கதையாசிரியர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 5,110 
 

குறளரசன் அமைதியாக அமர்ந்து தன் கதையைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஞானயோதயம் பிறந்தது போல் எழுதத் தொடங்கினான். மீண்டும் சிந்திக்கத் தொடங்கினான்.

ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது அதைக் கலைக்கும் விதமாக ஒரே சத்தம் கூச்சல். அந்தச் சத்ததில் அவன் கற்பனை ஓட்டம் கலைந்ததைக் கண்டு முகம் சுளித்து என்னவென்று கவனித்தான்.

அவன் வீட்டின் முன்னால் இருந்துதான் சத்தம் வந்து கொண்டிருந்தது. உடனே வெளியில் எட்டிப் பார்த்தான். அவன் அப்பா நாதனிடம் ஊர் ஆட்கள் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

நாதன் அவர்களிடம், “கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. என்ன பிரச்சினைன்னு சொன்னாதானே தெரியும். எதுவும் சொல்லாமல் மல்லுக் கட்டினா நான் என்ன செய்றது? யாரவது ஒருத்தர் என்ன விஷயம்னு? சொல்லுங்க.” என்றார் நாதன்.

“உன் மகனை எதுக்குய்யா? கதை எல்லாம் எழுதத் சொல்ற. அவன் கதை எழுதறேன்னு எங்க உயிரை எடுக்கிறான். எங்க பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. அதைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்னு சொல்லு.” என்றார் கூட்டத்தில்.

“என் மகன் கதை எழுதுறதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? அவனைக் கதை எழுதக் கூடாதுன்னு சொல்றதுக்கு நீங்க யார்?” என்று கோபமாகக் கேட்டார் நாதன்.

“எவன் கதையையாவது எழுதச் சொல். எங்க வீட்டுக் கதையை ஏன் எழுதறான்?” என்றனர்.

“உங்க வீட்டு கதையா? என்ன சொல்றீங்க ஒண்ணும் புரியலையே.” என்று நாதன் முழித்தார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே குறளரசன் அங்கு வந்தான்.

“அப்பா, என்ன பிரச்சனை? ஏன் எல்லாம் சத்தம் போடுறாங்க?” குறள் ஒன்றும் தெரியாதது போல் கேட்டான்.

“நீ அவங்க வீட்டு கதையை எழுதறன்னு சொல்றாங்க. என்ன? எனக்கு ஒண்ணும் புரியலை.” என்றார் நாதன் குழப்பமாக.

“நான் கதை எழுதுறது நம்ம ஊர் சம்பந்தப்பட்ட புத்தகத்தில். அதை வரைமுறை செய்றதுக்குச் சங்க உறுப்பினர்கள் இருக்காங்க. உங்களுக்கு என் கதையில் ஏதாவது பிரச்சினைன்னா அவங்ககிட்ட புகார் கொடுக்கலாம். நான் அங்க வந்து அவங்ககிட்டப் பதில் சொல்றேன். உங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என்றான் குறளரசன் திமிராக.

“நாதன், உன் பையன் பேசுறது சரியில்லை. முதலில் அவன் எழுதுறதை நிறுத்த சொல். இல்லை, எங்க நடவடிக்கை மோசமானதா இருக்கும்.” என்று எச்சரிக்கும் விதமாகச் சொன்னார்கள்.

“அவன் சொல்லிட்டான் முறைப்படிப் போய்ப் புகார் கொடுங்க. அங்க வந்து குறள் பதில் சொல்வான். உங்க மிரட்டலுக்கெல்லாம் நாங்க பயப்படமாட்டோம்.” என்றார் நாதன்.

எல்லோருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. சிலர் புகார் கொடுக்கத் தயங்கினார்கள். சிலர் கொடுத்தே ஆக வேண்டும் என்றார்கள். அவர்களுக்குள்ளே ஒரே குழப்பம் நடந்து கொண்டிருந்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து புகார் கொடுப்பது என்று முடிவு பண்ணி புகாரும் கொடுத்தனர்.

புகார் கொடுக்கப்பட்டதும் உறுப்பினர்கள் குறளரசனை அழைத்தனர். அவனும் சென்று புகார் பற்றிய விபரங்களைக் கேட்டான். உறுப்பினர்கள் ஒவ்வொருவராகச் சொல்லச் சொன்னார்கள்.

“ஐயா, இவன் சாதி, பாலியல் வன்கொடுமை பற்றிக் கதை எழுதியிருக்கான் சரியில்லை. அதுவும் எங்க வீட்டுக் கதை எல்லாம் இவன் எழுதுகிறான் ஏன்?” என்றார் ஒருவர்.

“சாதிப் பிரச்சினை பாலியல் வன்கொடுமை எங்கதான் இல்லை. அதைப் பற்றிக் கதை எழுதினதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?” என்றான் குறளரசன்.

“அது வந்து…” என்று அவர் இழுத்தார்.

“என்ன இழுக்கீங்க? சொல்ல முடியலையா? நான் சொல்லட்டும்மா?” என்று உறுப்பினர்களைப் பார்த்துப் பேசினான் குறளரசன்.

“ஐயா, இவங்க எல்லோரும் ஊர் முனையில் இருக்கிற மரத்தடியில் தினமும் கூட்டம் போட்டு நாட்டு நடப்புகளைப் பற்றிப் பேசுறது வழக்கம். இவர் நாளிதழில் சாதியால் நடந்த ஒரு கொலைப் பற்றிப் பேசினார். கொலை செஞ்சவங்க மனசாட்சியே இல்லாதவங்கன்னு திட்டினார். ஆனால், இவர் வீட்டுக்குள்ள அதே சாதி பிரச்சினை இருக்கு. இவர் மகன் வேற சாதியில் கல்யாணம் முடிச்சிருக்கார். அவர் மருமக வேற சாதின்னு அவளை இவர் வீட்டுக்குள்ள வர விடுறதில்லை. எங்கயோ நடந்த சம்பவத்துக்கு மனசாட்சி இல்லாதவர்னு திட்டுறவர் அவர் வீட்டுக்குள் நடப்பதுக்கு மனசாட்சி எங்க போச்சு?

அதோ நிற்கிறாரே அவர் எங்கோ நடந்த பாலியல் வன்கொடுமைக்கு இந்த மாதிரி ஆட்களையெல்லாம் சுட்டுக் கொல்லனும்னு. ஆனால், இவர் மனைவியின் தங்கச்சியை வீட்டில் யாரும் இல்லாதப்ப பாலியல் கொடுமை செஞ்சது இல்லாம பலாத்காரம் செய்ய முயற்சிப் பண்ணியிருக்கார். சரியான நேரத்தில் இவரோட மனைவி வந்ததால் தன் தங்கச்சியைக் காப்பாற்றினார். இவரை எங்க நிற்க வச்சு சுடுறது?” என்றான் குறளரசன்.

“அடுத்து இவர் தாத்தா. வயசு அறுபத்தி அஞ்சு. தனது பத்து வயசுப் பேத்தி மாற்றுத் திறனாளின்னு தெரிஞ்சும் தன் சபலப் புத்தியால் தொல்லை கொடுத்து அந்தச் சின்னப் பொண்ணைச் சின்னப் பின்னாமாக்கச் துணிஞ்சிருக்கார். அந்தக் குழந்தை வெளியில் சொன்னதால் அவளும் தப்பக்ச்சா. இவரை என்ன செய்றது. இங்க நிற்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை இருக்கு. நான் பேனாவை எடுத்தா எழுதுவேன் நிறுத்த மாட்டேன். ஊர் புத்தகத்தில் இல்லைன்னா என்ன? நிறையப் புத்தகங்கள் இருக்கு எல்லாத்திலும் எழுதுவேன்.முடிஞ்சதைப் பார்த்துக்கோங்க.” என்று தைரியமாகச் சொன்னான் குறளரசன்.

“இவன் சொல்றது எல்லாம் பொய். அப்படி எதுவும் நடக்கலை.” என்றனர்.

“சரி நான் சொன்னது பொய்யாவே இருக்கட்டும். அவங்க வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடக்கலைன்னு அவங்களைச் சொல்லச் சொல்லுங்க.” என்று குறள் கேட்க.

“உங்க வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா?” என்றார் சங்க உறுப்பினர்.

“ஐயா, இவன் பொய் சொல்றான். இவனை நம்பாதீங்க. அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை.” என்றனர்.

“சரி குறளரசன் பொய் சொல்றான்னா அப்படியொரு சம்பவம் உங்க வீட்டில் நடக்கலைன்னாலும் எங்கோ நடந்ததைப் பற்றிக் குறளரசன் எழுதிய கதைக்கு நீங்க ஏன் புகார் கொடுத்தீங்க? உங்க புகாரை நாங்க ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், இந்தச் சம்பவங்கள் அனைத்தும் எங்க வீட்டில் நடந்ததுதான். அதனால், நாங்க குறளரசன் மீது புகார் கொடுக்கிறோம்னு எழுதித் தரனும்.” என்றார்கள் சங்க உறுப்பினர்கள்.

“ஐயா, எங்க வீட்டுக் கதையை எழுதி எங்களை அசிங்கப்படுத்திட்டான். அதைக் கேட்கச் சொன்னா நீங்க என்ன பேசறீங்க?” என்றார்கள்.

“குறளரசன் இதுவரை எங்க உங்க வீட்டுக் கதைன்னு சொல்லவே இல்லை. நாங்க கதையைப் படிச்சப்ப கூட எங்கோ நடந்த்தோ இல்லை கற்பனையோன்னுதான் நினைச்சிருந்தோம். நீங்க எல்லாம் எங்க வீட்டில் நடந்த கதைன்னு குறளரசன் மேல கொடுத்த புகாரால் எங்களுக்கும் தெரிஞ்சது. நீங்க கதையை மட்டும் படிச்சிட்டு அமைதியா இருந்திருந்தா எங்களுக்கு மட்டுமில்லை யாருக்கும் தெரிஞ்சி இருக்காது. தவளை தன் வாயால் கெடும் என்கிற மாதிரி இருக்கு உங்க கதை.” என்று சங்க உறுப்பினர்கள் சிரித்தார்கள்.

மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் தாங்கள் செய்த தவறுகளை ஒத்துக் கொள்ளவும் முடியாமல் புகாரை வாபஸ் வாங்கிச் சென்றனர். “குறளரசா, என்ன நடக்கு? எனக்கு ஒண்ணும் புரியலை.” என்றார் நாதன்.

“அப்பா, இவங்க வேலைக்கு எங்கேயும் போகாம ஊர் முனையில் அமர்ந்து கூட்டம் போட்டு நாட்டு நடப்பை பேசுறோன்னு நேரத்தை போக்குறாங்க. வீட்டு பொம்பளைங்க வேலைக்குப் போயிட்டு வந்தா வீட்டில் இவங்க செய்ற அட்டூழியம் அதிகமா இருக்கு. கேட்டாலும் நாங்க ஆம்பிள்ளைங்க அப்படிதான் இருப்போம்னு பேசியிருக்காங்க. அதனால், இவங்க வீட்டுப் பொம்பளைங்க கொடுத்த புகார் அடிப்படையில் ஊர் சங்க உறுப்பினர்களும் நானும் சேர்ந்து மறைமுகமா எடுக்கப்பட்ட நடவடிக்கை.” என்றான் குறளரசன் பெருமையாக.

மறுநாள் ஊர்முனை மரத்தடி அமைதியாகக் காணப்பட்டது. அந்த ஊர் பெண்களின் வாழ்வும் அமைதியாகச் செல்லுமென்று நினைத்துக் கொண்டார் நாதன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *