சலூன் கண்ணாடி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 18, 2021
பார்வையிட்டோர்: 5,867 
 

சிலநாட்களாக அந்த சலூன் கடை திறப்பதில்லை. அப்பா இவ்வளவு தாடியோடு அலைவது விரத காலங்களில் மட்டும் தான். இப்போது ஏன் சவரம் செய்யாமல் இருக்கிறார்? ஒவ்வொரு முறை கண்ணாடியை பார்க்கும் பொழுது தாடியையும், முடியையும் தடவிப் பார்த்து முகம் கோணிப் போகிறாரே ஏன்? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் என் மூளை நரம்புகளை சுண்டி இழுக்கின்றன.

அந்த பெயர் வைக்காத சலூன் கடை முதலாளி மன்னிக்கவும், சக தொழிலாளி மரித்து விட்டாராம். உங்களுக்கு தெரியுமா? என் அப்பாவின் இளமை பருவம் முதலில் இருந்து நான் சிறுவனாக இருந்து பெரியவனாகும் வரை எங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, எங்கள் ஊரின் பல குடும்பத்திற்கு ஆஸ்தான முடி திருத்தும் பணியை செய்து வருபவர் கண்ணாடி.

கண்ணாடிக்கு என்ன பெயர் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் கண்ணாடி, கண்ணாடியாகவே வாழ்ந்து மரித்துவிட்டது எத்தனை அதிசயம்?

ஊருக்குள் இருக்கும் ஒரே சலூன் கடை கண்ணாடியுடையது மட்டும்தான். ஏதோ அயலூரில் இருந்து வருகிறார்.என்ன குடும்பம்? யார் வம்சாவழி? இப்படி எந்த தகவலும் அறியாமல் வெறும் முடிதிருத்தும் தொழிலோடு ஊருக்குள் அறிமுகமானவர்.

நரம்பு கம்பியைப் போல சில்வர் நிறத்தில் தலை எங்கும் முடி வைத்திருக்கும் அவர் நன்கு எண்ணெய் போட்டு வழித்து சீவியிருப்பார் கருத்த முகம், உப்பி போன கன்னங்கள், குட்டையான ஆனால் கட்டையான உடல். எண்பதுகளில் வாங்கிய பழைய கண்ணாடியும் அதன் வலது புறத்தில் பு விழுந்த கீறலும் இன்னும் அப்படியே இருந்தது . கண்ணாடியில் இரு முனையில் துணி கயிறு போட்டு கட்டி பின்னந்தலையில் முடித்திருப்பார் .அவரை நெருங்கினாலே முடியின் வாசத்தை தவிர்த்து வேறொன்றும் வராது எப்போது பார்த்தாலும் பீடி குடித்த வண்ணமே இருப்பார். ஒவ்வொரு முறை முடி வெட்டும் போது அவர் கைகளில் இருந்து வரும் பீடி நாற்றத்திற்கு பயந்தே நான் மூக்கை பொத்திக் கொள்வேன்.

அப்பாவுக்கு எப்போதும் ஒரே மாதிரியான கட்டிங். வகிடில்லாத ஏற்றிச் சீவும் ஹேர் ஸ்டைல். தாடியை மழித்து முறுக்கு மீசை வைத்துக் கொள்வார் அப்பாவின் மீசை செம்பட்டையாக இருப்பதால் ஒவ்வொரு முறை அவருக்கு முடி வெட்டும் போதும் கண்ணாடி

“முதலாளி டை அடிங்க முதலாளி, ஆளு கமல்ஹாசன் மாதிரி ஆயிடுவீங்க” எனச் சொல்வாராம். ஆனால் அப்பாவிற்கு புது விதமான தோற்றம் தன்னை சங்கடப்படுத்தும் என மறுத்துவிடுவதுண்டு.

நானும் கூடுமானவரை கண்ணாடியிடம் தான் முடிவெட்டுவேன் . அப்பா தான் சிறு பிள்ளை யிலிருந்து என்னை கண்ணாடி கடைக்கு கூட்டி வருவார் அப்போதெல்லாம் மரத்தில் செய்த நாற்காலி தான் இருக்கும். அடிப்பகுதியில் கறையான் தின்று ,ஒரு பக்கமாக ஆடிக்கொண்டிருக்கும், அதன் மேல் உட்கார எனக்கு ரொம்ப நாள் ஆசை இருந்தது ஆனால் என்னை எப்போதும் தரையில் சம்மணம் போட்டு உட்கார வைத்து தலையை சுவரில் முட்டுக்கொடுத்து தான் முடி வெட்டி விடுவார்.கிராமத்திலுள்ள எல்லா சிறுபிள்ளைகளின் தலையையும் முட்டுக்கொடுத்து ,கொடுத்து அந்த சுவர் எண்ணைப்பசை ஏறியிருந்தது .

ஒவ்வொரு முறை என்னை சுவற்றில் சாய்ந்து முடி வெட்டும் போதும் “தலையை ஆட்டக்கூடாது, ஆட்டினால் காதை வெட்டி விடுவேன் “என மிரட்டுவார் அதற்கு அஞ்சியே நான் பயந்து போய் அசையாமல் இருப்பேன். கண்ணாடிக்கு பொதுவாகவே பயங்கரமாக கை நடுங்கும். ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் காது வெட்டு உறுதிதான். அப்படித்தான் ஒரு பையனின் காதை நடுக்கத்தில் கை தவறி வெட்டிவிட்டார் . பிறகென்ன குடும்பமே சேர்ந்து வந்து கண்ணாடியை அடி பின்னியது. ஆனால் அவரை ஊரை விட்டு துரத்தி விட மட்டும் அவர்களால் முடியாது.

நான் விடலை பையனாக இருக்கும் பொழுது பள்ளிக்கூடத்தில் அட்டாக் பயங்கர பிரபலமாக இருந்தது . ஆனால் அந்த பிரபலத்தை வைத்துக்கொண்டு என்ன செய்ய ? அப்பாவுக்கு அது சுத்தமாக பிடிக்காது. ஒரு தடவை அப்படித்தான் கண்ணாடியிடம் கெஞ்சிக்கூத்தாடி வெட்ட சொன்னேன் அவரோ

“தம்பி உங்க அப்பா ரொம்ப கோபக்காரர், அப்புறம் என்னை வந்து சத்தம் போடுவார்” என்றார்.

ஆனால் நான் விடாபிடியாக பத்து ரூபாய் சேர்த்து தருகிறேன் என சொல்லி அட்டாக் அடித்தேன். அப்போதுதான் புதிதாக முடியெடுக்க மிஷின் வந்திருந்தது. கண்ணாடி அதை வைத்து என் தலையை சுற்றிலும் ஒரு அரக்கி அரக்க முதன் முதலாக மிஷினில் வெட்டிய சுகம் அலாதியான போதையை தந்தது .

முடிவெட்டி விட்டு வீட்டுக்குப் போனால் அப்பா என்னை பார்த்து கோபப்பட்டு அப்படியே என் தலையை பிடித்து இழுத்துக்கொண்டு போய் கண்ணாடியிட்ம் விட்டு ஒட்ட வெட்ட சொன்னார். என் தலை பரதேசி பட அதர்வாவை போல் அலங்கோலமானது. அப்போதெல்லாம் முடி வெட்ட அப்பா பத்து ரூபாய் , இருபது ரூபாய் என தருவார் . பொதுவாக சவரம் செய்து முடிவெட்ட அப்போதெல்லாம் 20 ரூபாய் 30 ரூபாய் 30 ரூபாய் தான் இருக்கும் ஆனால் அதிலும் சிலர் இப்போது வரை அதே காசுக்கு முடி வெட்டுவார்கள்.

“என்ன கண்ணாடி 100 ரூபாய் கேட்கிற ? நம்ம எல்லாம் அப்படியா முடிவெட்டுனோம் அந்த காலத்துல “

“என்னங்க முதலாளி எல்லாரும் இப்டியே சொன்னா எப்டி? கடை வாடகைக்கு கூட கட்டுபடியாக மாட்டிங்கிது. சிட்டி பக்கமெல்லா அதிகமாக வாங்குகிறாங்க நான் கம்மியா தானா கேட்கிறேன்” என்பார் உடனே ஊர்க்காரர்கள்

“என்ன கண்ணாடி பேச்சு பலமா இருக்கு ,சங்க பேச்செல்லாம் இங்க பேசுன கடையே இருக்காது “என மிரட்டுவார்கள். அவர்கள் தரும் 40 ரூபாய்க்கு நாறிப்போன அக்குள் முடியை வேறு சிரைக்க வேண்டும்” என புலம்பிக் கொள்வார்.

காலம் மாறி விட்டாலும் கிராமத்திலிருக்கும் மனிதர்கள் மாறவில்லை அப்படியே பழைய காலத்தைப் போலவே வாழ நினைக்கிறார்கள் என அவருக்குத் தோன்றியது .

நான் கல்லூரிக்கு போனபிறகு ஆரம்ப காலத்தில் வெளியூர்களில் முடி வெட்டி கொண்டு இருந்தேன் ஆனால் என்றாவது ஒருநாள் கண்ணாடியிடம் போவேன் நாம் எப்படி சொல்கிறோமோ ..அப்படி அவரால் அப்படியே முடி வெட்டி விட முடியும் .

ஊருக்குள் கடைகள் பெருக்கம் கூடியது தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க கடைகள் கண்ணாடிகளால் மினுக்கியது. ஆனால் நம்ம கண்ணாடி மட்டும் அப்படியே இருந்தார். இப்போதும் அதே கண்ணாடிதான்.

பழைய எப்எம் ரேடியோவில் கொடைக்கானல் எப்எம் இல் ஏதாவது பாட்டு ஓடும் . அரை முழுவதும் முடிகள் சிதறிக்கிடக்கும் சுவரில் போர்த்தியிருந்த நிலைக்கண்ணாடி ஒரு பக்கம் கோணலாய் சாய்ந்து தொங்கும் கண்ணாடிக்கு பழைய வாடிக்கையாளர்களே போதுமானதாக இருந்தது. அவர்களை வைத்தே காலத்தை தள்ளினார் . அன்று எப்போதும் போல எனக்கு முடி வெட்டி விட்டார்.

“என்ன மைனர் வெளியூர் போனதும் நம்மல மறந்துடீங்க ? முன்ன மாதிரி கடைப் பக்கம் வருவதில்லையே “ கண்ணாடியின் கைகள் இப்போது ஏகத்திற்கு நடுங்கியது. முடியை வெட்டும் பொழுது நடுங்கும் அவர் விரல்கள் எனக்கு பயத்தை உண்டாக்கியது. நான் மீண்டும் அந்த சிறுவனைப் போல் இருக்க கண்களை மூடிக்கொண்டு பிராத்தனை செய்தேன் ஆனால் அந்த வயதிலும் கண்ணாடி தெளிவாக வெட்டி விட்டார் . பிறகு டீ வாங்கித் தரச் சொன்னார்.

“வியாபாரம் இல்லையா… இளவட்ட பயிலுகளும் பக்கத்து கடையில தான் முடி வெட்றாங்க உங்க அப்பாரு மாதிரி பழைய கஸ்டமர்கள வச்சு தான் பொழப்பு ஓட்டுறே “

“ஏன் இந்த வயசுல வேலை செய்றீங்க? உங்களுக்கு பிள்ளைங்க இல்லையா?”

“நான் கல்யாணம் எல்லாம் பண்ணலையா, அப்படியே காலத்தை ஓட்டிட்டேன், இந்த வருமானத்தில கல்யாணம் , குழந்தை குட்டிகனு வச்சு மேய்க்க முடியுமா ? சரி சாமி உங்க பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி நம்ம கடைக்கு வந்து முடி வெட்ட சொல்லுங்க, அவங்க சொல்ற மாதிரியே நான் வெட்டி விட்றேன்.” பேசிக்கொண்டே என் நாடியை இடதும் வலதுமாக திருப்பி கிருதாவை பார்த்தார். திடீரென சிரித்தவாறே

“எப்டி முதலாளி வயசானலும் வேலை சுத்தமா இருக்கும்” எனச் சிரித்தார். அது தான் நான் பார்த்த அவரின் கடைசி சிரிப்பு. பிறகு அந்த சிரிப்பை காண முடியவில்லை என்னதான் அப்பா கண்ணாடியை திட்டினாலும் அவனில்லாமல் இனி எப்படி முடி வெட்டுவது என்ற எண்ணினார்

கண்ணாடிக்கு ஹார்ட் அட்டாக் வந்து உயிரிழந்திருக்கிறார். மருத்துவ செலவுக்கு காசில்லை, சரியான வைத்தியம் இல்லை ஆள் சோலி முடிந்தது. கண்ணாடி செத்த செய்தி ஊருக்குள் தெரிந்து இருந்தது. ஆனால் யாரும் தெரியாதது போல நடந்து கொண்டார்கள் அவர்களின் ஒரே கவலை கண்ணாடி இல்லாமல் இனி எப்படி முடி வெட்டுவது என்பது மட்டும்தான்.

கண்ணாடி வீட்டிலேயே இறந்து கிடந்திருக்கிறார். செத்து மூன்று நாளுக்குப் பின்பு தான் அவரது உடலை இறுதிச்சடங்கு செய்திருக்கிறார்கள் கண்ணாடியின் இறுதிச் சடங்கும் வெறும் 10 பேரால் நடந்தது. அதுவும் அவர்கள் குல சமுதாயத்தின் அடிப்படை கடமை என்பதால் நடந்தேறியது. இத்தனை காலமாய் இத்தனை மனிதர்களுக்கு தலையை பழுது பார்த்த ஆத்மா ஆகாயத்தை நோக்கி உயரப் பறந்தது. சமாதியை ஒட்டி கடையில் இருந்த துணி முட்டைகள் எரிக்கப்பட்டன எரியும் முடிகளின் வெடிப்பு சத்தம் விட்டு விட்டு கேட்டது. அந்த ஓசை, அந்த இசை, அந்த சிரிப்பு நிச்சயமாக அது கண்ணாடியே தான்.

Print Friendly, PDF & Email

1 thought on “சலூன் கண்ணாடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *