சாந்தா டீச்சர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 6,716 
 

சாந்தா டீச்சருக்கு விழிப்பு வந்ததும் முதலில் பார்ப்பது சுவர்க் கடிகாரம். மணி ஐந்தே முக்கால். முப்பது வருஷங்களாக மாறுதல் ஏதுமில்லாமல் நடைபோடும் நிகழ்ச்சி. அந்தக் காலத்து கடிகாரம். அவள் அப்பா சென்னை மூர்மார்க்கெட்டில் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் முப்பத்தைந்து ரூபாய்க்கு வாங்கின கடிகாரம் இதுவரை ஒரு தடவை கூட நின்றதில்லை. சர்வீஸ் செய்யவும் கொடுத்த தில்லை. ஆனால் அப்பாதான் போய் விட்டார், அம்மா போன அடுத்த வருஷம். பத்து வருஷங்களுக்கு முன்னால்.

சாந்தா டீச்சருக்கு இன்றும் வழக்கம்போல் விழிப்பு வந்தது. மணி ஐந்தே முக்காலாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் சுவர்க் கடிகாரம் காட்டிய மணி மூன்று. நின்று போயிருக்க வேண்டுமென்று பட்டது சாந்தா டீச்சருக்கு.

அவள் எழுந்து மேஜையிலிருந்த தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஐந்தே முக்காலாகி முப்பது விநாடிகள்.

சுவர்க் கடிகாரம் திடீரென்று நின்று போக என்ன காரணம்? இது எதற்காவது அறிகுறியா? நாற்பது வருஷங்களாக சர்வீஸ் செய்யாமலேயே அது இது வரை ஓடியிருப்பதே ஒரு சாதனை. அப்படியிருக்கும்போது, இது எதன் அறிகுறி என்றெல்லாம் மனதில் ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் சாந்தா டீச்சர்.

‘நீ கடிகாரமாயிருந்தால் என்ன உனக்கும் கால வரையறை உண்டு.’ என்றாள் சாந்தா டீச்சர், கடிகாரத்தைப் பார்த்து உருண்டை வடிவத்தில் ஒரு பெரிய முகம்போல் தெரிந்த அக்கடிகாரம் அவளைப் பார்த்துப் புன்னகை செய்வது போல் அவளுக்குப்பட்டது.

‘முப்பது வருஷங்கள் நீ என் அடிமையாகத்தானே இருந்தாய்?’ என்று அது கேட்கின்றதா அல்லது இது தன் மனப் பிரமையா என்று சற்று திடுக்கிட்டாள் சாந்தா டீச்சர்.

‘ஆமாம் உன் அடிமைதான். கண் விழிப்பு காலை 5.45.6.15 வரை டாய்லெட் , பல் விளக்கல், 7.30 மணிக்கு காப்பி சிற்றுண்டி தயார். எட்டு மணி வரை பேப்பர் படித்தல், பள்ளிக்கூடப் பணி, பிறகு குளியல், உணவு சமைத்தல் ,சாதம் அல்லது சப்பாத்தி கறி பருப்பு. 9.15க்கு சாப்பாடு முடிந்துவிடும். சிற்றுண்டியை மதியம் உண்ண டிஃபன் பாக்ஸில் வைத்து ட்ரெஸ் செய்து கொண்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே வரும் போது மணி 9.45 9.50க்கு பஸ் . பள்ளிக் கூடத்தில் 10.15க்கு ஆஜர். 10.30 மணிக்கு வகுப்புகள் ஆரம்பம். 10.20லிருந்து 10.30. வரை ‘ப்ரேயர் கூட்டம் பள்ளிக்கூடத்துப் பெரிய விளையாட்டு மைதானத்தில் . இதுவரை இந்த முப்பது வருஷங்களில் உடம்பு சரியில்லாமலிருந்த அந்த இரண்டு நாட்களைத் தவிர, மற்றைய எல்லா நாட்களிலும் நான் பள்ளிக்கூடம் போயிருக்கிறேன். இந்த ப்ரேயர் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன் சரிதானே?’

‘சரிதான் அதுவும் உனக்கு தெய்வ நம்பிக்கை இல்லை என்றபோதிலும் சரிதானே?’ என்றது கடிகாரம்.

சாந்தா டீச்சருக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது. அவ்வாறு கிடையாதென்றும் அவள் யாரிடமும் சொன்னதில்லை. அப்படி ஏன் தனக்கு தெய்வ நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதென்று அவள் யோசித்ததுமில்லை. கேடிகாரம் ஏன் நின்றது என்ற கேள்வி அவள் மனத்தை நெருடியதை அவளால் தவிர்க்க முடியவில்லை . இயந்திர கதியில், நிகழ்ச்சி நிரலில் ஏற்பட்டு விட்ட இச் சிறிய மாறுதல் அவள் மனதில் சிறு கவனத்தைத் தோற்றுவித்தது இவ்வாறு சலனப்படுவது தனக்கு வயதாகிக் கொண்டு வருகிறது என்பதன் அர்த்தமா?

முப்பது வருஷங்களாக அப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருந்து வருகிறாள் சாந்தா டீச்சர். மூன்றாம் வகுப்பு ‘ஏ’ பிரிவு முப்பது வருஷங்களாக இதே வகுப்பு தான். இந்த பிரிவுதான் மேல்வகுப்பு ‘ப்ரொமோஷனை’ பிடிவதாமாக மறுத்துவிட்டாள்.

மிகவும் கண்டிப்பான டீச்சர் என்ற பேர் அவளுக்கு. அவளிடம் மூன்றாம் வகுப்பில் படித்து விட்டு, பதினொன்றாம் வகுப்புக்கு போய்விட்ட பிறகும் கூட மாணவ, மாணவிகள் அவளைக் கண்டால் பயப்படுவார்கள். என்ன காரணமென்று கேட்டால், யாருக்கும் சொல்லத் தெரியாது. அவளைப்பற்றி ஏதோ ஒரு மர்ம சக்தி இருப்பதாக அவர்கள் நம்பினார்கள். தன்னைப் பற்றி இவர்கள் ஏன் இப்படி நினைக்க வேண்டும் என்று சாந்தா டீச்சர் பல தடவை தன்னைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

சாந்தா டீச்சருக்குத் திருமணம் ஆகாமலிருந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். பெண் பார்த்துவிட்டு போன யாருமே பதில் போடவில்லை . இதற்குப் பிறகு ஆசிரியப் பயிற்சி முடித்துவிட்டு அவள் ஆசிரியையானாள்.

தன்னைச் சுற்றியிருந்ததாகக் கருதப்பட்ட அந்த மர்மசக்தியை, தொடக்கக் காலங்களில் அவள் பயன்படுத்திக் கொள்ள தயங்க வில்லை. தன்னைச் சுற்றி ஒரு திரையை எழுப்பிக் கொண்டு அவள் அனுமதி இல்லாமல் அவளை யாரும் நெருங்க முடியாதென்ற ஒரு சூழ்நிலையை அவள் உருவாக்கினாள். ஆரம்பத்தில் ஒரு தற்காப்பு கவசமாக இருந்தது இது. போகப் போக அவளேதன்னை ஒரு குறுகிய சிறையில் அடைத்து தளையிட்டுக் கொண்டாற் போன்ற ஒரு பிரமையை அவளுக்கு ஏற்படுத்தித் தந்தது.

அவளுக்கு நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக யாருமே இல்லை. உலகம் தன்னை வெறுக்கின்றதா அல்லது தன்னைக் கண்டு பயப்படுகின்றதா என்று அவளுக்குப் புரியவில்லை.

‘தனக்கு வயதாகிக் கொண்டு வருகின்றது என்ற காரணத்தினால் தான் தனக்கு இப்படியெல்லாம் சிந்திக்கத் தோன்றுகின்றதா?’ அதுவும் அவளுக்குப் புரியவில்லை .

சாந்தா டீச்சர் சுவர் கடிகாரத்தை எடுத்து அப்படியும் இப்படியு மாகச் சற்று ஆட்டினாள். இரண்டு நாட்களுக்கு முன்புதான் சாவி கொடுத்திருந்தாள். ஆகவே சாவி இல்லை என்ற பிரச்னை இல்லை. ‘க்வார்ட்ஸ் யுகத்தில் தான் இன்னும் பத்தாம் பசலித்தனமாகச் சாவி கடிகாரமாகவே இருக்க வேண்டுமா என்ற கோபத்தில் நின்று விட்டதோ?’ என்ற எண்ணம் தோன்றியதும், அவளுக்கே சிரிப்பு

வந்தது.

சிரிப்பு வந்த நிலையிலேயே, சாந்தா டீச்சர் திடுக்கிட்டாள். கடிக்காரம் ஓடத் தொடங்கியிருந்தது. அது ஓடத் தொடங்கியதனால் அவள் திடுக்கிடவில்லை . அது தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது. சின்ன முள் வெகுவேகமாகப் பெரிய முள்ளை துரத்தியது.

சாந்தா டீச்சர் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தாள். பிரமையில்லை, உண்மையாகவே சின்னமுள், பெரிய முள்ளை துரத்தியது. அவள் முட்களைத் தொட்டு, அவை ஓடுவதை நிறுத்த பார்த்தாள். முடியவில்லை. இதற்கு என்ன அர்த்தம்?

அவள் கடிகாரத்தை அப்படியே கட்டிலில் போட்டு விட்டு டாய்லெட்டுக்குள் நுழைந்தாள். கடிகாரத்துக்கு உயிர் வந்துவிட்டதா? ஏன் யந்திரங்களுக்கு உயிர் வரக்கூடாது? மனிதர்கள் யந்திரமாக மாறும்போது யந்திரங்கள் உயிர் பெற்று எழுவது நியாயந்தான்.

கடிகாரங்களுக்கு உயிர்வந்தால் என்ன ஆகும்? வெகு விரைவாக ஓடிஓடி மனித ஆயுளை வெகு சீக்கிரமாக முடித்து விடக்கூடும்.

இப்பொழுது இந்தக் கடிக்காரம் தனக்கெதிராக இந்த திட்டத்துடன் செயல்படுகின்றது.

பல் விளக்கும் போது , தன்னுடைய முகத்தை ஏதேச்சையாக அவள் பார்க்க நேர்ந்தது. இது யாருடைய முகம்? கண்ணாடியில் தெரிந்த முகம் அவளுக்கு அந்நியமாகப்பட்டது.

இதுவா அவளுடைய முகம்? ஐம்பத்தைந்து வருஷங்களாக அவள் இந்த முகத்துடனா வருகிறாள்? கண்களில் தெரிந்த தீட்சண்யம், கத்தியின் முனையைப் போல் அவளை குத்துவது போலிருந்தது. மற்றபடி வெகு சாதாரணமாக இருந்த முகத்தில் கண்கள் மட்டும் இவ்வளவு கூர்மையாக இருப்பதற்கு என்ன காரணம்? திடீரென்று கண்ணாடியில் அவள் முகம் மறைந்து, கண்கள் மட்டும் தெரிவது போல் அவளுக்குள் ஓர் உணர்வு தோன்றியதும், அவள் சரீரம் முழுவதும் மின்சாரம் பரவுவது போல் அவளுக்குப் பட்டது. யாருடைய கண்கள் இவை?

இன்று எல்லாமே சேர்ந்து அவளுக்குக்கெதிராக சதி செய்வது போல் அவளுக்குப்பட்டது. இன்று என்ன என்றுமே எல்லாருமே அவளுக்கெதிராக ஒன்றாகச் சேர்ந்து சதி செய்து கொண்டு வருகின்றார்கள் என்று அவளுக்கு தோன்றியது.

முதலில் அவள் அப்பா, அம்மா, அவளைப் பெற்றெடுத்தாக வேண்டுமென்று என்ன தீவிரம் அவர்களுக்கு ? கல்யாணம் செய்து கொள்வது குழந்தை பெறுவதற்குத் தானா? எதற்காக இந்த முட்டாள்தனமான திருமண ஏற்பாடு? பாசம், பரிவு, ஏக்கம், வேதனை எல்லாமே நாமாக ஏற்படுத்திக் கொண்ட கற்பிதங்கள்.

சாந்தா டீச்சர் காப்பி குடித்துக் கொண்டே பேப்பரைக் கையில் எடுத்தாள்.

எல்லாம் ஒரேவிதமான செய்திகள்…கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அரசியல்வாதிகள் சண்டை , இவருக்கு அவர் பதில்… அவருக்கு இவர் பதில்… லஞ்சம் வாங்கிய மந்திரிகள், மந்திரிகளை வாங்கிய தொழிலதிபர்கள், தொழிலதிபர்களை வாங்கிய சாமியார்கள் இச்செய்திகளுக்குள் ஒன்றுக்கு ஒன்று என்ன வித்தியாசம் இருக்கிறது,? பத்திரிகைகளுக்குச் செய்தி வேண்டுமென்பதற்காக, இவை நிகழ்கின்றனவோ? அப்படியானால் பத்திரிகைகள் இல்லாத காலத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று எதுவுமே நிகழவில்லை என்று அர்த்தமா? மனிதன் அவனுடைய இயல்பான சுபாவத்தில் ‘வில்லன்’ தான், அவனைக் கதாநாயகனாக்குவது சரித்திரமும், பத்திரிகைகளுந்தாம். சமீப காலத்து ‘வில்லன்’கள் அவர்கள் போனபின் அமரர்’களாகி சரித்திர புருஷர்களாகி விடவில்லையா?

சாந்தா டீச்சர் பேப்பரை வீசி எறிந்துவிட்டு தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். ‘குழந்தைகளை தெய்வம் என்கிறார்கள். ஒவ்வொரு குழந்தையும் குட்டிச்சாத்தான். என்னைக் கண்டு பயப்படுவதால் அவை ஒழுங்காக நடந்து கொள்கின்றன. மேரி ஆப்ரஹாம் வகுப்பில் அவை அடித்த கொட்டம், செய்த விஷமம்… அவள் வேலையே வேண்டாமென்று ஓடி விட்டாள். எதற்காக மனித சந்ததி மீண்டும் மீண்டும் தொடர்ந்து நீண்டு கொண்டே போகவேண்டும்? ஐ ஹேட் சில்ரன்… ஐ ஹேட் தெம் ஆல்…. ‘

திடீரென்று விழித்துக் கொண்டவள் போல் சாந்தா டீச்சர் தான் உரக்கச் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். தனக்கு என்ன ஆகி விட்டது, இப்படியெல்லாம் நினைக்க இப்படியெல்லாம் பேச?

அவள் குளித்துவிட்டு வெளியே வரும்போது கட்டிலில் கண்ட காட்சி அவளை உலுக்கி விட்டது.

சுவர்க் கடிகாரத்து முட்கள் கடிகாரத்தை விட்டு வெளியே வந்து நீண்டு… நீண்டு… நீண்டு கொண்டேயிருந்தன. ஒன்றையொன்று துரத்துவது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. திடீரென்று தொட்டுக் கொள்ளும், சரசம், சல்லாபம் மீண்டும் துரத்தும்…. துரத்தத் துரத்த நீண்டு கொண்டே போயின! அவள் கன்னிப் படுக்கையில் சரச சல்லாபமா? அவள் மிகுந்த கோபத்துடன் கட்டிலருகே சென்றாள்.

கடிகாரம் சாதாரணமாய், மிகச் சாதுவாய் மல்லாந்து கிடந்தது. இரண்டு முட்களும் பன்னிரெண்டில் ஒன்றில் ஒன்று ஆழ்ந்து, ஒடுங்கிக் கிடந்தன.

அப்படியானால் அவள் சற்று முன்னால் கண்ட காட்சி… மனப்பிரமையா?

சாந்தா டீச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை . இந்தக் கடிகாரமும் ‘வில்லன்’ தான்.

அவள் பள்ளிக்கூடத்துக்கு 9.50 பஸ்ஸில் போகவில்லை. சற்று நேரமாகி விட்டது. ‘ப்ரேயர்’ கூட்டம் முடிந்து, குழந்தைகள் வகுப்பறைகளுக்குச் சென்றுவிட்டன.

வெராந்தாவில் பள்ளிக்கூட தலைமையாசிரியையை பார்த்தாள், சாந்தா டீச்சர்.

தலைமையாசிரியை புன்னகை செய்தாள். அவள் ‘லேட்’டாக வந்திருப்பதைச் சுட்டிக் காட்டும் வகையில், விஷமப் புன்னகை செய்வது போலிருந்தது. தாமதமாகிவிட்டது என்பதற்கு வருந்த வேண்டியது அவசியந்தானா? இவளிடம் போய் தான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? பள்ளிக்கூடதலைமை நிர்வாகியிடம் கொஞ்சிக் குலாவும் இவளிடமா?

“இன்று மழைதான் பெய்யப் போகிறது….” என்றாள் தலைமையாசிரியை சிறிதுநேரம் மௌனம்.

“அசாதாரணமாக ஏதாவது நடந்தால் மழை பெய்யும் என் பார்கள். நீங்கள் இன்று ப்ரேயர் கூட்டத்துக்கு வரவில்லை ….” என்று தொடர்ந்தாள் தலைமையாசிரியை புன்னகை செய்து கொண்டே.

”முப்பது வருஷங்களாக எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், வந்து கொண்டிருக்கிறேனே, அது போதாதா?” என்றாள் சாந்தா டீச்சர். –

”என்ன சொல்லுகிறீர்கள், டீச்சர்…?” என்று திடுக்கிட்ட நிலையில் அவளை உற்றுப் பார்த்தாள் தலைமையாசிரியை.

“இனிமேல் நான் வரப் போவதில்லை …’

“ஓ.கே., நீங்கள் வரவேண்டுமென்று நான் சொல்லவில்லை, டீச்சர்… உங்களுக்கு உடம்பு சரியில்லையா?”

சாந்தா டீச்சர் பதில் கூறாமல் தன் வகுப்பறைக்குச் சென்றாள்.

சந்தைக்கடை மாதிரி இருந்த அவள் வகுப்பு அவளைக் கண்டதும், ‘கப்சிப்’ என்று அடங்கியது.

கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த சுதாகர் அவளையே உற்றுப் பார்ப்பது போலிருந்தது. அவன் மற்றைய குழந்தைகளைக் காட்டிலும் சற்று வளர்த்தியான பையன். விளம்பரத்துக்கு ஏற்ற முகம் மிகவும் புஷ்டியான சரீரம்.

அவன் எதற்காகத் தன்னை இப்படி உற்றுப் பார்க்கிறான்? புன்னகை செய்வது போலிருக்கிறதே ஏன்…?

இன்று காலை அவள் வீட்டில் நடந்ததெல்லாம் அவனுக்குத் தெரியுமோ? தொடர்ந்து புன்னகை செய்து கொண்டேயிருக்கிறான்… இவன் குழந்தையா சைத்தனா?

சாந்தா டீச்சர் மௌனமாக நின்று கொண்டேயிருந்தாள்.

வகுப்பு ஒரு அசாதாரண மௌனத்தில் ஆழ்ந்திருந்தது.

அதோ… சுதாகர் முகம் அவள் வீட்டுச்சுவர்க் கடிகாரமாக மாறிக் கொண்டு வருகிறது.

கடிகார முட்கள் ஒன்றையொன்று துரத்துகின்றன.

“என்னைக் கிண்டலா செய்கிறீர்கள்?” என்று உரத்தக் குரலில் கத்தினாள் சாந்தா டீச்சர்.

வகுப்பிலிருந்த குழந்தைகள், அவள் முகத்தைக் கண்டு அஞ்சி உட்கார்ந்திருந்தன.

அப்பொழுது தலைமையாசிரியை அங்கு வந்தாள்.

“டீச்சர், உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று தோன்றுகிறது. உழைத்தது போதும், கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா?” என்றாள் அவள்.

”கடிகாரம் நின்றுவிட்டது. ஆனால் முட்கள் ஒன்றையொன்று துரத்திக் கொண்டிருக்கின்றன” என்று உரக்கச் சிரித்தாள் சாந்தா டீச்சர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *