காகிதப்பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 3,087 
 

(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உப்புமாவைக் கிளறிக்கொண்டே ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். சாம்பல் நிற மேகங்கள் வானின் நீலத்தை மூடிக்கொண்டிருந்தன. விடியற்காலையில் கனத்த மழை பெய்து அன்றைய ஞாயிறைச்
சோம்பலாக்க முயற்சித்துக்கொண்டிருந்தது. சீதாவிடம் துவைத்த துணைகளை வீட்டிற்குள்ளேயே காயவைக்கச் சொல்லவேண்டும். சீதாவை நான் கூப்பிடுவதற்குள் கூடத்திலிருந்து மூர்த்தியின் குரல் முந்திக்கொண்டு வந்தது.

“தீபா, இப்ப நீ கிளம்பலேன்னா நான் விட்டுட்டுப் போயிடுவேன், என்னோட ‘கோல்ஃப்’ வகுப்புக்கு இப்பவே ரொம்ப லேட்டாயிடுச்சு…” மூர்த்தி கண்கள் இரண்டையும் பெரிதாக்கி அடித் தொண்டையில் கனைத்தார். நான் இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தால் நெற்றிக் கண்ணைத் திறந்திருக்க மாட்டார், ஆனால் நான் இல்லாமல் கிளம்பியிருப்பார்.

“அடடடா, கொஞ்சம் பொறுங்க! இந்த உப்புமாவை மட்டும் டப்பாவில் அடைத்தால் என் வேலை முடிஞ்சுடும், நீங்க காரை எடுத்துக்கிட்டு புளோக் கீழே காத்துகிட்டு இருங்க, நான் அஞ்சே நிமிஷத்துல இறங்கறேன்…”

தலையை வலமும் இடமும் ஆட்டிக்கொண்டே வாசல் கேட்டைப் படீர் என்று அறைந்து சாத்திவிட்டுப் போனார். அவருக்குத் தெரியும், நான் ஐந்து என்று சொன்னால் பத்து, பதினைந்து நிமிடங்கள் ஓடிவிடும் என்று.

என்ன செய்ய, நானும் ஒவ்வொரு முறையும் சொன்ன நேரத்துக்குக் கிளம்பனும்னு நினைப்பேன், ஆனால் திட்டம் போட்ட மாதிரி எதுவும் நடக்காது.

அம்மா..அம்மா, அக்காவை என்னோட கலர்ப் பென்சிலை எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்கம்மா”, சிணுங்கிக்கொண்டே என் சேலை முந்தானையைப் பிடித்து இழுப்பான் மூத்தவன் ராம்.

“அக்காவை என்னைப் பிளேகிரௌண்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லுங்கம்மா” இளையவன் கோபி கொஞ்சுவான்.

“மேடம், வேலையெல்லாம் முடிச்சிட்டு ஊருக்கு போன் போட்டுக்கவா? இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை, எல்லாரும் வீட்டுல இருப்பாங்க…” தலையைச் சொறிந்துகொண்டு வந்து நிற்பாள் சீதா.

நான் யோசித்துப் பதில் சொன்னால் முடியாது என்று சொல்லக்கூடிய விஷயங்களை எல்லாம் நான் அவசரமாக வெளியே கிளம்பும்போது கேட்டுச் சாதித்துக்கொள்ளும் தந்திரத்தை எங்கேயிருந்து கற்றார்கள், என்று நினைக்கையில் வியப்பாக இருக்கும், சில நேரங்களில் எரிச்சலாகவும் இருக்கும். கிளம்பும் அவசரத்தில் நான் சிந்திக்கவும் முடியாமல், அவர்களைக் கண்டிக்கவும் முடியாமல் முடிந்தமட்டும் அவர்களுடைய பஞ்சாயத்தைத் தீர்த்துவிட்டு அரக்கப்பறக்க இறங்கி வருவதற்குள் மூர்த்தி வெடிக்கக் காத்திருக்கும் பட்டாசுபோல உட்கார்ந் திருப்பார்.

கடந்த ஆறு மாதங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் என் கணவர் கோல்ஃப் விளையாடக் கற்றுக்கொள்ளப் போவதும், நான் தம்பெனிஸ்ஸில் அமைந்துள்ள முதியோர் இல்லத்துக்குப் போவதும் வழக்கமாகிவிட்டிருந்தது. உதவிக்குச் சீதா மாதிரி அருமையான பணிப்பெண் உடன் இருப்பதால்தான் குடும்பம், வேலை என்பவற்றையும் தாண்டி, சமூக சேவையிலும் கவனம் செலுத்த முடிகிறது.

ஒரு நாள் என் அலுவகத்தில் பணிபுரியும் தோழி உமா அவளுடைய பிறந்தநாளை இதே முதியோர் இல்லத்தில் கொண்டாடுவதாகவும், அங்கே இருப்பவர் களுக்கு உணவு ‘ஆர்டர்’ செய்து எடுத்துச் செல்வதற்கு என் உதவி தேவைப்படுவதாகவும் கூறினாள்.

அன்றைக்கு அவளுக்காகப் பெரிய கேக் ஆர்டர் செய்து, சிரமப்பட்டுத் தூக்கிக்கொண்டு போனேன். மற்ற உணவு வகைகளையெல்லாம் நேராக இல்லத்திற்கே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தேன். இல்லத்தில் இருந்த சில முதியவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வெட்டிய கேக்கை நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு உமாவுக்கு ஊட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது. அவர்கள் முகத்தில் எவ்வளவு பூரிப்பு! திருப்பதியாகச் சாப்பிட்டு உமாவை வாழ்த்தியதும், கண்கள் பனிக்க உமா அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கியதும் மறக்க முடியாதது. பெற்றோர்களை இழந்த உமாவுக்கு அவர்களின் ஆசீர்வாதங்கள் எவ்வளவு மன நெகிழ்வைக் கொடுத்திருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது. மற்றும் குடும்பத்தைப் பிரிந்து வாழும் அவர்களுக்கும் உமா போன்றவர்கள் காட்டும் அன்பும் ஆதரவும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஆறுதல் தருகிறது என்பதையும் புரிந்து கொண்டேன். அதன்பிறகு என்னாலும் அங்கே செல்வதை நிறுத்த முடியவில்லை. எனது வார இறுதியை இதைவிடச் சிறப்பாகக் கழித்திட முடியாது. ராமையும், கோபியையும் கூட அடுத்தமுறை அழைத்துச் செல்லவேண்டும் என்று எண்ணிக்கொண்டே காரினுள் நுழைந்தேன். மூர்த்தியின் பார்வையைத் தவிர்க்க ஜன்னலுக்கு வெளியே வேகமாகக் கடந்து செல்லும் மரங்களையும், கட்டிடங்களையும் பார்த்துகொண்டிருந்தேன்.

“பீப் பீப்”, காரின் ஹாரன் சத்தத்தைத் தொடர்ந்து மூர்த்தியின் அர்ச்சனை ஆரம்பித்தது.

“யாரு இவங்களுக்கெல்லாம் லைசென்ஸ் கொடுத்தது, சிக்னல் போடாம வரான், இடியட், எல்லாம் உன்னாலதான்”.

மூர்த்தி கார் ஓட்டும்போது அவரைச் சுற்றி மற்ற காரோட்டிகளும் பாதசாரிகளும் செய்யும் தவறுகளுக்கு நானும் பொறுப்பாவேன். எனக்கும் இரண்டு திட்டுகள் கிடைக்கும்.நான் தாமதமாக வந்ததற்கு நேரடியாகத் திட்டமுடியததால் இந்தக் காரணத்தைச் சாக்காக வைத்து அவருடைய கோபத்தைத் தீர்த்துக்கொள்வார். காரிலிருந்து நான் இறங்கும்போது, துணி துவைக்கும் இயந்திரத்திற்குள் பிழிந்தெடுத்தத் துணிகளைப்போல கசங்கித்தான் வெளியேறுவேன். இத்தகைய நேரங்களில் உடனே நான் என்னுடைய கேட்கும் இயந்திரங்களை ஆஃப்செய்து விடுவேன். தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அவருடைய டென்ஷன் எனக்கும் தொற்றிக்கொள்ளும், பிறகு தேவையில்லாத வாக்குவாதம், பிரச்சனைகள் வரும். அமைதியாய் இருப்பதுதான் நல்லது. வழக்கம்போல் இன்றும் அப்படியே ஆரம்பித்தார், அதனால் என் மனம் முதியோர் இல்லத்தை நோக்கிப் பறந்தது.

அங்கே எனக்காக ஆவலோடு காத்திருக்கும் இதயங்கள். மாண்டரின், ஹொக்கியென், டியோச்சியோ, மலாய், தமிழ் என்று பல மொழிகளைப் பேசும் முதியவர்கள் ன, மத வேறுபாடு இல்லாமல் ஒருவருக்கொருவர் அன்போடு பழகுவதும், ஒற்றுமையாய் இருப்பதும் எப்படிச் சாத்தியம் என்று வியப்பாக இருக்கும். அங்கே பல இனத்தவர்கள் இருந்தாலும் நான் அதிகமாக அரட்டையடிப்பது தமிழ்ப் பேசும் நெஞ்சங்களிடம் தான்.

எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படுவார் மனோரஞ்சிதம் பாட்டி. ஓர் இடத்தில் இருக்க மாட்டார். தூங்குவதற்கு மட்டும்தான் அவருடைய படுக்கைக்கு வருவார்.மற்ற நேரங்களில் ஏதாவது ஒன்றைச் செய்துகொண்டு இருப்பார். இந்த முதியோர் இல்லத்தில் புதிதாகச் சேர்ந்தவர். மகளுடைய திருமணத்தை முடித்தபிறகு, மருமகனின் அட்டகாசங்களைக் காணச் சகிக்காமல் அவராகவே இங்கு வந்து சேர்ந்துவிட்டார். இந்த இல்லத்தில் சேர்ந்ததில் கவலைப்படாத ஒரே ஜீவன் மனோரஞ்சிதம் பாட்டிதான்.

“நம்ம மேல விழுந்த கல்லைப் பொறுக்கி ஒரு வீடு கட்டிப் பாரு, வாழ்க்கைன்னா என்னன்னு புரிஞ்சுக்கிட்டா எல்லாத்திலேயும் ஜெயிச்சிரலாம்!” மனோரஞ்சிதம் பாட்டியின் ஊக்கமான வார்த்தைகள்.

அவருக்கு நேர் எதிராக இருப்பவர் காமாச்சிப் பாட்டி. எப்போதும் அவர் கண்களில் ஒரு நிரந்தரச் சோகத்தைக் காணமுடியும். என்னதான் இங்கே சுதந்திரமாக இருந்தாலும், காமாச்சிப் பாட்டிக்கு இந்த இடம் திறந்த சிறைவாசமாகத் தான் இருந்தது.

உறவுகள் இருந்தும் அனாதையாக வாழ்வது எவ்வளவு கொடுமை! வாழும் வயதில் கணவனை இழந்து, இரண்டு மகன்களைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து கரை சேர்த்ததற்கு அவளுக்குக் கிடைத்த பரிசு ‘முதியோர் இல்லம்’ என்ற சிறைதான்.

தன் மூத்த மகன் கணேசன், அவன் பிள்ளை வெளிநாட்டில் படிப்பதற்காக அவளுடைய ஒரே சொத்தாக இருந்த நான்கு அறைகள் உள்ள வீட்டை விற்றுப் பணம் தரச் சொல்லியிருக்கிறான். இளைய மகன் ராஜமோகன் முதலில் விற்க மறுத்திருக்கிறான். பிறகு, அவன் மனைவி தனிக் குடித்தனம் போகுவதற்கு இது சரியானச் சந்தர்ப்பம் என்று மந்திரம் ஓதி, அவனைச் சம்மதிக்க வைத்துவிட்டாள். தன் காலம் முடியும்வரை வீட்டை விற்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தாள் காமாச்சிப் பாட்டி. அந்த வீட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கு எல்லாம் தன் கணவரோடு வாழ்ந்த வாழ்க்கைச் சுவடுகள், மறக்க முடியுமா அவளால்? இருந்தாலும் தன் பேரன் படிப்புக்கு உதவியாக இருக்கும் என்று நிலையில் இறுதியாகத் தன் கணவரின் வியர்வையில் வாங்கிய வீட்டை விற்கச் சம்மதித்தாள்.

மகன்கள் இருவரும் வீடு விற்ற பணத்தைப் பிரித்துக்கொண்டார்கள். ஆனால் காமாச்சிப் பாட்டி?” அண்ணன் வீட்டில் இரும்மா” என்று தம்பியும், “தம்பி வீட்டில் இரும்மா” என்று அண்ணனும் கூறி, கடைசியில் அவளை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டனர். போகும்போதெல்லாம் காமாச்சிப் பாட்டி என்னிடம் இதையேத்தான் சொல்லி நொந்துகொள்வாள்.

“அடடா! விட்டுத் தள்ளுங்க, சுயநலத்திற்காகக் கருணைக் கொலை பண்ணத் துணியும் உலகம் இது, உங்களை உயிரோடவாவது விட்டு வச்சாங்களே! சந்தோஷப்படுங்க…!” என்று ஆறுதலாகக் கூறித் தேற்றுவாள் மனோரஞ்சிதம் பாட்டி.

“ஆமாம், உயிரோட இருக்கேன்! ஏன்? சி.பி.எஃப்ல இன்னும் கொஞ்சம் பணம் இருக்குல்ல, அதான் என்னை இன்னும் உயிரோட விட்டுருக்காங்க” காமாச்சிப் பாட்டி கண்ணீருக்கு இடையில் பொருமித் தள்ளுவாள்.

அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் இன்னொரு சுவாரசியமானவர் சங்கரன் தாத்தா.

“அம்மா தீபா, என்னைக் கோயிலுக்குக் கூட்டிக்கிட்டு போயேன்” நான் போகும்போதெல்லாம் பொக்கை வாய்த்திறந்து கேட்கும்போது, அவருடைய பக்தியை நினைத்துப் பெருமையாக இருக்கும். முருகன் அவருடைய சட்டைப்பையில் நிரந்தரமான இடம் பிடித்திருந்தார். கோவணத்துடன் வேல் ஏந்தி, பழனி மலையில் கம்பீரமாக நிற்கும் முருகனின் முகத்தில்தான் அவருடைய காலைகள் மலரும்.

“போவோம் தாத்தா, ஒரு நாளைக்கு இங்க இருக்கிற அதிகாரிகளிடம் உத்தரவு வாங்கிட்டு வாடகை வண்டியில் அழைச்சிட்டுப் போறேன்” என்ற சமாதானங்கள் ஒவ்வொருமுறையும் பொய்த்துக் கொண்டிருந்தன. பாவம் தாத்தா, இன்று ஹோமில் இருக்கும் அதிகாரி பாத்திமாவிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக்கொண்டேன்.

இப்படிப் பலதரப்பட்ட முதியவர்கள் இருந்தாலும், என்னை மிகவும் கவர்ந்தவர் ராமசாமிப் பெரியவர்தான். அனைவரும் அவரைச் செல்லமாகப் பெரிசு பெரிசு என்றுதான் கூப்பிடுவார்கள். இயக்குநர் மணிரத்தினம் படங்களில் வரும் கதாபாத்திரம்போல் அளவான வசனங்கள் அளந்து தான் பேசுவார். மற்றவர்களைப் போல் இல்லாமல் நல்ல வசதியாக வாழ்ந்தவர்.

அந்தக் காலத்தில் லிம் சு காங்கில் பூச்செடிகள் வளர்த்துப் பெரிய நிறுவனங்களுக்கு விற்றுவந்தவர். வியாபாரத்தில் வந்த பணத்தில் தன் ஒரே மகனைப் படிக்கவைத்துப் பட்டதாரியாக்கினார். மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியாவுக்குப் போனவன் அங்கேயே வேலை தேடி, பச்சை அட்டை வாங்கி, நிரந்தரமாகத் தங்கிவிட்டான். அதற்காகப் பெரிசுமேல் பாசம் இல்லை என்று சொல்ல முடியாது. விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தன்கூடவே வரும்படிக் கெஞ்சுவான்.

“போடா, நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கேதான், நான் செத்தாலும் என்னோட உடம்பை இங்க இருக்கிற மண்புழுக்களுக்குத் தீனியாத் தருவேனே ஒழிய, உன்ன மாதிரி வேற நாட்டோட பொருளாதாரத்தைப் பெருக்க என்னோட உழைப்பைத் தரமாட்டேன்” என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறுவார். வயோதிகத்தால் உடல் சுருங்கி இருந்தாலும், அவருடைய பார்வையில் அழுத்தம் இருக்கும். முன்னே நிற்பவரின் எண்ணத்தை அறிந்து கொள்ளும் அளவுகோல் அவரிடம்இருந்தது.

அடிக்கடி நோய்வாய்ப்பட்டதால், தொடர்ந்து பூந்தோட்டத்தைப் பராமரிக்க முடியாமல் அவருடைய வியாபாரத்தைப் பக்கத்து நில உரிமையாளரிடம் விற்றுவிட்டார். மேலும் அவர் வீடு, உடமைகளை விற்று அவருடைய மகனுக்குப் பாதியையும், மீதியை இந்த முதியோர் இல்லத்துக்கும் நன்கொடையாகக் கொடுத்து அவரும் இங்கேயே நிரந்தமாகக் குடி வந்துவிட்டார். அவர் வரும்போது அவருக்கென்று சில துணிமணிகளும், ஒரு போகன்விலாச் செடியையும்தான் கொண்டுவந்தார்.

அந்தச் செடிக்குக்கூட ஒரு கதை இருக்கிறது என்பதைச் சங்கரன் தாத்தா கூறக் கேட்டிருக்கிறேன். அது அவரது ஐம்பதாவது பிறந்தநாளுக்கு அவருடைய மனைவி அவருக்குப் பரிசாகக் கொடுத்ததாம். ஆனால் அவருடைய துர்ப்பாக்கியம், அந்த வருடமே அவர் மனைவியைக் காலன் களவாடிச் சென்றுவிட்டான். அதிலிருந்து அவர் அந்தச் செடியைப் பொக்கிஷமாகப் பாதுகாத்து வருகிறார். அந்த வெள்ளை நிறப் போகன்விலாச் செடி இப்பொழுது ஒரு பூதாகரமான செடியாக வளர்ந்திருந்தது. நான் பார்க்கும் நேரமெல்லாம் அந்த போகன்விலாச் செடியின் பக்கத்தில்தான் அமர்ந்திருப்பார். திருகி வளர்ந்து கிடக்கும் போகன்விலாக் கிளைகளுக்குள் அடைந்து, இடம் மாறித் தாவும் சிட்டுக்குருவிகளின் சத்தத்தில் தன்னை மறந்து உட்கார்ந்திருப்பார்.

பூத்ததும் வாடும் பூக்களுக்கிடையில் பலநாட்கள் வாடாமல் தன்னைத் தாங்கிடும் காம்போடு நீண்ட நாட்கள் உறவாடும் போகன்விலாப் பூக்களை எனக்கும் பிடிக்கும். பச்சைப் புல்தரையில் சிதறிக்கிடக்கும் வெள்ளைப் பூக்கள், அவை எழுதப்படாத காகிதங்கள் போலக் காட்சியளிக்கும்.

பெரிசு அதிகமாகப் பேசமாட்டார், ஆனால் நான் போகன்விலாப் பூக்களை இரசிப்பதை அவரும் இரசிப்பார். அவற்றைப்பற்றிப் பேசும்போதெல்லாம் அவர் கண்களில் மலர்ச்சி தெரியும், மழைக்குப் பின் தோன்றும் வானவில்லாய்த் தோன்றி மறையும் அவரது மந்திரப் புன்னகை. அவருடைய அந்தப் புன்னகை ஒன்றே எனது அன்றைய நாளின் ஊட்டமருந்து. அழும் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதன் அழுகையை நிறுத்திடும் ஒரு தாய்மையின் நிறைவு கிடைத்திடும்.

“என்ன, நான் பேசிக்கிட்டே போறேன், நீ பதிலே சொல்லாம இருக்குறே?” மூர்த்தியின் கேள்வி என்னை மீண்டும் காருக்குள் இழுத்து வந்தது.

“ஹ்ம்ம், என்ன கேட்டீங்க?”

“சரியாப் போச்சு, உடம்புதான் இங்கே இருக்கு, மனசு எங்கே இருக்கு? நான் வர லேட்டாகும், நீ வீட்டுக்கு எத்தனை மணிக்கு வருவேன்னு கேட்டேன்” அவர் கேட்கும்போதே நான் இறங்கும் இடமும் வந்தது.

“ஹ்ம்ம் ஓடு ஓடு! உன் சொந்தகாரங்க எல்லாம் காத்துக்கிட்டு இருப்பாங்க” என்றார் கிண்டலாக.

“சரிங்க, நான் சொந்தமா வீட்டுக்குப் போயிடறேன், வீட்டுக்குப் போனதும் உங்களுக்குப் போன் பண்ணுறேன்”. இந்தக் கிண்டலுக்கு ஒன்றும் குறைவில்லை!! ‘அவங்களாச்சும் நான் பேசுறதைக் காது கொடுத்துக் கேக்கிறாங்க, இரசிக்கிறாங்க, உங்களுக்குத்தான் நான் பேசுவதைக் கேட்கப் பொறுமை இல்லையே!’, மனசுக்குள் முணுமுணுத்துக் கொண்டே காரிலிருந்து இறங்கினேன்.

கார் மறைந்ததும் முதியோர் இல்லக் கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்தேன். விடியற்காலையில் பெய்த மழையால் நடைப்பாதைகளில் ஆங்காங்கே கிடந்த சிறு குழிகள் திடீரென்று முளைத்த குட்டிக் குளங்கள் போல் காட்சியளித்தன. எனது சேலை நனைந்துவிடாமல் கொஞ்சம் தூக்கிப் பிடித்து ஈரம் இல்லாத இடங்களாகப் பார்த்து என் கால்தடங்களைப் பதித்து நடந்தேன்.

வழக்கமாக வெளியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சின்னச் சின்னக் குழுக்களாக உட்கார்ந்திருக்கும் முதியவர்களைக் காணவில்லை. ‘ஈரக் காற்று வீசுவதால் இன்று எல்லாரும் வெளியே வெளியே வரலையோ?’ நடையில் வேகம் கூட்டினேன்.

முதலில் கண்ணில் பட்டது பங்கஜம் பாட்டிதான். எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்கும் அவர் முகத்தில் இன்று ஒருவிதக் கலவரம் தெரிந்தது. வானத்தைப் பார்ப்பதும், கையெடுத்துக் கும்பிடுவதும், தனக்குள் பேசிக்கொள்வதுமாகத் தெரிந்தது.

‘ஒருவேளை காமாச்சிப் பாட்டிக்கு ஏதும்…’ மனம் என் நடையைவிட வேகமாக ஓடியது.

“என்ன பாட்டி, ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?” என் பதற்றத்தை வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்க முயற்சித்தேன். பங்கஜம் பாட்டி உப்புமா டப்பாவைப் பிடித்திருந்த என் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். கண்களில் பொலபொலவெனக் கண்ணீரை உதிர்த்தார், ஆனால் வார்த்தைகள் வரவில்லை. என்னைப் பார்த்ததும் சங்கரன் தாத்தா ஓடி வந்தார்.

“நம்ம பெரிசு…” வார்த்தைகளை முடிக்க முடியாமல் திக்கினார்.

“என்ன தாத்தா, பெரிசுக்கு என்ன தாத்தா?” என் விழிகள் அந்த அறை முழுதும் துழாவின. எங்கேயும் நான் தேடும் முகம் தென்படவில்லை. கலவரமான பலமுகங்கள் என்னைப் பார்ப்பதை உணர்ந்தாலும் வெறுமையான உணர்வே என்னை ஆட்கொள்ள முயற்சித்தது.

“பெரிசுக்கு என்ன?” இப்பொழுது பதற்றம் அதிகரித்து, அது என் குரலிலும் வெளியானது. காமாச்சிப் பாட்டிதான் எனக்குப் புரியும்படி விளக்கினார். காலையில் எழுந்ததும் பெரிசு வழக்கம்போல் வெளியில் வந்திருக்கிறார், பிறகு திடீரென்று உள்ளே வந்து அவருடைய கட்டிலில் படுத்தவர், பேச்சு மூச்சு இல்லாமல், பார்வை ஒரே இடத்தை விட்டு அகலாமல், அசையாமல் வெகுநேரம் கிடந்திருக்கிறார். அவருக்குக் காலைச் சிற்றுண்டி கொடுக்க வந்த இல்ல அதிகாரி அவருடைய நிலையைப் பார்த்துப் பயந்து பெரிய அதிகாரிகளிடம் கூறி ஆம்புலன்சில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகத் தகவல் கூறினார்.

“எந்த மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போயிருக்காங்க?” ஒரு பெரிய ஈய உருண்டை என் தொண்டைக்குழியில் சிக்கிக்கொண்டது போல் உணர்ந்தேன். ‘கடவுளே, பெரிசுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது, அவர் உயிர் பொழைச்சு வந்தார்னா உனக்கு நூத்தியெட்டுத் தேங்காய் உடைக்கிறேன் புள்ளையாரப்பா!’

“இப்பக் கொஞ்சம் முன்னாடிதான் பாத்திமா மேடம் வந்து, பயப்படாதீங்க, அவரைச் சாங்கி ஜெனரல் ஆஸ்பித்திரிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்னு சொன்னாங்க..”, பங்கஜம் பாட்டி உயிரோட்டமே இல்லாத சன்னமான குரலில் சொன்னார்.

“நேத்துவரைக்கும் நல்லாத்தான்மா இருந்தார், நாளைக்கு அந்த பொண்ணு வரும்லன்னு உன்னைக்கூடக் கேட்டார் அம்மா”, காமாச்சிப் பாட்டியும் குரல் கம்மச் சொன்னார். என் கண்களில் வழிந்தோடிய கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டேன்.

“சரி பாட்டி, தைரியமா இருங்க, நானும் உடனே அவரைப் போய்ப் பார்க்கிறேன், உங்களுக்கு எல்லாம் உப்புமா செஞ்சு கொண்டு வந்திருக்கிறேன், அவர் குணமாகி வந்திடுவாரு, நீங்க கண்டதையும் கற்பனை பண்ணாம இந்த உப்புமாவைச் சாப்பிடுங்க”

அவர்களிடம் விடைபெற்று வேகமாக வெளியே வந்தேன். அப்பொழுதுதான் அந்தக் காட்சி என் கண்ணில் பட்டது. விடியலில் பெய்த மழையில், வெள்ளை நிறப் போகன்விலாச் செடி மின்னலால் தாக்குண்டு கருகிக் கிடந்தது. வானத்தில் மீண்டும் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டன.

– நீர்த் திவலைகள் (சிறுகதைகள்), டிசம்பர் 2017, ஆர்யா கிரியேஷன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *