கல் நூல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 4, 2022
பார்வையிட்டோர்: 1,775 
 

1

அன்புமிக்க நண்பா,

இன்றைக்கு, அதுவும் இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த குறிப்பு உன்னை மட்டுமல்ல உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்த போகிறது. அதற்கான உறுதியான சான்றுகளை அண்மையில் ஆய்வுக்குறிப்புகளில் இருந்து கண்டடைந்து விட்டேன். லிபிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த வேளையில், அதற்கு பிறகான புனைவியம் குறித்த எனது தேடல் நீ அறிந்ததே. ஆனால் தற்போது நம் மொழியில் பண்டைய இன குழுவினர் செய்த காரியம் உலக மனித பரிணாம வரலாற்றில் இது வரை யாரும் செய்யாத அற்புத சாதனை. அதை விவரிக்க நம்மிடம் புதிய விமர்சன கருவிகள் எதுவும் இல்லை. நான் சுற்றி வளைக்க விரும்பவில்லை. புனைவியம் குறித்த எனது ஆய்வில் தொல்லெச்சங்களிலிருந்து கிடைத்த சொற்றொடர் என்னை கிளர்ச்சியுற செய்துவிட்டது. அதுதான் நான் இதுவரை தேடிய வடிவம். நேற்றுவரை அனைத்தும் பூடகமாகவும், யூகமாகம் இருந்த நிலையில் தற்போது அனைத்தும் பரு வடிவத்தை அடைந்து விட்டதாக கருதுகிறேன். இருந்த போதிலும் அதை நேரில் பார்த்து உறுதி செய்யாத வரையில், இதுவும் ஒரு கற்பனை கொள்கையே. ஆனால் உறுதியாக காலத்தின் பெருவெளியில் நான் தேடி லிபிகள் புனைவின் வடிவத்தில் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

இது வரை நான் கண்டடைந்தவற்றை தொகுத்து சொல்ல முயற்சிக்கிறேன். ஆலவாயைச் சுற்றி வாழ்ந்த இனக் குழுக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் மனிதர்கள் நவீன மனிதனாக உருப் பெறாத காலத்துக்கும் வெகுமுன்பாகவே செழுமையான பண்பாட்டு வளர்ச்சியை அடைந்து விட்டிருந்தனர். அவ்வாறு வளர்ச்சி அடைந்த அவர்கள் கடல் மார்க்கமாக பல்வேறு நிலப்பரப்புகளுக்கும் சென்று, அங்குள்ள இனக் குழுக்களோடு கலந்து உறவாடி, வாணிபம் செய்து, அதையும் செழுமைபடுத்தியுள்ளனர். இது ஒருவாறு பல்வேறு ஆய்வாளர்களும் கண்டு சொன்ன ஒன்றுதான். ஆனால் தற்போது நான் கண்டடைந்ததோ முற்றிலும் மாறுபட்ட புனைவியம் என்ற கருத்தாக்கம் தான். அதை விரித்து சொல்வதாக இருந்தால், மஞ்சள் வம்சத்தினர் லூங்மென் பள்ளத்தாக்கில் மேற்கொண்ட குடை வரை வேலைப்பாடுகளையும் போன்றதாக கருதக் கூடியது. இதன் பொருள் என்னவென்றால், ஆலவாய் இனக் குழு மக்கள் கூட்டாக சேர்ந்து பாறை நூலகங்களையும், கல் நூலையும் எழுதியுள்ளனர் என சுருக்கமாக குறிப்பிடலாம். இதில் பாறை நூலகம் குறித்து விரித்து ஆய்வு செய்யப்பட்ட வேண்டியது.

புனைவியம் குறி்த்த எனது ஆய்வில் கல்நூல்தான் முக்கியமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால், தொல்லெச்ச சான்றுகளில் கிடைத்த குறிப்புகளின்படி, “தென்திசை சென்றவன், கிழக்கே உதிக்கும் முன்பாக, ஆநிரைகளை கொண்டு வந்து சேர்ப்பான்” என்கிற சொற்றொடரைத்தான். பல ஆய்வாளர்களையும் பொறுத்த அளவில் அது தமிழியா, பிராமியா, பிராகிருதமா, வட்டெழுத்தா என்பதாகவே இருந்தது. ஆனால் எனது தேடல் அதுவல்ல. புனைவியம். அவர்கள் பாறை நூலகங்களின் ஊடாக கல் நூல் என்னும் பிரதியை உருவாக்கி வைத்துள்ளனர். உலக மனித சமூக குழுக்கள் யாரும் இதுவரையிலும் செய்யாததும், கற்பனை செய்ய முடியாததுமான ஒரு கூட்டுச் சாதனை. நவீன சொற்களில் சொல்வதாக இருந்தால் பல நூறு பேர் சேர்ந்து பாறைகளில் எழுதி வைத்த பேன்டசி நாவல்.

தற்போது என்னுடைய முடிவுக்கு வருவோம். அதில் ஆலவாய் போன்ற பழம் பெரு நகரில் 7 இடங்கள், 7 இடங்களிலும் ஏழேழ் மலைகள், அவற்றில் ஒவ்வொரு பாறையிலும், தனித்தனியாகவோ, தொகுப்பாகவோ எழுதப்பட்ட லிபிகள். இவை, ஓரிடத்தில் தொடங்கி வேறொர் இடத்தில் முடிவடைகின்றன. பின்னர் அங்கிருந்து தொடங்கி மற்றொர் இடத்தில் முடிவடைகின்றன. இவ்வாறாக அத்தியாயம் அத்தியாயமாக, தொகுப்பு தொகுப்பாக தங்களது கற்பனையை “ஒரு சுழலும் நாவலாக” செய்து பார்த்துள்ளனர். இதில் மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எந்த இடத்தில் தொடங்கி படித்து விட்டு தொடர்ந்து பயணித்து அடுத்த இடத்தை அடைந்து படித்தாலும், சுழலும் கல் நூலகமாக, ஒரு மிகப் பெரிய பாறை பிரதிகளாக அவை பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் அவற்றின் மீது படரும் கதிரவன் மற்றும் நிலவொளியும் சில வரிகளையும் அவற்றின் அர்த்தங்களையும் மாற்றி எழுதி விடுவதாகவும் ரகசிய செவி வழிக்கதைகள் செல்வதாக ஒரு பேச்சுமுண்டு.

அதிலும் குறிப்பாக அந்த புனைவை, கிடைக்கும் சொற்றொடர்களின் அர்த்தங்களை திறக்கும் போது, ஒரு நீண்ட விவரணை கிடைக்கும். அந்த விவரணையில் ஒரு குறிப்பு அடுத்த அத்தியாயத்துக்கான திறப்பை அளிக்கும். இப்படியே வாசித்துக் கொண்டே பயணித்துக் கொண்டே செல்ல வேண்டும். இதுதான் நான் கண்டடைந்த வடிவம். இன்றைக்கு அதன் முதல் சொற்றொடரை ஸ்பரிசிக்கத் தான் எனது பயணத்தை தொடங்குகிறேன். எங்கு தொடங்கினாலும், அடுத்து செல்ல வேண்டிய திசை குறிப்பையும் அதுவே தன்னுள் கொண்டிருக்கும் என்பதால் அதை அவ்வாறே வாசித்தபடியே எனது பயணம் தொடரும். எனது வாசிப்பு நிறைவடையும் வரை இந்த பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும். சரியான முதல் வாக்கியத்தை வாசிப்பவரை விஷஜந்துகள் தீண்டாது என்பது அந்த இன குழுவினரின் நம்பிக்கை. இவ்வாறாக ஒருவரை பின் தொடர்ந்து ஒருவர் என பல ஆயிரம் ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக, ரகசிய செயல்பாடாக அவர்கள் தங்களது கல் நூலை எழுதி சென்றுள்ளனர். இன்னும் ஒரு சிலர் ரகசியமாக கல் நூலின் அத்தியாயங்களை எழுதிக் கொண்டிருக்கக் கூடும் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இதை யாரேனும் வாசித்து மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்டுள்ளனரா என்றால் அது கேள்விக் குறிதான். அதை வாசித்தவர்கள் குறித்த மர்மமான கதைகள் அப்பகுதிகளில் ஏராளமாக நிலவி வருகின்றன. பண்டைய காலத்தில் அதிலிருந்து சொல்லை எடுத்து தீ மூட்டியதாகவும், தானிய விதைகளை விதைத்தாகவும், நீர் வழிப்பாதைகளை உருவாக்கியதாகவும் செவி வழி கதைகள் உலவுகின்றன. நிச்சியம் அது ஒரு மந்திரத்தன்மை வாய்ந்த பிரதி என்பதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது. எனது வாசிப்பு முழுமையடையும் பட்சத்தில் இந்த உலகுக்கு ஒரு புத்தம் புதிய புனைவியம் கிடைக்கும். சில காலம் காத்திரு நண்பா, நான் வருவேன். அல்லது…

என எழுதி கையெழுத்திட்டான்.

போதை தணிந்த பின்னிரவில் அதை எழுதி கையெழுத்திட்ட போது, அவனுக்கு சொல்ல முடியாத அளவுக்கு தலை பாரமாக இருப்பதாக உணர்ந்தான். அந்த இருளுக்குளிருந்து யாளி போன்ற வினோத விலங்குகள் தோன்றி மறைவதாக அவனுக்குத் தோன்றியது. தனது மனப்பிரம்மையின் காட்சி ரூபங்களா அல்லது கனவென ஒளிரும் நிகழின் மர்ம ரூபங்களா என்பதை அவனால் உறுதி செய்ய முடியவில்லை. அதை எழுதி மேஜையின் மீது வைத்தான். அவனது மனதை போலவே அந்த காகிதமும் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அதை நண்பன் பார்க்கும் விதமாக கவ்வையை பொருத்தி வைத்து விட்டு பயணத்துக்கு தயாரானான்.

2

அந்த பாறையின் மீது மாலை நேர மஞ்சள் வெயில் தனது வரிக்கோடுகளை தீட்டிக் கொண்டிருந்தது. எங்கும் பொன்னிறமாக ஜொலித்தது. மூச்சு வாங்க அவன் அந்த பாறையின் மீது நின்றிருந்தான். காற்று இடைவிடாமல் வீசியபடி அவனது கேசத்தை படபடக்க செய்து கொண்டிருந்தது. அவனது மனம் வினோத மெளனத்தில் ஆழ்ந்திருந்தது. அங்கிருந்து பசுமை வயல்கள் நீண்டு பரந்து விரிந்து கிடந்தன. அங்கிருந்து பார்க்கும் போது, குறிப்புகளில் பார்த்தபடியே, எழு குன்றுகள், யானை, நாகம், பன்றி போன்ற பல்வேறு உருவங்களில் படுத்து கிடப்பதை போல காட்சி அளித்தது. குகையில் வடகிழக்கு திசையில் தனது பார்வையை செலுத்தினான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித கைகள் தீண்டி உருவாக்கிய லிபி உருவங்கள் கோணல் மாணலாக உடைந்த சுள்ளிகளை நினைவூட்டும் வகையில் காணப்பட்டது. மாலை மெல்ல மயங்கிக் கொண்டிருந்தது. அவன் மிகவும் சிரமப்பட்டு பாறையின் மீது ஏறி, ஒரு பெரிய மரத்தின் வேரை பற்றியபடி அதன் அருகே நின்று கொண்டு, உற்று பார்த்துக் கொண்டிருந்தான். தான் கொண்டு வந்திருந்த பொடியை அதன் மீது தூவி, லிபியை மேலும் துலங்க செய்ய முயன்று கொண்டிருந்தான். கதிரவன் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக வேகமாக மேல் வானில் சரிய தொடங்கியிருந்தான். தூவிய பொடியை ஒரு கையாலேயே தட்டி அவற்றை பறக்க செய்தான். மெல்ல அதில் தட்டுப்பட்ட லிபியின் ஒவ்வொரு வடிவத்தையும் தடவி தடவி தனது மனதின் வழியாக வாசிக்கத் தொடங்கினான். வாசிக்க வாசிக்க காலம் மெல்ல கழன்று அவனை விட்டு விலகி சென்று கொண்டிருந்தது. கதிரவன் முற்றிலுமாக தன்னை மூடிக் கொண்டு விட்டான். அந்த மலை பிராந்தியம் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. காலமின்மையி்ல் மிதந்தபடி அவன் அடுத்தடுத்த லிபிகளுக்கு தனது விரல்களை நகர்த்தி மீட்டி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் முற்றிலும் வித்தியாசமான ஒரு ஒலி பாறையின் இடுக்கிலிருந்து கேட்டது. ஏதோ வசியத்துக்குக் கட்டுப்பட்டவனைப் போல அவன் அத்திசை நோக்கி நகர்ந்தான்.

3

பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்த நூல்களின் குவியலிலிருந்து தலை நிமிர்ந்த போது தொல்லெச்சங்களின் மாய வெளியிலிருந்து உதித்த ஒரு ஒளித் துகள் அவனது மனதில் பொறியென ஒளிர்ந்தது. எண்பெருங்குன்றம் வீற்றிருக்கும் முக்கடல் சங்கமிக்கும் நிலப் பிராந்தியம் ஒன்றில் அது இருக்கும் என்பது அவனுக்கு புலப்படலாயிற்று. காலை கதிரவனின் மென் தீற்றல்கள் அன்றைய தினத்துக்கு புதிய சாம்பல் நிறத்தை அளித்தன. கடலோடிய காலங்களில் யவனர்கள் தனக்கு பரிசளித்த மது ஜாடியை எடுத்து தடவி பார்த்தான். அதில் பொறிக்கப்பட்டிருந்த பதவன் என்ற அந்த தமிழி வடிவிலான வரிக்கோடுகள் தற்போது அவனுக்கு புதிய அர்ததங்களை தருவதாக இருந்தது. பல ஆயிரம் ஆண்டுகளாக அதனுள் மிதந்த திராட்டை ரசத்தின் சாரத்தையும் அதன் உலோகத்துடன் கலந்த மதுவின் நூதன வாசனையையும் அந்த கோப்பை கொண்டிருந்தது. விடிந்தது முதலே அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. காலம் கையை விட்டு நழுவி சென்றதை போல உணர்ந்தான். அவனது அரை பாதரசத்தை போன்று உருகி வழிந்து வெளியில் மிதந்தோடி வருவது போல அவனுக்குத் தோன்றியது. எண்பெருங்குன்றம் சமைந்திருக்கும் அந்த நிலப்பரப்பின் மத்தியில் அமைந்துள்ள அந்த தொல் நகருக்கு உடனே சென்று விட வேண்டும் என அவனது மனம் அவனை யாழில் சுண்டப்பட்ட தந்தியென அதிர்வடையச் கொண்டிருந்தது. அது உருவாக்கிய ரீங்காரம் அப்பரப்பெங்கும் ஒலி அலைகளாக கற்பனிக்கத் தொடங்கினான். நாத வெளியில் சொல்லின் சூட்சுமங்கள் புதிர்பாதைகளை திறந்து விட்டிருந்ததைப் போன்று தோன்றியது. அவன் தனக்கு கிடைத்த சித்திரத்தை நினைத்து பார்க்க பார்க்க அதன் பிரமாண்டம் சுழன்று சுழன்று விரிவடைந்து சென்று கொண்டிருப்பதை போன்றே தோன்றியது. இது நாள் வரை தான் எண்ணி வந்தது கற்பனை அல்ல என்பதை நினைக்கும் போது அவனுக்குள் தோன்றிய அந்த எண்ணங்களை அவனாலேயே சரிவரி நிதானிக்க முடியவில்லை.

காலத்தின் மிகப் பெரிய ஜீவ நதியில் மிதந்து வந்து தற்போது தனது ஆய்வுக் கப்பல் தற்போது தரை தட்டி நின்றிருக்கும் மேட்டு பகுதியில் ஏறி நின்று பார்க்கும் போது லட்சோப லட்சம் மூதாதையர்கள் அவ்வழியாக மரக்கலன்களில் கடந்து சென்ற சித்திரம் அவனுக்குள் தோன்றி மறைவதை அவனால் தடுத்து விட முடியவில்லை. ஆனால் இது நிச்சயம் ஒரு புதிரான காலை என்பது புலப்பட்டது. அருகில் இருந்த புன்னை மரங்களில் இருந்து குருவிகளும், செம்போத்துகளும் எழுப்பும் இன்னிசைக்கு பண் பாடிய ஒரு மூதாதையின் நிலத்தை நோக்கி பயணிக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டதாக கருதினான். இது கால யந்திரத்தை பின்னோக்கி சுழற்றி அறிவியல் புனைகதைகளில் வருவதைப் போல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்லும் வினோத பயணம். நிஜமாகவே காலச் சக்கரம் பின்னோக்கி சுழன்று நம்மை சங்க காலத்துக்குக் கொண்டு சென்றுவிடுமோ என திகைத்தான். அங்கே நான் மாடக் கூடங்களும், யானைகளும், குதிரைகளும், பண்டைய வணிகர்களும் நாளங்காடிகளிலும், அல்லங்காடிகளிலும் பொருள்களை கூவி விற்கும் சத்தம் அவனது அகச்செவியில் அதிர்ந்தன. தற்போது தான் கண்டடைந்த அந்த யோசனையை யாரிடம் பகிர்ந்து கொள்ளலாம் என குழம்பி தவித்தான்.

தன்னுடன் தொடர்பில் இருக்கும் தொல்லியல் அதிகாரிகள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் முகங்கள் அவன் கண்ணுக்கு முன் வந்து சென்றன. யாரும் நம்பிக்கைக்கும் புரிதலுக்கும் உகந்தவர்களாக அவனது ஆழ் மனது நம்ப தயாராக இல்லை. மேலும் முதலில் தான் கூறுவதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படியே புரிந்து கொண்டாலும் அதை நம்ப வேண்டும். நம்பினாலும் உடன் புறப்பட்டு வந்து கள செயல்பாடு மேற்கொண்டு குறைந்த பட்சமாக அதை பரிசோதித்து பார்க்க வேண்டும். அவனுக்கு இத்தனை எண்ணங்கள் அடுக்கடுக்காக தோன்றியதும் மலைப்பாக இருந்தது. ஒவ்வொருவரையும் சென்று அவர்களுக்கு புரிய வைப்பதற்கு பதிலாக தானே அங்கு சென்று நேரடியாக அவற்றைப் பார்த்து விட்டால் என்ன என அவனது மனம் அரிக்க தொடங்கியது.

ஏழு கடலையும் ஏழு மலையையும் தாண்டி வலசை போகும் ஆயிரமாயிரம் பறவை கூட்டங்கள் அவனது மன வானில் சிறகடித்து பறந்தன. இன்றைய சகுனங்கள் பயணத்தை தொடங்கி வைப்பதற்கான வெளிச்சத்தை அவனுள் ஏற்படுத்தியிருந்ததை மெல்ல மெல்ல உணரத் தொடங்கினான். அவனுக்கு இப்போது என்ன செய்ய வேண்டும் என்பது மெதுவாகப் புலப்பட தொடங்கியது. காலை வெளிச்சம் பரவி புவியில் உள்ள பொருள்கள் எல்லாம் எப்படி மெல்ல மெல்ல புலன்களுக்கு புலனாகிறதோ அதே போல அவனது யோசனையும் சிறிது சிறிதாக துலக்கம் பெற்று வெளிச்சம் பெறத் தொடங்கின. பயணத்துக்கான திட்டம் மட்டுமல்ல தொல்லெச்ச குறிப்புகளில் இருந்து தனக்கு புலப்பட்ட எண்ணங்களும் படிப்படியாக உருப்பெறத் தொடங்கியிருந்தன. முதலாவதாக, தனது பயண திட்டத்தை விட, தான் கண்டறிந்த விஷயம் குறித்து அவனே அவனுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டான். மேலும் இது வெறும் பயணம் மட்டுமல்ல. இது மிகவும் சிக்கலானது. சரியாக சொல்வதென்றால் இதனூடாக செல்வதே மிகப் பெரிய வாசிப்பு என்ற இடத்துக்கு அவன் வந்து விட்டிருந்தான். இப்போது வரை அது வெறும் கற்பனையாக இருந்த போதிலும், தான் தேடிச் செல்லும் அந்த பண்டைய நகருக்கு மேற்கே பாறைத் தொகுப்புகள் நிறைந்த கல்பரப்பில் தான் அவன் தேடிய அவை கிடைக்கும் என்பது மனதுக்குள் உறுதியானதும் அவனை சொல்ல முடியாத உணர்வுகள் சூழ்ந்து கொண்டன. தனக்கு நெருக்கமான, தனது எண்ணங்கள், ஆய்வுகளை பகிர்ந்து கொள்ளும் நண்பனைத் தொடர்பு கொள்ளலாம் என்று முதலில் நினைத்தான். இருந்தாலும் தான் எண்ணியதை, யூகித்ததை, அதன் தடங்களை நேரில் சென்று கண்டறிந்து முதல் கட்ட உறுதிக்கு பிறகு சொன்னால் அவன் நிச்சயம் மகி்ழ்வான். அது வரை சற்று பொறு மனமே…

தனது அறை முழுவதும் ஒரு முறை நோட்டமிட்டான். கல்லூரி படிப்பை முடித்து விட்டு இவ்வூரில் வசிக்கும் அவனை சந்திக்க வரும் சக ஊழியர்கள், அறிமுகமானோர் அனைவரும் திடுக்கிட்டு போவர். ஒரு பழைய இரும்பு சாமான்கள் விற்கும் கடை கூட சிறப்பாக இருக்கும் அதை விட குவியலாக கிடக்கும் அதன் நடுவே ஒரு சிறிய மரக்கட்டிலில் தான் அவனது உறைவிடம். நவீன சாதனங்களும், பண்டைய பொருட்களும் கலந்து ஒரு விநோத அருங்காட்சியகம், வெளிநாட்டு சிற்ப காட்சி கூடம் என்பது போல காட்சி அளிக்கும். இவற்றுக்கும் மத்தியில் அவன் விரும்பி கேட்கும் ஒலி பெட்டியும், ஒலி பேழைகளும் கிடக்கும். எப்படி கிடந்தாலும் எவை எங்கே உள்ளது என்பதை அவனது மனம் நன்கு அறியும். ஒரு முறை கூட எந்த பொருளையும் அவன் தேடி எடுத்ததே கிடையாது. அது மட்டுமல்ல, எதனூடாக எது கலந்திருக்கும் என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியமாக அந்த அறை அவனுக்கு பழக்கப்பட்ட வினோத விலங்கை போலவே இருந்தது.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான ரோமானிய மது ஜாடி தொடங்கி, இன்றைய ஆக்மென்டட் ரியாலிட்டி புரொஜக்டர் வரையிலும் அதில் இருக்கும். ஏகப்பட்ட புத்தகங்கள், ஆவணங்கள், நகலிடப்பட்ட காகிதங்கள், மரப்பலகைகள், சிறிய மணிகள், தங்கமா, பித்தளையா, ஐம்பொன்னா என அறுதியிட முடியாத சிறிய கைவினை பொருள்கள் என வகை தொகையின்றி இருக்கும்.

ஆனால் இவனது அறைக்கு வரும் எவரும் தனக்கு இது வேண்டும் என்று விரும்புவதை போன்ற ஒரு தோற்றத்தை அறை தராததால் யாரும் இவனிடம் எதையும் இரவலாகக் கேட்பதில்லை. அவர்கள் பார்வையில் இவை அனைத்தும் பழைய குப்பைகள், அல்லது இன்றைய வாழ்க்கை ஓட்டத்துக்கு தேவையில்லாத பொருள்கள் அவ்வளவே… ஆனால் ஒரு சில பொருள்களை தவிர வேறு எதிலும் அவன் பெரிய அளவில் கவனம் வைத்துக் கொள்வதில்லை. தனது எழுத்தாள நண்பர்கள் வந்து கேட்டால் மட்டும் உடனே எடுத்துக் கொடுத்து விடுவான். இதையெல்லாம் யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டான். கடந்த சில ஆண்டுகளாகவே அவனை அரித்துக் கொண்டிருக்கும் அந்த லட்சியத்தை அவன் நெருங்கிவிட்டான். அதுதான் அவனது மிகப் பெரிய எதிர்பார்ப்பு. அது மட்டும் நிறைவேறிவிட்டால், யுக யுகத்துக்கும் அது விரிவடைந்து கொண்டே செல்லும். அதில் தன் பெயர் இல்லாவிட்டாலும், அது மிகப் பெரிய கண்டு பிடிப்பாகவே இருக்கும். அதுதான் அவனை இத்தனை தூரம் இழுத்து வந்துள்ளதாக அவன் கருதினான்.

முன்பொரு காலத்தில் அப்பிராந்தியத்தில் பாணன் ஒருவன் தன் குலதெய்வமான அசரீரீயின் சொல்லை கேட்டு, பாடலை தீட்டியதாக பழைய குறிப்பொன்று அவனுக்கு சம்பந்தமேயில்லாமல் நினைவுக்கு வந்து போனது. ஆனால் அந்த பாடலையும், அந்த பாணனி கதையையும் யாரும் பெரிதாக விளங்கி கொள்ளவில்லை. கண்டு கொள்ளவும் இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் அதற்குள் சில ரகசிய ஆன்மிக சடங்குகள் இருப்பதாக கருதி அதை மறைமுகமாக பரப்பி வந்தனர். இருந்த போதிலும் அது வெறும் கற்பனையாகக் கூட இருக்கக் கூடும். ஆனால் தற்போது தனக்கு கிடைத்திருக்கும் குறிப்பானது மகத்தானது.

முக்கடல் சங்கமிக்கும் நடுநாட்டுக்கு அருகே உள்ள பண்டைய நகரை எல்லை போல் காத்து நிற்கும் எண்பெருங்குன்றத்தில் வாழ்ந்த இனக் குழு ஒன்று கூட்டமாக செய்த பெருமுயற்சி என்றுதான் அதை சொல்ல வேண்டும். இப்படியே அவனுக்குள் பலவாறாக எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. லேசான் மஞ்சள் வெளிச்சம் பலகணியின் வழியாக அவனது அறையை வினோத வண்ணத்தில் ஒளிர செய்து கொண்டிருந்தது. காற்றில் தற்போது மெலிதாக வெப்பத்தின் அலைகள் உயர்வதை கண்டான். தனது வழக்கமான துவர்ப்பு மிக்க தேநீரை பருகினால் ஆசுவாசமாக இருக்கும் என்று கருதினான். நகரத்தின் ஒடுங்கிய சந்தில் ஒரு பழங்கால கட்டிடத்தின் மூலையில் இருந்தது அவனது அறை. அங்கிருந்து தெருவையும், தெருவிலிருந்து நீண்டு விரிந்து கிடக்கும் நகரையும் ஒருவாறு காண முடியும். இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஒளிரும் நகரம் பகலில் ஒரு செவ்வக சதுக்கம் போல காட்சியளிக்கும். பகலில் அவனுக்கு அந்த நகரை பார்க்கவே பிடிக்காது. இரவில் தான் நகரம் தனது ஜாலங்களை கடை விரிக்கும்.

சற்று தள்ளி தொலைவிலிருக்கும் பாலைவன நிலப்பகுதியிலிருந்து வந்து இங்கு குடியேறிய ஒருவரின் கடைதான் அவனது தேநீர் தாகத்துக்கான குறுகிய கால இலக்கு. மெல்ல நடந்து சென்று, கடை நெருங்கிவிட்டாலே இவனது பிரதேசத்தை சேர்ந்த அந்த தேநீர் சமையல்காரருக்கு இவனது நாவின் ருசி இவனை காட்டிலும் கூடுதலாக அறிவார். பல ஆண்டுகள் பழக்கம். ஒரு சிறு மென்நகை. அல்லது தலைசாய்த்து மெலிதாக ஒரு முகமன். தேநீரை காட்டிலும் இந்த உறவு சிறப்பானதாக அவனுக்கு தோன்றும். காலம் எல்லாவற்றையும் மாற்றி எழுதி கொண்டே இருக்கும்.

தனது ஆடைகளை சரி செய்து கொண்டு கட்டிடத்தை விட்டு இறங்கி நடந்தான். அவன் கால்கள் தேநீர் கடையை நோக்கி சென்றாலும் அவனது மனம் தான் கண்டடைந்த குறிப்புகளின் வழியாக தான் செல்ல வேண்டிய எண்பெருங்குன்றத்தை நோக்கியே பயணித்துக் கொண்டிருந்தது.

ஆலவாய். மனித குலம் தோன்றிய காலம் தொட்டு உயிர்்ப்புடன் இயங்கி வரும் நகரம். அதை சுற்றிலும் அரண் போன்ற சிறிய மலைக் குன்றுகள். யானை, நாகம், எருமை போன்ற பல்வேறு வடிவங்களில் அவை அமைந்திருப்பதாக அவன் படித்திருக்கிறான். உண்மையிலே அது இயற்கையா அல்லது செயற்கையா என ஒவ்வொரு முறையும் தன்னை கேட்டுக் கொள்வான். மனித யுகத்தில் ஒவ்வொரு யுகத்தின் போது நிஜமான விலங்குகளே அவ்வாறு பாறைகளாக நிலைத்துவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுவர். இது போன்று மரங்களும் கல்லாக சமைந்த வேள்குன்றம் போன்ற பகுதிகளை அவன் பார்த்திருப்பதால் அதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. பனியுகத்தில் மிருகங்கள் அத்தனை பெரிதாக இருக்க வாய்ப்புண்டு என்றும் பரிணாம அறிவியல் கதைகள் கூறுவதையும் அவன் படித்திருக்கிறான்.

தற்போது அவனுக்கு கிடைத்திருக்கும் குறிப்புகளுக்கான ஆதாரம் அங்கேதான் இருக்க வேண்டும் என மனது உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்பதுதான் அவனது முதன்மையான பிரச்னை. ஏனெனில் தனது கடந்த 20 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக அவன் இ்ந்த இடத்தை வந்தடைந்திருந்த போதிலும், அதன் தொடக்கம் என்பது எது என்பதை அறுதியிட்டு சொல்ல இயலாத நிலை காணப்பட்டது. ஆனால் ஏதேனும் ஓரிடத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். தான் செல்லப் போகும் இடமே தொடக்கமாக அமைந்து விட்டால்… அதை நினைக்கும் போதே அவனுக்கு சொல்ல முடியாத பரவச நிலை ஏற்பட்டது. ஆனால் அவன் நினைப்பது போல காரியம் அத்தனை எளிதல்ல.

இவ்வாறான எண்ணங்கள் ஓடியபடியே அவன் தேநீரை பருகி விட்டு மீண்டும் அறைக்கு திரும்பியிருந்தான். செம்மண் பிரதேசத்தை சேர்ந்த மாயோன் இயற்றிய இசைக் கோர்வையை ஒலிக்க செய்தான். தனது எண்ணங்கள் தாறுமாறாக பிரவாகம் எடுக்கும் போது அவன் இவ்வாறு அவரது இசைக் கோர்வைகளை கேட்பான். தனது எண்ணங்களை அழகிய மாலையாக கோர்க்க அது உதவுவது போல் அமையும்.

நண்பனை அவன் தொடர்பு கொள்ளவில்லை.

ஆனால் அவனுக்கு ஒரு குறிப்பு எழுதி வைத்து விட்டு இந்நகரை விட்டு நீங்கி விடலாம் என முடிவுக்கு வந்தான். அவன் தன்னை தேடி வரும் போதெல்லாம் அவன் பார்க்கும் வகையில் வழக்கமாக வைத்து செல்லும் இடத்தில் இந்த குறிப்பை எழுதி வைக்க முடிவு செய்தான். அதன் பிறகு அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற காரிய கிரமங்கள் படிப்படியாக உருப்பெற தொடங்கின. குறிப்பு எழுதுதல், பயணத்துக்கு தயாராதல், படி எடுப்பதற்கான கருவிகள், ஒளிப்பட கருவி, மெலிதான ஆடைகள்… இவ்வாறு அவன் மனதில் பட்டியலிட்டுக் கொண்டே நண்பனுக்கான கடித குறிப்புகளை எழுத ஆயத்தமானான். முடித்துவிட்டு நகரை விட்டு நீங்கினான்.

4

இரவு அவனை தேடி வந்த நண்பன், கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தான். அவன் வழக்கமாக குறிப்பை வைத்துவிட்டு செல்லும் மேஜையின் வடகிழக்கு மூலையில் எழுதி வைத்திருந்த குறிப்புகளை படிக்க தொடங்கிய போது, திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. நண்பனை சொல்ல முடியாத அந்தகாரம் சூழ்ந்தது. அதனால் அந்த கடிதத்தை பிறகு படித்து கொள்ளலாம் என கருதி, தனது ஆடை மடிப்புக்குள் வைத்துக் கொண்டு இறங்கி இரவு நேர நகரத்துக்குள் நடந்து செல்ல தொடங்கினான். அவனையும் அறியாமல் ஆடையிலிருந்து நழுவிய கடிதம் காற்றில் அலைந்து அலைந்து தென்கிழக்கு திசையை நோக்கி பறக்கத் தொடங்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *