கானக விதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 7,375 
 

ஆப்ரிக்கா டன்ஸானியா நாட்டில் வடக்கு செரங்கட்டிப் பூங்கா பகுதியில் இருக்கிறது இக்கிராமம். மனிதனை வேட்டையாடிய விலங்கைப் பழி தீர்க்கும் எண்ணம் உடையவர் இங்குள்ள மக்கள். ‘வில்டர் பீஸ்ட்’ என்கிற மாடுகள் இடம் பெயரும் காலம் அது. செரங்கட்டிப் பூங்காவின் தெற்கு பகுதியில் ஆரம்பித்து வடக்கு நோக்கி செல்லும் பாதையில் இருக்கும் புல்வெளியில் அவை மேயும். ஓய்வு கொள்ளும். அவைகளின் இனப்பெருக்கம் நடக்கும் இடமும் இதுதான். மாமிசப் பட்சிணியான காட்டு விலங்குகள் மாடுகளை வேட்டையாடும். அச்சமயத்தில் மனிதன் குறுக்கே வந்தால் அவனையும் விட்டு வைப்பதில்லை. அவனையும் தாக்கும்.

உமாங்குவா பதினேழு வயது வாலிபன். தினந்தோறும் அக்கிராமப்புற வாசிகளுக்காகக் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி எடுத்துக் கொண்டு வருபவன். ஒரு நாள் ஓர் ஆண் சிங்கத்தால் தாக்கப்பட்டு மரணமடைந்தான் உமாங்குவாவின் சொந்தக்காரன் ஒருவன். ஊர்க்காரர்கள் அவனது மரணத்திற்குப் பழி வாங்குவதற்கு பலி கொடுக்க அந்த ஆண் சிங்கத்தை வேட்டையாடிப் பிடித்து வந்து கட்டி வைத்தார்கள். பழிவாங்கும் வைபவத்தை, நெருப்பை மூட்டி, மேளங்கள் அடித்து ஆக்ரோஷமாகக் கத்தி ஒரு விழாவைப் போல் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். சிங்கத்தை ஒரு கட்டையில் தலை கீழாகக் கட்டி வைத்தார்கள். அது மயங்கிய நிலையில் இருந்தது. அதனை ஊரின் மையப்பகுதியிலுள்ள மேடைக்கு எடுத்து வந்து நிறுத்தினார்கள். அருகே ஓர் அண்டாவில் வென்னீர் கொதித்துக் கொண்டிருந்தது. அந்த வென்னீரை ஒரு சொம்பில் மொண்டு அதன் முகத்தில் வீசினார்கள். சிங்கம் சூடு தாங்காமல் எழுந்து நின்று கர்ஜித்தது. பிறகு சித்திரவதை விரிவாக ஆரம்பித்தது. ஓரொரு உறுப்புகளாக வெட்ட ஆரம்பித்தார்கள். முதலில் அதன் வால், பிறகு பாதங்கள்! உமாங்குவா இதைக் கண்டு துடித்துப் போனான். அவன் கண்களில் நீர் வடிந்தது. பாவம் அது என்ன செய்யும் என்று நினைத்தான். மனிதர்கள் தன்னை வேட்டையாட வரும்போது, தான் ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்காக தற்காப்புக்காக அது அவர்களை தாக்குகிறது. அதற்கு ஐந்து அறிவு. ஆனால் நமக்கு இருப்பதோ ஆறறிவு. அப்படி இருக்க இவ்வாறு செய்கிறோமே என்று மிகவும் வருந்தினான். ஒரோரு உறுப்பாக வெட்டி, அதனை மாய்த்து, அவ்வுறுப்புகளை வென்னீரில் போட, அது தான் அன்று அவர்களுக்கு விருந்து. அதோடு பழி தீர்க்கும் படலமும் முடிவுக்கு வரும்.

உமாங்குவா படிக்காதவன் தான். இருப்பினும் விவரம் தெரிந்தவன். அன்பு, கருணை, இரக்கம் முதலிய நற்பண்புகள் உடையவன். ஆனால் தன் வயது காரணமாக ஊர் மக்களை எதிர்க்க முடியாத காரணத்தால் அடங்கி இருந்தான். கானகத்தில் ஒருவன் விலங்கினால் வேட்டையாடப்பட்டு இறந்தால், அந்த விலங்கை அவர்கள் வெறியோடு வேட்டையாடி இவ்வாறு சித்திரவதை செய்து பழி தீர்ப்பதை ஊர் மக்கள் ‘கானக விதி’ என்று பின்பற்றினார்கள். உண்மையில் காட்டு விலங்குகளுக்கு உட்பட்ட விதி தான் இது. அவைகளுக்குள் தான் இப்படியரு பழி தீர்க்கும் படலம் இருக்கும். ஆனால் மனிதன் தான் அதனை தவறாமல் பின்பற்றி வருகிறான் என்று உமாங்குவா எண்ணி வருந்தினான்.

நாட்கள் கடந்தன. ஒருநாள் வழக்கம் போல் உமாங்குவா விறகு சேகரிப்பதற்காகக் கையில் அரிவாளையும் கோடரியையும் எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றான். சலானா புல்வெளிகளில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது, ‘கீச் கீச் ‘சென்று ஒரு சப்தம் வந்தது. என்னவென்று சென்று பார்த்தபோது ஒரு சிங்கக் குட்டி அவன் அருகில் வந்து நின்றது. குட்டி இருந்தால் தாய் சிங்கம் அருகில் தான் இருக்கும் என்று எச்சரிக்கையாக அங்குமிங்கும் பார்த்தபடி மெதுவாக நடந்தான். சிங்கக்குட்டியும் அவனைப் பின் தொடர்ந்தது. சுற்று வட்டாரத்தில் எந்த விலங்குகளும் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. ஒரு வேளை கை விடப்பட்ட குட்டியோ என்று நினைத்து அவன் அதை ‘போ! போ!’ என்று விரட்டியும் அது அவனை விடாமல் பின் தொடர்ந்தது. அவன் விறகு வெட்டி சேகரிப்பதை சப்தமில்லாமல் பார்த்துக் கொண்டு அருகேயே நின்றது. அவன் வீட்டுக்குத் திரும்பும்போது அது காட்டு எல்லையிலேயே நின்றது.

இதே போல் சில நாட்கள் சென்றன. சலானா மஞ்சள் புல் நிலத்தின் மத்தியில் ஒரு தோப்பு இருந்தது. அதில் சிறிய மரம் ஒன்றைக் கண்டான். அதனை முழுவதாக வெட்டிக் கொண்டு செல்லலாம் என்று நினைத்து வெட்ட ஆரம்பித்தான். அப்போது புல்வெளி வழியாக அந்த சிங்கக்குட்டி, அதே ‘கீச் கீச்’ சப்தமிட்டுக் கொண்டு வந்தது. அவன் அதனைப் பார்த்து சிரித்து விட்டுத் தன் வேலையைத் தொடர்ந்தான். திடீரென்று ‘கீச் கீச்’ சப்தம் கோர்வையாகக் கேட்டது. அங்கு பல சிங்கக் குட்டிகள் புல் வெளிக்கு ஓடி வந்தன. குட்டிகளின் வாய்ப் பாகம் சிகப்பாக இருந்தது. ஒரு சிங்கக்குட்டியின் வாயில் இறைச்சி துண்டொன்று தொங்கிக் கொண்டிருந்தது. தொலைவில் பார்த்தபோது ‘வில்டர் பீஸ்ட்’ மாடுகள் மந்தையாக மேய்ந்து கொண்டிருந்தன. இப்போது இன்னும் இரண்டு குட்டிகள் வாயில் இரத்தக் கறையுடன் வெளியே வந்தன. சந்தேகத்தோடு கொஞ்சம் புல்லை ஒதுக்கிப் பார்த்தான். ஒரு மாடு செத்துக் கிடந்தது. ஒரு பெண் சிங்கம் அதை உண்டுக் கொண்டிருந்தது. சந்தடி கேட்டு அது எழும்பி அவனை ஓர் பார்வை பார்த்தது. அதன் பார்வை தன் மேல் வீழ்கிறது என்று உணர்ந்ததும் உமாங்குவா விரைந்து ஓடினான். அது கோபத்தோடு கர்ஜித்துக் கொண்டு அவனை துரத்தியது. அவன் ஓடிச் சென்று உயரமான ஒரு மரத்தில் ஏறிக் கொண்டான். சிங்கம் அவன் மேல் பாய முயன்றது. ஆனால் மரம் உயரமாக இருந்ததால் முடியவில்லை. அருகே அவன் வெட்டிக் கொண்டிருந்த மரத்தின் கிளை பாதியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. சற்று நேரம் கழித்து கழுதைப் புலிகள் ஊளையிடும் சப்தம் கேட்டது. ஐந்து கழுதைப் புலிகள் சிங்கக்குட்டிகளை சுற்றிக் கொண்டன. அதனைக் கண்ட தாய் சிங்கம் அவற்றின் மீது பாயப் போனபோது பாதி வெட்டுண்டிருந்த மரம் அதன்மேல் விழ சிங்கம் வகையாக மாட்டிக் கொண்டது. குட்டிகளைக் காப்பாற்ற வழி தெரியாமல் விடாமல் கர்ஜித்துக் கொண்டிருந்தது. குட்டிகள் பாதுகாப்பின்றி ஒரு கூட்டமாக நின்றது. சிங்கக் குட்டிகள் மட்டும் மாட்டினால் கழுதைப் புலிகளுக்கு அன்று நல்ல விருந்து தான். மரத்தின் மீதிருந்து இந்த சம்பவங்களைப் பார்த்துக் கொண்டிருந்த உமாங்குவாவுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. அவனிடம் சிக்கிமுக்கிக் கல் இருந்தது. அதை உரசி தீ மூட்டி ஒரு மரக்கிளையை ஒடித்து பற்ற வைத்து கழுதைப் புலிகள் பக்கம் எறிந்தான். மிருகங்களுக்கு நெருப்பைக் கண்டாலே அச்சம்! அந்த நெருப்பில் காய்ந்த புற்களும் பற்றிக் கொண்டு எரிய, கழுதைப் புலிகள் அஞ்சி அவ்விடத்தை விட்டு ஓடின. உமாங்குவா மெதுவாக மரத்தை விட்டு இறங்கினான். முதலில் அங்கேயிருந்த மண்ணை அள்ளிப் போட்டு நெருப்பை அணைத்தான். பயந்து ஒளிந்து கொண்டிருந்த சிங்கக் குட்டிகளை தூக்கி வந்து தாயின் அருகே விட்டான். பிறகு அவன் அந்த மரத்தை எவ்வாறு நகர்த்தி தாய் சிங்கத்தை விடுவிப்பது என்று யோசித்தான். மெது மெதுவாக மரத்தை நகர்த்த தாய் சிங்கம் வெளியே வந்தது. ஆனால் அவன் ஆச்சரியத்திருக்கேற்ப அவனைத் தாக்க முயல வில்லை. மெதுகுரலில் கர்ஜித்து குட்டிகளை நோக்கிச் சென்றது. குட்டிகள் அவனிடம் தாவி வந்தன. தாய் சிங்கம் எதுவும் கண்டு கொள்ளவில்லை. அது அப்படியே அமர்ந்து கொண்டிருந்தது. ஒருவேளை கழுதைப் புலிகளிடமிருந்து குட்டிகளை காப்பாற்றியதற்கு நன்றி விசுவாசம் பாராட்டுகிறதோ என்று கூடத் தோன்றியது உமாங்குவாவிற்கு.

அடுத்தடுத்த நாட்களில் உமாங்குவா தொடர்ந்து அந்த புல்வெளி பக்கமே விறகு வெட்ட வந்தான். குட்டிகள் அங்கேயே தான் விளையாடிக்கொண்டிருந்தன.அவைகளுக்கும்உமாங்குவாவிற்குமிடையேஒரு நல்ல நட்பு மலந்தது. தாய் சிங்கமும் அருகிலேயே உட்கார்ந்து தன் குட்டிகளை கண்காணித்துக் கொண்டிருக்கும்.

ஒரு நாள் அவன் ஊர்வாசி ஒருவன் வேட்டையாட அந்தப் புல்வெளிக்கு வந்தான். அவன் உமாங்குவாவைப் பார்த்து விட்டு, “ஏய் தம்பி! இங்கே என்ன செய்கிறாய்? இது ஆபத்தான இடம். சிங்கங்கள் நடமாடும் இடம். வேறு இடம் சென்று விறகு வெட்டு!” என்றான். “இல்லை ஒரு பிரச்சினையும் இல்லை. நான் தினசரி வரும் இடம் இது தான்!” என்றான் உமாங்குவா. அப்போது அவன் அருகே சர்வ சாதாரணமாக வந்து நின்ற சிங்கக் குட்டிகளைப் பார்த்த ஊர்வாசி ஆச்சரியப்பட்டுப் போனான். “உடனடியாகக் கௌம்பு! குட்டிகள் இருக்கும் இடத்தில் பெரிய சிங்கமும் கட்டயம் இருக்கும் வாய்ப்புண்டு!” என்றான்.

“தெரியுமுங்க! ஆனால் எதுவும் செய்யாது. நீங்க அதை அச்சுறுத்தாமல் போயிடுங்க! ” என்றான் உமாங்குவா.

“ஏன்? ஈட்டியைக் கண்டால் அதற்கு பயமோ?” என்று ஏளனமாக நகைத்தவாறே ஊர்க்காரன், “இதோ பார்! உங்களைக் கொல்லப் போறேன்!” என்று குட்டிகளை நோக்கி ஈட்டியை உயர்த்திக் காண்பித்தான். தாய் சிங்கம் அவனைப் பார்த்து விட்டது. பயங்கரமாக கர்ஜித்தவாறே அவனை நோக்கிப் பாய்ந்தது. அவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அதன் மேல் ஈட்டியை எறிய முயன்றான். உமாங்குவா ,”வேண்டாம்!” என்று ஈட்டியைத் தட்டி விட அது திசை மாறி பாய்ந்ததால் தாய் சிங்கம் உயிர் தப்பியது. ஆனால் அது அவன் கழுத்தைக் கடித்துக் குதறியது. அவன் கழுத்து சிதைந்து அந்த இடம் முழுவதும் குருதி பரவியது. அவன் பரிதாபமாக மாண்டான். அச்சம்பவத்தைப் பார்க்க முடியாமல் உமாங்குவா கதறி அழுது கொண்டே ஊரை நோக்கி ஓடினான். அன்று நடந்த மொத்த தவறுக்கும் தான் தான் காரணம் என்று நினைத்து வருந்தினான்.

ஊர் மக்களுக்கு செய்தி தெரிய வர அவன் சடலத்தை எடுத்து வந்து இறுதி சடங்குகள் செய்தனர். பிறகு அவர்கள் பழி தீர்க்கும் படலம் ஆரம்பித்தது. கண்ணி வைத்து வேட்டையாடி அப்பெண் சிங்கத்தைப் பிடித்து வந்து விட்டனர். “வெற்றி! வெற்றி!” என்று கொண்டாடி இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தனர்.

உமாங்குவாவுக்கு மிக்க வருத்தமாக இருந்தது. ‘தாயில்லாமல் அக்குட்டிகள் என்ன செய்யும்?’ என்று மிகவும் கவலைப்பட்டான். ‘தாய் சிங்கம் அவைகளை காப்பாற்றப் போய் தானே பலியாக மாட்டிக் கொண்டது’ என்று நினைத்தான்.

பொழுது சாய்ந்தது. மேளங்கள் அமர்க்களமாக அடிக்கப்பட்டன. தீக்கோப்புகள் பற்ற வைக்கப்பட்டன. ஊர் மக்கள் கொண்டாட்டமாக அந்த இடத்தில் கூடினர். அந்த பலி கொடுக்கும் சடங்கைப் பார்க்க அவனோடு ஊர் எல்லையில் பரிதாபமாக நின்று கொண்டிருந்தன அந்த சிங்கக் குட்டிகள். உமாங்குவா எதுவுமே செய்ய இயலாமல் வருத்ததோடு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தான். தீக் கங்குகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன. திடீரென்று உமாங்குவாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. தீயினால் தானே அன்று கழுதைப் புலிகளிடமிருந்து சிங்கக் குட்டிகளை காப்பாற்ற முடிந்தது? இப்போது அதே தீயினால் தாய் சிங்கத்தையும் காப்பாற்ற முடியுமே? யோசனை மனதில் உதித்ததும் விரைவாகச் செயல் படுத்த ஓடினான். ஓர் தீக் கட்டையை எடுத்துக் கொண்டு ஊர் எல்லையிலுள்ள ஒரு குடிசையின் மேற்புறத்தை எரித்தான். தீ கொழுந்து விட்டு எரிந்தது. அது மெது மெதுவே பரவி பல குடிசைகள் ஒரே சமயத்தில் எரிய ஆரம்பித்தன. இதைக் கண்டு ஊர் மக்கள் பரபரப்பாக ஓடி தீ அணைக்கும் வேலையில் ஈடுபட்டனர். அவர்கள் கவனம் வேறு திசையில் சிதறியதை உணர்ந்த உமாங்குவா ஓடிச்சென்று கட்டிப் போடப் பட்டிருந்த தாய் சிங்கத்தை அவிழ்த்து விட்டு “போ! போ!” என்று விரட்டினான். அதுவும் வேகமாக ஓடி ஊர் எல்லைக்குச் சென்று திரும்பிப் பார்த்தது. “நிற்காதே, போ! அவர்கள் வந்து விடுவார்கள்!” என்று விரட்டினான். சிங்கம், குட்டிகளையும் அழைத்துக் கொண்டு வேகமாக ஓடி காட்டுக்குள் சென்று மறைந்தது.

உமாங்குவா பெரிய பெரிய மூச்சுகளாக விட்டுக்கொண்டு ஆசுவாசமாக நின்றான். மிருகங்களின் இயல்பான பழி தீர்க்கும் ‘கானக விதியை’ அனுசரிக்கும் இந்த ஆறறிவுள்ள மனிதர்களிடம், அவைகளிடம் காணப்படும், ‘பாசம், நன்றி மறவா பண்பு’ போன்றவை கிஞ்சித்தும் இல்லையே? தற்காப்புக்காக ஒருவனை ஒரு விலங்கு மாய்த்தால் அதை அதன் தவறு என்று எப்படி கூற முடியும்?

நாட்கள் நகர்ந்தன. ஊர் மக்கள் வெறியோடு அச்சிங்கத்தைத் தேடிச் சென்றும் அது அவர்களிடம் சிக்கவில்லை. பருவ நிலை மாறியதும் ‘வில்டர் பீஸ்ட்’ மாடுகள் இடம் பெயர்ந்து சென்றதும் இவைகளும் இடம் மாறிச் சென்று விட்டன. இதுவும் இயற்கையான ‘கானக விதி’ களுள் ஒன்றே!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *