கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 12,773 
 

குட்டைக்கார முனியாண்டி முன் மண்டியிட்டுக் கதறிய சின்னியை முதலில் பார்த்தது பிளாக்காயன்தான். அவள் உச்சக்குரல் எடுத்து ஓலமிட்டு அழுதபோது அவர் சுவர் ஓரமாக காவி வேட்டியைத்தூக்கி ஒன்னுக்கடித்துக்கொண்டிருந்தார். திடுமென தூக்கிப்போட்டதில் பீய்ச்சிய சிறுநீர், குறி தவறி பக்கத்தில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த கறுப்பு நாயின் முகத்தில் பட்டுவிட பதறியடித்துக்கொண்டு ஓடி தலையிலிருந்து தொடங்கி உடல் முழுதும் உலுக்கி சுதாகரித்துக்கொண்டது. அதற்குப்பின் ஓட இடம் இல்லாமல் ஒரு சின்ன முனகலுக்குப் பின் தாடை முழுவதும் தரையில் பதிய அங்கேயே படுத்துக்கொண்டது. என்ன இருந்தாலும் அது கோயில் சாப்பாட்டையே நம்பி வாழும் ஒரு புனிதமான நாய். அதற்கும் ஆச்சாரம் இருக்காதா என்ன?

மெல்ல வலைக்கம்பிகளின் வழியாக எட்டிப்பார்த்தபோது சின்னி தரையில் தலையை முட்டி ரத்தம் கொட்ட குட்டைக்கார முனியாண்டியை நோக்கி இரு கைகளையும் இணைத்து மடித்து முன்னும் பின்னுமாக குலுக்கி எதையோ சொல்லிக்கொண்டிருந்தாள். தலை தரையை முட்டிய ஒவ்வொரு கணமும் எழுந்த நொறுங்கும் ஒலி பிளாக்காயனின் பற்களைக் கூசச் செய்தது. முதலில் ஊரைக்கூட்டலாம் என நினைத்த பிளாக்காயன் தொடர்ந்து என்ன நடக்கிறது எனக் காணும் ஆவலில் நகரவில்லை. முன்பென்றால் சவுக்கை எடுத்துச் சுழற்றி, வந்திருப்பது காட்டேறியா, மோகினியா எனக் கண்டுபிடித்து விரட்டியிருப்பார். இப்போது குட்டைக்கார முனியாண்டியைப் பார்க்கவே கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருந்தது.

நெற்றியில் சாவகாசமாக வெளிவரத்தொடங்கியிருந்த ரத்தம் அவள் சிவந்த முகத்தில் வழிந்து பற்களின் இடுக்கில் புகுந்து எச்சிலுடன் கலந்து கோரமாகக் காட்சியளித்தது. வழியும் ரத்தம் அவளுக்கே நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். முட்டுவதை நிறுத்திவிட்டு தரையில் ரத்தக் கைகளை பளார் பளாரென அறைந்தாள். சத்தத்தில் பெரிதாக பேதம் இல்லை. பிளாக்காயன் கூசும் பற்களை விரல்களால் பிடித்துக்கொண்டார். கைகள் தளர்ந்தபின் அவள் முடியைத் தலையிலிருந்து உரித்து எடுக்க முயல்பவள் போல சுயமாகப் பிடித்திழுத்துக் கதறினாள். “முத்திரிச்சி…” பிளாக்காயன் வேட்டியை மடித்து குந்தக்காலில் அமர, தன்னைச் சற்றுமுன் சிறுநீர் தெளித்து தாக்கிய பீலியைக் கறுப்பு நாய் வெறுப்புடன் பார்த்து பின் பார்வையைத் திருப்பிக்கொண்டது. “இத சொல்லல சனியன… அவளுக்கு முத்திரிச்சி…பைத்தியம் பைத்தியம்…” பிளாக்காயன் காவி வேட்டிக்கு நடுவில் கையைவிட்டு மறைத்துக்கொண்டார்.

குட்டைக்கார முனியாண்டிக்குப் பிளாக்காயன்தான் பூசாரி, சேவகன், சமையல்காரன், தோழன், உறவினர் இப்படி சகலமும். இரண்டு கிளாஸில் பியரை ஊற்றி, முனியாண்டியிடம் ‘சியஸ்’ சொல்லாமல் ஒரு மிடரு கூட பிளாக்காயன் குடித்ததில்லை. அவர் அப்பாதான் முனியாண்டி கோயில் கட்ட பாழடைந்து கிடந்த குட்டை ஓர நிலத்தைப் பெற்றுக் கொடுத்தார். தென்னங்கள் இறக்கும் அவரிடம் தன் காலை ஊன்றி நிற்கவே காணி நிலம் இல்லாத போதும் முனியாண்டி சாமி அவர் உடம்பில் அவ்வப்போது சஞ்சரிக்கும் வரம் கொண்ட தேகத்தைப் பெற்ற அவதாரப் புருஷனாக அவ்வூரில் திகழ்ந்தார். அப்படி ஒருநாள் வேறு எந்த வேலையும் இல்லாததால் சும்மா மக்களுக்கு அருள் பாலிக்கலாமே என ஓர் இரவில் இறங்கிய முனியாண்டி, விபூதியை வாங்கி வாயில் போட்டு மெல்ல வந்த செட்டியாரிடம் தன் விருப்பத்தைக் கேட்டேவிட்டார். வலது கையில் பீர் பாட்டிலோடும் இடது கையில் சவுக்கோடும் கண்கள் சிவக்க, எடுக்கக் கை போதாமல் முனியாண்டி சாமி வாயில் புகைந்துகொண்டிருந்த சுருட்டுப்புகையின் காட்டம் முதலில் செட்டியாரின் கண்களில் ஈரம் வரச் செய்தது. பின்னர் அது அழுகையாக மாறினாலும் புகைக்காட்டம்தான் என செட்டியார் சமாளித்தார்.

தென்னந்தோப்பு சூழ்ந்த நிலம் அது. காற்றில் எந்த நேரமும் பைத்தியக்காரிகளின் கூந்தல்போல மட்டையை அலையவிடும் மரங்களும் சம்பந்தமில்லாமல் ஆங்காங்கு முற்றிய தேங்காய் அல்லது மட்டை விழும் சத்தமும் புதியவர்களுக்குக் கிலியை உண்டாக்கும். ஒருதரம் மட்டையைப் பரப்பி படுத்துவிட்டால் உடல் தன்னாலேயே சுகம்கானத் தொடங்கிவிடும். அப்புறம் வெக்கையை விரட்ட தோப்பை நோக்கி கால்கள் போவதைத் தடுக்க முடியாது. தோப்பின் மிக அருகாமையில் லுனாஸ் டவுன். அந்தக்காலத்திலேயே செட்டியாரின் அப்பா வட்டிக்குப் பணம் கொடுத்து வளைத்துப்போட்டுவிட்ட நிலங்களுக்கு இப்போது நல்ல கிராக்கி. இந்தத் தென்னைகளை வைத்து காலத்தை ஓட்டவெல்லாம் செட்டியாருக்கு அவகாசம் இல்லை. மண்ணின் விலை உச்சத்தைத் தொடும் மட்டும் பொறுத்து, விற்றப் பணத்தோடு ஊர் போய் சேரலாம் எனதான் அவரும் காத்திருந்தார். முனியாண்டி கோயில் அந்த நிலத்தில் எழுந்ததால் இனி அதை சீனர்கள் வாங்கப்போவதில்லை. தமிழர்கள் ஏதோ கடலைமிட்டாய் வாங்குவது போல பேரம் பேசுவார்கள். முனியாண்டி சாமியின் மனம் மாறுமா என செட்டியார் காத்திருந்து ஏமாந்தார்.

ஒரு துளி கூட பீர் சிந்தாமல் முனியாண்டி சாமி எட்டுக்கால் பாய்ச்சலில் ஓடிச்சென்று குட்டையருகில் அமர்ந்துகொண்டது. ஊரும் அவர் பின்னால் ஓடி மூச்சிரைக்க நின்றபோது செட்டியார் மண்ணையள்ளி வாயில் போட்டுக்கொண்டு அழுது புரண்டதை முதலில் பதற்றத்துடன் வேடிக்கைப் பார்த்தவர்கள் பின்னர் அவருக்கும் ஏதோ அருள் வந்துவிட்டதென முனியாண்டி சாமி முன் நிறுத்தினர். முனியாண்டி தன் நாக்கில் மீந்திருந்த குங்குமத்தை வலுக்கட்டாயமாகச் செட்டியாரின் நெற்றியில் வைத்ததோடு அருள் இருவருக்கும் அடங்கியது. மக்கள் செட்டியாருக்கு மரியாதை காட்டுவதெல்லாம் அவசரத்துக்குச் செட்டியாரின் கை தேவை என்பதால்தான். மற்றபடி இதுபோன்ற சந்தர்ப்பம் வாய்த்தால் ஊர் நன்மைக்கு எனக்கூறி சாமி பேச்சை மீறாதவர்கள் போல வட்டியும் முதலுமாக கரந்துவிடுவார்கள் என்பது செட்டியாருக்கும் தெரியும்.

லுனாஸ் முழுவதும் வசூல் செய்து ஊரிலிருந்து சிலை செய்து எடுத்து வந்தார்கள். முனியாண்டி சிலை பார்ப்பவர்களைப் பயப்பட வைக்கும் வகையில் இருந்தது. முரட்டு உடலோடு சம்மனமிட்டு அமர்ந்திருந்தார் முனியாண்டி. முறைத்த கண்கள். வாயின் இட,வலத்தில் கத்திப்பற்கள். கையில் அறிவாள். குட்டையின் ஓரம் இருந்த அரசமரத்தடியில் ஓர் அங்குல உயர சிமிண்டு மேடை அமைத்து, சிமிண்டு காயும் முன் சூலம் உள்ளிட்ட சில ஆயுதங்களைச் செருகி இறுக வைத்தபின் முனியாண்டியை அமர வைத்தனர். முனியாண்டி குட்டையின் ஓரம் நிலைபெற்றதும், ஊரே கையெடுத்துக் கூம்பிட்டாலும் செட்டியார் மட்டும் வீட்டைவிட்டு வெளிவரவில்லை. கொஞ்ச நாள்களில் எஞ்சிய சொத்துகளை வந்த விலைக்கு விற்றுவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார். குட்டையோரம் அருள்பாளிப்பதால் முனியாண்டி, குட்டைக்காரர் என லுனாஸ் மக்களால் கொஞ்சலாக அழைக்கப்பெற்றார்.

முனியாண்டி அவ்வூரின் செல்லப்பிள்ளையானார். பிளாக்காயனின் அப்பா, முனியாண்டி சாமிக்கு ஊழியனாக இருந்தாரே தவிர, யாரும் முனியாண்டியிடம் மணிக்கணக்கில் அமர்ந்து பேசவோ தொடவோ குளிப்பாட்டவோ தடைவிதிக்கவில்லை. பிளாக்காயனின் அப்பாவுக்கு ஊரில் ஒரு மதிப்பிருந்தது. கைவைத்தியம் தெரிந்த மனிதர். ஏதாவது பச்சிலைகளைக் கசக்கி உடனுக்குடன் நோயைக் குணப்படுத்துவார். தான் நாள்தோறும் இறக்கிவரும் தென்னங்கள்ளையே பல சமயங்களில் மருந்தாக அவர் உபயோகிப்பதை ஊரார் பார்த்துள்ளனர். “அதிகமா போனாதாண்டே போத… அளவா குடிச்சா மருந்து…” எனச் சொல்லியே கள்ளை விற்பனை செய்துவிடுவார். பொடிசுகள் காதல் கீதலென விஷம் குடித்துவிட்டால் கள்ளையே முதலில் குடிக்கக் கொடுப்பார். “ஒரு மரத்து கள் விஷம் முறிக்கும் மருந்து டெ” என்பார் மயங்கியவன் உயிர் மூச்சு விட்டவுடன்.

அரவமற்ற இரவுகளில் அப்பா தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொள்வதுதான் பிளாக்காயனுக்கு ஏனென்று தெரியாது. அதுபோன்ற சத்தமெல்லாம் அவருக்கு அப்போதே பற்களைக் கூச வைக்கும். ஒரு முறை அப்பா அவ்வாறு அடித்துக்கொள்ளும் காரணத்தைக் கேட்டபோது, “செட்டியாரு பாவம் டெ” என்றார். முனியாண்டி சாமி செய்ததற்கு அப்பா தன்னைத் தானே அடித்துக்கொள்ளும் காரணம் ஒன்றும் பிளாக்கயனுக்கு விளங்கவில்லை. சமாதானம் செய்ய தெரியாத வயதில், தோலுரிந்து ரத்தம் சின்னக் கீறலாக வழிவதும், வழியும் ரத்தத்தின் மீதே அடுத்த அடி விழுவதுமென பிளாக்காயன் இரவு முழுவதும் பற்கள் கூசிப்போவார்.

முழு உருவம் கொண்ட முதல் கடவுளாக லுனாஸில் முனியாண்டி பிரபலமானார். நோய்க்குதான் பிளாக்காயனின் அப்பா உதவியெல்லாம். மற்றபடி குழந்தைகளுக்குக் காத்து கருப்பென எது பட்டாலும் முனியாண்டி விரட்டியடிப்பார் என ஊரார் நம்பினர். சிலர் இரவு வேளைகளில் முனியாண்டியின் சலங்கை ஒலியைக் கேட்பதாகவும் சுருட்டு புகை மணப்பதாகவும் தங்கள் புனித ஆத்மாவை மெய்பிக்கப் போராடினர். அரச மரத்தின் அடர்ந்த கிளைகளுக்குக் கீழே முனியாண்டி கொடுக்கும் காட்சி சட்டென யாரையும் கையெடுத்து கூம்பிட வைக்கும் ஆற்றல் கொண்டிருந்தது.

***

அதெல்லாம் முனியாண்டி சமத்தாக இருந்தவரைதான். முனியாண்டி சாமியின் கோவத்திற்கும் சாபத்திற்கும் ஆளான ஊராக லுனாஸ் மாறியிருந்த ஒரு வாரத்தில் யாரும் நினைக்காததெல்லாம் திடுதிப்பென நடந்தேறியிருந்தது. எந்த நேரமும் பேச்சுக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கும் லுனாஸில் மரண அமைதி தொடர்ச்சியாக நிலவியது. எல்லோருமே ஏதோ ஒரு துர்குரலுக்காகக் காத்திருந்தனர். அடுத்து என்ன அவலம் நடந்தேறுமோ என அனுமானிக்க முடியாத சூழலில்தான் கடந்த இரண்டு நாள்களாக சின்னி பைத்தியம் பிடித்து அலைவது குழை நடுங்க வைத்தது. “முனி…இன்னும் என்னென்ன கொடுமையப் பார்க்கனுமோ…உங்கிட்ட என்னா பாசையில பேசறதுன்னு என் மண்டைக்கு தெரியல சாமி… நீ சாமி… உனக்கு எல்லா பாசையும் புரியும். மவன் அழுவுறேன்… ஊர விடு… உன்னைய நீ காப்பாத்திக்கக் கூடாதா?” என முணகிக் கொண்டே தீம்பார் வழியாக விரைந்து ஓடினார் பிளாக்காயன். சத்தம் கேட்காத தொலைவில் இருந்து சின்னியைத் திரும்பிப் பார்த்தார். இன்னும் தரையில் முட்டிக்கொண்டிருந்தாள். மண்டையைத் துளைக்கும் சத்தம் அவருக்குள்ளிருந்து எழுந்து பற்களைக் கூச வைத்தது.

இருண்ட தீம்பார் காரணமற்ற திகிலைக் கொடுத்தது. எப்போதும் போகும் பாதைதான். தொடர் மரணங்கள் பிளாக்காயனின் மனதில் தேவையற்ற அச்சத்தை நிரப்பியிருந்தது. இதைவிட குடியிருப்புகளில் தோன்றியுள்ள செயற்கையான இருள் இன்னும் கூடுதலான படபடப்பை உருவாக்கி நடுங்க வைத்தது. மரணத்தின் நிறம் இருள்தான் என்பதை இந்தக் கொஞ்ச நாள்களில் லுனாஸ் மக்கள் புரிந்துகொண்டனர். இயல்பாகவே எல்லார் முகத்திலும் இருள் தொற்றியிருந்தது. ஏழு மணிக்குப் பிறகும் யாரும் வீட்டில் விளக்கெரிய வைக்காமல் இருளில் மூழ்கியிருந்தனர். மரணத்திடம் ஒளிந்துகொள்ளும் வழியை அவர்கள் இருளுக்குள் தேடியதாகவே பட்டது. யாருக்காக அழுகிறோம் என முடிவெடுக்க அவகாசம் இல்லாமல் சோகமும் பயமும் ஒரு தொடர் நிகழ்வாகவே அவ்வூரை அப்பியிருந்தது. அப்பாவின் மரணத்துக்குப் பின் யாருமே இல்லாமல் இருந்த பிளாக்காயனும் ஊரை நினைத்தும் அப்பாவின் ஒரே நினைவாக இருக்கும் முனியாண்டியை நினைத்தும் அழவே செய்தார். சாமி மீது விழுந்துள்ள பலி தன் அப்பாவின் மீது விழுந்துள்ள பலியாகவே அவருக்குள் தோன்றி கலங்கடித்தது. துணைக்கு இருக்கட்டுமே என ஏதோ ஒரு பக்திப் பாடலைச் சத்தமிட்டுப் பாடிச் சென்றவருக்கு, மரத்தடியோரமாகச் சாய்ந்து கிடந்த ஓலையில் சைக்கிள் மட்டுமே ஒரே ஆறுதலாக அப்போது பட்டது.

மரத்தின் மேல் சாய்ந்து கிடந்தான் ஓலை. முகத்திலும் உடலிலும் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்தன. வாய் அகன்று கிடந்தது. கண்கள் கீழ் நோக்கிச் சொருகி இருந்தன. அவன் பிணம் போலக் காட்சி அளித்தான். பிளாக்காயனுக்குப் படபடவென வந்தது. மெல்ல அருகில் நெருங்கியபோது அசைவு தெரிந்தது. அவன் மேல் சாராய வாடையும் கள்ளின் வாடையும் சேர்ந்து அடித்தது. சாராயம் குடித்த போதை போதாமல் கள்ளையும் சேர்ந்துக் குடிக்கும் மொடாக் குடிகாரன் லுனாஸில் அவன் மட்டும்தான். சைக்கிளில் கூடுதலாக ஒரு பாக்கெட் சாராயம் வேறு தொங்கிக்கொண்டிருந்தது. அப்பா கள் இறக்குபவராக இருந்தாலும் பிளாக்காயனுக்கு அதன் வாடையே பிடிக்காது. அப்பாவிடம் இருந்த எந்தத் திறனும் அவரிடம் இல்லாதது போலவே அவரிடம் இருந்த அதீத கள் பழக்கத்தையும் விலக்கியே வைத்திருந்தார். கால் பாட்டில் பீரே முனியாண்டியுடனான அவரது இரவுகளுக்குப் போதுமானது. ஆனால், ஓலையின் உடம்பு எல்லாவற்றுக்கும் தாங்குவது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. எலும்புக்கூட்டில் கொஞ்சம் தோலை எடுத்து தைத்தால் அதுதான் ஓலை. இந்த ஒரு வாரத்தில் ஓலையின் காட்டில்தான் அடைமழை. ஊரே மரண பயத்தில் இருக்க, பணத்தை வாங்கிக்கொண்டு எல்லா இடத்திலும் சாவு செய்தி சொல்லியபடி உல்லாசமாகச் சுற்றிக்கொண்டிருந்தவனின் கண்களில் கண்ணீர். மார்பு ஏறி இறங்கி அவன் அழுவதை உறுதி படுத்தியது.

“என்னா பாக்குத சாமி…சோகம்தான். இந்த ஓலைய நம்பி ஒத்த உசிரு ஒன்னு இந்த லுனாஸுல இருந்துச்சி. இப்ப அது இல்ல. நல்ல சீவன் அது. சாராயம் வாங்கியாரச் சொல்லும். எம்மேல நம்பிக்க வச்ச ஒரே சீவன் சாமி. யாருன்னு சொன்னா நம்ப மாட்டிய…அதெல்லாம் பெரிய விவகாரம்…” ஓலை கண் இமிட்டி மேலும் அழுதான். குடித்துவிட்டால் ஓலை மணிப்பிறவாள நடையில்தான் பேசுவான்.

பிளாக்காயனுக்கு பேச ஒன்றும் தோன்றாமல் அவனை ஏற இறங்கப் பார்த்தார். அவருக்குச் செய்தி எதுவும் பிடிபடவில்லை. ” நீ சேப்பியா சாமி என்னை வீட்டுக்குள்ள. அந்த சீவன் சேத்துச்சி. தோள்மேல கையெல்லாம் போட்டு காசு கொடுக்கும் சீவன். சாராயத்த எழப்புக்கு மருந்தாதான் குடிக்க ஆரம்பிச்சிச்சி வாத்தி. பாவம் பழகிடுச்சி. அப்புறம் சாராயம் குடிக்காம பாடம் நடத்த முடியலயாம்… வெளிய தெரிஞ்சா கௌரத போயிரும் பாரு. நான்தான் அவசரத்துக்கு வாங்கியாருவேன். கேக்காத சாமி, வாத்தி யாருன்னு உசிரே போனாலும் நான் சொல்லவே மாட்டேன்” ஓலை பூமியில் அடித்து போதையில் சத்தியம் செய்தான். பிளாக்காயனுக்கு அதெல்லாம் பெரிய விசயமே இல்லை. அவருக்கு யார் ரகசியமும் தேவையும் இல்லை. ஊரில் இருப்பதே மூன்றே வாத்திகள். வாத்திகளுக்கும் சந்தோசம் வேணாமா. இப்ப அதுவல்ல முக்கியம் அவருக்கு. ஊருக்குள் சின்னிக்குப் பைத்தியம் முற்றியதைச் சொல்ல வேண்டும்.

“ஒன்னோட முனியாண்டிக்கிட்ட சொல்லு சாமி. என்னிக்கி இருந்தாலும் அந்த ஆளுக்கு எங்கையாலதான் சாவு. போன பெறவியில எமனா இருந்துருக்கும் போல… இப்படி கொன்னு குவிக்குது… வாத்தியவே கவுத்துடுச்சே…” ஓலையின் காட்டம் காட்டை மிரட்டியது. பிளாக்காயனுக்கு அவனிடம் விளக்கம் சொல்லவெல்லாம் அவகாசம் இல்லை. என்னதான் அவரும் காரணம் சொல்வார். இது கொலைகார முனியாண்டிதானே. கை போனதற்கு ஊரையே காவு வாங்கிவிட்டது. குடியை மட்டுமே பிரதானமாகக் கொண்டிருந்த ஒருவன் தனது முனியாண்டி சாமிக்கு எச்சரிக்கை விடுவதெல்லாம் மனதை கனப்படுத்தவே செய்தது. இப்போதைக்கு லுனாஸில் எந்த மூலையில் என்ன அந்நியமாய் நடந்தாலும் உடனே அதை பொதுவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பெரிசுகளின் கட்டளை என்பதால் நடையை விரைவுபடுத்தினார்.

நடந்த சம்பவத்தைக் கேட்டு லுனாஸ் மக்கள் ஒன்றும் ஆச்சரியப்படப் போவதில்லைதான். கடந்த ஐந்தாறு நாள்களாக மரணம் அவர்களுக்குச் சலித்துவிட்டது. அழுகையில் கண்ணீர் தூர்ந்திருந்தது. கொத்துக் கொத்தாக மரணங்கள். பெரும்பாலான லுனாஸ் மக்கள் மரணத்தின் இறுதி அமைதியை பூசியபடிதான் நடமாடிக்கொண்டிருந்தனர். பகையாளிகள் உறவாடினர். கணவர்கள் தங்கள் ரகசியங்களை மனைவிகளிடமும் மனைவிகள் தங்கள் ரகசியங்களை கணவர்களிடமும் மெல்ல மெல்ல சொல்லத் தொடங்கியிருந்தனர். எல்லோரும் எல்லோரையும் மன்னித்தனர். இதில் சின்னி போன்ற ஒரு சீனப்பெண்ணின் அவல நிலையெல்லாம் அவர்களை அசைத்துவிடாது.

***

சின்னி பெயருக்கு ஏற்ப சின்னதாகவெல்லாம் இருக்க மாட்டாள். மார்பும் பிட்டமும் பெருத்திருக்கும். எப்போதும் முழங்காலுக்கு மேல் தொடை தெரியும்படிதான் காற்சட்டை அணிவாள். அது சீனர்களின் சுபாவம். அவர்களால் புழுக்கத்தைத் தாங்க முடியாது. உடலில் காற்று எப்போதும் நுழைந்து வெளியேற வேண்டும். சீன மொழியில் இருந்த அவள் பெயர் அதிகம் தமிழர்கள் வாயில் பட்டு பட்டு எப்படியோ சின்னி என்றாகிவிட்டது. சீனத்தில் அவள் பெயர் அப்படித்தான் ஒலி கொடுக்கும் என்பதால் அவளும் அதற்குப் பழகிவிட்டாள். தமிழர்களுக்கு அது ஒரு தமிழ்ப் பெயராகவே மாறியிருந்தது.

சின்னி சாராயம் குடிக்கும் வாடிக்கையாளர்களின் கவர்ச்சிக்கன்னி. லுனாஸில் சாராயம் காய்ச்சும் பழக்கம் இல்லாததால் பட்டர்வெர்த்தில் இருந்து சாராயம் காய்ச்சி அவள் லுனாஸுக்கு வரும் பாதையை வாடிக்கையார்கள் போதைக்குத் தயாரான கண்களுடன் பார்த்திருப்பர். சின்னி தனியாகத்தான் வருவாள். தனியாகத்தான் போவாள். சின்னக் காரிலிருந்து சாராய பேக்கேட்டுகளை இறக்கி வைக்க வாடிக்கையாளர்களே அவளுக்குக் கைக்கொடுப்பார்கள். அநேகமாக எல்லா பேக்கெட்டுகளும் விற்று முடிந்தபின்தான் நடையைக் கட்டுவாள். போதையில் வாடிக்கையாளர்கள் செய்யும் குசும்புகளையெல்லாம் சின்னி பொறுத்துக்கொள்வாள். அவள் வள்ளுவரை சீனத்தில் வாசித்திருப்பாள் போல. அகலாது அணுகாது சரியான முறையில் தீ காய்ந்துகொள்வாள்.

போதையின் உக்கிரத்தில் வாடிக்கையாளர்கள் எந்த நிலைக்கும் செல்வார்கள். பெரும்பாலும் அவள் பிட்டத்தைத் தட்டிப்பார்ப்பதில் அவர்களுக்கு அமோக விருப்பம். ஏதோ தபேளா வாசித்துப் பழகிய பரம்பரை போல பிட்டத்தைத் தட்டும்போது எழும் ஒலியில் தலையை ஆட்டி ரசிப்பார்கள். சின்னி கொஞ்சலாக அவர்களைக் கடிந்துகொள்வாள். அவர்கள் கரங்கள் தொடர்ந்து மேலேறாமல் இருக்கப் பிடித்து சமாதானம் செய்வாள். சின்னியின் பிடி உறுதியானதென அனுபவித்தவர்களுக்குத் தெரியும். அவள் முகம் கொஞ்சலான எதிர்ப்பைக் காட்ட கரங்கள் மட்டும் முறுக்கேறியிருக்கும். பிடியை விடும்போது விண்ணென வலிக்கும். வலி எலும்புவரை ஊடுருவியிருக்கும். சிலர் தங்கள் விரைத்தகுறியை சின்னியிடம் காட்டி நிற்பார்கள். அவள் அதையும் உடலின் ஓர் உறுப்பெனும் தோரணையில் பார்த்துவிட்டு “உன் மனைவி கொடுத்து வைத்தவள்,” என உசுப்பேத்துவாள். அவளுக்கு அதனால் கூடுதலாக ஒரு பேக்கெட் லாபம். அவளுக்கு எல்லாமே லாப நட்டக் கணக்குதான். அதிக போதையும் காட்டமும் கொண்ட சாராயத்தைச் சீனர்கள் குடிப்பதில்லை. பியரோடு சரி. மலாய்க்காரர்கள் ஓரிருவர் ரகசியமாக பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் செல்வதாகத் தகவல் உண்டு. இப்படி உற்சாகமான சுதந்திரப் பிரஜைகளான தமிழர்களை நம்பிதான் அவள் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது.

எல்லாம் நொடிந்து, முனியாண்டி கோபத்தால் ஊரில் அழுதபடி உலாவும் பைத்தியமாவாள் என அவள் வாடிக்கையாளர்கள் போல பிளாக்காயனும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். குட்டைக்கார முனியாண்டியின் கோபமும் நியாயமானதுதான்.

***

குட்டைக்கார முனியாண்டியின் சிலை வைக்கத் தெரிந்தவர்களுக்குக் கூரை வைக்க பணம் போதவில்லை. நாளைக்கு நாளைக்கு என முனியாண்டி வெயிலிலும் மழையிலும் காய்ந்தும் நனைந்தும் கொண்டிருந்தார். அரச மரத்தின் தடித்தக் கிளையொன்று ஒரு பேய்க்காற்றில் முறிந்து சரியாக முனியாண்டியின் வலது கையில் விழ முனியாண்டி முடமானார். முனியாண்டியின் கையைப் பார்த்து ஊரே அழுதது. “என்னா கம்பீரமா உக்காந்திருப்பாய்ங்க…” என கிழவி வரை ஒப்பாரி தொடர்ந்தது. பிளாக்காயன் தந்தை செத்தபோது அழுததைவிட அதிகமாக கதறினார். கூரை வைக்காததைப் பற்றி ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். கையை எப்படி, யார் பொறுத்துவது என முடிவெடுக்க முடியவில்லை. கறுங்கல்லால் செதுக்கப்பட்ட சிலைக்கு சிமிண்டு கட்டு போட்டால் சரியாக வருமா? என்ற சந்தேகம் வலுத்தது. கடைசியில் ஒரு வேட்டியை எடுத்து முனியாண்டிக்குக் குறுக்காகக் கட்டிவிடுவதன் மூலம் முடத்தை மறைத்துவிடலாம் என முடிவானது. பார்வைக்கு முனியாண்டியின் வலது கை வேட்டிக்குள் இருப்பது போல காட்சி கொடுக்கும். பெரியவர்கள் சம்மதத்துடன் திட்டம் அமுலாக்கப்பட்டது. அதற்குப் பின்தான் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கத் தொடங்கியது.

மறுநாள் காலையில் தோட்டக்காட்டிற்கு வேலைக்குச் சென்ற சிலர் இரவு வரை வீடு திரும்பவில்லை. எல்லா இடங்களிலும் தேடியபின் தோட்டத்து மக்கள் அவர்களைத் தேடி ரப்பர் காடுகளுக்குள் அலைந்தபோது மயங்கிய நிலையிலும் பிணமாகவும் சிலரைக் கண்டுபிடித்தனர். மயக்கத்தில் இருந்தவர்களை லுனாஸ் கிளினிக்கில் சேர்த்தும் எந்தப் பலனும் இல்லை. ரகசியத்தை உடைக்காமல் அவர்களும் செத்துப்போயினர். முதல்நாள் நடந்துமுடிந்த களேபரத்தின் காட்டம் தீரும் முன், மறுநாளும் வேலைக்குச் சென்ற ஐவரைக் காணவில்லை என தகவல் கிடைத்தில் ஊரே பதற்றமானது. மீண்டும் ஐந்து வீடுகளில் ஒப்பாரி. தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என அறியும் முன்பே அடுத்தடுத்த மரணங்கள் லுனாஸைச் சூழ்ந்தன. இறந்தவர்களின் சடலங்களைச் சோதனையிட்டுப் பார்த்த உள்ளூர் மருத்துவர் எந்த அறிகுறியையும் கண்டுபிடிக்க முடியவில்லையென கைவிரித்தார். தகவல் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக் கதவை மெல்லத் தட்டத்தொடங்கியது.

திடீரென இப்படி நடக்க முனியாண்டியின் கோபத்தைத் தவிர வேறொரு காரணமும் இருக்க வாய்ப்பில்லை என்பதால் பிளாக்காயனின் உதவியைதான் முதலில் ஊரார் நாடினர். ஒருநாள் இரவு முழுவதும் பிளாக்காயன் இரண்டு கிடாக்களைப் பலிகொடுத்து பூஜை செய்தார். முனியின் காலில் விழுந்து மண்றாடி அழுதார். தனது வலது கரத்தையும் தீயில் நோக வைத்தார். மறுநாளைய மரணம் ஐந்திலிருந்து நான்காக குறைந்ததே தவிர பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை.

ஒரு பிணத்துக்கு ஒரு குழி எனும் நிலை மாறி இரண்டே நாள்களில் இயந்திர உதவியுடன் ஒரே பெரிய குழிக்குள் அன்றைய பிணங்கள் எல்லாம் அடக்கம் செய்யப்படும் நிலை யாரையும் எதையும் சிந்திக்க விடவில்லை. பிளாக்காயன் மட்டும் குட்டைக்காரர் மேல் விழுந்த பலியை நினைத்து மௌனமாக அழுதார். சாமி எதையும் கண்டுக்கொள்ளவில்லை.

அன்று இரவில் மீண்டும் ஓலம். வேலை முடிந்து வந்து கண்ணயர்ந்த மாணிக்கம் ஒன்னுக்குப் போக கண் திறந்தபோது கண் தெரியவில்லை எனக் கதறினார். மாணிக்கத்தின் பஞ்சாயத்து முடியும் முன்னரே வேறு சில வீடுகளிலும் கண் தெரியவில்லையே என்ற ஓலம் தொடர்ந்தது. புலம்பல்களுக்கிடையில் கண் தெரியாமல் போனவர்கள் ஒருவர் பின் ஒருவராக மயக்கமானார்கள். பின் மரணமடைந்தார்கள். ஒப்பாரிகள் தொடர்ந்தன. எஞ்சியவர்கள் தங்களுக்கு எப்போது கண் தெரியாமல் போகுமோ என தூங்கப் பயந்தனர். தூக்கம் வெறுத்த கண்களுடன் ஒருவரை ஒருவர் முகம் வீங்கி பரிதாபங்களைப் பரிமாறிக்கொண்டனர். ஒவ்வொரு நாளும் குட்டைக்கார முனியாண்டி முன் மரணத்தைத் தள்ளிப்போடச் சொல்லி மன்றாடினர். சாமியின் கோபம் குறையவே இல்லை என்பது முத்தையா வாத்தியாரின் பார்வை பறிபோனபோதுதான் புரிந்தது.

காலையில் கண்விழித்தபோது உலகம் இருண்டிருந்ததும் முதலில் ஒன்றும் விளங்காமல்தான் இருந்தார் முத்தையா. பார்வை பறிபோனது அவருக்குத் தாமதமாகவே புரிந்தபோது தோட்டமே அவர் வீட்டின் முன் திரண்டது. முத்தையா வாத்தியாருக்குத் திடீரென கண் போனது பற்றி பலரும் பலவிதமாகப் பேசிக்கொண்டனர். வாத்தியாருக்கு உறவில்லாதவர்கள் கூட கதறி அழுதனர். அது அவர்களுக்கான அழுகை. ஓர் அரசு அதிகாரி இந்த வினோத நோயால் பாதிக்கப்பட்டது முதன் முறை என்பதால் தகவல் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் கதவை இம்முறை கொஞ்சம் வேகமாகவே தட்டியது. அவசரமாக பினாங்கு பெரிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டும் முத்தையாவை பிழைக்க வைக்க முடியவில்லை. லுனாஸில் திடுதிப்பென சில வெள்ளை உடையணிந்தவர்கள் தோன்றினர். தோட்டங்கள் முழுக்க அலைந்தனர். யாரும் முனியாண்டி சாமியைச் சந்தேகப்படாதது மட்டும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது பெரிசுகளுக்கு.

“என்ன இருந்தாலும் சாமியும் நாமும் ஒரே எனம். அடுத்தவங்க வந்து சாமிய நம்மகிட்டேருந்து பிரிச்சிப்புட்டா என்ன செய்யறது… கோவம் தணிஞ்சா கொழந்தையா ஆயிடப்போறது முனி”. ஒரு கொலை குற்றவாளியை சட்டத்திடமிருந்து காத்துவிட்ட பெருமிதம் பெருசுகளுக்கு இருந்தது.

***

பிளாக்காயன் சின்னியின் சங்கதியைச் சொல்ல ஊருக்குள் புகுந்தபோது கம்பவுண்டர் பேசிக்கொண்டிருந்தார். அந்த ஊரில் இருந்த கிளினிக்கில் அவர்தான் டாக்டர் மருந்தகர் எல்லாமே. ஊரில் சில முக்கியத் தலைகளைக் காணவில்லை. பணம் உள்ளவர்களால் ஊரைவிட்டு மட்டுமே குடி பெயர முடிந்திருந்தது. பணம் இல்லாதவர்களால் உலகை விட்டே நகர முடிந்திருந்தது. எஞ்சிய மனிதர்கள் ஒன்றும் புரியாமல் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லோர் முகத்திலும் மரண பீதி.

சில இளைஞர்கள் மட்டுமே பயத்தைப் போக்க பாக்கெட்டில் சாராயம் குடித்துக்கொண்டிருந்தனர். அது லுனாஸிலேயே காய்ச்சப்படும் சாராயம். லுனாஸில் சாராயம் காய்ச்சும் கலாச்சாரத்தைக் கொண்டு வந்தவளும் சீனப் பெண்தான். கொஞ்சம் தாராள மனப்பான்மையைக் கடைப்பிடித்ததால் சின்னியின் வாடிக்கையாளர்களை எளிதில் அபகரித்திருந்தாள். சாராயத்தின் விலையைப் போல உடையையும் கொஞ்சம் குறைத்தாள். போதைக்கு இரண்டுமே இதமானவையாக இருந்தன. அவளால் நஷ்டம் ஏற்பட்ட பின்தான் சின்னி வியாபாரத்தை விட்டே ஒதுங்கினாள் என ஊரில் அனைவரும் அறிந்தே வைத்திருந்தனர். புதியவள் தோட்டத்தில் வேலை செய்யாமலேயே மேனேஜரிடம் சிறப்பு சலுகை பெற்று, தோட்டத்து வீட்டின் குசினியில் சிறியதாக ஒரு கடை அமைத்து வியாபாரம் செய்தாள். அவள் சிறப்பு சலுகைக்கான காரணத்தை தோட்டத்துப் பெண்கள் குசுகுசுவென பேசி கடைசியாகக் காறித் துப்பிக்கொள்வர். அதுதான் முற்றுப்புள்ளிக்கான அடையாளம்.

பொதுவாகவே பலர் குளிக்காமல் இருப்பது தெரிந்தது. பெண்கள் தலைவிரிகோலமாக இருந்தனர். அப்போதுதான் அழுது முடித்த வடு அவர்கள் முகத்தில் இருந்தது. பெரிசுகள் எதிலுமே ஆர்வமில்லாமல் தங்கள் மரண திகதிக்காக மட்டுமே மொத்த கவனத்தையும் குவித்திருந்தனர். தூரத்தில் யாரோ ஒருவரின் வீட்டில் அப்போதுதான் பேரழுகை கேட்டுக்கொண்டிருந்தது. ஆகக் கடைசியாக விழுந்த மரணமாக இருக்கலாம்.

இயந்திரம் மூலமாக மேலும் சில பெரிய குழிகள் தயாராகத் தோண்டப்பட்டு இருந்தன. ஏற்கெனவே பிணங்களை மொத்தமாக விழுங்கியிருந்த பெரிய குழிகள் மண் மேடுகளாகக் காட்சி கொடுத்தன. அவற்றைச் சுற்றிலும் ஊதுபத்திகள். பெரும்பாலும் பாதியிலேயே அணைந்திருந்தன. பிளாக்காயன் போய் சேரும் முன்புதான் ஒரு பெரியவர் மயங்கி விழுந்திருந்ததால் கொஞ்சம் அரசல் புரசலின் மிச்சம் இருந்தது. மரண பயத்தில் எதையுமே சாப்பிடாததால் ஏற்பட்ட பசி மயக்கம் அது எனத் தெரிந்தப்பின் அவரை மட்டும் பிணங்கள் மூடிய மண் மேட்டில் துணியை விரித்து படுக்க வைத்திருந்தனர். அவர் அதில் படுத்துக்கொண்டே அருகில் வெட்டப்பட்டிருந்த குழிகளை வெறித்தபடி இருந்தார்.

“பெரிய ஆஸ்பத்திரியிலேருந்து தகவல் வந்திருக்கு. நாம சாப்பிடுற சாப்பாட்டுல ஏதோ விஷம் கலந்திருக்காம். அந்த விஷம் முதல்ல கண்ண கெடுக்குது. அப்புறமா உயிர எடுக்குது. தோட்டக்காட்டுல செத்துக்கிடந்தவங்க எல்லாமே வீட்டுக்கு நடந்து வரும்போது திடீருனு கண்ணு தெரியாம எங்க போறதுன்னு புரியாம வழி மாறி போயி சரிஞ்சவங்கதான். ஆனா எதுல எப்படி விஷம் இருக்குன்னு இன்னும் கண்டுப்புடிக்கல. அநேகமா ரெண்டு மூனு நாள்ள தெரியலாம். நாம குடிக்கிற தண்ணியில விஷம் இருந்தா இன்னேரம் லுனாஸே சுடுகாடா இருக்கும். இப்பவும் பாதி சுடுகாடுதான். அதனால் வாயில எத வக்கிரதுக்கு முன்னயும் கொஞ்சம் நெதானிங்க…முடிஞ்சா ரெண்டுநாளு பழங்களையும் மரவள்ளிக்கிழங்கையும் மட்டும் சாப்பிட்டு விரதம் இருங்க…கவனிச்சி பார்த்தா சாவு நமக்குதான் நடக்குதே தவிர இப்ப வரைக்கும் ஒரு ஆடு மாடுகூட சாவல…கொஞ்ச நாளைக்கு நாமலும் ஆடு மாடுகளாதான் வாழ்ந்தாகனும்…”

கம்பவிண்டரின் பேச்சு அவ்வளவு திருப்தியை யாருக்கும் கொடுக்கவில்லை. எதில் விஷம் வந்தது என காரணமும் தெரியாமல் நாற்பது பேரை அவர்கள் பறிகொடுத்திருப்பது மேலும் அச்சத்தைக் கூட்டியது. கூட்டத்தில் முணுமுணுப்பு தொடங்கியது. “ஒரு வேள சாராயத்துல ஏதும்…” கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தபோது இளைஞர்கள் திடுக்கிட்டனர்…

“வாஸ்தவம்தான். எனக்கும் தோணிச்சி…அப்படிப் பார்த்தா முத்தையா வாத்தியாரு செத்திருக்கக் கூடாதே ஓய்… அது கிடக்கட்டும் மொத பொணமா ஓலதான விழுந்திருக்கனும். அவந்தானே சாராயக் கடயவே ஏதோ வீடாவே நினைச்சி வாழ்றான்” கம்பவுண்டர் சொல்வதும் அனைவருக்கும் நியாயமாகப் பட்டது. இளைஞர்கள் நமட்டாகச் சிரித்துவிட்டு குடியைத் தொடர்ந்தனர். எப்படி சுற்றி எப்படிப் பார்த்தாலும் அனைவரின் சந்தேகமும் குட்டைக்கார முனியாண்டி மேல் மீண்டும் குவிந்தது. கடைசியாக ஒருதரம் அவரிடம் மன்றாடினால் என்ன என்ற முடிவுக்கு வந்தனர். மூச்சிரைக்க வந்த பிளாக்காயன் என்ன சொல்ல வருகிறார் என்பதுபோல பார்த்தனர்.

“சரிதான்… அவரத் தவிர வேற யாரு மேல சந்தேகம் புடிக்க… போன பெறவியில எமனா இருந்துருப்பாய்ங்க போல… இப்படி கொன்னு குவிக்குது… ” எனச்சொல்லிவிட்டு துண்டை உதறி தலையில் கட்டிக்கொண்டு குட்டைக்கார முனியாண்டி கோயிலை நோக்கி மீண்டும் ஓடினார். அவர் பற்கள் கூச, மனதினுள் கேட்டுக்கொண்டிருக்கும் ஒலி சின்னியின் தலையிலிருந்து வருவதா அப்பாவின் சவுக்கிலிருந்து வருவதா என மட்டும் அவரால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.

– மே 2014 (நன்றி: http://vallinam.com.my)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *