காந்தி இன்னாபா சொன்னாரு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 3, 2017
பார்வையிட்டோர்: 6,794 
 

எனக்கும் தியாகுவுக்குமான நட்பு எங்களின் இரண்டாம் வகுப்பிலிருந்து ஆரம்பமானது. முதல் வகுப்பு வரை வேறு ஊரில் படித்த நான் இரண்டாவது படிக்கும் போது குடும்பத்தோடு திருவொற்றியூர் வந்து சேர்ந்தோம். ஸ்கூல் திறந்து சுமார் ஒரு மாசம் கழிச்சுதான் நான் சேர்ந்தேன்.புது பள்ளிக்கூடம். புது வாத்தியார். புது சூழல். முதல் நாள் பள்ளிக்கூடத்துக்கு போனபோது எனக்கு ஒரே அழுகையாக வந்தது. சிகப்பா, அழகா (நிஜமாதான்), சூட்டிகையா ஒரு பையன்,புதுசா வந்து சேந்ததும் சூர்யா டீச்சர்தான் என்னை கையைப் பிடிச்சிண்டு போய் முதல் பெஞ்சிலே உக்கார வச்சாங்க. இன்டர்வெல்லில் க்ளாஸை விட்டு வெளியே வந்ததும் எல்லாப் பசங்களும் என்னைச் சுத்தி நின்னுட்டாங்க. ஒண்ணும் பண்ணலே, ஆனாலும் எனக்கு ஒரே பயமா இருந்தது. அப்போதான் தியாகு வந்தான். “டேய், என்னடா எல்லாம் அவனையே பாக்கறீங்க? போங்கடா அப்பாலே”. தியாகு ரெண்டு வருஷம்லேட்டா ஸ்கூல் சேந்ததுனாலே எல்லாரையும் விட கொஞ்சம் பெரிய உருவம்.

நானும் அவனும் உடனே நண்பர்களானோம்.

அப்பப்போ அவன் வீட்டிலேந்து வேகவைச்ச கிழங்கு கொண்டு வருவான். அதெல்லாம் அப்போ எனக்கு ஒரு பெரிய விஷயம், ஏன்னா எங்காத்திலே அதெல்லாம் பாக்கவே முடியாது. தியாகு நல்லா பாடுவான் – ஒரு மாதிரி கட்டைக் குரலில், ராகத்தையெல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு. மத்யானம் பலநேரம் இன்டர்வெல்லுக்கு அப்புறம் க்ளாஸ் ஒண்ணும் இருக்காது. யாராவது வாத்தியார் வந்து யாரையாவது பாடச் சொல்லுவார். அதிலும் தமிழாசிரியர் ஆ(நெடில்) ராதாகிருட்டிணன் (அவர் எப்போதும் பேரை நெடில் சேத்துதான் சொல்வார்) வந்தால் போதும் – ஒரே ஜாலிதான். சில நேரம் ஐய்யப்பன் வாத்தியார் வந்து விட்டால் அவ்வளவுதான். “எலேய் என்னலே சிரிக்கான் அவன்… பல்லப் பேத்துடுவேன்ல, ஒழுங்கா பாடபொஸ்தகத்தை எடுத்துப் படிலே, எவனாவது பக்கத்துலே திரும்பிப் பேசினா கண்ணு முழிய நோண்டிப்புடுவேன்” அப்புறம் எல்லோரும் கப் சிப்.

இப்படியே நாங்க அஞ்சாவது முடிச்சப்புறம் ஆறாவதுக்கு நான் வெள்ளையன் செட்டியார் ஸ்கூல்லே சேந்தேன். பாவம், தியாகுவால சேர முடியலை. அவன் கவர்ன்மெண்ட் ஸ்கூல்லயே சேந்தான். ஆனாலும் அப்பப்போ எங்க ஸ்கூல் விடும்போது வாசல்லயே நிப்பான். “வாடா, இன்னிக்கு எங்க மாமா வந்தாருடா, எனக்கு 50 பைசா குடுத்தாரு, வா ரெண்டு பேரும் பால்கோவா வாங்கித் திங்கலாம்” என்று கூட்டிண்டு போவான்.

நான் எட்டாவது போனபோது தியாகு பள்ளிக்கூடத்தை விட்டு நின்னுட்டான். படிப்பு வரலேங்கறது ஒரு பக்கம் (அவன் ஏழாவதுலே பெயிலாயிட்டான்). அவங்கப்பா அப்போ செத்துப் போயிட்டார். அவர் கடல்லே போய் மீன் பிடிச்சிண்டு வருவார். ஆனா அந்த வயசிலே அவனாலே கடலுக்குப் போக முடியாது. அதனாலே, கரையிலே வந்ததும் மீனை யார் கிட்டேயாவது கடனுக்கு வாங்கி மீன் மார்க்கெட்டில் வித்துட்டு வருவான். பகல் நேரங்களில் தட்டு வண்டி ஓட்டுவான். இப்போல்லாம் அவன் வீட்டுக்கு வர்றதேயில்லை. அது மட்டுமில்லே, புதுசா பீடி குடிக்க ஆரம்பிச்சுருக்கான். எப்பவாச்சுக் ஒரு தடவை எனக்காக ஸ்கூல் வாசல்லே காத்திண்டிருப்பான்.

அதுக்கப்புறம் நான் காலேஜ் படிக்கும் போதும் எப்படியே எங்கள் நட்பு தொடர்ந்தது. லீவு நாட்கள்லே நான் எங்க ஸ்கூலுக்கு நேர் பின்புறம் இருக்கும் பீச்சிலே போய் உக்காந்திண்டிருப்பேன். அங்கெல்லாம் ஆள் நடமாட்டமே இருக்காது. அதுக்குப் பக்கத்திலேதான் தியாகுவோட குடிசை. சில சமயம் நான் அவன் வீட்டுக்குப் போயிருக்கேன், அவனைத் தேடிண்டு.

அதுக்கப்புறம் அவன் வாடகைக்கு போட் வாங்கி கடலுக்குப் போறதா சொன்னான். நானும் வேலை கிடைச்சு ஒரு மாதிரி செட்டிலாயிட்டாலும் அவனோட நட்பு தொடர்ந்தது. ஒரு நாள் கேட்டேன் “தியாகு, நீயேன் ஒரு லோன் போட்டு சொந்தமாஒரு போட் வாங்கக்கூடாது? இந்த வாடகைக்கு கட்டற காசை இன்ஸ்டால்மெண்ட் கட்டலாமே – அப்புறம் போட்டே உனக்கு சொந்தமாயிடும்தானே?”

“டேய், என்னை நம்பில்லாம் யார்ரா கடன் தருவா?”

“ஏண்டா, நான் இல்லையாடா, நான் வாங்கித் தரேண்டா”

தியாகு மெதுவாக என் தோளில் கையைப் போட்டான். “நம்ம நட்புக்கு இடையிலே எதுவும் வரக்கூடாதுடா. நான் கடல் மேலே போறவன். திடீர்னு எனுக்கு ஏதாவது ஆச்சின்னா, நீ கடனக் கட்டுவியா? வுட்றா. பாத்துக்கலாம். பிஸாத்து காசு, அதெல்லாம் சம்பாரிச்சிக்கிலாம்”

இப்போதெல்லாம் நான் தியாகுவைப் பாக்கறது ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவைதான். ரொம்ப மாறிட்டான். ஏதோ அரசியல்வாதியின் சகவாசம். கொஞ்சம் ரௌடி வேலைல்லாம் பண்றதா கேள்வி. சொந்தமா இப்போ ரெண்டு போட் வச்சிருக்கானாம். ஆனாலும் நான் போனா இன்னும் பழய தியாகுவேதான். அவனோடு போகும்போது என்னைப் பல பேரும்பார்த்ததால் எனக்கு கொஞ்சம் ரெஸ்பெட் அதிகம் ஏரியாவில். அவனுக்கும் என்னோடு சுற்றுவதால் அவன் சர்க்கிளில் ரெஸ்பெட் அதிகம்.

ஒரு நாள் என்னைத் தேடி என் ஆஃபீஸ் வந்தான். “என்னா தியாகு, அதிசியமாயிருக்கு?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா, உங்கைல ஒரு ரோசனை கேக்கணும்”

‘சொல்லுடா, ”

“நம்ம குப்பத்தாண்டே ஒரு பொண்ணுக்கிதுப்பா, எனுக்கு அதுமேல ஒரு இது. அதுக்கும்தான் போல. ஆனா அவங்கப்பன் ஒரே தகறால் பண்ணினுக்கீறான். கயிதே அவங்கப்பன் ஆப்போஸிட் பார்ட்டி. அதான் நான் அவளை இஸ்துக்கினு போய் கண்ணாலம் கட்டிக்கிலாம்னு பாக்கறேன்”

‘டேய் தியாகு, ஜமாய்டா, அது சரி, அதுக்கு எதுக்குடா எங்கிட்டே யோசனை கேக்குறே?”

“அது ஒண்ணுமில்லேப்பா, கல்லாணம் செய்ய சொல்லா, அதாம்பா ரெஜிஸ்தார் ஆபீஸுலே, ரெண்டு பேரு சாச்சிக் கையெயுத்து போடணும். ஒண்ணு எங்க தலிவர் போடறார். இன்னொண்ணு நீ வந்து போட்டியா கண்டி எனுக்கு ரெஸ்பெட்டா இருக்கும்பாரு”

“டேய் தியாகு, அத விடுடா, நீ என்னோட ஃப்ரெண்டுடா, உனக்காக நான் வரேண்டா. சரி பொண்ணு போட்டோ இருக்கா?”

“பொண்ணே தோ வெள்ளதான் நிந்துனுகிது”

“அடப்பாவி, உள்ளே கூப்புடுடா”

“தே அம்லு”

கொஞ்ச நேரத்தில் அம்லு வந்தாள். என்னைப் பார்த்ததும் கைகூப்பி வணக்கம் சொன்னாள்.

“இது பத்தாப்பு வரைக்கும் பட்சிக்குதுபா”

நான் பார்த்தேன்.

“ஆமாங்கண்ணா, ஆனா இங்கிலீஷ்ல மட்டும் பெயில்”

“அதனால என்னம்மா, சரி என்னைக்கு கல்யாணம்?”

“வர்ற 18ம் தேதி. நான் காலீலயே உங்கூட்டாண்ட வந்து உன்னக் கூட்டிக்கினு போறேன்”

“அதெல்லாம் வேண்டாம்டா, நானே ரெஜிஸ்டர் ஆஃபீஸுக்கு வந்துடறேன்”

“தே அதெல்லாம் சும்மா கெட. நானே கார் வெச்சி உன்னைக் கூட்டியாறேன். அப்போதானே மாப்ளைக்கு ஒரு கெத்து”

கிளம்பும் முன்னர் கையில் இருந்து முன்னூறு ரூபாய் கொடுத்தேன். “எதுக்குடா”

“டேய், நீயும் அவளும் போய், அவளோட செலக்ஷன்லே உனக்கு நல்ல சட்டை வேட்டி எடுத்துக்கடா. அவளுக்கு கல்யாணப் புடவை நான் எங்கம்மாவை விட்டு எடுத்துண்டு வரேன். போடா”

நின்று என்னைப் பார்த்த தியாகு என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டான்.

அம்லுவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.
அன்னிக்கு 18ம் தேதி. நானும் கார்தாலேயிருந்து காத்திண்டிருந்தேன் தியாகுவைக் காணவில்லை. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

கடைசியில் நானே ரெஜிஸ்டர் ஆபீஸ் போனேன். யாருமே இல்லை. ஒன்றும் புரியாமல் தியாகுவின் வீட்டுக்குப் போனேன். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் கேட்டேன்.

“இன்னாண்ணா ஒனுக்கு தெரியாதா? அண்ணாத்தய போட்டுட்டானுங்கண்ணா”

“என்னப்பா சொல்றே?”

“பேப்பர்லேல்லாம் வந்துதுண்ணா, இப்போ அண்ணாத்தே ஜெனலாஸ்பத்ரீலே இருக்கார் (நான் தமிழ் பேப்பரெல்லாம் படிக்கிறதில்லை)

பதறிக்கொண்டே போனேன். படுக்கையில் இருந்தான், தலையில் பெரிய கட்டு. கையில் தூளி கட்டியிருந்தார்கள்.

அவனைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னு நான் எதுவும் கேக்கலே. ஒரு வாரத்திலே டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கன்னு சொன்னான்.

ஒரு வாரம் கழிச்சு அவன் வீட்டுக்குப் போனேன். அதுக்குள்ளே பக்கத்தாத்திலேந்து தமிழ் பேப்பரை வாங்கிப் பார்த்ததில் எல்லாம் புரிந்தது. கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்பு அவன் அம்லுவோட ஒரு பார்க்குக்குப் போயிருக்கான். ராத்திரி 7 மணி இருக்கும். யாரோ ரெண்டு பேர் பின்னாலேந்து வந்து இவனை மண்டையிலே உருட்டுக் கட்டையால அடிச்சி போட்டுட்டு அம்லுவை… மேலே படிக்கவே ரொம்ப கஷ்டமா இருந்தது.

“தியாகு, கொஞ்சம் ஜாக்ரதையா இருந்திருக்கக் கூடாதா?”

“டேய், ……ப்பசங்க பின்னாடி வந்து போட்டானுங்கடா, மவனே நேரா கண்டி வந்துந்தானுங்கன்னா ரெண்டு பேத்தயும் போட்டுத் தள்ளியிருப்பேன். …த்தா. பொட்டப் பசங்க… ஏரியா பசங்க ரொம்ப உசாரா இருக்காங்க… சீக்கிரமே யாருன்னு கண்டு பிடிச்சிடுவானுங்க… அப்போ வெச்சுக்கறேன் பாரு அவனுங்களை”

சமாதானப்படுத்தினேன். “தியாகு, அமைதியாயிரு. நடந்தது நடந்து போச்சு… இனிமே நடக்க வேண்டியதைப் பாரு”

“இனிமே இன்னாடா நடக்க வேண்டியது? அவனுங்களைப் போட வேண்டியதுதான் பாக்கி”

“இல்லை தியாகு, உன்னோட வாழ்க்கையைப் பத்தி யோசிடா. நின்னு போன கல்யாணம்…” மெல்ல இழுத்தேன்.

“கல்யாணமா? இனிமே எப்படிடா நடக்கும்? எல்லாம் போச்சிடா”

இந்த பதிலை நான் எதிர்பார்த்து பதிலோடு தயாராகத்தான் போயிருந்தேன்.

“இல்லை தியாகு, எல்லாமே மனசுதான் காரணம்”

சிரித்தான். “எங்களுக்கு எல்லாமே வேறடா, ஒனுக்குப் புரியாதுடா”

“இல்லை தியாகு, மகாத்மா காந்தி என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?”

என்னதான் ஒரு குப்பத்து ரௌடியாக இருந்தாலும் தியாகுவிற்கு காந்தின்னா ரொம்ப மரியாதை.

“இன்னா சொல்லிகிறார்?

“பாகிஸ்தான் பிரிஞ்சி போன போது இந்து-முஸ்லிம் கலவரம் நடந்தது. அந்தக் கலவரத்தின் போது நம்ம பெண்கள் ரொம்பப் பேர் கற்பழிக்கப்பட்டார்கள். எல்லாம் நம்ம அம்லு போல சின்னப் பெண்கள். அப்போ காந்தி சொன்னார் நம்ம இளைஞர்கள் கற்பழிக்கப்பட்ட பெண்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னார்”

தியாகு சில நிமிடம் அமைதியாக இருந்தான். “அந்தப் பொண்ணுங்களுக்கு இன்னாப்பா சொன்னாரு?”

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன கேக்கறே தியாகு?”

“இல்லேப்பா, அந்தப் பொண்ணுங்களுக்கு எதுமே சொல்லலியா?”

நான் தலையாட்டினேன். “பொண்ணுங்களுக்கா? இல்லயே, ஒண்ணும் சொல்லலயே”

உதட்டைப் பிதுக்கினான். “காந்தியே ஒண்ணும் சொல்லலீனா, அப்பால இன்னாப்பா… உடு… கல்யாணம்லாம் அவ்ளோதான்… …த்தா அவனுங்கள…”

“தியாகு, இல்லே தியாகு, நீ மனசு வச்சா நடக்கும்”

“எப்படிப்பா நடக்கும்? எந்த மூஞ்ச வச்சிக்கினு நான் அம்லுவைப் பாப்பேன்?.. ரெண்டு பேர சமாளிக்க முடியாத நீல்லாம் ஒரு ஆம்பளையா? உன்ன நம்பி எப்பிடிக் கழுத்த நீட்டுவேன்னு கேட்டா நான் இன்னாப்பா சொல்லுவேன்? போடா பொட்டக் கமனாட்டின்னு அது சொல்லிட்ச்சின்னா நான் நாக்கப் புடுங்கிக்கினு செத்துடுவேன்”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *