கனவுகள் இனிமையானவை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 9,214 
 

‘எது சரி எது பிழை என்பது யாரால்,என்ன விடயம் எப்படிப் பார்க்கப் படுகிறது என்பதைப்பொறுத்திருக்கிறது’

எனது நண்பன் என்னிடம் ஆணித்தரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.அவனின் முகத்தை நான் பார்க்கவில்லை.அவன் சொல்லிக் கொண்டிருக்கும் விடயங்களை காதுகள் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்க,எனது பார்வை, ஜன்னலுக்கு வெளியில்,லண்டன் தெருவில் போய்க் கொண்டிருக்கும் பல தரப் பட்ட மனிதர்களிற் பதிந்திருந்தன.

வாழ்க்கையில் ஒரு வித பயமுமற்ற சுதந்திர உணர்வுடன் இந்த மக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். எல்லோர் வீட்டிலும் நடப்பதுபோல் இவர்கள் வீட்டிலும் சண்டைகள், தர்க்கங்கள், கோபதாபங்கள் நடக்கலாம். ஆனால் தெருவில் நிம்மதியாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் லண்டன் வாகனமொன்றில்,இவர்களும் அவசரமாய் ஓடிப்போகும்போது அடிபட்டு உயிரை விட்டால் யாரைப் பழி சொல்வது?

பொறுமையின்றி தெருவைக்கடக்க ஓடியவரையா அல்லது,நெருக்கமான பாதையில் கவனமற்ற விதத்தில் காரை ஓட்டிய வாகன சாரதியையா பிழை சொல்வது?அல்லது எது எப்படி நடக்குமோ அது அப்படியே நடக்கும் என்ற தத்துவத்தையா?

தெருக்களில் விபத்துக்கள் நடக்கலாம் ஆனால் இவர்கள் சொன்ன சில அரசியற் கருத்துக்கள் தங்களால் ஒத்துக் கொள்ள முடியாதவை என்று யாரும் இவர்களைத் தீர்த்துக் கட்டப்; போவதில்லை.

‘இலங்கையில் வாழாத இவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.இன்றைய பிரச்சினைகள்,நாளைய வெற்றிகள்,எதிர்காலக்கனவுகள் என்று எத்தனையோ விடயங்களை மனதிற் சுமந்துகொண்டு நிம்மதியாகத் திரிகிறார்கள’;. எனது நண்பன் தனது பிரசங்கத்தை நிறுத்திக் கொண்டு எனது தோள்களிற் கைபோடுகிறான்.

‘என்ன யோசனை?’ அவனது ஆழமான பார்வை எனது அடிமனதுக்குள் ஓடிப்போய்,எனது சிந்தனைக்கு உருவம் தேட முயல்கிறது.

‘என்ன யோசனையா?’ நான் அவனைத் திருப்பிக் கேட்கிறேன்.

‘ குமரன் இறந்தது அநியாயம்’ எனது நண்பன் சம்பந்தன்;,எங்கள் நண்பன் குமரன் இறந்தது அநியாயம் என்று பல தடவைகள் சொல்லி விட்டான்.

‘அவன் தன்னை சாகப்பண்ணிக் கொண்டது மிகத் தவறு’ நானும் பத்தாவது தடவையாகச் சொல்லி விட்டேன்.

சம்பந்தன் அலுத்துப்போகிறான்.

‘குமாருக்குத் தெரியும்தானே இப்படி நடக்குமென்று’ நான் அழுத்திச் சொல்கிறேன்.எனது குரல் எனக்கே வியப்பாகவிருக்கிறது.எனது கருத்தை சம்பந்தனின் மனதிற் பதிய வைக்கவேண்டும் என்பதற்காக எனது குரலில் ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்கிறேன்.

‘ஒரு மனிதன் பிறந்த அன்றே அவன் ஒருநாள் இறக்கத்தான்போகிறான் என்ற நியதி எல்லோருக்கும் தெரியும்.அதற்காகத் தனக்குப் பிழையாகத் தெரிவதை எடுத்துச் சொல்லாமல் கோழையாக வாழ்வதா?’

சம்பந்தனின் அந்தக் கேள்வி என்னை எரிச்சலையுண்டாக்குகிறது.

‘ இஞ்ச கொஞ்சம் பாரும் சம்பந்தன். இலங்கையில் இப்போது நாங்க ஒரு தத்துவமும் பேசமுடியாது. சுயசிந்தனையை மூட்டை கட்டிவிட்டு முட்டாளாகப் பாவனை செய்யாவிட்டால் எங்களுக்கும் குமரனின் நிலைதான் வரும்,சுய சிந்தனை ஒன்றுமில்லாமல் இருப்பதுதான் உயிரோட வாழத் தேவையான விடயம்’ நான் சொல்வது எனக்கே தர்மசங்கடமாகவிருந்தாலும்; குமரனின் மரணித்திலுள்ள கோபத்தால் நான் வெடிக்கிறேன்.

‘நீ ஒரு முட்டாள்’ சம்பந்தன் என்னை எரிச்சலுடன் பார்த்துச் சொலகிறான்;.

எனக்கென்ன? அவன் அப்படிச்சொன்னால் எனக்கென்ன,எனக்குவாழத் தெரியும். தமிழர்களுடன் எப்படிப் பழகுவது? என்ன பேசுவது? எப்படி இனிமையாகப் பழகிப் பிழைத்துக் கொள்வது,எப்படிப் பணம் சேர்ப்பது என்பது தெரியாமல் சம்பந்தன் மாதிரி அல்லது கொலை செய்யப் பட்ட குமரன் மாதிரி நான் வாழ வேண்டுமா?

இவன் சம்பந்தனும் குமரன் மாதிரியே. குமரனும் இப்படித்தான் சுயசிந்தனை,மனித உரிமை, மண்ணாங்கட்டி, என்று பல வார்த்தைகளைக் கொட்டிவிட்டு வாழ்ந்து அதனாற் கொலை செய்யப் பட்டுவிட்டான்.

அவனுக்கு,ஓரு வருத்தம் வாதை என்று வந்து செத்துப் போகவில்லை. தெருவில் போகும்போது விபத்து வந்து செத்துப் போகவில்லை.

அதைப்பற்றி எனக்கென்ன?

குமரனின் சினேகிதன் என்பதற்காக எனக்கேதும் நடக்காமல் இருந்தால் அதுவேபோதும்.அப்படி ஒன்றும் எனக்கு வரக் கூடாது என்பதற்காகத்தானே ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு-தமிழர்களுக்குப் போராடுவதாகச் சொல்லிக் கொண்டு கோடி கோடியாகச் சேர்ப்பவர்களுக்கு, ஒரு தொகையைத் தானம் கொட்டி அழுகிறேன்.

‘உனக்குக் குமரனைச் சரியாகப் புரியவில்லை’ இது சம்பந்தனின் குற்றச்சாட்டு.’

யாருக்கு யாரை முழுக்க முழுக்கத் தெரியும்?

சம்பந்தன் இப்படித்தான் அடிக்கடி சொல்வான்.

என்ன செய்வது? முற்போக்குவாதம் என்ற பெயரில் இவன் சொல்வதெல்லாவற்றையும் கேட்டுத் தொலைப்போம் என்பதற்காக இவன் பிரசங்கங்களைக் கேட்பேன்.

அப்படித்தான் குமரனைச் சந்தித்தபோதும் நினைத்திருந்தேன்.

அந்தச் சந்திப்பு ஆறு அல்லது ஏழுவருடங்களுக்கு முன் நடந்தது.சிங்கள வகுப்புவாதம் கொலைவெறியாடிய காலமது.இப்போது கொலை செய்யப்பட்டு இறந்த நண்பன் குமரனை நினைக்கும்போது பழைய நினைவுகளும் மனதில் வந்தாடுகின்றன.

குமரனைப்பற்றி எனக்கு எவ்வளவு தெரியும்?அவனைப்பற்றி அவன் சொன்ன விடயங்களைத் தவிர வேறெதுவும் எனக்குத் தெரியுமா?

அவனுக்கு,மற்றவர்களை இன்னொருதரம் திரும்பிப் பார்க்க வைக்கும் வசிகரமான தோற்றம்.ஆழமான பார்வையுடனான கூர்மையான கண்கள். அழகான சிரிப்பு.அளந்து பேசம் வசனங்கள். இயற்கை கொஞ்சும் வன்னிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்குத் தனது மேற் படிப்புக்காக வந்தவன்.

நான் அப்போது,யாழ்ப்பாண ரியுட்டரி ஒன்றிற் பார்ட்ரைம் ஆசிரியராகப் படிப்பித்துக் கொண்டிருந்தேன்.

‘ஒரு அறை தேடிக்கொண்டிருக்கிறேன்’அவன் கண்களில் ஒரு அவசரத்துடன் சொன்னான்.

அவனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட மூன்று வயது வித்தியாசமிருக்கலாம்.ஆனாலும் அவனுடன் வலியப்போய்ப் பேசவேண்டும் என்ற ஒரு கவர்ச்சி அவனிடமிருந்தது.

ஆசிரியர் மாணவன் என்ற எல்லையைத் தாண்டி அவனுடன் பேசிப் பழகியபோது ,அவன் என்னை விட எத்தனையோ விதத்தில் ‘முதியவனாக’த் தெரிந்தான். அவன் தனது படிப்பைத் தாண்டிய பல விடயங்களைப் பற்றி நிறைய வாசித்திருக்கிறான் என்று புரிந்தது.

ஆசிரிய- மாணவனாக என்ற தோரணையில் அவனுடன் பழக முடியாத மரியாதை அவனிடம் ஏற்பட்டது.

‘அப்பாவுக்குத் தெரிந்தவர்கள்pன் வீட்டிற் தங்கியிருக்கிறேன்’ என்று எனக்குச் சொல்லியிருந்தான். ஓரு நாள் அந்தப் பக்கமாகப் போய்க்கொண்டிருக்கும்போது, அவன் சொன்ன வீட்டு விலாசம் ஞாபகத்திற்கு வந்தது, போனேன்.தற்செயலான ஒரு உந்துதல்.

எனது பைசிக்கிளைப் படலியிற் சாத்திவிட்டு வளவுக்குள் போனேன். வாசல் நிறைய இளம் பெண்கள்.இவ்வளவு பெட்டைகள் இருக்குமிடத்தில் எப்படிக் குமரன் இருப்பான்?எப்படிக் கவனம் எடுத்துப்படிப்பான் என்று நினைத்து ஒரு கணம் தடுமாறினேன்.

‘குமரனைப் பார்க்க வந்திருக்கிறேன்’ என்று நான் சொன்னதும், ஏழு வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் தனது எலிவால்ப் பின்னலாட ஓடிப்போய் அவனைக் கூட்டிக்கொண்டு வந்தாள்.

குமரன் என்னைத் தன் அறைக்கு வரச் சொல்லி அழைக்கவில்லை. தனது பைசிக்கிளை எடுத்துக்கொண்டு என்னுடன் வெளியே வந்தான்.அங்கிருந்த பெண்களின் கல கலவென்ற சிரிப்பொலிகளுக்கு எனது கடைக்கண் திசைமாறியதை அவன் சாடையாகக் கவனித்ததை நான் உணர்நது கொண்டேன்.

‘இவர்களெல்லாம் இந்த வீட்டுப்பெண்கள் இல்லை. பலர், வீட்டுக்காரிடம் டியுசனுக்கு வருபவர்கள்’ எனது குழப்பத்தைக் கண்டு பிடித்தமாதிரிக் குமரன் சொன்னான்.

‘இடநெருக்கடியிருக்கும்போல என்று யோசித்தேன்’ நான் ஏதோ சொல்லிச் சமாளித்தேன்.

‘ஓமோம், இடநெருக்கடிதான். வீட்டுக்காரருக்கும் நிறையப் பிள்ளைகள்’

அந்த இளம் பெட்டைகளில் ஒன்று இவனிற் தன்னைக் கொடுக்குமா என்ற நினைவு வந்தபோது எனக்கு அவனில்ச் சாடையாக பொறாமை வந்தது.

நாங்கள் இருவரும் அந்த வீட்டுப் பெண்களைப் பற்றிச் சிந்திக்கிறோம் என்ற உண்மையைக் கவுரவமாக மறைத்துக்கொண்டோம்.

‘படிப்பில்லாத நேரங்களில் என்ன பொழுது போக்கு?’

நான் கேட்டேன். போகும் வழியில் போடப்பட்டிருந்த புதிய படத்தின் விளம்பரம் பெரிதாகக் கண்களையுறுத்தியது.இவன் என்னுடன் சேர்ந்து வந்தால் படம் பார்க்கப் போகலாம் என்ற ஒரு ஆசை எனக்குள் துளியிட்டது.

‘எனக்கு பொழுதைப் போக்கும் நேரமிருந்தால் சில வேளைகளிற் கவிதை எழுதுவேன்’

‘கவிதைகள்?’

‘உம், தமிழிற்கவிதைகள்’அவன் குரலில் ஒரு அசாதாரணமான இனிமை.

‘நல்ல பொழுது போக்கு’ நான் ஏதோ சொல்வதாற்காகச் சொல்கிறேன் என்பது அவனுக்குத் தெரியும் என்பது எனக்குத் தெரியும்.

‘பிரச்சினையானது’

அவன் மெல்லமாக முணுமுணுத்தான்.

‘கவிதை எழுதுவது பிரச்சினையா?’நான் வியப்புடன் கேட்டேன்.தமிழுணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஒருசில பத்திரிகைகளைத் தவிர வேறு எந்தப் பத்திரிகையையும் படிக்காத எனக்கு அவனின் கவிதை எழுதும் விடயத்திலுள்ள ‘பிரச்சினைகள்’ பிடிபடவில்லை.

‘காதலில் ஈடுபடுவதுபோல், அரசியலில் ஈடுபடுவதுபோல், கவிதை எழுதுவதும் சிலவேளை பிரச்சினைதான்’

எனக்கு விளங்கவில்லை. நான் ஒரு நாளும் காதலிக்கவில்லை; காதல் வரவும் முடியாது.குடும்பப் பிரச்சினைகள் ஏராளம். அவற்றைத் தீர்த்து வைக்கவேண்டும். நான் மவுனமாக நடந்தேன்.இருள் பரவத் தொடங்கி விட்டது.

‘இளமைக்குக் காதல். இலட்சியத்திற்கு அரசியல்,அந்த உணர்வுகளுக்கு உயிர் கொடுப்பவை எழுத்துக்கள்.அதில் ஒருவிதம்தான் கவிதையும்.’அவன் அழகாக அமைதியாகப் பிரித்துப் பிரித்துச் சொன்னான். அந்தி மாலை அவசரத்தில் யாழ்நகரம் பரபரப்பாகத் தெரிந்தது.

‘ஆனால் எங்கள் சமுதாயத்தில் உண்மையான காதல்கள் அபூர்வம், வாழ்க்கையின் நியதிகளுக்காக எங்களின் உண்மையான உணர்வுகளையும், ஏக்கங்களையும் குழிதோன்றிப் புதைக்கப் பழக்கப் பட்டுவிட்டோம்.எங்கள் சமுதாயத்தில் மனித உறவுகள் பொருளாதார ரீதியில் இணைக்கப் பட்டிருக்கிறது.எங்கள் சமுதாயத்தில் உண்மையான காதலோ அல்லது,அரசியல் சிந்தனைகள் உருவாகவோ வளரவோ பல தடைகள் இருக்கின்றன.எல்லாம் சந்தர்ப்ப வாதத்திலும் அதர்மத்திலும் ஊறிப்போய்க் கிடக்கிறது.கவிதை ஒரு தனி மனிதனின் சுதந்திர உணர்வுகளின் வெளிப்பாடு,அந்த உணர்வை எழுத்துக்களில் உருவம் கொடுக்கிறேன்’.

அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது,பல கோயில்களிலிருந்து பூசைமணியோலைகள் காற்றோடு இணைந்து வந்து இருதயத்தைத் தடவியது.அப்போது அவன் சொன்ன வார்த்தைகளின் பரிசுத்தத் தொனி என்னைச் சிலிர்க்கப் பண்ணியது. அவனின் புன்சிரிப்பு அந்த மாலைப்பொழுதின் மங்கல் ஒளியைத்தாண்டி எனது இருதயத்தை ஊடுருவின. அவன் சொன்னதன் ஆழம் எனக்குப் புரியவில்லை. கலைஞர்களையும் அவர்களின் சிந்தனையையும் என்னைப் போன்றவர்களாற் புரிவது கஷ்டம்.

அதன்பின் சில காலமாக நான் அவனைக் காணவில்லை.அவன் ரியுட்டரிக்கு வருவது கிடையாது. அவனைப்பற்றி அதிகம் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை,நேரமுமிருக்கவில்லை.

1986ம் ஆண்டு கால கட்டத்தில்,சிங்கள இராணுவ இயந்திரம் தமிழர்களைக் கொலைவெறியாடி அழிப்பதற்குப் பதில்,தமிழ் இயங்கங்கள் கொலைவெறியாடத் தொடங்கின.

தெரிந்த நண்பர்கள் திடிரென்று மறைந்து விட்டார்கள்.எங்கே போனார்கள் என்று விசாரிக்கப் பயம். அத்துடன்,தமிழ்ப் பகுதிகளில் நடக்கும் கொடுமைகளிலிருந்து தப்ப நான் லண்டனுக்கு வரும் ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தேன்.

ஓரு நாள், யாழ்ப்பாண பெரிய கடையில் தற்செயலாக அவனைச் சந்தித்தேன்.மிகவும் மாறிப் போயிருந்தான். இளைத்துத் தாடிவைத்து சோகமாகத் தெரிந்தான்.

‘படிப்பு எப்படி’ நான் கேட்டேன்

‘படிப்பா?’அவன் ஆச்சரியப் பட்டான்.

‘ஏன் படிப்புக்கு என்ன நடந்தது?’நான் ஆசிரியத் தோரணையிற் கேட்டேன்.

‘இங்கே படிப்பு பணக்காரர்களுக்குச் சொந்தமானது.’அவன் குரலில் விரக்தி.நான் பேசாமலிருந்தேன்.

‘எனது தம்பிகள் இருவர் இறந்து விட்டார்கள். தமிழரின் விடுதலைக்காகப் போராட என்று வெளிக்கிட்ட இயக்கங்கள் அவர்களைக் கொலை செய்து விட்டன’. அவன் குரலில் ஆத்திரம்.

நான் மறுமொழி சொல்லவில்லை. யார் அருகில் நின்று எங்கள் பேச்சைக் கேட்கிறார்களோ என்ற பயம்.இருவரும் மவுனமாக நடந்து வந்தபோது, பெரிய கடைக் கம்பம் ஒன்றில் தொங்கும் பிணத்தைப் பார்த்து ஒரு பெண்,இரு குழந்தைகளுடன் கதறிக் கொண்டிருந்தாள்.அந்தக் குழந்தைகள் இருவரும்,கந்தல் உடுப்புக்களுடன்,பசியால் பஞ்சடைந்த கண்களுடன் தாயுடன் சோர்ந்து கதறிக் கொண்டிருந்தன.

‘இவர் சமுக விரோதச் செயல்களில் ஈடுபட்டதால்,தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் மரண தண்டனை கொடுக்கப் பட்டது’ என்று எழுதிய மட்டை அந்தப் பிணத்தின் கழுத்தில் தொங்கியது.

‘பசியால் வாடும் குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுக்க,அடுத்த வீட்டுக் கோழியைத் திருடியதுதான அந்தப் பிணம் செய்த சமுக விரோதச் செயலாம்!.

‘தனது குழந்தையின் பசி தீர்க்கக் கோழியைத் திருடினால் மரண தண்டனை. தமிழ் மக்களுக்குத் தனிநாடு எடுத்துத் தருவதாக எமாற்றிப் பணம் சேர்தது ஆடம்பரமாக வாழும் கொள்ளைக் காரர்களுக்கு என்ன தண்டனை?’குமரன் கேட்டான். எனக்குப் பயம் வந்து விட்டது.இந்தமாதிரியான கேள்விகள் கேட்டால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும்.

நான் அதன் பின் கொஞ்ச நாட்களில் லண்டன் வந்து விட்டேன்.

லண்டனில் தமிழ் அகதிகள் பெயரில் பல ஸ்தாபனங்களையுண்டாக்கியும்,இலங்கையில் தொடரும் போருக்குப் பணம் சேர்த்தும், ஏழைத்தமிழர்கள்; பெயரில் ஆடம்பரமாக வாழும், படித்த தமிழர்களைக் கண்டதும் குமரன் சொன்னவை ஞாபகம் வந்தன.

லண்டனில் ஒரு நண்பனைச் சந்திக்கப் போனபோது சம்பந்தனைச் சந்தித்தேன்.நாங்கள் இருவரும் ஒரு காலத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். ஐரோப்பாவிலிருந்து வரும் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் குமரனின் கவிதை ஒன்று வெளிவந்திருந்தது. அந்தக் கவிதையின் பொருள் தமிழ்ப் பயங்கரவாதத்தைத் தாக்கியிருந்தது.

நான் என்ன விடயத்தை அப்படி அவதானமாகப் பார்க்கிறேன் என்று கவனித்த நண்பர் ஒருத்தர், என்னிடமிருந்த பத்திரிகையை வாங்கி, குமரனின் கவிதையைப் படித்து விட்டு ,’ இந்த ஆள் இலங்கையிலிருந்துகொண்டு இப்படியெல்லாம் எழுத என்ன துணிவு?’ அவர் வெடித்தார். அவர் புலிகள் பெயரில் பணம் சேகரித்துக் கொழுத்த பணக்காரராக இருப்பவர் இரண்டு வீடுகள் வைத்திருக்கிறார்.

நான் மவுனமாகவிருந்தேன்.அவர் எனக்குக் கல்யாணம் பேசியிருக்கும் பெண்ணின் சொந்தக்காரர். எனக்குக் கொழும்பில் வீடு சீதனமாகத் தருகிறார்கள். அவைகள் பெரிதாக என்மனதில் கிடந்தபோது குமரனின் கவிதை பற்றிப்பேசவில்லை.

‘அந்தக் கவிதை எழுத அவனுக்கு என்ன துணிவு’ என்று கேட்டவரின் குரலில் இருந்த பயங்கரம் என்னைப் பலமாக உறுத்தியது.

நான் சாகப் பயந்தவன்.சின்ன வயதில் எனக்குச் சுகமில்லாமல் வந்தபோது,அம்மா எத்தனையோ கோயில்களுக்கு அர்ச்சினை செய்து,எனது உயிருக்குப் போராடியதாகச் சொல்லியிருக்கிறாள்.இப்போது ஒரு லேடி டொக்டரைச் செய்யப் போகிறேன் என்பதால், எனது உயிரைப் பற்றிக் கவலைப் படாமலிருக்கு முடியாது.

லண்டனில் நானும் மற்றவர்களைப்போல் ‘பெரியாளாகப்’ படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறேன்.

குமரனை நினைத்தால் சிலவேளை பரிதாபம் வரும் அவனுக்குப் பண உதவி செய்ய யாருமிருந்தால் அவனும் லண்டனுக்கு வந்திருப்பான்.

சம்பந்தன் குமரனை அவனின் கவிதை மூலம் தெரிந்து கொண்டவன் அவன் குமரனைப் பற்றியும் அவனின் நம்பிக்கைகள் பற்றியும் உயர்வாகப் பேசினான்.

‘எங்களைப்போல், மற்றவர்களுடன் போட்டிபோடும் வாழ்க்கையில்லாமல், தனக்குப் பிடித்ததைச் செய்துகொண்டு வாழ்வது நேர்மையான விடயம் என்று நினைக்கிறேன்’ சம்பந்தன் குமரனைப்பற்றிப் பேசும்போது இப்படிச் சொன்னான்.

‘வாழ்க்கையில் வரும் சோதனைகளை வெற்றிகொள்ளாமல், கதை என்றும் கவிதை என்றும்,தங்களை மற்ற மனிதர்களிடமிருந்தும், யதார்த்தமான உலகத்திலிருமிருந்து பிரித்துக்கொண்டு வாழ்வது கோழைத்தனம்’ இப்படி நான் சொன்னது சம்பந்தனுக்குப் பிடிக்கவில்லை.

‘எங்களுக்கென்று ஒரு இலட்சியத்தை உருவாக்கி, அந்த இலட்சியத்துக்கா வாழாமல், மற்றவர்களின் திருப்திக்காகச் சுயசிந்தனையற்ற ஓட்டத்தில் வாழ்ந்து முடிப்பது கோழைத்தனம் என்று நினைக்கிறேன்’சம்பந்தன் வாதாடினான்.

‘எனக்கு எனது உயிரில் ஆசை’ நான் முணுமுணுத்தேன்.

‘நாங்கள் கோழைகள்.கொலைகாரர்களுடன் உறவு கொண்டாடி அவர்கள் செய்த கொலைகளை நியாயப் படுத்தி,துப்பாக்கி தூக்கிகளைத் துக்கிவைத்து,ஒரு சுடுகாட்டை உருவாக்கிவிட்டிருக்றோம்’ சம்பந்தன் வெறுப்புடன் சொன்னான்.

‘வாழ்க்கையில் சில விடயங்கள் தவிர்க்க முடியாதவை’ நான் விட்டுக்கொடுக்காமல் வாதாடினேன்.

‘நாளைய பிணங்கள் இன்றைய பிணங்களைப் படைப்பவர்களைப் பற்றிப்பேசி நேரத்தை வீணாக்குகிறோம்’

‘சம்பந்தன் கோபத்துடன் அலுத்துக் கொண்டான்.

‘நீ ஏன் குமரனின் கொலைக்காக ஒப்பாரி வைக்கிறாய்?அவன் நாட்டு நடப்பைத் தெரிந்துகொண்டு வாயைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டும்’நான் சம்பந்தனிற் சீறிவிழுந்தேன்.

‘ நீ குமரனின் மரணத்தை நியாயப்படுத்துபவர்களில் ஒருத்தனாக இருப்பது ஆச்சரியமல்ல. அதனால் உனக்கு வரப்போகும் சீதனம் கூட்டப்படலாம’ சம்பந்தன் என்னை நேரடியாக வதைத்தான்.’என்ன பேய்க்கதை கதைக்கிறீh?’நான அவனிடம் பாய்ந்தேன.;

‘இலங்கையில்,தமிழ்ப்பகுதிகளில், நியாயத்துக்காகப் போராடுபவர்கள், புத்திஜீவிகள்,இலட்சியவாதிகள்,கலைஞர்கள்,என்று பலர் அநியாயமாகக் கொல்லப்படுகிறார்கள். கொலைகாரர்களுக்கு வால்பிடிக்கும் கோழைகள் வளமாக வாழ்கிறார்கள்.தமிழ்ப்பகுதிகளில் இறக்கும் ஒவ்வொரு தமிழ் இளைஞனும், உன்னைப்போல பேராசை பிடித்த ஆண்களின் விலையைக் கூட்டுகிறார்கள் ஏனென்றால் அங்கு மாப்பிள்ளைக்கு அவ்வளவு தட்டுப்பாடு;.உங்கள் போன்றவர்களின் விலையுயர இலங்கையில் கொலை செய்யப்படும் ஒவ்வொரு தமிழ் இளைஞனும் பலியாகிறார்கள்’ சம்பந்தன் தனது ஆத்திரத்தை என்னிடம் கொட்டிவிட்டு வெளிக்கிட்டான்.

அவன் பேசும்போது குமரன் நேரில் வந்து நின்று ஆத்திரத்துடன் ஒரு கவிதை வாசிப்பது போலிருந்தது.

குமரனின் கவிதை யொன்று எனக்கு ஞாபகம் வந்தது.

‘கனவுதான் எனது கவிதையின் தலையங்கம்:

பகலில் நான் காணும் பயங்கரங்களை மறக்க இரவில் கனவு காண்கிறேன்.

என் இனிய கனவில் எல்லோரும் நல்லவர்கள்.

பேசத்தெரிந்தவர்கள்,பேசிப் பழகுபவர்கள்,

நான் இங்கு,பகலிற்காணும் மனிதர்கள் வாயற்ற முண்டங்கள்,

எங்கள் பெயர் சொல்லி ஏமாற்றிப் பிழைப்பவர்கள்

எங்கள் கடும் உழைப்பைக் கட்டணமாய்ப் பறிப்பவர்கள்

யார் இவர்கள் எங்களுக்கு? யார் இவர்களைத் தெரிவு செய்தார்?

துப்பாக்கி தூக்கிகள் என் கனவில வரவில்லை.

என் உயிர்பறிக்க அவர்கள் என்னைத் துரத்தவில்லை

இவர்கள் ஏந்திய துப்பாக்கிகள் எதிரிக்கா அல்லது எங்களுக்கா?

இங்கு நடப்பதென்ன,

பிணம்தின்னிப் பேய்களின் பேராட்சி நடக்கிறது.

துப்பாக்கி மன்னர்களே சுடுகாடு படைப்பவர்களே,

காடலையும் மிருகங்களே காலம் வரும் உங்களுக்கும்,

ஏழைகள் அழுகிறார்கள்,அதில் அழிந்துபோவிர்கள்’

(யாவும் கற்பனையே)

– அ.ஆ.இ.பத்திரிகை வெளியீடு-1992

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *