதென்று அறியாத பாவி.

ஏதோ ஒரு தூரமான ஊர். அங்கே பிறந்து வயிற்றுக் கஞ்சிக்காக இங்கே வந்து இருக்கிறாள். அதிகாலையிலேயே எழுந்து கம்பங்காட்டுக் காவலுக்கு வந்துவிடவேண்டும். ராத்திரி ஏழு மணிக்குத்தான் வீடு திரும்பவேண்டும். மத்தியானம் மட்டும் ஒருவேளை கஞ்சி வரும். ராத்திரி வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு, குதிரைவாலிச் சோறு சாப்பிடலாம் சில நாளைக்கு.

ராமியின் தகப்பன் ஒரு குடிகாரன். நன்றாகத் திருட்டுச் சாராயம் குடித்துவிட்டு வந்து ஒருநாள் தன் மனைவியை கடப்பாறைக் கம்பி யால் ஒரேபோடில் கொன்றுவிட்டு, தானும் ஆயுள் தண்டனையை அனுபவிக்க ஜெயிலுக்குப் போய்விட்டான். அப்போது ராமி நாலு வயசுக் குழந்தை இப்போது அவளுக்கு எட்டு வயசாகிறது. இந்த நாலு வருஷமும் அவள் அனுபவித்த துன்பம் கடலைவிடப் பெரியது.

எதால் அவள் அடி வாங்கவில்லை ? எந்த இடத்தில் அடி விழாமலி ருந்தது; துடுப்புக்கட்டையால், விளக்குமாற்றால் சட்டகப்பையால், களைசுரண்டியால், தலையில், முகத்தில், மணிக்கட்டில், மார்பில், வயிற்றில், நினைத்த இடமெல்லாம் கையில் கிடைத்ததையெல்லாம் கொண்டு.

எதிர்த்துப்பேசியதற்காக ஒருதடவை நாக்கில் சூடு போட்டார்கள். விளையாடப் போனதற்காக, காலையும் கையையும் கட்டிப்போட்டு கண்ணில் மிளகாய்ப் பழத்தை அரைத்துப் பூசி வெயிலில் உருட்டி விட்டார்கள். இப்படி எத்தனையோ.

குளிரும் வயிற்றுவலியும் தாங்கமுடியவில்லை. தன்னுடைய அனாதை நிலையை நினைத்தவுடன் ராமிக்கு அழுகை வந்தது. மின்னல் வேகத்தில் அவளுக்குத் தன் அம்மாவின் முகமும்,

அவளுடைய பரிவும் ஞாபகம் வந்தது.

“அம்மா … அம்மா …!”

“என் அம்மா…” என்று வாய்விட்டு அழுதாள் ராமி.

சூரியோதயம் ஆனது. மருந்துக்குக்கூட இப்போது பனியை காணோம். கதிர்களின் பாரத்தைத் தாங்கமுடியாமல் இருந்த கம்பம் பயிர்கள் பனியில் குளித்துத் தெப்பமாக நனைந்திருந்தன. அவைகளின் நீண்ட இலைகளின்மேல் பனி முத்துக்கோர்த்திருந்தது.

குளிர்காய பரண்மேல் ஏறினாள். இளம் வெயிலில், அவளுடைய எண்ணெய் அறியாத செம்பட்டை மயிர் மினுமினுத்தது. முதுகிலும் கைகளிலும் அடர்த்தியான பூனை மயிர் வெயில் பட்டுப்பட்டு அவளுடைய “நல்ல சிகப்பு” நிறம் குங்கும மாக மாறி இருந்தது. அந்தக் கண்கள் பச்சை நிறமாக இருப்பது பூனை யின் கண்கள் ஞாபகத்துக்கு வரும். “கண்ணாடிக் கண்’ அல்லது ‘பீங்கான் கண்’ என்றும் சொல்வார்கள். கறுத்து அடர்ந்த புருவம், தேங்காய்ச் சில் மாதிரி வெளேர் என்ற பற்கள்; அதில் மேல்வரிசை யிலுள்ள இரண்டு முன்னத்தம், பற்களுக்கு இடையில் அரிசி கனத்தில் ஒரு பல். எல்லோர்க்கும் முப்பத்திரண்டு என்றால் ராமிக்கு முப்பத்தி ரெண்டே கால்! உதடுகள் சிகப்பாக இல்லாமல், கத்திரிப்பூ நிறங்கலந்த ஒரு கருப்பு. இது ரொம்பவும் அவளைக் கூறு கெடுத்தது. அவளைப் பார்க்கும் யாருக்குமே ஒரு அழகான மான்குட்டியின் ஞாபகம் வரும்.

பாதையூடே தூரத்தில் ராஜா வந்து கொண்டிருந்தான். அவன் ராமி யின் ‘சேக்காளி’. இருவரும் ஒரே வயசு. ராஜா பக்கத்துப் புஞ்சைக் காரன். ஊருக்கு முதலாளி மகன். கன்னங்கரேர் என்றிருப்பான். காதில் மூணு வெள்ளைக்கல் பதித்த கடுக்கன். பக்க வகுடுக் கிராப்பு. சிரித்த துறுதுறுக்கும் கருவண்டுக் கண்கள். கொழுகொழுவென்ற சதைப் படலம் நிறைந்த உடம்பு. அநேகமாக நீலநிற அரைக்கைச் சட்டையே விரும்பி அணிவான். எத்தனையோவித நிற, சட்டைகள் அவனுக்கு உண்டு. இருந்தாலும் அவனுடைய உடைகளிலெல்லாம் அவனுக்குப் பிடித்தமானது இந்தச் சட்டைதான்.

பஜனைக் கோவிலில் வாங்கிய மாஜீனி கலந்த நெல் அவலைத் தின்றுகொண்டே வந்தான்.

ராஜா கிட்டே வந்ததும் ராமி அவனைப் பாராததுபோலே எங்கேயோ பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஏ கள்ளி; வேணுமா, வேண்டாமா?”

ராமி முகத்தை பொய்க்கோபமாக வைத்துக்கொண்டு, வெடுக் கென்று திரும்பிப் பார்த்தாள். பார்த்துவிட்டு எரிச்சல்படுவதுபோல் “என்னது?” என்று தெரியாதது போல் கேட்டாள். பஜனைக் கோவிலிலிருந்து அவன் தினமும் அவளுக்காகக் கொஞ்சம் அவல் கொண்டு வருவது அவளுக்குத் தெரியும்!

“சரி… வேண்டாட்டாப் போ…” என்று சொல்லிக்கொண்டே மூடியிருந்த கையை தலைக்கு மேலாகப் பிடித்து முகத்தை அண்ணாந்து வாயை, ‘ஆ’ வென்று திறந்தான்.

கலகல என்று உரத்த சிரிப்பைச் சிந்திக்கொண்டே ‘தொபுக்கட்டீ’ ரென்று பரணிலிருந்து குதித்து வந்து அவலை வாங்கிக்கொண்டாள்.

“கடன் கழிஞ்சுப் போச்சு” என்றான் ராஜா. மென்றுகொண்டே, ஆமாம் ஆமாம் என்று ஒப்புக்கொள்ளும் பாவனையில் தலை அசைத்தாள் அவள்.

பிறகு இரண்டு பேரும் விளையாடத் தயாரானார்கள். கைகள் இரண்டையும் பூட்டிப் பிணைத்துக்கொண்டு கொஞ்ச நேரம் “வரகு வரகு” சுற்றினார்கள். அது அலுத்தவுடன் பக்கத்திலுள்ள ஓடைக்குப் போய், அதன் ஏற்ற இறக்கத்தில் ஏறி இறங்கி ‘சடுகுடு மலையிலே ரெண்டானை’ விளையாடினார்கள். அதுவும் சலித்தவுடன் ஒளிந்து பிடித்து விளையாடினார்கள். சிறுவர்களுக்கு இது ஒரு தெவிட்டாத விளையாட்டு. இதை ஆடாத மனிதன் யார்; அவனும் ஒரு மனிதனா? — எத்தனையோ அற்புதக் கற்பனைகள் தோணும், இதை விளை யாடும்போது. ஒளிந்திருந்தவரை தேடிவந்தவர் கண்டுபிடித்துக் கொண்டவுடன் இருவரும் சேர்ந்து சிரிப்பார்களே; அந்தச் சிரிப்புக்கு இந்த உலகத்தில் ஏது ஈடு?

இப்பொழுது ராஜாவால் ராமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ‘எங்கே தொலைந்துகொண்டாள் சனியன்! அவளைக் கண்டு பிடிப்பது கஷ்டம்தான். புழுமாதிரி தரையில் ஊர்ந்துகொண்டே போய் தட்டாம்பயிர்ப் பட்டங்களுக்கு அடியில் கிடந்துகொள்வாள். ராஜா வால் இது முடியாது, அப்படி ஒளிந்து கொண்டாலும் அரவமில்லாமல் மண்ணுளிப்பாம்புபோல் கிடக்க இயலாது. சிரிப்பை கைபொத்தி அடக்கிக்கொண்டே கெக்கெக் கெக்கெ என்று உடம்பு குலுங்க சிரித்துக்கொண்டே இருப்பான். இந்த சத்தத்தைக் கண்டுபிடித்து வந்தே ராஜாவைப் பிடித்துவிடலாம்.

ஆட்டத்தில் தோல்வி கண்டதால், ராஜாவுக்கு ருசிக்கவில்லை. பின்பக்கம் கைகட்டிக்கொண்டு, ஆகாயத்தைப் பார்த்தான். தூரத்தில் படைகுருவிகள் வருவது குறுமணல் புள்ளிகள் போல் தெரிந்தது. தா “ஓ படைகுருவி, படைகுருவி, ராமீ படைகுருவி..” ராஜாவின் இந்தப் பரபரப்பான கத்தல் ராமியை அசைக்கவில்லை. விளையாட் டில் எதிரியை “விழத்தட்ட’ இப்படியெல்லாம் சொல்கிறது வழக்கம்தான்.

பொய்யில்லை; நிஜமாக; கண்ணானை……… சாமி சத்தியமாச் சொல்றேன் ராமீ. ஓடிவா, ஓடிவா…….

இரண்டு பேரும் பரண்மீது ஏறினார்கள். படை குருவிகள் எப்பவும், ஆயிரம் இரண்டாயிரம் என்று சேர்ந்தே வரும். அவைகள் எங்கே இருந்து வருகின்றன, கதிர் தானியத்தைத் தின்றுவிட்டு எங்கே போகின் றன என்று யாருக்கும் தெரியாது. அவை வருவதும் போவதையுமே பார்க்க ஒரு தனி அழகாய் இருக்கும். புள்ளிகளைக்கொண்டே பல்வேறு சித்திர உருவங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கும்போதே, இன்னொரு உருவம் தெரியும்; பிற்கு அது மறைந்து வேறொன்று; அப்புறம் இன்னொன்று. இப்படியாக புள்ளிக் கோலங்கள் – புள்ளிக் கோலங்களாய்ப் போட்டுக்கொண்டே வானத்தில் நகர்ந்து வரும்.

முதலில், மலைப்பாம்பு ஒன்று பறந்து வருகிறமாதிரி இருந்தது. பிறகு அதன் நீளம் குறைந்து குறுகி நடுவில் கனத்து, வட்டவடிவமான ஒரு கடல் மீன் பறந்து வந்தமாதிரி இருந்தது. திரும்பவும் பாம்புமாதிரி நீண்டு கோடிகள் இரண்டும் மேல் நோக்கி உயர்ந்து வளைந்து ஒரு ஆரம் – பூமாலைமாதிரி வானத்தில் வந்தது.

ராஜாவும், ராமியும் கழிகள் கொண்டு தகரத்தில் வேகமாக பலங கொண்ட மட்டும் தட்டி ஒலி எழுப்பினார்கள். படை குருவிகள், அவர் களை ஆரத்தி சுற்றிவிட்டு மேற்கு நோக்கிப் போய்விட்டன. தூரத்தில் புள்ளிகள் நடுங்குகிற மாதிரி தெரிந்தது. அப்புறம் ஒன்றுமே இல்லை.

களைத்துப்போய் இருவரும் கருவ மரத்தடி நிழலில் வந்து உட்கார்ந் தார்கள். ராஜா தன்னுடைய புஞ்சைக்குள் போய் நாலைந்து கம்பங் கதிர்களையும் பிடி நிறைய பாசிப் பயித்தங்காயும் பிடுங்கிக்கொண்டு வந்தான். ராமி கதிரை வாங்கி, கசக்கி ஊதி ஊதிக் கொடுத்து தானும் தின்றாள். காயை, அவள் மாதிரி வேகமாக நரம்பை உரித்துப் பல்லில் கொடுத்து உருவித் தின்ன வராது. ராஜா அதை ஒரு அதிசயமாகப் பார்த்து அனுபவித்துக்கொண்டிருப்பான்.

ராமியை அவனுக்கு ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது. ஜோராய் அவள் நாட்டுப்பாடல், கல்யாணப் பாட்டெல்லாம் பாடுவாள். சுவாரஸ்யமாக ‘ராஜா ராணிக் கதை’ சொல்லுவாள். கதை சொல்லும்போது அவளைப் பார்க்கவேண்டும்; எத்தனைவிதமாகச் சிரித்து முகத்தை அசைத்து குரலை ஏற்றத் தாழ்வு கொடுத்துச் சொல்லு வாள்! கதையை நேரில் கொண்டுவந்து நிறுத்த அவள் நாக்கோடு கைகளும் வந்து அபிநயத்தால் உதவி செய்யும். இந்த சமயங்களில் ராஜா கதையை மறந்துவிட்டு அவளைத்தான் பார்த்துக்கொண்டிருப்பான்; மூக்கு மாத்திரம் ‘உம்’ கொட்டிக்கொண்டிருக்கும்.

அதையெல்லாம் இந்தப் பதினான்கு வருடங்கள் கழித்து இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும்…..

வந்தது போலவே, ராமி, ஒருநாள் திடீரென்று போய்விட்டாள்.

எங்கு போனாளோ யாரிடம் சென்றாளோ, வாழ்க்கையில் நடக்கும் விசித்திரங்கள்… கதைகளில் நடக்கும் விசித்திரங்களெல்லாம் வாழ்க்கையின் விசித்திரங்களுக்கு உறைபோடக் காணாது.

பதினான்கு வருஷங்களுக்குமுன் போனதுபோலவே திடீரென்று மீண்டும் ஒருநாள் வந்தாள் ராமி.

அன்று …

அதிகாலையில் வீட்டு முற்றத்தில் வந்து ஒரு காகம் கரைந்து கொண்டிருந்தது. முன்புறமுள்ள மாட்டுத் தொழுவத்திலிருக்கும் கல் திண்ணையில் உட்கார்ந்து, வேப்பங்குச்சி வைத்துப் பல் தேய்த்துக் கொண்டிருந்தான் ராஜா. அவனுக்கு முன்புறத்தில் இரண்டு பெரியாட் கள் அந்த ஊருக்கு முதல் நாள் கல்யாணத்திற்கு என்று வந்த வெளியூர்க்காரர்கள், பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு பெண் இடுப்பில் ஒரு குழந்தையோடு தங்களைக் கடந்து வீட்டினுள் போனாள். போகும்போது தன்னை நோக்கித் தயங்கி நின்ற மாதிரி இருந்தது ராஜாவுக்கு. அசைப்பில் பார்த்தபோது எங்கோ பார்த்த மாதிரியும் இருந்தது அவனுக்கு.

யாரோ…

அனேகமாக தினமும் எத்தனையோ பேர்கள் தன் புதுவீட்டைப் பார்க்கவும், தன் மனைவி போட்டுக்கொண்டிருக்கும் நகைகளைப் பார்க்கவும் வந்து போவார்கள். அந்த ஊரில் நடக்கும் விசேஷங் களுக்கு வரும் வெளியூர்க்காரர்கள், சொந்தக்காரர்கள், தூர பந்துக்கள், அல்லாதவர்கள் இப்படி எத்தனையோ பேர். இதுவும் அந்தமாதிரி இருக்கலாம்.

வந்தவள் யாருமில்லை. ராமிதான். இவனை நன்றாக அடை யாளம் கண்டுகொண்டாள் அவள்.

பேசிக்கொண்டிருந்தவர்கள் விடைபெற்றுப் போனபிறகு ராஜா வீட்டினுள் புகுந்தான். அந்தப் பெண் தன் மனைவியோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தாள். குழந்தை தனியாக, கொல்லம் செங்கல் பதித்த தரையை இரண்டு கைகளாலும் தேய்த்து விளையாடிக் கொண்டிருந்தது. மனைவியின் முதுகில் கனமாகப் படிந்து கிடந்த ஜடையில் திருகி இருந்த ஜடைபில்லையின் நேர்த்தியான வெட்டுக் களில் பிரகாசம் பட்டு மின்னிக்கொண்டிருந்தது, அந்தப் ‘புதிய பெண்’ இவனைக் கண்டு சிரித்தாள். ‘அல்லது பேச்சின் மத்தியில் எழுந்த சிரிப்பாகவும் இருக்கலாம்’ யாரென்று தெரியவில்லை.

அந்த அறையின் வாசலைத்தாண்டி கொல்லையில் குழாயடியில் வந்து நின்றுகொண்டு வேப்பங்குச்சியை பல்லால் கடித்து இரண்டாக வகுத்து வளைத்து நாக்கை வழித்துக்கொண்டிருக்கும்போது, மனசினுள் பளீரென்று பிரகாசம் தோன்ற ஒரு மின்னல் அடித்து மறைந்தது.

ஆ…அந்தப் பற்கள்.

அந்தக் கண்கள்.

ராமி

ராமி நீயா!

‘எத்தனை வருஷங்களாகிவிட்டன. உன்னைப் பார்த்து – என் வீடு தேடி வந்த உன்னை “வா” என்றுகூட கேட்கவில்லையே நான்’.

ராமி ராமி என்று அடித்துக்கொண்டது மனம்.

முகத்தை அவசர அவசரமாகத் துடைத்துக்கொண்டே அவர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அறையை நோக்கி வேகமாகப் போகும்போது அவன் மனைவி எதிரே வந்தாள்.

“வெந்நீர் எடுத்து வைக்கட்டுமா?” என்று வழக்கமான அன்போடு அமைதியாய்க் கேட்டாள். ராஜா ஒன்றும் பதில் சொல்லவில்லை. தன் மனைவியையே பார்த்துக்கொண்டேயிருந்தான் அவன். ஏன் அந்தச் சமயத்தில் அப்படிப் பார்த்தான் என்பது அவனுக்கே தெரியாது. ஆனால் அவன் மனைவியோ அதற்கு வேறு ஒரு ‘அர்த்தம்’ பண்ணிக் கொண்டு புன்னகையோடு நாணித் தலைகுனிந்தாள்.

அவளைத் தன் பார்வையிலிருந்து விடுவித்துக்கொண்டு ராஜா வீட்டுக்கு வெளியே வந்தான்.

“ராமி போய்விட்டாள், ராமி நீ போய்விட்டாய்.’

உன்னை “வா” என்றுகூடக் கேட்கவில்லையே.

ராமி, நீ என்னைப்பற்றி என்ன நினைத்துக்கொள்வாயோ, அவன் மனம் புலம்பிக்கொண்டே இருந்தது.

‘சரி; இப்பொழுது அவளை எங்கே போய்ப் பார்ப்பது? முன்பு அவள் வசித்த வீட்டில் இப்பொழுது ஒருவருமே கிடையாது. அவர்கள் பஞ்சம் பிழைக்க தஞ்சாவூர் எப்பவோ போய்விட்டார்கள். ஒருவேளை, ராமி நேற்று இரவு இங்கே நடந்த கல்யாணத்துக்கு வந்திருப்பாளோ’ அப்படித்தானிருக்கும். ஆனால்…. அங்கே நாம் இப்பொழுது இந்நேரத் தில் எப்படிப் போவது.

ராஜாவின் கால்கள் மெதுவாக கல்யாண வீட்டை நோக்கி நடந்தன. அந்த வீடு ஊருக்கு மேற்கே இருந்தது. அந்த வீட்டின் எதிரே ஒரு மைதானம். அங்கே நிறைய ‘கூடார வண்டிகளும்’ காடி வண்டி களும் இருந்தன. ஜனங்கள் எல்லோரும் வண்டிகளில் ஏறி ‘மறுவீடு’ போக தயாராகிக் கொண்டிருந்தார்கள். ராமியும் ஒரு காடி வண்டியில் உட்கார்ந்து தன் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு எதிரே உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். தொலைவில் வரும்போதே ராமி மட்டும் ராஜாவைக் கண்டுவிட்டாள்.

வீட்டுக்குமுன் வந்துநின்ற ராஜாவை வீட்டுக்காரர் உட்பட மற்றவரும் “முதலாளி வாங்க; முதலாளி வாங்க” என்று வரவேற்று அங்கே கிடந்த பெஞ்சியில் உட்கார வைத்தார்கள். வண்டிகள் நிற்கும் பக்கம் பார்த்துக்கொண்டே ராஜா சந்தனக் கும்பாவில் விரல்களை நனைத்தான். வெற்றிலை போடும்படி வற்புறுத்தினார்கள்; என்ன புகையிலை வேண்டுமென்று கேட்டார்கள்.

‘அதோ, அதோ இருக்கிறாள் ராமி. இப்பொழுது அவளுடன் போய்ப் பேசமுடியாது. அவளுடைய க்ஷேம லாபங்களைப் பற்றிப் பேச முடியாது. அப்படிச் செய்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்; தன்னுடைய கௌரவம் என்ன ஆவது’.

வெற்றிலையின் காம்பைக் கிள்ளிக்கொண்டே எது செய்ய, என்று அறியாமல் துடித்துக்கொண்டிருந்தான். கல்யாண வீட்டுக்காரர்கள், மறுவீடு செல்லும் வண்டிகளை வழியனுப்புவதில் மும்முரமாய் இருந்தார்கள்.

இப்பொழுது ஒன்றே ஒன்றுதான் செய்யலாம். ‘உன்னைப் பார்க்க வந்துவிட்டேன்’ என்ற அர்த்தத்தில் அவள் தன்னைப் பார்க்கும்போது அவளைப் பார்த்து தான் ஒரு புன்னகை செய்துவிடலாம்.

ஆனால்…

ராமி அவன் பக்கம் பார்க்கவே இல்லை.

ராஜா தன்னையே பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது ராமிக்குத் தெரியும்; தன்னைப் பார்க்கவே வந்திருக்கிறான் என்பதும் ராமிக்குத் தெரியும்.

ஆனாலும், அவள் ராஜாவின் பக்கம் பார்க்கவே இல்லை. அவள் தன் எதிரே அமர்ந்திருந்த பெண்ணுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தாள். தன் குழந்தையை பலதடவை முத்தமிட்டாள். கிசுகிசு மூட்டினாள்; கொஞ்சினாள். தன் பக்கத்திலுள்ள பெண்களையெல்லாம் பேசிச் சிரிக்கவைத்தாள். மற்ற எல்லாப் பக்கங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்தாள்! ராஜா இருந்த பக்கத்தைத் தவிர!

மணப்பெண் வண்டி, முன்னால் புறப்பட மற்ற வண்டிகளும் அதைத் தொடர்ந்து புறப்பட்டன. மணிகளின் ஓசைகளும், சதங்கை ஒலிகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே போனது. ராசாவால் ஒரு புன்னகைகூட பூக்க முடியாமலே போய்விட்டது. அப்படியே அசையாமல் அவன் மேற்கே பார்த்து உட்கார்ந்திருந்தான். குளிர்ந்த மேல்காற்று அவன் மூஞ்சியில் அடித்தது. வானத்தில் புறாக்கள் இஷ்டப்படி ஜோடி சேர்ந்து பேசிப் பறந்துகொண்டு போயின.

என்ன காரணம் என்று தெரியவில்லை; பக்கத்திலிருப்பவர்கள் பார்த்துவிடுவார்களோ என்று பயந்து, கண்களைத் துடைத்துக் கொள்ளும்போது, கீழ்க்கண்டவாறு சொன்னான் ‘சை’ கண்ணில் தூசி விழுந்துவிட்டது.

அவன் கண்களைத் துடைத்துக்கொண்டதையோ அவன் அப்படிச் சொன்னதையோ அங்கு உண்மையில் யாரும் பார்க்கவுமில்லை; அதைக் கேட்கவும் இல்லை.

– தாமரை ஜனவரி 1963

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *