கள்ளபார்ட்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 2, 2023
பார்வையிட்டோர்: 1,547 
 

(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த ஊர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகும் அமைதியும் நிறைந்த இடம். எதிரே, சற்று தூரத்தில், கம்பீரமாக நின்ற மலையின் தோற்றம். முன்னே, மழை நீர் நிறைந்து கிடந்த ஏரியின் பரப்பு. எங்கும் பசுமையும் எழிலும் பூசியவாறு நின்ற மரங்கள், செடிகள், இனிய காற்றும், அடிக்கடி சிலு சிலுவென்று பூ உதிரல்போல் படிந்து மறையும் இளம் தூறலும் இதமாக இருந்தன.

ஒரு பாலத்தின்மீது அமர்ந்து மன நிறைவுடன் ரசித்துக் கொண்டிருந்தபோது, என் எண்ணத்தை நண்பர் சிதம்பரத் திடம் தெரிவித்தேன். அவரது நீண்ட நாளைய அழைப்பை ஏற்று, அவர் அதிதியாக வந்திருந்தேன். ஊரையும் சூழ்நிலை யையும் பார்த்த பிறகு, ‘முன்னரே வராமல் இருந்துவிட் டேனே! என்ற வருத்தம்கூட எனக்கு ஏற்பட்டது.

‘இந்த ஊருக்கு இன்னொரு பெருமையும் உண்டு’ என்றார் நண்பர்.

‘என்ன பெருமையோ!’ என்று அலட்சியமாகக் கேட்டேன்.

‘கள்ளபார்ட் காமாட்சியின் ஊர் இதுதான்!’

கள்ளபார்ட் காமாட்சியா? நான் அறிந்த வரையில் அப்படிப் புகழ் பெற்றிருந்த நடிகை ஒருத்திதான் இருந்தாள். முப்பது வருஷங்களுக்கு முன்பு, தென் ஜில்லாக்களில் அவள் பெயர் ‘கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தது. அப்போது புகழேணியின் உச்சிக்கு விறுவிறு என்று ஏறிவந்த அவள் திடீரென்று மறைந்து விட்டாள். அதாவது, நாடக உலகி லிருந்து ஒதுங்கிக் கொண்டாள். அந்தச் சமயத்தில் அவளுக்கு வயது இருபதுக்குள்தான் இருக்கும். ஏன் அவள் திடீர் ஓய்வு பெற்றாள் என்பது யாருக்கும் தெரியாது. அவள் என்ன ஆனாள், எங்கே போனாள் என்பதும் தெரியாது. இடைக் காலத்தில் செத்துப்போயிருக்கவும் கூடும்.

இதை சிதம்பரத்திடம் சொன்னேன்.

அவர் புன்முறுவல் பூத்தார். அதே காமாட்சிதான். அவள் இந்த ஊர்க்காரியே. அவள் சாகவும் இல்லை; வேறு எங்கும் போய்விடவும் இல்லை; இங்கேயேதான் இருக்கிறாள் என்றார்.

‘இதே ஊரிலா? இப்பகூடவா?’ நான் ஆச்சர்யமாகக் கேட்டேன்.

‘ஆமாம்.’

‘கிழவியாகி இருப்பாளே?’

‘கிழவி என்று சொல்வதற்கில்லை. வயசு ஐம்பது இருக்கும். ஆனால், பார்வைக்கு அது தெரியாது. ஒழுக்கத்தோடு கட்டுப்பாட்டுடனும் மன நிறைவோடு வாழ்ந்து வந்திருப்பதனால், அவள் தோற்றத்திலும், முகத்திலும் இனிய பொலிவு குடிகொண்டிருக்கிறது’ என்று வர்ணித்தார் நண்பர். அது என் வியப்பை வளர்த்தது.

‘அவள் ஏன் நாடகத் தொழிலை தீடீரென்று விட்டு விட்டாள்? இந்த ஊரில் எவ்வளவு காலமாக இருக்கிறாள்? இப்போது என்ன செய்கிறாள்?’ என்று கேள்விகளை அடுக்கினேன்.

நண்பர் சொன்னார்: ‘இதில் எல்லாம் யாரும் அக்கறை காட்டுவதில்லை. அவள் நாடகக்காரியாக இருந்தாள். கள்ளபார்ட் வேஷத்தில் புகழ்பெற்றவள் என்பதுகூட இந்தப் பக்கத்துக்காரர்களுக்கு மறந்துவிட்டது. அவள் ஒதுங்கி, எதிலும் ஒட்டாமல் பூஜை விரதம் என்று காலத்தைக் கழித்து வருகிறாள். சாப்பாட்டுக்கு மயக்கமில்லை. அந்தக் காலத்திலேயே அவளுக்குப் போதுமான நிலமும் தோட்டமும் சேர்ந்திருந்தது. சொந்த வீடும் உண்டு. ஒற்றை மனுஷி தானே!’

‘அவளைக் கண்டு பேச முடியுமா?’ என்று ஆவலோடு விசாரித்தேன்.

‘பேசலாமே.நாளைக்குப் பார்த்தால் போச்சு!’ என்று முடிவு கட்டினார் அவர். அப்புறம் வேறு எதையோ பேசிக் கொண்டிருந்தார்.

ஆனாலும், என் மனம் கள்ளபார்ட் காமாட்சியின் நினைவாகவே அலைபட்டுக்கொண்டிருந்தது.

சினிமாவும் சினிமா தியேட்டர்களும் மக்களின் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டிராத காலம் அது. அநேக முக்கிய நகரங்களில்கூட, பெயருக்கு ஒரு சினிமாத் தியேட்டராவது இருந்ததில்லை அப்போது. மக்களின் பொழுதை போக்கடிப்பதற்கு உதவிபுரியும் திருப்பணியை நாடகக் குழுவினரும் சர்க்கஸ் கம்பெனிகளும் மேற்கொண்டு நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்து தொழில் புரிந்து வந்த காலம் அது.

அந்தக் காலத்தில் தென் ஜில்லாக்களில் அடிக்கடி வந்து போன நாடகக் கம்பெனிகள் பலவும் நீளநீளமான பெயர்களைத் தாங்கியிருந்தது போலவே, மதுரையை மூலஸ்தானமாகவும் கொண்டிருந்தன. அது ஏனோ தெரியாது. ‘மதுரை ஸ்ரீ மீனலோசனி வித்துவ ரத்தின் நாடக சபா’, ‘மதுரை ஸ்ரீ சந்தான கிருஷ்ண சங்கீத விநோத நாடக சபா’ என்கிற தன்மையில்தான் அந்தக் குழுவும் பெயர்சூட்டிக்கொண்டிருந்தது. ‘மதுரை ஸ்ரீ மனமோகன முத்தமிழ் கலா வித்வ சங்கீத நாடக சபா’ என்று.

எல்லா நாடக சபைகளும் நீடித்த காலம் வெற்றிகர மாகவும் லாபகரமாகவும் தொழில்புரிந்தன என்று சொல்வ தற்கில்லை. ‘மனமோகன சபா’ வுக்கும் ஜீவ மரணப் போராட்ட நிலைதான். ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒன்றிரு நடிகரால் புகழும் பெயரும் கிட்டின. இந்தக் கம்பெனியின் ஒளிச்சுடராக இருந்தவர் கள்ளபார்ட் காத்தலிங்கம்.

கறுப்பில் சட்டையும் கால்சட்டையும் அணிந்து, காலில் சலங்கை கட்டிக்கொண்டு, பம்பையாய்ச் சிலிர்த்து நிற்கும் பரட்டைத் தலைமுடி தனி ஆட்டம்போட, அவர் மேடைமீது திங்குதிங்கென்று குதித்துப் பாட்டுப் பாடித் துள்ளிப் பாய்வது பிரமாதமாக இருக்கும். ஆர்மோனியக்காரர் முன்னால் போய்க் குதித்துக்கொண்டே, கோட்டைக் கொத் தளம் மீதிலேறிக் கூசாமல் குதிப்பேன்… பலபா குதிப்பேன் … ஐஸா குதிப்பேன்… ஜலக்கா… பலபா ஐஸா… என்று அடுக்கி உருட்டி ஆர்மோனியஸ்டுக்கு ‘தண்ணிகாட்டுகிற வேலை’ ரசிகமகா ஜனங்களின் கைதட்டலையும் ஆரவாரத்தை யும் தட்டி எழுப்பும். இப்படி குதிப்பேன் என்பதைத் துவையலாக்கி திருப்திப்பட்ட பிறகுதான் அவர் ‘காவலர் கண்டுபிடிக்க வந்தால் கத்தியால் குத்திடுவேன்’ என்று அடுத்த அடிக்குத் தாவுவார். ஒரு நீச்சல் கப்பலைப் பிடிப் பேன், கல்கத்தா துறைமுகம் பார்ப்பேன்’ என்று அவர் மேலேறுவதற்குள் ஆர்மோனியஸ்ட் பாவம், திணறித் திண்டாடிப்போவார்.

இந்த ஒரு பாட்டுக்கே அரை மணி நேரம் எடுத்துக் கொள்வார் அவர். ‘ஆர்ப்பாட்டக் கள்ளன் காத்தலிங்கத் தின் அமர்க்களமான நடிப்பைக் காணத் தவறாதீர்கள்* என்று நோட்டீசில் விசேஷ அறிவிப்பு அச்சிடப்பட்டிருக்கும். சில சமயம் அவர் கைகளில் சிறு தபேலாக்களை இடுக்கிக்கொண்டு, அவற்றில் அடித்து ஓசை எழுப்பி அட்டகாசம் பண்ணுவார். அவர் குதிக்கிற குதியில் மேடைமீது தூசி கிளம்பிப் படலமாய்ப் பரவிநிற்கும்.

நள்ளிரவில் திருட வருகிறவன் இப்படித்தான் ஆடி அட்டகாசம் பண்ணுவானாக்கும்? பாட்டுப்பாடி குதியாட்டம் போட்டு கலாட்டா செய்வானாக்கும்? இந்த நடிப்பில் ரியலிசம் இல்லையே!- இப்படி எல்லாம் விமர்சனம் பேசக் கூடிய மனோபாவமோ,ரசனையோ அந்த நாட்களில் தலை யெடுத்திராத காரணத்தினாலே, கள்ளபார்ட் காத்தலிங்கம் ஜமாய்த்துக்கொண்டிருந்தார். அப்பவே அவருக்கு வயது நாற்பதைத் தொட்டிருந்தது.

ஒருசில வருஷங்களில் அவரது மூப்பு முன்னைப்போல் குதியாட்டம் போட்டு நடிக்கவிடாதவாறு அவரைத் தடுத்துவிட்டது. ஏதோ வியாதிவந்து பலவீனப்படுத்தியது என்றும் கேள்வி. அதனால் புகழ் கொஞ்சம் டிம் அடிக்கத் தொடங் கியது. நாடக வசூலும் பாதிக்கப்பட்டது.

காத்தலிங்கம் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. அவர் மூளையில் ஒரு மின்வெட்டு ஏற்பட்டது. அதைச் செயல்படுத்தியதன் மூலம் கம்பெனியைக் காத்த அருளாளர் ஆகவும் மாறி நின்றார் அவர்.

அப்படி அவர் என்னதான் செய்தார்? முதன் முதலாக நாடகமேடையில் ‘பொம்பிளை கள்ளபார்ட்’டை அறிமுகம் செய்துவைத்தார். கவர்ச்சி அம்சங்கள் நிறைந்திருந்த இளம் பெண் ஒருத்தியை அட்டகாசக் கள்ளி ஆகப் பயிற்று வித்து, ‘ஏ ஒன் கள்ளபார்ட்காரி’ என்று மேடைக்குக் கொண்டுவந்த பெருமை கள்ளபார்ட் காத்தலிங்கத்துக்கே உரியது. அவரால் டிரெயினிங் கொடுக்கப்பட்டு, அறிமுக மானவள்தான் கள்ளபார்ட் காமாட்சி.

அவள் காத்தலிங்கத்தின் உறவுப் பெண் என்று சொன்னார்கள். ‘சொந்த அத்தை மகள்தான்’ என்று சிலர் அறிவித்தார்கள். அதெல்லாம் இல்லை. ரயிலில் பாட்டுப் பாடி காசுப் பிச்சை கேட்டுத் திரிந்த எவளோ ஒருத்தி. அவளைப் பிடித்து, பட்டை தீட்டிய வைரம் ஆக்கிவிட்டார் காத்தலிங்கம்’ என்று சிலபேர் சொன்னார்கள். ‘கழைக் கூத்தாடிகள் கோஷ்டி ஒன்றிலே அவர் இந்தப் பெண்ணை பார்த்தார், அவருக்குப் பிடிச்சிருந்தது. கூத்தாடிகளுக்குக் கொஞ்சம் ரூபாய் கொடுத்து, அவர் அவளை சேர்த்துக்கொண்டார். நல்லாப் பழக்கி நாடகக்காரி ஆக்கிவிட்டார்’ என்றும் பேச்சு அடிபட்டது.

உண்மை எதுவாக இருந்தாலும் சரியே. கள்ளபார்ட் காத்தலிங்கத்தின் செலக்ஷனும் டிரெயினிங்கும் சோடை போகவில்லை. காமாட்சி ‘ஜிஞ்சாமிர்த கள்ளபார்ட்காரி ஆகத் திகழ்ந்தாள்.

இரண்டு பேரும் ஒன்றாகவே மேடைமீது தோன்றினார்கள். காத்தலிங்கம் கோட்டைக் கொத்தளம் மீதிலேறி’ அடியைக்கொன்று மிதித்து அமர்க்களம் செய்து முடித்ததும், காமாட்சி துள்ளிப்பாய்வாள். அடுத்த அடிகளைப் பாடி வேலைத்தனங்கள் செய்து காட்டுவாள். நூலேணியில் நேராக ஏறுவதும் தலைகீழாக இறங்குவதும் அவள் செய்து காட்டும் சாதனைகளில் ஒன்றாக அமைந்தது, கம்பெனி பிழைத்தது. புகழ் எங்கும் பரவியது. மனமோகன நாடக சபாவின் ‘ஜில் சதாரம்’ நாடகத்துக்கு ஏகப்பட்ட பணம் வசூலாகும். அதே நாடகத்தைத் திரும்பத் திரும்ப நடிக்கவேண்டிய அவசியமும் ஏற்படும். அதில்தான் காமாட்சியின் நூலேணி சர்க்கஸ் இடம்பெற்றிருந்தது.

மூன்று வருட காலம் இப்படி போடு போடு என்று போட்டு நொறுக்கிய நொறுக்கிய ‘காமாட்சி திடீரென்று ஒரு நாள் இருளில் பதுங்கிவிட்டாள். காத்தலிங்கம் மட்டும் நடித்துக் கொண்டிருந்தார். அவரும் மேடை வாழ்வை விட்டு ஒதுங்கி யிருந்தால், ‘சரி இரண்டு பேரும் சேர்ந்து வாழ எங்கேயோ போய்விட்டார்கள்’ என்று முடிவு கட்டியிருக்கலாம். அப்படி நடக்கவில்லை.

கள்ளபார்ட் காத்தலிங்கத்தின் அட்டகாசங்களோ, இதர நடிகர்களின் திறமையோ, சங்கீத சரமாரிகளோ, ஆர்மோனியச் சக்கரவர்த்தி அங்கப்பாவின் கைவரிசையோ. கோடையிடி கொல்லம் குமரப்பாவின் மிருதங்க முழக்கங் களோ, ‘மதுரை ஸ்ரீமன மோகன முத்தமிழ் கலாவித்வ சங்கீத நாடக சபா’வின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்திக் தாங்கிக் காப்பாற்ற முடியவில்லை. நலிந்து மெலிந்து மரணம் எய்தியது அது. அதன் பிறகு காத்தலிங்கம் பற்றிய செய்தி களும் காதில் விழவில்லை.

கள்ளபார்ட் காமாட்சி இந்த ஊரில் இருக்கிறான், அவளைக் கண்டு பேச வாய்ப்புக்கிட்டும் என்று தெரிந்ததும், அவளிடம் அவளது திடீர் நாடக மேடை துறவுபற்றியும் காத்தலிங்கம் பற்றியும் விசாரித்து அறியவேண்டும் எனும் ஆசை எனக்கு ஏற்பட்டது. அவள் திடுமென நடிக்க வந்ததில் அதிசயம் எதுவும் இல்லை. பிழைப்புக்காக நாடகத் தொழிலை ஏற்றிருப்பாள்.

ஆனால் அப்படி நடிக்கவந்தவள் உச்சகட்டத்தில், திடீ ரென தன்னைத்தானே இருட்டடிப்பு செய்துகொண்டது ஏன்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்ற சந்தேகம் எனக்கு. இதுபற்றி அந்தக் காலத்தில் தெளிவு பிறக்க வழி இருந்த தில்லை. இப்போது நல்ல தருணம், அவளிடமே கேட்டு விடலாமே என்று குதித்தது என் மனம்.

மறுநாள் நாங்கள் அவள் வீட்டுக்குச் சென்றபோது காமாட்சி பூஜையை முடித்துவிட்டு, ஏதோ பக்திக் கதையைப் படித்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் சிதம்பரம் சொன்னது சரிதான், என என் மனம் ஆமோதித் தது. புனிதவதியாகத் திகழ்ந்த அவள் முகத்தில் அமைதியும் திருப்தியும் நிறைந்த ஒரு பொலிவு ஒளிர்ந்தது.

எங்களை வரவேற்று பாயில் உட்காரும்படி உபசரித்தாள். உள்ளே சென்று என்னவோ உத்திரவிட்டு வந்தாள். காப்பி தயாரித்து எடுத்து வரும்படி ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக் கிறாள் என்பது, சிறிது நேரத்தில் சுடச்சுட காப்பியைக் கொண்டுவந்து ஒரு சிறு பெண் தந்ததிலிருந்து புரிந்தது.

நண்பர் என்னைப்பற்றிச் சொன்னார். உற்சாகத்தோடு அதிகமாகவே அளந்தார் என்றே சொல்லவேண்டும். ‘நாடகங்கள், பழங்கால நாடக சபைகள், நடிகர்கள்பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம், அப்போது கள்ளபார்ட் காத்தலிங்கம் பற்றி இவர் வியந்து பாராட்டினார். நாடக மேடையில் அவர் ஆட்சி செலுத்திய அற்புதம் பற்றிப் புகழ்ந்தார். உங்களைப்பற்றியும் சொன்னார். உடனேதான் நீங்கள் இங்கேயே இருப்பதாகத் தெரிவித்தேன். அதிலிருந்து உங்களைப் பார்த்துப் பேசவேண்டுமே என்ற ஒரே அவா தான் இவருக்கு!’ என்று கூறினார்.

அவர் பேச்சில் நான் ‘தடி வெட்டிப் போட’ விரும்ப வில்லை. அது அவள் ‘தலையில் வைத்த சரியான ஐஸ்’ என்றே எனக்குப்பட்டது. அது நன்றாக வேலை செய்யவும் செய்தது.

‘அவங்கமாதிரி ஆளு யாரு இந்தக் காலத்திலே இருக் காங்க? கள்ளபார்ட்டிலே அவுக ராசா ஆச்சுதே!’ என்றாள் காமாட்சி. அதில் தனிப் பெருமையும் மகிழ்வும் தொனித்தன்.

‘நீங்க கூட அருமையாத்தான் நடித்தீங்க. அதிலும், அந்த நூலேணி வேலை… ஆகா!’ என்று வியப்புச் சொல் உதிர்த்தேன்.

‘நீங்க ஜில் சதாரம் பார்த்தீங்களா அந்த நாளிலே?’ என்று அதிசய பாவத்தோடு அவள் விசாரித்தாள்.

‘ஒரே ஒரு தடவை பார்த்தது உண்டு, உங்க கள்ள பார்ட்டை பார்ப்பதற்கென்றே நாங்க சிலபேர் போனோம். எங்க ஊரிலிருந்து அஞ்சு மைல் தள்ளி உள்ள டவுனில்தான் நாடகம். எவ்வளவு கூட்டம்! என்ன வரவேற்பு! அப்போ தெல்லாம் கள்ளபார்ட் காமாட்சி என்ற பேச்சுத்தானே எங்கும்’ என்றும் சொன்னேன்.

நேர்மையான புகழ்ச்சி எந்தக் கலைஞரின் உள்ளத்தையும் தொடாமல் போவதில்லை. அது எழுப்புகிற உளக் கிளர்ச்சியையும் முகமலர்ச்சியையும் எதிரே இருப்பவர்கள் நன்கு உணர முடியும்.

காமாட்சியின் முகத்திலும் ஒரு பிரகாசம் ஊர்ந்து மறைந்தது. எனினும் அவள் அடக்கத்தோடு சொன்னாள்: “எல்லாம் அவங்க தந்த பிரசாதம்தானே! அவுக என்னைக் கண்டு, எனக்கு நாடகமேடை வித்தை கத்துத் தராமல் போயிருந்தால், நான் எங்காவது அடுப்படியிலே கிடந்து வெந்து புழுங்கவேண்டியவதானே?

அவள் காத்தலிங்கம் மீது பக்தியே கொண்டிருந்ததாகத் தோன்றியது.

‘காத்தலிங்கத்துக்கு நீங்கள் உறவு முறைதானா?’

‘சொந்தமின்னுதான் சொல்லணும். எங்க ஐயா என்னை கரக ஆட்டத்திலே பழக்கிவிடனுமின்னு ஆசைப்பட்டாரு. அதுக்கு ஏற்பாடு செய்திருந்தாரு ஒரு சமயம் அவுக இந்த ஊருக்கு வந்தபோது. எங்க ஐயா என் ஆட்டத்தைப் பார்க்கும்படி அவுகளை அழைத்து வந்தாரு. அப்பவே அவுக சொன்னாக, கரக ஆட்டம் எதுக்கு? இதையும் நாடக மேடை யிலே இழுத்துவிடலாமே இன்னாக. அது விளையாட்டுக்குச் சொன்ன வார்த்தைன்னு நெனச்சேன். ஆனால், மறு வருஷமே அவுக வந்து, என்ன காமாட்சி, நாடகத்திலே ஆக்ட் பண்ண வாறியா? உன்னை ஏ ஒன் கள்ளபார்ட்காரி ஆக்கி விடுறேன்னாக. அப்படியே செய்யவும் செய்தாக.’

அவள் பூர்வ கதையை நினைவுகூர்ந்தபோது, காத்தலிங்கத்திடம் அவள் கொண்டிருந்த நன்றியும், நன்றியும், பக்தியும் மேலோங்கி நின்றன.

‘மனமோகன சபா கலைந்துவிட்டதும், காத்தலிங்கம் என்ன ஆனார்?’ என்று எனது வெகுநாளையக் கவலையை வெளிப்படுத்தினேன்.

‘கம்பெனி இல்லாமல் போனதும், அவுகளுக்கு என்னமோ போல ஆயிட்டுது. மனசே முறிஞ்சு போச்சுன்னு தோணிச்சு வாழ்க்கையே அஸ்தமிச்சுப் போனதாக நினைச்சிட்டாக. எங்கே போறது? என்னையும் அழைத்துக்கொண்டு, மலையடி வாரக் கிராமம் ஒன்றிலே போய், நிம்மதியாக இருக்க முயன்றாக. ரொம்ப நாள் ஓடலே, வயசும் ஆச்சு, மனசு விட்டுட்டுது. நாடக வாழ்க்கையிலே ஈடுபட்டிருந்த காலத் திலே வளர்ந்த குடிப்பழக்கம் உடம்பை கெடுத்திருந்தது. ஓயாத சீக்கு, கொஞ்ச காலத்திலே செத்து தெய்வம் ஆயிட்டாக. அதுக்கப்புறம் தான் இந்த ஊரோடவே வந்திட்டேன்.

அதற்கு முந்தி அவள் ஏன் நாடக வாழ்க்கையை, புகழின் உச்சநிலையில் இருந்தபோது திடுமென வெறுத்து ஒதுக்கினாள் என்று கேட்டுவிடவேண்டும் என்று துடித்தது என் மனம். ஆனால், அப்படிக் கேட்டால் அவள் பதில் சொல்வாளோ மாட்டாளோ என்ற தயக்கமும் இருந்தது.

‘நீங்கள் கள்ளபார்ட் வேஷத்திலே நடித்ததை கலெக்டர் துரை பார்த்துவிட்டு, மேடை மீது வந்து பாராட்டினாரே அன்றுதான் நான் நாடகம் பார்க்க வந்திருந்தேன்’

உங்கள் நடிப்பைக் கண்டு மகிழ்ந்த துரை, அவர்களது வழக்கப்படி உங்கள் கையைப் பிடித்துக் குலுக்கி, ஆங்கிலத் தில் பாராட்டுரை வழங்கினார். அவர் மறுபடியும் அவரது இடத்துக்கு வந்து அமர்ந்ததும், நீங்கள் மேடை முன் வந்து நின்று, சிரித்துக்கொண்டே, துரை அவர்கள் கைவிரலில் கிடக்கிற மோதிரத்தை எனக்குப் பரிசாகத் தருவார்கள் என எதிர்பார்த்தேன்; ஆனால் துரை என்னை ஏமாற்றிவிட்டார் என்று சொன்னீர்கள். அது அவரிடம் ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லப்பட்டதும், அவரும் சிரித்தார். சிரித்துக்கொண்டே தன் கைவிரலைப் பார்த்தார், திடுக்கிட்டார். அங்கே மோதிரம் இல்லை, நீங்கள் சிரித்தவாறே கள்ளனடா கள்ளனடா, தெற்கத்திக் கள்ளனடா! என்று பாடி, ஆட்டம் போட்டு மோதிரத்தை உயர்த்திக் காட்டினீர்கள். தனக்குத் தெரியாமல், தன் கையில் கிடந்த மோதிரத்தை நைஸாகத் திருடிவிட்டதை அறிந்து கலெக்டர் துரை திகைத்துப் போனார், நீங்கள் மேடையிலிருந்து கீழே வந்து, அவரை பணிவுடன் கும்பிட்டு, சும்மா வேடிக்கை பண்ணி னேன், துரை பெரிய மனசுபண்ணி என்னை மன்னிக்க வேண்டும் என்று சொல்லி, மோதிரத்தை அவரிடம் கொடுத் தீர்கள். அவர் சிரித்தார், உன்னை அரஸ்ட் செய்யோணும்; இனி நீ திருடனா ஆக்ட்பண்ணப்படாது; தடை போடணும் என்று கொச்சைத் தமிழில் சொன்னார். அந்த மோதிரத்தை உங்களுக்கே பரிசாக அளித்துவிட்டார். இல்லையா?

நான் பேசப்பேச, காமாட்சி வியப்புடனும், உள்ளூற அரும்பி மலர்ந்த சந்தோஷப் பெருக்கோடும் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘நீங்கள் நன்றாக ஞாபகம் வைத்திருக்கிறீர்கள், ஏயப்பா, அது நடந்து எவ்வளவு வருஷமாச்சு!’ என்றாள்.

‘நீங்கள் மறந்திருப்பீர்கள்…’

‘இல்லை இல்லை. அதை நான் மறக்கவே முடியாது!’ என்ற அவசர மறுப்புரை அவளிடமிருந்து வந்தது.

‘அதற்குப் பிறகு கள்ளபார்ட் காமாட்சி மேடையில் தோன்றவேயில்லை, கலெக்டர் துரை தடை உத்திரவு போட்டுவிட்டார். அதுதான் காரணம் என்று அப்போது சிலர் சொன்னார்கள்..’

அவர் ஏன் தடை போடுகிறார்? அவர்தான் ரசித்துப் பாராட்டினாரே. அவர் உண்மையான ரசிகர். மறுநாள் என் கள்ளபார்ட் திறமையையும் பொருத்தத்தையும் பாராட்டி கடிதம் எழுதி சர்டிபிகேட்டும் அனுப்பியிருந்தார். அதெல்லாம் இன்னமும் அப்படியே இருக்கிறது, என்று அவள் அறிவித்தாள்.

‘நான் ஏன் நடிப்பதை விட்டுவிட்டேன் என்றுதானே கேட்க விரும்புகிறீர்கள்” என்று அவளே தொடர்ந்தாள். ‘எனக்குப்பிரியம் இல்லை, விட்டுவிட்டேன்…ஆக்டு பண்ணினது போதும் என்று மனசுக்குப்பட்டது, நின்றுவிட்டேன்’… இப்படித்தான் நான் அந்தச் சமயத்தில் சொல்லிவந்தேன். ஆனால் இந்தப் பதில் உங்களுக்குத் திருப்தி அளிக்காது என்பது எனக்குத் தெரியும், உங்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று எனக்கு ஏனோ தோன்றுகிறது. கலை உள்ளம் பெற்ற ரசிகராகவும், கலைமீதும் கலைஞர்களிடமும் அக்கறை கொண்டவராகவும் இருக்கிறீர்கள். அதனால் உங்களிடம் உள்ளதைச் சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்…’

இதைச் சொல்லிவிட்டு, அவள் சிறிது நேரம் மௌன மாக இருந்தாள். பிறகு பேசினாள்:

‘புலமைக் காய்ச்சல் என்று சொல்வார்கள். அதுபோல் கலைக் காய்ச்சல் உண்டு என்றும் சொல்லவேண்டும். அவுக தான் எனக்குப் பயிற்சி அளித்து மேடை ஏற்றினாக. என்னை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணம் முக்கியம் அல்ல. ஒரு குமரிப் பெண் கள்ளன் வேஷம் போட்டு ஆடினால், கம்பெனிக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்; பண வசூலும் ஏற்படும் என்பதுதான் முக்கிய நோக்கம். அவுக எதிர் பார்த்ததைவிட நல்ல வெற்றி கிடைச்சுது, அதோடு அவுக எதிர்பாராத விளைவு ஒண்ணும் ஏற்பட்டுவிட்டது எனக்கு அதிகமான பெயரும் கவனிப்பும் வந்து குவிஞ்சுது. ஊர் ஊரிலே,மாலையும் மெடலும் எனக்கு நிறையவே கிடைச்சுது. அதை எல்லாம் பார்த்து அவுக பெருமையும் சந்தோஷமும் படுவாகயின்னுதான் நான் முதல்லே எண்ணியிருந்தேன். ஆனா அது அப்படியில்லை என்று சீக்கிரமே புரிஞ்சுகிட்டேன். குருவுக்கு மிஞ்சின சீடப்புள்ளை ஆயிட்டியேன்னு அவுக அடித்து சொல்ல ஆரம்பிச்சாக, ஒருநாள், எனக்கு ஏகப்பட்ட அப்ளாசும் பாராட்டும் கிடைச்சுது, அன்று நாடகம் முடிஞ்சதும், அவுக சொன்னாக உலகம் அப்படித்தான் இருக்கு. திறமைக்கு எவன் மதிப்பு கொடுக்கான்? கண்ணுக்குக் குளுமையா வயசுப்பொண்ணு வந்து நின்னா, குதிச்சா, ஈயின்னு இளிச்சிடுதானுக. தேன் குடிச்ச நரி ஆயிடுதானுக எல்லாரும்!…இது எனக்கு வேதனை தந்தது. என்றாலும் நான் ஒண்ணும் பேசலே.

‘கலெக்டர் துரை பாராட்டி சர்ட்டிபிகேட்டும் அனுப்பி வச்சதும், இனிமே உனக்கு என்ன? ஜமீன்தார்களும் பணக் காரங்களும் பாராட்டுவாங்க; இந்தக் கிழவன் தயவு உனக்கு எதுக்கு என்று குத்தலாகச் சொன்னாக, வழக்கமான மனக் கசப்பு மட்டும் இல்லே அதிலே. பொறாமை தலைதூக்கி நின்னுது.உடனே நான் சொன்னேன் – பேரும் புகழும் – பணமும் பெறலாம்கிற ஆசையோடு நான் ஆக்ட் பண்ண வரலே. உங்களுக்குத் திருப்தியும் பெருமையும் நன்மையும் ஏற்படுங்கிறதனாலே தான் நான் நடித்துவாறேன். ஆனா, உங்களுக்கு அது சந்தோஷம் தரலே,மனவருத்தம்தான் உண்டாக்குதுயின்னு புரிஞ்சுக்கிட்டேன். அதனாலே இனி மேல் நான் மேடை ஏறப்போவது கிடையாது. இன்று நடந்ததுதான் கடைசி ஆட்டம், இது சத்தியம் என்று கையடித்தேன். அவுக இதை எதிர்பார்க்கலே. அதிர்ந்து போனாக.அப்புறம் அவுக எவ்வளவோ சொன்னாக, கெஞ்சிக் கேட்டாக. ஊகூங், என்னாலே முடியாது என்று உறுதியாய் இருந்துவிட்டேன். எனக்கு அவுக மேலே வருத்தமே கிடை யாது. பக்தியும் மரியாதையுமே என்றைக்கும் உண்டு என்று கூறி முடித்தாள்.

அவள் அந்த வார்த்தையைச் சொல்லவில்லை என்றாலும், அவள் செயலின் அடிப்படை காதல்தான் என்று புரிந்தது. பக்தி என்பதும் காதலின் ஒரு மலர்ச்சிதானே!இப்பவும் அவள் அந்த உணர்வை உள்ளத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தாள் என்பதை அவளது கண்களில் மின்னிய சுடரொளி காட்டியது. கள்ளபார்ட் காமாட்சிமீது எனக்கிருந்த வியப்பு மேலும் அதிகரித்தது.

– ‘சாந்தி’, செப்டெம்பர் 1970

– அருமையான துணை, முதற் பதிப்பு: நவம்பர் 1991, கிறுஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *