கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,421 
 

(1963 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சித்திரை விடு தலையில் நான் மலைநாடு சென்றேன். உல்லாசப் பயணி.

நான் அழகாகத்தான் இருப்பேன் என்று அடம் பிடித்து நிற்கும் மலை நாட்டின் குமரியழகை என் வாலிப வயதில் ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். மடிப்பு மடிப்பாய், அலை அலையாய் நெளிந்து செல்லும் மலைத் தொடர்களையும் வேலிக்கு மேலாய் எறியப்பட்ட சாம்பற் புகாராக மலையுச்சியிற் படியும் மேகங்களையும், பசுமை படர்ந்து தோன்றும் பள்ளத்தாக்குகளையும், மலையுச்சியிலிருந்து உருக்கிய வெள்ளியாய் ஓடி வரும் மலையருவிகளையும் இருபது ஆண்டுக்களுக்குப் பின்னால் மீண்டும் காணப் போகிறேன் என்ற குதூகலத்தோடு பதுளை பஸ்ஸிற் பிரயாணஞ் செய்தேன்,

பசறையை அடைந்து மீண்டும் வேறோர் பஸ்பிடித்து மெட்டி கஹாதென்னைக்குச் சென்றபோது சாயந்தரம் ஐந்து மணயாகி விட்டது.

அங்கு அரசாங்க மருத்துவமனையிற் பணிபுரியும் என் தம்பி என்னை மூன்று மணிககே எதிர்பார்த்திருந்தான்.

‘லுணுகலையில் மத்தியானச் சாப்பாட்டிற்காக முக்கால் மணிக்குமேல் பஸ் தாமதித்து விட்டது. பசறையலிருந்து அடுத்த பஸ் பிடித்து இங்கே வர நேரமாகி விட்டது’ என்று நான் விளக்கங் கொடுத்தேன்.

எனக்குப் பிரயாண அலுப்பே தோன் றவில்லை. கடல் மட்டத்திலிருந்து நாலாயரம் அடி உயரத்திலிருந்த அவ்வூரின் இதமான குளுமையிலும், தூரத்தே உயர்ந்து தோன்றும் நமுனகல மலைத்தொடரின் அழகிலும், வைத்திய சாலைக் குவார்டர்ஸுக்கு முன்னால் தன் படு வனாகப் பூத்துக்கிடக்கும் மலர்களின் கொள்ளை வனப் பிலும் நான் என்னையிழந்திருந்தேன்.

அப்போது தோளிலே கவ்வாத்து வெட்டிக் காய்த்து போள தேயிலை மிலாறுகளைச் சுமந்துகொண்டு ஒருவன் வந்தான். அவனுக்கு நாற்பது வயது இருக்கலாம். சற்றுக் குள்ளமான உருவம். வெற்றிலைக் காவியேறிய பல் வரிசை.

என் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்த அவன் தேயிலைச் சுள்ளிகளைக் கீழே போட்டுவிட்டு பெரிய அய்யா வந்திற்றீங்களா? லுணுகலயிலிருந்து வர இம்மாம் புட்டு நேரமா? இந்த றோட்டால செக்கப் போய்ப் பணிய எறங்கினா லுணுகல வந்திரிச்சு. தண்ணிய அடுப்பில வெச்சிற்று சூடாக மின்ன அங்க போய் இனிப்பு வாங் கிற்று வந்தி ரேலும். கிட்டத்தான் இருக்கு” என்றான்.

என் தம்பியின் குழந்தைகள் இருவரும் அவன் முழங்காலைச் சுற்றிப் பிடித்துக் கொண்டு ‘பாப்பா பாப்பா’ என்று ஆனந்தக் கூத்தாடினார்கள். அவன் ஆள் மாறி ஆளாக அவர்களைத் தூக்கிக் கொண்டான்.

என் தம்பி அவனை எனக்கு அறிமுகப்படுத்தினான். இங்கேயுள்ள எஸ்ரேற்றில் கூலி. தனிக்கட்டை. ஒரு நாள் குவார்ட்டர்ஸுக்குப் பசகத்தில புல்லு வெட்ட வந்தான். என் பிள்ளைகளைக் கண்டு பாப்பா, பாப்பா என்று கொஞ்சி அவர்களோட நல்லாச் சேந்திட்டான். இப்ப உயத்தில இருக்கிற அவரை அக்கா வீட்டுக்கும் போறல்ல. என்னோட தான் இருக்கான். எப்பவாவது வேலைக்குப் போவான். மத்த நேரத்தில் வீட்டில எடுபிடி வேல செய்வான், இவனால எனக்குப் பெரிய உதவி. நான் ஊருக்கு வரக்குள்ள இவனையும் கூட்டிக்கொண்டு வருவன்.”

“உன் பேரென்ன?” என்று அவனைக் கேட்டேன்.

“கதிர்வேலுங்க. ஆனா ஐயாவும் அம்மாவும் பாப்பான்னுதான் கூப்பிடுறாக.”

“பாப்பா” நல்ல பெயர் தானே. பாரதியாருக்குக், கண்ணன் சேவகனாகக் கிடைத்ததுபோலப் பாப்பா, தம்பிக்குச் சேவகனாகக் கிடைத்திருக்கிறான் என்று எண்ணிக்கொண்டே. “லுணுகலைக்கு இங்கிருந்து முப்பது மைல்களுக்கு மேலிருக்கும். நீ கிட்டத்தான் இருக்கு என் சிறாய். நாளைக்கு என்னை அங்க கூட்டிக்கொண்டு போறியா?” என்று கேட்டேன்.

“சரிங்கய்யா. வெள்ளாப்பில போவம்” என்றான் பாப்பா.

விடிந்தது. எனக்கு வெளியிலே சென்று குற்றாலத்துத் தேனருவியாகச் சொட்டும் சாரலிற் குளிக்க ஆசை’.. ஆனாற் தம்பியின் அந்தஸ்து என்னை அதற்கு அனு மதிக்கவில்லை. வேண்டா வெறுப்பாகக் குளியலறையைப் பூட்டிக்கொண்டு குளித்தேன். சாப்பாடானதும் பாப்பா வுடன் லுணுகலைக்குப் புறப்பட்டேன்:

மலையுச்சியிலிருந்து கீழே செல்லும் படிகளிலிறங்கி மெயின் வீதியை அடைத்து, வைத்தியசாலைக்கு முன் னாலிருந்த பெட்டிக் கடையில் பாப்பாவுக்கு வெற்றிலை பாக்கு, புகையிலை ஆகியவைகளைத் தாராளமாகவே வாங்கித் தந்தேன். எனக்கு ஒரு பக்கற் சிகரெட்டும் வாங்கினேன். மெயின் வீதி வழியே றோபெரி எஸ்ரேற் பக்கமாகப் பாப்பா என்னை வழிநடத்திச் சென்றான்,

பாதை வளைந்து வளைந்து உயர்ந்து சென்றது. பாதையின் இருமருங்கிலும் மலையகத்துப் பெண்கள் தலையிலிருந்து முதுகுப் பக்கமாகக் கூடையைத் தொங்க விட்டுக் கொண்டு நிரை நிரையாக நின்று கொழுந்து கிள்ளிக்கொண்டு இருந்தார்கள் இரண்டு இலைகளும் ஒருமுகையுமாகக் கைநிறைந்த கொழுந்துகளைக் கணத் துக்குக் கணம் கூடையிற் போட்டுக்கொண்டே சம்பாஷித்தபடி கொழுந்து பறித்துக்கொண்டு இருக்கும் அக்காட்சியில் லயித்தேன். இடைக்கிடை நான் இருக் கிறேன் என்பதைக் காட்டிக் கொள்வதற்காகக் கறுப்புக் கோட்டுடனும் கட்கத்திற் குடையுடனும் நின்ற கங்காணி’ ஏதோ அதட்டிச் சொல்லிப் பெண்களை வேலை வாங்கிக் கொண்டிருந்தான். இன்னோர் திக்கிற் சிள் வண்டின் இரைச்சலாய்த் தொனி செய்யும் தெளிப்பான் கருவிகளில் – இருந்து தொழிலாளர்கள் தேயிலைச் செடிக்கு மருந்து தெளித்துக்கொண்டு இருந்தார்கள். மலையுச்சியிலே நான்கு மாடிகளைக் கொண்ட தேயிலைத் தொழிற்சாலை யின் உறுமல்!

மஞ்சு படிந்த அம்மலை மேட்டிலே சுமார் ஒரு மைல் தூரம் நடந்திருப்போம். பாப்பா அந்த வளைவிலே தரித்து நின்றான்.

அவன் நின்ற இடத்திலே ஒரு பரந்த கல்’. அக்கல்லிலே மலையகப் பூக்கள் சிவப்பும், வெள்ளையும், ஊதாவும் மாகக் குவிந்து இருந்தன. கல்லின் பின்புறத்திற் சூலம் ஒன்றிருந்தது.

அது வைரவர் கோவிலா, சிவன் கோவிலா என்று எனக்குப் பிடிபடவில்லை. பாப்பா தன் மடியிலிருந்த பூக்களை எடுத்துச் சிலவற்றை என்னிடம் தந்துவிட்டு மீதியைக் கல்லிலே வைத்து கும்பிட்டுத் தலையிற் குட்டிக் கொண்டான். நானும் என் கையிலிருந்த பூக்களைக் கல்லில் வைத்துக் கும்பட்டேன்.

கும்பிட்டு முடிந்ததும் பாப்பா வெற்றிலை போட்டுக் கொண்டான். நான் சிகரட் பற்ற வைத்துக்கொண்டேன். நிமிர்ந்து பார்த்தபோது கல்லுக்குச் சில யார்கள் தூரத்தில் அம்புக்குறியோடு றோபரி எஸ்ரேற்’ என்று ஆங்கில அறிவிப்புப் பலகையைக் கண்டேன்.

“வெற்றிலை போட்டு முடிந்த பாய்பா வேட்டியை மடிச்சுக் கட்டுங்க ஐயா” என்று கேட்டுக் கொண்டான்.

நான் வேட்டியை முழங்கால்களுக்குமேல் மடித்துக் கட்டிக் கொண்டேன்.

பாப்பா தன் மடியிலிருந்த சவர்க்காரத்தை எடுத்து றோட்டோரத்துப் புல்லிற் படர்ந்திருந்த பனிநீரிற் தொட்டு என் பாதங்களிலிருந்து முழங்கால்வரையும் பூசத் தொடங்கினான். “போற வழியில அட்டங்க இருக்கும். இதப் பூசினாக் கடிக்காதுங்க ஐயா” என்று தன் செய்கைக்கு விளக்கங் கொடுத்துத் தன் பாதங் களிலும் கால்களிலும் சவர்க்காரத்தைப் பூசிக்கொண் டான் பாப்பா.

புல்லட்டைகளுக்குப் பாதுகாப்புத் தேடி முடிந்ததும் பாப்பா தெற்காக மலைச் சரிவிலிறங்கி நடக்கத் தொடங் கினான். அவனை ஓட்டமும் நடையுமாகப் பின் தொடர்ந்தேன்.

மலையுச்சியில் இருந்து கீழிறங்கிச் சென்ற அந்த ஒற்றையடிப் பாதையில், ஆளுயரப் பத்தனைப் புற்கள் நெருங்கியிருந்தன. அந்தப் புற்களினூடே பாதை கிடு கிடெனக் கீழிறங்கிக் கொண்டிருந்தது. முன்னாற் சென்ற பாப்பா எந்தச் சிரமமுமின்றி அந்தப் பாதையிற் போய்க் கொண்டிருந்தான். நான் கல்லிலே தடுக்கிச் சுதாரித்து நிமிர்ந்து அவன் பின்னால் ஓடிக்கொண்டு இருந்தேன். இருபக்கமும் நெருங்கியிருந்த புற்களின் சொரசொரப் பான இதழ்கள் மேனி முழுதும் உ.ராய்ந்தன. நான் சிரமத்தை வெளிக்காட்டாது பாப்பாவைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

கைக்கடிகாரம் பத்து மணியைக் காட்டியபோது நாங்கள் சமதரைக்கு வந்து விட்டோம்.

பாப்பா சொன்னான். “லுணுகல வந்திட்டுதுங்க. இந்த லெக்கில நடந்து, அந்த முக்கால திரும்பினா லுணுகல தெரியுமுங்க. ஐயாக்குக் களப்பாயிருக்கா?”

“சே! எனக்குக் களைப்பில்லையே” என்று அவனைப் பாராமலே பதில் சொன்ன நான், எதிரே பீலியிற் குளித் துக்கொண்டு இருப்பவளையே பார்த்துக்கொண்டு இருந் தேன். கருங்கூந்தல் தோளிலே படர்ந்து பிருஷ்ட பாகம் வரை நீண்டு கிடந்து நீர் சொட்ட, நனைந்து உடலோடு ஒட்டிய குறுக்குக் கட்டை மீறிக்கொண்டு இளமைக் குவடுகள் சாயாத கொம்புகளாய்ப் பளிச்சிட, ஜம்புப் பழமாய்ச் சிவந்து கிடந்த தோள்களில் நீர்த்திவலைகள் முத்துக்களாய் ஜ்வலிக்க நீராடிக்கொண்டு நின்ற அந்தப் பெண்ணையே தான் பார்த்துக்கொண்டு இருப்பதை அவ தானித்த பாப்பா, “கள்ளு விக்கற பொண்ணுங்க ஐயா” என்றான்.

“கள்ளா? இங்கு தென்னைமரத்தையே காணல்ல. பனையும் இல்ல. கள் எங்கிருந்து வரும்” என்றேன் நான்.

“கித்துள் கள் ஐயா! நீங்க குடிச்சிருக்கீங்களா?” “இல்லியே, கித்துள் கள்ளைக் கண்டதேயில்லை”

“குடிப்பீங்களா ஐயா?”

“அதுக்கென்ன குடிச்சுப் பாப்பமே.”

“சரி வாங்கையா” என்று சொல்லிக்கொண்டே பாப்பா முன்னால் நடந்தான். நான் பின்னால் போய்க் கொண்டு இருந்தேன்.

பீலியிற் குளித்துக்கொண்டு இருந்த பெண், தன் குளியலை முடித்து உடையணிந்து கொண்டு பள்ளத்தின் ஊடே ஒற்றையடிப் பாதையில் நடந்துகொண்டு இருப் பது என் கண்ணிற் பட்டது.

முன்னே நடந்த பாப்பா ஒரு குடிசையடியிற் தரித் தான். நான் என் சண்டிக் கட் டை அவிழ்த்து முகத்தைத் துடைத்துத் தலையையும் வாரி என்னைச் சீர்ப்படுத்திக் கொண்டேன்.

குடிசைக்குள்ளிருந்து அந்தப் பெண் வந்தாள்.

குளித்துக்கொண்டு இருந்த அதே பெண்.

மலை நாட்டின் சௌந்தர்யம் எல்லாமே ஒன்று திரண்டு, தன் கருங்கூந்தல் தோளிற் புரள அவள் நின்று கொண்டு இருந்தாள். ‘அழகானவை என்றுமே ஆனந்தந் தான்’ என்ற ஆங்கிலக் கவியின் அடிகளை நினைந்துக் கொண்டே நான் – அவளைப் பார்த்துக்கொண்டு இருந் தேன்.

பாப்பா அவளிடம் கள் தரும்படி கேட்கிறான் சிங்களத்தில்.

அவள் உள்ளே சென்று இரண்டு ‘பைந்த்’ கிளாசு களிற் கள்ளை நிரப்பிக்கொண்டு வருகிறாள்.

நான் கிளாசை வாங்குகையில் அவள் விரல்களையும் வேண்டுமென்றே தீண்டுகிறேன். சிரிக்கிறாள்! கொல்லும் சிரிப்பு! கள் இனித்துக் கிடக்கிறது! அது என் மனதின் இனிமையா? கள்ளின் இனிமையா? இரண்டாம் கிளாஸ். மூன்றாம் கிளாஸ், காசைக் கொடுத்துவிட்டு உல்லாசப் பயணியின் உற்சாகத்தோடு பாப்பாவின் பின்னால் நடக்கிறேன். சில நிமிட நடையின் பின்னால் லுணுகல கடைத் தெருவை அடைந்து விட்டேன். கித்துள் கள்ளின் கிறக்கத்தில், அதை வார்த்துத் தந்த அப்சரஸியின் மயக்கத்தில் நான் லுணுகல கடைத் தெருவிற் சுற்றுகிறேன்.

திடீரென மட்டக்களப்பு செல்லும் பஸ் கடைவீதியில் வந்து தரிக்கிறது. பஸ்ஸிலிருந்து ஒருவர் இறங்குகிறார். அவர் என் அயல் வீட்டுக்காரர். ஹாஜியர்! வியாபாரி!

அவரைக் கண்டதுமே என் போதை-சௌந்தரிய போதையுந்தான்-மறைந்தே விட்டது!

என் உடலெங்கும் வெயர்த்துக் கொட்டியது. அவர் என்னைக் காணாதிருக்க வேண்டுமே என்ற தவிப்போடு நான் கடைத் தெருவில் தலைமறைவாகிறேன்.

– சுதந்திரன் 1963

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *