கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 2, 2012
பார்வையிட்டோர்: 7,228 
 

வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கொள்கையை மட்டும் சீரியசாக நான் கடைபிடிக்கத் தயார். அந்த கொள்கைக்காக என் உயிரையும் கொடுக்கத் தயார். அந்த கொள்கையை என் நாடி நரம்புகளில் எல்லாம் ரத்தமாக ஓடவிடத் தயார். நான் அந்தக் கொள்கையாகவே மாறத் தயார். ஆனால் அந்த கொள்கை என்னை வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு போய்விட வேண்டும். ஏனெனில் வாழ்க்கையை இதற்கு மேல் குழப்பிக் கொள்ள முடியவில்லை. ஒன்றுமே புரியமாட்டேன் என்கிறது. அடுத்து என்னசெய்வது. என்ன செய்தால் சரியாக இருக்கும். ஒன்றுமே புரியவில்லை. நாளை எப்படி இருக்கும். நாளை நான் வெற்றி பெறுவேனா? இல்லை தோற்றுவிடுவேனா? நாளை வெற்றி பெற வேண்டுமானால் இன்று எதைச் செய்ய வேண்டும். என்னால் எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொள்ள முடியாது. ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான் என்னால் கவனம் செலுத்த முடியும். அதனால் ஒரே ஒரு கொள்கை வேண்டும். அப்படிப்பட்ட கொள்கை ஏதேனும் உண்டா? அப்படி பிடித்துக் கொள்கிற மாதிரியான கொள்கை ஏதேனும் இருக்கிறதா? கூறு என வெகுநேரமாக தன் மனசாட்சியிடம் கேட்டுக் கொண்டிருந்த சண்முகம் (சுருக்கமாக சாம்) ஆழமாக ஒரு கொட்டாவியை விட்டுவிட்டு சரியாக 25 வினாடிகள் கழித்து குறட்டை விட ஆரம்பித்தான்.

சென்ற வாரம் சுகர் 350ஐத் தாண்டிவிட்ட நிலையில், இரவில் சரியாக தூக்கம் வராமல் துன்பப்பட்டுக்கொண்டிருந்த சாமின் அலுவலக உயரதிகாரி சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தபோது இவ்வாறு கூறினார்.

“படுத்தவுடன் தூக்கம் வருவதெல்லாம் ஒரு வரம். அந்த வரம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை. இளைஞர்களாகிய உங்களுக்கு அப்படி ஒரு தூக்கம் வருகிறதென்றால் நீங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். நன்றாக தூக்கத்தை அனுபவியுங்கள்” என்று கூறியிருந்தார்.

(குறிப்பு : அவரது சம்பளம் 38 ஆயிரம் ரூபாய்)

சாமின் கவலைக்கு காரணம், கடந்த 3 ஆண்டுகளாக அவனது சம்பளம் 4 ஆயிரத்துக்கும், 5 ஆயிரத்துக்கும் இடையிலேயே ஊசலாடிக்கொண்டிருந்ததுதான். வருடத்திற்கு 250 ரூபாய் சம்பவள உயர்வு கொடுக்கும் அலுவலகம் எங்கிருக்கிறது என்று டி.என்.பி.எஸ்.சி. க்ரூப் 2 தேர்வில் கேள்வி கேட்டால் பல பேருக்கு விடை தெரியாமல் போய்விடும். ஆனால் சாம் மட்டும் அதற்கு சரியான பதில் எழுதி விடுவான். அது அவனது அலுவலகம் தான். இந்த வருடம் சிறப்பு மிகுந்த 5 ஆயிரத்தை அவன் எட்டப்போகிறான். அதற்கு இப்பொழுதே அவனது அறை நண்பர்களான, 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பாலுவும், 16 ஆயிரத்து 500 ரூபாய் கவர்ன்மெண்ட் சம்பளம் வாங்கும் தேவாவும் ட்ரீட் கொடுக்க வேண்டும் என்று கட்டளை பிறப்பித்து விட்டார்கள். அவனால் இந்த உலகத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை. எப்படி இதெல்லாம் நடக்கிறது. இந்தியாவிடம் அமெரிக்கா கடன் வாங்குவது போன்று கனவெல்லாம் வருகிறது என்று கனவிலேயே சிக்மெண்ட் பிராய்டிடம் ட்ரீட்மெண்ட் எடுப்பது போல் கனவு வருகிறது. இந்த கனவுக்கு நிஜத்தில் அவரால் என்ன விளக்கம் கொடுக்க முடியும் என்கிற வெட்டித்தனமான யோசனையால் ஏதேனும் 5 பைசா பிரயோஜனம் இருக்கிறதா? என்று ஊர் மக்கள் எல்லாம் கைகொட்டி சிரிப்பது போல் பிரமை வேறு தோன்றுகிறது. அதுசரி “கைகொட்டி சிரிப்பார்கள், ஊரார் கைகொட்டி சிரிப்பார்கள்” என்கிற பாடலை அவ்வளவு “ரா” வாக ஏன்? பாலசந்தர் எடுத்துத் தொலைத்தார். தினசரி தன்னைச் சுற்றி 4 பேர் அவன் கண்களுக்கு தெரிவது வழக்கமாகி வருகிறது.

ஒவ்வொருநாள் இரவும் அவன் தன்னைத்தானே கேட்டுக் கொள்ளும் கேள்விதான் இது. ஒரே கொள்கை, அந்த கொள்கையை உயிரைக் கொடுத்தாவது கடைபிடிக்கத் தயார். ஆனால் அந்தக் கொள்கை வாழ்வின் உச்சத்திற்கு தன்னை அழைத்துச் சென்றுவிட வேண்டும். இந்த சிந்தனை தோன்றியவுடன் ஒரு கொட்டாவி வரும், அடுத்த 25வது வினாடி ஒரு ஜம்போ குறட்டை வரும்.

தூங்கும் போது இந்தக் குறட்டை வருவது எதனால், முதலில் உடல் எடையை குறைக்க வேண்டும். அதற்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். சென்ற மாதம் அந்த மழைக்கால மசோதாவை நிறைவேற்றி 7 நாட்கள் கடைபிடித்து பின், அந்த மசோதாவை காற்றில் பறக்க விட்டதை நினைத்துப்பார்க்கும் போதே கசப்பாக இருந்தது அவனுக்கு. ஒரு தீர்மானத்தை தன்னால் தொடர்ச்சியாக கடைபிடிக்க முடியாமல் போவதை நினைக்க, நினைக்க வெறுப்பாக இருந்தது. இதற்குத்தான் ஒரு முடிவை நன்கு யோசித்து தன்னால் தொடர்ச்சியாக கடைபிடிக்க முடியுமா? முடியாதா என சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அந்த மகாத்மாகாந்தி தன் வாழ்நாள் முழுவதும் வெறும் 8 முடிவைத்தான் கடைபிடித்திருக்கிறார். ஆனால் அந்த 8 முடிவுகளிலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் வலுவாமல் உறுதியாக நின்றிருக்கிறார். அந்த 8 முடிவுகளே அவரை மகாத்மாவாக மாற்றி விட்டது.

எனக்கு மகாத்மாகவெல்லாம் ஆக வேண்டாம். எனக்கு பேராசையெல்லாம் கிடையாது. ஒரே ஒரு ஆசைதான். வாழ்வில் உயர வேண்டும். வாழ்க்கையில் தோற்றுவிடாமல், வெற்றி பெற்றுவிட வேண்டும். சாமின் புலம்பல் எல்லை மீறிக் கொண்டிருந்தன.

2 காதல் தோல்வி அடைந்த பின்னரும் அவன் இன்னும் உயிரோடு இருக்கிறான். அசிங்கமாக இரவில் சரியான நேரத்துக்கு வேறு தூங்கி விடுகிறான். அவன் இரவு நேரத்தில் தூங்க ஆரம்பித்துவிட்டால் அவ்வளவுதான். அவன் வீட்டு மாடிக்கு மேல் 2 சுகோய் விமானங்கள் குறுக்கும் நெடுக்குமாக 24 முறை பறந்தாலும் அவன் எழுந்து கொள்ள மாட்டான். மனதில் கவலை இருந்தால் தூக்கமே வராது என்று சொல்கிறார்களே அது எந்த அளவுக்கு உண்மை, ஒரு வேளை தனக்கு உண்மையில் கவலையில்லையா? இல்லை தான் ஒரு வடிகட்டின சோம்பேறியா, எதற்குமே விடை கிடைப்பதாயில்லை அவனுக்கு. குதிரையில் உட்கார்ந்து போகும் போதே, ஒரு குட்டித்தூக்கம் போட்டு தனது தூக்கத்தை முடித்துக் கொள்வான் நெப்போலியன். என்கிற விஷயத்தை கேள்விபட்டபோது, இரண்டு கைகளையும் தட்டியபடி இது நடக்கவே வாய்ப்பில்லை என்று சிரித்ததை நினைத்துப் பார்க்கும் போது அவனுக்கு வேதனையாக இருந்தது.

நான் ஏன் இப்படி தூங்கித் தொலைக்கிறேன் என்று கடவுளின் சட்டையைப் பிடித்து உலுக்கியதாக அவனுக்கு 2 முறை கனவு வந்திருக்கிறது. அவர் 2 முறையும் பதில் சொல்லவில்லை. அவர் குடியிருந்த கோவில் படத்தில் வரும் நம்பியாரைப் போல சிரித்திருக்கிறார். அப்பொழுது கடவுளின் முகத்தில் சிவப்பு வௌச்சத்தை யாரோ அணைத்து, அணைத்து போட்டிருக்கிறார்கள். என்ன ஒரு கொடூரமான எஃபெக்ட் என்று வியந்து போனான்.

ஒரே கொள்கை……… அவனுக்கு இன்னும் ஆறாவது அறிவின் மேல் நம்பிக்கை இருந்தது. எப்படியும் சிந்தித்து நல்ல முடிவை எட்டிவிடலாம் என்று யோசித்தான். ஒரே முடிவு, பிடித்துக் கொள்கிற மாதிரி ஒரே முடிவு. எத்தனை தன்னம்பிக்கை புத்தகங்களை படித்திருக்கிறோம். ஏன் எதுவுமே பயன்தரமாட்டேன் என்கிறது.

ஒரு புத்தகத்தில் இவ்வாறு போடப்பட்டிருந்தது.

உன்னால் 2 பங்கு செயல்பட முடியுமானால், 20 பங்கு செயல்படு. உன்னால் 20 பங்குசெயல்பட முடியுமானால், 200 பங்கு செயல்படு. அப்படி செய்தால்தான் 20 பங்கு செயல்படுவது சுலபமாக இருக்கும். சாதாரணமாக வாழ்வதற்கு கூட அசாதாரணமாக செயல்பட வேண்டியதிருக்கிறது. ஆனால் அந்தக் கருத்து சரிதான். எல்லை மீறிய செயல்பாடுகள் நிச்சயமாக பலனளிக்கின்றன. அது உண்மைதான். மறுப்பதற்கில்லை. ஆனால் இதில்பிடித்துக் கொள்கிற மாதிரி எதுவுமே இல்லையே.

இந்தக் கருத்தை என்னால்பிடித்துக் கொள்ள முடியவில்லை. வெள்ளத்தில் அடித்துச் செல்லும் போது, ஒரு மரக்கட்டை பிடித்துக் கொள்ள கிடைப்பது போல், ஒரு கொள்கை கிடைத்தால் வசதியாக இருக்கும். உயிரைக் கொடுத்தாவது அல்லது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது நச்சென்று பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு கொள்கை வேண்டும். ஒரு கொள்கை நிச்சயமாக ஒரு மனிதனை கரையேற்றிவிடும் அது மட்டும் உண்மை.

எடிசனை அவனுக்கு மிகவும் பிடிக்கும். செயல்பட்டுக் கொண்டேயிருந்த ஒரு மனிதன். அந்த ஆள் சாகும்வரை செயல்படுவதை நிறுத்தவேயில்லை. என்னவொரு பெட்ரோல் தீராத கார் அந்த மனிதன். நிற்காமல் போய்க்கொண்டே இருந்திருக்கிறான். அவன் திரும்பிப் பார்க்கவேயில்லை. முன்னே இருக்கும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டு போய்க்கொண்டே இருந்திருக்கிறான். என்னவொரு மனித ஆச்சரியம் அவன். அவன் அறிவுக்கும், புத்திசாலித்தனத்துக்கும் கூட முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தான் சரியாக செய்கிறோமா, தவறாக செய்கிறோமா என்று கூட அவன் கவனம் கொள்ளவில்லை. அவன் செயல்பாட்டுக்கு மட்டும் அசாதாரணமான வகையில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான். அவன் இயலாமையில் உழல்பவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறான். அவன் செயல்பட்டுக் கொண்டே குட்டிதூக்கம் போடுவான் போல. அவனை என்னால் உணர முடிகிறது. அவனை என்னால் உள்வாங்க முடிகிறது.

அந்த நேரத்தில் அந்த ஜெனரேட்டர் ஸ்டார்ட் ஆகிவிடுகிறது. “ஆமாம் நான் ஏன் குறட்டை விடுகிறேன். யோவ் நம்பியாரைப் போல் சிரிப்பதை நிறுத்தப் போகிறாயா இல்லையா? யோவ் உனக்கு அவ்வளவுதான் மரியாதை, எனக்கு கெட்ட கோபம் வந்து விடும் ஜாக்கிரதை. யோவ் நான் பாட்டுக்கு சொல்லிகிட்டு இருக்கேன், நீ பாட்டுக்கு சிரிச்சுகிட்டு இருக்க, உனக்கெல்லாம் ஒரு தடவ சொன்னா புரியாதா? நீ இப்படி சொன்னா கேக்க மாட்ட. உன்னையெல்லாம் 4 காட்டு காட்டுனாதான் புத்திவரும்”

ஓங்கி ஒரு கொட்டு கொட்டினான் தலையில்…..

கோப்பு காட்சிகள் : இடி இடித்தது. மழை கொட்டியது. தென்னை மரங்கள் காற்றில் ஆடின. பறவைகள் பறந்தன. கோவில் மணிகள் கோரஷாக அடித்தன. நம்பியாருக்கு கோபம் வந்து விட்டது.

யாரோ சாமின் காலை நறுக்கென்று மிதித்தார்கள். அது அந்த பாலுதான். அவனால் மட்டும்தான் தினமும் சரியாக, தூங்கிக் கொண்டிருப்பவனின் காலை தவறுதலாக மிதிக்க முடியும். வேறு யாருக்கும் அந்தத் திறமை வராது.

சாமிற்கு பல்துலக்கிக் கொண்டிருக்கும் போது அந்த ஞானோதயம் பிறந்தது போல் தோன்றியது. வானத்தை நிமிர்ந்து பார்த்தான். அங்கு எந்த போதிமரமும் இல்லை. ஏன்? ஞானம் பிறக்கும் போது, போதிமரம் இருக்க வேண்டு‍மே, என்று சந்தேகத்துடன் யோசித்துப் பார்த்தான். கலிகாலத்தில் அவ்வாறெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டான்.

தனக்குரிய கொள்கையை அவன் கண்டுபிடித்துவிட்டது போல் அதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டான்.

இடம் : அலுவலகம். மணி : 2:10

யாரும் இல்லாத அலுவலகத்தில் சாம் மட்டும் வேலை செய்து கொண்டிருப்பதை, அலுவலக உயரதிகாரி ஒரு பாவப்பட்ட ஜென்மத்தை பார்ப்பது போல் பார்த்துக் சென்றார். பாவம் யார் பெற்ற பிள்ளையோ என்று மட்டும் அவர் கூறவில்லை. ஆனால் உச் கொட்டினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *