ஒரு நாள்… மறு நாள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 9,029 
 

என் வீடு இருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் ஓரமாக இருந்தது அந்த மரம்!

என் அலுவலக நண்பர் விக்ரம் தினம் காரில் அந்த வழியாக வருவார். ஓசி லிஃப்ட் தருவார். அவருக்காக மர நிழலில் காத்திருந்தபோது, செருப்பு தைக்கும் தொழிலாளி எதிர்ச்சாரி டீக்கடையிலிருந்து கையில் ஒரு டீ கிளாஸ§டன் சாலையைக் கடந்து வந்துகொண்டு இருந்தார். மரத்தடியில் சுருண்டு படுத்திருந்த அவர் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை போலும்…

திடீரென்று டயர் தேயும் ‘கிரீச்’ சத்தம். வேகமாக வந்து சடன் பிரேக் போட்ட ஸ்கூட்டியில் அமர்ந்திருந்த இளம் பெண் மிக நாகரிகமாக இருந்தாள். ஏதோ யோசனையில் ஓட்டி வந்தவள், மிக அருகில் வந்ததும்தான் கிழவரைக் கவனித்திருக்க வேண்டும். ‘‘யோவ்! பாத்து வரக் கூடாதா? அன்ன நடை நடக்கிறியே, ராஸ்கல்!’’ –  கோபத்துடன் சீறிவிட்டு, அதே வேகத்தில் ஸ்கூட்டி யைச் சீறிக் கிளப்பிப் போனாள்.

ஓர் அழகிய பெண்ணிட மிருந்து அத்தனை மூர்க்க மான, நாகரிகமற்ற வார்தை களை நான் எதிர்பார்க்க வில்லை. அதிர்ந்துபோய் பெரியவரின் முகத்தைப் பார்த் தேன். தன் மீது தவறு இல்லாதபோது, அந்தப் பெண் அப்படிப் பேசியது அவரை நியாயமாகக் கோபப்படுத்தி யிருக்க வேண்டும். ஆனால், அவர் முகத்தில் கோபம் இல்லை. சிறு சுளிப்புகூட இல்லை. இதற்குள் நண்பர் விக்ரமின் கார் வந்து நிற்க, நான் யோசனையுடன் அதில் ஏறிக் கொண்டேன். மனசு ஆறவில்லை.

நண்பரிடம் நடந்ததை விவரித்தேன். ‘‘இந்தக் காலப் பெண்கள் வயசுக்குக்கூட மரியாதை கொடுக்காம கண்டபடி பேசறாங்களே விக்ரம்? கலாசார சீரழிவுனு இதைச் சொல்லலாமா?’’

விக்ரம் சொன்னார்: ‘‘இப்படிப் பேசிட்டுப் போன ஒரு பெண்ணை வைத்தோ, மொத்த தமிழ்ப் பெண் களையும் நாம் மதிப்பிட்டுவிடக் கூடாது இளங்கோ சார்! சில பெண்கள் இப்படிப் பண்பாடில்லாம நடப்பது ஒரு பக்கம் இருந்தாலும், பண்பு குறையாத, பெண்மையின் மேன்மையைக் கடைப்பிடிக்கும் பெண்களுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை!’’

என் மனசில் அந்தக் காட்சி திரும்பத் திரும்ப வந்தது. இரு சக்கர வாகனத்தில் வலது காலைத் தரையில் ஊன்றி நின்றாள் அவள். கோபத்தில் கொதித்தாள். மறுநாள்… அதே சாலை யோர மரத்தடி… செருப்பு தைக்கிற முதியவர் எனக்குச் சற்றுத் தள்ளி நின்று, யாரையோ எதிர்பார்ப்பவர் போல தூரத்திலிருந்து வருகிற வாகனங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தார். ஒருக்கால் நேற்று அவரை வசை பாடிவிட்டுப் போன பெண்ணை இன்று தடுத்து நிறுத்தி மனசில் தைக்கிற மாதிரி புத்தி சொல்வது அவருடைய நோக்கமாக இருக்குமோ? அதோ அந்தப் பெண்ணின் வாகனம்!

பெரியவர் கையை நீட்டி அந்த வாகனத்தை நிறுத்தினார். எனக்கு சுவாரஸ்யம் ஏற்பட்டது. நேற்று பெரியவரை அவமதித்த அந்தப் பெண்ணுக்கு இன்று சரியான டோஸ் கிடைக்கப் போகிறது. அவள் தன் வாகனத்தை நிறுத்தினாள். முகத்தில் பயம் தெரிந்தது. முந்தின நாள் அவரைத் திட்டிய தற்கு இன்று வம்பு வளர்க்கக் கிழவன் வண்டியை நிறுத்து கிறானோ?

‘‘என்னய்யா?’’ என்று கேட்டாள் அவள். கிழவர் அவளருகில் சென்றார். தன் கையிலிருந்த ஒரு பொருளை அவளிடம் நீட்டினார். அது ஒரு செல்போன்!

‘‘நேத்து நீங்க இங்கே வண்டியை பிரேக் போட்டு நிறுத்தினீங்களே, அப்ப, இது கீழே விழுந்திடுச்சும்மா. நீங்க கவனிக்காம வேகமாகப் போயிட்டீங்க. எடுத்து வெச்சேன். வழக்கமா இந்த நேரத்துக்கு வருவீங்களேனு காத்துட்டி ருந்தேன். இந்தாங்கம்மா!’’

அவள் முகம் வியப்பால் விரிந்தது. அது ஒரு விலையுயர்ந்த கேமரா செல்போன். அதை எங்கே காணடித்தோம் என்று ஒரு நாள் முழுவதும் அவள் எங்கெங்கோ தேடியிருக்கக்கூடும். பரவசத்தோடும் அதே நேரம் இந்தப் பெரியவரை முந்தின நாள் தரக்குறைவாகப் பேசிவிட்டோமே என்கிற குற்ற உணர்வோடும் அப்படியே நின்றாள்.

திரும்பிச் சென்ற பெரியவரை நோக்கி, ‘‘ஒன் மினிட் சார்’’ என்று நிறுத்தி, தன் ஹேண்ட் பேக்கிலிருந்து ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினாள். ‘‘எதுக்குமா குழந்தை?’’ என்று கனிவாகக் கேட்டார் அவர். ‘‘இந்த செல்போன் வெலை என்னா தெரியுமா, செவன்டீன் தௌஸண்ட். , பதினேழாயிரம் ரூபா. இது காணாமப் போயிடுச்சுன்னே நெனச்சிட்டேன். எடுத்து வெச்சிருந்து கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஸார்… ப்ளீஸ் வாங்கிக்கோங்க!’’

‘‘இல்லேம்மா, கண்ணுக்கு முன்னே ஒங்க பொருள் கை தவறிக் கீழே விழுந்துச்சு. அதை ஒங்ககிட்டே ஒப்படைச்சேன், அவ்ளோதான். நல்லா இருங்கம்மா!’’

சிறிது நேரம் அப்படியே நின்றவள், மெள்ள்ள தன் வாகனத்தை ஓடவிட்டாள். முந்தின தினம் தான் அவரைக் கண்டபடி திட்டிப் பேசியது மிகவும் தவறு என்று அவள் கண்டிப்பாக உணர்ந்திருப்பாள் என்று தோன்றியது எனக்கு.

நான் அந்தப் பெரியவரை நெருங்கினேன். ‘‘நேத்து நடந்ததை நானும் பார்த்தேன். அந்தப் பொண்ணு உங்களை தரக்குறைவாத் திட்டிப் பேசிச்சு. அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாம அந்தப் பொண்ணுக்கு உதவி செஞ்சு, ரொம்ப மரியாதை கொடுத்தும் பேசிட்டு வர்றீங்களே?’’ என்று கேட்டேன்.

சிரித்தவர், ‘‘என் பேத்தி என்னைத் திட்டினா நான் கோவிச்சுக்குவேனா? நேத்து திட்டின பொண்ணு, இன்னிக்கு என்னை ‘சார்’னு சொல்லுது. என்ன பேசறோம்னே தெரியாத வயசு. இதுக் கெல்லாம் வருத்தப்பட்டு திருப்பித் திட்டினா நான் என்ன மனுஷன்? வயசு ஏற ஏற, பக்குவம், மரியாதை எல்லாம் தானா வந்துடும். கொழந்தைங்க அது… சின்னப் பூவு! இன்னும் கல்யாணம் காச்சியெல்லாம் ஆகலை. எல்லாம் சரியாப் போயிடும்!’’

விக்ரமின் காரில் போகும்போது மனசு லேசாக இருந்தது. செருப்பு தைக்கிற தொழிலாளி கூறிய தத்துவம், லேசாகக் கிழிந்திருந்த என் மனசையும் பக்குவமாகத் தைத்துவிட்டதாக உணர்ந்தேன்.

– ஜனவரி 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *