கழுத்தறுத்தான்

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 30, 2022
பார்வையிட்டோர்: 5,708 
 

“அட… எவ்வளவு பெருசா இருக்கு.. ஒரு வான் கோழி அளவுக்கு இறைச்சி வரும் போல இருக்கே..”

கழுத்தில் முடி இல்லாமல் கொழு கொழுவென்று ஓடித்திரியும் அந்தக் கழுத்தறுத்தான் சேவலைப் பார்ப்போரில் பெரும்பாலானோர் உதிர்க்கும் வார்த்தைகள்தாம் இவை.

ஆனால் அப்படிச் சொல்பவர்கள் மீது கடுமையாக ஆத்திரப்படுவான் அமுதன். காரணம் அவனைப் பொறுத்தவரையில் அந்தக் கழுத்தறுத்தான் சேவல் ஒரு செல்லப் பிராணி. விடியற்காலையில் கதவைத் திறக்கும் பொழுது பெரும்பாலும் அமுதனின் கண்ணில் முதலில் தென்படுவது கழுத்தறுத்தானாகத்தானிருக்கும். அவனைக் கண்டதும் ஓடிவந்து ஒரு வகையில் ஒலி எழுப்பி பேசத் தொடங்கி விடும். “என்ன .. சாப்பாடு வேணுமா…. இப்போ தர்றேன்..” என்று அமுதன் சொல்லவும் அதற்குப் பதில் கொடுப்பதைப் போல உடனே ஒலி கொடுக்கும். வா – என்று ஒற்றைக் கையை நேராக நீட்டியதும், அவனது கையில் பறந்து அமர்ந்துவிடும். அப்பொழுதெல்லாம் அமுதனுக்குப் பெருமையாகவும் மற்றவர்களுக்கு வியப்பாகவுமிருக்கும். “ஏங்க.. அடுத்த வாரம் நாம எல்லோரும் சென்னைக்குப் போறோம்… இந்தச் சேவலுக்கு இரை போடறதுக்கும் ஆளில்ல… நம்ம இல்லாத நேரத்துல யாரும் களவாண்டு கறிவச்சாலும் வச்சிடுவாங்க… இதக் கறி வைக்கவும் நமக்கு மனசு வராது.. அதனால, விலைக்குக் கொடுத்திடுவோம்…” என்று சொன்ன மனைவியைக் கோபமாகப் பார்த்தபடியே… “சும்மா இருப்பியா… இத கொல்லக் கொடுக்கறதுக்குத்தான் இவ்வளவு பாசமா வளத்தோமா…! அது வாழ்றது வரை வாழ்ந்து செத்துப் போகட்டும்.. நம்ம தென்னை மரத்தடியில புதைச்சிட்டுப் போவோம்” என்றான் அமுதன்.

கழுத்தறுத்தானின் பாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதானிருந்தது.

“ஏங்க… நாளை சென்னைக்குக் கிளம்பணும்… இந்தச் சேவலுக்குத்தான் இரை போட ஆள் இல்ல… நாம இல்லாத நேரத்துல யாராவது பிடிச்சி எப்படியும் கறி வச்சிடுவாங்க…”. மறுபடியும் ஆரம்பித்தாள் அமுதனின் மனைவி.

அந்தச் சேவலை நிரந்தரமாய்ப் பிரிவது பற்றிக் கனவில் கூட நினைத்திருக்காத அமுதன் யோசிக்கத் தொடங்கினான்… அலைப் பேசியைக் கையில் எடுத்தான் “இங்க ஒரு கோழி இருக்கு… பாசமா வளத்ததால எங்களுக்கு அத கொல்ல மனசு வரல்ல… அதனால, கோழிய கொண்டுபோய் பாதி இறைச்சியை நீங்க எடுத்திட்டு எங்களுக்கும் பாதி கொடுங்க” என்று பக்கத்து ஊரில் வசித்த தனது அண்ணனிடம் சொன்னான் அமுதன்.

அரைமணி நேரத்திற்குள் ஒரு பையுடன் வந்த அமுதனின் அண்ணன் “கோழி எங்க” என்று கேட்டார். இதோ ஒரு நிமிடம் என்ற அமுதன் “வா” என்று கூப்பிட்டதும் ஓடி வந்தது கழுத்தறுத்தான். வழக்கம் போல ஒற்றைக் கையை நீட்டியதும் ஏதோ பேசுவது போல ஒலி எழுப்பியபடியே பறந்து கையில் ஏறி நின்றது. “இந்தப் பைக்குள்ள போடு.. கறிக் கடைக்கு போய் முடிய பின்னச் சொல்லி, இறைச்சியையும் வெட்டி வாங்கிட்டு வந்திடறேன்” என்றார் அமுதனின் அண்ணன்.

செல்லமாக ஏதேதோ பேசியது போல ஒலி எழுப்பியபடியே கையில் நின்ற சேவலை அடுத்தக் கையையும் சேர்த்துப் பிடித்தான் அமுதன். எந்த எதிர்ப்பும் காட்டாமல் பவ்யமாய்… பாசமாய்… அப்படியே அசையாமல் இருந்தது. அண்ணன் பையைக் காட்டியதும் அதனுள் போடப்போன அமுதனை கடைசிப் பார்வை பார்த்தது கழுத்தறுத்தான். அதனைப் பார்த்தால் தனது மனம் மாறிவிடும் என்று எண்ணிய அமுதன், வலிந்து முகத்தைத் திருப்பியவாறே அதைப் பைக்குள் போட்டான்.

சற்று நேரத்தில் வந்த அமுதனின் அண்ணன் கையில் இரத்தக் கறைகளோடு இரண்டு நெகிழிப் பைகள் இருந்தன. “இந்தா.. இதில் பாதி இறைச்சி இருக்கு” என்று ஒரு பையை நீட்டியவர், எனக்கு ஒரே ஆச்சரியம் என்றார். வியப்போடு எட்டிப் பார்த்த அமுதனிடம், அந்த இறைச்சிக் கடை இங்கிருந்து நூறு மீட்டர் தூரம்தான் இருக்கும்…. பொதுவா நாட்டுக்கோழிகள பல மணிநேரம் சாதாரண பை.. அல்லது சாக்குப் பைக்குள்ள கெட்டிப் போட்டாலும் சாகாது. ஆனா, இந்தச் சேவல் நான் கொண்டு போகும் போது வழியிலேயே செத்துட்டு. இறைச்சிக் கடைக்காரர் பையிலிருந்து அதைக் கொல்ல வெளியே எடுக்கும் போதே செத்துதான் இருந்து… அதுதான் எனக்கு ஒரே ஆச்சரியமாப் போச்சி” என்றார்.

இரத்தம் வழிந்தபடியே இருந்த நெகிழிப் பையின் மீது நிலைகுத்திய பார்வை பார்த்த அமுதனின் மனத்தினைக் குற்ற உணர்வு ஆக்ரமித்தது. கண்களில் நீர் பனித்தது. தன்னைக் கண்டதும் ஓடி வந்து கைகளில் பறந்தமரும் அதன் செயல்கள் உள்ளத் திரையில் ஓடிக் கொண்டிருந்தன. “உன்னைக் கொல்லக் கொடுத்த பாவம் என்னைச் சேரவேண்டாம் என்று நீயே மூச்சடக்கித் தற்கொலை செய்து கொண்டாயா… அல்லது பாசக்காரனே.. நீயா என்னை கொல்லக் கொடுக்கிறாய்… தின்னப் போகின்றாய்… என்ற திகைப்பில் உனது இதயத்துடிப்பு நின்றுபோனதா…” என்று தனக்குள்ளே கழுத்தறுத்தானோடு பேசினான் அமுதன். நீண்ட பெருமூச்சோடு இறைச்சிப் பையை எடுத்தபடியே தென்னை மரத்தை நோக்கி நடந்தான்.

Print Friendly, PDF & Email

5 thoughts on “கழுத்தறுத்தான்

  1. கதையின் ஆரம்பமும் முடிவும் நன்றாக இருக்கின்றது. ஆனால் கோழி இடைவழியில் இறந்துபோனது அதுவும் 100 மீட்டர் தூரத்தை கடக்கமுன்பே என்பது பொருந்தவில்லை. மூச்சுத்திணறி இறப்பதற்கும் குறைந்தது 20 நிமிடமாவது அடைபடவேண்டும். பிரிவுத்துயரினால் பிராணிகள் இறக்கும் என்பது நடைமுறைக்கு சரிவராது.கோழி இடையில் இறந்தது என்ற வாசகங்கள் இல்லாதிருந்தாலும் கதை நன்றாகத்தானிருக்கும்.வீட்டில் வளர்க்கும் பிராணிகளை கொன்று சாப்பிடுவது கக்ஷ்டமானதுதான்.

    1. Animals also get diseases like heart attack. So that part of this story can not be considered a big contradiction

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *