ஒரு தேவதை தூங்குகிறாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 3,899 
 

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் மரம் வெட்டுபவன். காலையில் எழுந்து ஏதாவது உணவை கட்டி எடுத்துக் கொண்டு காட்டுக்குப் புறப்பட்டான் என்றால் சூரியன் உச்சிக்கு வரும் வகையில் கருமமே கண்ணாக இருப்பான்.

பசி வயிற்றைக் கிள்ளியதும் கொண்டு வந்த உணவை விழுங்கிவிட்டு மர நிழலில் சிறிது அயர்ந்து படுத்து இருப்பான். தூக்கம் வராவிட்டாலும் கண்களை மூடிக் கொண்டு சொகுசாகச் சாய்ந்திருப்பான்.

அப்போதெல்லாம் அவனுக்குக் கதைகள் மனதில் அடுக்கடுக்காகத் தோன்றும். அவனுக்குக் கதைகள் என்றால் கொள்ளைப் பிரியம்.

அவன் சின்னப் பிள்ளையாக இருந்த போது பக்கத்து வீட்டுத் தாத்தா அவனுக்கு நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார். எல்லாக் கதைகளிலும் ராஜாவின் மகனும் ராஜகுமாரிகளும் வருவார்கள். அவன் பார்த்தே இராத அழகு ததும்பும் மாளிகைகளைப் பற்றி அவர் வர்ணிப்பார்.

தாத்தா சொல்லிய கதைகளைத் தூங்குவதற்கு முன்பு அவன் யோசித்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.

அந்த இளவரசனாக தான் ஆகிவிட மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டே அவன் தூங்கிவிடுவான்.

பள்ளிப்படிப்பு அவனுக்கு ஏறவில்லை . இயற்கையிலேயே அவன் கூச்ச சுபாவம் உள்ளவனாக இருந்ததால், யாரோடும் ஒட்டுறவு இல்லாமல் வளர்ந்து வந்தான்.

அவனுக்கு என்று சமவயதில் நண்பர்கள் கூட இல்லை . அவனது ஒரே ஒரு தோழனான பக்கத்து வீட்டுத் தாத்தாவும் இறந்து போனபிறகு அவனுக்குப் பேசுவதற்குக் கூட ஆள் இல்லாமல் போய்விட்டது.

ஆனால் கதைகள் மீது அவனுக்கு இருந்த ஆர்வம் பெருகிக் கொண்டே இருந்தது.

எனவே, தனக்குத் தானே கதைகள் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தான். நண்பகலில் எங்காவது ஒரு மரத்தடியின் நிழலில் இலைகளின் சலசலப்புக்கும், புள்ளினங்களின் கீச்சுமூச்சுச் சத்தத்துக்கும் இடையில் கண்ணை மூடிக்கொண்டு அவன் கதை சொல்லிக் கொள்ளத் தொடங்குவான். அவன் கதைகளில் எல்லாம் கதாநாயகன் அவன் தான்.

முதலில் பக்கத்து வீட்டுத் தாத்தா அவனுக்குச் சொன்ன கதையையே நினைவுப்படுத்திக் கொண்டு வந்தான்.

கொஞ்ச நாளில் அது அவனுக்குச் சலித்துப் போயிற்று. பிறகு புதிய புதிய கதைகளை அவனே இட்டுக் கட்டிக் கொள்ள ஆரம்பித்தான். அவன் கதை சொல்லிக் கொள்ளும் விதமே தனி.

கதையின் சம்பவங்கள் உண்மையிலேயே நடப்பது போலவும் அதில் தானும் பங்கேற்றுள்ளது போலவும் அவன் கற்பனை செய்து கொள்ளுவான்.

சில சமயங்களில் அவனது கதைகள் குட்டிக் கதைகளாகச் சிறிது நேரத்தில் முடிந்து விடும். சில சமயங்களில் அவ்வளவு சீக்கரத்தில் முடிவடையாது. அப்போது எல்லாம் தனது கதையை ஓரிடத்தில் நிறுத்தி வைத்துவிட்டு வேலையைத் தொடங்குவான்.

மறுநாள் அதே நேரத்துக்கு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடங்குவான். எது எப்படி இருந்த போதிலும் கதையை ஒரு முடிவுக்குக் கொண்டு வராவிடில் அவனுக்கு நிம்மதியே இருக்காது. இப்படி அவன் கட்டிய கதைகள் எத்தனையோ. ஆனால் எல்லாம் மரத்தடியில் உருவாகி மரத்தடியிலேயே மரத்துப் போய்விட்டன.

***

இன்றும் வழக்கம் போல் அவன் உண்ட களைப்போடு படுத்து மோன தவமிருந்தான்.

ஓர் அழகான மளிகையைக் கட்டுவதைப் பற்றிய கற்பனை அவன் மனதில் உருவாயிற்று.

அந்த வேலையை அவன் மட்டுமே செய்வது என்றும் வேறு யாரையும் துணை சேர்த்துக் கொள்வதில்லை என்றும் திட்டவட்டமாக உறுதி எடுத்துக் கொண்டான்.

அதுமட்டுமல்ல யாருடைய கண்ணுக்குமே தென்படாத இடத்தில் அந்த அறையைக் கட்ட வேண்டும் என்று எண்ணினான்.

அந்த இடத்தைத் தேடி அவன் நடக்கத் தொடங்கினான். கண்ணுக்கு எட்டிய மலைகளை எல்லாம் நடந்து கடந்த பின்னரும் அவன் மனம் திருப்தி அடையவில்லை . அவனுள் ஏக்கம் சூழலாயிற்று.

அப்போது வானமே முழு மின்னலாக மின்னுவதுபோல் ஒளி சிந்தியது. மலைகளும், கடலும் நதியும் மரம் செடி கொடிகளும் சூரியனின் வெளிச்சத்தில் மின்னும் பனித்துளிகளைப் போன்று பிரகாசித்தன.

கண்கள் கூசுவதைத் தவிர்க்க கைகளால் மூடிக்கொண்டு விரல் இடுக்குகளின் வழியாகப் பார்த்தபோது பிரமிப்பை அவனால் தவிர்க்க முடியவில்லை.

ஒரு பஞ்சவர்ணக் குதிரை வானிலிருந்து இறங்கிவந்து, பட்டாம் பூச்சி பறப்பது போல் அது மெதுவாக அவனருகில் வந்து நின்றது. இந்தத் தெய்வலோகக் குதிரை

படதும் எங்கே மறைந்துவிடுமோ என்று அஞ்சி அவன் அருகில் உள்ள புதர்களுக்குள் ஒளிந்து கொள்ள முயன்றான்.

ஆனால், அப்பஞ்சவர்ணக் குதிரை அவன் அருகிலேயே வந்து நின்றது. அதன் பிடரி மயிர்கள் தங்க இழைகளாகச் சுடர் விட்டுக் கொண்டிருந்தன.

கண்கள் மாணிக்கக்கற்களாகச் சுழன்றன. காதுகள் இரண்டும் ஒளியாலான குருத்துக்கள் போன்று இருந்தன. அதன் முன்னங்கால்கள் இரண்டும் பவளங்களை இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டது போல் எடுப்பாக இருந்தன. வாளிப்பான பின் தொடைகள் ரத்தினப் பாறைகளாகச் செதுக்கப்பட்டிருந்தன. வால் பொன் குஞ்சம்போல் செல்லமாகத் துள்ளித்துவண்டு கொண்டிருந்தது.

அக்குதிரையின் உடலின் ஒவ்வொரு பகுதியும் வானவில்லின் வர்ணஜாலங்கள் போன்று ஒவ்வொரு வகை வண்ணத்தைப் பிரதிபலித்தன.

அவன் திக்பிரமை அடைந்து நின்ற போது அவன் பிரமிப்பைப் பன் மடங்கு அதிகரிக்கச் செய்வது போன்று அக்குதிரையே பேச ஆரம்பித்தது.

வீணையின் தந்திகளைச் சுருதி கூட்டுவது போல அது கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தது.

“மனித குமாரனே, ஓர் உன்னத லட்சியத்துக்காக நீ புறப்பட்டிருக்கிறய். இந்த பூமியில் தெய்வ நகரை நீ சிருஷ்டிக்கப் போகிறாய். உனது பெரும் பணிக்கு நான் துணையாக இருப்பேன். என் மீது ஏறிக்கொள். ஏழு மலைகளையும், ஏழு கடல்களையும் ஏழு கண்டங்களையும் தாண்டி என் மனோலயத்துக்கு ஏற்ற ஓரிடத்துக்கு கொண்டு செல்கிறேன்.”

“உனது கற்பனை மாளிகை வெறும் கல்லாலும் மண்ணாலும் மரத்தாலும் கட்டப்படவேண்டாம். உலக ஐசுவரியங்கள் எல்லாம் பர்வதங்களாகக் குவிந்துள்ள இடங்களை உனக்குக் காட்டுகிறேன். அவற்றால் உனது தெய்வ மாளிகையை அமை.”

“ஆனால் ஒன்று உனது இலட்சியத்தில் ஒன்றே ஒன்றுக்கு மட்டும் இடம் தர மாட்டேன் என்று நீ உறுதி தர வேண்டும். எந்த நிலையிலும் எப்போதும் ஒரு பெண்ணைக் காதலிக்க மாட்டேன் என்று எனக்கு நீ உறுதி தர வேண்டும். காதலைப் போல் ஒரு மனிதனை அடிமையாக்கும் விலங்கு வேறு எதுவும் இல்லை.”

“காதலுக்கு ஆளானவன் உலுத்துப் போன மூங்கில் கூட்டைப் போன்று ஒன்றுக்கும் உதவ மாட்டான்.”

“காதல் வயப்பட்டவன் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் மரப்பாலம் போன்றவன். வெள்ளத்தில் மரப்பாலம் மிதந்தாலும் யாருக்கு என்ன பயன்? யார் அதன் மீது ஏறி நடந்து ஆற்றைக் கடக்க முடியும்?” என்று சொல்லி விட்டு அக்குதிரை அவனைப் பார்த்தது.

அவன் மௌனமாக நின்று கொண்டிருந்தான். “சரி யோசிப்பதற்கு நேரம் இல்லை. என் மீது ஏறிக்கொள். எப்போது உன் மனம் ஒரு பெண்ணின் வசப்படுகிறதோ அப்போது நான் உன்னை விட்டுவிட்டுச் சென்றுவிடுவேன்” என்று குதிரை சொன்னது.

அவன் ஒய்யாரமாக அதில் ஏறி அமர்ந்தான். அவனுள் ஒரு புதிய கம்பீரம் ஏற்பட்டது. ஒரு கொக்கைப் போல் காற்றைக் கிழித்துக் கொண்டு குதிரை விண்ணில் பறக்கலாயிற்று. – அவன் ஓர் அரசகுமாரனைப் போல் பூமி எங்கும் கண்ணோட்டம் விட்டான். ஆம், இனிமேல் அவன் அரசகுமாரன் தான். சாதாரண அரசகுமாரன் அல்ல. சுவர்ணபுரி ஒன்றை நிர்மாணித்து அதன் சக்கரவர்த்தியாக ஆக இருக்கும் அரசகுமாரன் அவன்.

***

சூரியனின் கதிர்கள் இலைகளின் ஊடே ஊடுருவி மரவெட்டியின் இடது கண் இமைப்பட்டையில் விழுந்து அதனை ரத்தச் சிவப்பாக்கியது. கட்டெறும்பு ஒன்று விலாப்பக்கத்தில் சுள்ளென்று கடித்துவிட்டு அவன் கைத்தேய்ப்பில் சின்னாபின்னமாகிப் போனதில் நேரமாகி விட்டதை உணர்ந்தான். வேலையில் மளமளவென்று ஈடுபட்டான்.

அவன் நினைவில் அந்த பஞ்சவர்ணக் குதிரை சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது. எப்பொழுது அடுத்தநாள் நண்பகல் வரும் என்று அவன் ஏங்கினான்.

மாலையில் வீட்டுக்குக் திரும்பியபோதும், இரவு கிழிந்த பாயில் வியர்வை நாற்றமடிக்கும் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு தூங்க முயன்றபோதும் அந்தக் குதிரை அவன் மண்டை ஓட்டுக்குள் ஜலதரங்கம் போல் சிறு நடை போட்டது.

மறுநாள் அதிகாலையிலேயே அவன் காட்டுக்குப் போனான். சூரியனின் உதயத்தை தனது நிழலில் இருந்து பார்வையிட்டவாறே அரைமனதாய் வேலையில் ஈடுபட்டிருந்தான். நண்பகல் வந்ததும் அவசரம் அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு போய் ஓரிடத்தில் சாய்ந்து கொண்டான்.

***

அரச குமாரனாகி விட்ட அவனை ஏற்றிச் சென்ற அந்தப் பஞ்சவர்ணக் குதிரை மேகக் கூட்டங்களைச் சிதறடித்தவாறு இந்த உலகத்தில் ஒரு கோடியிலிருந்தவாறு மறு கோடிக்குச் சென்று திரும்பிய போது அவன் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தான்.

“இந்த இடத்தில் தான் நான் மாளிகையை அமைக்கப்போகிறேன். அதற்கு முன்பு எனக்கோர் அறையை அமைத்துக்கொள்வேன்” என்று அவன் குதிரையிடம் கூறினான்.

“சரியான இடத்தைத் தான் நீ தீர்மானித்து இருக்கிறாய். வா முதலில் உலகின் செல்வப் பொக்கிஷங்களைச் சுற்றிக் காண்பிக்கிறேன்” என்றது.

அக்குதிரை சுற்றிக் காண்பித்த கருவூலங்களைக் கண்டு அவன் வியப்பில் ஆழ்ந்தான்.

ஒரு பக்கம் பனி உறைந்து இருக்கும் மலையைப் போன்று தங்கமலை கண்களைப் பறித்தது. முத்துக்களும், பவழங்களும், மாணிக்கம், கோமேதகம், வைரம், வைடூரியம், தந்தம், ரத்தினம் முதலான எல்லா வளங்களும் மலைமலையாக நின்றன.

முத்துக்களைக் கொண்டு வந்து தளம் பாவினான். மாணிக்கக் கற்களைச் செங்கல் வடிவாக்கிச் சுவர் எழுப்பினான். மரகதங்களைக் கொண்டு கதவை இழைத்தான்.

தந்தங்களைக் கொண்டு வாரைகள் அமைத்து தங்கத்தைக் கொண்டு ஓடுகள் வேய்ந்தான். பவழங்களைக் கோர்த்து சன்னல் கம்பிகளாக்கினான்.

அறை உருவாக்கப்பட்டது. அறைக்குள் அழகான கட்டில் ஒன்றை அமைப்பதற்காக யானை அளவு பெரிய பாறையைக் குதிரையில் கொண்டு வந்தான். ஒரு கைதேர்ந்த சிற்பியின் நுணுக்கத்துடன் அதைக் கட்டிலாகச் செதுக்கினான்.

உலகின் யௌவனத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்கக் கூடிய உருவங்களைக் கட்டில் கால்களில் பொறித்தான்.

வெங்காயத்தின் மல்லிய சவ்வைப் போன்ற கொசுவலையைக் கட்டினான். அறைக்கு வெளிச்சம் தர நாகரத்தினம் ஒன்றைக் கட்டிலின் உயரே பொருத்தினான். அது நேரத்துக்கும் வேளைக்கும் ஏற்றாற்போல் ஒளியைக் கூட்டியும் குறைத்தும் உமிழ்ந்து கொண்டிருந்தது.

பஞ்சவர்ணக் குதிரையை அழைத்து வந்து அறையைக் காட்டினான். அது வாசலில் நின்றவாறே கழுத்தை மட்டும் உள்ளே நீட்டி அறையைப் பார்த்து மலைத்து நின்றது.

பிறகு அவனிடம் திரும்பி “உண்மையிலேயே நீ ஒப்புயர்வற்ற கலைஞன்தான். இந்த சாம்ராஜ்யத்தை நிறுவ தகுதி உடையவன் தான். ஓய்வெடுப்பதற்காகக் கட்டிய ஓர் அறையே இவ்வளவு மனோரதமானதாக இருப்பதால் மாளிகையும், நகரும் எவ்வளவும் அற்புதமாக இருக்கும்? உனது விடா முயற்சிக்கும் உழைப்புக்கும் திறனுக்கும் எவ்வித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பது தான் எனது அச்சம். நீ மிகவும் களைத்துப் போயிருக்கிறாய். போய் ஓய்வெடுத்துக் கொள். களைப்பு நீங்கியதும் என்னை நினைத்தால் வந்துவிடுவேன்” என்று சொல்லிவிட்டு பஞ்சவர்ணக் குதிரை வானில் பறந்தது.

ஓர் அரசகுமாரனின் முதலிரவுக்காக ஜோடிக்கப்பட்ட கட்டிலைப் போல் அது ஜொலித்தது. அதில் தெறித்த ஆயிரமாயிரம் சுமர் ஒளிகளில் அவன் உருவம் பல கோணங்களில் மின்னியது.

அவற்றைப் பார்த்த அவன் திகைத்து விட்டான். அருமையாகப் பாடுபட்டு உருவாக்கிய அக்கட்டிலை அழுக்கேறிய உடலால் மாசுபடுத்த அவன் விரும்பவில்லை. நன்கு நீராடிவிட்டு புத்தாடைகள் புனைந்து வருவோம் என்று வெளியே வந்தான்.

அறையைக் கட்டியது போக எஞ்சிய பொன் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து அருகேயே தடாகம் ஒன்று அமைப்பதில் ஈடுபட்டான். ஓரளவு ஆழம் வெட்டியதுமே இளநீரைப் போன்று தண்ணீ ர் ஊறி நிரம்பியது.

எஞ்சிய நவரத்தினங்களையும் கொண்டு படிக்கட்டுகளையும் கரைகளையு செய்தான். கட்டிலுக்காக அவன் செய்து பொருந்தாமல் போய்விட்ட தாமரை மலர்கள், மொட்டுகள், அல்லிக் கொடிகள் போன்றவற்றை நீரில் மிதக்க விட்டான்.

எத்தனை இரவு பகலாக இதில் ஈடுபட்டானோ தெரியாது. தடாகமும் சிறப்பாக அமைந்துவிட்டது.

அதில் அளைய நீராடினான். அதில் இருந்தது என்ன மந்திர நீரோ, அவன் நிறமே மாறிவிட்டிருந்தது. பஞ்சடைந்து போயிருந்த அவன் உடைகளை அத்தண்ணீரில் நனைத்து எடுத்ததுதான் தாமதம். தேவலோக உடையைப் போல் அது மாறியது. ஒரு கணத்துக்குள் காய்ந்தும் போனது.

முழு ஆடை ஆபரணங்களுடன் மனோராஜ்யத்தின் இளவரசனாக அவன் குளத்தில் இருந்து திரும்பியபோது சிறிது தொலைவில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் தெய்வீக அழகு படைத்த ஒரு மங்கை உட்கார்ந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் மீது வைத்த கண்ணை மீட்க முடியாமல் அவள் அழகில் மனதைப் பறிகொடுத்தவனாக அவளை நோக்கி நடந்தான்.

ஃஃஃ மரம் வெட்டியின் மூக்கில் ஏதோ சில்லென்று பட்டது. திடுக்கென்று விழித்துப் பார்த்தான். ஏதோ பறவை எச்சமிட்டிருந்தது. சலிப்புடன் வேலையை நினைத்துக் கொண்டு அவன் எழுந்தான். மறுநாள் நண்பகல் வரும் வரை அந்த மங்கைதான் அவன் நினைவில் நர்த்தனம் புரிந்து கொண்டிருந்தாள்.

மறுநாள் உச்சிநேரம் வருவதற்கு முன்பே அவன் மரநிழலில் உட்கார்ந்து கண்ணை மூடிக் கொண்டான்.

கொண்டு வந்த உணவைக் கூட அவன் சாப்பிடவில்லை. உடனே கதையில் ஆழ்ந்து போனான்.

அரசகுமாரன் மரத்தடியில் நின்று கொண்டிருந்த மங்கையிடம் சென்றான். அவள் நாணத்தோடு அவளைப் பார்த்தும் பார்க்காமலும் இருந்தாள். அவள் நிமிர்ந்தபோது எல்லாம் இருவரது கண்களும் ஒன்றோடு ஒன்று பட்டுத் தெறித்தன.

தங்கள் கட்டுப்பாட்டை இழந்து இருவரின் மனமும் ஒன்றோடொன்று கலப்பதை அவர்களால் தவிர்க்கமுடியவில்லை.

நீண்ட மௌனத்தால் மனம் கலந்து ஒருவருக்கொருவர் பழகிய பின்னர், “அம்மணி நீங்கள் யார்,” என்று அவன் தயங்கியவாறு கேட்டான்.

அவள் கலீர் என்று சிரித்தாள். “இக்கேள்வியைக் கேட்கவா உங்களுக்கு இவ்வளவு நேரம்?” அவன் மௌனமாக நின்றான்.

அவளே பேசத் தொடங்கினாள். “நான் தேவலோக மங்கை. பொழுது போக்குக்காக வானில் நான் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது பூமியிலேயே மிக அழகான இப்பகுதியைக் கண்டு இங்கு இறங்கினேன். இக்கட்டிடத்தின் கலை நுட்பம் கண்டு திகைத்து நிற்கிறேன். எங்கள் தேவ உலகில் கூட இத்தனை வனப்புடைய ஒரு கட்டிடம் இல்லை” என்றாள்.

“நான் அமைக்கவிருக்கும் சாம்ராஜ்யத்தின் மாதிரி இது” என்று அவன் கூறினான்.

பிறகு அவனது கதையை ஆதியோடு அந்தமாகக் கூறினான். அவன் கதையைக் கேட்டு முடித்த பின்னர், “இப்படிப்பட்ட ஒரு லட்சிய மனிதனை அடைய நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சாதாரண மனித குமாரனாகப் பிறந்த நீங்கள் உங்கள் முயற்சியால் இந்த நிலைக்கு உயர்ந்துவிட்டீர்கள். நானோ யௌவன கடாட்சத்தைப் பெற்று எண்ணியதை முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவளாக இருந்தும் எவ்வித நோக்கமும் இல்லாமலே இருந்து விட்டேன். இனி உங்கள் நோக்கம் தான் என் வாழ்க்கை. அதற்காக உடல், உயிர், எண்ணம் அனைத்தையும் அர்ப்பணிப்பேன். பூவோடு சேர்ந்த நாராக உங்களோடு மணம் பெற என்னை ஏற்றுக் கொள்வீர்களாக” என்று அவள் கேட்டாள்.

வாழ்க்கையில் ஓர் அநாதையாக இருந்து எனக்கு சலித்துப் போய்விட்டது. உன்னுடைய துணை என் உயிருக்குப் பலமளிக்கும்” என்றான்.

“என்னுடைய காதலால் பஞ்சவர்ணக் குதிரையை இழந்து விட வேண்டுமே என்று நீங்கள் தயங்க வேண்டாம். நம் உயிர்கள் கலக்கும் நொடியிலிருந்து நான் சுயேச்சையானவளாக ஆகிவிடுவேன். எனக்கு தேவலோகத்திலிருந்து கிடைக்கும் சீதனத்தைக் கொண்டு நீங்கள் ஆயிரம் சாம்ராஜ்யங்களை அமைக்க முடியும். ஆனால் என் தந்தையோ யாரோ வந்து தடுப்பதற்கு முன்பு நாம் கலந்து விட வேண்டும். தேவ மங்கை ஒரு மானிடனை மணப்பதை அவர்கள் விரும்பமாட்டார்கள்” என்றாள்.

அவர்கள் அவசரம் அவசரமாக கந்தர்வ மணம் புரிந்து கொண்டனர். புத்தம் புது ரோஜாமலராக அவள் அந்தக் கட்டிலில் படுத்து இருந்தாள்.

அவன் கட்டிலை நெருங்கியபோது இடி இடித்தது போன்ற சத்தம் வெளியே ஏற்பட்டது.

அவள் ஒடுங்கிப் போய் “என் தந்தை வந்துவிட்டார்” என்று முணுமுணுத்தாள். அவன் கதவைத் திறந்தான். அவளது தந்தை உடல் துடிதுடிக்க ஆக்ரோஷத்துடன் நின்றிருந்தார். அவளை தன்னுடன் வந்துவிடுமாறு அவர் அழைத்தார். உலகமே உருகிவிடக் கூடிய கெஞ்சலுடன் அவள் மறுத்துவிட்டாள். “இந்த அற்ப மனிதனின் காதலைப் பெரிதாக எண்ணிவிட்டாய். அவன் உண்மையிலேயே அழியாக் காதலைக் கொண்டிருந்தால், நீங்கள் சேர்ந்து வாழுங்கள். ஆனால், அதை அவன் நிரூபிக்க வேண்டும். நான் இங்கிருந்து சென்ற சிறிது நேரத்தில் இந்த இடம் கட்டாந்தரையாகிவிடும். இந்த அறையும் பொய்கையும் நீயும் மறைந்து விடுவாய். இந்த இளைஞன் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் வடக்கு நோக்கி நடந்து வந்தால், மனம் தளராமல் ஒரு மாதகாலப் பயணம் செய்தால் பௌர்ணமி இரவில் உன்னைக் காண்பான். அங்கே இதே அறையில், இதே கட்டிலில் நீ மீளா உறக்கத்தில் ஆழ்ந்து இருப்பாய். இரவுப் பொழுதுக்குள் அவன் உன்னை அடைந்து எழுப்பிவிட்டால் இருவரும் சேர்ந்து வாழ்வீர்கள். அதில் அவன் தவறிவிட்டால் மறுபௌர்ணமி வரை அவன் மீண்டும் வடக்கே பயணம் செய்ய வேண்டியிருக்கும்” என்று கூறிவிட்டு அவள் தந்தை மறைந்துவிட்டார்.

“என்னைக் கைவிட்டு விடாதீர்கள். எப்படியும் என்னை அடைந்து விடுங்கள். உங்கள் மனோராஜ்யங்களை நான் நனவாக்குகிறேன்” என்று கூறியவாறே அவள் படுக்கையில் மூர்ச்சித்து விழுந்தாள்.

அவன் அவளிடம் ஓடியபோது எல்லாமே மறைந்து பொட்டலில் நின்று கொண்டிருந்தான்.

அவன் வடக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தான். இரவுபகலாக அவள் நினைவுடன் மட்டுமே அவன் நடந்தான். பஞ்சவர்ணக் குதிரையை நினைத்துக் கொண்டான். அதன் உதவி இருந்தால் ஒரு நொடியில் அவளை அடைந்து விடலாமே.

இல்லை…இல்லை . அவள் அவனுடையவள். யாருடைய உதவியும் இல்லாமல் அவன் அவளை அடைவான். தனது காதலை அவன் நிரூபிப்பான்.

அவன் தொடர்ந்து நடந்தான். கல்லும் முள்ளும் அவன் பாதங்களைப் புண்ணாக்கின. அவள் நினைவு தன் இதயத்தைப் புண்ணாக்குவதைவிடவா இது மோசமானது என்று நினைத்துக் கொண்டான்.

புதர்களிலும் முட்களிலும் பட்டுப்பட்டு அவன் உடல் எங்கும் கீறல்கள், காயங்கள். அவள் தளிர் விரல்களால் மெல்ல வருடினாலும் போதுமே இக்காயங்கள் மாயமாய் மறைந்து விடாதா என்று நினைத்தவாறு நடந்தான்.

பல இரவுகளும் பகல்களும் நடந்து களைத்த பின்னர் பௌர்ணமி வந்தது. அவன் விடாமல் நடந்து கொண்டிருந்தான்.

முழு நிலாவின் பால் ஒளியில் அவன் முன்பு உருவாக்கிய அறை தென்பட்டது. மேலும் கீழும் மூச்சு வாங்க அவன் அதனை அடைந்தான். மரகதக் கதவை மெல்லத் திறந்து கொண்டு அவன் உள்ளே சென்றான். அவள் – அந்த தேவதை ஒரு சிசுவைப்போல் உறங்கிக் கொண்டிருந்தாள். ஆவலோடு அவளை நெருங்கப்போனவன் ஒரு விநாடி தயங்கி நின்றான்.

அந்தக் கட்டிலின் எல்லாப்பாகங்களிலும் பிரதிபலித்த தனது உருவத்தைக் கண்டான்.

உடைகள் எல்லாம் கிழிந்து அலங்கோலமாகக் கறுத்து குரூபியைப் போன்று இருந்தான் அவன்.

இந்த உருவத்தோடா அவன் அவளைத் தொடரப் போகிறான்? அவளை மாசுபடுத்தவா அவன் இவ்வளவு தூரம் நடந்து வந்தான்? இல்லை. தூர நின்றே அவன் பூஜித்துக் கொண்டு அவள் விழிக்கும் வரை அவன் காத்திருப்பான். எப்படியும் தன்னை எழுப்பிவிடுமாறு அவள் சொல்லியிருந்தது அவனுக்கு நினைவு வந்தது. எனினும் அந்தத் தேவைதையை மாசுபடுத்துவது தனது காலின் பெருமையைப் பங்கப்படுத்தும் என்று எண்ணினான்.

தான் வெட்டிய பொய்கையில் குளித்தால் மீண்டும் பழைய உருவம் வந்துவிடுமே என்று எண்ணியவனாக அவன் வெளியே வந்தான்.

உடனே ஒரு மின்னலைப் போன்று இரவு முடிந்தது. அந்த தடாகமும் அவன் உருவாக்கிய கட்டிலும் கட்டிடமும் மறைந்து விட்டன. அத்தேவதையும் மறைந்து போனாள். தனது தலை விதியை எண்ணியவாறு மீண்டும் அவன் நடக்க ஆரம்பித்தான். மீண்டும் பௌர்ணமி வந்தது. அவன் பழைய மாதிரி அந்தக்கட்டிலை நெருங்கினான்.

உடலெல்லாம் குருதி சிந்த காயங்களின் எரிச்சல் அவளுடைய பட்டுடலின் மென்மையால் நீங்கிவிடும் என்று அவனுக்குப் புரியும்.

ஆனாலும் அவன் செய்த அந்த கட்டில் ஆயிரமாயிரமாய்க் காட்டும் குரூர உருவத்துடனா அவன் அவளைத் தொட வேண்டும்?

அவள் விழித்தால் எவ்வளவு அருவருத்துப் போவாள். அவன் சுயநலத்தைக் கண்டு வெம்பிப் போய்விடமாட்டாளா?

காதல் அறிவை மூடி முட்டாளாக்கி இருந்ததால் அறையில் நுழையும் முன்னரே தடாகத்தில் மூழ்கி எழுந்துவர வேண்டும் என்பது ஒவ்வொருமுறையும் அவனுக்கு மறந்து போயிற்று.

அவள் இருக்கும் இடம் கண்ணில் பட்டதுமே புற நிகழ்ச்சிகள் எல்லாம் அவனுக்கு மறந்து போய் விடுகின்றன. அவன் என்ன செய்வான்? அவளைக் காண வேண்டும் என்ற உயிர்வேட்கையை அவனால் தவிர்க்க முடியவில்லையே.

அவன் வெளியே வந்ததும் மின்னலைப்போல் எல்லாம் மறைந்து போயின. அவன் மீண்டும் நடக்க ஆரம்பித்தான். எத்தனையோ பௌர்ணமிகள் வந்து போயின. எத்தனையோ முறை அந்த தூங்கும் தேவதையைத் தூரத்தில் இருந்து பூஜித்து விட்டு அவன் நடக்கத் தொடங்கினான்.

எத்தனையோ ஏரிகளையும் நதிகளையும் அவன் கடந்தான். ஆனால் அவன் ஓய்ந்து விடவில்லை. காதலிக்காக, காதலுக்காக அவன் நடந்து கொண்டிருந்தான்.

அவன் உடல் தளர்ந்தது. வேகம் குறைந்தது. தவழ்ந்தும் ஊர்ந்தும் கூட அவன் கடக்கலானான்.

ஒரு பௌர்ணமிக்கு முதல் நாள் அன்று அவன் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. சஞ்சலம் இல்லாமல் நீரில் அவன் இறங்கி நீந்தினான். ஆனால் நீரின் வேகத்தை எதிர்க்க அவன் உடம்பில் திராணி இல்லை. அது தன் போக்கில் அவனை இழுத்தது. அதை எதிர்த்து அவன் போராடப் போராட அந்தக் காட்டாறு அவனை வேகமாக அடித்துச் சென்றது.

நாளை வரப்போகும் பௌர்ணமியில் அவனுக்காகத் தூங்கியவாறே வனாந்திரத்தில் காத்திருக்கப்போகும் அந்தத் தேவதையிடமிருந்து அவனது உயிரை அக்காட்டாறு பிரித்துக் கொண்டு ஓடியது. அவனது சடலம் ஆற்றில் ஒரு உலுத்த மூங்கிலைப் போல், ஒரு மரப்பாலத்தைப் போல் மிதந்து சென்றது. அவனது இலட்சியமான மனோராஜ்யம் இனி அந்தப் பாலத்தின் வழியே கடக்க முடியாது.

மரம்வெட்டி விழித்த போது பொழுது ஆகியிருந்தது. சாப்பிடாமல் வைத்திருந்த உணவுப் பொட்டலத்தில் எறும்புகள் ஏறியிருந்தன. வீட்டை நோக்கி அவன் மெல்ல நடக்க ஆரம்பித்தான்.

– ஆதி.இராஜகுமாரன் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1984, மழைச்சாரல், பேராக்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *