ஒரு தொலைபேசி அழைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 22, 2013
பார்வையிட்டோர்: 6,019 
 

வெள்ளிக்கிழமை இரவு ஆதலால் என்னுடைய அறை நண்பர்கள் கார்ல்ஸ்க்ரோனா நகர இரவுக் கொண்டாட்டங்களுக்குச் சென்றுவிட்டார்கள். தனிமைதான் மனிதனின் முதல் எதிரி. பழைய சோகம் , புதிய மகிழ்ச்சி என எதைப்பற்றியும் யோசிக்காமல் தூங்க முயற்சித்தாலும் வரவில்லை. கண்ணாடி சன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தேன். எங்களது குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் பழைய யூகோஸ்லாவியா அகதிகள் சத்தம் போட்டுக்கொண்டு, வார இறுதி ஆட்டம் பாட்டங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். எப்படியும் குளிர் -5 இருக்கும்.

“விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம், குலம் விளங்க விளக்கு வைப்போம்” இளையராஜாவின் இசையில் வெளிவந்த ஆத்மாப் படப்பாடலுடன் கைபேசி அழைக்க ஆரம்பித்தது. வந்த எண்ணைப் பார்த்தேன், +46762509249, சுவீடன் எண்தான்.தெரியாத எண் வந்தால் பெரும்பாலும் எடுக்க யோசிப்பேன். ஒரு வேளை கிருஷ்ணமூர்த்தியோ வாசுதேவனோ வேறுயாரவது கைபேசியில் இருந்து கூப்பிடுகிறார்களோ என யோசித்தபடியே

“கார்த்தி ராமச்சந்திரன்” என்றேன். சுவீடனுக்கு வந்த இந்த இரண்டு மாதங்களில் மக்களுடன் தொலைபேசியில் பேசும்பொழுது கவனித்த விசயம் சுவிடீஷ் மக்கள் ஹலோ சொல்லாமல் தங்கள் பெயரைச் சொல்வார்கள். மாறுபட்ட ஒரு விசயமாக இருந்ததனால் அப்படியே வரித்துக்கொண்டேன். மறுபுறம் அழைப்பவர்கள் கேட்கும் முன் சரியான நபருடன் தான் பேசுகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள ஒரு வாய்ப்பு.

மறுபக்கம் அழகான பெண்குரல், “யாக் ஹீதர் ஆன் நீல்சன் கேன் டு யெல்ப்பரா மெய்க்”

ஹீத்தர், யெல்ப்பரா என்ற இரு வார்த்தைகளை வைத்து தனது பெயரையும் உதவி தேவை என்றும் கூறுகிறாள் என என்னால் யூகிக்க முடிந்தது.

“யாக் தாலர் இண்டே சுவென்ஷ்கா, கேன் டு தாலா இங்கல்ஸ்கா” , எனக்கு சுவிடீஷ் தெரியாது, ஆங்கிலத்தில் பேசமுடியுமா என்ற அர்த்தத்தில் அமைந்த , இந்தியாவிலேயே மனப்பாடம் செய்து வைத்திருந்த அருமையான சுவிடீஷ் உச்சரிப்புடன் சொல்லிய பின் அந்தப் பெண் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தாள்.

அவளுக்கு யாருடன் ஆவது பேசவேண்டும் எனத் தோன்றியதால் ஏதோ ஒரு எண்ணை அழைத்துக் கூப்பிட்டதாகக் கூறினாள். நான் என்னைப் பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டேன். எனக்கு மனதுக்குள் ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஆங்கிலத்தில் கடலைப் போடுகிறேன் எனும்பொழுது சுவாரசியம் மேலும் அதிகமானது. அவள் எனது ஊரில் இருந்து 30 நிமிட பயண நேரத்தில் 50 கிமீ தொலைவில் இருக்கும் கார்ல்ஷாம்ன் என்ற நகரத்தில் வசிப்பதாகக் கூறினாள்.மால்மோ பல்கலைகழகத்தில் சமூக விஞ்ஞானம் படிப்பதாகக் கூறினாள். தனது பழையக் காதலனைப் பற்றிக் கூறினாள்.அழுதாள். சிரித்தாள். பெண்களிடம் எனக்கு என்னப்பிடிக்குமெனக் கேட்டாள். பதில் கூறாமல் நான் சிரித்ததை ரசித்தாள்.

“கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசிவிட்டோமே!! உனக்கு தொலைபேசிக் கட்டணம் அதிகமாகாதா? உனக்கு இணைய இணைப்பு இருந்தால் கணினி வழிப் பேசலாமே ” என ஆங்கிலத்தில் கேட்டேன்.

“டெலிடு காம்விக் இதில் 30 நிமிடங்கள் பேசினால் 0.69 க்ரோனர்தான், ஆகையால் பிரச்சினை இல்லை” என்றாள்.

அதிகாலை 5 மணிக்கு நான் தூங்கிவழிந்துப் பேசுவதைக் கண்ட அவள் ,

“நீ போய்த்தூங்கு, நான் நாளை உன்னை அழைக்கின்றேன்” எனச் சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.

மனதின் குதுகலத்துடன் அன்றையப் பகல் முழுவதும் தூங்கிப்போனேன். மறுநாள் இரவும் கூப்பிட்டாள். பேசினோம்.. பேசினோம்… மறுநாள் இரவும் சங்கீத ஸ்வரங்களாக கரைந்தது. தமிழின் பெருமைகளைப் பற்றி சொன்னேன். சுவிடீஷ் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தாள்.அடிப்படை வாக்கியங்கள் அனைத்தையும் இலக்கணத்தோடு சொல்லிக் கொடுத்தாள். பகலில் வகுப்புகள் இருந்தாலும் ஓரிருமுறை அழைத்தபோது ஏதோ சுவிடீஷில் சொல்லி அழைப்பு போகவில்லை. ஒரு மாதத்திற்குப்பின் அவளைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். கார்ல்ஷாம்ன் முகவரியைக் கொடுத்தாள். அருமையாக உடையணிந்து அவள் சொன்ன முகவரிக்குச் சென்றுபார்த்தேன்.கதவைத் திறந்த வயதான பெண்மணியிடம்

“ஆன் நீல்சனைப் பார்க்க விரும்புகின்றேன்” சுவிடீஷில் ,

அந்த வயதானப் பெண்மணி புருவத்தை உயர்த்தி ,பயங்கலந்த வியப்புடன் பார்த்தாள்.

“ஆன் நீல்சன், மால்மோ பல்கலை கழகத்தில் படிக்கும் பெண்” எனக்கு பயம் வந்துவிட்டது, தவறான முகவரியைக் கொடுத்துவிட்டாளோ என,

இந்த முறை அந்த பெண்மணி கண்கலங்கி, என்னை வீட்டிற்குள் அழைத்தாள்.

மேசையின் மேல் இருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு என்னருகில் வந்து என்னிடம் பேச ஆரம்பித்தாள். புகைப்படத்தைப் பார்த்தேன். ஆன் நீல்சனாகத்தான் இருக்க வேண்டும். நான் கற்பனை செய்து இருந்ததை விட அழகாக இருந்தாள். பழைய டென்னிஸ் வீராங்கனை அன்னா கோர்னிகாவைப் போல இருந்தாள்.

“நீ அவளுடன் பல்கலைகழகத்தில் படித்தவனா” என்ற அந்தப் பெண்மணிக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் ஆமாம் என தலையாட்டினேன்.

ஆன் நீல்சன் அந்தப் பெண்மணியின் கடைசி மகள் என்றும் அவள்மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்ததாகவும் சொன்னாள். மால்மோவிற்கு படிக்கப்போகின்றேன் எனப்போனவளை அதன் பின்னர் பார்க்கவில்லை எனச் சொன்னாள்.

“உங்களுக்குள் ஏதேனும் பிரச்சினையா ” என்றேன்.

“இல்லை, ஒரு விபத்தில் இறந்துவிட்டாள்” எனக்கு தூக்கிவாரிப்போட்டது. முகத்தில் வியர்த்திவலைகளுடன் “எத்தனை நாட்களுக்கு முன்னர்?”

“நாட்கள் இல்லை, இரண்டு வருடமாகிவிட்டன”. எனக்கு தலை கிறுகிறுவென சுற்றுவது போல இருந்தது.

“சிலசமயங்களில் அவளுடன் தொலைபேசியில் பேசுவது போல ஒரு உணர்வு, பிரம்மையா உண்மையா எனத் தெரியவில்லை” என அந்தப் பெண்மணி சொன்ன அடுத்த நொடி, அந்த வீட்டில் இருந்து எடுத்த ஓட்டத்தை கார்ல்ஷாம்ன் ரயில் நிலையத்தில் தான் நிறுத்தினேன். கைபேசியைப் பிரித்து உள்ளிருந்த சிம் அட்டையைத் தூக்கி எறிந்தேன். ரயிலின் வேகத்தை விட இதயத்துடிப்பின் வேகம் அதிகமாக இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் குளித்து, சாமி கும்பிட்டு, எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என வேண்டிக்கொண்டு திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொண்டேன். இரண்டு நாட்களுக்குப் பின்னர் மனம் ஆசுவசப்பட்ட பின்னர் சுவீடனில் பிரபலமில்லாத நிறுவனத்திடம் கைபேசி இணைப்பு வேண்டி இணையத்தில் பதிவு செய்தேன். ஒரு வாரம் கழித்து சிம் அட்டையுடன் இணைப்புக்கான கடிதம் வந்தது. எனக்கு அளிக்கப்பட்டிருந்த எண்ணைப் பார்த்தேன் +46762509249

– செப்டம்பர் 10, 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *