கிறுக்கெழுத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 3, 2022
பார்வையிட்டோர்: 3,108 
 

(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்னும் மயிரிழை தப்பியிருந்தால், பஸ் ஆறுமுகத்தின் மேல் ஏறியிருக்கும். பஸ்காரன் மேல் பிசகில்லை . தெரு ஓரத்தில் நடை பாதையில் மெள்ளத் தள்ளாடித் தள்ளாடி நடந்து கொண்டிருந்த ஆறுமுகம் திடீரென்று நடு ரோடுக்கு அப்படி எகிறிக் குதித்து ஓடி வருவானென்று பஸ் ஓட்டுபவன் எதிர்பார்த்திருக்க முடியுமா என்ன?

“என்னப்பா? வூட்டிலே சொல்லிக்கினு வந்துட்டியா?” என்று தன்னைப் பஸ்காரன் கோபமாக ஏசியது ஆறுமுகத்தின் காதில் விழுந்தது. அவனுக்கு வீடுமில்லை, சொல்லிக்கொள்ள யாரு மில்லை என்று பாவம், அந்தப் பஸ்காரனுக்கு எப்படித் தெரியும்? தன்னைத் தாண்டி ஓடிவிட்ட பஸ்ஸைப் பார்த்துக் கொண்டே ஆறுமுகம் ஆடி விழுந்து கொண்டு மேலே நடந்தான்.

அவன் ஆட்டத்துக்குக் காரணம் குடி அல்ல. அவன் அன்று குடிக்காததற்குக் காரணம் அவன் கையில் காசு இல்லாததுதான். அவன் கையில் இரண்டு காசிருந்தால் நிம்மதியாகக் குடித்துவிட்டுத் தன் கவலைகளையெல்லாம் மறந்து ஏதோ ஒரு தினுசான இன்பமும் சாந்தியும் பெற்றிருப்பான். அவனுக்கு அந்த உரிமைகூட இல்லை யென்று யார் தடுக்க முடியும்? ஒரு வாரமாக ஈசுவரன் அவனுக்கு அந்த அல்ப சாந்திக்குக் கூட வழியில்லாமல் வைத்துவிட்டான். ஆறுமுகம் குடித்தே ஒருவாரம் ஆய்விட்டதென்றால், அவன் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகியிருக்குமென்று கணக்கில் நிபுணர்களைத்தான் கேட்கவேண்டும்.

“அந்தப் பஸ்ஸிலே மாட்டிக்கொண்டு உசிரை விட்டிருந்தா லும் சரியாப் போயிருக்குமே!” என்று எண்ணினான் ஆறுமுகம்.

அப்படி எண்ணுவது சுலபமே தவிர, அந்த விநாடியிலே கூட அவனுக்கும் உயிர் வாழவேணுமென்ற ஆவல் தான் தலைதூக்கி நின்றது. சற்று முன் அவன் தெரு ஓரத்திலிருந்து நடுத்தெருவுக்கு எகிறிக் குதித்த காரணம் இந்த உயிர் வாழும் ஆவல்தான். ஓரத்தில் கிடந்த பாம்பு கடித்து உயிரை இழக்க அவனுக்கு இப்போது மனமில்லை. ஆனால் இப்போது…ஆறுமுகம் திரும்பிப் பார்த்தான். தெரு ஓரத்தில் சுருட்டிக்கொண்டு கிடந்தது பாம்பல்ல. ஒரு நீண்ட கப்பாணிக் கயிறுதான். பட்டணத்துப் பாதையிலே பாம்பு வெளிவந்து விட்டால்…!

“தெய்வமே, எனக்கு ஒரு வழிகாட்ட மாட்டாயா?” என்று பிரார்த்தித்துக்கொண்டே ஆறுமுகம், கால்கள் பின்ன, தள்ளாடித் தடுமாறிக் கண்ணும் உடலும் சோர மேலே நடந்தான்.

அவனும் ஒரு காலத்தில் மனிதனாக , உழைத்துச் சாப்பிட்டு வாழ முயன்றவன்தான். அப்போதெல்லாம் அவனுக்கு அன்றாடம் அரை ரூபாய், முக்கால் ரூபாய் என்று கூலி வரும். அவனுடன் அவன் வறுமையையும் சுக துக்கங்களையும் பங்கிட்டுக் கொள்ள ஒரு பெண்பிள்ளையும் இருந்தாள். அதைவிட எவ்வளவோ சிறந்த வாழ்க்கை நடத்துபவர்கள் அநேகர் இருக்கலாம். ஆனால் ஆறுமுகம் அதையெல்லாம் எண்ணி ஆசையோ பொறாமையோ படவில்லை. ஏதோ அவன் வாழ்வும் அதிகக் கஷ்டமின்றி நடந்தது; பொழுது சில சமயம் கழிவதே தெரியாமலும் சில சமயம் வெகு சிரமமாகவும் கழிந்தது! உடம்பிலே பலம் இருந்தது; மனத்திலே எப்பொழுதும் சோர்வில்லை. சில விநாடிகளாவது தெம்பு இருந்தது.

திடீரென்று ஒரு நாள் அவனுக்குக் குளிரும் காய்ச்சலுமாக வந்துவிட்டது. ஒருநாள், இரண்டு நாள் … ஐந்து நாள் பார்த்தாள் அவன் பெண்சாதி. பிறகு யாரையோ இழுத்துக் கொண்டு அவனை விட்டு விட்டுப் போய்விட்டாள்.

ஆனால் அந்தக் காய்ச்சல் அவனை விட்டு வெகுநாள் வரை போக மறுத்தது; மாசக் கணக்காக அவன் தர்ம ஆஸ்பத்திரியில் கேட்பாரின்றிக் கிடந்தான். இதற்கிடையில் அவன் பிரக்ஞை இல்லாமல் கிடக்கும் போது அவன் குடிசையின் சொந்தக்காரன் குடிசையில் இருந்த சொற்ப தட்டுமுட்டுகளையும் வாடகை பாக்கியென்று பறிமுதல் செய்துகொண்டு போய்விட்டான்.

ஆஸ்பத்திரியிலிருந்து நடைப்பிணமாக வெளியே வந்தான் ஆறுமுகம். உடம்பிலே தெம்பில்லை. ஊரிலே தங்க இட மில்லை. பிழைக்க வழியும் இல்லாமல் போய்விட்டது. கொஞ்ச நாள் மயிலாப்பூரில் ஒரு வக்கீல் வீட்டில் தோட்டக்காரனாக வேலைக்குச் சேர்ந்தான். ஆனால், முதல் மாசமே தம் மனைவியைத் திருப்தி செய்யும்படியாகத் தோட்டத்தில் உழைத்து அவனால் பாடுபட முடியவில்லை என்று அவனிடம் சம்பளப் பாக்கியைக் கொடுத்து விட்டு விரட்டி விட்டார் வக்கீல்.

அதுவரையில், குடிப்பதைத் தலைமுறை தத்துவமாக வந்திருக்கும் ஓர் வழக்கமாகச் செய்துவந்த ஆறுமுகம், குடியில் ஓர் இன்பம்-தன் வாழ்க்கையில் வேறு எதிலுமில்லாத ஓர் இன்பம் இருக்கிறதென்று குடியை நாட ஆரம்பித்தான். அகப்பட்ட வேலையைச் செய்துகொண்டு, கிடைத்ததைச் சாப்பிட்டுவிட்டு, காசு இருக்கும்போது குடித்துவிட்டுப் பட்டணத்துச் சோதாக்களில் ஒருவனாக ஆறு முகம் தலையெடுத்து இப்பொழுது ஒரு வருஷத்துக்குமேல் ஆகிவிட்டது.

மயக்க வஸ்துக்கள் என்று சொல்லுகிறார்களே குடி, கஞ்சா இவை போன்ற வஸ்துக்களுக்கு மட்டுந்தான் மயக்கந்தரும் சக்தி உண்டென்று சொல்லுவதற்கில்லை. பசிக்கும் மயக்கம் உண்டு, போதை உண்டு. லட்சியம், காமம் இவையும் கவனிக்குமிடத்து, மனிதன் மனத்தை மயக்கவல்ல சாதனங்களாகவே தோன்றுகின்றன.

ஆறுமுகம் குடித்து ஒரு வாரத்துக்கு மேலேயே ஆகிறது. சரியான உணவு அருந்திப் பத்து நாளுக்கு மேல் இருக்கும். பசி லாகிரியில் அவன் ஆகாயத்தில் பறக்கும் பக்ஷிபோலக் கனமின்றி, நடக்கிறோம் என்ற பிரக்ஞையில்லாமல் நடந்துகொண்டிருந்தான்.

ஆனால், நல்லவேளை, அவனுக்கு லட்சியமென்ற போதை இல்லை . அவன் எழுதப் படிக்க அறியாதவன். தமிழில் ஒரு கவி, ‘தனி ஒரு மனிதனுக்கு…’ என்று ஆரம்பித்துக் கவிதை செய்து வைத்திருக்கிறார் என்று அவனுக்குத் தெரியாது. ரஷ்யா என்றால், ‘வக்கீலையா தோட்டத்துக்கு அப்பால் இருக்கிறதே, அதுவா?’ என்று கேட்பான் அவன். ஆனால் அவன் மங்கிய கண்கள் தூரத்தில் எங்கேயோ கனவு போலத் தெரிந்த ஏழைமை, பட்டினி பசி என்பதறியாத ஒரு லோகத்தில்தான் லயித்திருந்தன. இதையெல்லாம் வார்த்தைகளில் சொல்ல அவன் அறியான். சோஷியலிஸம் என்ற கொள்கை அவசியம் என்பதற்கே ருசுப்போல அமைந்திருந்தன அவன் உடலும் உள்ளமும்.

அவன் வயிறு பசித்தது. நா வறட்சி எடுத்தது. தன் பசிக்கு ஒரு கவளம் சோறு அளிக்காத உலகம் என்ன உலகம் என்று உலகைப் பற்றிய விசாரத்தில் ஆறுமுகம் இறங்கவில்லை . உலகத்துக்கு எங்கும் போக்கிடம் கிடையாது என்று அவனுக்குத் தெரியும்.

ஆனால் அவன் போய்விட முடியும். அவனை வெளியேற்றத் தான் உலகம் தன்னாலான முயற்சியைச் செய்துகொண்டிருந்தது. அப்படியே அவன் உலக வாழ்வை இகழ்ந்துவிடவில்லை. அரைக்கால் வயிறு உணவாவது, தொண்டை நனையக் கள்ளாவது அச்சமயம் கிடைத்துவிட்டால், அவன் “ஓஹோ ஹோ! இந்த உலகம், பூவுலகம், இன்பமயமானது” என்று ஆனந்தக் கூத்தாட ஆரம்பித்திருப்பான்.

அருகிலிருந்த ஒரு லாந்தர்க் கம்பத்தின்மேல் சாய்ந்து கொண்டு , நடந்ததனால் ஏற்பட்ட களைப்பை ஆற்றிக்கொள்ள முயன்றான். தெருவிலே ஜன நடமாட்டம் அதிகமில்லை. மாலை நேரம், வானத்திலும் மேகங்கள் கவிழ்ந்திருந்தபடியால் வெளிச்சம் அதிகமில்லை. பட்டணத்துக் கடியாரப்படி இன்னும் ‘லைட்டிங் டயம்’ ஆகவில்லை . அந்த மங்கிய ஒளியில் களைப்பால் இருண்டு கொண்டிருந்த ஆறுமுகத்தின் கண்களில் தெருவில் எதிர்ப்புறத்தில் அவனுக்கு நேரே ஒரு பிச்சைக்காரன் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. பிச்சைக்காரனுக்கு எதிரே விரித்திருந்த துணியில் ஆறு, ஏழு காலணாக்கள் கிடந்தன.

அந்தப் பிச்சைக்காரனைக் கவனித்தான். அவன் குருடனென்று முதலில் ஆறுமுகத்துக்குத் தெரியாது. அது நிச்சயப்பட்டவுடன், அவன் மனத்தில் பளிச்சென்று ஒரு யோசனை உதித்தது.

தெருவிலே அதிக வெளிச்சமோ ஜன நடமாட்டமோ இல்லா திருந்தது ஆறுமுகத்தின் காரியத்துக்கு ஒத்தாசையாக இருந்தது. யாரும் தன்னைப் பார்க்க முடியாத சமயம் பார்த்து எதிர்ப்பக்கம் போய்ச் சட்டென்று குனிந்து குருட்டுப் பிச்சைக்காரன் துணியில் கிடந்த ஏழு காலணாக்களையும் கையில் சப்தமின்றி எடுத்துக் கொண்டான்.

ஆனால் அவன் பிறகு நகர்ந்தபோது அவன் காலடிச் சப்தம் குருடன் காதில் விழுந்துவிட்டது போலும்! குருடன் வழக்கம் போலக் கையை நீட்டி, ”கண்ணிலாத கபோதி ஐயா! காலணா போடையா, பிரபுவே!” என்று பரிதாபமான குரலில் கெஞ்சினான்.

உடனே ஆறுமுகம் தன் கையிலிருந்த காலணாக்களில் ஒரு காலணாவை எடுத்துத் தாராளமாகப் பிச்சைக்காரனுக்கு முன் எறிந்துவிட்டுத் தன்னால் முடிந்த வேகத்துடன், அங்கிருந்து நடந்து விட்டான்! ஒரு வழியாக அத்தெரு மூலை திரும்பியாகிவிட்டது.

அடுத்த தெருவில் வேறு ஒரு லாந்தர்க் கம்பத்தின் மேல் சாய்ந்துகொண்டு வெகுநேரம் நின்றான் ஆறுமுகம். அவன் மனத்தில் என்ன என்ன சிந்தனைகள் தோன்றி மறைந்தன என்று நவீன மனத்தத்துவ ஆராய்ச்சி நிபுணர்களால் கூடக் கண்டுபிடிக்க முடியாது. அவன் சிந்தனைகளின் வேகம் அவனுக்கே தெரியவில்லை . மடியில் வைத்துக்கொண்ட ஆறு காலணாக்களையும் கையில் எடுத்துக் கொண்டு ஆறுமுகம் வந்த வழியே திரும்பினான். மூலை திரும்பியதும் அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் பழைய இடத்தி லேயே உட்கார்ந்திருந்தது தெரிந்தது. ஆனால் அவன் இப்போது தனியாக இல்லை. அவனை ஒட்டிக் கண் பார்வையுள்ள ஒரு சிறு பெண் உட்கார்ந்திருந்தாள். அவர்களுக்குப் பக்கத்தில் இன்னும் இரண்டொரு பிச்சைக்காரர்களும் வந்து உட்கார்ந்திருந்தார்கள்.

தெருவில் காலடிச் சப்தம் கேட்டவுடன் குருடன், ”கண் தெரியாத கபோதி ஐயா , காலணாப் போடையா!” என்று வழக்கம் போலக் கெஞ்சினான். பக்கத்திலிருந்த மற்றப் பிச்சைக்காரர்களும் குரல் கொடுத்தார்கள். ஆறுமுகம் கையிலிருந்த ஆறு காலணாக் களையும் குருட்டுப் பிச்சைக்காரன் முன் விரித்திருந்த துணியில் போட்டுவிட்டு மேலே வேகமாக நடக்க முயன்றான்.

முடியவில்லை . அவன் கால்கள் பின்னின, குருடனுக்குப் பக்கத்திலிருந்த பிச்சைக்காரர்கள் இப்படிப்பட்ட ‘தர்மப் பிரபு’ தங்களைத் தாண்டிக்கொண்டு போவதைப் பார்த்துச் சும்மா இருப்பார்களோ! இந்தத் தர்மப்பிரபு ஏதோ ஒரு தினுசாகத்தான் இருந்தான்.

ஆனால் அவர் எப்படி இருந்தால் என்ன? அவர்களுக்கு ஆளுக்கு ஒரு காலணா கிடைத்தால் சரிதான். ”ஐயா ஒரு காலணா” என்று முனகிக்கொண்டே குருடனுக்குப் பக்கத்தில் இருந்த பிச்சைக் காரர்கள் எழுந்து ஆறுமுகத்தைப் பின் தொடர்ந்தனர்.

ஆறுமுகம் ஈனமான குரலில் என்ன சொல்லிப் பார்த்தும் அவர்கள் அவனை விடுவதாக இல்லை . ஆறுமுகம் நின்று திரும்பித் தன்னை நோக்கிக் கெஞ்சிக் கைநீட்டிய பிச்சைக்காரர்களையே கெஞ்சும் பாவனையில் நோக்கிக் கையை நீட்டினான்.

அவனுக்கு வார்த்தை சொல்லச் சக்தி இல்லை. இருந்திருந் தால், “ஐயா ஒரு காலணா!” என்று அவனும் கேட்டிருப்பான்.

அதே விநாடி கார்ப்பொரேஷன் தெரு மின்சார விளக்குகள் பளிச்சென்று எரியத்தொடங்கின.

பிரம்மதேவரின் உள்ளத்திலே ஏதோ சுருக்கென்று முள்போலத் தைத்தது. மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டிக் கொண்டு பூலோகத்தை நோக்கினார்.

மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் நிறைந்த சென்னை மாநகரிலே நம்மாழ்வார் தெருவிலே பூமாதேவியின் மடியிலே தவழ்ந்து விளையாடி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து முப்பதாவது வயசை எட்டிவிட்ட ஆறுமுகம் பிள்ளை புதிதாகப் பிச்சைக்காரனாகிப் பிச்சைக்காரர் களிடமே பிச்சை கேட்கும் மாபெரும் சாயுஜ்யத்தை அடைந்து விட்டான் என்று அவர் கண்டார். ஆனால் அதற்குமேல் ஆறுமுகத்தின் லிபி என்ன என்று அவருக்குச் சரியாகத் தெரிய வில்லை. அந்த நிலைமையை எவ்வளவு நேரம் நீடித்து வைப்பது?

பிரம்மதேவர் தம் மேஜைமேலிருந்த ஒரு வெள்ளி மணியைப் பதற்றத்துடன் நாலுதரம் தட்டினார். காரியதரிசிக்குப் பதிலாக ஸரஸ்வதிதேவி வந்தாள். அதைக் கவனியாமல் காரியதரிசிதான் வந்தாராக்கும் என்று எண்ணி, பிரம்மதேவன் அதட்டும் குரலில், “ஆறுமுகம் பிள்ளையின் லிபிப் பிரதிச் சுவடியை எடுத்து வாரும், ஜல்தி!” என்று அதிகாரம் செய்தார்.

“என்ன இது? அதிகாரம் பலமாயிருக்கு!” என்று ஸரஸ்வதி தேவி கேட்டபின்தான், பிரம்மா நிமிர்ந்து பார்த்து வந்தது யாரென்று அறிந்துகொண்டார்.

பிறகு காரியதரிசி வந்தார்.

“ஆறுமுகம் பிள்ளையின் லிபிச் சுவடியை எடுத்துவாரும்” என்று உத்தரவிட்டார் பிரம்மதேவர். அவர் குரலில் கலவரமும் அவசரமும் தொனித்தன.

“எந்த ஆறுமுகம் அது?” என்றார் காரியதரிசி.

பிரம்மாவுக்குக் கோபமே வந்துவிட்டது. “என்ன! ஏது என்றெல்லாம் நான் சொல்லுவதற்காகவா ஐயா, உம்மைக் காரியதரிசி என்று சம்பளம் போட்டு வைத்திருக்கிறது?” என்றார்.

காரியதரிசி, போனேன் வந்தேன் என்று ஒரு விநாடியில் கையில் மண்டையோட்டைப் போன்ற ஒரு வஸ்துவுடன் திரும்பி வந்தார்.

அந்த மண்டை ஓட்டைக் கையில் வாங்கிப் பிரம்மதேவர் தம் மேஜை இழுப்பிலிருந்து ஒரு கண்ணாடியை எடுத்து அதன் மூலம் பார்த்தார். எதையோ வாசிப்பதைப் போல அவர் வாய் முணுமுணுத்தது. நெற்றியைச் சுருக்கிக்கொண்டு மண்டை ஓட்டைக் கண்ணருகில் கொண்டுபோய்ப் பார்த்தார். பொத்தானை அமுக்கி விளக்கை ஏற்றிப் பார்த்தார். கடைசியில், “ஊஹூம்! புரியவில்லை. நீர் பாரும் புரிகிறதா என்று? இதற்கு மேலே என்ன எழுதியிருக் கிறது? என் எழுத்தாணி அன்று எதையோ கிறுக்கிவிட்டது. என் எழுத்து எனக்கே புரியவில்லையே” என்று சொல்லி மண்டை ஓட்டைத் தம் காரியதரிசியிடம் கொடுத்தார்

ஒரு நிமிஷம் அதைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துவிட்டு, “எனக்கும் புரியவில்லையே” என்றார் காரியதரிசி.

பிரம்மதேவர் சிறிது நேரம் யோசித்தார். பிறகு சொன்னார்:”ம்… எழுத்தாணியை இப்படிக் கொடும். வேண்டாம்; நீரே அதன்மேல் எழுதும். ஆறுமுகம் பிள்ளைக்கு லாட்டரிச் சீட்டில் ஒரு லக்ஷம் கிடைத்துவிடுகிறது …..”

காரியதரிசி எழுதுவதை நிறுத்திவிட்டு, “பிரபோ, ஒரு சந்தேகம். அவன் முன்பு எதுவும் லாட்டரிச் சீட்டு வாங்கியதாக இதுவரை காணப்படவில்லையே” என்றார்.

“என்ன ஐயா இது? உலகத்திலே இருக்கிற பத்திரிகை யெல்லாம் நம்ம ஆபீஸுக்கு வருகின்றன. நீங்கள் அவற்றில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றைக்கூடப் பிரித்துப் பார்த்ததில்லையா? பார்த்திருந்தால் இந்தச் சந்தேகம் உமக்குத் தோன்றியிராது. ஆறுமுகம் லாட்டரி டிக்கட் வாங்காவிட்டால் என்ன? தெருவில் யாரோ நழுவ விட்டுவிட்டுப் போன லாட்டரிச் சீட்டு அவனுக்குக் கிடைக்கிறது. அந்தச் சீட்டுக்குத்தான் பரிசும் விழுகிறது.”

“புத்தி” என்றார் காரியதரிசி.

“எழுதி விட்டேன். தமிழ்ப் பத்திரிகைப் பாணியிலேயே மற்றதையும் எழுதி விடட்டுமா? ‘அந்தோ! பரிதாபம்! அவன் அந்த லட்சத்தை அனுபவிக்காமல் இறந்துவிட்டான்! என்னே கொடுமை!’ என்று எழுதிவிடட்டுமா?” என்றார்.

“வேண்டாம். அவன் அந்த லட்சத்தைப் பாங்கில் பத்திரப் படுத்திவிட்டு, சோஷியலிஸ்ட் கட்சியில் சேர்ந்துவிட்டான் என்று எழுதும்” என்றார் பிரம்மதேவன்.

“கிளம்பலாமா? நாழியாகிறது” என்றாள் ஸரஸ்வதி தேவி.

காரியதரிசியை நோக்கிப் பிரம்மதேவன், “அவ்வளவுதான்; நீர் போகலாம்” என்றார்.

பூலோகத்திலும் பிரம்மலோகத்திலும் நடந்ததெல்லாம் இதுதான்.

– 1955, க.நா.சு. சிறுகதைகள்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *