கடைசி விலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 5,237 
 

காளிமுத்துவுக்கு சென்னையின் பிரபல ஐடி கம்பெனியில் வேலை.

நல்லவேலை, இரண்டு கை நிறையச் சம்பளம், மிகச் சுதந்திரமான வாழ்க்கை எல்லாம் சேர்ந்து காளிமுத்துவை ஆனந்தக் கடலில் மூழ்கடித்தன.

சென்னையில் வாய்க்கு ருசியான உணவுகள் கிடைக்கும் ஹோட்டல்கள் என்னென்ன, எந்தப் பகுதிகளில் இருக்கின்றன என்பதெல்லாம் காளிமுத்துவுக்கு எப்படி அத்துப்படியோ; அதேமாதிரி எந்தப் பகுதிகளில் உடல் வனப்பு அதிகமான விலைமகள்களின் வீடுகள் இருக்கின்றன என்பதும் அவனுக்கு அத்துப்படி.

சம்பளம் வாங்கியதும், மாதத்தின் முதல் செலவே அவனுக்கு விலைமகள் வீட்டுக்குப் போய்வருவதுதான்! அது அவனுக்கு ஒரு இன்பமயமான சாகசச் செயலாகவே இருந்தது.

அதுவும், தைரியம் இல்லாத தன் நண்பர்களை அவ்வப்போது அவர்களிடம் அழைத்துப்போவது அவனுக்கு மகத்தான வீரச்செயலாகவே இருந்தது!

நிறைய விலைமகள்கள் வீட்டில் காளிமுத்துதான் பிரதான வாடிக்கையாளன். அதனால் பல சலுகைகள் விலைமகள்கள் வீடுகளில் காளிமுத்துவுக்கு உண்டு. அதில் முக்கியமான சலுகை மற்ற வாடிக்கையாளர்களைவிட அவன் கூடுதலாக இருபது நிமிடங்கள்வரை இருந்துவிட்டுப் போகலாம்… யாரும் அவனை அவசரப்படுத்த மாட்டார்கள். தவிர, அவனுக்கு சிக்கன், முட்டை பிரியாணி கொடுத்தும் உபசரிப்பார்கள். இவனும் பணத்தை விசிறியடிப்பான்.

நாளடைவில் சென்னையின் பெரும்பாலான ‘மாமா’க்களின் மொபைல் நம்பர்கள் காளிமுத்துவின் மொபைலில் நிரந்தரமாகக் குடியேறின.

பணப்பழக்கம் மிக அதிகமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்த காளிமுத்துவுக்கு தான் ஒரு ஆண் என்கிற செருக்கு மனதில் ரொம்பத்தான் ஆழமாக வேரிட வைத்திருந்தன. அவனின் எல்லாப் பார்வையும் செல்வபோகம் என்ற கணக்கையும், ஆண் என்ற அடங்காத செருக்கையுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன.

பணத்தால் யாரையும் வாங்கிவிட முடியும் என்பது அவனுடைய ஆக்ரோஷமான அபிப்பிராயம். எதன் மீதும் அல்லது யார் மீதும் அவனுடைய மனதில் மென்மையான மூலை என்பதற்கு ஒரு ஊசிமுனை அளவிற்குக்கூட இடம் கிடையாது. அவன் யாரிடத்திலும் அன்பு காட்டியதில்லை. அதேமாதிரி யாரிடத்தில் இருந்தும் அன்பை அவன் எதிர்பார்த்ததும் இல்லை.

வயது இருபத்தியெட்டு ஆகிவிட்டதால், அப்பா ஊரிலிருந்து அடிக்கடி மொபைலில் தொடர்புகொண்டு காளிமுத்துவை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தினார்.

யோசித்துப் பார்த்ததில் அவனாலும் ஒருத்தியைத் திருமணம் செய்துகொண்டு குப்பைகொட்ட முடியுமா என்பது காளிமுத்துவுக்கே புரியாத புதிராக இருந்தது. நிஜமாகவே அவன் மனதில் கல்யாண ஆசைகளோ கனவுகளோ எப்போதும் ஏற்பட்டது கிடையாது.

சென்னையின் ஆறுவருட வாழ்க்கையில் காளிமுத்து எந்தப் பெண்ணையும் கல்யாண ஆர்வத்தோடோ அல்லது காதல் வேகத்தோடோ பார்த்ததோ அணுகியதோ கிடையவே கிடையாது.

வாளிப்பான பெண் ஒருத்தியைப் பார்த்தால், ‘அட, இவளுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டால் எவ்வளவு பிரமாமாதமாக இருக்கும்’ என்கிற பாலுணர்வுதான் அவனிடம் அதீதமாக ஏற்படும். பெண்களின் உடம்பின் மேல் அவனுக்கு தீராத அப்படியொரு தாகம்…

மனிதனுக்கு பாலுணர்வுதான் இருக்கலாமே தவிர, காதல் தேவையே கிடையாது என்பது அவனுடைய எண்ணம். கல்யாண வாழ்க்கை ஆண்-பெண் சுகத்திற்கான வடிகால் என்பது அவன் முடிவு.

இருப்பவனுக்கு ஒரே ஒரு வீடு; இல்லாதவனுக்கு எத்தனையோ வீடு என்கிற மாதிரி காளிமுத்துவுக்குத்தான் எத்தனை வீடுகள்…. சொர்ணாக்கா வீடு; ராசக்கா வீடு; பாப்பக்கா வீடு; வடிவக்கா வீடு… அவற்றில் எத்தனையோ விதமான பெண்கள்…

ஆனால் சமீபகாலங்களாக காளிமுத்துவுக்கு, இனி எல்லாமே ஒரே கூரையின் கீழ் கிடைக்க வேண்டும் என்கிற ஞானோதயம் ஏற்பட்டுவிட்டது. பாலுறவு, வயிற்று உணவு, இரவுத் தூக்கம் இந்த மூன்றும் ஒரேவீட்டின் சுவர்களுக்குள் கிடைத்தாக வேண்டும். இதற்கு ஒரேவழி உடனடியாக ஒரு கல்யாணம் என்று நினைத்தான்.

ஒரே கூரையின் கீழ் எல்லாவற்றையும் தரப்போகிற மனைவியின் வருகைக்காகக் காத்துக்கொண்டும், அதேநேரம் புதுப்புது விலைமகள்கள் வீடுகளுக்கு போய் வந்துகொண்டும் இருந்தான்.

காளிமுத்துவின் அப்பா ஒருநாள், “டேய், நம்ம ஊர்ப் பொண்ணு சுசீலான்னு ஒருத்தி மயிலாப்பூர்ல இருக்கா, போட்டோல லட்சணமா இருக்கா, அவளுக்கு அப்பா அம்மா கிடையாது; ஆனா ரெண்டு சித்திகள் உண்டு; இந்த சண்டே நீ அவளைப்போய் பெண் பார்த்துவிட்டு வந்துரு… உனக்கு பெண்ணைப் பிடிச்சிருந்தா, மற்ற விஷயங்களைப் பேச நானும் அம்மாவும் புறப்பட்டு சென்னை வருகிறோம்…” என்றார்.

காளிமுத்து அவனுடைய கல்யாணத்திற்காக முதலில் பார்க்கப்போகிற பெண் சுசீலா. போய்ப் பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்கிற எண்ணம் மேலோங்கியது…

ஞாயிற்றுக்கிழமை பிரத்தியேகமாக உடை அணிந்துகொண்டு, ஓலா டாக்ஸி பிடித்து மயிலாப்பூர் சென்று, சுசீலாவின் வீட்டைக் கண்டுபிடித்துப் போய் இறங்கினான்.

வீட்டு வாசலில் சித்தியின் கணவர் அவனை வரவேற்று அமரச் செய்தார். சித்திகள் காளிமுத்து சாப்பிட காரட் அல்வாவும், உருளைக்கிழங்கு போண்டாவும் கொண்டுவந்தனர். அவன் சாப்பிட்டு முடித்ததும், “சுசீலா” என்று சித்தி கூப்பிட்டாள்.

சுசீலா உள்ளேயிருந்து அழகான அயல்நாட்டு நைலக்ஸ் புடவையில் தலையைக் குனிந்தவாறு மெதுவாக நடந்துவந்து காளிமுத்துவுக்கு எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து தலையை நிமிர்த்தி அவனை நோக்கினாள்.

சுசீலாவைப் பார்த்த அடுத்தகணம் அவன் முகம் சுருங்கியது; அவன் உடம்பெல்லாம் அவமானத்தில் படபடத்தது.

கடந்த மூன்று வருடங்களில் கோடம்பாக்கம் பாப்பக்கா வீட்டில் குறைந்தது பத்துப் பதினைந்து தடவைகளாவது அவனுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் அந்த லதாவா இந்தச் சுசீலா?

சந்தேகமே இல்லை… அந்தக் கேடுகெட்ட நாய்தான்! அதுசரி, எந்தத் தேவடியாதான் தன் உண்மையான பெயரை சொல்லியிருக்கிறாள்?

கோபத்தில் எழுந்துநின்று, ஆத்திரத்தின் உத்வேகத்தில் சுசீலாவின் மூஞ்சியில் காறித் துப்பினான்.

தன்னைப் பெண்பார்க்க வந்திருப்பது பாப்பக்கா வீட்டு வாடிக்கையாளன் காளிமுத்து என்று தெரிந்த அதிர்வில் நடுங்கிப்போன சுசீலாவும் அவமானத்தால் முகம்சிவந்து எழுந்து நின்றாள்.

அவளுடைய உணர்வுகளும் படபடத்தன. முகத்தின் எச்சிலை துடைத்துக்கொண்டே, “காளிமுத்து, இப்படிக் காறித் துப்புற வேலையெல்லாம் இங்க வச்சுக்காத…” என்றாள்.

“ரொம்ப அழகா பொண்ணு பார்க்க வரச்சொல்லிட்டு என் மூஞ்சில நீங்க காறித்துப்பினீங்க… ஒரு ஆம்பிளை நான்மட்டும் திருப்பித் துப்பாம விடுவேனா?” கோபத்தில் கத்தினான்.

சுசீலா கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “சரி… பதிலுக்கு நீங்க காறித்துப்பியாச்சு… ப்ளீஸ் இப்ப இங்கிருந்து அமைதியா கிளம்புங்க.”

“கிளம்பத்தான் போறேன். உக்காந்து இங்க என்ன சம்பந்தமா பேசப்போறேன்? நேத்துவரைக்கும் கேவலமான ஒரு தொழிலைப் பண்ணிட்டு, இன்னிக்கி உத்தமி மாதிரி ஒருத்தனை பெண் பார்க்க வரச்சொல்லியிருக்கியே? என்ன நெஞ்சழுத்தம் உனக்கு?”

“இதே வார்த்தையை நானும் உன்னைக் கேட்கமுடியும்.”

“கேட்படி கேட்ப! ஏன் கேட்கமாட்ட? பாப்பக்கா வீட்ல தொழில் செஞ்சுகிட்டு இருந்தது நீதான், நான் கிடையாது.”

“இந்தத் தொழில்ல நீயும் எனக்கு கஸ்டமர். கஸ்டமர் இல்லைன்னா இழுத்து மூடற தொழில் இது… அதை மறந்துடாத.”

“ஒரு நல்லவ பேசற பேச்சா இது?”

“நீ பேசின பேச்சுக்கு பதில் பேச்சு இது. இல்லேன்னா இப்படியெல்லாம் நான் பேசறவ கிடையாது.”

“நல்லவேளை நான் தப்பிச்சுக்கிட்டேன். இல்லேன்னா ஏமாளிச் சோணகிரியாட்டம் உன் கழுத்தில் தாலி கட்ட ரெடியாயிருப்பேன். நீயும் படிதாண்டாப் பத்தினி மாதிரி நடிச்சுகிட்டே உன் கழுத்தை நீட்டியிருப்பே!”

“நீயும்தான் எங்கிட்ட ஒரு டிராமா போட்டிருப்ப.”

“ஆம்பள என்ன ட்ராமா வேண்டுமானாலும் போடலாம், எவளும் கேட்கமுடியாது!”

சுசீலா காளிமுத்துவைக் கையெடுத்து கும்பிட்டாள். “நன்றி, போய்ட்டு வாங்க.”

“போய்ட்டேதான் இருக்கேன். இது என்ன பாப்பக்கா வீடா, போய்ட்டு திரும்பிவர?” இடக்காகக் கேட்டான்.

“முடிஞ்சாச்சு அந்த வீட்டு வாழ்க்கை. இனிமேல் அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு கிடையாது.”

“அட, எப்ப இருந்து இந்த ஞானோதயம்?”

“எப்ப இருந்து என்பதைவிட, ஞானோதயம் வந்ததுதான் முக்கியம்.”

“இப்படியெல்லாம் பேசறதால பாப்பக்கா வீட்ல நீ கெட்டழிஞ்ச வாழ்க்கை பொய்ன்னு ஆயிடாது.”

“வாழ்க்கை பூரா அந்தக் கெட்டழிஞ்ச வாழ்க்கையே வாழ்ந்துகிட்டு இருக்கணும்னு கட்டாயம் எதுவும் கிடையாது. நீ ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னா நான்மட்டும் ஒருத்தனை கல்யாணம் செய்துக்கக்கூடாதா?”

“ஓ! தாராளமா… ஆனா தைரியம் இருந்தா அவன்கிட்ட உன் பாப்பக்கா வீட்டு வாழ்க்கையை ஓப்பனா சொல்லிட்டு கல்யாணம் செய்துக்க. அப்ப நீ யோக்கியமானவ.”

“அதுக்கெல்லாம் பயப்படறவ இல்லை நான். சொல்லிட்டா உன் முகத்தை எங்கபோய் வச்சிப்பே? கெட்டுப்போன ஒருத்தியை தெரிஞ்சே கல்யாணம் பண்ணிக்கிற எத்தனையோபேர் இருக்காங்க.”

“ஆனா கண்டிப்பா அவன் ஒரு யோக்கியமான ஆளா இருக்கமாட்டான்.”

“காளிமுத்து மாதிரி!”

“வீணா நீ வம்பை விலைக்கு வாங்காத… இந்த ஜென்மத்துல உனக்கு கல்யாணமே நடக்கமுடியாம பண்ணிடுவேன்.”

“இந்த மிரட்டுலுக்கெல்லாம் பயப்படறவ இல்ல நான். நடத்திக் காட்டறேனா இல்லையான்னு பார். உன் கல்யாண இன்விட்டேஷன் எனக்கு அனுப்பு, என் புருஷனோடேயே உன் கல்யாணத்துக்கு வந்தும் காட்டறேன். அதுக்கு தைரியம் இருக்கா உனக்கு?”

“பொட்டச்சி உனக்கு இருக்கிற தைரியம் ஆம்பளையான எனக்கு இருக்காதுன்னு பாக்கறியா? ரெண்டே மாசத்துல உனக்கு இன்விடேஷன் வரும்.”

“நானும் என் தொழில் அதிபர் புருஷனோட வரேன் பார்.”

“எவனோ மானங்கெட்டவன் தயாரா இருக்கான்போல… அவனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.”

“கற்புக்கரசியா ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கணும்னு தவிக்கிறே பாவம். நீ கல்யாணம் பண்ணிக்கப் போறவளோட கடந்தகாலம் உனக்குத் தெரியாமப்போகிற காரணமே, அந்தப் பொண்ணோட ஒழுக்கத்துக்கு உத்தரவாதமாகிவிடாது காளி…”

“எனக்கு ஒருத்தியோட மூஞ்சியப் பார்த்தே சொல்லிடமுடியும் அவ யோக்கியமானவளா இல்லையான்னு…”

“இனிமே பேசறதுக்கு ஒண்ணும் கிடையாது. நாம் சவாலில் சந்திக்கலாம்.”

“ஆனா பாப்பாக்கா வீட்ல உன்னை மீட் பண்றதுல எனக்கு எப்பவும் ஆசைதான்…”

சுசீலா பதில் சொல்லாமல் வீட்டினுள் சென்றுவிட்டாள்.

காளிமுத்து உடனே அங்கிருந்து கிளம்பினான்.

ஒருமாதம் சென்றது…

காளிமுத்து சுசீலாவின்மீது மானசீகமாகப் போரைத் தொடுத்தான். மறுபடியும் சுசீலாவை பாப்பக்கா வீட்டுக் கட்டிலில் சந்திப்பதுதான் மானசீகப்போரின் வியூகம். அவளை மனைவியாக்கிக் கொள்வதுதான் காளிமுத்துவுக்கு கசப்பானது, ஆனால் அவளை விலைமகளாகவே பகிர்ந்துகொள்வது இனிப்பானது.

சுசீலாவை எப்படியாவது ஒருவகையில் பழிதீர்த்தேயாக வேண்டும் என்கிற வன்மம் தீவிரமானது.

ஆனால் பாப்பக்கா வீட்டிற்கு செல்வதற்குமுன், அவனுக்கு சுசீலாவிடமிருந்து அவளின் கல்யாண அழைப்பிதழ் வந்தது.

மதனகோபால் என்கிற சினிமா ப்ரோடுயூசருக்கும் சுசீலாவுக்கும் கல்யாணம். அதுவும் நாளைக்கு.

கோபம் தலைக்கேற கல்யாண அழைப்பிதழை சுக்கல் சுக்கலாகக் கிழித்தான். போயும் போயும் ஒரு தேவடியாவிடம் தோற்றுவிட்டதை நினைத்து நொறுங்கிப்போனான்.

இரண்டுநாட்கள் வேலைக்குச் செல்லாமல் அறையின் கட்டிலில் குப்புறப்படுத்துக் கிடந்தான்.

யோசித்துப்பார்க்கையில், சுசீலாவின் நெஞ்சுரம் காளிமுத்துவை வியக்கவே வைத்தது. துளிபயம் இல்லாமல் பத்திரிக்கையை அனுப்பிவைத்த அவளுடைய வீரம் அவனை மலைக்கச் செய்தது. நிஜமாகவே இதற்கு பயங்கர தைரியம் வேண்டும். நாணயமும் இருக்கவேண்டும்!.

சுசீலா போன்றவர்கள் இல்லாமல் போயிருந்தால் அவனுடைய பாலுணர்வுப் பீறிடல்கள் வடிகால் இல்லாமல் தவித்துப் போயிருக்கும். இவனைப்போன்று ஏராளமான ஆடவர்களைக் காப்பாற்றுவது விலைப் பெண்கள்தானே? விலைமகள்கள் இல்லாத ஆண்களின் உலகம் நிஜமாகவே மிகப்பெரிய சூனியமாகத்தான் இருக்கும்.

ஆனால் சுசீலாவின் வாழ்க்கையில் நடந்துவிட்ட கல்யாணம் காளிமுத்துவுக்கு நடக்கவே இல்லை. அது நழுவிப் போய்க்கொண்டே இருந்தது. பாவம் காளிமுத்து!

‘தேவடியாங்களுக்கே கல்யாணம் ஆகிறது; தேவடியா வீட்டுக்குப் போனவனுக்குத்தான் இன்னும் கல்யாணம் ஆகலை’ என்று குமைந்தான்.

பல மாதங்கள் சென்றன…

அடிக்கடி காளிமுத்துவுக்கு ஜுரம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. எடை குறைந்து கொண்டே வந்தது. ஒருநாள் தொடர்ந்து இருமி, காறித்துப்பியபோது ரத்தம் வந்தது.

உடனே ஒருபெரிய ஹாஸ்பிடலில் மருத்துவ சோதனைகள் செய்தபோது, காளிமுத்துவின் ரத்தத்தில் மனித இனத்தையே அரித்து அழித்துக்கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோயின் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

காளிமுத்து உடைந்து சிதறிப்போனான்.

எவள் அது? எந்தத் தேவடியா அவன் ரத்தத்தில் இந்தக் கொடிய கிருமிகளை தானம் செய்தவள்? ஒவ்வொருத்தியாய் நினைத்துப் பார்த்தான். எவள் என்று அவனால் தீர்மானிக்கவே முடியவில்லை.

ஒருவேளை சுசீலாவோ? தனக்கு நோயை ஈன்றவள் சுசீலாவாகவே இருக்கும் பட்சத்தில் அவளும்தானே பாதிக்கப்பட்டிருப்பாள்?

ஒரேமாதத்தில் அவன் பர்பார்மன்ஸ் சரியில்லை என்று கம்பெனியில் பிங்க் ஸ்லிப் கொடுத்து அனுப்பிவிட்டார்கள்.

ஒருகாலத்தில் விலைமகள்களின் வீடுகளுக்கு நண்பர்களை அழைத்துப் போனதை ஒரு தீரச்செயலாக நினைத்திருந்தவன், இன்று நோயின் அச்சத்தில் அலறி அலறி கண்ணீர் வடிக்கிறான்.

நாளாக நாளாக காளிமுத்துவால் நோயின் வெளிப்படையான தாக்கத்தோடு மற்ற மனிதர்களின் மத்தியில் நிற்கக்கூட முடியவில்லை.

கடைசியாக வேறுவழியில்லாமல், எய்ட்ஸ் நோய்க்கு ஆளானவர்களுக்கு சிகிச்சைதந்து பராமரிக்கிற மருத்துவமனையின் நோயாளிகளோடு அனுமதிக்கப்பட்டுவிட்டான்.

ஒற்றைக் கட்டிலில் எதிர்காலம் தெரியாத, தேதியும் நாளும் புரியாமல் மன அனாதையாய்க் கிடந்தான்.

அன்று தீபாவளியாம்…

யாரோ ஒரு புண்ணியவதி கணவரோடும் குழந்தையோடும் வந்திருந்து எல்லா நோயாளிகளுக்கும் மஞ்சள் தடவிய புது எட்டுமுழ வேட்டி துண்டும், இனிப்பு பாக்கெட்டுகளும் தந்து அன்புடன் ஆறுதலும் சொல்லிக்கொண்டே வந்தாள். அருகில் வந்தபோது அது சுசீலா என்று புரிந்தது. காளிமுத்துவுக்கும் அவைகளை கொடுத்தாள் சுசீலா.

நோயின் கோரப்பிடியில் சிக்கி உருக்குலைந்து போயிருந்த காளிமுத்துவை சிறிதுகூட சுசீலாவுக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் உடல் வற்றி, உயிர் குன்றிப்போய்க் கிடந்த அந்த ஈனமான நிலையிலும் காளிமுத்து சுசீலாவைப் புரிந்துகொண்டான்.

முகத்தில் ஏராளமான சிரிப்புடன் தளதளவென்று வளப்பமாக சுசீலா காணப்பட்டாள். சுசீலா தன் நோய்க்கு காரணமல்ல என்பது அவனுக்கு நன்றாக உரைத்தது.

அடுத்த சிலவாரங்களில் காளிமுத்து மரித்துப்போனான்.

எத்தனையோ விலைமகள்களுக்கு உரிய விலை கொடுத்தவன், அவர்களுக்கு கடைசி விலையாக தன் உயிரையும் கொடுத்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *