கோபத்தை கட்டுப்படுத்து!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2019
பார்வையிட்டோர்: 9,327 
 

பேருந்தின் அந்த மதிய நேரத்து பயணம் சுகமான தூக்கத்தை வரவழைப்பதாக இருந்தது. அதுவும் வளைந்து வளைந்து அந்த மலை மேல் ஏறிக்கொண்டிருந்த பேருந்து அளவான வேகத்தில் சென்று கொண்டிருந்ததில் அப்படியே தூங்கி விட்டேன் போலிருக்கிறது.

சட்டென விழிப்பு வந்து பார்த்த பொழுது பக்கத்தில் இருந்தவர் தோளின் மீது சாய்ந்து தூங்கி விட்டேன் போலிருக்கிறது.அது மட்டுமல்லாமல் வாயில் இருந்து எச்சிலும் அவர் சட்டையில் பட்டிருந்த்து. எனக்கு வெட்கமாக போய்விட்டது.சே..அப்படி என்ன தூக்கம் பாவம் எவ்வளவு நேரம் அவர் மேல் தூங்கினேனோ. ஆனால் அவர் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் பரவாயில்லை என்று சொன்னதும் எனக்கு வெட்கம்தான் அதிகமாகியது. மன்னிச்சுங்குங்க சொல்லிவிட்டு அவரை சற்று உற்று பார்த்தேன்.

வயது ஐம்பதுக்குள் இருக்கலாம், மெல்லிய கதர் ஆடைகள் அணிந்திருந்தார். கண்களில் ஒரு தீட்சயம் தெரிந்தது. நேர் பார்வையாக வண்டி செல்லும் பாதையை பார்த்து கொண்டிருந்தார். நான் மெல்ல கணைத்து சார் வால்பாறைக்கா? இது பேச்சை வளர்த்த கேட்கப்படும் கேள்வி என்று புரிந்தது. ஆமாம், மென்மையாக சொன்னவர். மீண்டும் தன் மெளனமான நிலைக்கு சென்றார். நான் விடவில்லை, சார் நானும் வால்பாறைக்குத்தான் செல்கிறேன், சொல்லிவிட்டு, அங்க பள்ளிக்கூடத்துல ஆசிரியரா இருக்கேன், கொஞ்சம் குரலில்

பெருமை கலந்ததாக தோன்றியது.

அப்படீங்களா, என்னை நோக்கி திரும்பியவர் கண்களில் மரியாதை தெரிந்தது. அப்பொழுது எதிர் சீட்டில் இருந்த பெண்ணின் கையில் இருந்த குழந்தை அழுதது.

ஸ்..ஸ்..அழுகாத பாப்பா, அம்மாவின் குரலில் கண்டிப்பு, அதைக்கேட்டவுடன் அழுகை அதிகமானது. அந்த பெண் குழந்தையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டாள்.தா..தா..முதுகை தட்டிக்கொடுக்க அந்த குழந்தை சமாதானமாகாமல் அழுகையை அதிகப்படுத்தியது.இப்பொழுது பேருந்தில் இருக்கும் அனைவரும் குழநதையை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த பெண் இப்பொழுது கோபம் கொண்டிருந்தது குழந்தையின் முதுகை தட்டுவதில் இருந்தே தெரிந்தது. குழந்தை சமாதானாமானதாக தெரியவில்லை.

என் பக்கத்தில் இருந்தவர் இங்க குடுமா குழந்தையை வாங்கியவர், அதனை மெல்ல சாமாதானப்படுத்த மழலை குரலில் குழந்தையை சமாதானப்படுத்த முயற்சித்தார். பத்து நிமிடத்தில் குழந்தை சமாதானம் ஆனது மட்டுமல்லாமல் அப்படியே அவர் தோளில் தூங்கிவிட்டது.இந்தாமா என்று குழந்தையை அந்த பெண்ணின் கையில் கொடுத்தார். அந்த பெண் ரொம்ப நன்றிங்க ஐயா, சொல்லி குழந்தையை வாங்கி தன் தோளில் போட்டு கொண்டாள்.

எனக்கு ஆச்சர்யம், அது எப்படி சார்? குழந்தை உங்க கையில வந்த உடனே தூங்கிடுச்சு. அவர் மெல்லிய புன்னகையுடன், குழந்தைகளை கோபப்படாம கவனிச்சாலே அமைதியாயிடும்.

நீங்க குழந்தைங்களோடவே இருந்துகிட்டு இருந்தா இந்தளவுக்கு பொறுமை வராது.உண்மைதான் தலையாட்டியவர், நம்மையும் மீறி சில நேரங்களிலே குழந்தையை கடுமையா பேசிடுவோம். இருந்தாலும் அன்பா இருக்கணும்னு வைராக்கியமா மனசுக்குள்ள நினைச்சுகிட்டு இருந்தா கோப்படறதை கட்டுப்படுத்தலாம்.

நான் அவரிடம் என்னால் கோபத்தை கட்டுபடுத்த முடியறதில்லை சார். சில நேரங்களிலே எதிரில இருக்கறவங்களை கடுமையா பேசிடறேன். அவர் மெல்ல புன் சிரிப்புடன் அப்படி கோபம் வர்ற நேரத்துல அந்த இடத்துல நிக்க கூடாது, அந்த இடத்தை விட்டு எழுந்து போயிடணும். சார் நம்மளை எதிரில இருக்கற நம்முடைய அதிகாரி கண்டபடி திட்டிகிட்டு இருக்கும்போது வர்ற கோபத்தை கட்டுப்படுத்திக்கத்தானே வேண்டியிருக்கு.சொல்லிவிட்டு சிரித்தேன்.உண்மைதான் அப்ப உங்க மன்நிலையில இது “நான் இல்லை” என்ற எண்ணத்துல அங்க நின்னிங்கன்னா உங்களுக்கு கோபம் வருவது குறையும்.

இந்த ஐடியா கூட நல்ல இருக்கே. முயற்சி பண்ணி பார்க்கணும்.நான் கூட பாருங்க உங்க தோளுல சுகமா தூங்கிட்டு வந்திருக்கேன், அந்த இடத்துல நான் இருந்திருந்தா எனக்கு கடுமையான கோபம் வந்திருக்கும், இந்நேரம் என் மேலே படுத்து தூங்கினவங்க கூட சண்டைக்கு போயிருப்பேன்.நீங்க எவ்வளவு அமைதியா இருந்தீங்க.

அவர் சிரித்துக்கொண்டே இன்னுமா அதை நினைச்சுகிட்டு இருக்கறீங்க, நான் அப்பவே அதை மறந்துட்டேன்.

எங்கள் பேச்சு சுவாரசியத்தில் பேருந்து ஊர் வந்து சேர்ந்த்தது கூட தெரியவில்லை. வண்டி நின்று எல்லோரும் இறங்கிகொண்டிருப்பதை கண்டவுடன் தான் உணர்வு வந்து பார்த்தீங்களா பேச்சு சுவாரசியத்துல ஊர் வந்தது கூட மறந்துட்டோம், சொல்லிவிட்டு நான் பின் பக்கமாக இறங்க வந்தேன், இரு போலீஸ்கார்ர்கள் எதிரில் வர நான் அவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி நின்றேன். அவர்கள் என்னை தாண்டி என் அருகில் இருந்தவரின் பக்கம் போய் நின்று போலாமா? என்று கேட்கவும் அவர் எழுந்து அவர்களுடன் முன் வாசல் வழியாக இறங்குவது தெரிந்தது.

எனக்கு திகைப்பாகி விட்டது. என் அருகில் உட்கார்ந்து வந்தவர் போலீஸ் கைதியா?

மெல்லிய திகைப்புடன் இறங்கி அங்கிருந்த ஒருவரிடம் அவரை எதுக்கு போலீஸ் கூட்டிட்டு போகுது என்று கேட்டேன்.

“இங்க கோபத்துல யாரையோ ஒருத்தரை வெட்டிட்டு”, கோயமுத்தூர் ஜெயிலில இருக்காரு. கேஸ் விசயமா இங்க கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *