கதையில வில்லன் இருக்க கூடாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 30, 2022
பார்வையிட்டோர்: 3,870 
 

வாங்க டைரக்டர் சார், நாம ஒரு படம் பண்ணனும், அதை பத்தி பேசறதுக்குத்தான் உங்களை வர சொன்னேன். உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே.

எனக்கொன்னும் ஆட்சேபணை இல்லை, மூணு மாசம் கழிச்சு ராமய்யன் தயாரிப்புல படம் பண்ணி தர்றேன்னு டயம் கொடுத்திருக்கேன். அதனால அதுக்குள்ள உங்களுக்கு ஒரு படம் பண்ணி தர்றேன்.

தெரியும் தெரியும், அதான் உங்களை இப்ப புடிச்சேன், கதை ஒண்ணு தயார் பண்ணுங்க, கதை கதை மாதிரியும் இருக்கணும், இல்லாத மாதிரியும் இருக்கணும், எங்கியோ நடந்த மாதிரியும் இருக்கணும், இப்படியெல்லாம் நடக்காது, அப்படீனு சொல்ற மாதிரியும் இருக்கணும். ஆனா கதையில வில்லனும் இருக்க கூடாது, கதானாயகனும் இருக்க கூடாது அந்த மாதிரி கதை ஒண்ணு ரெடி பண்ணி சொல்லுங்க

சொல்றேன் சார் கேளுங்க, முதல்ல நாம கதைய கிராமத்துல இருந்து ஆரம்பிக்கலாம்

கிராமமா..! வேணாம் தம்பி இப்ப கிராமத்துல ஆரம்பிக்கற கதைகளுக்கு மவுசு கம்மியாயிடுச்சு.

இல்லை சார்..கதைய அப்படியே நகரத்துக்கு கொண்டு போயிடலாம்.

வேணாம் தம்பி கதைய நகரத்துலயே ஆரம்பிங்க.

சரிங்க ஒரு பரபரப்பான சிட்டி, அந்த சிட்டியில இருக்கற ஒரு தெரு, அந்த தெருவுல ஒரு வீட்டுல இருந்து கதை நகருது.

தம்பி தம்பி கொஞ்சம் இருங்க, வீட்டுல இருந்து ஆரம்பிக்கறதுக்கு ஒரு பங்களாவுல இருந்து ஆரம்பிச்சா நல்லாயிருக்கும்.

அப்படீங்களா சார், அப்படியே ஆரம்பிச்சுக்கலாம்.

நாம கதையில வர்ற பொண்ணு காலேஜ் போயிட்டிருக்கற பொண்ணு, காலேஜுக்கு கிளம்பிக்கிட்டிருக்கு.

தம்பி காலேஜுக்கு சொன்னா இப்ப ரசிகர்களுக்கு பிடிக்கறதில்லை, ஸ்கூல்ல இருந்து ஆரம்பிச்சாத்தான் பிடிக்குது.

சாரி சார் இது கொஞ்சம் லவ் சப்ஜெக்ட், ஸ்கூல் பொண்ணை காட்டுனா அவ்வளவு நல்லா இருக்காது.

ஹா ஹா… என்ன தம்பி இப்பவெல்லாம் பொண்ணை எலிமெண்டரி ஸ்கூல்லயிருந்தே காட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

சார் அது காதல் சப்ஜெக்ட் இல்லாம வேற கதையா இருக்கும்.

படிக்கற பசங்களுக்கு இது மட்டும்தான் பிரச்சினை அப்படீங்கறமாதிரி காட்டினாத்தான் இரசிக்கறாங்க, போங்க தம்பி, வேற எந்த சப்ஜெக்ட் வச்சாலும் நம்ம படம் இரண்டு நாள் கூட போகாது

சரிங்க சார், அப்ப வேற சப்ஜெக்ட் பாக்கலாமா?

என்ன சப்ஜெக்ட் பண்ணலாமுன்னு நீங்களே சொல்லுங்க.

நீங்க தான தம்பி டைக்டர், அதனால நீங்களே ஒரு சப்ஜெக்ட் சொல்லுங்க

அப்ப இந்த கொரோனாவ பத்தி கதை சொல்லலாமா?

ஏன் தம்பி அவனனவன் கொரானோன்னு பேச்சை எடுத்தாலே தலை தெறிச்சு ஓடறான், அது பேரை கூட சொல்லாதீங்க.

அப்ப வேலையில்லா திண்டாட்டத்தை பத்தி சொல்லலாமா?

வேலைய பத்தி இப்ப யாரு கவலை படறா..!

சரி சார் சுற்றுப்புற சூழ் நிலை பாதிப்பை பத்தி..

தம்பி நம்ம ஆளுங்களுக்கு இந்த பழக்கம் சுட்டு போட்டாலும் வராது

சரி விவசாயிகளை பத்தி..

விவசாயமா ! அதை மறந்து ரொம்ப நாளாச்சே..

இன்னைக்கு எங்க பாத்தாலும் லஞ்சம் பரவியிருக்கு, அதனால வர்ற பாதிப்பை பத்தி சொல்லலாமா?

நம்ம மக்களுக்கு லஞ்சம் வாங்கறவனை விட நான் இவ்வளவு ரூபாய் கொடுத்தேன்னு சொல்றது தான் இப்பவெல்லாம் பெருமை படறாங்க, அவங்க கிட்டே போய்..இதை சொன்னா..

சரி சார் அரசியல் பிரச்சினை பத்தி சொல்லலாமா?

அரசியலா..அது கூட இப்ப அவுட் ஆப் சப்ஜெக்ட் அயிடுச்சு..

கல்வியில இருக்கற பிரச்சினைகளை பத்தி சொல்லாங்களா?

என்ன தம்பி ஜோக்கடிக்கறீங்க, கல்விய மறந்து ஒன்றரை வருசமாச்சு, கொரானோவுல முதல்ல பாதிச்சு போனது கல்விதான். இப்ப அதை பத்தி சொன்னா யாரும் கண்டுக்கிட மாட்டாங்க.

புதுசா ஏதாவது சொல்லுங்க..

புதுசா.. யோசிச்சு சொல்றேனுங்க

சரி, நீங்க நினைக்கற மாதிரி ஒரு பங்களா, ஒரு ஸ்கூல், அப்புறம் நகரம் இப்படி காட்ட ஆரம்பிக்கறோம்.

வெரி குட் தம்பி, இதைய மட்டும் இன்னைக்கு கதை டிஸ்கசன்ல காட்டிட்டு இருப்போம்.

கதை…

அதை நாளைக்கு டிஸ்கஸ் பண்ணலாம், ஆனா ஒண்ணு தம்பி கதையுல கதானாயகனா கூட யாரையாவது காட்டிடுங்க, ஆனா வில்லன் கண்டிப்பா இருக்க கூடாது.

புரியுதுங்க, ஏன்னா வில்லன் எங்க இருக்கறானு நல்லா தெளிவா தெரியும்போது அவனை எதுக்கு தனியா காட்டணும்..!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *